
தமிழீழத்தின் செம்மணி புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 550க்கும் மேற்பட்ட தமிழர்களின் சடலங்கள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கின.
சிங்கள ராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய 1995-களில், ராணுவ ஊழியர் ஒருவரே 400-க்கும் மேற்பட்ட சடலங்களைத் தானே புதைத்ததாக சாட்சியம் கூறினார். அவர் இன்றும் சிறையில் இருக்கிறார். இந்த நிலையில், செம்மணி அவலத்தையே புதைக்கும் வண்ணம் வெளியிடப்பட்ட தொல்லியல் குழுவின் அறிக்கை தமிழர்களிடையே கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இலங்கை அரசு, செம்மணி புதைகுழியை ஆய்வு செய்ய களனிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான ராஜ் சோமதேவ மற்றும் அனுஷா வன்னிநாயக்க ஆகியோரை நியமித்தது. அகழ்வாராய்ச்சி தொடர்பான மூன்றாவது இடைக்கால அறிக்கையாக இது, அக்டோபர் 15-ஆம் தேதி யாழ்ப்பாணத்திற்கான நீதி மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ். பிரணவனுக்கு அனுப்பப்பட்டது. இது அக்டோபர் 19-ஆம் தேதி யாழ்ப்பாண நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கை 17 பக்கங்கள் கொண்டது. குறைந்தபட்சம் 574 நபர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும், 51 தனித்தனி எலும்புக் குவியல்களையும் கண்டறிந்ததாக பதிவு செய்கிறது. இறந்தவர்களில் 41% குழந்தைகள், 22% கைக்குழந்தைகள் எனவும் மதிப்பிடுகிறது.
செம்மணி புதைகுழியில் உள்ள சடலங்கள் சடங்குகள் செய்யப்பட்டு, முறையாகப் புதைக்கப்பட்ட இடமாகவே இருக்க வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது. பெரும்பாலான சடலங்களுடன் எந்தப் பொருட்களும் இல்லாமல் புதைக்கப்பட்டு இருப்பதைக் குறித்துக் கூறும் போது, தொற்றுநோயாலோ, இயற்கைப் பேரழிவாலோ இவர்கள் இறந்திருந்தால், அவர்களுடன் எந்தப் பொருட்களும் வைக்கப்படாமல் புதைக்கப்பட்டிருக்கலாம் என வாதிடுகிறது. ஆனால், யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கணக்கான மரணங்களை ஏற்படுத்திய எந்தவொரு தொற்றுநோயையோ, பேரழிவையோ இவ்வறிக்கை குறிப்பிடவில்லை.
செம்மணியில் கண்டறியப்பட்ட தமிழர் எலும்புக்கூடுகளில் இலங்கை அரசால் அமைக்கப்பட்ட தொல்லியல் குழுவின் அறிக்கை சொல்வதும் அதில் உள்ள முரண்களும்:
| எண் | அறிக்கை சொல்வது | முரண் |
| 1 | எலும்புக்கூடு 25 தான் முறையான புதைப்புக்கு சிறந்த உதாரணம். அதனுடன் நெகிழிப் பை, செருப்பு, கொலுசு, ஆணிகள் இருந்தன. ஆணி சவப்பெட்டியதாக இருக்கலாம் எனக் கூறியது. | ஜூலை 2025 அகழ்வுகளில், அது 4-5 வயது சிறுமியின் உடல் எனவும், அதனுடன் நீல நிற பள்ளிப் பை, பொம்மை, செருப்பு போன்றவை இருந்தன என நீதிமன்றத்தில் JM0 (நீதித்துறை நடுவர்) கூறினார். அவை இருக்கும் புகைப்படமும் அளிக்கப்பட்டது. |
| 2 | எலும்புக்கூடு 48, 56 இறுதிச் சடங்குடன் தொடர்புடையது என்று கூறியது. | முரண் – அவையும் எலும்புக்கூடு 25 போன்ற உடல் அம்சங்களுடன் இருப்பதால் குழந்தையுடனாகத் தானிருக்க வேண்டும் என JMO (நீதி மருத்துவ அதிகாரி) நீதிமன்றத்தில் 2025, ஜூலையில் கூறியுள்ளார். ஆனால் அறிக்கை அதை மறைத்தது. |
| 3 | எலும்புக்கூடு 227, 429 அமர்ந்த நிலை இருந்தது. இந்து மதத்துடன் தொடர்புடைய சமாதி / ஜீவ சமாதி, தியான நிலையாக இருக்கலாம் என்றது..227 புகைப்படத்திற்கு “தியான நிலையில் புதைக்கப்பட்ட எலும்புக்கூடு” என்று தலைப்பு கட்டப்பட்டது. கைகள் வயிற்றின் மீதோ, பக்கவாட்டிலோ வைக்கப்பட்டிருந்தது ஒழுங்கான அடக்கத்தின் அறிகுறி என்றது. | 2025, செப்டம்பரில் கண்டறியப்பட்ட அமர்ந்த நிலை கண்டறியப்பட்ட 227-ன் எலும்புக் கூட்டில் கைகள் கட்டப்பட்டிருந்தது, மண்டை ஓடு உடைந்திருந்தது, தாடை நொறுங்கியிருந்தது. ஆனால் அறிக்கையில் காயம் பற்றிய எதுவும் இல்லை. |
| 4 | 2026 ஜூலை இரண்டாவது அமர்ந்த நிலையிலான புதைகுழி கண்டெடுக்கப்பட்டதில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு சிதைக்கப்பட்ட எலும்புக்கூடுகளைத் தவிர, இறந்தவர்களின் கைகள் தொடர்ந்து வயிற்றின் மீதோ அல்லது உடலின் பக்கவாட்டிலோ வைக்கப்பட்டிருந்ததாக அந்த அறிக்கை கூறுகிறது, மேலும் இதை ஒரு ஒழுங்கான அடக்கத்தின் அறிகுறியாகக் கருதுகிறது. கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த எந்த எலும்புக்கூட்டையும் அது பதிவு செய்யவில்லை. | ஆனால் 2026, ஆகஸ்ட் 8 -ல் தலையற்ற, இருகைகள் கட்டப்பட்டு மார்போடு அணைத்த நிலையில் இருந்த ஒரு எலும்புக்கூடு புலனாய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் பற்றி அறிக்கை சொல்லவில்லை. |
செம்மணியில் இவ்வாறு சடலங்கள் கண்டெடுக்கப்படுவது இது முதன்முறையல்ல. 1999ஆம் ஆண்டிலேயே அங்கிருந்த சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. அப்போது நடத்தப்பட்ட அரசாங்க விசாரணையில், அதில் பத்து பேர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் காணப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. அவற்றில் ஒரு எலும்புக்கூட்டின் கைகளும் கண்களும் கட்டப்பட்டிருந்தன. அப்போதே இது கொலை செய்யப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இடம் என்பது தெரிந்திருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள அறிக்கை, அந்த 1999ஆம் ஆண்டு நிகழ்வு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. அதை முழுமையாக மறைத்துவிட்டது.
மேலும் அறிக்கையின் ஒரு பகுதியில் இப்புதைகுழியில் குப்பை போல உடல்கள் கொட்டப்பட்டு இருக்கிறது என்றும். சொல்கிறது, இந்து மதப்படி முறையாக அடக்கம் செய்யப்பட்டது என்றும் பல இடங்களில் சொல்கிறது. இப்படியாக முன்னுக்குப் பின்னான முரணான அறிக்கையாக இது இருக்கிறது.
மேலும் ஆடைகள், மண்டையோடுகள் இருந்த திசை, தகன முறைகள், நாணயங்கள் போன்றவைகளும் அறிக்கையிலிருந்து முரணாக இருக்கின்றன.
- பல சடலங்களில் ஆடைகள் இல்லை. சில சடலங்களில் மட்டும் தான் மக்காத பட்டன் போன்ற பொருட்கள் இருந்தன. துணிகள் மக்கிப் போயிருக்கும் என்று அறிக்கை சொல்கிறது. ஆனால் ஏனைய சடலங்களில் அந்த பட்டன் போன்ற பொருட்கள் எங்கே எனக் கேள்வி எழுகிறது.
- மனித உரிமை ஆணையக் குழு செப்டம்பர் 2025ல் 90% மேற்பட்ட சடலங்களில் ஆடைகள் இல்லை, அதனால் இந்து மத சடங்குகள் எதுவும் செய்திருக்க வாய்ப்பில்லை எனக் கண்டறிந்தது. இந்த அறிக்கை அதைப்பற்றி பேசவில்லை.
- அந்த அறிக்கையில் மண்டையோடுகள் எந்தவொரு சீரான திசையிலும் இல்லை எனக் கூறுகிறது. அதனுடன் இணைக்கப்பட்டுள்ள விளக்கப்படமே 72% மண்டையோடுகள் வடமேற்கு திசையை நோக்கியிருந்ததைக் காட்டுகிறது.
- அதேபோல், 574 எலும்புக்கூடுகளில் வெறும் 39 பேரிடம் மட்டுமே பொருட்கள் காணப்பட்டன. அதில் சுமார் 20 பேரிடம் கிடைத்த இரும்பு ஆணிகளை வைத்தே அங்கு சவப்பெட்டிகள் இருந்ததாக அறிக்கை வாதிடுகிறது.
- தமிழீழத்தில் சில சாதியினரும், போராளிகளும் மட்டுமே இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள். இந்து வழக்கப்படி என்றால், பெரியவர்கள் தகனம் செய்யப்படுவார்கள், குழந்தைகள் மட்டுமே புதைக்கப்படுவார்கள். ஆனால் அங்கு கண்டெடுக்கப்பட்டவர்களில் சுமார் 30% பேர், அதாவது சுமார் 170 பேர் பெரியவர்கள் என்று அறிக்கையே மதிப்பிடுகிறது. இத்தனை பெரியவர்கள் ஏன் தகனம் செய்யப்படாமல் புதைக்கப்பட்டனர் என்பது குறித்து அந்த அறிக்கை எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லை.
- எலும்புக்கூடு எண் 367 உடன் ஒரு நாணயம் கிடைத்தது. அது 1870ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டது என்றும், ஒரு நாணயத்தின் அச்சுத் தேதியை வைத்து மட்டும் புதைக்கப்பட்ட தேதியைச் சொல்ல முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அங்கு கிடைத்த பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பட்டன்கள், ரப்பர் துண்டுகள் மற்றும் இரண்டு பாலித்தீன் மாலைகள் போன்றவற்றிற்கு இதே வாதம் பயன்படுத்தப்படவில்லை. 1900 களில் தான் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு வருகிறது. அதற்குப் பிறகாக புதைப்பு மட்டுமே சாத்தியமாயிருக்க முடியும். ஆனால் அறிக்கையில் இது குறித்து பேசப்படவில்லை.
- மேலும், தகன மேடைக்கு அருகில் கிடைத்த சாம்பல் அடுக்கில் 1994ஆம் ஆண்டு வரையிலான நாணயங்கள் இருந்தும், அந்த மேடையை அடக்கங்களுடன் அறிக்கை தொடர்புபடுத்தவில்லை.
- காலத்தைக் கண்டறியும் கதிரியக்கக் கார்பன் பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை.

அங்கு கிடைத்த மாதிரிகளைப் பரிசோதனைக்காக வெளிநாட்டிற்கு கார்பன் பரிசோதனைக்கு அனுப்புமாறு குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தைக் கேட்டுள்ளது. 1950 க்குப் பிறகான எச்சங்களில் காலத்தைக் கணிக்கும் நம்பகத்தன்மை கொண்ட விசாரணை வேண்டுமென மனித உரிமைகள் ஆணைக்குழுவும் பரிந்துரைத்துள்ளது.
செம்மணி குறித்த சோமதேவாவின் முந்தைய அறிக்கைகள் இப்போதைய அறிக்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தன. ஜூன் 2025-ல் அவர் அல் ஜசீரா ஊடகத்திடம் இது ஒரு கூட்டுப் புதைகுழியாக அடையாளம் காணலாம் என்றும் மேலும் விசாரணை தேவை என்றும் கூறினார். ஒரு மாதம் கழித்து அவரது இரண்டாவது இடைக்கால அறிக்கையில், அவ்விடத்தில் குற்றச் செயல்பாடு நடந்ததற்கான அறிகுறிகள் இருந்ததாகவும், சடலங்கள் வழக்கமான முறையில் புதைக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். ஆனால் தற்போதைய மூன்றாவது அறிக்கையில், அது முறையான அடக்கம் போல் தெரிகிறது என்று மாற்றிச் சொல்லியுள்ளார்.
மனித உரிமைகள் ஆணையம் 2025 ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் யாழ்ப்பாணத்திற்கு வந்து விசாரணை நடத்திவிட்டு, செப்டம்பர் 2025-ல் தனது அறிக்கையை வெளியிட்டது. நீதித்துறை சார்ந்தவர்கள், தொல்லியல் குழுவின் சோமதேவ், காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் ஆகியோரைச் சந்தித்துப் பேசியது.
அவர்கள் அளித்த அறிக்கையில், சடலங்களின் உடல்களில் ஆடைகள் இல்லை, எச்சங்கள் அருகருகே இருந்தன, சுமார் 2 அடி ஆழத்திற்குள்ளாகவே புதைப்புகள் நடந்துள்ளன போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளனர்.
ராணுவம், காவல்துறை இந்த விசாரணையில் இருந்து முற்றிலும் விலக வேண்டும், குடும்பத்தினர் யாரையும் யாரும் மிரட்டக்கூடாது என்று வலியுறுத்தினர். வெளிநாட்டு நிபுணர்களை வரவழைக்க வேண்டும், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்காக ஒரு DNA வங்கியை அமைக்க வேண்டும், அரசு அதிகாரிகளால் செய்யப்படும் கடுமையான குற்றங்களை விசாரிக்க ஒரு சுதந்திரமான அலுவலகத்தை நிறுவ வேண்டும் என்று பரிந்துரை செய்தனர்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இந்த இடைக்கால அறிக்கையை, வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தமிழ் உறவினர்கள் நிராகரித்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட சங்கத்தின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசி, நவம்பர் 16 ஆம் தேதி அந்த இடத்தில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் தங்களுடன் தமிழ் அரசியல் கட்சிகள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகம் இணைய வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கிடையில் கிருசாந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும், சிங்கள ராணுவ ஊழியர் சோமரத்ன ராசபக்சே, இந்த சடலங்கள் 1996 களில் ராணுவத்தினால் கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்கள்தான் என்று இந்த அறிக்கை வெளிவந்த பின்பும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த செய்தியை வீரகேசரி இதழ் வெளியிட்டுள்ளது. இவர் 300-400 வரையிலான தமிழர்களின் உடல்களை நானே புதைத்தேன் என்று வாக்குமூலம் அளித்தவர். சிங்கள உயர் அதிகாரிகள் கொன்று தந்த சடலங்களை புதைக்கும் வேலையை மட்டுமே நாங்கள் செய்தோம் என்று கூறியவர். சிங்கள உயர் அதிகாரிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செம்மணி என்பது வெறும் ஒரு புதைகுழி அல்ல. அது 1996 -களில் 500-க்கும் மேற்பட்ட தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையின் நீட்சி. அதில் பெரும்பாலோர் குழந்தைகள். கைப்பையுடன், பால் குப்பியுடன், செருப்புடன் பச்சிளம் குழந்தைகள், பள்ளி சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் எனப் பாராமல் கை கட்டப்பட்டு, தலை வெட்டப்பட்டு, ஆடைகள் இன்றி புதைத்த கொடுங்காலத்தின் சாட்சியங்கள்..
சிங்கள அரசால் அமைக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வாளரின் அறிக்கையோ, இதை சாதாரணமாக, இயற்கையாக இறந்த பிணங்களை அடக்கம் செய்த இடம் என்று காட்ட முயற்சிக்கிறது. பெரும் முரண்பாடுகளுடன் உள்ள அறிக்கை குழந்தையின் பள்ளிப் பையை மறைத்திருக்கிறது, கை கட்டப்பட்ட உடலை, தியான நிலை என்று சொல்கிறது. தலையில்லா உடலைப் பற்றி பேசாமல் விட்டிருக்கிறது.
சிங்கள இனவெறி அதிகாரிகளால், எந்த ஆயுதமும் அற்ற அப்பாவித் தமிழர்கள் மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட உண்மை வெளிவந்து, ஒரு வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் அதை மூடி மறைக்க, சிங்கள அரசு தனது ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு இவ்வளவு மெனக்கெடுகிறது.
வலதுசாரி அரசாக இருந்தாலும் சரி, இடதுசாரி அரசாக இருந்தாலும் சரி, இலங்கையில் ஆட்சியைப் பிடிக்கும் எந்த அரசும் பௌத்த பேரினவாத அரசாகவே ஆட்சி நடத்துகிறது. தமிழர்களின் நீதிக்கு அது ஒருபோதும் குரல் கொடுக்காது என்பதற்கு, செம்மணி புதைகுழி அவலத்தை மூடி மறைப்பதே சான்றாக உள்ளது.
தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை உண்மையை மறைக்க இன்னும் எத்தனை அறிக்கைகளை சிங்கள அரசு கொண்டுவரப்போகிறது? காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு நீதி எப்போது கிடைக்கப் போகிறது? என்பதே சர்வதேச சமூகத்தை நோக்கிய உலகத் தமிழர்களின் கேள்வியாக எழுந்து கொண்டே இருக்கிறது.