மூன்று அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த கர்நாடக அரசுக்கு கண்டனம் – மே 17 அறிக்கை

மூன்று அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த கர்நாடக காங்கிரஸ் அரசை வன்மையாக கண்டிக்கிறோம்! கர்நாடக காங்கிரஸின் தமிழின விரோத போக்கை எதிர்த்திடுவோம்! – மே பதினேழு இயக்கம்

கர்நாடக மாநிலத்தில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை மீட்க சென்ற அப்பாவித் தமிழர்கள் மூன்று பேரை கர்நாடக வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. கர்நாடக காங்கிரஸ் அரசின் தமிழர் விரோதப் போக்கே இதற்கு அடிப்படைக் காரணம். மூன்று அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த கர்நாடக காங்கிரஸ் அரசை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

கர்நாடக எல்லைப்பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் ஹானூரில் உள்ள மரிமங்கலத்தில், ஆகஸ்ட் 15 அன்று காட்டுக்குள் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை மீட்கச் சென்ற தமிழர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் ஜெபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூன்று அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்தனர். காயமடைந்து உயிர் தப்பிய மரிய மகிமை தாஸ் என்பவர் அளித்த தகவலின் பேரில் இந்த உண்மை வெளிவந்துள்ளது.

காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழர்கள் மான் வேட்டையில் ஈடுபட்டதாக கூறி கர்நாடக வனத்துறையினர் இந்த படுகொலையை செய்துள்ளனர். இறந்தவர்களது உடல்களை எடுத்துச் சென்றதோடு, தகவல் அளிக்காமலும் இருந்துள்ளனர். மாடுகளை மீட்கச் சென்றவர்கள் மீது தமிழர்கள் என்பதாலேயே எவ்வித விசாரணையுமின்றி பொய்யாக குற்றஞ்சாட்டி இந்த படுகொலையை கர்நாடக வனத்துறையினர் செய்துள்ளனர். ஒருவேளை அவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டிருந்தாலுமே அவர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

மேக்கேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவிப்பது, காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்துவது என தமிழ்நாட்டின் எதிர்ப்பை கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்கொண்டு வரும் நிலையில், கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழர்கள் மீது விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில், தமிழர்களை பழிவாங்கவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்து மூன்று அப்பாவித் தமிழர்களை கர்நாடக அரசு படுகொலை செய்துள்ளது.

இந்த அப்பட்டமான படுகொலையில் தொடர்புடைய கர்நாடக வனத்துறையினர் மீது கர்நாடக அரசு உடனடியாக கொலை வழக்கு பதிவு செய்து சிறையிலடைக்க வேண்டும். தமிழ்நாடு த.வெ.க. அரசு அதனை உறுதிசெய்ய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. இந்த படுகொலையின் பின்னணி முழுமையாக ஆராயப்பட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஆகவே, உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்றை தமிழ்நாடு த.வெ.க. அரசு அமைக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் கோருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டினை பெற்றுத் தர வேண்டிய பொறுப்பும் த.வெ.க. அரசுக்கு இருப்பதை மே பதினேழு இயக்கம் கவனத்தில் கொண்டுவருகிறது.

எல்லையோர பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. எல்லையோர தமிழர்களை பாதுகாக்க வேண்டிய கடமை தமிழ்நாடு த.வெ.க. அரசுக்கு உள்ளது. அதற்கான சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மீண்டும் இதுபோன்று எல்லை தாண்டி தமிழர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அறவே தடுக்கப்பட வேண்டும். தமிழர்கள் மீதான வன்முறையை இதனோடு ஒழித்துக்கட்டுவோம்!

மே பதினேழு இயக்கம்

17/08/2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »