
கோவை மாணவன் அகிலன் கே.கே. நாயுடு பள்ளியின் சாதிவெறியால் தற்கொலை செய்து ஐந்து நாட்களாகிறது. மாட்டுக்கறி உணவைப் பயன்படுத்தி சாதி பாகுபாடு காட்டி ‘அகிலனை’ அவமானப்படுத்திய ஆசிரியர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரும் கைது செய்யப்படவில்லை. இடைநீக்கம் மட்டுமே தண்டனை என்று அரசும், காவல்துறையும் நினைக்கிறது. மாணவனின் போராட்டத்திற்கு நீதி கேட்டு போராட்டம் தொடர்ந்து வருகிறது. மே 17 இயக்கம் உட்பட 50 மேற்பட்ட ஜனநாயக அமைப்புகள் ஐந்து நாட்களாக போராடுகின்றன.
கோவை பீளமேட்டில் கே. கே நாயுடு பள்ளியின் 11-ம் வகுப்பு படித்த 15 வயது மாணவனே அகிலன். கோவை மாவட்டம் பீளமேடு AD காலனியைச் சேர்ந்தவர்கள் அசோக்குமார் – கௌசல்யா தம்பதியினர். இவர்களுக்கு நேத்ரா (19) என்ற மகளும், அகிலன் (15) என்ற மகனும் உள்ளனர். தாயார் பீளமேடு பாரதி காலனியில் வீட்டு வேலை பார்த்து வருகிறார். தந்தை மூணாரில் உள்ள ஒரு விடுதியில் வேலை பார்க்கிறார்.
எளிய குடும்பத்தைச் சேர்ந்த அகிலனை, பீளமேடு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்த பெற்றோர் 11ஆம் வகுப்பிற்கு ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள கே.கே. நாயுடு பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர்த்துள்ளனர்.
அகிலன், சில நாட்களாக வீட்டில் “எனக்கு பள்ளிக்குச் செல்ல பிடிக்கவில்லை” என்று தொடர்ந்து கூறி வந்துள்ளார். பெற்றோர் காரணம் கேட்டபோதுதான் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு வகுப்பில் ‘அரசு உதவித் தொகை (scholarship)’ தொடர்பாக ஆசிரியர்கள் விசாரித்துள்ளனர். அப்போது வகுப்பு ஆசிரியர் விஜயகுமார், SC மாணவர்கள் எழுந்து நிற்குமாறு கூறியுள்ளார். மாணவர்கள் எழுந்ததும் ஆசிரியர் அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் அகிலனைப் பார்த்து “நீ மாட்டுக்கறி சாப்பிடுபவனா?” என்று கேட்டுள்ளார். அதற்கு அகிலன் “ஆமாம், எங்க அப்பா வீட்டுக்கு வரும்போது எடுத்து வருவார்” என்று இயல்பாக பதிலளித்துள்ளார். அது சாதிக்கான கேட்ட கேள்வியாக அந்த மாணவனுக்கு அப்போது தெரியவில்லை.

ஆனால் அன்றிலிருந்து அகிலனிடம் சக மாணவர்களின் போக்கு மாறத் தொடங்கியுள்ளது. அவனது சாதியைக் கூறி இழிவுபடுத்தும் சூழல் வகுப்பில் உருவாகியுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அகிலன், நடந்தவற்றை வீட்டில் கூறியுள்ளான்.
இதை அறிந்த அவனது தந்தை, பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் நியாயம் கேட்டுள்ளார். ஆனால், அதன் பிறகு வகுப்பாசிரியர் விஜயகுமார் அகிலனை தனியாக அழைத்து மிரட்டியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து வகுப்பில் சக மாணவர்களால் சாதிய ரீதியாக ஒதுக்கி வைக்கப்பட்டதால், அகிலன் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளான்.
இந்த மன உளைச்சலில் இருந்த அகிலன், ஆயுத பூஜை விடுமுறை முடிந்து அக்டோபர் 21, 2026 அன்று பள்ளிக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளான். பின்னர் வீட்டிற்கு வந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறான்.
அகிலனின் தாயார் அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர், மற்றும் மாணவனை அவமானப்படுத்திய
வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் ஆகியோரை உடனடியாக கைது செய்து ரிமாண்ட் செய்ய வேண்டும் என்றும், அகிலனை சாதிய ரீதியாக கேலி கிண்டலுக்கு ஆளாக்கியதால் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதால், வழக்கில் ‘ராகிங் தடை சட்டமும்’ சேர்க்கப்பட வேண்டும் என்று போராடும் தோழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காவல்துறை இந்த வழக்கை விசாரிப்பதற்காக 5 தனிப் படைகளை அமைத்துள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள், விஜயகுமார் என்ற ஆசிரியர், புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர், சாதிய ரீதியாக இழிவுபடுத்திய சக மாணவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தெளிவாக அடையாளம் காணப்பட்ட நிலையில் ஐந்து தனிப்படை எதற்காக என்கிற கேள்வி எழுகிறது. சகமாணவர்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் உள்ளதாகவும், ஆசிரியரை கைது செய்ததாகவும் காவல்துறை கூறுகிறது. ஆனால் ஆசிரியர் கைது செய்யப்படவில்லை என போராட்ட களத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர். துறைவாரியாக இடைநீக்கம் மற்றும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு நீதிகேட்டு, காத்திருப்பு போராட்டத்தில் மே 17 இயக்கம் உட்பட 50க்கும் மேற்பட்ட ஜனநாயக அமைப்புகள் பங்கேற்றனர். தங்களது மகனுக்கு நீதி கிடைக்கும் வரை அவன் உடலை வாங்க மாட்டோம் என்று பெற்றோர்களும், உறவினர்களும் போராட்ட களத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து ஜனநாயக, முற்போக்கு தோழர்களும், குடும்ப உறவுகளும் இணைந்து அக்டோபர் 23, 2026 அன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகாரளித்தனர்.
தமிழ்நாடு அரசின் சார்பாக எந்தப் பிரதிநிதியும் இதுவரை பாதிக்கப்பட்ட மாணவன் குடும்பத்தினரிடம் பேசவில்லை. அந்தப் பகுதியின் எம்எல்ஏ கிரிபிரசாத், காவல்துறையை மட்டும் சந்தித்து போராட்டக் குழுவினரையோ, பத்திரிக்கையாளர்களே சந்திக்காமல் சென்று விட்டார். முதலமைச்சர் வாய் திறக்கவில்லை. இந்த மௌனம் தவெக அரசு சாதி வெறியர்களுக்கு துணை போகிறதா என்கிற கேள்வியை எழுப்புகிறது.
பள்ளியின் ஆசிரியர்களே சாதிவெறியுடன் இருந்தால் மாணவர்களின் எதிர்காலம் குறித்து அச்சம் உருவாகிறது. இதனை உடனே களையெடுக்க வேண்டும் என கல்வி செயல்பாட்டாளர்கள், சமூக அமைப்புகள் கூறுகின்றனர். மாணவர்கள் இடையே நிலவும் சாதி பாகுபாட்டை, வன்முறையை ஒழிப்பதற்காக, கடந்த திமுக அரசு நீதிபதி கே. சந்துரு அமைத்த ஒரு நபர் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர்.
மாணவன் அகிலனுக்கு நீதி வேண்டி மே 17 இயக்கத்தின் சார்பாக தோழமை அமைப்புகளுடன் சிதம்பரத்தில் தோழர்கள் போராட்டம் நடத்தினர். கோவையில் ஐந்து நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று (அக்டோபர் 26, 2026) சென்னையில் அண்ணா சாலையில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. அங்கங்கே அகிலனுக்கான நீதி கேட்கும் போராட்டம் தொடர்கிறது.

உத்தரப்பிரதேசம் போன்ற பாஜக ஆளும் வடமாநிலங்களில் மாட்டுக்கறி வைத்திருந்ததற்காகவே மனிதர்கள் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். குறிப்பாக இஸ்லாமியர்கள் இந்த மதவெறிக்கு பலியாகிறார்கள். அதே இந்துத்துவ மதவெறி அரசியல் தான் இன்று தமிழ்நாட்டிற்குள்ளும் நுழைந்துள்ளது. “நீ மாட்டுக்கறி சாப்பிடுபவனா?” என்று வகுப்பறைக்குள் ஒரு ஆசிரியரே கேட்டிருக்கிறார். அந்த ஒரு கேள்வி ஒரு மாணவனை சாவின் விளிம்பிற்கு தள்ளியிருக்கிறது. இஸ்லாமியர்களுக்கும் பட்டியலின மக்களுக்கும் எதிரான சங்கிகளின் இந்துத்துவ அரசியல், இங்கே சாதி வெறியுடன் கலந்து அகிலனை கொன்றிருக்கிறது. இது தமிழ்நாட்டில் இந்துத்துவ அரசியலின் தாக்கம் எதிரொலிக்கத் தொடங்கியிருப்பதன் அபாய அறிகுறி.
அகிலனின் மரணம் தற்கொலை அல்ல. அது சாதியப் படுகொலை. பள்ளிக்கூடம் கல்வி கற்று தர வேண்டிய இடம். ஆனால் கே.கே.நாயுடு பள்ளி சாதியை கற்று கொடுத்திருக்கிறது. மாட்டுக்கறி தின்பவனா என்று கேட்ட ஆசிரியரின் ஒரு கேள்வி, ஒரு மாணவனின் உயிரை பறித்திருக்கிறது. இந்த தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் இடைநீக்கம் என்பது கண்துடைப்பு நாடகம். 5 தனிப்படை என்பது ஏமாற்று வேலையாகவே தெரிகிறது. எனவே காவலதுறையின் நம்பிக்கையற்ற நிலையில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதன் எதிரொலியாக தற்போது தவெக அரசு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
பெற்றோர் உடலை வாங்க மறுப்பது தனது பிள்ளைக்காக அவர்கள் நடத்தும் கடைசி நீதி போராட்டம். இதற்காக மே 17 இயக்கமும், தோழமை அமைப்புகளும் ஐந்து நாட்களாக நிற்பது அகிலனுக்காக மட்டும் அல்ல, நாளை இன்னொரு அகிலன் உருவாகாமல் தடுக்க!
அரசு மௌனம் கலைக்க வேண்டும்!
நீதிபதி சந்துரு குழு அறிக்கையை உடனே அமல்படுத்த வேண்டும்!
அகிலனுக்கு நீதி கிடைக்கும் வரை களம் ஓயாது!