
GenZ தலைமுறையின் அரசியல் நுழைவு குறித்தும் அவர்களின் அரசியல் வழிமுறைகள் எவ்வாறு பழமையான கட்சி அரசியலில் இருந்து வேறுபடுகிறது என்பது குறித்தும் ஜாக்கோபின் ஊடகத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்:
GenZ தலைமுறை பெரும்பாலும் அக்கறையற்ற, ஆர்வமில்லாத தலைமுறை என்று புறக்கணிக்கப்படுகிறது. ஆனால், முன்னணி அறிஞர்களுடனான நேர்காணல்கள் இதற்கு எதிரான கருத்தை சுட்டிக்காட்டுகின்றன. தாங்கள் தங்குமிடங்களிலோ வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் நிறுவனங்களில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு மத்தியில் வளர்ந்து வரும் ஒரு தலைமுறை, அரசியலின் மீது நம்பிக்கையை இழக்கவில்லை, மாறாக முதலாளித்துவம் கொடுத்த வாக்குறுதிகளின் மீதுதான் நம்பிக்கையை இழக்கிறது.
GenZ தலைமுறை பெரும்பாலும் கவனச்சிதறல் உடையவர்கள், அவநம்பிக்கை கொண்டவர்கள், அரசியல் ரீதியாக நிலையற்றவர்கள் அல்லது அதன் மீது ஒவ்வாமை கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்தக் கூற்றில் ஒரு முக்கியமான கருத்து மறுக்கப்படுகிறது. இந்தத் தலைமுறை அக்கறையற்ற தலைமுறை அல்ல. மாறாக அரசியல், வேலை மற்றும் இளைஞர்களின் வாழ்க்கைக்கு ஒரு நிலையான கட்டமைப்பை வழங்காத நிறுவனங்கள் மீதான நம்பிக்கை சரிந்ததே அதற்குக் காரணம்.
பல நூற்றாண்டுகளாக, முதலாளித்துவம் இளைஞர்களுக்கு பல வாக்குறுதிகளைத் தொடர்ச்சியாக அளித்தது. “கல்வி பயில்வது வேலைக்கு வழிவகுக்கும்; வேலைக்குச் செல்வது வாழ்க்கையை நிலையானதாக்கும்; இதனால் வீடு, குடும்பம் என்று ஓரளவு கண்ணியமான வாழ்க்கை கிடைக்கும்” என்று பல வாக்குறுதிகளை முதலாளித்துவம் அளித்தது. ஆனால் இந்த வாக்குறுதி ஒருபோதும் சமமாகப் பகிரப்படவில்லை. பலருக்கு, அவை கிடைக்கவில்லை. அதனால் இப்போது Gen Z தலைமுறை அதை நம்புவதில்லை.
உலகின் வெவ்வேறு சமூகங்களில் வாழும் இளைஞர்கள், இன்று ஒரே மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொண்டு முதிர்ச்சியான உலகிற்குள் / வாழ்க்கைக்குள் நுழைகிறார்கள். அவர்களுக்கு கிடைப்பது நிலையான வேலை அல்ல; தற்காலிகமான வேலைகள். சொந்த வீடு வாங்குவது கடினமாகிவிட்டது. மாணவர் கடன், நுகர்வோர் கடன் போன்ற கடன்கள் அதிகரித்துள்ளன. வேலைவாய்ப்புகளும் நெறிமுறை (Algorithm) மற்றும் டிஜிட்டல் (Digital) தளங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. காலநிலை மாற்றம் குறித்த அச்சமும் அதிகமாக உள்ளது.
அதே நேரத்தில், “தங்களுடைய வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியாத அளவுக்கு அரசியல் அமைப்புகள் பலவீனமாக உள்ளன, அதிகாரமிக்கவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன” என்று இளைஞர்கள் நினைக்கிறார்கள்.
இந்த தலைமுறைக்கு அரசியல் கட்சிகள், தலைவர்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் மீது நம்பிக்கை குறைந்துள்ளது. ஆனால் அவர்கள் அரசியலில் இருந்து விலகவில்லை. அவர்கள் வாக்களிக்கிறார்கள், போராட்டங்களில் பங்கேற்கிறார்கள், புறக்கணிக்கிறார்கள். இணையத்தில் மக்களை ஒருங்கிணைக்கிறார்கள், வேலைகளை விட்டு வெளியேறுகிறார்கள், சமூக ஊடகங்கள் வழியாக தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
முக்கியமாக, அவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையையே அரசியல் போராட்டமாக மாற்றுகிறார்கள். முன்பு போல் அல்லாமல், அவர்களின் அரசியல் பல குழுக்களாகப் பிரிந்துள்ளது. வேகமாக மாறுகிறது. தலைமை இல்லாமல் இயங்குகிறது. சில நேரங்களில் அவர்கள் எதிர்க்கும் அதே சந்தை அமைப்புகளால் அவர்களின் போராட்டங்களும் ஆட்கொள்ளப்படுகின்றன. இருந்தாலும், இதுவும் அரசியல்தான்.
இந்தக் கட்டுரைக்காக நடத்தப்பட்ட நேர்காணல்களில், கை ஸ்டாண்டிங், எம்ரே எர்டோகன், கிறிஸ்டியன் ஃபூக்ஸ் மற்றும் அனு முஹம்மது ஆகியோர் இந்த நெருக்கடியின் வெவ்வேறு பகுதிகளை விவரித்திருக்கின்றனர். அதாவது, பாதுகாப்பான எதிர்காலம் இல்லாத, முதலாளித்துவத்தால் இன்னும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்று நம்புவதற்கு உறுதியான காரணம் இல்லாத ஒரு தலைமுறை உருவாகுவதே அந்த நெருக்கடி.
“எனக்கு எந்த சித்தாந்தமும் இல்லை. நான் உலக ஒழுங்கை மட்டுமே வெறுக்கிறேன்” என இஸ்தான்புல்லில் வசிக்கும் பத்தொன்பது வயது பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இதை இன்னும் வெளிப்படையாகக் கூறுகிறார்.
இந்த வாக்கியம் இளைஞர்களின் கோபத்தை விடப் பெரிய ஒரு விடயத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. நாம் காண்பது ஒரு தலைமுறைப் பிளவு. Gen Z தலைமுறை அரசியலிலிருந்து விலகவில்லை. முந்தைய அரசியல்மொழி மற்றும் அரசியல் மாதிரியின் (model) மீதான நம்பிக்கையை இழந்துள்ளது. மேலும், பழைய அரசியல் சொற்களஞ்சியங்களால் புரிந்துகொள்ள முடியாத ஒரு உலகில் அது வளர்ந்துள்ளது.
GenZ தலைமுறை வர்க்க உறவுகளுக்கு அப்பாற்பட்டு இயங்குவதில்லை. முதலாளித்துவத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் வர்க்கக் கட்டமைப்பையும் வேலைச் சூழலையும் மறுவடிவமைத்துள்ளன. GenZ தலைமுறை இந்தப் புதிய உறவுகளுக்குள்ளேயே முதிர்ச்சியடைந்துள்ளது. நாம் GenZ தலைமுறையின் அரசியலை ஒரே மாதிரியான தலைமுறையின் அரசியலாகப் புரிந்துகொள்ளக் கூடாது; மாறாக, வர்க்க உறவுகளில் ஏற்பட்ட ஒரு விரிவான மாற்றத்தின் தலைமுறை வெளிப்பாடாகவே புரிந்துகொள்ள வேண்டும்.
பணி பாதுகாப்பு / தொழில் எதிர்காலம் இல்லாத ஒரு தலைமுறை:
பிரிட்டிஷ் பொருளாதார நிபுணரும் தொழிலாளர் கோட்பாட்டாளருமான கை ஸ்டாண்டிங், “Precariat” என்று அழைக்கப்படும் புதிய வகை தொழிலாளர் வர்க்கம் உருவாகி வருவதாக பல ஆண்டுகளாகக் கூறி வருகிறார்.
“Precariat” என்றால் முறையான வேலை கிடைக்காதவர்கள் மட்டுமல்ல, நிலையான வேலை இல்லாதவர்கள், வருமானம் எப்போது வரும் என்று தெரியாதவர்கள், கடனில் இருப்பவர்கள், ஒரு குறிப்பிட்ட தொழிலில் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்க முடியாதவர்கள் ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குகிறார்கள்.
இவர்கள் தொடர்ந்து புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். தங்களை மீண்டும் மீண்டும் வேலைச் சந்தையில் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். எப்போது வேலை கிடைக்கும் என்று தெரியாமலேயே வேலை தேடிக்கொண்டிருக்க வேண்டும்.
கை ஸ்டாண்டிங் கூறுவதுபோல், இன்று நாம் வாழ்வது உலகளாவிய முதலாளித்துவத்தின் ஒரு புதிய காலகட்டம். வருமானமும் செல்வமும் அதிகாரமும் பெரும்பாலும் உயர் அடுக்கைச் (elite) சேர்ந்த, ஏற்கனவே சொத்து வைத்திருப்பவர்களிடமே சென்று சேர்கின்றன.
இதனால் பெரும்பாலான இளைஞர்கள் எதிர்காலத்தில் நிலையற்ற வேலைகளையும் குறைந்த வருமானத்தையும் பெற வேண்டியிருக்கும். அவர்களில் பலர் தொடர்ந்து கடனில் வாழ வேண்டிய நிலையும் ஏற்படும்.
இன்றைய இளைஞர்களுக்கு முந்தைய தலைமுறைகளைவிட மோசமான வேலையே கிடைக்கிறது என்பது மட்டும் பிரச்சினை அல்ல, ஒவ்வொரு புதிய தலைமுறையும் உறுதியற்ற வேலைவாய்ப்பினால் Precariat வர்க்கத்திற்குள் இன்னும் ஆழமாகச் செல்கிறது.
“இளைஞர்களுக்கு வேலை கிடைத்தாலும், அது அவர்களுக்கு நிலையான தொழில் வாழ்க்கையை உருவாக்கித் தருவதில்லை” என்று ஸ்டாண்டிங் கூறுகிறார்.
அவர்கள் தொடர்ந்து வேலை தேடுகிறார்கள். புதிய பயிற்சிகளைப் பெறுகிறார்கள். புதிய வருமான வழிகளைத் தேடுகிறார்கள். ஆனால் இவற்றில் பலவும் வெளிப்படையற்றவை. அதனால் அவர்களுக்கு முறையான ஊதியம் கிடைப்பதில்லை.
இதனால் இளைஞர்களால் ஒரு நிலையான தொழிலில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவோ முடிவதில்லை. ஒரு குறிப்பிட்ட தொழிலில் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்குவது கடினமாகிறது.
இது முதலாளித்துவத்தின் செவ்வியல் வாக்குறுதிகளின் சரிவு ஆகும். முன்பு வேலை என்பது சம்பளம் பெறுவதற்கான வழி மட்டுமல்ல. சமூகத்தில் ஒரு இடத்தை, ஒரு அடையாளத்தை, எதிர்காலத்திற்கான நம்பிக்கையை, வாழ்க்கையில் ஒரு திசையை வேலை கொடுத்தது.
ஆனால் இன்றைய வேலைச் சூழல் பல இளைஞர்களுக்கு சோர்வு, நிச்சயமற்ற நிலை மற்றும் கடனை மட்டுமே கொடுக்கிறது. தொடர்ந்து எதிர்காலம் குறித்து கவலைப்பட வேண்டிய மன அழுத்தத்தையும் உடல்நலப் பிரச்சினைகளையும் உருவாக்குகிறது. நீண்ட நாட்களுக்கு இந்த நிச்சயமற்ற தன்மை தொடர்ந்தால் இது மன அழுத்தம், நோய் மற்றும் பயமாக மாறும்.
“பொதுவாக வறுமையில் வாடும் தொழிலாளர் வர்க்கத்தில் உள்ள அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், நீண்ட காலமாக நிச்சயமற்ற தன்மையைச் சமாளிக்க வேண்டியுள்ளது,” என்கிறார் ஸ்டாண்டிங். “இதன் பொருள், ‘தெரியாத அறியாமைகளை’ எதிர்கொள்வதாகும்; அதாவது, அதிர்ச்சிகளைத் தாங்கும் திடத்தன்மையும் இல்லை, மீண்டு எழும் மீள்திறனும் இல்லை. இதன் தனிப்பட்ட விளைவுகளாகவே கடன், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன. நோய்கள் அதிகரித்து வருகின்றன” என்று கூறுகிறார்.
இது வெறும் வேலைவாய்ப்புப் பிரச்சினை அல்ல. இது ஒரு அரசியல் பிரச்சினையாகவும் மாறுகிறது. வேலை மூலம் நிலையான எதிர்காலத்தை உருவாக்க முடியாது என்று இளைஞர்கள் உணரும்போது, ‘அத்தகைய எதிர்காலம் இன்னும் சாத்தியம்’ என்று கூறும் அரசியல் நிறுவனங்களின் மீதான நம்பிக்கையும் குறைகிறது.
விதிகள் இனி செல்லுபடியாகாது:
இளைஞர்களின் கோபத்திற்கு பொருளாதாரப் பிரச்சினைகள் மட்டுமே காரணம் அல்ல. “இந்த சமூகத்தில் வெற்றி பெறுவதற்கான சரியான வழி என்ன?” என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லாமல் போய்விட்டதும் மற்றொரு முக்கியமான காரணம்.
அரசியல் ஆய்வாளர் எம்ரே எர்டோகன் (சமூக நம்பிக்கை, இளைஞர்கள் அரசியல் ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்தவர்) “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவான பழைய சமூக அமைப்பு பலவீனமடைந்துவிட்டது” என்று கூறுகிறார்.
முன்பு முதலாளித்துவத்தை அங்கீகரித்த நிறுவனங்கள் சிதைந்து போனதையே இளைஞர்களின் பாதுகாப்பின்மை பிரதிபலிக்கிறது என்கிறார் எர்டோகன். மேலும் “1945-க்குப் பிறகு உருவான பொதுக் கருத்திசைவு (consensus) முடிவுக்கு வந்துவிட்டது” என்று கூறும் அவர்,
“ஐக்கிய நாடுகள் சபையின் ஒழுங்குமுறை முடிவுக்கு வந்துவிட்டது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், மற்றும் உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றால் நிறுவப்பட்ட அமைப்பு சரிந்துவிட்டது. மக்கள்நல அரசு சரிந்துவிட்டது. ‘நம்மைக் காப்பாற்ற பாதுகாப்பு வலை (அரசு) ஒன்று இருக்கிறது’ என்று நாம் நினைத்தது இனி இருக்கப்போவதில்லை. நீங்கள் வீழும்போது, உங்களை யார் தாங்குவார்கள்? குடும்பம், உறவினர்கள், சக நாட்டு மக்கள் தங்குவார்கள்… அரசு அல்ல” என்கிறார் எம்ரே எர்டோகன்.
ஸ்டாண்டிங்கின் பகுப்பாய்வுகள் பொருளாதார நிலையை விளக்குகின்றன, அது ஏன் அரசியல் மயமாகிறது என்பதை எர்டோகன் விளக்குகிறார். இளைஞர்கள் வேலை தேடுவதில் மட்டும் சிரமப்படவில்லை. தாங்கள் எந்த விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதிலும் அவர்கள் சிரமப்படுகிறார்கள்.
“இனிமேல் ‘கடினமாக உழைத்தால் வெற்றி பெறுவீர்கள்’ என்று இளைஞர்களிடம் சொல்ல முடியாது,” என்கிறார் எர்டோகன்.
“எப்படி வெற்றி பெறுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. மக்கள் விதிகளை நம்புவதில்லை. இந்தச் சமூகத்தில் வெற்றிபெற என்ன தேவை என்பதில் ஒருமித்த கருத்து இல்லை. இளைஞர்கள் வேலை தேடுவதில் மட்டுமல்ல, தாங்கள் எந்த விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதிலும் சிரமப்படுகிறார்கள். இந்த நிச்சயமற்ற தன்மை, காலப்போக்கில், (இளைஞருடைய) தனிப்பட்ட தோல்வியாக உணரப்படாமல், கட்டமைப்பு அநீதி குறித்த ஒரு கண்ணோட்டமாக மாறுகிறது. இந்தக் கண்ணோட்டம் கோபத்தைத் தூண்டுகிறது.”
இந்த வேறுபாடு முக்கியமானது. இளைஞர்கள் தங்கள் பிரச்சனைகளை வெறும் தனிப்பட்ட தோல்வி என்று நினைத்தால், அதன் விளைவாக அவமானப்படலாம், ஒதுங்கிப் போகலாம் அல்லது அவர்களுக்கு விரக்தி ஏற்படலாம். ஆனால், ‘(தங்கள் வாழ்வைக் குறித்த) பாதுகாப்பின்மை’ என்பது கட்டமைப்பு ரீதியான அநீதியாகப் புரிந்துகொள்ளப்படும்போது, அவர்களின் கோபம் அரசியல் சார்ந்ததாக மாறுகிறது.
இஸ்தான்புல்லில் வசிக்கும் ஒரு கிரேக்க மாணவர், “நான் வருங்காலத்தில் வாக்களித்தால், ஒரு அரசியல்வாதியை நம்பி வாக்களிக்க மாட்டேன், மாறாக ஒரு எதிர்ப்பை வெளிப்படுத்தவோ அல்லது எதையாவது மாற்றுவதற்காகவோ தான் என் வாக்கு இருக்கும்” என்று கூறுவது இந்த அவநம்பிக்கையைத் தெளிவாக விவரிக்கும்.
இது வெறும் அவநம்பிக்கை அல்ல. இது சமூக ஒழுங்கின்மையின் வெளிப்பாடு: சமூக வாழ்வின் விதிகள் தங்கள் நேர்மையை இழக்கும் ஒரு நிலை. அந்த இளைஞர் இனி வருங்காலத்திலும் வாக்களிக்கலாம், பங்காற்றலாம். ஆனால் இதில் ஒரு முக்கியமான மாற்றம் இருக்கிறது.
முன்பு வாக்களிப்பது என்பது ஒருவரை நம்புவதால் செய்யும் செயலாக இருந்தது. இப்போது இளைஞர்களுக்கு யாரையாவது எதிர்ப்பதற்கான வழியாக வாக்களிப்பது மாறியுள்ளது.

இந்த நிலையை ‘சீற்றம் / மனக்கசப்பு’ (resentment) என்று கூறுகிறார் எர்டோகன்.
துருக்கியில் 2013-ஆம் ஆண்டு நடந்த Gezi Park போராட்டங்களில் இந்த மனக்கசப்பு வெளிப்பட்டது. சுற்றுச்சூழலைக் காக்க நடந்த ஒரு சிறிய போராட்டம் பின்னர் பெரிய அரசாங்க எதிர்ப்பு போராட்டமாக மாறியது.
கெஸி பூங்கா போராட்டம், ‘ஜென் Z’ தலைமுறையின் அரசியல் உலகிற்கு முந்தையது என்றாலும், எர்டோகன் அடையாளம் காட்டும் அதேபோன்ற மனநிலை பின்னர் மாணவர் போராட்டங்கள், நகர்ப்புறப் போராட்டங்கள், இணையப் பிரச்சாரங்கள் மற்றும் நுகர்வோர் புறக்கணிப்புகள் போன்ற பல வடிவங்களில் வெளிப்பட்டது.
உலகின் பல பகுதிகளில் அரசியல் போராட்டங்களின் முன்னணியில் GenZ உள்ளது. இதற்குக் காரணம், எல்லா GenZ இளைஞர்களுக்கும் ஒரே அரசியல் கொள்கை இருப்பதினால் மட்டுமல்ல. நிலையற்ற தன்மையும் நிறுவனங்கள் மீதான அவநம்பிக்கையும் இளைஞர்களிடம் பொதுவாகக் காணப்படுவதின் விளைவாகும்.
காலநிலைப் போராட்டங்கள் முதல் ஈரானில் பெண்கள் நடத்திய போராட்டங்கள் வரை, வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் நடந்த இளைஞர் போராட்டங்கள் முதல் இந்தியாவின் சமீபத்திய காக்ரோச் போராட்டங்கள் வரை அரசியல் நெருக்கடி காலங்களில், ஜென் Z தலைமுறையினர் மீண்டும் மீண்டும் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளனர்.
இன்றைய இளைஞர்களின் கோபம் புதியது அல்ல. ஆனால் அந்தக் கோபம் மிக வேகமாகப் பரவுகிறது. அந்தக் கோபத்தின் வேகம், அதன் இயங்குதன்மை, தெருக்கள், திரைகள், பணியிடங்கள், வளாகங்கள் மற்றும் சந்தைகள் முழுவதும் அந்தக் கோபம் பயணிக்கும் விதம் ஆகியவைதான் இதில் புதியவை.
டிஜிட்டல் முதலாளித்துவமும் போராட்டத்தின் புதிய களமும்:
சமூக ஊடகங்கள்தான் ஜென்Z தலைமுறையின் அரசியலுக்கு உந்துசக்தி என்று சொல்வது கவர்ச்சிகரமானதாகத் தோன்றலாம். ஆனால் அது மிகவும் எளிமையான ஒரு கூற்றாக இருக்கும்.
டிஜிட்டல் தளங்கள் சுரண்டலையோ கடனையோ வேலைவாய்ப்பின்மையையோ காவல்துறை வன்முறையையோ உருவாக்கவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினைகள் எப்படி மக்களிடம் தெரிகின்றன, எப்படி மக்கள் ஒன்றிணைகிறார்கள், எப்படி போராட்டங்கள் வேகமாகப் பரவுகின்றன என்பதை சமூக ஊடகங்கள் மாற்றியுள்ளன.
ஊடக ஆய்வாளர் கிறிஸ்டின் பியூச்ஸ் “’சமூக தளங்கள்’ என்பவற்றை போராட்டங்களுக்குக் காரணமாக புரிந்து கொள்வதை விட, டிஜிட்டல் முதலாளித்துவத்தின் கீழ் மத்தியஸ்தர்களாக அவற்றை புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார்.
சமகாலப் போராட்டங்கள், கிளர்ச்சிகள் மற்றும் புரட்சிகளுக்கு சமூக ஊடகங்கள் காரணமல்ல. இளைஞர்கள் தொழில்நுட்பத்தில் மிகவும் திறமையானவர்கள் என்பதால், போராட்டத்தின் போது ஒருங்கிணைக்கவும் தகவல்தொடர்பு கொள்ளவும் அவர்கள் எல்லா வகையான டிஜிட்டல் ஊடகங்களையும் பயன்படுத்துவது இயல்பு. சில ‘ஜென்Z’ போராட்டங்களில் ‘நிலையற்ற உழைப்பு’ (precarious labor) நிச்சயமாக ஒரு முக்கிய காரணியாகும். இருப்பினும், இந்தப் போராட்டங்கள் சமூக ஊடகத் தளங்களால் ‘உருவாக்கப்படுகின்றன’ என்று நம்மால் கூற முடியாது. டிஜிட்டல் முதலாளித்துவத்தில், இந்தத் தளங்கள் சுரண்டலையும் சமூகப் போராட்டங்களையும் உருவாக்குவதில்லை, மாறாக அவற்றிற்கான ஒரு ஊடகமாகச் செயல்படுகின்றன.
‘ஜென்Z’ தலைமுறையிடையே உருவாகியுள்ள அரசியலை, டிக்டாக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் அல்லது வேறு எந்தத் தளத்திற்குள்ளும் சுருக்கிவிட முடியாது. ஆனால், அவற்றை அவற்றிற்கு வெளியே புரிந்துகொள்ளவும் முடியாது. தலைமுறைக் குழுக்கள் வர்க்கத்தை அழித்து விடுவதில்லை. மாறாக, தலைமுறை அனுபவமே வர்க்க உறவுகள் அனுபவிக்கப்படும் சூழல்களை வடிவமைக்கிறது. ‘ஜென் Z’ தலைமுறையின் கோபம் பரவும் முக்கியக் களங்களில் ஒன்றாக டிஜிட்டல் ஊடகங்கள் மாறியுள்ளன. இங்கு போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்படும், அடையாளங்கள் உருவாக்கப்படும், அதே வேளையில் அந்த எதிர்ப்பைக்கூட தரவுகளாக இலாபமாக மாற்றக்கூடிய முக்கியக் களங்களில் ஒன்றாக டிஜிட்டல் ஊடகங்கள் மாறியுள்ளன.
பல இளைஞர்கள் இப்போது பணிபுரியும் சூழல்களில்தான் இந்த முரண்பாடு அடங்கியுள்ளது. இந்த அமைப்பை நிராகரிப்பவர்கள் கூட, ஊக வணிக டிஜிட்டல் சந்தைகள், செல்வாக்கு செலுத்துபவர்கள் (influencer), பொருளாதாரங்கள், தள உழைப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த (Algorithmic) போட்டி ஆகியவற்றால் ஈர்க்கப்படலாம். அவர்கள் காலையில் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடலாம், இரவில் அதன் தளங்களுக்காகச் உழைக்க நிர்பந்திக்கப்படலாம்.
டிஜிட்டல் முதலாளித்துவம் இளைஞர்களின் வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது அல்ல. அது அவர்களின் வேலை, தகவல் தொடர்பு மற்றும் பெருகிவரும் அவர்களின் சுய உணர்வையும் கட்டமைக்கிறது. ஊடக ஆய்வாளர் கிறிஸ்டின் பியூச்ஸ், டிஜிட்டல் மூலதனத்தை உலகளாவியது என்றும், டிஜிட்டல் தொழிலாளர்கள் உள்ளூர்வாசிகளாக, பிரிவுகளைக் கொண்டவர்களாக, தனிமைப்படுத்தப் பட்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் விவரிக்கிறார்.
பிரச்சனை என்னவென்றால், (டிஜிட்டல்) தள உழைப்புக்குக் குறைந்த ஊதியம் வழங்கப்படுவது மட்டுமல்ல, கூட்டு ஆற்றலைக் கட்டமைப்பதை கடினமாக்கும் வழிகளில் அது ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பதும்தான்.
“(டிஜிட்டல்) தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல் செயல்படுகிறார்கள், மேலும் கூட்டு அமைப்புக்கான சாத்தியக்கூறுகள் பலவீனமாக உள்ளன. இது அவர்களை மிகவும் பலவீனமானவர்களாகவும், எளிதில் சுரண்டப்படக்கூடியவர்களாகவும் ஆக்குகிறது” என்கிறார் கிறிஸ்டின் பியூச்ஸ்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்ந்து இணைக்கப்பட்டிருக்கும், ஆனால் அரசியல் ரீதியாகப் வேறுபட்ட ஒரு ஆற்றலை உருவாக்குகிறது. லட்சக்கணக்கானோர் இணையத்தில் உள்ளனர்; அனைவரும் ஆன்லைனில் வேலை செய்கிறார்கள். அனைவரும் ஏதோ ஒன்றை உருவாக்குகிறார்கள். ஆயினும், தொழிலாளர்கள் பெரும்பாலும் சந்தையைத் தனியாகவே எதிர்கொள்கின்றனர்.
மூலதனம் உலகமயமாக்கப்பட்டிருந்தால், தொழிலாளர்களும் உலகளவில் தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் பியூச்ஸ். “அதாவது, உலகளாவிய டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராக உலகளாவிய தொழிலாளர் அமைப்புகளும் உருவாக வேண்டும்” என்று கூறுகிறார்.
இங்குதான் இந்த விவாதம் இளைஞர் கலாச்சாரத்தைத் தாண்டிச் செல்கிறது. முந்தைய தலைமுறையினரை விட இளைஞர்கள் அதிக கிண்டலுடனும், பதட்டத்துடனும், இணையத்துடனும், அல்லது பொறுமையின்றியும் இருக்கிறார்களா என்பது கேள்வியல்ல.
கேள்வி இதுதான்: தகவல்தொடர்பின் புதிய வடிவங்கள், புதிய டிஜிட்டல் வேலை முறைகள் வர்க்க அமைப்பையே மாற்றுகின்றனவா? அப்படியானால், இந்த புதிய வர்க்க அரசியல் வடிவங்கள், அவை புழங்கும் தளங்களால் உள்வாங்கப்படுவதிலிருந்து தப்பிக்க முடியுமா?
பாதிக்கப்பட்ட இளைஞர்கள், அரசியல் சக்தியாக மாறுகிறார்கள்:
வங்கதேசப் பொருளாதார நிபுணர் அனு முஹம்மது வேலைவாய்ப்பின்மையும் நிலையற்ற வேலைச்சூழலும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் முக்கிய பிரச்சினைகள் என்று கூறுகிறார்.
ஆனால் இந்த நிலை எல்லா இளைஞர்களையும் ஒரே மாதிரி மாற்றுவதில்லை. “ஆளும் வர்க்கங்கள் இத்தகையச் சூழ்நிலையை இளைஞர்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகப் பார்க்கின்றன,” என்கிறார் முஹம்மது. “இளைஞர்கள் சிறு வயதிலிருந்தே நிச்சயமற்ற தன்மையையும் நம்பிக்கையின்மையையும் எதிர்கொள்கின்றனர். சில இளைஞர்கள் (முதலாளித்துவ) அமைப்புக்குள் சென்று அதற்கே ஆதரவாக மாறலாம். மற்றவர்கள் அதே அமைப்பை கேள்விக்குள்ளாக்கி எதிர்க்கலாம்.”

இது GenZ அரசியலின் மைய முரண்பாடுகளில் ஒன்றாகும்.
அதாவது, ஒரே பிரச்சினை இரண்டு விதமான அரசியலை உருவாக்கலாம். இளைஞர்களின் ஒரு பிரிவு அமைப்பின் ஒரு கருவியாக மாறக்கூடும், அதே சமயம் மற்றொரு பிரிவு அமைப்பை எதிர்க்கக் கூடும்.
2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மாணவர் எழுச்சி இதற்கு ஒரு உதாரணம். உலகின் பல பகுதிகளிலும் இதுபோன்ற நிகழ்வுகளைப் பார்க்க முடிகிறது. இளைஞர்கள் எப்போதும் அரசியல் கட்சிகள் மூலம் அணிதிரட்டப்படுவதில்லை. அவர்கள் எப்போதும் ஒரே மாதிரியான சித்தாந்தங்களால் வழிநடத்தப்படுவதில்லை. அவர்களின் இயக்கங்கள் பெரும்பாலும் நிலையற்றவையாகவும், உள்ளுக்குள் முரண்பாடு கொண்டவையாகவும் இருக்கின்றன. ஆயினும், அவர்கள் மீண்டும் மீண்டும் அரசியல் போராட்டங்களின் மையத்தில் தோன்றுகிறார்கள்.
இளைஞர்கள் பழைய அரசியல் வழிகளில் அரசியலுக்கு வருவதில்லை. பழைய முறையில் இளைஞர்கள் அரசியலில் சேர வேண்டுமென்றால்: கட்சியில் உறுப்பினராக வேண்டும், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும், ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசியல் கட்சிகள் எதிர்பார்க்கின்றன.
ஆனால் Gen Z இளைஞர்கள் பெரும்பாலும் வேறு வழியில் அரசியலுக்குள் வருகிறார்கள். அவர்கள் காலநிலைப் பேரழிவுக்காக போராடலாம், ஊழலை எதிர்த்துப் போராடலாம், பல்கலைக்கழகப் போராட்டமாக அவர்களின் அரசியல் நுழைவு இருக்கலாம். அல்லது சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு வீடியோ சமூக அநீதியைப் பற்றி பேசினால் அதற்கும் அவர்கள் போராடலாம்.
இதனால் உருவாகும் அரசியலைக் கட்டுப்படுத்துவது பழைய வழிமுறையை பின்பற்றும் அரசியல் கட்சிகளுக்கு கடினமாகிறது. ஏனெனில் புதிய வழிமுறை வேகமானது, தீவிரமானது, சில நேரங்களில் தலைவர்களே இல்லாமல் இயங்குகிறது, சில நேரங்களில் பேச்சுவார்த்தையை நிராகரிக்கிறது. ஆனால் இத்தகைய காரணங்களால் அதை ‘அரசியலற்றது’ என்று யாரும் நிராகரிக்க முடியாது.
நம்பிக்கை இல்லை, ஆனால் இளைஞர்கள் பின்வாங்குவது இல்லை:
Gen Z-ன் முக்கியமான முரண்பாடு இதுதான்: அவர்கள் அரசியல் அமைப்புகளை நம்பவில்லை. ஆனால் அரசியலில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். அவர்கள் வாக்களிக்கிறார்கள். போராட்டம் செய்கிறார்கள். அவர்கள் பாரம்பரிய அரசியலை பகடி செய்தாலும், வேலை, நுகர்வு, அடையாளம், காலநிலை, போர் மற்றும் சமத்துவமின்மை ஆகியவை குறித்து வலுவான தார்மீக மதிப்பீடுகளை வளர்த்துக் கொள்கிறார்கள்.
ஒரு இளைஞர் இன்றைய நிலையை இவ்வாறு கூறுகிறார்: “பணி வாழ்க்கையில் மேலே செல்வதா? நான் அந்த ஏணியின் கீழே சிக்கிக் கொள்ளாமல் இருக்கவே போராடுகிறேன். முந்தைய தலைமுறையினர் 25 வயதில் வைத்திருந்த வீடும் காரும் எனக்கு கனவாகக் கூட இருக்க முடியாத அளவுக்கு தொலைவில் உள்ளன” என்று கூறுகிறார்.
இது பணம் பற்றிய பிரச்சினை மட்டுமல்ல. இது முழுமையாக தார்மீகப் பொருளாதாரத்தின் சீர்குலைவை வெளிப்படுத்துகிறது.
முன்பு ஒரு நம்பிக்கை இருந்தது: “நீ கடினமாக உழைத்தால், உன் வாழ்க்கை முன்னேறும்”, “வயது அதிகரிக்கும்போது வாழ்க்கை மேலும் நிலையானதாக இருக்கும்”, “எதிர்காலம் என்பது திட்டமிட்டபடி இருக்கும்” – இவையெல்லாம் முன்பு இருந்த நம்பிக்கைகள். ஆனால் பல இளைஞர்களுக்கு, அவை இப்போது ஒரு வரலாற்று நினைவுச்சின்னம் போல் தெரிகிறது.
ஆயினும், இந்த நம்பிக்கையிழப்பு என்பது இளைஞர்கள் செயல்படுவதை நிறுத்திவிட்டார்கள் என்று அர்த்தமல்ல. மாறாக, முந்தைய தலைமுறையினர் அரசியல் என்று அங்கீகரிக்காத இடங்களில் இளைஞர்களின் அரசியல் பெரும்பாலும் வெளிப்படுகிறது.
அரசியலில் தீவிரமாகச் செயல்படும் Gen Z இளைஞர்கள்: நிறுவனப் பொருட்களைப் புறக்கணிக்கிறார்கள், நிறுவனங்களின் தவறுகளை அம்பலப்படுத்துகிறார்கள், வேலைகளை விட்டு வெளியேறுகிறார்கள், உதவிக்கு குழுக்களை உருவாக்குகிறார்கள், சமூக ஊடகப் பிரச்சாரங்களை நடத்துகிறார்கள். கட்சிகளில் சேராமலேயே போராட்டங்களில் பங்கேற்கிறார்கள். நையாண்டி, மீம்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள். தங்களுடைய நுகர்வை அரசியல் முடிவாக மாற்றுகிறார்கள்.
இந்தப் போராட்டங்களில் சில விரைவில் வணிகமாக்கப்படலாம், சில மேலோட்டமாக இருக்கலாம், சில போராட்டங்கள் விரைவாக மறைந்துவிடலாம். ஆனால் அவை முரண்பாடுகளைக் கொண்டிருக்கின்றன என்பதால் அவற்றை ‘அர்த்தமற்றவை’ என்று கூற முடியாது.
இதனால் “ஜென் Z தலைமுறையினர் அதிகமாக இருக்கும் நிலையற்ற தொழிலாளர் வர்க்கம் (precariat) தங்களை ஒரு வர்க்கமாக மெதுவாக அங்கீகரிக்கத் தொடங்கும்” என்று ஸ்டாண்டிங் கூறுகிறார்.
உலகம் முழுவதும் Precariat-ல் இருக்கும் இளைஞர்கள் மெதுவாக தாங்கள் தனித்தனி நபர்கள் அல்ல; ஒரு பொதுவான நிலையை எதிர்கொள்ளும் ஒரு சமூகக் குழு என்பதை உணரத் தொடங்குகிறார்கள். “வேறுவிதமாகச் சொல்வதானால், Precariat-ல் இருப்பது இனி அவமானமாகவோ தோல்வியின் அடையாளமாகவோ பார்க்கப்படுவதில்லை, மாறாக இன்றைய உலகளாவிய முதலாளித்துவத்தின் விளைவாக அது அதிகளவில் அங்கீகரிக்கப்படுகிறது” என்று கூறுகிறார் ஸ்டாண்டிங்.
இந்த மாற்றம் மிகவும் முக்கியமானது. தனிப்பட்ட பிரச்சினை என்று நினைத்தால் ஒருவர் தனியாகப் போராடுவார். அதே பிரச்சினையை ஆயிரக்கணக்கானோர் எதிர்கொள்கிறார்கள் என்று புரிந்துகொண்டால், அவர்கள் ஒன்றிணையலாம். அங்குதான் அரசியல் சக்தி உருவாகிறது.
ஒரு புதிய அரசியல் சிந்தனை:
GenZ என்பது ஒரே வயதுடையோர் குழு அல்ல. அது பல ஆண்டுகளாக நடந்த பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களின் விளைவு.
அதில் முக்கியமானவை: நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகள்
தொழிலாளர் உரிமைகள் குறைதல், அதிகரிக்கும் கடன்கள், வீட்டு வசதி பெறுவதற்கான செலவு அதிகரித்தல், பலவீனமடைந்த சமூகநல அரசுகள், டிஜிட்டல் சுரண்டல், மக்களின் வாழ்க்கையை சரியாக பிரதிநிதித்துவப்படுத்த முடியாத அரசியல் அமைப்புகள்.
இதனால் Gen Z-ன் கோபம் உருவாகியுள்ளது. ஆனால் இந்த கோபம் ஒரே மாதிரியானதல்ல. அதன் கோபம் முரண்பாடானது. மேலும் அது நிராகரிக்கும் சந்தையால் பெரும்பாலும் கையகப்படுத்தப்படுகிறது. அது ஒரு போராட்டமாக மாறலாம், ஆனால் அது அவர்களுக்கு மனநிறைவையும் தரலாம். இருந்தபோதிலும், அமைப்பை நிராகரிக்க விரும்பும் இளைஞர்கள், பெரும்பாலும் தளப் பொருளாதாரத்தில் ஒருங்கிணைக்கப்படுகிறார்கள்.
ஆனால் இது GenZ தலைமுறையை அரசியலற்றதாக ஆக்குவதில்லை. பழைய கட்சிகள்/நிறுவனங்கள் புரிந்துகொள்ளச் சிரமப்படும் வடிவங்களில் அரசியல் வெளிப்படுவதை இது உணர்த்துகிறது.
இந்தத் தலைமுறை அரசியலுக்கு அப்பாற்பட்டது அல்ல. ஆனால் அது தன்னை அரசியலின் பழைய நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டு இருப்பதாக உணர்கிறது. ‘இளைஞர்களின் அரசியல்’ என்பது கட்சிகள், திட்டங்கள் அல்லது சித்தாந்த மரபுகளிலிருந்து தொடங்குவதில்லை. அது ‘பாதுகாப்பற்ற நிலை, அவமானம், முடக்கப்பட்ட எதிர்காலம், மற்றும் முறைகேடான விதிகள் — அல்லது இனிமேல் விதிகள் பயன்படாது’ என்ற உணர்விலிருந்து இளைஞர்களின் அரசியல் தொடங்குகிறது.
பழைய அரசியல் மொழி இளைஞர்களிடம் ஒரு கேள்வியைத்தான் கேட்கிறது: “நீ இடதுசாரியா? வலதுசாரியா? தாராளவாதியா? பழமைவாதியா? தீவிரவாதியா? அரசியலில் அக்கறையில்லாதவரா?” என்று கேட்கிறது.
ஆனால், உண்மையான கேள்வி வேறு: “ஒரு தலைமுறைக்கு இந்த அமைப்பு எதிர்காலத்தை வழங்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் போனால் என்ன நடக்கும்?”
முதலாளித்துவத்தின் இன்றைய பிரச்சினை சமத்துவமின்மை மட்டுமல்ல. அதன் மிகப் பெரிய பிரச்சினை, அது கொடுத்த முக்கியமான வாக்குறுதியின் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது என்பதுதான்.
“கடினமாக உழைத்தால் வெற்றி பெறலாம்” என்ற பழைய வாக்குறுதியை இன்று பல இளைஞர்கள் நம்புவதில்லை.
Gen Z-ன் கோபம் எதிர்காலத்தில் அமைதியான சரணடைவாக மாறுமா, கடுமையான எதிர்வினையாக மாறுமா, அல்லது புதிய வகையான சமூக ஒற்றுமையாக மாறுமா என்பது இன்னும் தெரியவில்லை.
ஆனால் ஒன்று தெளிவாக உள்ளது: பல இளைஞர்கள் தங்களுடைய பாதுகாப்பின்மையை இனி தனிப்பட்ட தோல்வியாகப் பார்க்கவில்லை. அது தங்களைப் போன்ற பலருக்கும் பொதுவான பிரச்சினை என்பதை அவர்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
ஒரு தனிநபருக்கு ஏற்பட்டதை ‘துரதிர்ஷ்டம்’ என்று ஏற்ற நிலை மாறி, அது உண்மையில் ஒரு சமூகத்தின் பொதுவான பிரச்சினை என்பதை ஒருவர் உணரத் தொடங்கும் இடத்தில்தான் அரசியல் பிறக்கிறது.
அந்த உணர்வே மக்களை ஒன்றிணைக்கிறது.
அந்த உணர்வே போராட்டத்தை உருவாக்குகிறது.
அந்த உணர்வே கட்டமைப்பு மாற்றத்திற்கான கோரிக்கையை உருவாக்குகிறது.
https://jacobin.com/2026/08/generation-z-precarity-inequality-class-capitalism