செவிலியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி – தேர்தல் வாக்குறுதியை மறந்த தவெக அரசு

‘சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் வேண்டும்’ இந்த இரண்டு கோரிக்கைகள்தான் தற்போது தமிழ்நாட்டின் செவிலியர்களின் போராட்டத்தின் மையமாக இருக்கின்றன.

சென்னையில் அண்மையில் நூற்றுக்கணக்கான இடைநிலை சுகாதார செவிலியர்கள் (MLHP) போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர் சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் அழைத்துச் சென்று தடுத்து வைத்த சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் அரசு மருத்துவக் கட்டமைப்பில் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வரும் ‘நிரந்தரமற்ற வேலை’ என்ற புதிய பண்பாட்டின் விளைவுதான் இந்தப் போராட்டம்.

தமிழ்நாட்டின் அரசு சுகாதாரத் துறையில் பல்வேறு நிலைகளில் செவிலியர்கள் பணியாற்றுகின்றனர். கிராமப்புற மக்களின் அடிப்படை சுகாதாரப் பணிகளில் முக்கியப் பங்காற்றுபவர்கள் VHN (Village Health Nurse) எனப்படும் கிராம சுகாதார செவிலியர்கள். அவர்களை மேற்பார்வையிடுபவர்கள் SHN (Sector Health Nurse) என்று அழைக்கப்படுகிறார்கள்.

வட்டார அளவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட அளவிலான சுகாதாரப் பணிகளை ஒருங்கிணைப்பவர்கள் CHN (Community Health Nurse). நோய் பரவல் கண்காணிப்பு, சுகாதாரத் தகவல்கள், மருத்துவ முகாம்கள், தேசிய சுகாதார இயக்கத் திட்டங்கள் உள்ளிட்ட பல பணிகளில் இவர்களின் பங்கு முக்கியமானது.

இதற்கு அடுத்த நிலையில் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் MRB செவிலியர்கள் உள்ளனர். Medical Services Recruitment Board எனப்படும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியில் சேரும் இவர்கள்தான் அரசு மருத்துவ அமைப்பின் ஒரு முக்கியப் பகுதி.

இவர்கள் எம்.ஆர்.பி தேர்வு எழுதுகிறார்கள், தகுதி பெறுகிறார்கள், அரசு மருத்துவமனையில் பணியில் சேருகிறார்கள். ஆனால் நிரந்தர அரசு ஊழியராகும் நிலை மட்டும் தொடர்ந்து தள்ளிப்போகிறது. இதுதான் பிரச்னையின் அடிப்படை.

கொரோனா காலம் இன்னொரு பிரிவு செவிலியர்களை உருவாகியது. கொரோனா தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் செவிலியர்கள் தேவைப்பட்டனர். அப்போது ஒப்பந்த அடிப்படையில் ஏராளமான செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். பொதுவாக ‘கொரோனா செவிலியர்கள்’ என்று அழைக்கப்பட்ட இந்தப் பணியாளர்களுக்கும் பணி பாதுகாப்பு இல்லை.

இதனால் அரசு மருத்துவத் துறையில் நிரந்தர செவிலியர்களுக்கும், தற்காலிக செவிலியர்களுக்கும் இடையிலான வேறுபாடு மேலும் அதிகரித்தது. இந்தச் சூழலில், செவிலியர்களின் எண்ணிக்கையும் அவர்களின் போராட்ட வலிமையும் அதிகரித்தன. அரசை நிர்வாக ரீதியாக அழுத்தம் கொடுக்கக்கூடிய ஒரு வலிமையான பணியாளர் பிரிவாக எம்.ஆர்.பி செவிலியர்கள் உருவாகினர்.

இந்த அழுத்தத்தை பலவீனம் செய்ய அரசு கொண்டு வந்ததுதான் MLHP (Mid-Level Health Provider) என்ற புதிய செவிலியர்கள். 2021-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் MLHP பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக அந்த காலகட்டத்தில் எம்.ஆர்.பி செவிலியர்கள் பெற்ற தொடக்க ஊதியத்தை விட அதிக ஊதியத்திற்கு இவர்களை நியமித்தது அரசு. தடுப்பூசி செலுத்துதல், வெளிநோயாளர் சேவைகள், மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு, தொற்றா நோய்கள் மேலாண்மை, தேசிய சுகாதார இயக்கப் பணிகள் என பல்வேறு பணிகளை இவர்கள் செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 4,848 MLHP-கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருவதாக அவர்களது தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இவர்களும் நிரந்தர அரசு ஊழியர்களாக இல்லாமல், அரசு மருத்துவ கூட்டமைப்பிற்கு தேவையான நிரந்தரப் பணிகளைச் செய்கிறார்கள். ஆனால் அவர்களின் வேலை மட்டும் நிரந்தரமானதல்ல!

MLHP செவிலியர்களுக்கு மாதம் ரூ.21,000 மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாக MLHP செவிலியர் சங்கத் தலைவர் என். சுந்தரி தெரிவித்துள்ளார். அதேபோன்ற பணிகளைச் செய்யும் செவிலியர்களுக்கு பிற மாநிலங்களில் அதிக ஊதியம் வழங்கப்படுவதாகவும் சங்கம் கூறுகிறது. அவர்களின் தரப்பில் கூறப்படும் ஒப்பீட்டின்படி:

மகாராஷ்டிரா – ரூ.55,000; ஹரியானா – ரூ.70,000; கர்நாடகா – ரூ.62,000; ஆந்திரப் பிரதேசம் – ரூ.43,000

மேலும், 2023-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய 5 சதவிகித ஊதிய உயர்வும் கிடைக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒரே மாதிரியான பணியைச் செய்பவர்களுக்கு மாநிலம் மாறும்போது இவ்வளவு பெரிய ஊதிய வேறுபாடு ஏன்?.

இந்தச் சூழலில்தான் 11.09.2026 அன்று G.O.(Ms) No.258 வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் 4,724 Staff Nurse பணியிடங்கள் ஒப்பந்த/தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியிடங்கள் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதான் MRB செவிலியர்கள் மற்றும் MLHP செவிலியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால், ஒரு அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நிரந்தரம். சிகிச்சை நிரந்தரம். செவிலியர்கள் தேவை நிரந்தரம். ஆனால் அந்தச் செவிலியரின் வேலை மட்டும் 11 மாதம் தான்!

தேர்தலுக்கு முன்பு தவெக தனது அதிகாரப்பூர்வ தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தொடர்ந்து பணியாற்றிய தற்காலிக ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உடனடி நிரந்தர அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு மருத்துவமனைகளில் புதிய செவிலியர் பணியிடங்களே ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவது ஏன்?

ஒருபுறம், ‘5 ஆண்டுகள் பணியாற்றியவர்களை நிரந்தரம் செய்வோம்’ என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு மறுபுறம், ‘புதிய பணியிடங்களையும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவோம்’ என்ற பேசுவது இது வரை ஆட்சி செய்தவர்களில் இருந்து எந்த வகையில் மாற்றம் என்று போராடும் செவிலியர்கள் கேட்கிறார்கள்.

இதோடு பிரச்னை முடிவடையவில்லை. புதிதாக அறிவிக்கப்பட்ட ஆறு செவிலியர் கல்லூரிகளிலும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் நடவடிக்கை குறித்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அரசு துறையின் வெற்றியே அதில் உள்ள அறிவு தொடர்ச்சி தான். மூத்தவர்கள் தங்கள் அறிவை இளைய தலைமுறைக்கு கடத்த முடியும். அந்த அறிவுத் தொடர்ச்சிதான் ஒரு அரசு துறையின் தரத்தை உருவாக்குகிறது.

அதையே ஒப்பந்தப் பணியால் உடைத்துவிட்டால் என்ன நடக்கும்? ஒருவர் அரசு மருத்துவத் துறையில் 11 மாதம் அல்லது சில ஆண்டுகள் பணியாற்றுகிறார். அந்தக் காலத்தில் நோயாளிகளைப் பார்க்கிறார். நோய்களைப் புரிந்துகொள்கிறார். அரசு மருத்துவ அமைப்பின் செயல்பாடுகளை கற்றுக்கொள்கிறார். பிறகு பணி பாதுகாப்பு இல்லாததால் வேறு தனியார் மருத்துவமனைக்குச் செல்கிறார். அவர் கற்றுக்கொண்ட அனுபவமும் அறிவும் அவருடன் தனியார் துறைக்குச் செல்கிறது.

இதனால் அரசுத் துறையில் என்ன நடக்கும்? மீண்டும் புதியவர் வருகிறார். அவருக்கு மீண்டும் பயிற்சி. மீண்டும் அனுபவம். மீண்டும் சில ஆண்டுகளில் அவர் வெளியேறுகிறார். இப்படியே போனால் அரசு மருத்துவ அமைப்பில் உருவாக வேண்டிய ‘அறிவுத் தொடர்ச்சி’ உடைந்து போகும். இது அரசு துறையில் Brain Drain என்கிற அறிவு வற்றல் நிலையை உருவாக்கும்.

செவிலியர்கள் போராட்டம் என்பது தனிநபரின் வேலைப் பிரச்சனை  அல்ல. அரசு மருத்துவ அமைப்பின் நிறுவனத் தன்மைக்கு ஏற்படும் இழப்பு.

இதனால் தான் செவிலியர்களின் போராட்டம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது. செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 5-ஆம் தேதி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த MLHP செவிலியர்கள் சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கைகள் பணி நிரந்தரத்தை மட்டும் சார்ந்தவை அல்ல.

2023–2024 ஆண்டுகளுக்கான நிலுவை ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். MLHP என்ற பணிப்பெயரை Community Health Officer (CHO) என மாற்ற வேண்டும். அதற்கான சான்றிதழ் வழங்க வேண்டும். முக்கியமாக, ‘நாங்கள் செய்யும் வேலைக்கு உரிய ஊதியமும், உரிய பணி பாதுகாப்பும் வேண்டும்’ என்பதே அவர்களின் கோரிக்கை.

அக்டோபர் 5-ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறையின் கட்டுப்பாடுகள் அதிகரித்த நிலையிலும் செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தைக்குச் சென்ற செவிலியர் சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்ததாக செவிலியர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அரசு, போராட்டக்காரர்களைத் தடுத்து வைப்பது தீர்வை உருவாக்குமா? இது தவெக அரசின் பிரச்னை மட்டுமல்ல!

இது திமுக- அதிமுக ஆட்சியிலும் நடந்திருக்கிறது.

MRB செவிலியர்கள் பல ஆண்டுகளாக பணி நிரந்தரத்துக்காகப் போராடி வருகின்றனர். போராட்டம் தீவிரமாகும்போது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான செவிலியர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்படுவது போன்ற நடைமுறையும் இருந்து வந்திருக்கிறது. அதனால், ‘இது ஒரு குறிப்பிட்ட கட்சியின் பிரச்னை’ என்று மட்டும் பார்க்க முடியாது.

இது அரசு நிர்வாகத்தின் அல்லது அதிகார வர்க்கத்தின் பொருளாதார அணுகுமுறையைப் பற்றிய பிரச்சனை. ஒரு அரசு மருத்துவமனை தினமும் செயல்பட வேண்டியிருந்தால், அந்தப் பணியைச் செய்யும் செவிலியரின் பணி ஏன் தற்காலிகமாக இருக்க வேண்டும்?

ஒரு அரசாங்கம் ஊழியருக்கு வழங்கும் ஊதியத்தை வெறும் ‘அரசின் செலவு’ என்று பார்த்தால், ஒவ்வொரு நிரந்தரப் பணியும் அரசுக்கு ஒரு சுமையாகத் தெரியும். ஆனால் ஒரு செவிலியரின் உழைப்பு என்ன செய்கிறது? ஒரு உயிரைக் காப்பாற்றுகிறது. அதன் மூலம் ஒரு குடும்பத்தைப் பாதுகாக்கிறது. ஒரு குழந்தையின் உடல்நலத்தைப் பாதுகாக்கிறது. ஒரு தொழிலாளியின் உழைக்கும் திறனைப் பாதுகாக்கிறது. ஒரு சமூகத்தின் மனித வளத்தைப் பாதுகாக்கிறது. எனவே, சுகாதாரத் துறையில் அரசு செய்யும் செலவு வெறும் செலவு அல்ல, அது மனித வளத்தின் மீது செய்யப்படும் முதலீடு.

உழைப்பு என்பது வெறும் சந்தையில் வாங்கி விற்கப்படும் பொருள் அல்ல. உழைப்பாளியின் உழைப்புதான் சமூகத்தின் உற்பத்தி மற்றும் மறுஉற்பத்தியை இயக்குகிறது. ஒரு செவிலியர் ஒரு நோயாளியை குணப்படுத்தும்போது, அவர் ஒருவரின் உடல்நலத்தை மட்டும் காப்பாற்றவில்லை. அந்த மனிதர் மீண்டும் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், உற்பத்திக்கும் திரும்புவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறார். அப்படியானால் அந்தச் செவிலியரின் ஊதியத்தை ‘செலவு’ என்று மட்டும் எப்படி பார்க்க முடியும்?

சம வேலைக்கு சம ஊதியம் என்கிற அவர்களின் கோரிக்கைக்கு பின்னால் இருப்பது வர்க்கப் பிரச்சனை. ஒரே மருத்துவமனையில், ஒரே நோயாளிகளுக்கு, ஒரே வகையான பணியைச் செய்து கொண்டு. ஒருவர் நிரந்தர ஊழியராக மற்றொருவர் ஒப்பந்த ஊழியராக இருப்பது ஒரே அலுவலகங்களில் இரண்டு வர்க்கத்தை உருவாக்கும் சிந்தனை.

ஒருவருக்கு அரசு ஊழியர் என்கிற பணி பாதுகாப்பு. மற்றொருவருக்கு 11 மாத ஒப்பந்தம். ஒருவருக்கு ஊதிய உயர்வு. மற்றொருவருக்கு தொகுப்பூதியம். அடிப்படையில் இது உழைப்பவர்கள் இடையே அரசு திட்டமிட்டு உருவாக்கும் பிளவு.

அதனால்தான் ‘பணி நிரந்தரம் வேண்டும்’ என்ற செவிலியர்களின் கோரிக்கையை வெறும் வேலைப் பாதுகாப்புக்கான கோரிக்கையாக மட்டும் பார்க்கக் கூடாது. அதன் உள்ளே இருப்பது ‘சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும்’ என்ற வர்க்கக் கோரிக்கை.

அரசின் ஒவ்வொரு துறையிலும் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்புவதற்கு நிதி தேவை என்பது உண்மை. ஆனால் அந்த நிதியை எங்கிருந்து உருவாக்குவது என்பதுதான் நிர்வாக சிக்கல். மின்சார துறை போன்ற அரசு நிறுவனங்களில் ஏற்படும் நிர்வாகச் சீர்கேடுகள், முறைகேடுகள், தேவையற்ற இழப்புகள் ஆகியவற்றைக் குறைப்பதன் மூலம்  அந்தச் சேமிப்பை மக்கள் நலத் துறைகளில், சுகாதாரத்தில், கல்வியில், போக்குவரத்தில், அரசுப் பணியாளர்களின் ஊதியத்திலும் பணி பாதுகாப்பிலும் பயன்படுத்த முடியும்.

ஒரு துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு முன்பு அந்தத் துறையின் அரசு அமைப்பை பலவீனப்படுத்துவது ஒரு முக்கியமான கட்டமாக இருக்கும். நிரந்தரப் பணியிடங்களை குறைப்பது, ஒப்பந்தப் பணியாளர்களை அதிகரிப்பது, தொகுப்பூதியத்தைப் பயன்படுத்துவது, அனுபவம் வாய்ந்த ஊழியர்களைத் தக்கவைக்க முடியாத சூழலை உருவாக்குவது, பின்னர், ‘அரசுத் துறையில் தரம் இல்லை’ என்று கூறுவது, அதற்குப் பிறகு, ‘தனியார்தான் சிறப்பாகச் செய்ய முடியும்’ என்று கூறுவது. இதை உடைக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதிகார வர்க்கம் செய்யும் இந்த சூழ்ச்சிகளை தடுக்க வேண்டியது ஆட்சியாளர்கள் பொறுப்பு.

தவெக அரசு உண்மையில் மாற்றத்தை விரும்புகிறதா? அல்லது பழைய நிர்வாக நடைமுறைகளையே புதிய பெயரில் தொடரப் போகிறதா? என்பதை செவிலியர் பிரச்னை தெளிவாகக் காட்டக்கூடும்.

தேர்தல் அறிக்கையில் 5 ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக செவிலியர்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தால், அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் புதிதாக உருவாகும் அரசு மருத்துவப் பணியிடங்களை மீண்டும் 11 மாத ஒப்பந்தப் பணிகளாக மாற்றுவது ஏன் என்பதற்கும் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

அரசு மருத்துவமனையில் பணிபுரிபவர் அரசு ஊழியரா, இல்லையா? அரசு மருத்துவ சேவை நிரந்தரமானதா, தற்காலிகமானதா? மக்களின் உயிரைக் காப்பாற்றும் உழைப்புக்கு உரிய மதிப்பு இருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கான பதிலே தமிழ்நாட்டின் அரசு மருத்துவத்தின் எதிர்காலத்தை பாதுகாக்கும். அதற்கு மாறாக, நிரந்தரத் தேவைகளுக்கு தற்காலிக உழைப்பை மட்டுமே பயன்படுத்துவது என்பது உழைப்பின் பாதுகாப்பின்மையை நிறுவனமயமாக்குவது. இந்தக் கேள்விக்கு தவெக அரசு அளிக்கும் பதிலில்தான், அது உண்மையில் ஒரு மாற்று ஆட்சியா? அல்லது பழைய நிர்வாகத்தின் இன்னொரு தொடர்ச்சியா? என்பது தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »