உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை – திருமுருகன் காந்தி

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு மத நல்லிணக்கத்திற்கு எதிராக உள்ளது என்பதையும், தமிழ்நாடு அரசு இந்த தீர்ப்பை நடைமுறை படுத்தவேண்டிய அவசியமில்லை என்பதை குறித்து, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நவம்பர் 21, 2026 அன்று சென்னை பத்திரிகையாளர் சந்திப்பின் தொகுப்பு:

திருப்பரங்குன்றத்தில் கடந்த 200, 300 ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்த தீபமானது, இப்பொழுது பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். நபர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் வழக்கத்திற்கு மாறான இடத்தில் ஏற்றப்படுவதற்கான ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கிறது. இடைக்கால நிவாரணம் என்ற பெயரில், ‘சர்வே தூண்’ என்று சொல்லப்படும் அந்த அளவைக் கல்லில் தீபம் ஏற்றுகின்ற வினோதமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கிறது. இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கவலை தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ஜனநாயக சக்திகளுக்கு இருக்கிறது.

தமிழ்நாடு சட்டசபையில் இருக்கும் சட்டசபை உறுப்பினர்களில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரைத் தவிர அனைவரும் இந்த அளவைத் தூணில் தீபம் ஏற்றுவதை எதிர்க்கிறார்கள். ஆகவே, தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்பது, பாரம்பரியமாக எங்கே தீபம் ஏற்றப்பட்டதோ, உச்சிப் பிள்ளையார் கோயில் அருகேதான் தீபம் ஏற்ற வேண்டும் என்ற முடிவு, தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து ஜனநாயகக் கட்சிகளுக்கும் இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியைத் தவிர அனைத்து அமைப்புகளும் இதே புள்ளியில் ஒன்றிணைந்து நிற்கிறோம்.

எந்த முருக பக்தர்களும் இப்படிப்பட்ட கோரிக்கையை முன்வைக்கவில்லை. அப்படி இருக்கும் ஒரு சூழலில், மதுரையில் இருந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையில், கடந்த ஆண்டு அங்கே சர்வே தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஒரு தீர்ப்பை சாமிநாதன் கொடுத்தார். அந்தத் தீர்ப்புக்கு எதிரான ஒரு முறையீட்டில் இப்பொழுது உச்சநீதிமன்றம் இப்படி ஒரு முடிவைக் கொடுத்திருக்கிறது.

உச்சநீதிமன்றமானது உயர்நீதிமன்றம் கொடுத்த அந்தத் தீர்ப்பைத் தடுத்து வைத்திருக்கிறது. தடுத்து வைத்துவிட்டு, இந்த ஒரு முறை அங்கே ஏற்றுவதற்கு அனுமதி என்று சொல்லியிருக்கிறது. உச்சநீதிமன்றம் ஏன் இந்த ஒரு முறை அந்த இடத்தில், இதுவரை இல்லாத வழக்கத்தில், அந்த அளவைத் தூணில் ஏன் ஏற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இதுவரை எந்தத் தர்க்கத்தையும் முன்வைக்கவில்லை, அதற்கான காரணத்தையும் சொல்லவில்லை. தமிழ்நாடு அரசு அந்த இடத்தில் ஏற்ற முடியாது, வழக்கமான இடத்தில்தான் ஏற்ற வேண்டும் என்று சொல்கிறது.

ஒரு அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றம் ஏன் தீர்ப்புக் கொடுத்திருக்கிறது? அதற்கான எந்தவிதமான காரணத்தையும் உச்சநீதிமன்றம் தரவில்லை. தமிழ்நாட்டில் இதுபோல் பல்வேறு இடங்களில் ஒரு மதரீதியான பிரச்சினைகள் எழும் என்ற கவலையை அனைத்து கட்சி தலைவர்களும் எழுப்பிவிட்டார்கள். ஆகவே, தமிழ்நாட்டின் தமிழ் வெகுமக்களின் கருத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது என்பது கொடுமையிலும் கொடுமை. இது மிக மோசமான தீர்ப்பு.

நாளைக்கு ஒரு பாபர் மசூதியைப் போல, இங்கே தென்னகத்திலே ஒரு கலவரத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை உச்சநீதிமன்றம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டை நாங்கள் பகிரங்கமாக முன்வைக்கிறோம்.

பாபர் மசூதிப் பிரச்சினையிலும் இதேபோல் எதிரான தீர்ப்பை உச்சநீதிமன்றம் கொடுத்தது என்பது சர்வதேச அளவில் மிகப்பெரிய கண்டனத்தை எழுப்பியது. இந்தியாவுக்குள் மட்டும் இல்லை, சர்வதேச அளவில் இருக்கும் நீதிமான்கள் ”இது சட்ட விரோதமானது” என்ற கருத்தை வெளிப்படையாக முன்வைத்தார்கள். இது குறித்த ஒரு பேட்டியில் அந்தத் தீர்ப்பைக் கொடுத்த ‘சந்திரசூட்’ என்ற நீதியரசர் கூடத் தனது தீர்ப்பை நியாயப்படுத்த முடியாமல் தடுமாறியதை உலகமே பார்த்தது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் மறுபடியும் இதேபோல் ஒரு தவறை உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது.

உச்சநீதிமன்றம் என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது அல்ல. தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பிற்கு எதிராக ஏன் இப்படி ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் கொடுத்தது? அதற்கான தர்க்கம் என்ன? அதற்கான காரணம் என்ன? இத்தனை ஆண்டுகால மரபை எதற்காக உச்சநீதிமன்றம் மீறுகிறது? தமிழ்நாடு அரசின் கவலைகளை ஏன் அது நிராகரிக்கிறது என்ற கேள்வியை இப்போது நாங்கள்(மே 17) முன்வைக்கிறோம்.

ஆகவே, இந்தத் தீர்ப்பு என்பது சட்ட விரோதமான தீர்ப்பாகப் பார்க்கிறோம். உயர்நீதிமன்றம் கொடுத்த அந்தத் தீபத் தூணில் ஏற்றலாம் என்ற தீர்ப்பிற்குத் தடையை விதிக்கிறோம் என்று சொல்லிவிட்டு, ஒரு நாள் அங்கே ஏற்றுங்கள் என்றால், கோமாளித்தனத்தைத் தவிர வேறு எதுவும் கிடையாது. உச்ச நீதிமன்றமே அதற்குத் தடை என்று சொல்கிறீர்கள். அப்புறம் ஒரு நாள் ஏற்று என்று சொல்கிறீர்கள்.

ஒரு நாள் ஏற்றுவதற்கான காரணம் என்ன? 200 ஆண்டுகளாக, 300 ஆண்டுகளாக இருக்கும் மரபை ஏன் உச்சநீதிமன்றம் மீறுகிறது என்பதற்குப் பதில் கிடையாது. உச்சநீதிமன்றம் ஏன் மீறுகிறது? தர்கா பக்கத்தில் இருக்கிறதா, இல்லையா என்பது இரண்டாவது விடயம். உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட தீபத்தை அங்கிருந்து இடமாற்றும் அதிகாரத்தை உச்சநீதிமன்றத்திற்கு யார் கொடுத்தது? அதற்கான தர்க்கம் என்ன என்று இதுவரை எந்த விளக்கமும் கிடையாது. ஆகவே, இது உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் இருக்கும் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் கொடுத்திருக்கிறது என்றுதான் குற்றம் சாட்ட வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்கள் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவச் சார்பில் இயங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சாமிநாதனுக்கும் அப்படிப்பட்ட ஒரு சார்பு நிலை இருப்பது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். நான் சொல்லவில்லை, ஏனென்றால் முன்னாள் கிரிக்கெட் வீரர் ’ஸ்ரீகாந்’தே வந்து சாமிநாதன் என்றுதான் கேட்டிருக்கிறார். அவர் ஒன்றும் நீதிபதி சாமிநாதன் என்றெல்லாம் பேசவில்லை. அப்படி ஒரு உரிமை ஸ்ரீகாந்துக்கு இருக்கிறது என்றால், எங்களுக்கும் உரிமை இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். அதனால், சாமிநாதன் அப்படித்தான் ஒரு தீர்ப்பைக் கொடுத்தார்.

இதில் மிக முக்கியமானது என்னவென்றால், இந்தச் சாமிநாதன் அவர்களை நீதிபதி பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று நூற்றுக்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தீர்மானத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தார்கள். இத்தனை மக்களின் பிரதிநிதிகள் இந்த நீதிபதி தேவையில்லை என்று சொல்லிப் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் நீக்கப்படக்கூடிய தகுதி வாய்ந்த, (நீக்கப்படுவதற்கும் ஒரு தகுதி வேண்டும், அந்தத் தகுதி இருக்கிறது, அனைத்துத் தகுதியும் இருக்கும்) சாமிநாதனின் அந்த உள்கிடக்கை, அவருடைய விருப்பத்தை உச்சநீதிமன்றம் ஏன் நிறைவேற்றியது? அதுதான் இங்கே கேள்வி. இத்தனை எம்.பி.க்கள் கொடுத்திருக்கிறார்கள் அல்லவா? அந்தத் தீர்மானம் தோற்றுப் போகலாம் அல்லது வெற்றி பெறலாம், அது பிரச்சனை இல்லை. இத்தனை எம்.பி.க்கள் வந்து கொடுத்திருக்கிறார்கள் என்றால், இத்தனை மக்களின் கருத்து என்ன?

ஒரு நீதிபதியின் மேல் அவநம்பிக்கை வந்த பிறகு, அந்த நீதிபதி கொடுத்த தீர்ப்பை வைத்து, அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் எப்படித் தீர்ப்புத் தர முடியும்? இது நடப்பது நீதிமன்றமா, அது கேலிக் கூத்தா?

நீங்கள்தான் சட்ட வல்லுநர்கள், அரசியல் சாசன வல்லுநர்கள் என்று உங்களிடம் வருகிறோம். நீங்கள் இவ்வளவு மோசமான ஒரு தீர்ப்பை, மத நல்லிணக்கத்திற்கு எதிரான தீர்ப்பைத் தருவீர்கள் என்றால், உங்கள் மீது அவநம்பிக்கை எங்களுக்கு வருமா, வராதா? என்ற கேள்வியை எழுப்புகிறோம்.

உச்சநீதிமன்றத்தின் மீது அவநம்பிக்கை வந்திருக்கிறது. ஏனென்றால், பாபர் மசூதியில் இப்படித்தான் நடந்திருக்கிறது. இப்பொழுது திருப்பரங்குன்றத்தில் இப்படித்தான் நடந்திருக்கிறது.

  • காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை மனுக்களையும் நிராகரித்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஆட்சிப்பண்பு கிடையாது என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால், காவிரி நடுவர் மன்றம் என்பது ஒரு அரசாங்க அதிகாரம் என்றால், அதைக் கர்நாடகா நடைமுறைப்படுத்தவில்லை.
  • இரண்டாவது, சபரிமலை விடயத்தில் கொடுத்த தீர்ப்பைக் கேரள அரசு நடைமுறைப்படுத்தவில்லை. ஆக, உச்சநீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்புகளை எல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்பதுதான் இப்பொழுது வெளிப்படையாகத் தெரிகிறது.

இதையெல்லாம் நாங்கள் பொய்யாகச் சொல்லவில்லை, நடந்த உண்மைதான்.

ஆகவே, நாங்கள் தவெக அரசுக்கு என்ன கோரிக்கை வைக்கிறோம் என்றால், இந்த உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பை நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அப்படி ஒன்றும் தேவையும் இல்லை. எப்பொழுது கேரளாவில் சபரிமலையில் பெண்கள் உள்ளே நுழையலாம் என்று ஐந்து நீதியரசர்கள் கொடுத்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துகிறார்களோ, அப்போது யோசிப்போம். ஆக, கேரளாவில் நடைமுறைப்படுத்தவில்லை என்றால், தமிழ்நாட்டில் மட்டும் ஏன் நடைமுறைப்படுத்த வேண்டும்?

இதற்கு உச்சநீதிமன்றம் அடுத்து மிக மோசமாக என்ன சொல்லியிருக்கிறது என்றால், தமிழ்நாடு மக்களின் விருப்பத்திற்கு எதிராக, மரபுக்கு எதிராகத் தீர்ப்பையும் கொடுத்துவிட்டு, சி.ஐ.எஸ்.எஃப். துணை ராணுவப் படை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறது. அப்படியென்றால், தமிழ்நாடு காவல்துறையை கலைத்துவிடலாமா? என உச்சநீதிமன்றம் சொல்ல வேண்டும். எல்லாவற்றையும் நீங்களே நடத்திக்கொள்வீர்களா?

முதலில் ஆட்சி அதிகாரம் நடத்துவதற்குரிய அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு இருக்கிறதா? நீங்கள் ஒரு தீர்ப்பைக் கொடுத்திருக்கிறீர்கள், அப்புறம் துணை ராணுவப் படை அனுப்பலாம் என்றால், இதே மாதிரி சீன எல்லையில் சீன ராணுவம் வருகிறது என்று அங்கே இந்திய ராணுவத்தை அனுப்புகிறோம், உச்சநீதிமன்றம் உத்தரவு கொடுக்குமா? அருணாச்சலப் பிரதேசத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை மீட்பதற்கு நாங்கள் ராணுவத்தை அனுப்புவதற்கு உத்தரவிடுகிறோம் என்று உத்தரவிடுங்களேன். முடியுமா?

உச்சநீதிமன்றத்தின் அளவு என்ன? எல்லை என்ன? மாநில அதிகாரத்தை மீறுவதற்குரிய அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு இருக்கிறதா? ஏற்கனவே காலஞ்சென்ற நீதியரசர் கர்ணன் அவர்கள் ஒரு கேள்வி எழுப்பினார்கள். உயர்நீதிமன்றம் உயர்ந்த அதிகாரமா? என்று அதற்கு என்ன பதில் கிடையாது. நீதிபதிகள் எல்லோருக்கும் மேற்பட்ட அதிகாரம் கொண்டவர்கள் அல்ல. அரசியலமைப்பை பொருள் உணர்ந்து செய்வதற்கு இருக்கிறீர்கள். உச்சநீதிமன்றம் அதன் எல்லையைத் தெரிந்திருக்க வேண்டும்.

மாநில அதிகாரத்திற்குள் தலையிடுவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு என்ன அதிகாரம் இருக்கிறது? துணை ராணுவப்படை எதற்கு? ஒன்றிய அரசின் அலுவலகங்களைப் பாதுகாப்பதற்கு, நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான, பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கான ஒரு துணை ராணுவப் படை. அது திருப்பரங்குன்ற மலையில் தீபம் ஏற்றுவதற்கு வருகிறது என்றால், திருப்பரங்குன்ற மலை என்ன ஒன்றிய அரசின் அலுவலகமா? அல்லது தீபம் என்பது ஒன்றிய அரசின் விளைச்சலா? உற்பத்தி செய்யும் நிறுவனமா? என்ன அது? அது என்ன தனித்த இருப்பா? உங்கள் கையில் இருக்கிறதா? ஒன்றிய அரசு கையில் இருக்கிறதா? அது கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்.எல்.சி.யில் இருப்பது மாதிரி, அல்லது சேலம் ஸ்டீல் பிளான்ட் இருப்பது மாதிரி, இல்லை ஆவடி தொழிற்சாலை இருப்பது மாதிரி, அது தனித்த அமைப்பா? அல்லது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? எதில் இருக்கிறது அது?

என்ன வரையறை அது? அவர்கள் விருப்பத்திற்கு வந்து மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவார்களா? உச்சநீதிமன்றத்திற்கு என்ன அதிகாரம் இருக்கிறது? சி.ஐ.எஸ்.எஃப். எதற்கு? இப்போது மாநில அரசிடம் காவல்துறை எதற்கு? அப்படியென்றால், இங்கே சாமிநாதன் கொடுத்த தீர்ப்பை அப்படியே எடுத்து உச்சநீதிமன்றம் வேறு மொழியில் அதை நடைமுறைப்படுத்தக் கொடுத்திருக்கிறது என்றுதான் பார்க்க முடியுமே ஒழிய, இனிமேல் உச்சநீதிமன்றத்திற்குப் போனால் தீர்ப்பு கிடைக்காது, நீதி கிடைக்காது என்பது அம்பலமாகியிருக்கிறது.

நாம் கேட்க வேண்டிய விடயம் என்னவென்றால், முருகன் கோயிலில் தீபம் ஏற்றும் வழக்கம் என்றைக்கு இருக்கிறது? அறுபடை வீட்டில் எங்கெல்லாம் ஏற்றுகிறீர்கள் தீபம்? திருச்செந்தூரில் ஏற்றுகிறீர்களா? பழமுதிர்சோலையில் ஏற்றுகிறீர்களா? பழனி மலையில் ஏற்றுகிறீர்களா? சாமி மலையில் அல்லது திருத்தணியில் இங்கே எல்லாம் ஏற்றாத தீபத்தைத் திருப்பரங்குன்ற மலையில் ஏற்ற வேண்டும் என்பதற்கான காரணம் என்ன? நோக்கம் என்ன என்றால், தர்கா இருக்கும் காரணம்தான்.

எச். ராஜா, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர், வெளிப்படையாக நாங்கள் தர்காவை இடிக்கப் போகிறோம் என்று சொன்னார். எச். ராஜாவால் மிக மோசமாக விமர்சிக்கப்பட்ட உயர்நீதிமன்றம், இதன் மீது என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறது? ”கோர்ட்டாவது என்னவாவது” என்று எச். ராஜாவே நேராகச் சொல்லியிருக்கிறார்: ஆக நீதிமன்றம் அதேபோல் நடந்து கொண்டிருக்கிறதா? எச். ராஜா சொன்னபடி நடந்திருக்கிறார்கள் என்றுதான் கேட்கிறோம். அப்படியென்றால், தமிழ்நாட்டில் கலவரத்தை மூட்டுவதற்குரிய வேலையை நீதிமன்றங்கள் செய்கின்றன என்று நாங்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறோம். அவர்கள் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டுக்கும், தமிழர் மரபுக்கு எதிராக இருக்கிறார்கள்.

முருகன் கோயிலுக்கும், முருக வழிபாட்டுக்கும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.க்கு எந்தச் சம்பந்தமும் கிடையாது. சனாதனத்தில் முருகனுக்கு இடமே கிடையாது. உங்களுக்கு ஏதாவது ஒரு முருகன் கோயில் தமிழ்நாட்டுக்கு வெளியே, வட இந்தியாவில் எங்கேயாவது இருக்கிறதா? பா.ஜ.க.க்காரன் வாழும் மாநிலத்திலோ, அல்லது வட மாநிலத்தில் எங்கேயாவது முருகன் கோயில் இருக்கிறதா? உனக்கும் முருகன் வழிபாட்டிற்கும் என்ன சம்பந்தம்? உனக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? அதைச் சொல்ல வேண்டும்.

பா.ஜ.க.வில் எந்தத் தலைவராவது வட இந்தியாவில் முருகன் என்று பெயர் வைத்திருக்கிறீர்களா? அல்லது சாமிநாதன் இருக்கும் அந்தச் சமூகத்தில் யாராவது முருகன் என்ற பெயர் வைத்திருக்கிறீர்களா? சுப்பிரமணியன் பெயர் வைப்பீர்கள். முருகன் என்று யாராவது பெயர் வைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு முருகனுக்கு என்ன சம்பந்தம்? முருகன் மேல் என்ன அக்கறை? அவ்வளவு அறுபடை வீட்டில் இல்லாத மரபை இங்கே கொண்டு திணிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

அறுபடை வீட்டில் மற்ற இடத்தில் ஏன் ஏற்றவில்லை? பழமுதிர்சோலையில் ஏன் ஏற்றவில்லை? திருத்தணியில் ஏன் ஏற்றவில்லை? மருதமலைக்குப் பின்னால் அந்த மலைக்குப் பின்னால் ஆணுவாவி முருகன் கோயில் ஒன்று இருக்கிறது. அது மிகவும் பழமையான கோயில். அங்கேயும் அந்த மாதிரி எல்லாம் ஏற்றவில்லை. எந்த இடத்தில் முருகன் கோயிலில் ஏற்றவில்லை. இங்கே ஏற்றுவதற்கு ஒரே காரணம், அங்கே தர்கா-முஸ்லிம்களின் வழிபாட்டுத் தளம் இருக்கிறது. அதை வைத்துப் பிரச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக இந்தப் பிரச்சனையைக் கொண்டு வருகிறார்கள். இதற்கு நீதிமன்றங்களும், நீதியரசர்களும் துணை நிற்கிறார்கள்.

நாளைக்கு இந்தப் பிரச்சனையை வைத்து ஒரு கலவரம் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். எப்படி பாபர் மசூதியில் 1948, 49-இல் திருட்டுத்தனமாக உள்ளே போய் ஒரு ராமர் சிலையை வைத்து, 50 ஆண்டுகள் கழித்து ஒரு பெரிய கலவரத்தைக் கொண்டு வந்து, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொலை செய்த ஒரு கலவரத்தைப் போல, நாளைக்கு இதே திருப்பரங்குன்ற மலையை வைத்து ஒரு மதக் கலவரத்தை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பல் உருவாக்கி, அதில் யாரேனும் கொல்லப்பட்டால், அதில் இந்த நீதிபதியாக சாமிநாதன் உட்பட அனைவரும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட வேண்டும்.

நீதிமன்றங்கள்தான் பொறுப்பெடுக்க வேண்டும். நீங்கள் கொடுத்த தீர்ப்பால்தான் நடந்திருக்கிறது. 200 வருடமாக நடந்த தீபத்தினால் எந்தக் கலவரமும் வரவில்லை. இப்போது ஏதாவது நடந்தது என்றால், அதற்குச் சாமிநாதன்தான் முதல் குற்றவாளி. ஏ1 என்று அவர்தான் போட வேண்டும்.

நீதிபதிகள் எல்லாம் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. நீதி பரிபாலனை சமூக நல்லிணக்கத்திற்குச் சாதகமாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, உங்கள் விருப்பத்திற்கு, உங்கள் கொள்கைக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கொடுத்தால், அதனால் வரும் விளைவுக்கு நீதிபதிகள்தான் பொறுப்பு. நீங்கள் ஓய்வுக்காலம் ஆனாலும், உங்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் எல்லா அமைப்பும் சேர்ந்து செய்வோம்.

நாளைக்கு ஏதேனும் ஒரு கொலை நடந்தால், ஏதேனும் ஒரு அப்பாவி கொல்லப்பட்டால், ஏதேனும் ஒரு கலவரம் நடந்தால், சாமிநாதன்தான் முழுப் பொறுப்பு. அதுதான் செய்ய முடியும். இவ்வளவு காலம் அதிகாரிகள் வருவார்கள், பொறுப்பில் ஏதாவது செய்துவிட்டுப் போய்விடுவார்கள். அதைப் பற்றி அதிகாரிகளுக்குப் பொறுப்பு இல்லை, கவலை இல்லை. ஓய்வுக்காலத்திற்கு பின் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்த விளைவுக்கு எல்லாம் அனுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டில் யாராவது காவடி தூக்கிக்கொண்டு, அழகு குத்திக்கொண்டு இங்கே அளவைக் கல்லில், சர்வே கல்லில் போய்த் தீபம் ஏற்று என்று எந்த முருக பக்தனும் சொல்லவில்லை.

எங்கள் குடும்பத்தில் முருக பக்தர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். இவருக்குக் குமரன் என்று பெயர், எனக்குத் திருமுருகன் என்று பெயர், அவருக்கு அருள் என்று பெயர், அருள்முருகன், திருமுருகன், குமரன் இருக்கிறோம் நாங்கள்.

சாமிநாதன் வீட்டில் வைத்திருக்கிறார்களா? நீதிபதி அவர் பிள்ளைக்கு முருகன் பெயர் வைத்திருக்கிறாரா? அவரை முருகனை வைக்கச் சொல்லுங்களேன், பார்ப்போம். உங்கள் குடும்பத்தில் அப்பா, அம்மாவுக்கு வைக்கவில்லை, உங்கள் தாத்தா, பாட்டிக்கு வைக்கவில்லை, உங்கள் பிள்ளைக்கு வைக்கவில்லை. உன் பேரனுக்கு வையுங்களேன், முருகனை வைக்க முடியாமல் வலிக்கிறது அல்லவா?

ஆனால் எங்கள் வீட்டில் வைக்கிறோம். என் நான்கு தலைமுறையாக முருகன் வைத்துப் பெயர் வைத்திருக்கும் பட்டியலை நான் கொடுக்கிறேன். கொள்ளுப் பாட்டனாரில் இருந்து நான் பெயர் சொல்ல முடியும். என் இருக்கையில் அமந்ந்திருக்கும் தோழர்கள் சொல்ல முடியும், ஆனால் சாமிநாதனால் சொல்ல முடியுமா?

எங்கள் குடும்பத்தில் முதலில் முருகன் கோயிலில்தான் மொட்டை போட்டிருக்கிறோம். நீங்கள் போட்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில்தான் மரபு இருக்கிறதா? எங்கள் வீட்டில் காவடி தூக்கியிருக்கிறார்கள், அழகு குத்தியிருக்கிறார்கள். நாங்கள் வேண்டுமானால் பெரியாரியவாதிகளாக இருக்கலாம். என் குடும்பத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்குக் கிடையாது. அவர்கள் எது செய்திருக்கிறார்களோ, அதை நீங்கள் செய்திருக்கிறீர்களா? இல்லை.

அப்படியென்றால், முருகன் வழிபாட்டுக்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்குள் கலவரம் செய்வதற்கு ஒரு வேலை செய்தால், தமிழ்நாடு மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்: தயவுசெய்து இந்தக் கும்பலை அனுமதித்துவிடாதீர்கள்.

நம் நாட்டில் கடினப்பட்டு இப்போதுதான் பொருளாதார ரீதியாக வளர்ச்சி வருகிறது. இப்போதுதான் கம்ப்யூட்டர் கம்பெனிகள் எல்லாம் வந்திருக்கின்றன, கார் கம்பெனி வந்திருக்கிறது, பல வளர்ச்சிகள் நாம் போய்க் கொண்டிருக்கிறோம். எங்கள் தாத்தா எல்லாம் படித்தது இல்லை, நாங்கள் படித்து உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறோம். இதற்குக் காரணம் தமிழ்நாடு அறிவியல் பூர்வமாகப் போனதால்தான். இந்தச் சாணிக் கும்பலால், மாட்டுக் கும்பலால் போய் மாட்டிக்கொண்டு தமிழ்நாட்டை நாசப்படுத்திவிடாதீர்கள். தமிழ்நாட்டைத் தயவுசெய்து நாசப்படுத்த அனுமதித்துவிடாதீர்கள்.

நீதிபதி சொல்வான், நீதிமன்றம் சொல்லும், இந்தக் கலவரக்காரன் சொல்வான், இதற்கெல்லாம் மரியாதை கொடுத்து நாம் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நாம் நீதிமன்றத்தை விட 3000 ஆண்டு கால எழுதப்பட்ட வரலாறு வைத்திருக்கிறோம், நீதிமன்றத்திற்கு 50, 70 வருட வரலாறு இருக்கிறது. தமிழனுக்கு 3000 வருட வரலாறு இருக்கிறது. நீங்கள் இன்றைக்கு வந்திருக்கிறீர்கள். நீதிபதிக்கெல்லாம் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று தமிழ்நாடு மக்கள் முடிவு எடுங்கள். இந்தப் பிரச்சனையை நடத்த விடக் கூடாது.

இரண்டாவது, நான் தர்காவுக்கு வருகிறேன். தர்கா வழிபாடு என்பது தமிழர் வழிபாட்டோடு சேர்ந்ததுதான். அது வெறும் தனித்து இஸ்லாமிய வழிபாடுகள் மட்டுமல்ல. இங்கே இஸ்லாமியர் அல்லாத தமிழர்கள் தர்கா வழிபாட்டில் மிக முக்கியமான பொறுப்பு வகிக்கிறார்கள். ஏர்வாடி தர்காவாக இருந்தாலும் சரி, நாகூர் தர்காவாக இருந்தாலும் சரி, இந்தத் தர்காக்களில் எல்லாம் இந்து மக்கள்தான் அங்கே அந்தச் சந்தனக் கூடு எடுக்கிறார்கள். அதற்கான பொறுப்புகளில் பங்கெடுப்பது எல்லாம் இந்து மக்கள்தான் செய்கிறார்கள்.

இதேபோல், இந்தத் தர்காக்கள் பாதுகாக்கப்படுவதற்குத் தமிழ் மன்னர்கள் பொன்னும் பொருளும் கொடுத்திருக்கிறார்கள். திருப்பத்தூரில் இருக்கும் தர்காவிற்கு மருதுபாண்டியர்கள் கட்டி எழுப்பிக் கொடுத்திருக்கிறார்கள். அதற்காக நிதி உதவி செய்திருக்கிறார்கள். எங்கள் மரபு இதுதான். ஆகவே, இங்கே தர்காக்களைப் பாதுகாப்பது என்பது இங்கே இருக்கும் பாண்டிய அரசர்கள் செய்திருக்கிறார்கள், சோழ அரசர்கள் செய்திருக்கிறார்கள். இந்த வரலாறு எழுதப்பட்ட வரலாறு. இந்து மக்கள்தான் சந்தனக் கூடுக்கும், மற்றவற்றிக்கும் போகிறார்கள். அவர்கள்தான் வேண்டுதல் வைக்கிறார்கள். அவர்கள்தான் பலி கொடுக்கிறார்கள். இது இஸ்லாமிய மரபில் இல்லை, தமிழர் மரபில் இருக்கிறது. இவன் கை வைப்பது தமிழர் மரபில்.

நான்(திரு) மிக முக்கியமான ஒரு கேள்வி கேட்க விரும்புகிறோம். என்னவென்றால், முருகன் கோயிலுக்கு உச்சிப்பிள்ளையார் கோயிலில்தான் தீபம் ஏற்றினார்கள். உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றினால் முருகனுக்கு ஏதாவது பிரச்சனையா? இன்னொரு பிள்ளையார் கோயிலில்தான் ஏற்றுகிறார்கள். இப்போது பிள்ளையார் கோயிலில் ஏற்றாமல் தர்கா பக்கத்தில் ஏற்று என்றால், நான் என்ன கேட்கிறேன்? தர்கா என்பது என்ன? இறந்தவர்களைப் புதைக்கும் இடம், ஒரு சமாதி, ஒரு இடுகாடு.

ராம ரவிகுமார் முதல் பா.ஜ.க.க்காரனைப் பார்த்துக் கேட்கிறேன்: ராமனுக்கு இடுகாட்டில் தீபம் ஏற்றுவாயா? ஏன் முருகனுக்கு மட்டும் மேலே சமாதி அருகில் போய்த் தீபம் ஏற்று என்று சொல்கிறாய்? ஏன் பிள்ளையார் கோயிலில் ஏற்றுவதற்கு முருகனுக்குத் தகுதி கிடையாதா? உச்சிப் பிள்ளையார் கோயிலில்தான் ஏற்றுகிறார்கள்.

ஆகவே, முருக வழிபாட்டுக்குச் சம்பந்தமே இல்லாத இந்த ஆட்கள் எல்லாம் சேர்ந்து முருக வழிபாட்டை அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள், கொச்சைப்படுத்தி இருக்கிறார்கள், முருகனை இழிவுபடுத்தி இருக்கிறார்கள். ஒரு சமாதி அருகில் போய் தீபம் ஏற்றி மரியாதை செய்கிறேன் என்பது எங்கேயாவது இந்துக் கோயிலில் வழக்கம் இருக்கிறதா? பெருமாளுக்குச் செய்திருக்கிறாயா? ராமனுக்குச் செய்திருக்கிறாயா? கிருஷ்ணனுக்குச் செய்திருக்கிறாயா? என கேட்கிறேன்,

தர்கா என்பது என்ன? இறந்தவரைப் புதைத்த இடம், அடக்கத்தளம். அது பக்கத்தில் தீபம் ஏற்றுவது முருகனை அசிங்கப்படுத்துவதற்கான நோக்கம் தவிர வேறு எதுவுமே கிடையாது. இதைச் சாமிநாதன் செய்திருக்கிறார். அவர்தான் முழு முதல் காரணம். உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏற்றுவதற்கு முருகனுக்குத் தகுதி கிடையாது என்று சாமிநாதன் சொல்லியிருக்கிறார். அதுதான் தீர்ப்பின் உள்நோக்கம். அவர்களுக்கு நோக்கம் இருக்கிறது, முருகனை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது.

முருகனைக் கடவுள் என்பதை விடக் குறிஞ்சி நிலத்தின் தலைவன் என்றுதான் தமிழர்கள் சொல்கிறார்கள். ஆக, திணை மரபில் வந்த எங்களுக்கு முருகன் என்பவன் தலைவன். ஆகவே, எங்கள் தலைவனை நீ அசிங்கப்படுத்துகிறாய் என நாங்கள் ஏன் சொல்லக் கூடாது?

ஆக தமிழ்நாடு மக்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம். தயவுசெய்து உச்சிப் பிள்ளையார் கோயில் என்ற மரபார்ந்த இடத்தில் ஏற்றப்பட்ட தீபத்தை மாற்றுவதற்கு அதிகாரம் கிடையாது. எங்கள் மரபை மாற்றாதீர்கள் என்று சொல்லித் தமிழ்நாடு மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். ஒரு அடக்கத்தளத்தின் பக்கத்தில் போய்த் தீபம் ஏற்றி முருக வழிபாட்டை அசிங்கப்படுத்தும் மரபை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்நாடு மக்கள் கேள்வி கேட்க வேண்டும். எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது. இந்தப் பொறுப்பை நாம் தட்டிக் கழிக்கக் கூடாது.

இத்தனை ஆண்டு காலம் இல்லாத ஒன்றைப் புதிதாகக் கொண்டு வருகிறான். அது முருகனை அசிங்கப்படுத்துகிறது. தமிழ்நாடு மக்கள் கேட்காத ஒன்றைத் தீர்ப்பாகக் கொண்டு வருகிறார்கள். இதனால் கலவரத்திற்கான எல்லாக் காரணமும் இருக்கிறது. இதில் திருப்பரங்குன்ற மக்கள் கோரிக்கை வைக்கவில்லையே.

திருப்பரங்குன்றம் அமைச்சர், நிர்மல்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தாரா? அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வைத்தாரா? யாருமே வைக்கவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கோரிக்கை வைக்கவில்லை. 233 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கை வைக்கவில்லை. அப்படி இருக்கும்பொழுது, இந்தக் கோரிக்கை யாருடைய நலனுக்காக, யார் தேவைக்காக எழுப்பப்பட்டது என்பதுதான் தமிழ்நாடு மக்கள் எழுப்பும் கேள்வி.

அதனால், தவெக அரசுக்கு நாங்கள் என்ன வைக்கிறோம் என்றால், கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மிக உறுதியாக நின்று, நீதிமன்றமே சொன்னாலும் கூட ஏற்ற முடியாது என்று ஒரு நிலைப்பாட்டை எடுத்தார்கள். அதை நாங்கள் வரவேற்றோம். அதனால் சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இந்த மதவெறிக் கூட்டத்திற்கு இடமில்லாமல் போனது. அதேபோல், துணிச்சலான முடிவை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்.

எப்படி கேரளாவில் சபரிமலை விடயத்தில் வந்த தீர்ப்பைக் கேரள அரசு நடைமுறைப்படுத்தவில்லையோ, எப்படி அந்தச் சபரிமலை அந்தத் தேவஸ்தானம், அந்த அறநிலையக் குழு எப்படி நடைமுறைப்படுத்தவில்லையோ, அதேபோல் இந்து அறநிலையத் துறையும் இதை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஐந்து பேர் கொண்ட கொடுத்த தீர்ப்பே நடைமுறைப்படுத்தவில்லை என்றால், இரண்டு பேர் கொடுத்த தீர்ப்பை (அதுவும் இடைக்காலத் தீர்ப்பு) நடைமுறைப்படுத்த அவசியம் கிடையாது. அது தேவையில்லை. எல்லோரும் சேர்ந்து முடிவு எடுப்போம். இப்படி ஒரு முடிவைத் தமிழ்நாடு அரசு எடுத்தால் எல்லோரும் ஆதரிப்போம்.

டெல்லிக்காரர்களுக்கு காவிரியில் தண்ணீர் கொடுக்க வக்கு இல்லை. முருகனுக்கு வந்து பிரச்சனைக்கு வந்துவிட்டார்கள். காவிரி தண்ணீர் வரவில்லை, டெல்டாவில் குறுவை இல்லை, பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இங்கே தண்ணீர் இல்லாமல் வறட்சி நிலை இருக்கிறது, மழை பொய்த்துப் போயிருக்கிறது. இந்தப் பிரச்சனையில் நாம் இருக்கிறோம். இப்போது முருகன் பிரச்சனை, தீபம்தான் பிரச்சனையா? தீபம் ஏற்றுவதுதான் பிரச்சனையா?

தமிழ்நாட்டில் மழை வந்தால் மழையை வழி அனுப்பும் விழாவாகக் கார்த்திகை தீபம் இருக்கிறது என்றால், மழையே வரவில்லையே! அப்படியென்றால் என்ன விளக்கெண்ணெய்க்கு ஏற்றுகிறீர்கள் என்று கேட்பானா, மாட்டானா தமிழன்? தீபம் ஏற்றி என்ன செய்யப் போகிறீர்கள்?

ஆகவே, இதை உடனடியாக இந்தத் தீர்ப்பைத் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. கேரள அரசைப் போல் இவர்களும், தமிழ்நாடு அரசும் உறுதியான முடிவை எடுக்க வேண்டும். கர்நாடக அரசு எப்படித் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரக் கூடாது என்று உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம், அதையெல்லாம் மீறி முடிவு எடுக்கிறதோ, அதேபோல் ஒரு முடிவைத் தமிழ்நாடு அரசு எடுப்பது தப்பு இல்லை. அதனால் குடிமுழுகிப் போய்விடாது. அதனால், இப்படிப்பட்ட ஒரு முடிவைத் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு அரசு முன்வந்து எடுக்க வேண்டும். கடந்த தி.மு.க. அரசைப் போல் மிக உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சமயத்தில் நாங்கள் முன்வைக்கிறோம்.

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுவில் சில குறைபாடுகள் இருக்கிறது என்று உண்மை. ஆனால், உச்சநீதிமன்றம் எதைப் பார்க்க வேண்டும்? உச்சநீதிமன்றத்திற்குப் பொறுப்பு இருக்கிறதா, இல்லையா? 200 ஆண்டு கால மரபை மாற்றுவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு என்ன அதிகாரம் இருக்கிறது? நீங்கள் ”தடை” என்று சொல்கிறீர்கள் இல்லையா? உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்குத் தடை என்று சொல்லிவிட்டு, அதை நடைமுறைப்படுத்தலாம் என்றால், கத்தி வைத்துக்கொள்வது தடை, ஆனால் குத்துவதற்குத் தடை இல்லை என்பதா? என்ன இது? கேலிக்கூத்தான தீர்ப்பு இது. அதனால், உச்சநீதிமன்றம் முழுக்க முழுக்கத் தமிழர் விரோதமான தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது.

நிரூபரின் கேள்வி: அரசு, மாவட்ட ஆட்சியர் போய்ப் பார்த்து வர வேண்டும். வழிபாடு உடையவர்கள், பொதுமக்கள் யாரும் போகக் கூடாது. அரசு அதிகாரி போய் விளக்கு ஏற்ற வேண்டும். இதெல்லாம் இவ்வளவு சட்ட வழிமுறைகள் எல்லாம் வந்திருக்கிறார்கள். அதுதான் போராட்டம் செய்யக் கூடாது என்று எல்லாம் சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் மீறி அரசு தீர்ப்பை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்றால், பல்வேறு அமைப்புகள் ஒன்று சேர்ந்து என்ன செய்ய போகிறீர்கள்?

திருமுருகன்காந்தி பதில்: அப்படி ஒரு முடிவை எடுத்தால், தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பைத் தமிழ்நாடு அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுதான் தமிழ்நாடு அரசுக்கு நாங்கள் சொல்வது. ஏனென்றால், வந்து 234 எம்.எல்.ஏ.க்கள், 233 பேர் வேண்டாம் என்கிறார்கள். எம்.பி.க்கள் எல்லாம் வேண்டாம் என்கிறோம். தமிழ்நாடு மக்கள் வேண்டாம் என்கிறோம். பா.ஜ.க. சொல்வதைக் கேட்டு நீதிமன்றத் தீர்ப்புக் கொடுத்தால், நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழ்நாடு அரசு துணிந்து முடிவு எடுத்தால் வரவேற்கிறோம், இல்லை என்றால் கண்டிக்கிறோம். அது அடுத்ததுதான் பார்க்க முடியும். எல்லா அமைப்புகளும் சேர்ந்து பேசி நாங்கள் முடிவெடுக்க வேண்டியது.

ஆனால், இதற்கு அப்புறம் நாங்கள் பார்த்துவிட்டுச் சும்மா இருக்க மாட்டோம். இனி இந்துத்துவ அமைப்பு அங்கே கூட்டம் கூட்டுகிறான், ஆளைத் திரட்டுகிறானா, நாங்களும் திரட்டுவோம். இவ்வளவு காலம் நாங்கள் அமைதியாக இருந்தோம். இனிமேல் அவன் கூட்டம் கூட்டுகிறானா, கலவரம் செய்வதற்குச் செய்கிறானா, நாங்கள் உத்தரப் பிரதேசம் மாதிரி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். நாங்களும் வருவோம், நாங்களும் நிற்போம். இது உச்சநீதிமன்றத்திற்குச் செய்திதான், சாமிநாதனுக்குச் செய்திதான், எல்லோருக்கும் இதுதான் செய்தி. எங்கள் மண்ணைக் காப்பாற்றுவதற்கு எங்களுக்கு என்ன செய்தாலும், நாங்கள் சிறைக்குப் போன ஆட்கள்தான். எங்களுக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. அதனால், தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் துணிந்து நிற்போம். மதவெறிச் சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டைக் காப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை நாங்கள் செய்ய வேண்டியது. அதனால், நாங்கள் அச்சப்பட்டு நிற்போம் என்று நினைக்காதீர்கள். உங்களிடம் மனு கொடுத்துக் கொண்டே இருப்போம், கோரிக்கை செய்து கொண்டே இருப்போம் என்று நினைத்துப் பார்க்காதீர்கள் சார். அவன் வந்து நின்றானா, அவனை விடப் பத்து மடங்கு அதிகமான ஆட்கள் வந்து நிற்போம். அதனால், இது போன்ற இந்துத்துவ மதவெறியர்களுக்குத் தமிழ்நாட்டில் ஒரு காலத்திலும் இடம் அளிக்க முடியாது.

ஏனென்றால், உத்தரப் பிரதேசம் மாதிரி, பீகார் மாதிரி, கை கட்டிக்கொண்டு தமிழ்நாடு வேடிக்கை பார்க்காது. ஏற்கனவே எட்டு வருடத்திற்கு முன்னாடி கருஞ்சட்டைப் பேரணி என்று சொல்லி எல்லாம் திரண்டு 40000- 50,000 பேர் திரண்டிருக்கிறோம். தமிழ்நாடு மரபைக் காப்பாற்றுவதற்கு, தமிழ்நாட்டின் நல்லிணக்கத்தைக் காப்பாற்றுவதற்குச் சிறை செல்வதற்கு நாங்கள் தயார். அதற்குத் துணிந்துதான் பேசுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »