பொது சமூக உளவியலை மாற்ற வேண்டிய தேவையை உணர்த்தும் டோரதி திரைப்படம்

ஒரு மனிதரை வாழ வழி சொல்லாத சமூகத்திற்கு, அவர் வாழும் வழியைப் பேச அருகதை இருக்கிறதா?

திருநங்கைகளுக்கு வாடகைக்கு ஒரு அறை கொடுக்க மறுக்கும் வீட்டு உரிமையாளர்கள், பசிக்கு சோறு போடாத குடும்பம், படிக்க விடாத பள்ளி, வேலை தராத நிறுவனம், சிறுநீர் போகக் கூட கழிப்பறை தராத ஊர் – இப்படி எல்லா கதவுகளையும் மூடிவிட்டு, கடைசியாக அவர்கள் வயிற்று பசிக்காக பாலியல் தொழிலுக்கு சென்றால், “இதோ பார், இவர்கள் இப்படித்தான்” என்று கை காட்டி சிரிக்கும் கூட்டமும் உள்ளது தான் இந்த சமூகம்.

இதுதான் இன்று டோரதி படத்தை சுற்றி நடக்கும் அரசியல்.

டோரதி வெறும் சினிமா அல்ல, இத்தனை ஆண்டுகளில் திருநங்கைகளை சக மனிதர்களாக ஏற்க இந்த சமூகம் தயாராகி விட்டது என்பதற்கான முதல் பெரிய சாட்சி. திருநங்கைகள் கொண்டாடும் படமாகவும், பலரால் பாராட்டப்பட்ட படமாகவும் மாறியிருக்கிறது. ஆனால் இந்த வெற்றியை கூட பொறுக்க முடியாமல் சிலருக்கு வயிறு எரிகிறது.

“திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதைப் போலவே காட்ட வேண்டுமா? என்று இயக்குனர் மோகன் ஜி போன்றவர்கள் கேட்கிறார்கள். பொது சமூக உளவியலாக இது நியாயமான கேள்வி போல முன்வைக்கப்படுகிறது.

இங்கே தான் நாமும் ஒரு முக்கியமான கேள்வியை கேட்க வேண்டியிருக்கிறது. பாலியல் தொழிலுக்கு பெண்கள் உட்பட யாராவது விரும்பி போவார்களா? திருநங்கைகளைப் பொறுத்தவரை அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கான கடைசி கட்டாயம். சொந்த குடும்பமே அவர்களை ஏற்க மறுக்கிறது. சொத்தில் பங்கு தர மறுப்பது மட்டுமல்ல, சில வீடுகளில் நஞ்சு வைத்து கொல்லத் துடிக்கிறார்கள். பள்ளி, கல்லூரிகளில் சேர்ந்தால் ஆசிரியர்கள், மாணவர்கள் கேலி, பாலியல் தொல்லை என ஆயிரம் பிரச்சனைகள்.

திருநங்கை ஜீவா ஒரு நேர்காணலில் சொன்னது போல, பொது கழிப்பறை பயன்படுத்த கூட அனுமதி மறுக்கப்பட்டு, தனது உடையிலேயே சிறுநீர் கழித்த அவமானம் இன்றும் பலருக்கு நடக்கும் நிலைதான். வாடகைக்கு ஒரு சிறு அறை கேட்டால் கூட “திருநங்கைகளுக்கு வீடு இல்லை” என்று மறுக்கும் நிலைதான். அவர்கள் பெண் தன்மையுடன் மாறினாலும் பெண்கள் கழிப்பறைக்கு போக இயலாத நிலைதான்.

படிப்பு இல்லை, வேலை இல்லை, தங்க இடம் இல்லை, குடும்ப ஆதரவு இல்லை, அரசாங்கத்தின் இடஒதுக்கீடு முழுமையாக போய் சேரவில்லை. இப்படி எல்லா வழிகளையும் அடைத்து விட்டு, சிலர் வயிற்று பசிக்காக அவர்கள் பாலியல் தொழிலுக்கு போகும் சூழல் நேர்ந்தால் , “ஏன் செய்கிறீர்கள்?” என்று கேட்பது எவ்வளவு அயோக்கியத்தனம்?

மோகன்ஜி, திருநங்கையோடு பேசிய ஒரு நேர்காணவில் “திருமணம் செய்து என்ன செய்ய போகிறீர்கள்?” என்ற கேள்வி கேட்டார். இந்துத்துவ மனநிலையில் இருக்கும் ஆணாதிக்கவாதிகளின் கேள்வி இது!

திருமணம் என்பது குழந்தை பெறுவதற்காக மட்டும் தானா?

திருமணம் என்பது இரண்டு மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அன்பு செலுத்தி, பொறுப்புகளை பகிர்ந்து கொண்டு, தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை இணைந்து வாழ்வதற்கான உறவு. குழந்தை பெறுவதும் பெறாமல் இருப்பதும் அவர்கள் விருப்பமாக இருக்கலாம். குழந்தை பெற முடியாத தம்பதிகளின் திருமணத்தையும் இதே அளவுகோலில் பார்ப்போமா? அப்படியானால் அன்பு, புரிதல், தோழமை, ஆதரவு இவற்றுக்கு என்ன இடம்?

ஒரு தம்பதி குழந்தை பெற வேண்டுமா வேண்டாமா? என்பதை தீர்மானிப்பது அவர்கள் தனிப்பட்ட உரிமை. அதே போல் ஒரு திருநங்கை யாரை நேசிக்க வேண்டும், திருமணம் செய்யலாமா? அப்படி செய்தாலும் எப்படி வாழ வேண்டும் என்பதையும் அவரே முடிவு செய்ய வேண்டும்.

ஒரு பெண்ணின் உடல் மீதான உரிமையை அந்தப் பெண்ணுக்கு இல்லாத சமூகம்தான் இது. திருநங்கையின் தனிப்பட்ட விருப்பத்தையா மதித்து விடும்? 

பெண்கள் அடுப்படியை விட்டு வெளியே வந்து விட்டார்கள். படித்து, சம்பாதித்து, அரசியல், அறிவியல் என அனைத்திலும் இடம் பிடித்து விட்டார்கள். இது பல தலைமுறை போராட்டம். ஆனால் வெளியே வந்த பெண்ணின் உடல் மீதான உரிமை யாரிடம் இருக்கிறது? எப்போது திருமணம், யாரை திருமணம், எப்போது குழந்தை, எத்தனை குழந்தை என்பதை இன்னும் குடும்பமும் சமூகமும் தான் தீர்மானிக்கிறது. பெண் சம்பாதிப்பதை ஏற்கும் சமூகம், அவள் குழந்தை வேண்டாம் என்று சொன்னால் மட்டும் அவளை கேள்வி கேட்கிறது. இதே மனநிலையே திருநங்கை மீதும் செலுத்தப்படுகிறது

பெண்ணின் சுதந்திரத்தை ஆண் தீர்மானிக்கிறான், திருநங்கையின் வாழ்க்கையை சமூகம் தீர்மானிக்கிறது. இரண்டிலும் பொதுவாக இருப்பது, தங்கள் வாழ்க்கையை பற்றி முடிவெடுக்கும் மனிதர்களை விட, அவர்களைப் பற்றி கருத்து சொல்லும் அதிகாரம் மற்றவர்களுக்கே இருக்கிறது.

தமிழ் சினிமா இத்தனை ஆண்டுகளாக திருநங்கைகளை எப்படி காட்டியது? நகைச்சுவை பொருளாக, பாலியல் தொழிலாளியாக, வில்லனாக. இப்படி ஒற்றைப் பரிமாணத்தில் காட்டியே சமூகத்தின் பார்வையை உருவாக்கியது சினிமா தான்.

இன்று டோரதி போன்ற படங்கள் அவர்களை உணர்வும், உரிமையும், காதலும் கொண்ட முழு மனிதர்களாக காட்டும் போது, அதை பிரதிநிதித்துவம் என்று கொண்டாட வேண்டும். ஒரு சமூகத்தை பற்றி பேசுவது மட்டும் பிரதிநிதித்துவம் அல்ல, அந்த சமூகத்தின் குரலுக்கு இடம் கொடுப்பதே பிரதிநிதித்துவம்.

பெண்களுக்காக ஆண்கள் பேசக்கூடாது என்பதல்ல, திருநங்கைகளுக்காக மற்றவர்கள் குரல் கொடுக்கக்கூடாது என்பதல்ல. ஆனால் அவர்களுக்காக பேசுகிறோம் என்ற பெயரில் அவர்களின் சொந்த குரலை மறைக்கக்கூடாது. ஒருவருக்காக பேசுவதற்கும், ஒருவர் பேசுவதற்கான இடத்தை உருவாக்குவதற்கும் பெரிய வேறுபாடு உண்டு.

“சுதந்திரத்தை பேசுவது எளிது, ஏற்பது கடினம்”

சுதந்திரம் என்பது நமக்கு பிடித்த முடிவுகளை மற்றவர்கள் எடுக்க அனுமதிப்பது அல்ல. நமக்கு பிடிக்காத முடிவுகளை அவர்கள் எடுத்தாலும் அவர்களின் உரிமையை மதிப்பது தான் உண்மையான சுதந்திரம்.

“தன்னுடைய பிள்ளை ஒரு  குற்றவாளியாக இருந்தால் கூட அவனை மன்னித்து ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் எத்தனை பெற்றோர்கள் அல்லது தாய்மார்கள் இயற்கையாக நடக்கும் இது போன்ற மாற்றங்களை ஏற்கத் தயாராக உள்ளனர்?”

திருநங்கைகள் பாலியல் தொழில் செய்வது அவர்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கை அல்ல, இந்த சமூகம் அவர்களை தள்ளிய படுகுழி. அந்த படுகுழியில் இருந்து அவர்களை கை கொடுத்து தூக்கி விடாமல், படுகுழிக்குள் இருந்து வெளியே வர துடிப்பவர்களை கேலி பேசும் உரிமை யாருக்கும் இல்லை.

அவர்களுக்கு சரியான அரசியல் அதிகாரம் கொடுத்தோமா? சமூக அங்கீகாரம் கொடுத்தோமா? வாழும் திறனுக்கான வழி கொடுத்தோமா? பாதுகாப்பான வேலை, குடியிருப்பு, கல்வி கொடுத்தோமா? எதுவும் இல்லாமல் அவர்களை மட்டும் கேள்வி கேட்பது என்ன நியாயம்?

டோரதி போன்ற படங்கள் அவர்களை மனிதர்களாக காட்டுகின்றன. அந்த மனிதர்களுக்கு ஒரு கழிப்பறை, ஒரு வீடு, ஒரு வேலை, ஒரு குடும்பம் என்ற அடிப்படை உரிமையை கொடுத்த பிறகு, அவர்கள் வாழ்க்கையை பற்றி விவாதிக்கலாம்.

அதுவரை கேள்வி கேட்கும் அனைவரும், பதில் சொல்ல வேண்டிய குற்றவாளிகளே. பெண்ணின் சுதந்திரத்தை ஆண் தீர்மானிக்கக்கூடாது, திருநங்கையின் வாழ்க்கையை சமூகம் தீர்மானிக்கக்கூடாது. கருத்து சொல்லலாம், ஆனால் வாழ்வை தீர்மானிக்கும் உரிமை அந்த மனிதருக்கே உரியது.

டோரதி படம் அதைத்தான் வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »