தமிழீழ இனப்படுகொலைக்கான 17ம் ஆண்டு நினைவேந்தல் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக மிக எழுச்சிகரமாக நடைபெற்றது. கடந்த 2009ம் ஆண்டு இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்கள் நினைவாக ஆண்டுதோறும் தமிழர் கடலோரம் மே பதினேழு இயக்கம் சார்பாக பொதுமக்கள் பங்கேற்புடன் நினைவுத் தூணில் சுடரேற்றி மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 17ம் ஆண்டு நினைவேந்தல் மே 17, 2026 ஞாயிறு மாலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கத் தோழர்கள், ஆதரவாளர்கள், ஈழ உணர்வாளர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தியும், முழக்க அட்டைகளை உயர்த்தியும் உணர்ச்சி ததும்ப நினைவேந்தலில் ஈடுபட்டனர். தமிழீழ இனப்படுகொலையை மறக்கவில்லை என்றும், சர்வதேச நீதி விசாரணை வேண்டும், பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், நினைவேந்தல் நிகழ்வை அரசே ஏற்று நடத்த வேண்டும், தமிழர் கடலோரம் நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை முழுக்கங்களாக எழுப்பினர்.
இந்நிகழ்வில் மதிமுகவின் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு. ராஜேந்திரன், மதிமுகவின் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் ஆர். செந்தில்செல்வன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைவின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான உ. தனியரசு, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் தோழர் கே.எம். சரீப், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் உள்ளிட்ட பல்வேறு தோழமை அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் அக்கட்சித் தொண்டர்களோடு பங்கேற்றனர்.
நிகழ்வின் தொடக்கமாக, மையம் கலைக்குழுவினர் பறையிசை முழங்கினர். அடுத்ததாக, மே 17 இயக்கத்தின் குழந்தைகள் தமிழீழப் போராட்டத்தை போற்றும் பாடலொன்றை பாடினர். இதனைத் தொடர்ந்து
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மக்களிடையே ஆற்றிய நினைவேந்தல் உரை:
“மே 17 இயக்கம் 16 ஆண்டுகளாக இந்த கடற்கரையில் நினைவேந்தலை நடத்திக் கொண்டிருக்கிறது. வேறு எந்த பெயரையும் விட எங்கள் இயக்கத்திற்கு இந்த தேதியை வைக்க காரணம் என்னவென்றால், தமிழர்களுக்கு மறதி எனும் வியாதி இருக்கிறது. அந்த வியாதியை போக்க வேண்டும் என்றால் எங்கள் இயக்கத்தின் பெயரை சொல்லும் போதெல்லாம், சொல்லும் இடமெல்லாம், எதற்காக இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்று இந்த பெயரைக் கேட்பவர்கள் எங்களிடத்தில் கேள்வி கேட்க வேண்டும், அப்படிக் கேட்பவர்களிடத்தில் மே 17ஆம் தேதி என்ன நடந்தது என்று நாங்கள் சொல்ல வேண்டும் என்பதற்காக இந்த தேதியையே இயக்கத்தின் பெயராக வைத்துக் கொண்டோம்.
மே 17ஆம் தேதி மட்டும் இனப்படுகொலை நடக்கவில்லை. 1948இல் ஆரம்பித்து இன்றுவரை இனப்படுகொலை இலங்கை அரசால் தமிழர்கள் மீது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் இன்றும் கொல்லப்படுகிறார்கள், ஒதுக்கப்படுகிறார்கள், சிறையில் அடைக்கப்படுகிறார்கள், காணாமல் ஆக்கப்படுகிறார்கள். நிலத்தின் மீது எந்த உரிமையும் இல்லாத தமிழர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது எல்லாம் மாற்ற வேண்டும் என்று தான் அவர்கள் விடுதலைப் போராட்டத்தை இன்று அறவழியில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நமக்கெல்லாம் அரசியல் சாசனத்தில் உரிமை இருப்பது போல அவர்களுக்கு கிடையாது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள வித்தியாசத்தில் முக்கியமானது இலங்கையில் எந்த காலத்திலும் தமிழர்கள் அதிபராக ஆக முடியாது. அந்த சட்டமே அங்கு அப்படித்தான் உள்ளது.. அங்கு மாநிலங்கள் என்ற உரிமை எங்கும் கிடையாது. தமிழர்கள் வாழ்கின்ற பகுதியிலே ஒரு காவல் நிலையம் அமைப்பதற்கு கூட அந்தப் பகுதியிலே பொறுப்பேற்று இருக்கின்ற பிரதிநிதிகளுக்கு உரிமை கிடையாது. இடமாற்றம் செய்வதற்கு கூட எந்த அதிகாரமும் கிடையாது. அதைத்தான் அவர்கள் வேடிக்கையாக சொல்வார்கள் “எங்களுக்கு ஒரு நாற்காலி வேண்டுமென்றால் கூட கொழும்பு சிங்களனிடத்தில் அனுமதி வாங்க வேண்டும்” என்று .. இந்த நிலைமையை அவர்கள் மாற்ற வேண்டும் என்று 1948இல் இருந்து போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடத்தியவர்களை கொலை செய்ய ஆரம்பித்தது சிங்கள ராணுவம். அதிலிருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஒரு ஆயுதப் போராட்டத்தை மேதகு பிரபாகரன் அவர்கள் நடத்தி தமிழர் நிலங்களை எல்லாம் மீட்டெடுத்தார். இதுதான் வரலாறு. அவர் சிங்கள மக்களின் நிலத்தை பறிக்கவில்லை. அவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை.
“இது எங்களின் பூர்வீக நிலம், எங்கள் நிலத்தில் உன்னாட்சி வேண்டாம், நாங்களே எங்களை ஆண்டு கொள்கிறோம்” என்று, அந்த நிலத்தை எல்லாம் மீட்டெடுக்க நடந்த போராட்டம்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் போராட்டம்.
அதற்காக அவர்களுக்கு 2002-ல் சர்வதேச ஒப்பந்தம் போட்டார்கள். அந்த ஒப்பந்தத்தின் படி தமிழன் நிலப் பகுதிகளில் தமிழர்கள் ஆட்சி செய்து கொள்ளலாம், நிர்வாகம் செய்து கொள்ளலாம், பள்ளி கல்லூரிகள் கட்டிக் கொள்ளலாம், என்னென்ன வசதிகள் வேண்டுமோ அதை எல்லாம் உருவாக்கிக் கொள்ளலாம் என்று தான் ஒப்பந்தம் போட்டார்கள். ஆனால் அந்த ஒப்பந்தமிட்டு ஒரு வருட காலத்திற்குள் கிட்டத்தட்ட 1,67,000 மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்தார்கள். இது எப்படி நடந்தது என்று அந்த தகவல்களை எல்லாம் எடுத்துப் பார்த்தோம் என்றால் நம்மால் தூங்கவே முடியாது.
ராமேஸ்வரத்தின் பக்கத்தில் ஈழத்தின் பகுதியான மன்னார் ஆரம்பிக்கிறது. இது முள்ளிவாய்க்கால் இருக்கும் அந்த கடலின் புறத்தில் முடியும். மன்னாரில் போர் ஆரம்பித்து கிழக்குப் பகுதியில் முடிந்தது. போர் ஆரம்பிக்கும் முன்பு மன்னார் மாவட்டத்தில் இருந்த மக்கள் தொகை 38,400 பேர். ஆனால் போர் முடிந்த பிறகு, (எட்டு மாதத்தில்) மன்னார் மாவட்டத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை 480 பேர். அன்றைய ஆனந்த விகடன் இதழில் ஒரு பேட்டி வந்தது. தனுஷ்கோடியில் உள்ள ஒரு வயதான அம்மாவிடம் பேட்டி எடுத்திருக்கிறார்கள். அதில் அந்த அம்மா சொன்னது என்னவென்றால், “அங்க போடும் குண்டு சத்தம் இங்கு வரை கேட்கிறது, நிலம் அதிர்கிறது, எங்களால் தூங்க முடியவில்லை” என்று சொன்னார்கள். கூப்பிடும் தூரத்தில் வாழ்ந்த நம்மால் அந்த இனப்படுகொலையை தடுக்க முடியவில்லை. இதுதான் நமக்கு நேர்ந்த மிகப்பெரிய துயரம். இதற்கு ஒரு நியாயம் வேண்டாமா?
இங்கு ஒரு நாய் அடிபட்டாலே ஆயிரம் பேர் கூடி கேள்வி கேட்போம். ஒரு ஆடு அடிபட்டால் கூட நீதி கேட்போம். ஒரு ஊரில் ஒரு மனிதன் அடிபட்டால் ஒரு ஊரே நின்று நியாயம் கேட்கும். போராட்டம் நடத்தும். ஒருவர் இருந்தாலே நாம் இவ்வளவு செய்கிறோமே… அண்ணல் 1,67,000 மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டார்கள், அதை யார் கேள்வி கேட்பது? எந்த கேள்வியுமில்லாமல் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக எந்த முறையான விசாரணையும் நடக்கவில்லை. ஆனால் அங்கு ஏழெட்டு அதிபர்கள் மாறிவிட்டார்கள். எந்த அதிபர் வந்தாலும் தமிழர்களின் நிலை மோசமாகத்தான் இருக்கிறது.
அந்த இனப்படுகொலைக்கு நியாயம் கேட்க வேண்டும். அதை நாம் மறந்து விடக்கூடாது. தமிழ்நாட்டில் ஏழு கோடி பேர் இருக்கிறோம். நாம் பல கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தாலும் கட்சி எல்லாம் கடந்து நமக்கு தமிழர்கள் என்ற உணர்வு இருக்கிறது. அந்த உணர்வில் தான் தமிழ் மக்களுக்கு இந்த நினைவேந்தலையாவது எடுத்துச் செய்யலாம் என்ற உணர்வில்தான், 16 ஆண்டுகளுக்கு முன்பு ‘மெரினா கடற்கரையில் ஒரு மெழுகுவர்த்தி ஏந்தித்தான் பார்ப்போமே எல்லா மக்களும் வரட்டும், குடும்பத்தோடு வரட்டும், குழந்தைகள் வரட்டும்’ என்றுதான் மெழுகுவர்த்தியை உயர்த்திப் பிடித்து ஆரம்பித்தோம். அன்று 50 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் வந்தார்கள். சாரை சாரையாய் வந்தார்கள். குடும்பத்தோடு வந்தார்கள், குழந்தைகளோடு வந்தார்கள், நண்பர்களோடு வந்தார்கள், உறவினர்களோடு வந்தார்கள். இப்படி பெருந்திரளான மக்கள் வந்தார்கள். இதனால் பெரும் அளவிலான நம்பிக்கை ஏற்பட்டது. உலக அளவில் அது பேசப்பட்டது.
தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை, அதற்கு சர்வதேச விசாரணை தேவை, அந்த மக்களிடம் இலங்கையிலேயே இருக்கப் போகிறீர்களா அல்லது பிரிந்து தனிநாடு வேண்டுமா? என்கிற ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அனைத்து கட்சியும் சேர்ந்து தீர்மானம் போட்டார்கள். அது போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி.
இந்த நினைவேந்தல் என்பது ஒரு போராட்டம் அல்ல. இது ஒரு எதிர்ப்பின் குறியீடு. நாம் மெழுகுவர்த்தி மட்டும்தான் ஏந்தி பிடிக்கப் போகிறோம்.
அடுத்தமுறை வரும்போது உங்கள் நண்பர்கள் உறவினர்கள் குடும்பத்தினரை அழைத்து வாருங்கள். இங்கு ஒரு அரை மணி நேரம் வந்து உட்கார்ந்து மெழுகுவர்த்தியை ஏந்தி பிடிப்பதனால் ஒன்றரை லட்சம் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றால், அதைவிட பெருமை நமக்கு வேறு என்ன இருக்க முடியும்? அதை நாம் அமைதியாக செய்வோம். ஒரு அமைதி புரட்சி கொண்டு வருவோம். இந்த எளிமையான நிகழ்ச்சியின் மூலம் “இதையெல்லாம் நாங்கள் மறக்கவில்லை, நீ புதைத்து விட்டு கடந்து விட முடியாது” என நாம் வலுவாக சொல்ல வேண்டும். 2011இல் இதைப் போன்று நின்றதனால் தான், 2017ல் நீங்கள் எல்லாம் எழுச்சிமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தை தமிழர்களின் உரிமைக்காக நடத்திக் காட்டினீர்கள். எளிய மக்கள் நினைத்தால் அரசாங்கம் அவர்கள் சொல்லக் கூடியக் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றும். இதுதான் நாம் அமைதியாக இருந்து கேள்வி கேட்கக்கூடியதின் விளைவு.
உலகம் எங்கும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடக்கின்றன. யூதர்களுக்கு நடந்த இனப்படுகொலையை நினைத்து உலகின் பல்வேறு பகுதிகளில் இன்றும் நினைவேந்தலை நடத்துகிறார்கள். அதற்கு முன்னால் ஆர்மீனிய இனப்படுகொலை நடந்தது. அதில் 11 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக சொல்கிறார்கள். இதையெல்லாம் மூடி மறைத்தார்கள். ஆனால் அந்த மக்கள் மீண்டும் எழுந்து சுமார் நூறு ஆண்டுகளாகப் போராடி அதற்கு இனப்படுகொலை என அங்கீகாரம் வாங்கி இருக்கிறார்கள். இதைப் போல ருவாண்டா இனப்படுகொலை, ஆப்பிரிக்காவின் நமீபிய இனப்படுகொலை, செர்பிய இனப்படுகொலைகள் நடந்தன. இந்த இனப்படுகொலைகளை எல்லாம் தடுப்பதற்காக சட்டங்கள் கொண்டு வந்தார்கள். அந்த சட்டத்தின் அடிப்படையில்தான் நமக்கு நீதி வேண்டும் என்று கேட்கிறோம்.
நீங்கள் 17 வருடமாக இருக்கிறீர்கள், என்ன செய்தீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்? நாங்கள் ஒரு தேர்தல் அரசியல் கட்சி அல்ல. பல்வேறு வேலைகளில் இருக்கக்கூடிய, பல்வேறு அனுபவம் உள்ள தோழர்கள் இணைந்து மக்களுக்காக போராட்டம் நடத்தும் மக்கள் இயக்கம். நாம் வாழும் இடத்திலிருந்து 30/40 கிலோ மீட்டர் தள்ளித்தான் இந்த இனப்படுகொலை நடந்திருக்கிறது. ஆனால் இதை ஏன் நம்மால் தடுக்க முடியவில்லை? நான் என்ன தான் படித்திருந்து என்ன பயன்? அதிகாரத்தில் இருந்து என்ன பயன்? ஹாலிவுட் வரை சென்றாலும் கூட நம் கலையினால் என்ன பயன் என்கின்ற கேள்வி எங்களுக்குள் இருந்தது. அதனால்தான் எங்கள் வேலை நேரம் போக மீதி நேரத்தில் இயங்க ஆரம்பித்தோம். தமிழர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று இந்த இயக்கத்தை கொண்டு வந்தோம். இதில் மென்பொருள் படித்தவர்கள் இருக்கிறார்கள். மருத்துவர்கள் இருக்கிறார்கள். கூலி வேலை பார்க்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள். மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவருமே இருக்கிறார்கள். எல்லோருமே ஒரு அமைப்பாக வேலை செய்யலாம் என்று தான் ஒரு தளத்தை உருவாக்கினோம்.
எத்தனை மக்கள் எப்படி கொலை செய்யப்பட்டார்கள்? எத்தனை நாடுகள் எல்லாம் இதில் பங்கு பெற்றார்கள்? என்பதையெல்லாம் ஒரு ஆவணமாக தயாரித்து, சர்வதேச மன்றத்தில் கொண்டு போய் வைத்தோம். ஐநா மனித உரிமை மன்றத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பதிவு செய்தோம்.
அரசாங்கங்கள் விசாரணை முயற்சி நடத்தாமல் போனால், மக்கள் எல்லாம் சேர்ந்து விசாரணை நடத்தும் மக்கள் தீர்ப்பாயங்கள் இருக்கின்றன. இதுதான் மக்கள் நீதிமன்றங்களாக செயல்பட்டன. இது வியட்நாம் போர்க்காலத்திலே புகழ்பெற்ற நீதிமன்றங்களாக உருவாக்கப்பட்டன. ஐநாவில் இருந்த துணை தலைமை அதிகாரியை அழைத்து வந்து அவர்களின் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. ரூவாண்டா இனப்படுகொலை, ஆர்மீனிய இனப்படுகொலை, செர்மேனிகா இனப்படுகொலை குறித்து விசாரணை செய்தவர்களை அழைத்து வந்து தமிழர்களின் இனப்படுகொலைக்காக விசாரணை நடத்த சொல்லி ஜெர்மனியில் (பிரேமன் நகரில்) தமிழர்கள் வழக்கை நடத்தினார்கள். அதில் மே 17 இயக்கமும் பங்கெடுத்தது. இந்த இனப்படுகொலையை இலங்கை அரசு தனியாக நின்று எல்லாம் கொலை செய்யவில்லை, இந்திய அரசாங்கத்தின் துணையுடன் தான் கொலை செய்தார்கள் என்று ஆவணங்களை சமர்ப்பித்தோம். அதை அந்த அதிகாரிகள் ஏற்றார்கள்.
பக்கத்து நாட்டில் ஒரு இனப்படுகொலை நடக்கிறது, மக்கள் கொலை செய்யப்படுகிறார்கள், இந்த நாட்டு அதிபருக்கும் அதிகாரிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. என்ன பொறுப்பு என்றால், அங்கே கொல்வதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கக் கூடாது, அதை தடுக்க வேண்டும். அதைத் தடுக்கவில்லையென்றால் அந்த நாடும் கூட்டுக் குற்றவாளிதான். இந்த அடிப்படையில் இந்திய அரசும் இந்தக் குற்றத்திற்குத் துணை செய்திருக்கிறது என்று அவர்கள் கூறினார்கள்.
இந்த இனப்படுகொலைக்கு நமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ஒரு முயற்சியை நாம் முன்னெடுக்க வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டும். ஏனென்றால் ஒரு பெரிய போரை அந்தத் தமிழர்கள் நடத்தினார்கள். போர் நடந்த பொது இலங்கையின் படையில் இரண்டு லட்சம் பேர் இருந்தார்கள். ஆனால் விடுதலை புலிகளாக தமிழர்கள் நடத்தின படையில் இருந்தோரின் எண்ணிக்கை அதிகபட்சம் 12,000 பேர் மட்டுமே. இந்த 12,000 பேரும் அந்த சிங்கள படையை எதிர்த்து ஒரு வருடம் தடுத்து நின்று சண்டை போட்டார்கள். அந்த போர் புரிந்தவர்களை நான் ஐநாவில் பார்த்திருக்கிறேன். அந்த சண்டையைப் பற்றி பல விவரங்களை அவர்கள் கூறினார்கள். “எங்களிடம் ஆயுதங்கள் இருந்திருந்தால் 2,00,000 பேரைக் கொண்ட சிங்களப் படையை விரட்டியிருப்போம், எங்கள் கொடியை உயர்த்திப் பிடித்திருப்போம்” என்று அவர்கள் கூறினார்கள்.
“இதற்கு முன்பு 1999யிலும் சிங்களப் படையை விரட்டி அடித்தோம். இரு ஆண்டுகளாக எங்கள் நிலத்தை எல்லாம் சிங்களவன் பறித்து வைத்திருந்தான். நாங்கள் ஒதுங்குவதற்கு நிழல் கூட இல்லாத அளவிற்கு அவன் போர் நடத்தினான். ஆனால் அதன் பிறகு நாங்கள் திருப்பி அடித்தோம். அவன் இரண்டு ஆண்டுகளாகப் பறித்த நிலத்தை விடுதலை புலிகள் ஒரே மாதத்தில் மீட்டு எடுத்தார்கள்” என்று கூறினார்கள். அதுதான் தமிழரின் வீரம், அதுதான் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் வீரம் என்று உலகத்திற்கு அவர்கள் பறைசாற்றினர்.
இதெல்லாம் நம் ஊரில் சொல்லியிருக்க மாட்டார்கள். ஆமைக்கறி கதைதான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இதுதான் வீரம் என்று இந்த அரசியலை நம் குழந்தைகளுக்கு நாம் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட ஒரு வரலாறை தமிழன் படைத்தான் என்று நாம் காலமெல்லாம் சொன்னால்தான் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடியும்.
ஆனால் தமிழாட்டில் இந்த வரலாறை எல்லாம் பேசுவது இல்லை. இப்படிப்பட்ட வரலாறை பேசுகின்ற எந்தவிதமான ஒரு சூழலும் இல்லாமல் போய்விட்டதே என்ற ஒரு ஆதங்கம் எனக்கு இருக்கிறது. விடுதலைப்புலிகள் 5-6 ஆண்டுகள் மட்டும்தான் அந்த நிலத்தை ஆட்சி செய்தார்கள். அந்த 5-6 ஆண்டுகளில் அங்கு வறுமை கிடையாது. பசி கிடையாது. வன்முறை கிடையாது. பெண்களுக்கு எதிரான எந்த குற்றமும் கிடையாது. குறிப்பாக சாதி கிடையாது. மத வேறுபாடு கிடையாது. பெரிய கல்விக்கூடங்களை அவர்கள் கட்டி எழுப்பினார்கள்.
2004இல் நம்மை சுனாமி தாக்கியது. அங்கே இதைவிட மிகவும் மோசமாக தாக்கியது. சுனாமியிலிருந்து அந்த மக்களைப் பாதுகாப்பதற்கான கருவிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். சிட்னி நகரத்தில் இருந்து தண்ணீரைத் துயமைப்படுத்தக்கூடிய எந்திரத்தை கிளிநொச்சிக்கு கொண்டு வந்தார்கள். அதுதான் மக்களுக்கான ஆட்சி. ஏனென்றால் அவர்கள் மக்களை நேசித்தார்கள். மக்களுக்காகப் போராடினார்கள். மக்களிலிருந்து போராளிகளாக உருவெடுத்து வந்தார்கள். அவர்கள் சாதியை ஒழித்தார்கள். பெண்ணடிமைத்தனத்தை ஒழித்தார்கள்.
அங்கே பெண்கள் படைக்கு பெண்கள்தான் தலைமை தாங்க வேண்டுமென்று கூறினார்கள். பெண்களே போர் புரிந்தார்கள். பல நெருக்கடிக்கு நடுவில் போர் புரிந்தார்கள். அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. கிட்டத்தட்டங்க 35 ஆண்டுகளாக தமிழர் பகுதிக்குள் சர்க்கரை, பேட்டரி, பெட்ரோல், மண்ணெண்ணெய், அரிசி, சிமெண்டு போன்ற பல பொருட்களைக் கொண்டு செல்ல முடியாது. அந்தத் தடையை விடுதலைப் புலிகள்தான் உடைத்தார்கள். ஐயாயிரம் கிலோமீட்டர் கடல் பரப்பிலே கப்பலிலே இத்தனை பொருட்களையும் கொண்டுவந்து இறக்கி அந்த மக்களைப் பாதுகாத்தார்கள். அந்த புகைப்படங்களை நீங்கள் பார்க்க வேண்டும். இறுதிப் போரின் பல புகைப்படங்கள் உள்ளன. ஆனால் அவற்றை முகநூல், யூட்டுப் போன்றவை தடை செய்கின்றன.
அங்கே மின்சார உற்பத்தி தடுக்கப்பட்ட போது, வெறும் ஐந்து ஆண்டு காலத்தில் விடுதலைப்புலிகள் அனைத்தையும் அவர்களுக்கு செய்து கொடுத்தார்கள். மக்களை நேசிக்கக்கூடிய ஒரு ஏக்கம் இருந்தால் தான் மக்களுக்கு தேவையானதை சாத்தியப்படுத்த முடியும். சமூக அவலத்தைத் தீர்க்க முடியும் என்பதை நடத்திக் காட்டினார்கள். இங்கே நமக்கு 75 ஆண்டுகளாக தேர்தல் நடக்கிறது, பாராளுமன்றம் நடக்கிறது, சட்டமன்றம் நடக்கிறது, ஆனால் சமூக பிரச்சினைகள் தீரவில்லை. ஊழல் தீரவில்லை, ஜாதி சண்டைகள் தீரவில்லை, ஜாதிய கொலைகள் தீரவில்லை, ஆணவப் படுகொலை இன்றும் நடந்து கொண்டு இருக்கிறது.
நாம் சனநாயகவாதிகளா? அவர்கள் சனநாயகவாதிகளா? இதைத்தான் நாம் யோசித்துப் பார்க்கவேண்டும். இப்படிப்பட்ட வீரம் செறிந்த அரசாங்கத்தை அவர்கள் உருவாக்கி, அந்த நாட்டை அவர்கள் ஆண்டார்களே, அவர்களை நாம் மறக்கலாமா? என்றுதான் உங்களிடம் நாம் கேட்கிறோம்.
எங்களுக்கு உங்களிடம் ஒரே ஒரு கோரிக்கை இருக்கிறது. அடுத்த ஆண்டும் இதே இடத்தில் நினைவேந்தல் நடக்கும். மே மாதம் மூன்றாவது ஞாயிறன்று நடக்கப் போகும் நினைவேந்தல் நிகழ்வில், இங்கு இருக்கக்கூடிய ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அடுத்த முறை பல்லாயிரக்கணக்கானவர்களாக மாறினால்தான் இந்த உலகம் நம்மைத் திரும்பிப் பார்க்கும்.
தமிழருக்காக நாம் குரல் கொடுக்கவில்லை என்றால் வேறு யார் குரல் கொடுப்பார்கள்? அண்டை மாநிலத்தில் உள்ளோர் நமக்காக போராடுவார்களா? நாம்தான் நமக்காக கேள்வி கேட்க வேண்டும்.
எந்த கடற்கரை மணலில் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்களோ, அதே கடற்கரையில் அவர்களுக்காக நினைவேந்துவோம். நான்கரை லட்சம் மக்களை சிறிய பரப்புக்குள் தள்ளி, கடலில் இருந்தும் வானத்தில் இருந்தும் சிங்களப் படை குண்டு வீசித் தாக்கியது. தரைப்படை, பீரங்கி எனப் பல படைகளைக் கொண்டு அவர்களைத் தாக்கினார்கள். இத்தனை குண்டு வீச்சுக்கு நடுவே, அந்த நான்கரை லட்சம் மக்கள் சிக்குண்டு, அதில் ஒன்றே முக்கால் லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதில் முப்பதாயிரம் பேர் குழந்தைகள்.
17 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்தப் பேரவலத்திற்காகத் தான் இங்கே அமைதியாக நினைவேந்துகிறோம். அந்த சுடரை ஏற்றும் சமயத்தில் கையில் வைத்திருக்கும் மெழுகுவர்த்தியை உயர்த்திப் பிடித்து தமிழின மக்களை நாம் நினைவு கூறுகின்றோம், அவர்களது விடுதலைப் போராட்டத்தை நினைவு கூறுகின்றோம். இதைச் செய்வதால் ஈழம் விடியும் தமிழர் மீதான அந்த ஒடுக்குமுறை அழியும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இது தமிழனுக்கான ஒரு நிகழ்வு. அடுத்த முறை பெருந்திரளாக உங்கள் நண்பர்களையும் அழைத்து வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். அந்த மக்களுக்காக நினைவேந்துகின்ற குரல் உலகெங்கிலும் ஒலிக்கட்டும்.
“போர் வேண்டாம், அமைதி வேண்டும். இனிமேல் எந்த அரசும் எந்த இராணுவமும் அப்பாவி மக்களைக் கொலை செய்யக்கூடாது. எந்த அடக்குமுறையும் நடக்கக் கூடாது, சுதந்தரம் வேண்டும்” என்பதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு. அதற்காக காலமெல்லாம் அமைதி வழியிலே அற வழியிலே உறுதியாக ஒரு அடி பின்வாங்காமல் நாம் போராடுவோம். குரல் எழுப்புவோம். அந்த வகையிலே உங்கள் கையில் இருக்கும் மெழுகுவர்த்தியில் சுடரேந்தி நினைவு கூற வேண்டுமென்று வேண்டிக் கேட்டு என் உரையை நிறைவு செய்கின்றேன்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’. நன்றி!” என்று உரையாற்றினார் தோழர் திருமுருகன் காந்தி.
பின்னர் தலைவர்கள் அனைவரும் நினைவுத் தூணில் சுடரேற்றி மலர்த் தூவி வீரவணக்க முழக்கமிட்டனர். தொடர்ந்து சிறுவன் பாலசந்திரன் படத்திற்கு மலர்த்தூவி மெழுகுவர்த்தி ஏற்றினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் நினைவுத்தூணுக்கும், பாலசந்திரன் படத்திற்கும் மரியாதை செலுத்தினர். இவ்வாறு பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்களின் எழுச்சிமிகு பங்கேற்புடன் 17ம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது.