இன உணர்வு கொள் தமிழா! – பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி உரை

பெரியார் 148வது பிறந்தநாள் மற்றும் கேணல் திலீபன் 39வது நினைவுநாள் ஒட்டி எம்ஜிஆர் நகரில் மே 17 இயக்கம் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சி தொடக்கத்தில் பாடல், சிலம்பம் செய்து குழந்தைகள் அசத்தினர். மேலும் மே 17 இயக்கத்தின் தோழர்கள் பெரியாரின் சனாதன ஒழிப்பு, பெண்ணிய பார்வை, இந்தி எதிர்ப்பு, அண்ணாவின் பணத்தோட்டம் குறித்தும், மார்வாடி பார்ப்பனிய கலாச்சார திணிப்பு குறித்தும், வடவர் ஆதிக்கம் & பண்பாடு திணிப்பு, ஆர் எஸ் எஸ் பாஜகவின் தமிழர் வெறுப்பு, ஈழ மக்களுக்கு இந்திய அரசு செய்த துரோகம், கேணல் திலீபன் உண்ணா நிலை போராட்டம் மற்றும் மக்களுக்காக போராடிய மே 17 இயக்கம் நடத்திய போராட்டங்கள் குறித்தும் பொது மக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.

இறுதியில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை:

அன்பான சகோதரர்களே, பெரியவர்களே, தாய்மார்களே, தந்தை பெரியாரினுடைய பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படுகின்ற பொதுக்கூட்டம் இது. தந்தை பெரியாரினுடைய பிறந்தநாள் என்பது செப்டம்பர் 17. செப்டம்பர் 17 அன்று நடத்தாமல் ஏன் இன்று நடத்துகிறீர்கள் என்று கேட்டால், செப்டம்பர் 17 அன்று விநாயகர் சிலையை ஊர் முழுவதும் வைத்திருக்கிறார்கள், அப்போது நாங்கள் (மே 17) கூட்டம் நடத்த அனுமதி தர முடியாது என்று காவல்துறை சொன்னதன் காரணத்தினால், மேலும் விடுதலைப் புலிகளுடைய ஒப்பற்ற தலைவன் திலீபனுடைய நினைவுநாளையும் சேர்த்து இந்த பொதுக்கூட்டத்தை நடத்திவிடலாம் என்று முடிவு செய்தோம்.

நமக்குத் தெரிந்த காலத்திலிருந்து விநாயகர் சதுர்த்தி என்றால் வீட்டில் விநாயகரை கொண்டாடுவோம், கும்பிடுவோம், கொழுக்கட்டை சாப்பிடுவோம், சாயங்காலம் நண்பர்களுடன் பிரியாணி சாப்பிடுவோம். ஆனால் இன்றைக்கு விநாயகர் வீட்டை விட்டு வெளியில் வந்து உட்கார்ந்திருக்கிறார். தமிழ்நாட்டில் எந்த சாமியும் கோயிலை விட்டு வெளியில் வீதிக்கு வருவதில்லை. ஊர் ஊராக நாம் மாரியம்மன் விழாவை கொண்டாடுகின்றோம், காலம் காலமாக கொண்டாடுகின்றார்கள் தமிழர்கள். என்றைக்கு மாரியம்மன் இப்படி வீதி வீதியாக, மூலை மூலையாக உட்கார்ந்திருக்கிறது? ஆனால் 30 வருடமாக பிள்ளையாரை உட்கார வைத்திருக்கிறார்கள்.

இத்தனை பிள்ளையார் எதற்கு? இன்றைக்கு பிள்ளையார் சிலையை கொண்டு போய் கடலில் கரைக்கிறேன் என்று சொல்லி கலவரம் பண்ணிக்கொண்டிருக்கிறான். எந்த கோயில் அர்ச்சகரோ, தர்மகர்த்தாவோ பிள்ளையாரை கொண்டு வந்து வீதியில் உட்கார வைக்கவில்லை. இந்த பிள்ளையாரை வீதியில் கொண்டு வந்து உட்கார வைப்பது தமிழர்களுக்கு சம்பந்தமே இல்லாத, மார்வாடி கும்பலிடத்தில் பணத்தை வாங்கிக்கொண்டிருக்கக்கூடிய இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற கும்பல்தான்.

நான் கேட்கிறேன், ஒரு அமைப்பு நடத்துகின்ற பிள்ளையாயார் ஊர்வலத்திற்கு காவல்துறை எதற்காக அனுமதி கொடுத்தது? ஊர் முழுவதும் எதற்கு பிள்ளையார் சிலை? காவல் தெய்வத்தை ஊருக்கு வெளியே வைத்தோம், இன்று பிள்ளையாரை வைத்து கலவரத்தை செய்கிறார்கள். சமூகத்தில் ஒற்றுமையை கொண்டு வருவதற்கு பிள்ளையார் சிலை தேவையில்லை. மாரியம்மன் விழாவுக்கு முஸ்லிம்களும் வருகிறார்கள், கிறிஸ்தவர்களும் ஆதரிக்கிறார்கள். முருகனுக்கு நேர்த்திக்கடன் வைத்து நடந்து போனால், அதற்கு போகின்ற வழியில் இருக்கக்கூடிய மசூதிகள் திறந்து விடப்படுகின்றன. முருக பக்தர்களுக்கு தேவைப்படுகிற உதவிகளை முஸ்லிம்கள் செய்கிறார்கள், கிறிஸ்தவர்கள் செய்கிறார்கள். வேளாங்கண்ணிக்கு நடந்து செல்லக்கூடிய பக்தர்களுக்கு இந்துக்கள், தமிழர்கள் அவர்களுக்கு தேவைப்படுகின்ற உதவியை செய்கிறார்கள்.

இப்படி இன்னொருத்தருடைய கடவுள் நம்பிக்கையின் மேல் நமக்கு எந்த வெறுப்புணர்ச்சியும் இல்லாமல், எந்த சாமியை வேண்டுமானாலும் கும்பிடு என்று சொல்லிக்கொண்டு எல்லாரையும் ஆதரிக்கக்கூடிய தமிழ்நாட்டிலே, பிள்ளையார் சதுர்த்தி நடத்துகிறேன் என்று ஊர் ஊருக்கு பிள்ளையார் சிலையை வைத்து முஸ்லிம்களுக்கு எதிராக, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எதற்கு இத்தனை பிள்ளையார் சிலையை வைக்கிறீர்கள்? ஊர்வலம் போகிறவன் சும்மா போகிறானா? மசூதி மேல் எவனாவது கல்லை எடுத்து எறிவான் என்று சொல்லி அதையெல்லாம் காவல்துறை திரை மூடி மறைக்கக்கூடிய நிலைமை.

நாம் மாரியம்மன் விழாவுக்கோ, முருகனை கும்பிடப் போகும்போதோ அல்லது நம் சாமியை கும்பிடப் போகும்போதோ இந்த மாதிரி மசூதியை மறைத்து வைக்கிறோமா? இவர்கள் பிள்ளையார் ஊர்வலம் போகும் போது மட்டும் மசூதியை மறைத்து வைக்க வேண்டியிருக்கிறது. இவன் கலவரம் பண்ணுகிறான். கல்லை எடுத்து எறிபவன் பக்தன் கிடையாது, அவன் ரவுடிதான், கலவரம் செய்யக்கூடிய கும்பலை சார்ந்தவன்தான். அதனால்தான் அடுத்தவன் வழிபடும் இடத்தில் கல்லை எடுத்து எறிகிறான்.

இங்கு எத்தனையோ கடைகள் இருக்கின்றன. எங்கள் தோழர்கள் கடந்த ஒரு வாரத்தில் உங்கள் கடைகளுக்கெல்லாம் வந்து “இந்த மாதிரி பொதுக்கூட்டம் நடத்தப் போகிறோம், எங்களுக்கு உதவுங்கள்” என்று கேட்டிருப்பார்கள். நீங்கள் இயன்ற அளவு பணம் கொடுத்திருப்பீர்கள். ஆனால் நாங்கள் பணத்தை கட்டாயப்படுத்தி வாங்கியிருப்போமா? நாங்கள் எதை செய்கிறோம் என்று சொல்லி நன்கொடை கேட்டு வாங்கினோம். ஆனால் விநாயகர் சதுர்த்தி நடத்துவதற்கு எல்லாரிடமும் காசு வாங்கவில்லையா? இந்த விழா ஒரு நாள் வைத்தால் பரவாயில்லை, ஒன்பது/பத்து நாள் வைக்கிறான். பிறகு கடலுக்கு கொண்டு போய் அங்கே கரைக்கிறேன் என்று சொல்லி, அங்கே போய் சிகரெட்/சரக்கு குடிக்கிறான், இதுபோன்று தீய வேலையும் செய்கிறான். இதுதான் பக்தியா? இந்த லட்சணத்தில் இதையெல்லாம் இந்துக்களின் பண்பாடு என்று சொல்கிறான்.

மிக முக்கியமான விடயம் ஒன்றை கவனிக்க வேண்டும். இந்துக்கள் பண்டிகைக்கு கறி சாப்பிடக்கூடாது என்று ஆரம்பித்திருக்கிறான். நான் கேட்கிறேன், எந்த பண்டிகைக்கு நாங்கள் கறி சாப்பிடாமல் இருந்தோம்? ஆயுத பூஜைக்கு சாப்பிடுகிறோம், விநாயகர் சதுர்த்திக்கு சாப்பிடுகிறோம், தீபாவளிக்கு சாப்பிடுகிறோம். கறி சாப்பிடாமல், அசைவம் சாப்பிடாமல் தமிழன் என்றைக்கு பண்டிகை கொண்டாடியிருக்கிறான்?

தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் மூன்றே மூன்று சதவீதம் பேர் மட்டும்தான் அசைவம் சாப்பிட மாட்டார்கள். அவர்களை பிடித்து வாயில் ஊட்டவில்லை. நீ சாப்பிடவில்லை என்றால் உனக்கு பிடிக்கவில்லை. எங்களுக்குப் பிடித்ததை நாங்கள் சாப்பிடுவோம்.

முருகனை பாராட்டி திருமுருகாற்றுப்படை இலக்கியத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடி வைத்திருக்கிறான். அதில் முருகனுக்கு எப்படி படையல் போட வேண்டும் என்று சொல்கிறான். முருகனுக்கு சர்க்கரை பொங்கல் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. முருகனுக்கு என்ன வைக்க வேண்டும் என்று சொல்கிறான் தெரியுமா? குன்றுதோறும் ஆடுகின்ற முருகன் குறிஞ்சி நிலத்தினுடைய தலைவன். குறிஞ்சி நிலம் மலையும், மலை சார்ந்த நிலம். சர்க்கரை பொங்கல் சாப்பிட்டால் எப்படி மலையில் ஏறி இறங்க முடியும்? அதனால்தான் திருமுருகாற்றுப்படையிலே அவன் சொல்கின்றான், “முருகனுக்கு ஆட்டை அறுத்து, அதிலிருந்து வருகின்ற ரத்தத்தை எடுத்து சோற்றிலே கலந்து பிசைந்து அந்த முருகனுக்கு படையல் போடு” என்று சொல்லியிருக்கிறான். நான் சொல்லவில்லை.

மலையில் வாழக்கூடிய வேடுவர் இனத்தை சேர்ந்தவளைத்தான் முருகன் திருமணம் செய்தார், வள்ளி-முருகன் கதை நம் எல்லோருக்கும் தெரியும். வள்ளி யார்? வேட்டையாடும் இந்த சமூகத்தை சார்ந்தவர். அப்போது வேட்டையாடி வாழக்கூடிய முருகனுக்கு எதற்கு சைவம்? சொல்லுங்கள் பார்ப்போம். முருகனுக்கு விழா கொண்டாட வேண்டும் என்றால் அசைவ உணவு வைத்துத்தான் முருகனுக்கு விழா கொண்டாடியிருக்கிறார்கள். தமிழனுடைய மரபை மறந்து, ஐயர் சொல்லிய சட்டத்தை திணித்து உட்கார்ந்திருக்கிறான். தமிழர்களுடைய கடவுளுக்கு அசைவ உணவுதான் படையல் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இன்றைக்கு சைவம் சாப்பிட வேண்டும் என்று மனதில் ஏற்றி, அதெல்லாம் புனிதம் என்று சொல்கிறான். பிள்ளையார் தினத்தில் கறி சாப்பிட்டேன், பிரியாணி சாப்பிட்டேன் என பதிவு போட்டேன். எப்படி பிள்ளையார் தினத்தில் கறி சாப்பிடலாம் என்று சங்கி கும்பல் குதிக்கிறது. ஏன் அசைவம் எவனும் தின்னவே இல்லையா? இந்த பிள்ளையார் அருகில் உட்கார்ந்திருக்கிறானே, அவன் சாராயம் குடிக்கிறானே, அவனே பிரியாணி தின்னவில்லையா? அப்போதெல்லாம் புனிதம் போகவில்லையா? ஏதோ அசைவம் சாப்பிட்டால் அசிங்கமானது என்று வன்மத்தோடு பேசுகிறான். அசைவம் அசிங்கம் என்று மட்டும் சொல்லவில்லை, அசைவம் சாப்பிடுகிற நம்மை அசிங்கமானவர்கள் என்று சொல்கிறான்.

தமிழ்நாட்டில் இன்றைக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? வாரத்தில் ஒரு நாள் கறி சாப்பிட வேண்டாம் என்ற நிலைமை மாறி, வாரத்தில் ஒரு நாள் மட்டும் கறி சாப்பிடு என்ற நிலைமையை  கொண்டு வந்துவிட்டார்கள். என்னவென்றால், இன்றைக்கு சஷ்டி, நாளைக்கு விரதம், இன்றைக்கு சாய்பாபா என்று புதிது புதிதாக சொல்லி அசைவ உணவே சாப்பிடாத நிலை இன்றைக்கு வந்திருக்கிறது. அதை பெருமையாக பேசுகிறார்கள். நீங்கள் செய்கிற வேலைக்கு, உழைக்கிற உழைப்புக்கு உடலிலே ஆற்றலுக்கு உனக்கு அசைவம் இருந்தால்தான் வேலை செய்ய முடியும். அதிகமாக உழைக்கிறாய், வேலை செய்கிறாய் எனில், உனக்கு புரதம் எதில் கிடைக்கும்? சர்க்கரை பொங்கலில் கிடைக்குமா? வெண் பொங்கலில் கிடைக்குமா? எதில் கிடைக்கும்? கறியில்தான் புரதம் கிடைக்கும், அதுதான் உனக்கு தேவை. அவனவன் வேலைக்கு ஏற்றவாறு அவனவன் சாப்பிட வேண்டும்.  உன் வாழ்க்கைக்கு அசைவ உணவு இல்லாமல் வாழ முடியாது. கோயிலுக்கு சென்றால் அசைவம் சாப்பிடக்கூடாது என்று சொல்லி நம்ப வைக்கிறான். ஏமாறாதே, ஏமாறாதே. உன் உடம்பு முக்கியம், அதைப் பார். உன் மரபு முக்கியம், அதையும் பார்.

நம் மரபில் என்ன இருக்கிறது? அசைவ உணவை எடுத்து வேட்டையாடிய சமூகத்தை சார்ந்தவர்கள் தான் இந்த நிலத்தில் வாழ முடியும். அந்த வேட்டை சமூகத்தில் இருந்து வந்த முருகனைத்தான் கடவுளாக கும்பிடுகிறோம். ஆனால் முருகனுக்கு சுப்பிரமணியன் என்று  பெயர் வைத்துவிட்டான். சுப்பிரமணியன் என்கிற பெயர் தமிழ்ப்பெயர் அல்ல. அது பிராமணர்கள் வைத்த பெயர். முருகன் தான் தமிழ்ப்  பெயர். ஒரு சாமியை வைத்துக்கொண்டு இத்தனை வேலையை பார்த்திருக்கிறார்கள்.

அன்பானவர்களே, தந்தை பெரியாரை எப்படி நாம் புரிந்துகொள்வது? தந்தை பெரியாரை பற்றி அதிகமாக பொய்யை பேசிக்கொண்டிருக்கிறார்கள். பெரியாரைப் பற்றி ஒரு உண்மை செய்தி வருவதில்லை,  ஆனால் நூறு பொய்கள் வருகின்றன. எந்த பொய்யும் உண்மை இல்லை. பிஜேபிக்காரன் பொய் பரப்புகிறான், நாம் தமிழர் கட்சிக்காரன் பரப்புகிறான். பெரியாரை கண்டு ஏன் பயப்படுகிறார்கள் என்பதுதான் முக்கியம். பெரியார் இறந்து 50 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது, இன்னும் பெரியாரை கண்டு பயப்படுகிறார்கள். நாம் மழை பெய்தால் குடை விரிப்போம், வெயில் அடித்தால் குடை விரிப்போம். வெயில் இல்லை என்றால் குடையை மடக்கி வைப்போம், மழை நின்றால் குடையை மடக்கி வைப்போம். அதனால் குடைக்கு மரியாதை இல்லை என்று அர்த்தம் இல்லை. எப்பொழுதெல்லாம் தேவையோ அப்பொழுதெல்லாம் குடைதான் உங்களை மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் காக்கிறது. அதுபோலத்தான் தந்தை பெரியார் எப்போதும் இந்த மண்ணை காக்கக்கூடிய கருப்பு குடையாக உயர்ந்து கொண்டே இருப்பார்.

அவர் சொல்வது நடக்கிறதா இல்லையா? நீ யாருக்கு வரி கட்டிக்கொண்டிருக்கிறாய்? டெல்லிக்கு கட்டிக்கொண்டிருக்கிறாய். உன் ஊரில் உன் பிள்ளை மருத்துவ கல்லூரியில் படிக்க முடியவில்லை, ஏன் என்றால், டெல்லிக்காரன் தேர்வு வைக்கிறான். அதில் தேர்ச்சியடைந்தால்தான் உன் பிள்ளைக்கு உன் ஊரில் உள்ள கல்லூரியில் மருத்துவராக முடியும் என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.

ஜிஎஸ்டி வரி போட்டான். ஜிஎஸ்டி வரியில் பணம் நமக்கு வருவதில்லை, எங்கே போகிறது? டெல்லிக்காரனுக்கு போகிறது. டெல்லிக்காரனுக்கும் நமக்கு என்ன சம்பந்தம்? நம்மை அடித்துக் கொல்லும், இந்த சங்கிகள் சட்டையை பிடித்து கேள்வி கேட்பானா? எதையும் கேட்கமாட்டான்.

தமிழனுக்கு காவேரியில் தண்ணீர் வரவில்லையே, கர்நாடகக்காரன் சட்டையை பிடித்து கேட்பானா? டெல்லிக்காரன் கேட்க மாட்டான். முதல் முறையாக 10 வருடத்தில் தஞ்சாவூரில் குறுவை பயிர் சாகுபடி ஆகவில்லை. அரிசி விலை அதிகமாக காரணம் என்ன? காவேரி தண்ணீர் விடவில்லை. கேட்பதற்கு நாதி இல்லை. தண்ணீர் ஏன் விடவில்லை, ஏன் பயிர் சாகுபடி தஞ்சாவூர் டெல்டாவில் நடக்கவில்லை என்று கேட்பதற்கு நாதி இல்லை.

இப்படி டெல்லிக்காரனால் நமக்கு ஏதாவது நல்லது நடந்ததா? ஒன்றும் நடக்கவில்லை, எதுவும் நடக்கவில்லை. விலைவாசி ஏறி இருக்கிறது, பெட்ரோல் விலை ஏறி இருக்கிறது, வரி ஏறி கிடக்கிறது, எல்லாமே ஏறி கிடக்கிறது. எல்லாம் யாரால்? டெல்லிக்காரனால், டெல்லி சர்க்காரால், இந்திய அரசால். அவனுக்கு வரி பிடுங்குவது மட்டும்தான் வேலையாக இருக்கிறது. ஒரு ரூபாய்க்கு சோப்பு வாங்கினால் வரி கொடுக்கிறீர்கள், ஒரு ரூபாய்க்கு சீப்பு வாங்கினால் 12 பைசா வரி கொடுக்கிறீர்கள், 100 ரூபாய்க்கு மொபைல் சார்ஜ் போட்டீர்கள் என்றால் வரி கொடுக்கிறீர்கள், எல்லாவற்றிற்கும் வரி கொடுக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு தேவைப்படுகின்ற எதையும் டெல்லிக்காரன் செய்யவில்லை.

இதைத்தான் தந்தை பெரியார் அன்றைக்கு சொல்லிவிட்டு போனார். என்ன சொல்லிவிட்டு போனார் என்றால், இந்த டெல்லி கட்டுப்பாட்டிலே நீ வாழ்ந்தால் உன் வாழ்க்கை நாசமாய் போய்விடும், தமிழ்நாடு நிர்மூலமாய் ஆகிவிடும், நீ கொண்டு வந்த முன்னேற்றங்களை எல்லாம் அவர்கள் சிதைத்துவிடுவார்கள். அப்படிப்பட்ட டெல்லி ஆதிக்கத்திலிருந்து வெளியே போ என்று சொன்னார். அதனால்தான் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்றார். அதற்கு அர்த்தம் தெரியுமா?

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு எந்த இடமும், எந்த உரிமையும் இல்லாமல் இருக்கிறோம். நம் ஊரில் இந்தி மொழியில்தான் எல்லா அறிவிப்பும் டெல்லிக்காரன் செய்கிறான். ரயில்வே நிலையத்திற்கு போய் பாருங்கள். முன்பெல்லாம் ரயில்வே பலகையில் பெயர் எழுதும்போது நடுவில் தமிழில் பெயர் இருக்கும். ’சைதாப்பேட்டை’ என்று பெயர் வைத்திருப்பார்கள். ஆனால் இப்போது தமிழ் மேலே எழுதி, இந்திதான் முதன்மையாக பெரிதாக இருக்கிறது. நீங்கள் ரயில்வே நிலையத்திற்கு போனீர்கள் என்றால் தமிழில் எங்கே எழுதியிருக்கிறது என்று தேடிப் பார்க்க வேண்டும்.

ஒன்றிய அரசினுடைய நிறுவனங்கள், மத்திய அரசினுடைய நிறுவனங்களில் எந்த ஊர் பிராந்திய மொழியோ அந்த மொழி பிரதானமாக பெரிதாக இருக்க வேண்டும் என்றே சட்டம் இருக்கிறது. ஆனால் ரயில்வே நிலையத்திற்குப் போய் பாருங்கள், தமிழ்ப் பெயர்களை எல்லாம் வேறு இடத்திற்கு தள்ளிவிட்டு இந்தியில் பெயர் எழுதி வைத்திருக்கிறார்கள். அதை தமிழன் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? அப்படி ஒரு வரலாறு இருக்கிறதா? எங்கள் மண்ணில் இந்தி மொழிக்கு இடமில்லை என்று சட்டையை பிடித்து கேட்ட வரலாறு நமக்கு இருக்கிறது.

நம் ஊரில் நம் மொழிக்கு என்ன இடம், அவன் மொழிக்கு என்ன இடம்? இந்தித்திணிப்பை எதிர்த்து தமிழன் தொடர்ச்சியாக போராடி வந்த பாரம்பரியம் இருக்கிறது. 80 வருடம் முன்பே சண்டை போட்டிருக்கோம். இன்றைக்கு இதே போல இந்தியை திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை இந்த மார்ச் மாதம் நடத்தினோம். ரயில்வே நிலையத்தில் எங்கெல்லாம் இந்தி இருக்கிறதோ, அதையெல்லாம் அழிப்போம் என்று ரயில்வே நிலையத்திற்கு சென்று அங்கே இருக்கக்கூடிய இந்தி எழுத்துக்களை அழித்தோம்.

தமிழ்நாட்டில், தமிழருடைய இடத்திலே தமிழ் மொழி இல்லாமல் முதல் இடத்தில் இந்தி இருக்கிறது, இந்தியை அழி என்று சொல்லி அழித்தோம். அந்த போராட்டத்திலே எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழன் சிவா… அவர் எனக்கு மூத்தவர், அமைப்பினுடைய வழிகாட்டியாக இயங்கியவர், என்னோடு சிறைக்கு வந்தவர், பல போராட்டங்களில் சிறைக்கும் வழக்குக்கும் அஞ்சாமல் முதல் அணியில் நின்றவர். அனைத்து இந்தி எழுத்துக்களையும் அழித்து முடித்துவிட்டோம் என்று உறுதி செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது, ரயிலின் முன்னால் பாய்ந்து, ‘இந்தி ஒழிக, தமிழ் வாழ்க‘ என்று சொல்லி தன் இன்னுயிரை கொடுத்தார் தோழர் சிவா திலீபன்.

தோழர் சிவா திலீபன் மொழிக்காக உயிர் கொடுத்திருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில், பெரியார் பொதுக்கூட்டத்தில் எங்களோடு பங்கெடுத்த தோழன், ஒவ்வொரு போராட்டத்திலும் எங்களோடு நின்ற தோழன் மொழிக்காக உயிரை கொடுத்திருக்கிறார்.

தமிழை புறந்தள்ளி எழுதிய இந்தி மொழியை அழிக்காமல் விடமாட்டோம். எந்த மூலையில் எல்லாம் இந்தி இருக்கிறதோ, அந்த இடத்திலெல்லாம் அழித்து ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் எச்சரிக்கிறோம்.

எதற்காக இந்தியை அழிக்க வேண்டும் என்று சொல்கிறோம்? மொழி வெறுப்பா? இல்லை. இங்கே இருக்கக்கூடிய எல்லா தேர்வையும் இந்தியில் வைக்கிறான், ஆங்கிலத்தில் வைக்கிறான், ஆனால் தமிழ் மொழியில் வைப்பதில்லை. நம் பிள்ளைகள் எல்லாம் இந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ தேர்வு எழுத வேண்டும் என்று கட்டாயம். நம் பிள்ளைக்கு எப்படி எழுத வரும்? நம் பிள்ளை வேறு மொழியில் எழுத வேண்டுமா? இந்தி மாநிலங்களை சார்ந்தவன் அவன் தாய் மொழியில் எழுதுவான். யார் வெல்வார்கள், யார் தேர்ச்சி அடைவார்கள் என்று யோசித்து பார்க்க வேண்டாமா? இந்தி தாய் மொழியாக கொண்டிருக்கிறவன் தேர்வில் தேர்ச்சி பெறுவானா? அல்லது அந்நிய மொழியில் எழுதும் தமிழன் தேர்ச்சி அடைய முடியுமா? யாருக்கு வேலை கிடைக்கும்?

இன்றைக்கு பொதுவாக பேசும்போது இந்தி தொழிலாளர்களை பார்த்து ‘இந்திக்காரன் வந்தான், இந்திக்காரன் வந்தான்’ என்று பேசுகிறார்கள். தவறு. அவன் நம்முடைய கடைகளில் வேலை செய்யக்கூடிய ஒரு கூலித் தொழிலாளி. ஆனால் இந்திய அரசாங்கத்தினுடைய நிறுவனத்திலே யார் வேலை செய்கிறார்கள்? இந்திக்காரன் வேலை செய்கிறான். அந்த இந்திக்காரன் வேறு, இங்கே கூலி வேலை செய்யக்கூடிய இந்திக்காரன் வேறு. இரண்டு பேரும் வேறு வேறு. அதிகாரி அதிகாரத்தில் இருப்பவன். பிழைப்பை தேடி, பொருளை தேடி எடுத்து தன் குடும்பத்தை காக்க வந்த தொழிலாளி ஒரு ஏழை கூலித் தொழிலாளி. இரண்டு பேருக்கும் வித்தியாசம் இருக்கிறது.

நீங்கள் ரயில்வே நிலையத்திற்கு போனீர்கள் என்றால் (இங்கே இருக்கக்கூடிய மாம்பலமோ, சைதாப்பேட்டையோ, நுங்கம்பாக்கமோ, தாம்பரமோ) அங்கே இருக்கக்கூடிய ரயில்வே காவலர் யார் என்று பாருங்கள், இந்திக்காரனாக இருப்பான். சென்ட்ரல் நிலையத்தில் போய் பாருங்கள், பயணச்சீட்டு (ticket) கொடுப்பவன் இந்திக்காரனாக இருப்பான். தமிழ்நாடு முழுக்க ரயில்வே அதிகாரியாக இருக்கக்கூடியவன் இந்திக்காரனாக இருக்கிறான்.

வங்கிக்கு போங்கள், இந்திக்காரன் உட்கார்ந்திருக்கிறான். இந்தியன் பேங்கோ, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியோ, ஸ்டேட் வங்கியோ, பேங்க் ஆப் பரோடாவோ, இந்திக்காரனாக இருக்கிறான். எல்ஐசிக்கு போங்கள், இந்திக்காரன் அதிகாரியாக இருக்கிறான். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு போய் பாருங்கள், இந்திக்காரன் இருக்கிறான். ஆவடி தொழிற்சாலைக்கு போய் பாருங்கள், இந்திக்காரன் இருக்கிறான். ஐசிஎஃப் போய் பாருங்கள், இந்திக்காரன் அதிகாரி. இவர்கள் எல்லாம் அதிகாரிகள். எப்படி நமக்கு வேலை கிடைக்கும்?அதனால்தான் சொல்கிறோம், இந்தியை அழிக்க வேண்டும், இந்தியை எதிர்க்க வேண்டும், இந்தியை விரட்ட வேண்டும். இந்தி தொழிலாளியை  அல்ல, இந்தி அதிகாரிகளை.

இங்கே இருந்து கொண்டு நம்மை எல்லாம் அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறானே, அவனை விரட்ட வேண்டும். எல்ஐசியில் இருக்கிறான், வரி வசூல் பண்ணக்கூடிய இடத்தில் இருக்கிறான். அந்த அதிகாரிகளை நாம் கேள்வி கேட்க வேண்டும். அவனுக்கு எல்லா உதவியும் செய்வான். நம் ஊர் கடைக்காரன் போய் கடன் கேட்க போனால் ஆயிரம் கேள்வி கேட்பான். நம்முடைய கடைக்காரர்கள் தங்களுடைய தொழிலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கடன் கேட்க போனால் கொடுப்பானா? ஆனால் அவன் போனால் அவனுக்கு எல்லாவற்றையும் கொடுக்கிறான். அப்போது உங்கள் நாட்டில், உங்கள் ஊரில் உங்களுக்கு மரியாதை இல்லை என்பதைத்தான் இந்தி காட்டுகிறது.

இந்தி அவனுக்கு மொழி பிரச்சினை இல்லை. உன் மொழியை உன் ஊரில் வைத்து கும்பிடுகிறாய், எங்களுக்கு பிரச்சினை இல்லை. உத்தரபிரதேசத்தில் வைத்துக்கொள், எனக்கு பிரச்சினை இல்லை. நான்தான் அவனுக்கு வரி கொடுக்கிறேன். என் ஊரில் இருக்கும்போது உன்னுடைய மொழி இருக்கக்கூடாது. அதுதான் விடயம், அதுதான் மானப் பிரச்சினை. அந்த மானப் பிரச்சினையை இந்த மண்ணிலே எழுப்பியவர் தந்தை பெரியார். இதனால்தான் இந்திக்கார பயலிடம் வாங்கி இருக்கின்றானே இந்து முன்னணிக்காரனும், பாரதிய ஜனதா கட்சிக்காரனும், ஆர்எஸ்எஸ் காரனும் தந்தை பெரியாரை திட்டிக்கொண்டிருக்கிறார்கள். யார் இவனெல்லாம்? இந்து முன்னணிக்காரனுக்கு எங்கிருந்து காசு வருகிறது என்று கேட்கிறேன்.

இங்கே இருக்கக்கூடிய தமிழுக்காக போராடக்கூடிய எல்லா அமைப்பையும் பார்த்து உங்களுக்கெல்லாம் எங்கிருந்து காசு வருகிறது என்று கேட்கிறார்கள். நான் கேட்கிறேன், ஒரு பிள்ளையாரை வாங்கி வைக்கிறாய், ஒரு தெருவில் 10 பிள்ளையார் வைக்கிறாய், உனக்கு எங்கிருந்து காசு வந்தது? இந்து முன்னணிக்காரனுக்கு எங்கிருந்து காசு வந்தது? மார்வாடிக்காரன் காசு வந்தது. எதற்கு அந்த காசு வருகிறது? அவனுக்கு இங்கே இருக்கக்கூடிய கடைகள் எல்லாவற்றையும் காலி பண்ண வேண்டும்.

நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள், எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் இருக்கக்கூடிய வணிகர்களே, நீங்கள் வணிக சங்கத்தில் முடிவெடுங்கள். இந்த எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் மார்வாடி கடைக்கு இடம் கொடுக்கக்கூடாது என்று முடிவெடுங்கள். இல்லையென்றால் யாரும் கடை வைக்க முடியுமா? தமிழன் கடை வைக்க முடியுமா? சீட்டு வைக்க முடியுமா? அங்கெல்லாம் மார்வாடியோடு போட்டி போட்டு நம்மால் கடை நடத்த முடியுமா? நம் ஊரில் நம்மால் கடை நடத்த முடியாத ஏரியா இருக்கிறது. இந்த லட்சணத்தில் அவனையெல்லாம் உள்ளே விட்டால் நாளைக்கு நீங்கள் வியாபாரம் பண்ண முடியாது, நீங்கள் வணிகம் பண்ண முடியாது.

நாங்கள் எதற்கு இருக்கிறோம்? நாங்கள் தேர்தலில் நின்று எம்எல்ஏ, எம்பி ஆகவோ, முதலமைச்சர் ஆகவோ வரவில்லை. உங்கள் பிரச்சினை என்னவோ அந்த பிரச்சினையை பேசுவதற்கு உங்களுக்காக யாரும் கிடையாது. நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் பிரச்சினை பற்றி பேச யாரும் கிடையாது. இங்கே இருக்கக்கூடிய குடிசைப் பகுதியில் வாழக்கூடிய மக்கள் வீடுகளுக்கெல்லாம் பட்டா கொடுக்கிறார்களா? எத்தனை பேருக்கு பட்டா கொடுக்கிறார்கள்? எத்தனை பேருடைய வீடுகள் பாதியில் இருக்கிறது? இதையெல்லாம் கேள்வி கேட்பதற்கு உங்களுக்கு ஏதாவது அமைப்பு இருக்கிறதா? கட்சி இருக்கிறதா? இல்லை. நாங்கள்தான் இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் சிங்களவன் (srilankan) கடை, ‘டம்ரோ பர்னிச்சர்’ என்று ஒரு கம்பெனி இருக்கிறது. இங்கே சென்னையில், பல ஊர்களில் பல இடங்களில் இருக்கிறான். தமிழ்நாட்டில் நாலு ஊரில் இருக்கிறான். பெரிய பர்னிச்சர் கடை. தமிழ்நாட்டில் தமிழனுடைய பர்னிச்சர் கடையெல்லாம் பெரிதாக இல்லை, தமிழர் கடைதான் சிறிய கடை. ஆனால் பெரிய கடை சிங்களவனுடைய கடை, இலங்கைக்காரன் கடை. அந்த கடையை நாங்கள் தமிழ்நாடு முழுவதும் இழுத்து மூடுவோம் என்று சொல்லி போராட்டம் நடத்தினோம்.

இலங்கை அரசு தமிழர்கள் மீது கை வைக்கிறது. இதேபோல, இங்கே வீரம் பேசக்கூடிய எந்த கட்சியை விட வேறொரு பாரம்பரியம் இந்த இயக்கத்திற்கு இருக்கிறது. இங்கே மட்டும் பேசவில்லை, இந்த இயக்கம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் தமிழர் பிரச்சினையை எடுத்து பேசியிருக்கிறது. அதோடு நிற்கவில்லை, ஐ.நா.விலே சென்று தமிழர் பிரச்சினையை எடுத்து சொன்ன ஒரே இயக்கம், எல்லா இடத்திலும் மக்களுக்காக போராடக்கூடிய இயக்கம் மே17 இயக்கம். 

வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கான சம்பள உயர்வு வரவில்லையா, தமிழருக்கான முக்கியத்துவம் தரவில்லையா, தமிழுக்கு முக்கியத்துவம் தரவில்லையா என்று சொல்லுங்கள். எங்களுக்கு பதவி தேவையில்லை, போராளிகள்தான் தேவை, துணிவுள்ளவன்தான் தேவை என்று சொல்லக்கூடிய இயக்கம் மே17 இயக்கம். 

நீங்கள் எங்களோடு சேர விரும்புகிறீர்களா, சேவை செய்ய வேண்டுமா, வாருங்கள். சாதி மத ஒழிப்பிலே தமிழன் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்கிற உரிமைப் போராட்டம், அதைத்தான் இந்த மண்ணை பாதுகாக்க தமிழ் மக்களோடு வந்திருக்கின்றோம். இந்த மண்ணை காக்க வேண்டும், தமிழர் வாழ வேண்டும், தமிழ்நாடு உயர வேண்டும் என்கிற சொல்லாக, ஒவ்வொரு ஊரிலும் ஒலிக்கக்கூடிய ஒரு சொல்லாக இணைந்து கொள்வோம்.

படித்தவர்களோ, படிக்காதவர்களோ, ஏழைகளோ, வேலை செய்யக்கூடியவர்களோ, மருத்துவர்களோ யாராக இருந்தாலும் எங்கள் மண்ணிலே சமமாக வாழ வேண்டும் என்கிற இயக்கத்தோடு இணைந்து வாருங்கள். இந்த மண்ணை பாதுகாக்கக்கூடிய போராட்டத்தில் கலந்து கொள்வோம்.

ஒவ்வொரு காலத்திலும் என்ன கோரிக்கைக்காக போராடினோமோ அதே கோரிக்கைக்காக இன்றும் போராடிக் கொண்டிருக்கிறோம். எந்த கட்சி வந்தாலும் மாற்றம் இல்லை. உங்களுக்கு மாற்றம் வேண்டும் என்று சொன்னால் அதற்குரிய இயக்கத்தில் நீங்கள் சேர வேண்டும். இது தேவைக்கு அப்பால் மக்களை நேசிக்கக்கூடிய இயக்கம். எல்லோரும் காலையில் வேலை பார்க்கிறார்கள், குடும்பம் குழந்தைகள் இருக்கிறார்கள், வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் வேலை எல்லாம் முடிந்த பிறகு குடும்பம் குழந்தை என்று மட்டும் வீட்டிலே முடங்கிவிடாமல் இந்த மண்ணுக்காக வீதியிலே வந்து பேசுகிறார்கள், போராடுகிறார்கள். அவர்களோடு கை கோர்த்து நிற்கிறோம்.

நீங்கள் படித்திருக்கலாம், படிக்காமல் இருக்கலாம், எங்களுக்கு பிரச்சினை இல்லை. உங்களுக்கு சொல்லித்  தருகிறோம், இந்த மண்ணை எப்படி காக்க வேண்டும் என்று சொல்லித் தருகிறோம். இணைந்து கொள்ளுங்கள், இந்த பெருமையை பெற்றுக்கொள்ளுங்கள். எங்கள் இயக்கத்தை சேர்ந்த சிவா தமிழுக்காக உயிர் கொடுத்தார். அதைவிட பெரிய பெருமை எங்களுக்கு என்ன வேண்டும்? எங்கள் சகோதரன் இந்த மண்ணுக்காக, மொழிக்காக உயிரை கொடுத்திருக்கிறார். வாய்ச்சவடால் பேசக்கூடிய இயக்கம் அல்ல, வாய் சொல் பேசக்கூடிய இயக்கம் அல்ல, செய்து காட்டக்கூடிய இயக்கம். கேள்விகளை முன்வைக்கக்கூடிய தீரமிக்க இயக்கம். கடந்த 18 ஆண்டுகளாக இந்த மண்ணிலே தமிழருடைய உயர்வுக்காகவும், தமிழ் மொழி பெருமைக்காகவும், தமிழர் விடுதலைக்காகவும் உழைத்த இயக்கம்தான் மே17 இயக்கம். 

அன்பானவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, நீங்கள் கைகோர்த்து எங்களை வளர்த்துவிடவில்லை என்றால் வேறு யார் வளர்ப்பார்கள்? மார்வாடிகள் இந்து அமைப்புகளை, இந்து முன்னணியை வளர்க்கிறார்கள், முதலாளிகள் கட்சிகளை வளர்க்கிறார்கள். சாமானிய மக்களாகிய நீங்கள்தான் எங்களை வளர்க்க வேண்டும், நீங்கள்தான் எங்களை ஆதரிக்க வேண்டும். நீங்கள்தான் இந்த இடத்திலே பொதுக்கூட்டம் நடத்துவதற்கோ, போராட்டத்தை நடத்துவதற்கோ கரம் கொடுக்க வேண்டும். நீங்கள் வந்து நில்லுங்கள், நீங்கள் உதவி செய்யுங்கள், தோளோடு தோள் சேர்ந்து நில்லுங்கள்.

தியாக தீபம் திலீபன் – அவர் என்ன சொன்னார்? 12 நாட்கள் உணவு உண்ணாமல், தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாநிலை போராட்டத்தை நடத்தி உயிர் கொடுத்த நாள் இன்று. 39 ஆண்டுகளுக்கு முன்பு விதையாக விழுந்தான். எதற்காக? தங்கள் மண்ணின் விடுதலைக்காக, தங்கள் மக்களின் விடுதலைக்காக. அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி இந்தியப் படையை இலங்கைக்கு அனுப்பினார். தமிழ்நாடு மக்கள் எல்லாம், இந்தியாவின் படை இலங்கைக்கு சென்றால் பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசத்தை எப்படி பிரித்து ஒரு தனி நாடாக கொடுத்தார்களோ, அதுபோல இலங்கையிலிருந்து தமிழர்களுக்கு பாதுகாப்பாக தமிழ் ஈழம் என்று ஒரு நாடு கொடுப்பார்கள் என்று நம்பினார்கள். ஈழத் தமிழர்கள் நம்பினார்கள். காந்தி தேசம், காந்தி தேசத்தின் ராணுவம் எங்களை எல்லாம் காக்க வருகிறது என்று ஈழத் தமிழ் மக்கள் வரவேற்றார்கள்.

ஆனால் அவர்கள் வந்து இறங்கியவுடன் இந்திய ராணுவம் என்ன செய்தது? இந்திய அதிகாரிகள் சொன்னார்கள்…தமிழ் மக்களை காக்க வரவில்லை, தமிழர்கள் போராடுகிறார்கள், அந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காகத்தான் உங்களை அனுப்பினோம் என்று சொன்னார்கள். இந்திய அதிகாரிகள் சிங்களத்தோடு கை கோர்த்தார்கள், இலங்கை அரசோடு கை கோர்த்தார்கள். இந்த சமயத்தில்தான் ஈழத் தமிழ் மக்களிடத்திலே விடுதலைப் புலிகள் ஒரு பெரும் உண்மையை சொல்ல வேண்டியிருந்தது. என்ன உண்மை? இந்தியாவிலிருந்து வந்திருக்கக்கூடிய ராணுவம் உங்களை காப்பதற்காக வரவில்லை, உங்களை அழிப்பதற்காக, சிங்களத்தை பாதுகாப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்கிற உண்மையை ஈழ மக்களுக்கு சொல்ல வேண்டிய பெரிய கடமை விடுதலைப் புலிகளுக்கு இருந்தது.

அவர்கள் என்ன கேட்டார்கள் என்றால், இந்திய அரசே, ராஜீவ் காந்தியே, எங்களுக்கு வாக்குறுதிகள் எல்லாம் கொடுத்திருக்கிறீர்கள், அந்த வாக்குறுதியில் ஒன்றே ஒன்றுதான். என்னவென்றால், தமிழர் பகுதியில் சிங்களவன் வந்து வாழ வைக்கக்கூடாது, அவன் போலீஸ் இருக்கக்கூடாது, அவர்கள் நிலத்தை விட்டு போக வேண்டும், எங்களுடைய அரசியல் கைதிகளை எல்லாம் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால் ஒரு வாக்குறுதியையும் இந்திய அரசு நிறைவேற்றவில்லை. காந்தி இந்திய தேசத்திற்காக பலமுறை சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் திலீபன் ஒரே ஒரு முறைதான் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார், அதுதான் காந்திக்கும் திலீபனுக்குமான வேறுபாடு. சாகும் வரை உண்ணாவிரதம் என்றால் கோரிக்கை வெல்லும் வரை நான் உணவை உண்ணமாட்டேன், உயிர் போனாலும் விடமாட்டேன் என்ற போராட்டம். அப்படி இருந்தும் இந்திய அரசு இறங்கி வரவில்லை.

ஈழத் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வரவில்லை. எகத்தாளமாக பேசினார்கள், தமிழர்களை துச்சமாக மதித்தார்கள். உலகத்தில் எந்த உண்ணாவிரத போராட்டத்திலும் தண்ணீரை குடித்துக்கொண்டுதான் போராட்டம் நடத்துவார்கள். ஆனால் திலீபன் மட்டும்தான் உலகத்திலே தண்ணீர் கூட குடிக்காமல் போராடிய வீரன். திலீபன் ஒரு மருத்துவ மாணவன், 23 வயது மாணவன், ஒரு போராளி, ஒரு தளபதி, மக்கள் தலைவன். அவன் தண்ணீர் குடிக்காமல் இருக்கின்றான். ஒரு மருத்துவனாக இருக்கக்கூடிய திலீபனுக்கு தண்ணீர் அருந்தவில்லை என்றால் தனது உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்து, வேதனைகளை அனுபவித்து இறந்து போவோம் என்று தெளிவாக தெரியும். ஆனாலும் திலீபன் உண்ணாவிரதத்தை முடிக்கவில்லை. 12-வது நாள், இதே செப்டம்பர் 26 ஆம் தேதி 1987-ல் உயிர் நீத்தான்.

தமிழ்நாடு முழுவதும் தமிழர்கள் இந்த உயிரை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று இந்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். இந்திய அரசு செவிசாய்க்கவில்லை. காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவில்லை. 12-ம் நாள் போராடி உயிர் நீத்தான் திலீபன். அன்றைக்கு தமிழன் புரிந்துகொண்டான், காங்கிரசும் இந்திய அரசும் தமிழரை காக்க வராது, தமிழரை அழிக்கத்தான் வந்திருக்கிறது என்கிற வேதனையான உண்மையை உணர்ந்து எழுந்தான். ஆகவே, இந்த மண்ணிலே நீதி வேண்டும் என்றால், நேர்மையான அரசியலை விரும்பினால், மாற்றத்தை நீங்கள் விரும்பினால், தமிழர் உயர்வை விரும்பினால் மே17 இயக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள். அந்த வகையிலே திலீபன் சொன்ன அந்த அரசியலை முன்னெடுப்போம் என்று கூறி நிறைவு செய்கின்றேன். நன்றி, வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »