உலகத்தின் முடிவையும் கடந்து முதலாளித்துவம் சைலோவில் உயிர் பிழைத்தால்?

“உன்னை ஏன் பொறுப்பாளராக நியமித்தேன் தெரியுமா?” என்று ஒரு செயற்கை நுண்ணறிவு கேட்ட பொழுது, தனக்கு இருக்கும் பல திறன்களை சுட்டிக்காட்டி இவைதான் காரணம் என நியமிக்கப்பட்ட நபர் பதில்களைக்கூற,

அனைத்தையும் நிராகரித்துவிட்டு செயற்கை நுண்ணறிவு கூறியது,

“உன்னுடைய பொய் சொல்லும் திறன் தான்….தவிர, இந்த இடத்தை காக்க நீ எடுக்கும் முடிவுகளுக்கு நீ எந்த எல்லைக்கும் சென்றாய். யாரையும் தியாகம் செய்ய துணியும் மனதிடம்” எனத் தொடங்கி “உன்னுடைய இரக்கமற்ற குணம்” என்று முடிக்கிறது.

அநேக மேற்கத்திய படங்களில் வருவதை போல வாழத் தகுதியில்லாத கோளாக பூமி மாறியபின், 140 மாடிகளை  நிலத்திற்கு அடியில் உருவாக்கி பல நூற்றாண்டுகளாக பாதுகாப்பாக 10,000 மக்கள் வாழ்கிறார்கள். அனைவரும் அமெரிக்கர்களே. இதனை “சைலோ” (Silo) என்றழைக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட உரையாடலானது இந்த சைலோவின் நிர்வாகம் குறித்தானது.

ஹியூ ஹாவியின் (Hugh Howie) சைலோ சீரீஸ் (Silo Series) புத்தகத் தொடரைத் தழுவி கிரஹாம் ஹோஸ்ட் (Graham Host) உருவாக்கிய தொடர் ‘சைலோ (SILO)’. இதனை ஆப்பிள் டிவி (Apple TV) நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதில் மிஷன் இம்பாசிபில் (Mission Impossible), டியூன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரெபேக்கா பெர்குசன் (Rebecca Ferguson), ஜூலியட் நிக்கோலஸ் (Juliette Nichols) எனும் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

மாபெரும் தட்பவெட்ப சீரழிவிலிருந்து தப்பிக்கச் கட்டப்பட்டிருக்கும் சைலோவில், கிட்டத்தட்ட 350 வருடங்களாக தலைமுறை தலைமுறையாய் மக்கள்  வாழ்ந்து வருகிறார்கள். பறவைகள், விலங்குகள், மலைகள் என இயற்கை சார்ந்த பெரும்பாலானவைகள் இவ்வுலகில் இருந்திருக்கிறது என்று கூட அவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் சைலோ, சைலோவினுள் அதிகாரம் செலுத்தும் அதிகாரவர்க்கம் சொல்லும் கருத்துக்கள்..

சைலோ எப்படிப்பட்டது? மேலிருந்து கீழே உள்ள 140 மாடிகளில், சைலோவை உயிருடன் வைத்துக் கொள்ள துறைகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. மேலிருக்கும் நிர்வாகத்துறை. இங்கு சைலோவின் மேயர், நீதித்துறை, தொழில்நுட்பத்துறை என சகல வசதிகள் படைத்த அலுவலகங்களும் வீடுகளும் எனத்தொடங்கி, கீழே செல்ல செல்ல மருத்துவம், விவசாயம், தூய்மை பணி, சுரங்கப்பணி என கடைசி தளத்தில் சைலோவை இயங்கவைக்கும் பொறியல் துறை இருக்கும். மேல் தளங்களில் இருக்கும் நபர்கள் தவறு ஏதேனும் செய்தால் அவர்களுக்கு தண்டனையாக அடுத்தடுத்த தங்களுக்கு அனுப்பும் அளவிலான மோசமான நிலையில் தான் கீழே உள்ள தளங்கள் இருக்கும். கடைசி தளத்தில் இருக்கும் பொறியாளரான ஜூலியட் நிக்கோலஸ் (Juliette Nichols) எப்படி அதிகாரத்தை பிடித்து மக்களைக் காக்கிறார் என்பதே சைலோவின் கதை.

இதற்கு முன்பு இப்படியான வர்க்க பிரிவினைகளை மையமாக வைத்து வெளிவந்த டிஸ்டோபியன் (Dystopian) கதைகள் மேற்குலகில் ஏராளம். சைலோவின் கதையை ஒரு இரயிலில் என்ஜின் (Engine) என்றழைக்கப்படும் முன்பெட்டியில் ஆளும் வர்க்கமும், டெயில் (tail) என்ற கடைசி பெட்டியில் அடிமையாக வாழும் உழைக்கும் வர்க்கம் இருக்கும் கதை சுனோபியர்சர் (Snowpiercer). இதனை பாரசைட் (Parasite) புகழ் பாங்-ஜாங்-உன் இயக்கியிருந்தார். ஆனால் இது போன்ற மற்ற படைப்புகளிலிருந்து எப்படி மாறுபடுகிறது சைலோ ?

திரைக்கதை, வித்தியாசமான அணுகுமுறை எனப் பல காரணிகள் இருந்தாலும், சைலோ மாறுபடும் இடம், அது எடுத்துரைக்க முயற்சிக்கும் அதிகாரப்பசிக்கான வேட்டை. ஒரு பெரும் குழுவை நிர்வகிக்கும் அல்லது தலைமை தாங்கும் நபரின் அடிப்படைத் தகுதிகளாக பல நற்குணங்கள் எதிர்பார்க்கப்படலாம். ஆனால் நன்றாக பொய் சொல்லும் நபர் தான் வேண்டும் எனத் தொடங்கி, ‘எது செய்தாலும் சைலோவின் நன்மைக்கே, சைலோவை நாளை அழித்தாலும் அதுவும் சைலோவின் நன்மைக்கே’ எனும் முதலாளித்துவத்தின் ஈவு இரக்கமற்றத் தன்மையைதான் மக்களின் எதிரியாக சித்திரித்திருக்கிறார்கள். பல படலங்கள் (Seasons) கடந்து இன்று 3வது படலமும் வந்துவிட்டது. முதல் படலத்தில் எதிரியாக இருந்த நபர் மூன்றாவது படலத்தில் உயிரோடு இல்லை. ஆனால் அவர்களின் தத்துவம் புது எதிரிக்கு ஊட்டப்படுகிறது. எப்படி ? சைலோவின் நன்மைக்காக.

சைலோவின் வெளியில் இருக்கும் அசாதாரண சூழலை உள்ளிருக்கும் மக்கள் பார்க்க வேண்டும் என்று பல இடங்களில் பெரிய திரை சைலோவினுள் அமைக்கப்பட்டிருக்கும். வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கருவி மூலம் மாசுபட்டு, அழிந்து, கருப்பாக இருக்கும் உலகத்தை உள்ளிருக்கும் மக்கள் எந்நேரமும் பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.

இதனை அமைத்ததற்கு காரணம் சைலோவின் குடிமகன்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என உணர்த்துவதற்காக.

சைலோவிலிருந்து வெளியே செல்லவேண்டும் என வாயால் கூறும் நபர்கள் சைலோவை விட்டு வெளியே அனுப்பப்படுவார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், எந்த கணம் அவர்களுக்கு வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டதோ, அப்போதே அவர்கள் அந்த முயற்சியில் சைலோவிற்கு ஆபத்தை விளைவிப்பார்கள். அதனால் அவர்களின் விருப்படியே பாதுகாப்பு உபகரணங்களுடன் வெளியே அனுப்பி விடுவார்கள். இதனை கிளினிங் (Cleaning) என்றழைக்கிறார்கள். காரணம், வெளியில் இருக்கும் கண்காணிப்பு கருவி, வெளியில் இருக்கும் மாசு கலந்த காற்றால் அடிக்கடி கறைபடிந்து காணப்படும். வெளியில் செல்லும் நபர்கள் ஒரு சடங்காக அந்த கருவியை துடைத்து, அதனை சுத்தம் செய்து விட்டே முன்னே செல்வார்கள். ஆனால சில நிமிடங்களில் அவர்கள் மரணிப்பார்கள். ஏனெனில் வெளி உலகம் அவ்வளவு மோசமான தட்பவெட்ப நிலையில் உள்ளது. வெளியில் சென்ற எவரும் உயிருடன் வந்தது இல்லை.

கவனமான திரைக்கதை மூலமாக 350 வருடங்களுக்கு முந்தைய கதையையும், தற்காலத்தில் நடக்கும் கதையையும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பயணித்து கதையின் கருவை நோக்கி நம்மையும் பயணிக்க வைக்கிறது. இக்கதை முழுதுவதும் ரிபிளியன் (Rebellion) எனும் ஒரு நிகழ்வை குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு 20 வருடத்திற்கும் சைலோவினுள் ஒரு புரட்சி வெடிக்கும். ஆனால் ஒரு தீர்வு இல்லாமல் அது மறுசுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் நடந்துகொண்டே இருக்கும். முதலாளித்துவம் ஒரே நேரத்தில் எப்படி பல நகர்வுகளை நகர்த்தி நிஜ உலகில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறதோ, அப்படியே சைலோவினுள்ளும் தன்னை நிலைநிறுத்த முனைப்புடன் நகர்கிறது. ஆனால் நிஜ உலகில் எது அவர்களை பீதியுறச் செய்கிறதோ அங்கேயும் அதுவே அவர்களுக்கு சவாலாக இருக்கிறது. நமக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், கறுப்பர்கள் வாழும் பகுதி, இந்தியாவில் சிறுபான்மையினர் வாழும் பகுதி போன்ற ஒரு பகுதிதான் கடைசி தளமான பொறியியல் தளம். எப்படி நாட்டில் நடக்கும் சீரழிவுக்கெல்லாம் அப்பாவி இசுலாமிய மக்கள், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பழி சுமத்தப்படுகிறதோ, அங்கேயும் அப்படியே நடக்கிறது. அடக்குமுறை எவர் மீது நிகழ்த்தப்படுகிறதோ அங்கிருந்தே பலமான தலைமை உருவாகும் என நிகழ்காலத்தில் நாம் பார்க்கும் தலைமைகளைப்போல, கடைசி தளத்திலிருந்து உருவெடுக்கிறார் ஜூலியட் நிக்கல்ஸ்.

சைலோவின் பொறியாளராக அதனுடைய உயிர்நாடியாக விளங்கும் இயந்திரங்களை ஒரே ஆளாக சரிசெய்கிறார். சைலோவின் மேயராகிறார், கிளீனிங்கிற்காக வெளியே செல்கிறார் ஆனால் தனது லாவகமான செயல்பாடுகள் மூலம் உயிர் பிழைக்கிறார். உயிர்பிழைத்தது மட்டுமில்லாமல், மீண்டும் ஒரு தீர்வுடன் சைலோவிற்குள் வருகிறார். இப்படி சைலோவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் நபர்களுக்கு இவரால் பெரும் ஆபத்து. ஒரு கட்டத்தில் அவருக்கு நினைவுகள் மறந்துவிட, இனி ஜூலியட் அவர்களுக்கு சிக்கலாக இருக்கமாட்டார் என என்கிறார்கள் நிர்வாகிகள். ஆனால், ஞாபகமறதி தத்துவங்களையும், படிப்பினைகளையும் மறக்கடிக்க செய்யலாம். ஆனால், சக மனிதர்கள் துன்புறுவதை கண்டு பொறுத்துக் கொள்ளமுடியாத தன்மை, மக்கள் தலைவர்களுக்கு சுவாசிப்பதை போல. அது மறந்துபோகாது.

சைலோவிற்கு முந்தைய உலகம் எப்படிப்பட்டது, ஏன் அவர்கள் சைலோவில் வாழ்கிறார்கள் என அவர்களுக்கு எதுவும் தெரியாது. தெரிந்துகொள்ள முனைப்பு காட்டும் நபர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். சைலோவிற்கு முந்தைய உலகத்திலிருந்து ஒரு புத்தகத்தைக்கூட இங்கு வைத்திருக்கக்கூடாது. அதனை ரெலிக் (Relic) என தடைசெய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு காட்சியில் அதிகாரவர்க்கத்தின் முக்கிய பதவியில் இருக்கும் ஒரு நபரே வெளியே செல்ல விரும்புகிறார். இல்லையெனில் பல ரகசியங்களை வெளியிட நேரிடும் என்கிறார். அவருக்குத் தெரியாமல் விஷம் கலந்த உணவை அவருக்கு கொடுத்த பின்னர், அவருக்கு விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) மூலம் வெளியுலகத்தை காண்பிக்கிறார் சைலோவின் உயரிய அதிகாரி.

அது பறவை, இங்கே பார் யானை, இதற்கு பெயர் தான் ஆறு, இது கடல் என மரணிக்கும் தருவாயில் அவர் பார்க்கும் காட்சிகளை எல்லாம் அதிகாரி எடுத்துரைக்க, கடைசி மூச்சை விடுவதற்கு முன் அவர் கேட்கிறார்,

“What did they do ? How did they lose this world?”

“நம் முன்னோர்கள் என்ன செய்தார்கள் ? இப்படிபட்ட உலகத்தை எப்படி இழந்தார்கள்?”

ஆம் எப்படி மனிதர்கள் இந்த உலகத்தை இழக்கிறார்கள் ? அதற்கும் காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. காரணம் வேறு ஒன்றும் இல்லை.

ஈரான் தான்….அமெரிக்க – இசுரேலிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து நிற்கும் பாலஸ்தீனம், லெபனான், ஈரான், எகிப்து போன்ற நாடுகளை கண்காணித்து, அவர்களை வேட்டையாட சர்வ வல்லமை படைத்த தொழில்நுட்ப வசதிகளை செய்துகொடுப்பதே ஆப்பிள், சாட்ஜிபிடி(ChatGPT) தொடங்கி எலன் மஸ்க், மார்க் சுகர்பர்க் போன்ற முதலாளிகள் தான். இதே ஆப்பிள் டிவி தயாரித்து வெளியிட்ட “புளூரிபஸ்” (Pluribus) எனும் திரைத்தொடர் எப்படி பொதுவுடமை சித்தாந்தத்தை பகடி செய்தது என்று “புளூரிபஸ்” குறித்து நாம் வெளியிட்ட கட்டுரையில் பார்த்தோம். முதல் இரண்டு படலம் வரும் வரை கதையில் ஈரான் இல்லை. ஆனால் இந்த மாதமே வெளியான மூன்றாவது படலத்தில் திடீரென ஈரான் கதைக்குள் வந்தது. எப்படி ?

தற்காலத்தில் நடக்கும் போர் மூலம் தான். அமெரிக்கா – இசுரேலை, ஈரான் எப்படி திக்குமுக்காட செய்தது என்பது உலகம் அறிந்ததே. சைலோவின் கதையில், இவர்களுக்குள் நடக்கும் போரில், ஈரான் அமெரிக்கா மீது ஒரு உயிரியல் ஆயுதத்தை செலுத்துகிறது (Bio-weapon). இது வெடித்த இடத்தில் உலகம் பாதிக்கப்படத் தொடங்கி, வாழ்த்தகுதியற்ற இடமாக பூமி மாறுவதாக காட்டப்படுகிறது. கிட்டத்தட்ட இரண்டு படலங்கள், 20 மணி நேர காட்சிகள் மூலம் பூமி அடையும் பாதிப்பை பார்வையாளர்களிடம் கடத்திவிட்டு, ஒட்டுமொத்த பாதிப்பின் தொடக்கப்புள்ளி ஈரான் செலுத்திய அந்த ஒரு ஆயுதத்தால் என்று கூறுகிறார்கள்.

அமெரிக்க சர்வதேச வளர்ச்சி முகமை USAID (United States Agency for International Development) மற்றும் தேசிய ஜனநாயக அறக்கட்டளை NED (National Endowment for Democracy) ஆகிய இவ்விரு அமைப்புகளும் அமெரிக்காவின் உளவு நிறுவனமான CIA-வினால் (Central Intelligence Agency) உருவாக்கப்பட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகள், வியட்நாம் போன்ற நாடுகளில் அமெரிக்க உருவாக்கிய போர்களை வலுப்பெற செய்து, அதே நேரம் அந்நாட்டு அரசுகள் மீது பத்திரிக்கை தொடங்கி திரைப்படம் வரை பல முனைகளிலிருந்து நாட்டினுள்ளிருந்தே போர் தொடுக்கும். சொந்த மக்களே தங்களின் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்குவார்கள். ஈவா கோலிஞ்சர் (Eva Gollinger) எழுதிய, புஷ் vs சாவேஸ் : வெனிசுலா மீதான அமெரிக்காவின் போர் எனும் புத்தகத்தில் எப்படி மேற்குலகம் 1000 வழிகளில் வெனிசுலாவை குலைக்க முயற்சி செய்தது என்பதை எழுதியிருப்பார். இன்றும் நிலை மாறவில்லை.

தொடர் முழுக்க புரட்சிகர சிந்தனைகளை, கதாபாத்திரங்களை நிரப்பி ஈரானை வில்லனாக்கியிருக்கிறது அமெரிக்கா. அயோக்கியத்தனத்தின் உச்சத்தை முதலில் எட்டுவது யார் எனும் போட்டியில் வலதுசாரி அரசாங்கங்கள் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருக்கிறது. ஈரான் நாட்டு தலைமையான காமெனேய், 18 மாதமே ஆன அவரின் பெயர்த்தி உட்பட அவரது குடும்பத்தினர் நால்வர் அமெரிக்காவின் தாக்குதலில் இந்தாண்டு கொல்லப்பட்டு, போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு அவர்களது இறுதி சடங்கு நடந்த பொழுது, “ஒட்டுமொத்த ஈரானும் இங்கு தான் இருக்கிறது, ஒரு குண்டு போட்டால் மொத்தமாக முடிந்துவிடும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி தான் தான் முதல் அயோக்கியன் என்று நிரூபித்திருக்கிறார்.

நமது சூரியக்கூடும்பத்தின் (Solar System) வயது ஏறக்குறைய 4.5 பில்லியன் வருடங்கள். இன்னும் 5.5 பில்லியன் ஆண்டுகள் நமது சூரியன் உயிர்ப்புடன் இருக்கும். பின்னர் அது தனது சிவப்பு இராட்சத நட்சத்திர  (Red Giant) கட்டத்திலிருந்து, வெள்ளை குள்ள (White Dwarf) நட்சத்திரமாக மாறும். இடைப்பட்ட காலத்தில் பூமி உயிர்வாழத் தகுதியான கோளாக இருப்பதற்கு முக்கிய காரணம், சூரியனிடமிருந்து குறிப்பிட்ட தூரமான வாழ்த்தகுதியான வட்டப்பாதையில் (Habitable zone) பூமி இருப்பது தான். சூரியனின் ஆயுட்காலத்தில் 1 பில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை அதன் ஒளிரும் விகிதம் 10 சதவிகிதம் அதிகரிக்கும். இப்படி நடக்கும் பட்சத்தில் சூரிய குடும்பத்தின் வாழ்த்தகுதியான வட்டப்பாதை தற்போது செவ்வாய் கிரகம் இருக்கும் இடத்திற்கு மாறும்.

விஞ்ஞான வளர்ச்சியின் மூலம், மனிதர்கள் வாழும் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் வண்ணம் பல கண்டுபிடிப்புகள் வரக்கூடும், மனிதன் தனது உடலைத் தாண்டி இயந்திரங்களில் வாழக்கூடிய சாத்தியக்கூறுகளை அறிவியல் நிகழ்த்திக்காட்ட தொடங்கியிருக்கிறது. பூமி அழிந்து நாம் செவ்வாய் கிரகத்தில் குடிபெயர்கிறோமோ அல்லது பால்வெளியின் வேறு இடங்களுக்கு சென்று வாழப்போகிறோமா அல்லது சைலோவில் வருவதைப்போல பூமியிலேயே துளையிட்டு வாழப்போகிறோமா என்று எதுவும் நிச்சயம் இல்லை. ஆனால் 300 ஆண்டுகளுக்கு முந்தைய மனித வரலாற்றை மறைத்து முதலாளித்துவ சித்தாந்தத்தை நிறுவித்தான் அமெரிக்கா சைலோவையும் அதன் மக்களையும் ஆள்கிறது.

நாம் எந்த கிரகத்திற்கு சென்றாலும் முதலாளித்துவ கோட்பாட்டை நிறுவி, சனாதன கோட்பாட்டை நிறுவி அங்கும் கருப்பினத்தவரை அடிமையாகவும், ஒடுக்கப்பட்ட மக்களை மலம் அள்ள வைக்கவும் தற்போதைய முதலாளித்துவ நாடுகளும் அவற்றின் ஒட்டுண்ணிகளால் முடியும் என்பதைத்தான் சைலோ கூறுகிறது.

ஒவ்வொரு முறையும் பூமியை காக்க அவெஞ்சர்ஸ் (Avengers) தான் வரவேண்டும் என்றில்லை. உலகத்தொழிலாளர்களே இன்று கூடுங்கள் என்றார் பேராசன் கார்ல் மார்க்ஸ். பல நூற்றாண்டுகளாக முதலாளித்துவம் தனக்கான கட்டமைப்பை மெதுவாக உருவாக்கி இன்று மாபெரும் பலத்துடன் நம்மை ஆட்கொள்கிறது. ஒரு தனிமனிதனை தனது கட்டமைப்புகள் மூலமாக சர்வசாதாரணமாக அவர்களின் பக்கம் இழுத்துக்கொள்கிறார்கள். உலக இடதுசாரிகள் ஒன்று கூட வேண்டிய கட்டாயம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே தான் செல்கிறது.

சைலோவின் மூன்றாவது படலம் ஆப்பிள் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்க, மேலுமொரு படலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்காம் படலத்தின் முடிவில் சைலோ எதை முன்மொழிகிறது என்று காத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »