
மாட்டிறைச்சி உள்ளிட்ட அனைத்து இறைச்சிகளையும் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப வழங்கிடவும், சமூகநீதித்துறை அமைச்சர் மாண்புமிகு தோழர் வன்னி அரசு அவர்கள் மீதான சங்கிகளின் அவதூறுகளை கண்டித்தும் அனைத்து முற்போக்கு இயக்கங்களின் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் அக்டோபர் 08, 2026 அன்று நடந்தது. இந்நிகழ்வில் தமிழ் புலிகள் தலைவர் நாகை திருவள்ளுவன், தமிழர் விடியல் கட்சியின் இளமாறன், தோழர் இளையராஜா, திராவிட தமிழர் கட்சியின் தோழர் வெண்மணி , திவிகவின் தோழர் உமாபதி, தபெதிக தோழர்கள் ஆவடி நாகராசன், தோழர் அதர்மம் மனோஜ், மக்கள் மன்றம் தோழர்கள் தஞ்சை தமிழன் மற்றும் மே17 இயக்கத்தோழர்கள் பிரவீன்குமார், கீதா இசைமொழி ஆகியோர் பங்கெடுத்தனர். இப்போராட்டத்தை ஆதரித்தும், வாழ்த்தியும் பேச விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த பொறுப்பாளர் தோழர் ரஜினிகாந்த் பங்கெடுத்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நிகழ்த்திய கண்டன உரை:
“தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்! உணவு என்பது அவரவர் உரிமை. அதில் தலையிடுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்பதை முன்வைத்தும், மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு அவர்கள், “மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி உணவு வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை மாணவர்களிடத்தில் எழுந்துள்ளது, அதை நாங்கள் பரிசீலிப்போம்” என்று சொன்னதற்காக, அவர் மீது கடுமையான அவதூறு பிரச்சாரத்தை கட்டவிழ்த்திருக்கிறார்கள். இப்படியான ஒரு மோசமான பாசிச சூழ்நிலையை கண்டிக்கின்ற விதமாக, அனைத்து முற்போக்கு இயக்கங்களும் இங்கே ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்த போராட்டத்திற்கு வருகை தந்து வாழ்த்தியிருக்கக்கூடிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய மூத்த பொறுப்பாளர் மரியாதைக்குரிய தோழர் ரஜினிகாந்த் அவர்களுக்கும், இந்நிகழ்விலே உரையாற்றியிருக்கக்கூடிய தமிழ் புலிகள் கட்சியினுடைய தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் அவர்களுக்கும், திராவிடத் தமிழர் கட்சியினுடைய தலைவர் தோழர் வெண்மணி அவர்களுக்கும், தமிழர் விடியல் கட்சியினுடைய பொறுப்பாளர் தோழர் இளமாறன் அவர்களுக்கும், திராவிடர் விடுதலைக் கழகத்தினுடைய தோழர் உமாபதி அவர்களுக்கும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினுடைய தோழர் ஆவடி நாகராஜன் அவர்களுக்கும், காஞ்சி மக்கள் மன்றத்தினுடைய தோழர் தஞ்சை தமிழன் அவர்களுக்கும் மற்றும் இங்கே பங்கெடுத்திருக்கக்கூடிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தோழர்களே, மரியாதைக்குரிய அமைச்சர் வன்னியரசு அவர்கள் என்ன சொன்னார் என்றால், “மாணவர்கள் மாட்டிறைச்சி வேண்டும் என்று கேட்கிறார்கள். அந்த கோரிக்கையை நாங்கள் பரிசீலனை செய்வோம்” என்று சொன்னார். ஒரு அரசு மக்களிடத்தில் எழக்கூடிய கோரிக்கையை பரிசீலனை செய்வதுதான் முறை. அதுதான் அரசினுடைய கடமை. அதை தடுப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை. அமைச்சர் தானாக இந்த கோரிக்கையை முன்வைக்கவில்லை. மாறாக, சமூகத்தில் எழுந்திருக்கக்கூடிய ஒரு கோரிக்கையை அவர் ஆதரிப்பது குறித்து, அல்லது அரசு நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை செய்வோம் என்றுதான் பேசியிருக்கிறார். உடனடியாக, மாட்டிறைச்சிக்கு எதிரான ஒரு மிகப்பெரிய கண்டனத்தையும் எதிர்ப்பையும், மாட்டிறைச்சி என்பதே தவறு, அது தீண்டத்தகாத ஒன்று என்பது போன்ற ஒரு எதிர்ப்புணர்வை பரப்பி வருகின்ற ஒரு இந்துத்துவ வலதுசாரி அரசியலை பார்க்கிறோம்.

அடிப்படையிலே, இறைச்சி உணவு என்பது மனிதனுடைய அடிப்படை உணவு. மனிதனுடைய வளர்ச்சி என்பதே இறைச்சி உணவில்தான் வந்தது. மனிதனுடைய மூளை வளர்ச்சிக்கு அடிப்படை காரணமாக இருந்தது இறைச்சி உணவுதான். இறைச்சி உணவில்தான் மனிதனுடைய மூளை வளர்வதற்குரிய புரதங்கள் கிடைத்தன என்பதை ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இந்தியாவிற்குள்ளாக, ‘மாட்டிறைச்சி என்பதை தடுப்போம், தடுத்து நிறுத்தி வைப்போம், மாட்டிறைச்சிக்கு அனுமதி இல்லை’ என்று ’இந்துத்துவவாதிகள்’ சொல்லுகின்ற காரணத்தினால்தான், இந்தியாவிலிருந்து நோபல் பரிசு பெறுவதற்கு எவனும் போவதில்லை.
ஏனென்றால், இவனுக்கு (இந்துத்துவவாதிகளுக்கு) மூளை வளர்ச்சி என்பது சற்று குறைவாக இருக்கின்ற காரணத்தினால்தான், இவர்கள் சர்வதேச மட்டத்தில் சென்று போட்டி போடக்கூடிய மூளை வளர்ச்சி அற்றவர்களாக இருக்கிறார்களோ என்கின்ற சந்தேகம் எழுகிறது.
மாட்டிறைச்சியில் பல மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இதை நான் சொல்லவில்லை, மருத்துவ அறிஞர்கள், விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். மாட்டிறைச்சியில்தான் வைட்டமின்கள் இருக்கின்றன. குறிப்பாக வைட்டமின் பி12 அதிகமாக இருப்பது மாட்டிறைச்சியில் தான். இந்த வைட்டமின் பி12 என்பது மூளையினுடைய செயல்பாட்டிற்கு மிக மிக தேவையான ஒன்று. கோலின் என்கின்ற ஒரு அமிலம் மாட்டிறைச்சியில் இருந்துதான் நேரடியாக கிடைக்கிறது. வேறு எந்த, குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இவர்கள் சொல்கிறார்களே தானிய உணவு அல்லது சைவ உணவு, அதில் அது கிடைப்பதில்லை.
கோலின் என்கின்ற மூளை வளர்ச்சிக்கு தேவைப்படுகின்ற அந்த புரதம் மாட்டிறைச்சியில் இருந்துதான் அதிகம் கிடைக்கும். இதுபோல, மூளையினுடைய செயல்பாட்டிலே, மூளையில் இருக்கக்கூடிய திசுக்களுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடிய, அதற்கு தேவைப்படுகின்ற சத்துக்கள் மாட்டிறைச்சியில் இருப்பதை ஆவணப்பூர்வமாக சர்வதேச அளவிலே சொல்லியிருக்கிறார்கள். இதெல்லாம் மாட்டிறைச்சி குறித்து ஆராய்ச்சிப்பூர்வமாக அறிவியல் அறிஞர்கள் வெளிப்படுத்திய உண்மை. கூகுளில் ‘மாட்டிறைச்சியில் என்னவெல்லாம் மனிதர்களுக்கு தேவைப்படுகின்ற சத்துக்கள் இருக்கின்றன’ என்று தேடினாலே இத்தகைய தகவல்கள் கிடைத்துவிடும்.
குறிப்பாக மாணவர்களுக்கு ஏன் மாட்டிறைச்சி தேவைப்படுகிறது என்றால், மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். வேறு எவரையும் விட அதிக அளவில் சிந்தனையிலும், செயலிலும், வாசிப்பதிலும் கவனத்தை செலுத்த வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு உடல் பலமும், மூளை அளவில் வளர்ச்சி அடைவதற்குரிய ஆற்றல்களும் கிடைக்க வேண்டுமென்றால், மாட்டிறைச்சி அனைத்து விடுதிகளிலும் கண்டிப்பாக போடப்பட வேண்டும். அதுதான் அறிவியல்பூர்வமான நகர்வாக இருக்க முடியும்.

மாட்டிறைச்சியை தவிர்த்துவிட்டு, இவர்கள் (இந்துத்துவவாதிகள்) “தயிர் சாதம்தான் போடுவோம்” என்று சொன்னால், எப்படி இந்தியாவிலிருந்து எவனும் நோபல் பரிசு வாங்குவதற்கு போவதில்லையோ, அதே போன்ற எதிர்காலம்தான் நமக்கு வரும். உலக அளவில் நோபல் பரிசு வாங்கிய அறிஞர்களில் பெரும்பாலானோர் மாட்டிறைச்சியை உணவாக எடுத்துக் கொள்ளக்கூடியவர்கள்தான். மாட்டிறைச்சி என்பது கெடுதல் அல்ல. ஆனால், இந்துத்துவ சக்திகள் இதை ஒரு பெரிய பிரச்சினையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழர்களுடைய உணவு பழக்கத்திலே இறைச்சி உணவு என்பது அடிப்படை உணவாக இருக்கிறது. சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இறைச்சியை எப்படியெல்லாம் நீங்கள் சமைக்கலாம் என்பது பற்றிய குறிப்புகள் சங்க இலக்கிய பாடல்களில் மிக தெளிவாக, அதனுடைய சுவையை சொல்கின்ற வகையிலே எழுதப்பட்டிருக்கின்றன. நற்றிணையிலே சொல்லப்பட்டிருக்கிறது. திருமுருகாற்றுப்படையிலே சொல்லப்பட்டிருக்கிறது. முருகனை கொண்டாடுகின்ற அந்த பாடல்களில், முருகனுக்கு எப்படி படையல் போட வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த படையல் உணவிலே இறைச்சி இருக்க வேண்டும் என்பது அடிப்படை தமிழர் மரபு.
அப்படி இருக்கக்கூடிய சூழலில், இங்கே அசைவம் சாப்பிடாத, சைவ உணவை மட்டும் சாப்பிடக்கூடிய பழக்கம் தமிழ்நாட்டில் எப்படி நுழைந்தது? 3% பூணூல் போட்டவனுக்கு மட்டும்தான் சைவ உணவுப்பழக்கம் இருக்கிறது. அது அவனுடைய உணவு உரிமை, அவன் வைத்துக் கொள்ளட்டும். அவர்களை நாம் தொந்தரவு செய்யவில்லை. அவர்களை “அசைவம் சாப்பிடு” என்று நாம் சொல்லவில்லை.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலக அளவிலே நிலப்பரப்பு எப்படி இருக்கிறதோ, அதை பொறுத்துதான் உணவு பழக்கம் வரும். கடற்கரை ஓரத்தில் வாழக்கூடிய மக்களுக்கு மீன் உணவு தினமும் கிடைக்கும், அதற்கான சாத்தியம் இருக்கிறது. ஆற்றங்கரை ஓரத்திலே, குளத்தங்கரை ஓரத்தில் வாழக்கூடியவர்களுக்கு நன்னீரிலிருந்து கிடைக்கக்கூடிய மீன் கிடைக்கும், அதில் புரதம் கிடைக்கிறது. மேய்ச்சல் நிலத்திலே மாட்டிறைச்சி கிடைக்கிறது, ஆட்டிறைச்சி கிடைக்கிறது. விவசாய நிலங்களிலே கோழி போன்ற பறவை இனத்தினுடைய இறைச்சி கிடைக்கிறது. அந்தந்த இடத்தில் எது கிடைக்கிறதோ, அதை சாப்பிடுகிறோம், அதில் எந்த தவறும் கிடையாது.
உணவு என்பது அவரவருடைய தேவை அடிப்படையிலும், அவர்களுக்கு எது கிடைக்கிறதோ, அதை எடுத்துக்கொள்ளும் வகையிலும் நடக்கிறது. உணவை வைத்து அரசியல் பேச முடியாது. உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாதீர்கள், யாரும் வற்புறுத்தவில்லை. நாங்கள் எல்லோரும் மாணவர்களாக இருந்தவர்கள், விடுதியில் தங்கியிருந்தவர்கள். சைவ உண்வு சாப்பிடுகிறவன் சாப்பிட்டுவிட்டு போகட்டும். தயிர் சாதம் சாப்பிடுகிறாயா, தக்காளி சாதம் சாப்பிடுகிறாயா, சாப்பிட்டுவிட்டு போ. ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, கோழிக்கறி சாப்பிடுகிறேன் என்று விரும்புகிறவர்கள் அதை சாப்பிட்டுவிட்டு போகட்டும். இரண்டும் தவறு கிடையாது. யாருக்கு எது விருப்பமோ, அவர்கள் அதை சாப்பிடப் போகிறார்கள்.

இதில் இந்துத்துவாக்களுக்கு என்ன பிரச்சினை? நீ சாப்பிடவில்லை என்றால் உன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. உனக்கு யாராவது வாயில் திணிக்கிறார்களா? அடுத்தவன் தட்டில் என்ன இருக்கிறது என்பதில் உனக்கு என்ன பிரச்சினை? அடுத்தவன் எதை சாப்பிட்டால் உனக்கு என்ன? நாம் இதைப் பற்றி பேசும் பொழுதெல்லாம், ‘பன்றி இறைச்சியை பற்றி நீ ஏன் பேசுவதில்லை’ என்று பேசிக்கொண்டிருக்கிறான். பன்றி இறைச்சியை சாப்பிடுங்கள், விருப்பப்படுகிறவன் சாப்பிடட்டும். நான் பன்றி இறைச்சி சாப்பிடக்கூடியவன்தான், மாட்டிறைச்சி சாப்பிடக்கூடியவன்தான், மீனை சாப்பிடக்கூடியவன்தான். எல்லா இறைச்சி வகைகளும் வாய்ப்பு கிடைத்தால் சாப்பிடுகிறோம். தடை செய்யப்படுவதற்கு முன்பு மான் இறைச்சி சாப்பிட்ட கூட்டம்தான் நம் கூட்டம். எல்லாவற்றையும் சாப்பிட்டிருக்கிறோம். இப்படி உணவு வகையில் எங்கெங்கே எது கிடைக்கிறதோ அதை சாப்பிடுகிறார்கள். உடும்பு கறி சாப்பிடுகிறவன் இருக்கிறான், ஈசல் சாப்பிடுகிறவன் இருக்கிறான். இப்படி எத்தனையோ வகையான இறைச்சி உணவுகள் நமக்கு இருக்கிறது. அங்கங்கே எது கிடைக்கிறதோ அதை சாப்பிட்டுவிட்டு போகிறார்கள்.
இதை ஒரு பிரச்சினையாக மாற்ற வேண்டிய தேவை என்ன வருகிறது? இது எங்கே போய் முடியும் என்பதிலிருந்துதான் இந்த போராட்டத்தினுடைய தேவை எழுகிறது. என்னவென்றால், இன்றைக்கு உங்கள் தட்டில் மாட்டிறைச்சி வைத்ததற்காக, நீங்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்காக எதிர்ப்பு தெரிவிக்க வந்தால், நாளைக்கு நீ கோழிக்கறி சாப்பிடுவதையும் தடுத்து நிறுத்த வருவான், ஆட்டிறைச்சி சாப்பிடுவதையும் தடுத்து நிறுத்த வருவான், மீன் சாப்பிடுவதையும் தடுக்க வருவான்.
மேற்கு வங்கத்தில் மீன் என்பது அன்றாட உணவு. அங்கே பார்ப்பனர்களும் மீன் சாப்பிடக்கூடியவர்கள்தான். அதற்கு அவர்கள் வைத்த பெயர் ‘கங்கா புஷ்பம்’. கங்கையில் கிடைத்த பூவாம். மீனுக்கு ’கங்கா புஷ்பம்’ என்று பெயர் சொல்லி அதை சாப்பிடுகிறாய். அங்கே அசைவ உணவு, இறைச்சி உணவு என்பது தடை செய்யப்படவில்லை. விழாக்களில், மத விழாக்களில் எல்லாமே இருக்கக்கூடிய உணவு வகைதான் அது. துர்க்கா பூஜையில் இருக்கிற உணவு வகைதான். பாரதிய ஜனதா கட்சி மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்த உடனே, அங்கே மீன் இறைச்சியை தடை செய்வோம் என்று பேசியிருக்கிறார்கள். நாளை கேரளாவிலே ஆட்சி அதிகாரத்தை பிடித்தால், அங்கே மாட்டிறைச்சியை தடை செய்வார்கள். தமிழ்நாட்டில் அவர்கள் ஆட்சியைப் பிடிப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஒருவேளை அப்படி ஏதாவது இடக்கு முடக்காக நடந்து போய்விட்டால், முட்டை சாப்பிடுவதைக் கூட தடுத்துவிடுவான். இன்றைக்கு அதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறான்.
நமக்கு விழா என்றாலும், பண்டிகை என்றாலும், வாழ்வியலில் இறைச்சி என்பது தவிர்க்க முடியாத உணவு. அசைவம் என்பதே தவறு, இறைச்சி உணவே தவறு என்பதை பேசிக்கொண்டு இப்போது மாட்டிறைச்சியில் ஆரம்பித்திருக்கிறான். பாதிபேர், பொதுவான மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், மாட்டிறைச்சி எதற்கு சாப்பிட வேண்டும் என்று நினைக்கக்கூடியவர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காக்கிறான். ஆனால், மாட்டிறைச்சியில் ஆரம்பிப்பான், நாளைக்கு முட்டையில் வந்து நிற்பான்.
மேற்கு வங்கத்தில் என்ன செய்தான்? மதிய உணவு திட்டத்தில் இருக்கக்கூடிய முட்டையை நிறுத்தினான். பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களில் முட்டை கொடுக்கப்படுவதில்லை. முட்டை கிடையாது. ஆனால், இந்து மதத்தினுடைய வேத புராணங்களில் இறைச்சிதான் அடிப்படை உணவாக இருக்கிறது. எனக்கு முன்பு பேசிய தோழர் நாகை திருவள்ளுவன் அவர்களும், தோழர் வெண்மணி அவர்களும் மிக விரிவாக சொன்னார்கள். தோழர் ரஜினிகாந்த் அவர்கள் எடுத்துக்காட்டோடு பேசினார்கள். இதெல்லாம் பொய்யா? உன்னுடைய புராணத்தில் சொல்லியிருப்பது எல்லாம் பொய்யா? பசு இறைச்சியை சாப்பிடுவதெல்லாம் உன்னுடைய புராணத்தில் சொல்லியிருக்கிறதே, அதெல்லாம் பொய் என்று சொல்லு சங்கி பயலே, நீ வாயைத் திறந்து சொல். மாட்டிறைச்சி சாப்பிடுவதை பற்றியும், இறைச்சி சாப்பிடுவதை பற்றியும் உனது புராணங்களிலும், உனது வேதங்களிலும் சொல்லப்படுவதெல்லாம் பொய் என்று எந்த பிஜேபிக்காரனாவது, எந்த ஆர்எஸ்எஸ் சங்கியாவது வாயைத் திறந்து சொல்வதற்கு துணிச்சல் இருக்கிறதா? இல்லை, கிடையாது. நீங்களும் சாப்பிட்டு வந்தவர்கள்தானே? நீங்களும் இதையெல்லாம் உணவாக எடுத்துக் கொண்டவர்கள்தான். உன்னுடைய உணவு முறையில் இதெல்லாம் இருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால், நீ எல்லாம் கறி சாப்பிட ஆரம்பித்த பிறகுதான் கறியின் விலையே நாட்டில் அதிகமாகிறது. இதுதான் நடந்தது. அன்றைக்கு நடந்த அஸ்வமேத யாகத்தில் என்ன பலி கொடுத்தீர்கள்? ராஜசூய யாகத்தில் என்ன பலி கொடுத்தீர்கள்? பலி கொடுத்துத்தானே யாகம் செய்தீர்கள்? எல்லா கோவிலிலும், கோபுரத்தை கடந்து உள்ளே போனால் முதலில் இருப்பது பலிபீடம்தான். அங்கே இன்றைக்கு எல்லோரும் தேங்காய் உடைக்கிறான். அதற்கு அப்புறம்தான் கொடிமரம் இருக்கும், கொடிமரத்துக்கு அப்புறம்தான் வாகனம் இருக்கும், வாகனத்துக்கு பிறகுதான் துவார பாலகர் இருப்பார், அதற்கப்புறம்தான் கருவறை இருக்கும். இதுதான் கோயில் கட்டமைப்பு.
அதில் பலிபீடம் ஏன் வந்தது? நீ கோயிலில் பலி கொடுத்து, அந்த கறியை தின்றுவிட்டுத்தானே சாமி கும்பிடவே போனாய்? அதுதானே பழக்கம்? தேங்காய் உடைப்பது பலிபீடமா? பூசணிக்காய் உடைப்பதற்கா பலிபீடம் வைத்திருப்பான்? அப்படியென்றால் எல்லா வீட்டிலும் வைத்திருக்க வேண்டுமல்லவா? எல்லா வீட்டிலும் தேங்காய் உடைக்கிறோம், எல்லா வீட்டிலும் பலிபீடம் வைத்திருக்கிறோமா? இல்லையே. ஒரு பழத்தையோ, காயையோ உடைப்பது என்பது பலி கொடுப்பதாக அர்த்தம் வராது. தேங்காய் உடைப்பதோ, எலுமிச்சம் பழத்தை நசுக்குவதோ பலி கொடுப்பதாக அர்த்தம் வராது, அது படையல் கணக்கில் வராது.
உன்னுடைய சாஸ்திரப்படியே பேசுகிறேன். பலி கொடுப்பது என்பது கோயில் மரபில் இருக்கிறது, கும்பிடுகிற மரபில் இருக்கிறது. ஆனால் மாட்டிறைச்சி என்பது தவறு என்று புதுசாக கதை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். மாட்டினுடைய கல்லீரல் என்று சொல்கிறார்களே, அதை சாப்பிட்டால் எவ்வளவு நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதி வைத்திருக்கிறார்கள். தயவு செய்து சாப்பிடுங்கள். தமிழர்கள் அறிவாளியாக மாறட்டும். தமிழர்கள் நோபல் பரிசு வாங்கட்டும்.
இந்துத்துவாதி சாணத்தை தின்பவன்தானே? நாம் என்ன சொல்கிறோம் என்றால், நீ சாணி தின்பதையோ, மாட்டு மூத்திரத்தை குடிப்பதையோ நாங்கள் தப்பு என்று சொன்னோமா? நாங்கள் உன்னை கண்டித்தோமா? நாங்கள் எங்களுக்குப் பிடித்ததை சாப்பிடுகிறோம், நீ உனக்குப் பிடித்த சாணத்தை சாப்பிடு, மூத்திரத்தை குடி, எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நாங்கள் உன் கையை பிடித்துத் தடுக்கவில்லை. அதே மாதிரி, நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று நீ முடிவு பண்ணாதே. சாணி சாப்பிடுகிற உனக்கே இவ்வளவு திமிர் இருக்கிறதென்றால், கறி சாப்பிடுகிற எங்களுக்கு உன்னை விட நான்கு மடங்கு திமிர் இருக்கும்.
இன்றைக்கு இறைச்சி உணவு என்பது நம்முடைய இளைஞர்களுக்கு ஆற்றல் தருகின்ற உணவு, கண்டிப்பாக வர வேண்டும். அது வந்தால் இன்னும் பல தொழில்களும் பெருகும். இங்கே மீன், மீனவர்களுடைய வாழ்வு சிறக்கும். மாட்டிறைச்சி என்பது வந்தால், இன்னும் நிறைய பேருக்கு நல்ல உணவு கிடைப்பது என்பது மட்டுமல்ல, அது தொழிலாக வளர்கிறது. பொருளாதாரத்தை பேசுவோம். இந்துத்துவவாதிகள் பலர் ஏற்றுமதி செய்கிறார்கள் அல்லவா? தோழர் இளமாறன் ஒரு ஆவணம் கொடுத்தார், எடுத்து படித்துப் பார்த்தால், இவன் (பாஜககாரன்) மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததில் ஐந்து பில்லியன் டாலர் அளவில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். தமிழ்நாட்டின் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட ஒரு குறிப்பிட்ட சதவீத அளவுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். யார்? இதே பிஜேபிக்காரன், இதே குஜராத்தி மார்வாடிக்காரன்தான். அவன் ஏற்றுமதி செய்து சம்பாதிக்கக்கூடியதை, நாம் சாப்பிட்டு, நாம் பயன்படுத்தி, நம்முடைய வளர்ச்சிக்கு கொண்டு வந்தால் என்ன தவறு?

உணவு விடயத்தில் யார் தலையிட்டாலும் சும்மா இருக்காதீர்கள். அவரவர்களுக்குப் பிடித்த உணவை நாம் சாப்பிடுவோம். வெகு நாள் கழித்து நாம் எல்லாம் ஒன்றாக மேடையில் ஏறியிருக்கிறோம். பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை தமிழ்நாட்டு சூழலிலே உருவாகிக் கொண்டிருக்கிறது. எதற்குத்தான் போராடுவது என்று தெரியாத அளவுக்கு தினந்தோறும் பல விடயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. மக்கள் இயக்கங்கள் மக்கள் சார்ந்து இயங்க வேண்டிய தேவை நமக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. கட்சிகள் வரலாம், அவர்களும் வந்தால் அவர்களையும் இணைத்துக் கொண்டு போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை இருக்கிறது. இன்றைக்கு எதை பார்த்துக்கொண்டு பொறுத்துக் கொண்டிருப்பது என்பது தெரியவில்லை, அப்படி நடந்து கொண்டிருக்கிறது.
வட இந்தியா கொழுந்துவிட்டு எரிகிறது. நாம் வட இந்தியாவை பார்த்து, ‘நீதானே பிஜேபிக்கு ஓட்டு போட்டாய், பிஜேபிக்கு ஓட்டு போட்டு நாட்டை நாசமாக்கினாய்’ என்று சொல்லி பேசிக்கொண்டிருந்தோம். இன்றைக்கு வடநாட்டில் இளைஞர்கள் போராட்டக் களத்தில் இருக்கிறார்கள். ஒரு ஆண்டுக்கு 20 ஆயிரம் போராட்டங்களை நடத்திய தமிழ்நாடு, இந்தியாவில் முதன்மை மாநிலம், தமிழ்நாட்டில் அதிக போராட்டம் நடந்தது. பாரதிய ஜனதா கட்சியை மண்டியிட வைத்த மாநிலம் தமிழ்நாடு. மோடி வந்தால், முக்கிய சாலை வழியாக கார் போக முடியாத அளவுக்கு, ஐஐடிக்குள் மதில் சுவரை உடைத்து தப்பித்துப் போன மாநிலம் தமிழ்நாடு. ஆனால் இன்றைக்கு அவர் பாட்டுக்கு இங்கே வந்து விழாக்களில் பங்கெடுத்துவிட்டு, தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரான திட்டங்களை எல்லாம் அங்கே டெல்லியில் இருந்து நடைமுறைப்படுத்திவிட்டு போகிறார். கேட்பதற்கு ஆள் இல்லை. இந்த முறை 11ஆம் தேதி வருகிறார், என்ன செய்யப் போகிறோம்?
இந்த மாட்டிறைச்சி கும்பலை யார் ஆரம்பித்தது? டெல்லியில் இருக்கக்கூடிய சங்கி கூட்டம், பாரதிய ஜனதா கட்சி கூட்டம், நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழே வளர்ந்த கூட்டம் அது. அதனுடைய தலைவர் வருகின்றார் என்றால் அதற்கு கருப்புக் கொடியை தூக்க வேண்டுமா இல்லையா? என்பதை இந்தியாவிற்கு சொல்லிக் கொடுத்த மாநிலம் தமிழ்நாடு. ‘மோடியே திரும்பி போ’ என்கின்ற ஒரு வசனத்தை வைத்து அவர்களை விரட்டி அடித்தோம். அது இந்தியா முழுவதும், உலகம் முழுவதுமே பிரபலமானது. உலகப் புகழ் பெற்ற வாசகமாகக் கூட அந்த வார்த்தை மாறியது. அதைக் குறித்து மேற்குலக ஏடுகளில் எழுதித் தீர்த்தார்கள். சங்கிகளின் அரசன் வருகிறார், என்ன செய்யப் போகிறோம்? இந்த கும்பலுக்கு அதனுடைய இடத்தை காண்பித்தோம் என்றால், இந்த மாதிரி எல்லாம் வந்து நின்று போராட்டம் நடத்த மாட்டான்.
ஐந்து/ஏழு வருடத்திற்கு முன்னாடி இப்படி செய்தானா? செய்கிற துணிச்சல் இருந்ததா? அன்றைக்கு மக்கள் போராட்டங்கள் எல்லாம் வீதியில் நின்ற பொழுது, இவனால் செய்ய முடிந்ததா? இல்லை. என்ன துணிச்சல் இருந்தால், ஒரு அமைச்சர் ‘வந்த கோரிக்கையை நாங்கள் பரிசீலிப்போம்’ என்று சொல்கிறார், அவரை கண்டித்து போராட்டம் நடத்துகிறார்கள்.
நான் என்ன கேட்கிறேன், அவ்வளவு தூரம் உங்களுக்கு இங்கே தமிழ்நாட்டின் மேல் அக்கறை கொண்டவர்கள் என்று பேசுகிறீர்கள் என்றால், மதுரைக்கும், கோவைக்கும், சென்னையினுடைய மெட்ரோ விரிவாக்கத்திற்கும் பணம் தர மாட்டேன் என்று சொன்ன நரேந்திர மோடி வரக்கூடிய சமயத்திலே கருப்புக் கொடி பிடிப்பதற்கு துணிச்சல் இருக்கிறதா? தமிழ்நாட்டை வஞ்சிக்கக்கூடிய நரேந்திர மோடியை அரவணைக்கக்கூடிய எவரும் தமிழ்நாட்டினுடைய துரோகிகள்.
இன்றைக்கு வடநாட்டில் இருந்த மாட்டிறைச்சிக்கு எதிரான அரசியலை இங்கேயும் கொண்டு வருகிறார்கள். ’அக்லாக்’ எதனால் படுகொலை செய்யப்பட்டார்? ஆட்டிறைச்சி வைத்ததற்காக படுகொலை செய்யப்பட்டார். கறி சாப்பிடுகிறார்கள் என்பதற்காக வடநாட்டில் எத்தனை படுகொலைகள் நடந்தன! இதோ தமிழ்நாட்டில் மார்வாடி சேட்டு வந்திருக்கிறான். நாளைக்கு அவன் இங்கே இருக்கக்கூடிய இறைச்சி கடைகளை எல்லாம் மூடச் சொல்லிக் கொண்டிருக்கிறான். இன்றைக்கு அவன் சட்டம் போட்டுக் கொண்டிருக்கிறான். இப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம் என்றால், நம் தமிழ்நாட்டில் தலைநிமிர்ந்து நடக்க முடியாது.
இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தை நடத்திக் காட்டிய மாநிலமான தமிழ்நாடு கிளர்ந்தெழ வேண்டும். இந்த அரசியலை, மதவெறி அரசியலை, வெறுப்பு அரசியலை, உணவை அரசியலாக்கக்கூடிய முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அப்படி செய்ய வேண்டிய தேவையில் நாம் எப்பொழுதும் இருக்கிறோம், எப்போதுமே இருக்கிறோம். ஆக, தோழர்களே, அப்படிப்பட்ட போராட்டத்தை நடத்துவதற்கு நாம் தயாராக வேண்டும்.
இப்போது எடுத்துச் சொல்வோம், அசைவம் ஒன்றும் தீட்டு இல்லை. நான் ஒரு மாதத்திற்கு முன்னாடி விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு இறைச்சி, கோழி பிரியாணி சாப்பிட்டேன் என்று சொல்லி முகநூல் பதிவு போட்டதற்கு கொந்தளிக்கிறான். ஏன் நீங்கள் (இந்துத்துவவாதிகள்) எல்லாம் விநாயகர் சதுர்த்திக்கு அசைவம் சாப்பிட்டதில்லையா? சரக்கடித்துவிட்டுத்தானே பிள்ளையார் சிலையை தூக்கிக்கொண்டு போகிறீர்கள்? அதுதான் டிவியிலேயே காட்டினார்களே! நம்முடைய பண்பாட்டில் என்றைக்கு இறைச்சி இல்லாத விழாக்கள் நடந்திருக்கிறது? என்றைக்கு நடந்திருக்கிறது? இன்றைக்கு ஒரு வாரத்தில் ஏழு நாள், ஆறு நாள் ஏதோ மத காரணத்திற்காக அசைவம் சாப்பிடக்கூடாது என்று நம்மீது திணித்துக் கொண்டிருக்கிறான். வீட்டில் அந்த தகவல் போய் சேருகிறது, பெண்களிடம் தகவலை கொண்டு போய் சேர்த்துவிடுகிறான். திங்கட்கிழமை கறி சாப்பிடாதே, செவ்வாய்க்கிழமை கறி சாப்பிடாதே, புதன்கிழமை சாப்பிடாதே, வியாழக்கிழமை சாப்பிடாதே, வெள்ளிக்கிழமை ஆகாது, சனிக்கிழமை பெருமாளுக்கு என்று சொல்லி, எல்லா நாளும் புரத உணவை, நமக்கு தேவைப்படுகின்ற உணவை தடுத்து வைத்திருக்கிறார்கள்.

தயவு செய்து இயக்கத் தோழர்கள், இயக்கத் தோழர் அல்லாத வீட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் தயவு செய்து கவனியுங்கள். பிள்ளையார் சதுர்த்தி இல்லை, ஆயுத பூஜைக்கு நாம் கறி சாப்பிடுகிறோம், தீபாவளிக்கு கறி சாப்பிடுகிறோம், பொங்கல் சமயத்தில் கறி சாப்பிடுவதற்கு ஒரு நாளே வைத்திருக்கிறோம். கறி சாப்பிடாத நாளே கிடையாது. இவன்தான் பெரிதாக கொந்தளிக்கிறான்.
அசைவ உணவை தீட்டு என்று பேசினால் என்ன அர்த்தம் என்றால், பார்ப்பனர் அல்லாத, அசைவ உணவு சாப்பிடக்கூடிய அத்தனை தமிழனும், 97% தமிழனும் தீட்டானவன், அசிங்கமானவன் என்பதுதான் அவனுடைய வாதம். அதைத்தான் அன்றைக்கு பேசினான். இங்கே என்னவென்றால், சூத்திர சங்கிகள் போய் நின்றுகொண்டு அதற்கு ஜால்ரா தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆக, இந்த உணவை அரசியலாக்கக்கூடிய முறையை எதிர்த்து நிற்க வேண்டிய தேவை நம் அனைவருக்கும் இருக்கிறது. அவரவருக்கு என்ன உணவு தேவையோ, அதை எடுத்துக் கொள்வதில் எவனும் தலையிட முடியாது, அந்த உரிமையை அரசியல் சாசனம் உறுதி செய்திருக்கிறது. ஆகவே, மாண்புமிகு அமைச்சர் தோழர் வன்னியரசு அவர்கள், அனைத்து மாணவர் விடுதிகளிலும் மாட்டுக்கறியிலிருந்து அனைத்து விதமான கறி, என்ன கேட்கிறார்களோ, அந்த கறி எல்லாம் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும். அப்போதுதான் வலிமையான ஒரு தமிழ்நாட்டை உருவாக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு கோரிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.