மாணவர் அகிலனுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்! – திருமுருகன் காந்தி உரை

கோவை கே.கே.நாயுடு பள்ளி மாணவர் அகிலன் மரணத்திற்கு நீதி கேட்டு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில், அக்டோபர் 26, 2026 திங்கள் மாலை அனைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கே.கே.நாயுடு பள்ளி உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தியும், தலைமையாசிரியர் அருண்குமார் மற்றும் வகுப்பாசிரியர் விஜயகுமார் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியின் கண்டன உரையாற்றினார்.

எந்தத் தாய், தந்தையும் தங்களுடைய மகனின் இறுதி நிகழ்வை முன்னிலைப்படுத்தாமல், தங்களுடைய மகன் எதனால் கொல்லப்பட்டானோ, அதற்கு நீதி கிடைக்கும் வரை அவனது உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று உறுதியுடன் நிற்பது சாதாரணமானதல்ல. அந்தப் பெற்றோரின் உறுதியின் காரணமாகவே இன்று தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அத்தகைய பெற்றோரை நாம் வணங்க வேண்டும். அவர்கள் முன்வைக்கும் நீதிக்கான கோரிக்கையை ஆதரித்து நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு நிற்கிறோம்.

இந்தச் செய்தி வெளியானபோது காவல்துறையினரிடம் பேசினோம். அப்போது காவல்துறை துணை ஆணையர், ஆசிரியர்கள் குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறினார்.

ஆனால், அதே காவல்துறை துணை ஆணையர், மாணவர் அகிலன் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து நூலக ஆசிரியரிடம் தெரிவித்ததாகவும், அந்த நூலக ஆசிரியர் இதனைத் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்ததாகவும் கூறியிருக்கிறார்.

இதனை விசாரித்த காவல்துறையினரிடம் நாம் ஒரு கேள்வியைக் கேட்டோம். மாணவருக்கு நடந்த கொடுமைகள் குறித்து ஆசிரியருக்குத் தெரிந்திருக்கிறது; தலைமை ஆசிரியருக்கும் தெரிந்திருக்கிறது என்று நீங்களே கூறுகிறீர்கள். அப்படியிருக்க, எவ்வாறு ஆதாரம் இல்லை என்று கூறுகிறீர்கள்? இதற்குக் காவல்துறையினரிடம் பதில் இல்லை.

தலைமை ஆசிரியர் குற்றம் செய்திருந்தால், மாணவர்கள்தான் சாட்சிகளாக இருக்க முடியும். தலைமை ஆசிரியரைக் கைது செய்து முறையாக விசாரித்தால்தான் மாணவர்களிடமிருந்து உண்மையைப் பெற முடியும். ஆனால், தலைமை ஆசிரியருக்கு எதிராகச் சாட்சியம் அளிக்க மாணவர்கள் அஞ்சுகிறார்கள்.

அகிலனின் வகுப்புத் தோழர்களிடம் பேசியபோது, தலைமை ஆசிரியர் வகுப்பறைக்கு வந்து, யாருக்கெல்லாம் உதவித்தொகை கிடைக்கிறது என்று நேரடியாகக் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர். நாம் அனைவரும் பள்ளியில் படித்திருக்கிறோம். தலைமை ஆசிரியர் வகுப்பறைக்கு நேரடியாக வந்து இவ்வாறு கேட்பதைப் பொதுவாகக் கேள்விப்பட்டதில்லை. ஆனால், இங்கு அத்தகைய சம்பவம் நடந்திருக்கிறது. அதேவேளையில், தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தால், சாட்சியம் அளிக்கப் பெற்றோர்கள் தயங்குகிறார்கள்.

உண்மையாகவே ஒரு குற்றம் நடந்திருந்தால், காவல்துறை சாட்சிகளுக்குப் பாதுகாப்பளித்து வழக்கை முறையாக நடத்த வேண்டும். ஆனால், இங்கு சாட்சிகளை அச்சுறுத்தி, வழக்கைப் பலவீனப்படுத்தும் வகையில் காவல்துறை செயல்பட்டதாக நாங்கள் குற்றஞ்சாட்டுகிறோம்.

ஆசிரியர் ஒருவர் முதல் குற்றவாளி என்றால், சாட்சிகளுக்குப் பாதுகாப்பளிக்கத் தவறி வழக்கைப் பலவீனப்படுத்திய காவல்துறையின் செயல்பாடுகளும் விசாரிக்கப்பட வேண்டும். இனி எந்த மாணவர் துணிச்சலுடன் வந்து தலைமை ஆசிரியருக்கு எதிராகச் சாட்சியம் அளிப்பார்?

இவ்வாறு காவல்துறை குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர்களைப் பாதுகாப்பதாகவும், சாதியப் பாகுபாட்டில் ஈடுபடுவோருக்குத் துணைபோவதாகவும் மக்கள் கருதும் சூழல் உருவாகியுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் பொறுப்பு எங்கே?

இரண்டாவதாக, பள்ளிக் கல்வித்துறை இந்தச் சம்பவத்தைக் கவனித்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை பொறுப்புடைய கல்வித்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. குழந்தைகள் நலக் குழுவின் நடவடிக்கைகள் குறித்தும் தெளிவில்லை.  ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று மாணவர்களிடம் விசாரித்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய குழந்தைகள் நல அமைப்புகள் இதுவரை என்ன அறிக்கை அளித்துள்ளன என்பதும் தெரியவில்லை.

இத்தகைய நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டிய மாவட்ட ஆட்சியரும் உரிய முறையில் செயல்பட்டிருக்க வேண்டும்.

ஒரு பிரச்சினையை நாம் சுட்டிக்காட்டினால், பொறுப்பான அதிகாரிகள் நேரடியாகக் களத்தில் இறங்கி விசாரணை நடத்தி, நீதி நிலைநாட்டப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், இங்கு நீதி கேட்பவர்களுக்குச் சமாதானம் கூறி, நீதியைத் தட்டிக்கழிக்கும் போக்கு காணப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒன்றிணைந்து சாதியப் பாகுபாட்டில் ஈடுபடுவோரைப் பாதுகாக்கின்றனவோ என்ற கேள்வி கடந்த ஆறு நாட்களாக எங்களுக்கு எழுந்துள்ளது. இதனை நாம் நேரடியாகக் குற்றஞ்சாட்டுகிறோம்.

பள்ளிகளிலிருந்து சாதிப் பெயர்களை நீக்க வேண்டும்!

பள்ளிகளின் பெயர்களில் சாதிப் பெயர்கள் இருக்கக் கூடாது என்று கடந்த ஆட்சிக் காலத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் உள்ள குறிப்பிட்ட பெயர்களை நீக்குவது குறித்தும் அறிவிக்கப்பட்டது.

அப்படியிருக்க, கே.கே. நாயுடு, கோபால் நாயுடு, சித்தா நாயுடு போன்ற சாதிப் பெயர்களைக் கொண்ட பள்ளிகள் தொடர்ந்து செயல்படுவது எப்படி? இவற்றை நீக்க வேண்டிய பொறுப்பு மாவட்ட ஆட்சியருக்கும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் இல்லையா?

இங்குள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை எடுத்துப் பார்த்தால், அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதற்கான போதிய வாய்ப்புகள் உள்ளனவா என்ற கேள்வி எழுகிறது. இந்தப் பகுதியில் வாழும் நமது பிள்ளைகள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளையே பெரிதும் நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளது.

அதே பகுதியில் உள்ள கே.கே. நாயுடு, சர்வஜனா, கோபால் நாயுடு, மணி பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களுக்கு நமது பிள்ளைகளை அனுப்ப வேண்டிய நிலையும் உள்ளது. இத்தகைய பள்ளிகளில் சாதிப் பெயர்கள் தொடர்ந்து இடம்பெறுவது ஏன்?

இந்தக் கல்வியாண்டில் கோபால் நாயுடு பள்ளியின் முதல் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பள்ளி நாட்குறிப்பில், மாணவரின் பெயர், பெற்றோரின் பெயர், தொடர்பு எண், இரத்த வகை ஆகிய விவரங்களுடன் சாதிப் பிரிவையும் குறிப்பிடும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. போன்ற பிரிவுகளைக் குறிப்பிடும் இடமும் அதில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐந்து அல்லது ஆறு வயதுடைய குழந்தையிடம் இத்தகைய விவரங்களைக் கேட்கும் பள்ளியின் செயல்பாட்டை விசாரிக்க வேண்டாமா? இதற்கான ஆதாரங்கள் வேண்டுமெனில் நாங்கள் முன்வைக்கத் தயாராக இருக்கிறோம். இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தங்களுடைய பொறுப்பைச் சரிவர நிறைவேற்றவில்லை என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டாமா? அவர்கள் எதற்காகப் பொறுப்பில் இருக்கிறார்கள்?

பள்ளிச் சீருடையின் நோக்கம் என்ன?

நமது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும்போது, அங்கு சாதி வேறுபாடும் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடும் இருக்கக் கூடாது என்ற நம்பிக்கையில்தான் அனுப்புகிறோம்.

அதனால்தான் பள்ளிச் சீருடை அணியச் சொல்கிறார்கள். அனைவரும் சமமானவர்கள் என்ற உணர்வை உருவாக்குவதும், வெளிப்படையான வேறுபாடுகளைக் குறைப்பதும் பள்ளிச் சீருடையின் நோக்கங்களில் ஒன்றாகும்.

ஆனால், மாணவர்களின் சாதி என்ன, உணவுப் பழக்கம் என்ன என்று கேட்கும் ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பதைப் பள்ளிக் கல்வித்துறையும் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் கண்காணிக்க வேண்டாமா?

இத்தகைய கண்காணிப்பு இல்லையென்றால், நமது பிள்ளைகளை எவ்வாறு பாதுகாப்பது?

நாம் நீதி கேட்கிறோம். குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர்கள் முறையாக விசாரிக்கப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், பிற பள்ளிகளின் நிர்வாகங்களும் தங்களுடைய ஆசிரியர்களை அழைத்து எச்சரித்திருக்கும். ஆயிரக்கணக்கான குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் அவர்களுடைய பாதுகாப்பு எவ்வாறு உறுதிப்படுத்தப்படுகிறது என்பது நமக்குத் தெரியவில்லை.

நாளை இதேபோன்ற சம்பவம் வேறு ஒரு குழந்தைக்கு நேருமா என்ற அச்சம் நமக்கு இருக்கிறது. நமது குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆதங்கத்துடன்தான் நாம் இங்கு நிற்கிறோம்.

அகிலனின் பெற்றோர், தங்களுடைய பிள்ளைக்கு நேர்ந்தது போன்று இனி வேறு எந்தப் பிள்ளைக்கும் நேரக் கூடாது என்ற உறுதியுடன் நிற்கிறார்கள். இந்தப் பொறுப்பு மாவட்ட ஆட்சியருக்கும் காவல்துறைக்கும் பள்ளிக் கல்வித்துறைக்கும் இல்லையா?

தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு முறையாக விசாரிக்கப்பட்டிருந்தால், அது பிற ஆசிரியர்களுக்கும் எச்சரிக்கையாக அமைந்திருக்கும். பள்ளிகளிலிருந்து சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தாலும், அது மற்ற கல்வி நிறுவனங்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இருந்திருக்கும்.

சாதிப் பாகுபாட்டையும் உணவுப் பாகுபாட்டையும் அனுமதிக்க முடியாது!

இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்தப் பள்ளிகளில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்று எச்சரிக்கிறோம். இல்லையெனில், அவற்றை நாங்களே அழிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

சாதிப் பெயர்களை நீக்க வேண்டியது பள்ளிக் கல்வித்துறையின் பொறுப்பு. அதனை மேற்பார்வையிட வேண்டியது மாவட்ட ஆட்சியரின் பொறுப்பு.

இதற்குப் பிறகும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எங்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் சிறைக்குச் செல்ல நேர்ந்தாலும் அதற்குத் தயாராக இருக்கிறோம். இத்தகைய போராட்டங்கள் எங்களுக்குப் புதிதல்ல.

பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி, மாணவர்களின் சாதி, உணவுப் பழக்கம், மத அடையாளம் ஆகியவற்றைக் கேட்டு அவர்களை அவமானப்படுத்தும் செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஒரு மாணவர் மாட்டிறைச்சி உண்பவரா, அவருடைய சாதி என்ன, அவர் இசுலாமியரா என்றெல்லாம் கேட்டு அவரைப் பாகுபாட்டுடன் நடத்துவதை அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது.

இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடந்தால், எங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக நாங்கள் நேரடியாகக் களத்தில் இறங்குவோம் என்று எச்சரிக்கிறோம்.

எங்கள் குழந்தைகள்தான் எங்களுக்கு முக்கியம். அவர்களைப் பாதுகாப்பதற்காகத்தான் சட்டத்தின் வழியில் நீதி கேட்டோம். ஆறு நாட்களாக அவர்களுடைய உடலைப் பெற்றுக்கொள்ளாமல் நீதி கோரி நின்றோம்.

சட்டத்தில் வழிமுறைகள் இருக்கின்றன. அந்தச் சட்டத்தின்படி குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்து, விசாரித்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டித்து, சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதைத்தான் நாங்கள் கேட்டோம்.

ஆனால், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டியவர்கள் அதைச் செய்யத் தவறினால், எங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை நாங்களே ஏற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளின் உரிமைகளுக்காக ஒன்றுதிரளுங்கள்!

தாய்மார்களே, நீங்கள் உங்கள் பிள்ளைகளைக் கருவிலிருந்து வளர்த்து, பல துன்பங்களைத் தாங்கி அவர்களைப் பாதுகாக்கிறீர்கள். அத்தகைய பிள்ளைகளை எந்த ஆசிரியராவது அல்லது எந்தப் பள்ளியாவது அவமானப்படுத்தினால், அதை அமைதியாகக் கடந்து செல்ல வேண்டிய அவசியமில்லை.

ஒரு குழந்தைக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக நூறு பெற்றோர்கள் ஒன்றுதிரண்டு கேள்வி எழுப்ப வேண்டும்.

காவல்துறையிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் நீதி கிடைக்கவில்லை என்றால், நீதியை நிலைநாட்டுவதற்கான ஜனநாயக வழிகளில் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

நாம் எவ்வளவு காலம் அச்சத்துடன் வாழ்வது? நாமே உழைத்து நமது பிள்ளைகளை வளர்க்கிறோம். அவர்கள் உயர்கல்வி பெறுவதற்குத் தடையாகச் சாதிப் பாகுபாடு அமைய அனுமதிக்க முடியாது.

இனிமேல் எந்தப் பள்ளியிலாவது ஆசிரியர் ஒருவர் மாணவரின் சாதியைக் குறிப்பிட்டோ, உணவுப் பழக்கத்தைக் குறிப்பிட்டோ அவரை அவமானப்படுத்தினால், அதற்கு உரிய முறையில் நேரடியாக எதிர்ப்புத் தெரிவிப்போம்.

வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் எதிர்கொள்வோம். சிறைக்குச் செல்ல நேர்ந்தாலும் திரும்பி வந்து நமது உரிமைகளுக்காகப் போராடுவோம். எங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பதே எங்களுக்கு முதன்மையானது.

நாங்கள் மேடையில் பேசிவிட்டுச் செல்லும் கூட்டமல்ல. கடந்த ஆறு நாட்களாகச் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் போராடி வருகிறோம். தோழர்கள் மலை, வெயில், இரவு, பகல் என எதையும் பொருட்படுத்தாமல் உணவும் தண்ணீரும் இன்றித் தெருக்களில் போராடியிருக்கிறார்கள்.

கொங்கு மண்டலத்தில் அண்ணல் அம்பேத்கரின் சிலையை நிறுவுவதற்குக்கூட எதிர்ப்புகள் நிலவும் சூழலில், சாதியப் பாகுபாட்டுக்கு எதிராகவும் நமது பிள்ளைகளின் சுயமரியாதையைப் பாதுகாக்கவும் மாணவர்களையும் பள்ளிகளையும் பாதுகாக்கும் அமைப்புகளை உருவாக்குவோம்.

கோயில்களில் சம உரிமை வேண்டும்!

இங்குள்ள முதுகலைக் கல்லூரிக்குப் பின்னால் அமைந்துள்ள கோயில்களில் நமது மக்களை அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இன்றளவும் இத்தகைய பாகுபாடுகள் தொடர்வதாகக் கூறப்படுகிறது.

இன்னும் ஒரு வாரத்திற்குள் இத்தகைய தடைகள் நீக்கப்படாவிட்டால், நமது மக்களும் கோயில்களுக்குள் சென்று வழிபடுவதற்கான உரிமையை நிலைநாட்டும் போராட்டத்தை நடத்துவோம்.

அதேபோன்று, பள்ளிகளிலிருந்து சாதிப் பெயர்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளையும் நாமே முன்னெடுப்போம்.

இந்தப் போராட்டம் இதோடு முடிவடையப் போவதில்லை. இது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. நாங்கள் எவ்வளவு காலம் இங்கே அமர்ந்திருப்போம் என்று யாரும் எண்ண வேண்டாம்.

அரசியலமைப்புச் சட்டம் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்பதைத்தான் நாங்கள் கேட்டோம். தினந்தோறும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை இருந்தாலும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தயங்கினால், அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.

இந்த ஊரில் நிலவும் சாதியப் பாகுபாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான பொறுப்பை நாங்களும் ஏற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டபோதும், இங்கு நமது மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு யார் வந்தார்கள்? பங்களாதேஷில் இந்துக்கள் தாக்கப்படுவதாகக் கூறிப் போராட்டங்களை நடத்துபவர்கள், நமது பிள்ளைகளுக்கு இழைக்கப்படும்  அநீதிக்காக இங்கு வந்தார்களா?

நமது மக்களின் உரிமைகளுக்காகவும் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும் நாம் நாமே ஒன்றிணைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சாதிய இழிவை நீக்குவதற்கும், பள்ளிகளிலிருந்து சாதிப் பெயர்களை அகற்றுவதற்கும், கோயில்களில் சம உரிமையை நிலைநாட்டுவதற்கும் தேவையான போராட்டங்களை நாமே முன்னெடுப்போம்.

மக்கள் ஒன்றுகூடி முழக்கமிட்டு, பின்னர் கலைந்து சென்றுவிடுவார்கள் என்று யாரும் எண்ண வேண்டாம். அந்தக் காலம் முடிந்துவிட்டது. இனிமேல் நேரடியாகக் களத்தில் இறங்கிப் போராடுவதற்கான உறுதியைத் தெரிவிப்பதற்காகவே நாம் இங்கு ஒன்றுகூடியிருக்கிறோம்.

அகிலனுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்!

மாணவர் அகிலனின் மரணத்திற்குக் காரணமானவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் வரை தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் தொடரும்.

இன்று சென்னையில் சாலை மறியல் போராட்டம் நடத்துகிறோம். நாளை வேலூரிலும், அதற்கு அடுத்த நாள் ஓசூரிலும் போராட்டங்கள் நடைபெறவுள்ளன. இங்குள்ள பல்வேறு அமைப்புகளும் தமிழ்நாட்டின் பல நகரங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இது கோயம்புத்தூர், பீளமேடு பகுதிகளுக்குள் மட்டும் முடக்கிவிடக்கூடிய பிரச்சினையல்ல. தமிழ்நாடு முழுவதும் இந்தப் பிரச்சினைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தால், மக்களின் வலிமையை எவராலும் புறக்கணிக்க முடியாது.

மக்களே, நீங்கள்தான் வலிமையானவர்கள். மக்களின் உரிமைகளையும் குரலையும் மீறி எந்த அதிகார அமைப்பும் செயல்பட முடியாத வகையில் நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். நீங்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு வாருங்கள். வரலாற்றின் போக்கையே மாற்றி எழுதக்கூடிய போராட்டத்தை நடத்திக் காட்டுவோம்.

மாணவர் அகிலனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். சாதியப் பாகுபாடு ஒழிக்கப்பட வேண்டும். நமது பிள்ளைகளின் கல்வி உரிமையும் சுயமரியாதையும் பாதுகாக்கப்பட வேண்டும்.

நன்றி. வணக்கம்.

அதேப்போன்று கோவையில் சாதிய கொடுமைக்கு ஆளான மாணவர் அகிலன் மரணத்திற்கு நீதி கேட்டு, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன்குமார் தலைமையில், அக்டோபர் 27, 2026 செவ்வாய் கிழமை வேலூர் மாவட்டம், காட்பாடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மே 17 இயக்கத்தோழர்களும் மற்றும் தோழமை அமைப்புத் தோழர்களும் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில், குற்றவாளி ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும், கே கே நாயுடு பள்ளியின் உரிமையை ரத்து செய்து முழுவதுமாக அரசுடமையாக்கப்பட வேண்டும், பள்ளிகளில் சாதியக் கொடுமைகளை தடுக்க நீதிபதி சந்துரு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் மற்றும் வேலூர் மாவட்ட விசிக, எஸ்.டி.பி.ஐ, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி MRPS கட்சி உள்ளிட்ட தோழமை இயக்க பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.

இறுதியாக கண்டன முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நிறைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »