தமிழ்நாடு வந்த மோடிக்கு கருப்புக்கொடி காட்டிய மே 17 இயக்கம்

போரூர் – பூந்தமல்லி மெட்ரோ வழித்தடத்தைத் திறந்து வைக்க ஒன்றிய பிரதமர் மோடி கடந்த அக்டோபர் 11, 2026 அன்று சென்னை வருவதை ஒட்டி, இதே மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதியை தர மறுத்த மோடிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் அறிவித்திருந்தது. மோடி தமிழ்நாடு வரும் அதே நாளில் தி.நகர் தந்தை பெரியார் சிலை அருகே மே பதினேழு இயக்கத் தோழர்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடினர். பல புதிய இளம் தோழர்கள் போராட்டக் களத்திற்கு வந்தனர். அனைவரும் கைகளில் கருப்புக் கொடியும் பதாகைகளும் ஏந்தி மோடிக்கு எதிராக முழக்கமிட்டனர்.

குறிப்பாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக பாஜக நடந்து கொள்வதை எதிர்த்து தோழர்கள் முழக்கமிட்டனர். மெட்ரோவிற்கு நிதி ஒதுக்காதது, கீழடி அறிக்கையை தடுத்தது, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை ஒதுக்காதது, தமிழ்நாட்டில் நெய்வேலியில் இருந்து நிலக்கரியும், பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் இருந்து இயற்கை எரிவாயு எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய 3500 மெகாவாட்ஸ் அளவிற்கான மத்திய மின் தொகுப்பை கொடுக்காமல் வஞ்சித்தது குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதன் பின்னர் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஊடகங்களிடம் கூறியவை:

“மோடி தமிழ்நாட்டுக்கு இதுவரை 41 முறை வந்துள்ளார். இதில் 26 முறை  அரசு நிகழ்ச்சி சம்பந்தமாகவும், தேர்தல் பரப்புரைக்காகவும் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். இத்தனை சமயங்களிலும் எங்களது மே 17 இயக்கம் மோடிக்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.

காரணம் என்னவென்றால் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை நிறுத்தி வைப்பது, தமிழ்நாடு விரும்பாத சட்டங்களை தமிழ்நாடு மீது திணிப்பது, தமிழ் மொழியை கீழறக்கி இந்தியை மேலேத்துவது, தமிழ் மொழிக்கான வளர்ச்சி நிதியை தடுத்து வைப்பது என்று பல விடயங்களில் தமிழ்நாடு விரோதமாகவும் தமிழர் விரோதமாகவும் அல்லது தமிழ் மொழி விரோதமாகவும் மோடி அரசு தொடர்ச்சியாக இயங்கி வருகிறது.

இன்று(11.10.20206) கூட திருவள்ளுவர் சிலைக்கு பாஜகவினர் காவிசாயம் பூசி இன்றைய விழாவில் வைத்திருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு எதுக்கு காவி சாயம் பூசுகிறார்கள்? திருவள்ளுவரை மதத்திற்கு அப்பாற்பட்டவராக சமயத்திற்கு அப்பாற்பட்டவராக ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவராக தமிழினம் கொண்டாடி வருகிறது. ஒரு கட்சிக்காரன் எப்படி தமிழ்நாட்டினுடைய/ தமிழனுடைய அடையாளத்தை மாற்றலாம்? புலவர்களோ ஆய்வறிஞர்களோ திருவள்ளுவர் காவி உடை தான் அணிந்திருந்தார் என்று கூறினார்களா? இல்லை..பின் எவ்வாறு ஒரு கட்சிக்காரன் அதை மாற்றலாம்?

இதை எவ்வாறு ஒத்துக்கொள்ள முடியும்? பாஜக ராமனுக்கு திருநீறு பட்டை போடுமா? நாம் அவ்வாறு மாற்றி போட்டால் ஒத்துக்கொள்ளுமா? பெருமாளுக்கு மாற்றி போட்டால் ஒத்துக்கொள்ளுமா? பெருமாளுக்கு நாமம் தான் போட வேண்டும், பட்டை போடக்கூடாது என்று கூறுகிறதல்லவா? அதை மாற்றி போட்டால் பாஜக ஒத்துக்கொள்ளுமா?  நீ (பாஜக) எதற்கு எங்களுடைய நம்பிக்கையில் கை வைக்கிறாய்? உனக்கும் தமிழ்நாட்டுக்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம்?

பாஜக தமிழ் மொழிக்கான நிதியை குறைத்தது மட்டுமல்லாமல், தமிழ்மொழி வளர்ச்சி நிதிக்கு எதுவும் தரவில்லை. அனைத்து இடங்களிலும் இந்தியில் எழுதி இருக்கிறார்கள். அனைத்து இடங்களிலும் இந்தியை முதன்மையாக்குறது பாஜக. ரயில்வே நிலையத்தில் இந்திதான் முதன்மை இடத்தில் இருக்கிறது. இத்தனை வேலையும் செய்துவிட்டு எந்த விதமான கூச்சமும் இல்லாமல் தமிழ்நாட்டுக்குள் மோடி வந்தால், நாங்கள் கருப்புக்கொடி காட்டத்தான் செய்வோம். இதனால் தான் கடந்த 12 ஆண்டுகளாக மே 17 இயக்கம் கருப்புக்கொடி காட்டுகிறது.

ஏனென்றால் மோடி தமிழ்நாட்டுக்கு எதிரியாக இருக்கிறார், தமிழர்களை எதிரியாகவே பார்க்கிறார் என்பதைத்தான் அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கிறோம். கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தின் அடையாளமே  அதுதான்.

மோடி வரும்பொழுதெல்லாம் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு மட்டுமல்ல 2014இல் மோடியை எப்பொழுது பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்ததோ, அப்போதே அவர் சென்னைக்கு வந்த போது கருப்புக்கொடி பிடித்தோம். அன்றில் இருந்து இன்று வரை “மோடி தமிழ்நாட்டுக்கும் தமிழருக்கும் எதிரானவர்” என்று சொல்கிறோம்.

இன்று மோடி எதற்காக சென்னை வருகிறார்? டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடக்கிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் அங்கு டெல்லியில் திரண்டிருக்கிறார்கள். காரணம் என்ன? தேர்தல் ஆணயத்தின் மூலமாக பித்தலாட்ட தேர்தல் நடத்தி இருக்கிறார்கள். வடநாடு முழுவதும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. அனைத்து இடங்களிலும் ரயில், பேருந்து போன்றவற்றை நிறுத்தி விட்டார்கள். ஊரடங்கு உத்தரவு கொண்டு வந்து  விட்டார்கள். துணை ராணுவப் படை, காவல்துறை, அதிரடிப் படை, எல்லை காவல் படை என பல  படைகளையும் டெல்லியில் இறக்கியதோடு, ஆர்எஸ்எஸ் ரவுடிகளையும்  இறக்கி மாணவர்களை அடித்துத் தாக்கும் ஒரு சர்வாதிகார ஆட்சி செய்யக்கூடிய நரேந்திர மோடி, சென்னையில் இன்று மெட்ரோ ரயில் திட்டத்தை திறந்து வைப்பதற்காக வருகிறார்.

நாம் கேட்க வேண்டிய கேள்வி – “ஒரு பிரதமராக இருக்கக்கூடியவர் மாணவர்களை இவ்வளவு தூரம் தாக்க வேண்டிய அவசியம் என்ன? மாணவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?” அனைவருக்கும் போராடுவதற்கு உரிமை இருக்கிறது. அது மோடியினுடைய சட்டதிட்டத்துக்கு உட்பட்டது அல்ல, அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது.

இன்றைக்கு டெல்லியில் போராடும் அந்த மாணவர்களை தாக்குவதும், அடிப்பதும், அவர்களை சிறைப்படுத்துவதும், பெண் மாணவர்களை தலை முடியைப் பிடித்து அடிப்பதும், ஆர்எஸ்எஸ் நபர்களை ரவுடிகளாக இறக்கி விடுவதும் நடக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நபர் சென்னைக்கு வரும்பொழுது நாங்கள் கண்டிப்பாக கருப்புக்கொடி காட்டத்தான் செய்வோம்.

நாங்கள் தவெக அரசையும் பார்த்து ஒன்று சொல்ல விரும்புறோம். கிட்டத்தட்ட 63,000 கோடி ரூபாய் செலவான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கடந்த திமுக ஆட்சி காலத்தில் மோடி அரசாங்கத்திடம் நிதி பெறுவதற்காக கடுமையாக போராடினார்கள். இதில் மோடி அரசாங்கத்தின் நிதி விகிதம் எவ்வளவு என்று தவெக அரசு சொல்லுமா?  63,000 கோடியில் மோடி அரசின் பங்களிப்பு என்ன? கோயம்புத்தூருக்கு, மதுரைக்கு மெட்ரோ தர மோடி மறுக்கிறார். ஆனால் மதுரையில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதாகக் கூறி கலவரம் செய்ய கிளம்புகிறார்கள். கோவையில் பிஜேபி கலவரம் செய்கிறது. கோவையில் போட்டியிட்ட  அண்ணாமலை போன்ற நபர்கள் அங்கு மெட்ரோ வராததற்கு வாய் திறக்கவில்லை. கோயம்புத்தூரின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியது இதே மோடி கும்பல்தான். இப்போது மெட்ரோ ரயில் திட்டத்திற்காக இங்கே வந்து கொடியசைக்க கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?

இதே சென்னையில் இன்னும் அதிகமான மெட்ரோ ரயில் தடங்களுக்கான அனுமதி தராமல் நிதி தராமல் தடுத்து வைத்திருக்கிறது பாஜக. இந்த 63,000 கோடியில் கிட்டத்தட்ட 8000 கோடி ரூபாய் அளவில் மட்டும்தான் மோடி அரசு பணம் கொடுத்திருக்கிறது. மீதி நிதி அனைத்தும் டெப்ட் ஈக்குவிட்டியாக வைக்கப்பட்டிருக்கிறது. அந்த கடனை நாங்கள் தான் கட்ட வேண்டி இருக்கிறது. கிட்டத்தட்ட 50,000 கோடி ரூபாய் தமிழ்நாடு மக்கள் சொந்த பணத்தில் இருந்து கொடுத்துதான் இந்த மெட்ரோ ரயிலுக்கான கடனை கட்ட வேண்டும்.

இவர் (மோடி அரசு) நிதி கொடுத்து மெட்ரோ திறந்ததை போல் காட்டுவதற்காக, தில்லியில் இருந்து வந்திருக்கிறார். இதை சுவரோட்டி (poster) ஒட்டி கொண்டாடும் பாஜகவினரைப் பார்த்து நான் கேட்கிறேன் – “மோடி அரசு இந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எவ்வளவு நிதி கொடுத்தது?”

தமிழ்நாட்டு மக்கள் தம் சொந்த பணத்தை போட்டு நிலத்தை கொடுத்து மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கி இருக்கிறோம். அதற்கு கொடியசைக்க மோடி வருகிறார். இதற்கு விளம்பரம் ஓட்டி, ஆள் திரட்டி, இசையுடன் கொண்டாட்டம் நடத்த பாஜகவிற்கு வெட்கமாக இல்லையா?

பிஜேபி கும்பல் தமிழ்நாட்டுக்கு எதிரான கூட்டம். இன்றைக்கு இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை திறந்து வைக்கக்கூடிய விழாவில் திமுகவிற்கு அழைப்பு கொடுத்தார்களா என்று தெரியவில்லை. அப்படி கொடுக்கப்படவில்லை என்றால் அது தவறு. இதில் கட்சி அரசியல் பார்க்கக் கூடாது. அவர்களுடைய ஆட்சி காலத்தில் இதற்கான திட்டங்களை போட்டார்கள். அதற்கான நடைமுறைகளை செய்தார்கள். அதற்காக அவர்கள் ஒன்றிய அரசோடு போராட்டம் செய்தார்கள். தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்தில் கட்சியாக பிரிந்து நிற்கலாம். ஆனால்  இது போன்ற சமயங்களில் தவெக அரசு எதிர்கட்சி தலைவரை நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தால் மகிழ்ச்சி. அழைக்கவில்லை என்றால் தவறு.

இந்த திட்டத்துக்கு எதிராக இருந்த மோடியை அழைக்க முடிகிறது. இந்த திட்டத்தை கொண்டு வந்து அதற்காக பங்களிப்பு செய்த திமுகவை அழைத்திருக்க வேண்டும். அதுதான் மரியாதை. தமிழர்கள் ஒன்றாக நிற்கிறோம் என்று காண்பித்திருக்க வேண்டும். தேர்தலில் சண்டை போடுங்கள். ஆனால் எதிரி முன் பிரிந்து நிற்காதீர்கள். 

தமிழ்நாட்டில் கட்சி கடந்து ஒன்றாக இருந்தால் தான் தமிழ்நாட்டு உரிமையை வாங்க முடியும். நீட் தேர்வை நம்மேல் திணிக்கிறார்கள். அண்மையில் மேகமலையில் அத்தனை மக்களையும் வெளியேற்ற உச்சநீதிமன்ற உத்தரவு வந்திருக்கிறது. இதை மோடி சர்க்கார் தலையிட்டால் தான் தடுத்து நிறுத்த முடியும். மோடி அரசு தலையிடுமா? மோடி அரசு கொண்டு வந்த இந்த திட்டங்களின் அடிப்படையில் தான் இதெல்லாம் நடக்கிறது. மோடி அரசு இதை நிறுத்துமா?

 மேகமலை, வரிசநாடு, கடமலைகுண்டு, மயிலாடும்பாறையில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்களை வெளியேற்றப் போகிறார்கள். இன்று கடமலைகுண்டு காவல் நிலையம் முதல் அங்கு இருக்கக்கூடிய அரசு அலுவலகங்கள் அனைத்தையும் காலி செய்ய சொல்லி நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். மேகமலை மக்களுக்கு லோன் தரக்கூடாது என்று வங்கியில் தடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்களால் விவசாய கடன் வாங்க முடியாது. கல்யாணத்துக்கு கடன் வாங்க முடியாது. இப்படிப்பட்ட நிலைமையை இந்த மோடி சர்க்கார் கொண்டு வந்திருக்கிறது. தவெக அரசு இதற்குப் பதில் சொல்ல வேண்டும். இந்தப் பிரச்சனை குறித்து இன்றைய சந்திப்பிலே பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் பேசுவாரா? நீட் தேர்வு விலக்கைப் பற்றி பேசுவாரா? என்ற கேள்வியை முன்வைக்க விரும்புகிறோம். இந்த வேளையில் பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு முதல்வர் இதைப் பற்றிப் பேச வேண்டும்.

சென்னையில் மெட்ரோ திட்டம்  தமிழ்நாடு மக்கள் பயன்படுத்தக்கூடிய திட்டம்தான். மக்கள் பணத்தில் தான் கட்டப்பட்டிருக்கிறது. உங்களுடைய பாக்கெட் பணத்தில் இருந்து அல்ல… எங்களுடைய பணத்தில் தான் கட்டி இருக்கிறார்கள். நாங்கள் தான் பயணச்சீட்டு எடுத்து பயணிக்கிறோம். அந்த பயணப் பணத்தை வைத்துதான் அரசு வட்டி கட்டும். சர்வதேச கடனை கட்டுவீர்கள். நாங்கள்தான்(மக்கள்) அதற்கு எஜமானர்கள். அப்படி இருக்கும்போது அனைத்து காட்சிகளையும் அழையுங்கள்.

தமிழ்நாட்டிற்குள்ளாக நரேந்திர மோடி வருகின்ற பொழுதெல்லாம் நாங்கள் கருப்புக்கொடி தூக்குவோம். எங்களுக்கு எந்த தயக்கமும் கிடையாது. தற்போது தில்லியில் ஒரு மோசமான சூழ்நிலை இருக்கிறது. தமிழ்நாடு இளைஞர்கள் தயவு செய்து வீதிக்கு வாருங்கள். எஸ்ஐஆர் என்கிற பித்தலாட்டதால் 74 லட்சம் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் நீக்கப்பட்டிருக்கிறார்கள். 74 லட்சம் மக்களின் வாக்குரிமை என்ன ஆனது? அந்த கேள்வியை அனைவரும் எழுப்ப வேண்டும்.

இதற்கான பெரிய போராட்டம்  வடநாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு காலம் வடநாட்டுக்காரர்களை பார்த்து “பிஜேபிக்கு ஓட்டு போட்டீங்களா” என்று நாம் கிண்டல் செய்திருக்கிறோம். இன்று அவன் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி கொண்டு இருக்கறான். தமிழ்நாட்டு மாணவர்கள் வீதிக்கு இறங்க வேண்டும். எந்தக் கட்சியையும் எதிர்பார்த்துக் காத்திருக்காதீர்கள். தமிழ்நாடு மாணவர்கள் இளைஞர்கள் கல்லூரி மாணவர்கள் அனைவரும்

 வீதியில் இறங்க வேண்டிய காலம் வந்திருக்கிறது. பிரான்சில் பள்ளிக்கூடங்களுக்கு நிதி தரவில்லை என்று அங்கு போராட்டம் நடக்கிறது. உலகம் முழுவதும் இளையவர்கள் மாணவர்கள்தான் போராட்டத்தை நடத்துகிறார்கள். அரசாங்கத்தை கேள்வி கேட்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இதற்கான முழு தகுதியும் இருக்குது. நீங்கள் தமிழ்நாட்டில் வரலாறு படைத்திருக்கிறீர்கள். மொழிப்போரை நடத்தி இருக்கிறீர்கள். ஆகவே நீங்கள் வீதியில் இறங்க வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டம் போல கேள்வி எழுப்ப வேண்டிய சூழல் இப்பொழுது வந்திருக்கிறது. மோடிக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம் தொடரும். ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டிற்கு பாஜகவின் தலைவர் மோடி வரும்பொழுதெல்லாம் மே 17 இயக்கத்தால் கருப்புக்கொடி உயர்த்திக் காட்டப்படும்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து தோழர்கள் அனைவரும் காவல்துறையால் அருகில் உள்ள மண்டபத்தில் மாலை வரை தடுத்து வைக்கப்பட்டனர்.

தமிழின விரோதியை அடையாளம் காட்டுவது இன்றியமையாத அரசியல் கடமையென கருதுகிறது மே17 இயக்கம்…

தொடர்ந்து தமிழின உரிமைக்காக குரல் கொடுப்போம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »