“கடல் சூழ்ந்த இந்தப் பரந்த உலகத்தைத் தம் உழைப்பாலும் வலிமையாலும் வென்று, புகழோடு தனித்து ஆட்சி செய்த மாவீரர்களின் வாரிசே” எனப் பொருள்படும் இப்பாடலுக்கு இணையாக நம் சமகாலத்தில் வாழ்ந்தவரே நம் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள்.
ஒரு இனம் யாரை நினைவில் வைத்துக் கொள்ள விரும்பும்? அந்த இனத்தின் இழிவை நீக்க போராடியவரை, அந்த இனத்தின் உரிமையை உரக்க சொன்னவரை, அந்த இனத்தின் பகைவர்களை நேருக்கு நேர் நின்று எதிர்த்தவரை. ஈழத்தை பொறுத்தவரையில் இவை அனைத்தும் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு தோழர் பிரபாகரனையே குறிக்கும்.
தமிழீழத்தின் அமைதிவழி விடுதலைப் போராட்டம் 1976-க்குப் பிறகாக ஆயுத வழிக்கு மாறிய காலகட்டத்தில் எண்ணற்ற ஈழப் போராளிக் குழுக்கள் தோன்றின. அவற்றுள் மேதகு பிரபாகரன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் ஒன்று. இந்திய அமைதிப்படை ஈழப் போராளிக் குழுக்களுக்குள் உள்முரண்களை ஏற்படுத்தி புலிகள் இயக்கத்தை தனிமைபடுத்தவும், தலைவர் பிரபாகரனை கொலை செய்யவும் திட்டமிட்ட போது, அத்தனை சதிகளையும் முறியடித்து தனிப் பெரும் ஆற்றலாக ‘புலிகள் தாகம், தமிழீழத் தாயகம்’ என்று முழங்கியவர் பிரபாகரன் அவர்கள்.
பிரபாகரன் தன்னையும் புலிகள் இயக்கத்தையும் ஈழ மக்களில் ஒரு பகுதியாகவே கருதினார். “போராட்டத்தில் தனித்து நிற்கிறீர்களா?” என்று கேட்டபோது, “இல்லை, தமிழ் மக்கள் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள்” என்றார். “சாதாரண வாழ்க்கை வாழவில்லையே என்று வருந்துகிறீர்களா?” என்று கேட்டபோது, “சாதாரணமாக வாழ லட்சக்கணக்கானோர் உள்ளனர். நாங்கள் உயர்ந்த இலட்சியத்திற்காக போராடுகிறோம். அதுவே எங்களுக்கு முழு நிறைவு” என்று பதிலளித்தார்.
‘தமிழினமே என் குடும்பம்’ என்று வாழ்ந்தவர் மேதகு பிரபாகரன். அவருக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இளம்வயதோடு முடிந்து போனது. ஈழ விடுதலை முழக்கமே அவருக்கு உயிர் மூச்சாக இருந்தது.
அதனால்தான் பாவலரேறு பெருஞ்சித்திரனார்,
“ஓ! பிரபாகரனே! கதிர்க் கையனே!
தமிழீழத்தின் அடிமையிருள்
போக்க வந்த வீரத்திருச்சுடரே!
தமிழினத்தின் தன்மான ஒளிவிளக்கே!”
என்று புகழந்திருந்தார்.
தலைவர் பிரபாகரனை திட்டமிட்டே வன்முறை மனம் கொண்டவர் போல் சித்தரிக்கும் வேலையை இந்திய ஊடகங்கள், குறிப்பாக பார்ப்பன ஊடகங்கள், திட்டமிட்டு செய்தன. மேதகுவை பேட்டி கண்ட ‘இந்து’ ராம் “இரக்கமின்மை, மானிடப் பண்பு குறைபாடு கொண்டவரா நீங்கள்?” என்றெல்லாம் கேள்வியை முன்வைத்தார். “நடைமுறை வாழ்க்கையில் சிறந்த ஒழுக்கத்தையும், நன்நடத்தையையும் கடைபிடிப்பவர்கள் நாங்கள். எங்கள் இயக்கத்தின் இரக்கமற்றத் தன்மைகள் போர்க்களத்தில் மட்டுமே காணக்கூடியது” என்று கூறி ‘இந்து’ ராமின் முகத்தில் கரியை பூசினார் மேதகு பிரபாகரன்.
ஆம். மேதகு பிரபாகனின் போர்க்கள ஆளுமை சிறப்புக்குறியது. போரறிவு, பேரறிவும் ஒருங்கே பெற்ற அவர் நூல்களை விரும்பி வாசித்தவர். “சின்ன வயதிலிருந்தே நானொரு புத்தகப்பிரியன். எனது இளம் வயதில் அதிக பொழுதுகள் நல்ல நூல்களுடனேயே கழிந்தன. அதிலும் சரித்திர நாவல்களையும், வரலாற்று நூல்களையும், வீரபுருஷர்களின் வாழ்க்கைச் சரிதங்களையுமே நான் விரும்பிப் படித்தேன். கைச்செலவுக்காக என் வீட்டார் எனக்கு வழங்கிய பணத்தை எல்லாம் புத்தகங்கள் வாங்குவதிலேயே செலவிட்டேன். புதிய புதிய நூல்களை வாங்கிப் படிப்பதில் எனக்குத் திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.” என்று கூறியிருந்தார்.
கலை இலக்கியத்தின் மேல் மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் கொண்டவர் மேதகு பிரபாகரன் அவர்கள். தன் இயக்கத்தின் போராளிகளுக்கு இலக்கியங்களை சொல்லிக் கொடுக்க தமிழ்நாட்டில் இருந்து அறிஞர்களை வரவழைத்தவர். ஓவியர் புகழேந்தி அவர்களை ஈழத்திற்கு அழைத்து வந்து இயக்கப் போராளிகளுக்கு ஓவியப்பயிற்சி கொடுக்கச் செய்தார். “கலையும், இலக்கியமும் வாழ்க்கையை கருப்பொருளாகக்கொண்டவை. வாழ்க்கையைத் தரிசித்து நிற்பவை. வாழ்வனுபவத்தைக் குறியீடு செய்பவை. இன்று எமது வாழ்வும் வாழ்வனுபவமும், விடுதலை வேண்டிய ஒரு போராட்டத்துடன் பிணைந்து நிற்கிறது. இந்த போராட்ட சூழ்நிலையே எமது வாழ்வை நிர்ணயிப்பதாகவும் அமைந்துவிட்டது! எனவே, எமது கலை, இலக்கியங்கள் இந்தப் போராட்ட வாழ்வின் தன்மைகளை, அந்த வாழ்வில் பிறக்கும் ஆழமான அனுபவத் தழும்புகளை, உணர்வலைகளை சித்தரித்துக்காட்ட வேண்டும்” என்ற அவரது கலை குறித்தப் பார்வை அவரைப் பற்றிய மற்றொரு பரிமாணத்தை காட்டும்.
மேதகு பிரபாகரனின் அறிவு எப்பொழுதும் ஈழத்தை பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாலும், மனது ஈழத்தின் குழந்தைகளையே எண்ணிக் கொண்டிருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாக போரினால் பாதிப்படைந்த குழந்தைகள், மாவீரர்களின் குழந்தைகள் அனைவரையும் பாதுகாப்பதை ஈழப் போராட்டதின் ஒரு பகுதியாகவே மேதகு பார்த்தார். அதற்காக செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை உள்ளிட்ட கல்விக்கூடங்களை உருவாக்கிவைத்தார், அவை வெறும் கல்விக் கூடங்களாக மட்டும் இல்லாமல் மேதகு அவர்களின் குடும்ப இல்லமாகவே மாறி போயின.
இது பற்றி ஈழம் முழுவதும் பயணம் செய்து ஈழப்போராட்ட ஓவியக் கண்காட்சி நடத்திய ஓவியர் புகழேந்தி அவர்கள் தனது ‘தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும்‘ நூலில், “செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலை குழந்தைகளின் எதிர்காலத்தின் நம்பிக்கை என்பது ‘தலைவர் மாமா’ தான். இது அவர்களுக்கு ஒரு பலமாக இருக்கிறது. தங்களை சீண்டும் மற்ற வசதியான பிள்ளைகளிடம் ‘நாங்கள் தலைவர் மாமாவின் பிள்ளைகள்’ என்று சொல்லிவிடுகிறார்கள்” என்று பதிவு செய்துள்ளார்.
இளைய தலைமுறையின் கல்வி மீது மேதகு அவர்கள் பெரும் அக்கறை கொண்டவர். “போராட்டம் கல்விக்கு கவசம், கல்வி போராட்டதிற்கு காப்பரண்” என்று கூறியவர். அத்தோடு நில்லாமல் ஈழ விடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்துவது கல்வியாளர்களின் தேசியக்கடமை என்று கூறினார்.
தமிழீழ தேசத்தின் எதிர்காலமாய் மேதகு இளம் தலைமுறையினரையே பார்த்தார். “நான் ஒரு கனவு காண்கிறேன். அது நனவாக வேண்டும். எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றம் கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக, தேசப்பற்றாளர்களாக, போர்க்கலையில் வல்லுனர்களாக. நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய, புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக, நிர்வாகிகளாக, ஆட்சியாளர்களாக உருப்பெற வேண்டும்” என்று கூறிய மேதகு தமிழீழத்தை ஒரு சோசலிச சமூகமாகவே படைக்க விரும்பினார். ஈழம் விடுதலை அடைந்த பின்பு தானே ஆட்சி செய்யவேண்டும் என்ற எண்ணம் துளி கூட இல்லாமல் வாழ்ந்த தன்னலமற்ற தமிழினத் தலைவர் மேதகு பிரபாகரன்.
ஏனென்றால் ஈழத்தின் எதார்த்தம் தலைவர் பிரபாகரனுக்கு நன்றாகத் தெரியும். புலிகள் இயக்கத்தில் இயங்கியவர்களை தவிர்த்து தன் தலைமுறையும் சரி, தன் முன்னோர் தலைமுறையும் சரி – சாதி மத குப்பைகளை தூக்கிப் பிடிப்பவையே என்று நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார், அதற்காகவேதான் விடுதலைபெற்ற தமிழீழத்தை அடுத்த தலைமுறையின் கையில் ஒப்படைக்க விரும்பினார். கவிஞர் இன்குலாப் அவர்களின் ஈழக்கவிதை ஒன்று இதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது.
பெரியவர்கள்
சாதி மத இனக்
கரிக்கோடுகளை
இன்னும் கிறுக்கலாம்
தங்கள் மனங்களில்
பிஞ்சு எழுத்துகளோ
உன் சுவற்றில் இப்படி :
“பிரபாகரன் என்றும் எம்முடன்”
தமிழினம் தந்தைப் பெரியாருக்குப் பின் அடைந்த மாபெரும் தலைவன் மேதகு பிரபாகரன் அவர்களே. இன்னும் கூறுவோமானால் தந்தைப் பெரியாருக்கும் மேதகு பிரபாகரனுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. ‘தமிழ்நாடு தமிழருக்கே” என்றார் பெரியார். “தமிழர் தாகம், தமிழீழத் தாயகம்” என்றார் மேதகு. இருவருமே தங்கள் விடுதலை இலக்கிற்கு சாதியை பெரும் தடையாக பார்த்தனர். தங்கள் இயக்கத்தில் சாதிய உணர்வை அறவே ஒழித்தனர். இருவருமே கூட்டாட்சியை மறுத்து ‘சுயநிர்ணய உரிமை கொண்ட தன்னாட்சி தேசத்தை’ முன்வைத்தனர். இருவருமே தம் இறுதிவரை அக்கொள்கையில் சமரசம் செய்து கொள்ளவே இல்லை.
1999 ல் ஈழத்தில் வெளிவந்த ஈழகேசரியில் பதிப்பிக்கப்பட்ட ‘தந்தை பெரியாரும், தம்பி பிரபாகரனும்’ எனும் தொடர் கட்டுரையில் கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டிருந்தது.
“தந்தை பெரியாரையும், தம்பி பிரபாகரனையும் சில துறைகளிலும், சில குணங்களிலும்ஒப்பிட்டுக் காண முடிகிறது. ஒடுக்குமுறை எதிர்ப்பு, தமிழ்த் தேசிய உருவாக்கம் ஆகிய இரண்டும், இருவரையும் விட்டுப் பிரித்தெழுத முடியாத வரலாற்று நிகழ்வுகளாக உள்ளன.
அஞ்சாமை, எந்நிலையிலும் சமரசம் செய்து கொள்ளாத கொள்கைப் பிடிப்பு, எதிரிகளை வீழ்த்தும் சில தந்திர உத்திகளைப் பின்பற்றுதல் ஆகிய குணங்களிலும் ஒத்துப் போகின்றனர் இருவரும். இவ்வாறு கொள்கை ஒப்புமையும், குண ஒப்புமையும் இருவரிடமும் உள்ளமையால்தான், ‘கற்றாரைக் கற்றாரே காமுறுதல்’ போல, தமிழ்நாட்டில் உள்ள பெரியாரியப் பற்றாளர்களில் மிகப் பெரும்பான்மையோர், ஈழ விடுதலைப் போருக்கும், அப்போரை நடத்திக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாக உள்ளனர்.”
இதன் காரணமாகத்தான் எந்தனை புல்லுருவிகள் வந்தாலும் தந்தையும் தனையனும் யாராலும் வீழ்த்த முடியாத அழியாப் புகழ் பெற்று தமிழினத்தின் ஒப்பற்றத்தலைவர்களாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர்.
இன்று தலைவர் மேதகு பிரபாகரனின் பிறந்தநாள். தமிழினத்தலைவரின் பிறந்தநாள். உலகத்தமிழர் அனைவரும் எண்ணி எண்ணி உவகையுற உகந்த நாள்.
இந்நாளில் தமிழ்த்தேசியம் காப்போம்! தமிழினத்தின் உரிமையை மீட்போம்!!