CBSE புத்தகங்கள் தாமதம் – பாடங்களில் புகுத்தப்படும் இந்துத்துவம்

ஒன்றிய பாடத்திட்டத்தில் இந்துத்துவ திணிப்பு – கேள்விக்குறியாகும் மாணவர் எதிர்காலம்

கல்வி அமைப்பில் மிகப்பெரிய சீர்திருத்தம் என்று கூறி ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய தேசியக் கல்விக் கொள்கை, உண்மையில் மாணவர்களின் அறிவை, ஆற்றலை, உளவியலை சிக்கலுக்குள்ளாக்கும் திட்டமாக மாறியுள்ளது. பல சர்ச்சைகளுக்குப் பிறகு 2026-27 கல்வியாண்டில் முதற்கட்டமாக 9-ம் வகுப்புக்கு அமல்படுத்தப்பட்ட இந்த பாடத்திட்டம், தொடக்கம் முதலே திட்டமிடல் இல்லாமல், அரசியல் சாயம் பூசப்பட்டதாகவே (குறிப்பாக இந்துத்துவ கருத்துக்களை திணிப்பதாகவே) இருக்கிறது. அடிப்படை உள்கட்டமைப்புகளையும் பாடநூல்களையும் கூட முழுமையாக தயார் செய்யாமல், அவசர அவசரமாக தனது திட்டங்களை திணிக்கும் ஒன்றிய அரசின் இந்த போக்கு இன்று லட்சக்கணக்கான ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஒரு புறம் இந்துத்துவத்தை திணிக்கும் இப்பாடத்திட்டம் மறுபுறம் சரியான நேரத்துக்கு பாடப்புத்தகங்கள் வழங்காமல் மாணவர்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது.

கல்வியாண்டு தொடங்கி பல மாதங்களுக்குப் பிறகுதான் முதல் பருவ சமூக அறிவியல் புத்தகமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் பருவம் ஆரம்பித்த பிறகும் ‘கணித மஞ்சரி – பகுதி 2’ மற்றும் ‘சமூக அறிவியல் பகுதி-2’ புத்தகங்கள் இன்னும் அச்சிடப்படவில்லை.

ஆங்கில வழிக் கல்விக்கான சில PDF கோப்புகள் இணையத்தில் வெளியிடப்பட்ட போதிலும், பிராந்திய மொழி பாடநூல்களும் செயற்கை நுண்ணறிவு, தொழிற்கல்வி பாடநூல்களும் கைக்கு வந்து சேராததால் ஆசிரியர்களும் மாணவர்களும் தவித்து வருகின்றனர். குறிப்பாக இணைய வசதி பெரிதும் இல்லாத கிராமப்புற மாணவர்கள் கல்வியில் பின்னுக்குத் தள்ளப்படும் சூழல் உருவாகி உள்ளது.

புத்தக தாமதத்தை விட அதிர்ச்சியளிப்பது இதிலுள்ள உள்ளடக்க மாற்றம் தான். புதிய சமூக அறிவியல் பாடநூலில் இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் உள்ள ‘மதச்சார்பின்மை’ மற்றும் ‘சமதர்மம்’ போன்ற அடிப்படைச் சொற்கள் தவிர்க்கப்பட்டிருப்பது பெரும் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் வரலாற்றை திரிக்கும் நோக்கில் அவசரநிலை காலம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து சேர்க்கப்பட்டுள்ள பாடங்கள் சமூக ஆர்வலர்களின் பலத்த கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளன. அறிவியல் மற்றும் கணித பாடங்களில் இந்திய அறிஞர்களை பெருமைப்படுத்துவதாக கூறிக்கொண்டு புராண கருத்துகளையும் வடமொழி சொற்களையும் திணிக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. கணித புத்தகத்தில் பூஜ்ஜியத்தை குறிக்க ‘சூனிய’ என்ற சொல்லை பயன்படுத்தி அதற்கு புராண விளக்கங்கள் அளித்திருப்பது பாடத்தின் அறிவியல் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

பெரும்பாலும் இந்தித் திணிப்பும் சம்ஸ்கிருத திணிப்புமே இந்த புத்தகங்களின் மொழிநடையில் காணப்படுகின்றது. புவியியலில் இல்லாத சரஸ்வதி ஆற்று நாகரிகத்தை பழமையானதாக கூறும் பாடங்கள் இந்த புத்தகங்களில் காணப்படுகின்றன. கங்கை ஆற்றையும் அதன் நாகரிகத்தையும் உயர்த்திப் பிடிப்பதற்காக அங்கு இரும்பு பயன்படுத்தப்பட்டதாக கூறும் ஒன்றிய பாடத்திட்டம், மறந்தும் கூட கீழடிக்கு பெருமை சேர்க்க மறுக்கிறது. கீழடி நாகரிகத்தை மறைக்க அந்த அறிக்கையை வெளியிடாமல் தடுக்கும் ஒன்றிய பாஜக அரசின் உள்நோக்கமே இதன் மூலம் வெளிப்படுகின்றது. ‘தமிழ்நாடு’ என்பதை ‘தமிழகம்’ என அச்சிடுவதும் திட்டமிட்ட தமிழர் புறக்கணிப்பாகவே பார்க்கப்படுகிறது.

இந்துத்துவ கருத்துக்களை சேர்ப்பது ஒருபுறம் என்றால் நம் கண் முன்னே நடந்த வரலாறுகளை நீக்குவதும் ஒரு புறம் நடக்கிறது. ஏற்கனவே பாபர் மசூதி இடிப்பு, பாஜக ரத யாத்திரை, காந்தியை கொன்ற கோட்சேவின் பின்னணி, RSS-க்கு விதிக்கப்பட்ட தடை போன்ற வரலாற்று பாடங்களை NCERT நீக்கியது. ஆசிரியர்களின் அனுமதி இன்றி வலதுசாரி கருத்துக்களை புகுத்தியதால், பாடப்புத்தகங்களை உருவாக்கிய 30-க்கும் மேற்பட்ட முன்னணி பேராசிரியர்களும் கல்வி அறிஞர்களும், புத்தகங்களிலிருந்து தங்களது பெயர்களை நீக்குமாறு NCERT-க்கு முன்பு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

மேலும் புதிய கல்வித் திட்டத்தில் மும்மொழிக் கொள்கையின் கீழ் தமிழை ஒரு மொழியாக கற்பிக்க வெளியிடப்பட்ட புத்தகமும் சர்ச்சையாகி உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழை ஒரு பாடமாக படித்து வந்த மாணவர்களுக்கும் கூட தற்போது ஒன்பதாம் வகுப்பில் ‘அ, ஆ, இ’ போன்ற அடிப்படை எழுத்துகளிலிருந்தே பாடங்கள் தொடங்கப்படுவது கேலிக்கூத்தாக அமைந்துள்ளது. மூன்றாவது மொழிக்கான அனைத்து பாடநூல்கள் தயாராகும் வரை, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஆறாம் வகுப்புக்கான பாடநூல்களையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளதே இதற்குக் காரணமாக இருக்கிறது.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்குத் தயாராக வேண்டிய பருவத்தில், ஒரு புதிய மொழியை அடிப்படையிலிருந்து கற்க நிர்பந்திப்பது மாணவர்களிடையே கடும் மன அழுத்தத்தை உருவாக்கும் என்று உச்ச நீதிமன்றமே கவலை தெரிவித்துள்ளது. ஆனால் மொழிக் கற்றலை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, மொழியின் மீதான ஆர்வத்தையே குறையச் செய்யும் செயலைத்தான் ஒன்றிய பாடத்திட்டம் செய்து வருகிறது.

வழக்கமாக பள்ளிகளில் டிசம்பர், ஜனவரிக்குள் 9-ம் வகுப்பு பாடங்களை முடித்து 10-ம் வகுப்பு தயாரிப்பை தொடங்குவார்கள். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள பாடநூல் தாமதத்தால் ஆசிரியர்கள் பாடங்களை அவசரமாக நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது மாணவர்களிடையே கற்றல் இடைவெளியையும், அடுத்த ஆண்டு பொதுத்தேர்வின் போது கடும் மன அழுத்தத்தையும் உருவாக்கும். இந்த ஆண்டு 9-ம் வகுப்புக்கு வந்த குழப்பம், அடுத்த ஆண்டு 10-ம் வகுப்புக்கும் புதிய பாடத்திட்டம் வரும்போது இரட்டிப்பாகும். இதனால் தேர்வு முடிவுகள், மாணவர்களின் உயர்கல்வி கனவு என அனைத்தும் கேள்விக்குறியாகும்.

‘ஒரு புத்தகம் கிடைக்க தாமதம்’ என்பது மாணவரின் ஒரு வருட படிப்பை மட்டும் பாதிக்கவில்லை, ஒரு தலைமுறையின் எதிர்காலத்தையே பாதிக்கிறது. NEET வினாத்தாள் கசிவு, நிர்வாகச் சீர்கேடுகள் என ஏற்கனவே ஒன்றிய கல்வித்துறை மீதான நம்பிக்கை குறைந்துள்ள நிலையில், தன் நாட்டின் இளைஞர்களுக்கு முறையாக பாட புத்தகங்கள் கூட வழங்க முடியாத நிலையில்தான் இன்று பாஜக மோடி அரசு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் தனது அரசியல் கொள்கைகளையும் சட்டங்களையும் நிலைநாட்ட மட்டுமே மோடி அரசு அவசரம் காட்டுவது ஏற்புடையதல்ல. எனவே NCERT-யும் ஒன்றிய அரசும் அனைத்து அச்சுப் புத்தகங்களையும் உடனடியாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும். வரவிருக்கும் 10-ம் வகுப்பு புதிய பாடத்திட்டத்திலாவது வலதுசாரி அரசியல் திணிப்பை கைவிட்டு, மாணவர் நலனை முதன்மையாகக் கொண்டு தெளிவான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும். ஏனெனில் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாய கடமைகளுள் ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »