தமிழீழ இனப்படுகொலைக்கு துணை போன சனாதனப் பார்ப்பனர்கள்

இன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கூறியதும், கொதிக்கும் ஆர்எஸ்எஸ், பாஜக கூட்டம், ஒன்றரை லட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்ததற்கு இந்த சனாதனவாதிகளே காரணமாக இருந்ததைப் பற்றி மூச்சு கூட விட மறுத்தார்கள். தமிழீழ இனப்படுகொலையை சிங்களர்களின் இனவெறி நடத்துவதற்கு இந்திய சனாதனப் பார்ப்பனர்களே துணையாக இருந்தனர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள், அதிகார மட்டத்தினர், பத்திரிக்கையாளர்கள் போன்ற பல முகமூடியில் இந்த வேலையை செய்து முடித்தவர்கள் இந்த சனாதனவாதிகளே. இலங்கையை இனப்படுகொலைக் குற்றத்திலிருந்து தப்பிக்க வைக்கும் கருத்துருவாக்க அடியாட்களாகவும் இவர்களே செயல்பட்டனர். 

தமிழர்களுக்கான இறையாண்மை கொண்ட தனித்த தேசிய இனமாக உருப்பெற்று எழுவதை விரும்பாதவர்களே இந்த சனாதனப் பர்ப்பனர்கள். இதனை இந்தியாவின் அமைதி காப்புப் படையின் தளபதியாக இருந்த கர்னல் அசோக் என்பவர் டிவிட்டரில் (X-தளத்தில்) அளித்திருந்த ஒரு தகவலே உறுதிப்படுத்தியது. அந்தப் பதிவினில் அவர், இந்தியாவின் ராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சுந்தர்ஜி என்பவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த போது இவர் அவருக்கான அதிகாரியாக இருந்ததாக கூறி விட்டு முக்கியத் தகவலைப் பகிர்ந்தார்.

“ஆபரேசன் பவன் (இலங்கையில் தலையீடு செய்த அமைதி காப்புப் படையின் போருக்கான பெயர்) நடந்த போது இந்தியாவின் 1400 ராணுவ வீரர்கள் இறந்தார்கள். வெலிங்க்டனில் சுந்தர்ஜி பதவி ஓய்வு பெற்று இருந்த போது அவருக்கு ஆறு மாத காலம்  பாதுகாப்பு அதிகாரியாக இருந்திருக்கிறேன். அன்றைய தினத்தில் நான் ராணுவ மேஜராக இருந்தேன். சுந்தர்ஜியை வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் ராணுவ உளவுத் துறைக்கு சொல்ல வேண்டுமென்பது எனது பணி. அவரிடம் ஒரு முறை பேசிக் கொண்டிருந்த பொழுது, ‘என்ன காரணத்திற்காக நாம் இத்தனை பேரை இழந்தோம்’ என்று கேட்டேன். இதற்கான அரசியல் காரணம் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் எனக்கு மிகவும்  அதிர்ச்சிகரமாக இருந்தது. அவர் என்ன சொன்னார் என்றால் ‘ஒன்றுமே இல்லை என்பது தான் போருக்கான காரணம்’ என்றார். எந்தக் காரணமும் எங்களுக்கு சொல்லப் படவில்லை என்றார். கேபினெட் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்ததாக அவர், சில தகவல்களை காரணங்களாக  என்னிடம் பகிர்ந்தார்.

முதற்காரணமாக அப்பொழுது நடைபெற்ற தமிழ்நாட்டின் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்பதாக இருந்தது. இரண்டாவது யாழ்ப்பாணத்தின் மீது தங்களுடைய ஆதிக்கத்தை தமிழ் பிராமணர்கள் நிலைநிறுத்துவதற்காக நடத்தப்பட்டது என்பது காரணமாக இருந்தது என்றார். மூன்றாவதாக பார்ப்பனரல்லாத ஒரு விடுதலைப் போராட்ட போராளிகளான விடுதலைப்புலிகளை கவனத்தில் வைத்துக் கொள்வது, கண்காணிப்பது போன்றவையாக இருந்தது எனவும், விடுதலைப்புலிகளின் ராணுவ வலிமை தமிழ் பார்ப்பனர்களை அச்சுறுத்தியது எனவும், மீனவ சமூகத்திலிருந்து வந்த பிரபாகரன் மிகவும் வலிமை மிகுந்தவராக இருந்ததால் தமிழ் பார்ப்பனர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது எனவும், தமிழ் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை அங்கே நிலைநிறுத்துவதற்காக தான் இந்திய ராணுவம் அங்கே அனுப்பப்பட்டது எனவும், ராஜீவ் கொலைக்குப் பின்னால் இருப்பதும் இந்த சாதிய சிக்கலே எனவும் வரிசையாகக் கூறினார். சுந்தர்ஜி ஒரு தமிழ் பார்ப்பனர். இந்தப் பின்னணிக் காரணங்கள் வெளியே தெரிய வரக்கூடாது என்பதற்காகத்தான் அவரை வீட்டுக்காவலில் வைத்து இருந்தார்கள். உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நான் மீறுகிறேன். மன்னிக்கவும் கர்னல்”  என்று ஒரு பதிவினை இட்டிருந்தார்.

சனாதனம் என்பதை நிலையானது, மாற்ற முடியாதது, அது ஒரு வாழ்க்கை முறை என்று கூறும் சனாதனவாதிகள் தங்களின் ஆதிக்கத்தை நிலையானதாக, மாற்ற முடியாததாக, வாழ்க்கை முறையாக கொண்டிருந்ததைத்தான் இதில் கர்னல் அசோக் அம்பலப்படுத்துகிறார். தமிழ் பிராமணர்களின் ஆதிக்கத்தை தமிழீழத்தில் நிலைநிறுத்தவே இந்தியப் அமைதிப்படை அனுப்பப்பட்டது என்று கூறுகிறார். தங்களது ஆதிக்க வாழ்க்கை முறைக்காக தமிழினப்படுகொலை செய்யவும் தயங்காத பார்ப்பனர்களின் முகம் தானிது.

தமிழீழ விடுதலைக்கு எதிரான, இலங்கை அரசுக்கு ஆதரவான கருத்துருவாக்க கட்டமைப்புகளை செய்த சனாதனப் பார்ப்பனர்களின் பட்டியல் நீண்டது. சுப்பிரமணியசாமி, சோ, என்.ராம், எம்.கே.நாராயணன், சத்யமூர்த்தி, நாராயணமூர்த்தி, மீரா ஸ்ரீநிவாசன், ஆர்.கே.ராதாகிருஷ்ணன், கர்னல் ஹரிஹரன், சூர்யநாராயணன் போன்றோர் இதில் இருக்கிறார்கள். இவர்கள் இடதுசாரி, வலதுசாரி என்ற போர்வையில் சனாதனப் பார்ப்பனர்களாகவே இயங்கியவர்கள். இவர்கள் ORF observer Research Foundation நிறுவனம் மூலம் இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறைகளின் ஆலோசனைக் குழுவாக இயங்கினார்கள். இதன் கிளை ‘தி இந்து’, ‘தினமணி’ போன்ற பார்ப்பன ஊடகங்களில் கட்டுரைகள் எழுதும் சத்தியமூர்த்தி என்ற சனாதனப் பார்ப்பனரால் நடத்தப்படுகிறது. இவர்களே தமிழர்களுக்கு எதிரான, தமிழீழத்திற்கு எதிரான கருத்துருவாக்கம் செய்த கட்டுரைகளை எழுதிக் கொண்டேயிருந்தவர்கள்.

இதில் முக்கியமானவர் தி இந்து பத்திரிக்கையின் என். ராம். முற்போக்கு பார்ப்பானாக தன்னைக் காட்டிக் கொள்ளும் இவரின் பத்திரிக்கை செயல்பாடுகள் முழுவதும் தமிழீழ விடுதலையை எதிர்த்த சனாதனப் பார்ப்பனர்களின் மாற்று முகமாகவே இருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றியான இலங்கை அரசின் தவறான செய்திகளை பரப்புவது, போராளிகள் மீது அவதூற்றினை எழுதுவது, தமிழர்களே இனப்படுகொலையின் சூத்திரதாரிகள் எனக் கட்டமைத்தது. தமிழர்களின் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகளை தொடர்ச்சியாக குழந்தை போராளிகளை பயன்படுத்தினார்கள் என்றும், குழந்தைகளை மனித வெடிகுண்டாக பயன்படுத்தினார்கள் என்றும், குறிப்பாக தமிழீழத்தில் ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்க விடுதலை புலிகளால் செயல்படுத்தப்பட்ட செஞ்சோலை உள்ளிட்ட குழந்தைகள் இல்லங்களை போராளிகளை உருவாக்கும் இடமென்று போலிப் பிரச்சாரத்தை 2000-லிருந்து சர்வதேச மட்டத்தில் கட்டமைத்து வந்த மனோரஞ்சன் என்னும் சிங்கள கைகூலியைக் கொண்டு புலிகள் சகோதர யுத்தம் புரிந்தார்களென்று அவதூறுகளை எல்லாம் எழுதியது.

பாலச்சந்திரன் படுகொலைப் படத்தினை தனது இதழில் வெளியிட்டு, பாலச்சந்திரன் குறித்தான பொய்ச் செய்திகளையும், பாலச்சந்திரனும் குழந்தைப் போராளி என்று எழுதியது தி இந்து. தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசைப் புகழ்ந்து கட்டுரை எழுதியதால்தான் இலங்கையின் ‘லங்கா ரத்னா’ விருது வாங்கினார் இப்பத்திரிக்கை ஆசிரியர் என்.ராம்.

ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்ற 2009 இனப்படுகொலைப் போரில், அன்றைய உளவுத்துறை அதிகாரியாக இருந்த எம்.கே. நாராயணன் என்னும் சனாதனப் பார்ப்பனரே இந்தியாவின் பங்களிப்பினை இலங்கைக்கு வழங்கிய பணியை முன்னின்று செய்து முடித்தவர். 2009-ல் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளராக இருந்து இலங்கைக்கு முழு உதவியையும் செய்தவர். அவர் விடுதலைப் புலிகள் மீதான ஆழ்ந்த வெறுப்புணர்வைக் கொண்டிருந்ததால் தமிழ் மக்களுக்கு எதிரான போரில் எந்த வித சர்வதேசத் தலையீடும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். இவரும், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த சிவசங்கர மேனனும் சேர்ந்து இனப்படுகொலைப் போரில் இலங்கைக்கு ஆதரவான போக்கையே கையாண்டனர். தமிழ் பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கான தீர்வுப் பணியில் ஈடுபடுவதற்குப் பதிலாக, இவர்கள் விடுதலைப் புலிகளை முழுமையாக ஒழிப்பதிலேயே அக்கறை கொண்டிருந்தனர் என்றும், அதன் விளைவாகவே போர் நிறுத்தப் பகுதிகளில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்றும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது.

இந்திய அதிகார மட்டத்தில் மலையாள மாஃபியா போன்று மலையாள வலைப் பின்னலை உருவாக்குவதில் எம்.கே.நாராயணனின் கைதேர்ந்தவராக இருந்ததை ‘விக்கிலீக்ஸ்’ வெளிப்படுத்தியது. இந்த வலைப்பின்னல் இந்தியா மட்டுமல்லாது இலங்கை, ஐ.நா அதிகார மட்டம் வரை நீண்டது. ஐநா செயலாளராக இருக்கும் பான்-கி-மூன் ஆலோசகராக விஜய் நம்பியார், இலங்கையில் பாதுகாப்பு ஆலோசகர் சதீஷ் நம்பியார் வரை தொடர்ந்தது. இவர்கள், தமிழர்கள் மீதான இலங்கையின் அழித்தொழிப்பின் பின்னால் நின்று, இலங்கையை சர்வதேசத்தின் பார்வையிலிருந்த காப்பாற்றிய தகவல்களை எல்லாம் சார்லஸ் பெட்ரி அறிக்கை அம்பலப்படுத்தியது.

இனப்படுகொலைப் போர் உச்சமடைந்த காலகட்டத்தில் போர்ப் பகுதிகளுக்கு உணவுப்பொருட்கள் எடுத்துச் சென்ற ஐநா மனித உரிமைப் பணியாளர்கள் அங்கு கட்டுக்கடங்காத படுகொலை நடப்பதாக ஐநாவிற்கு தகவல் தெரிவித்தனர். போரில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். ஆனால் விஜய் நம்பியார் அதை எதிர்த்து, அவசர அவசரமாக அன்றைய தினமே, ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்திற்கு ஒரு விரிவான மின்னஞ்சலை அனுப்புகிறார். அந்த மின்னஞ்சலில், “இலங்கையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை நம்மால் உறுதி செய்ய முடியாது; எனவே வெளியிட வேண்டியதில்லை” என்பதாக இருந்தது. மேலும், ஒரு வேளை நீங்கள் அவ்வாறு எண்ணிக்கையை வெளியிட விரும்பினால் அவற்றினை நீர்த்துப் போகச்செய்து வெளியிடுமாறு குறிப்பிடுகிறார்.

மேலும், அந்த மின்னஞ்சலில் “இலங்கை அரசின் மீது போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றத்தினை நாம் இப்போது வைக்க முடியாது. அவ்வாறு செய்தால் இலங்கை அரசின் விரோதத்தினை நாம் சம்பாதிக்க வேண்டி வரும்; அது நமக்கு நல்லதல்ல” என்கிறார். இது மட்டுமல்லாமல் குற்றச்சாட்டுகளில் இலங்கையையும், விடுதலைப் புலிகளையும் ஒன்றாகவே நாம் குற்றம் சாட்ட வேண்டும்” என்பதாக அந்த மின்னஞ்சல் இருந்தது.

இதே உள்நோக்கமுள்ள மின்னஞ்சல் பிற துறைகளில் இருந்தும், குறிப்பாக மனித நேய உதவிகளுக்கான அதிகாரி ஜான் ஹோல்ம்ஸ்மிடமிருந்தும் அனுப்பப்பட்டு, இறுதியில் மார்ச் 12-13ஆம் தேதி மனித உரிமை ஆணையத்தின் அறிக்கைகளை நீர்த்துப் போகச் செய்து, விடுதலைப் புலிகளை கடுமையாக குற்றம் சாட்டி வெளியிடப்படுகின்றன. இந்த மார்ச் 12-13 ஆம் தேதி அறிக்கை தான் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் தொடர்பாக வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையாக அமைகிறது. அதுவும் புலிகளை குற்றம் சாட்டிய இந்த அறிக்கையை இலங்கையில் இருந்த ஐ.நா.வின் களப்பணியாளர்களே விமர்சனம் செய்தார்கள்.

புலிகளைக் குற்றஞ்சாட்டுவதன் மூலமாக ‘புலிகள் ஒடுக்கப்பட வேண்டியவர்கள், பயங்கரவாதிகள். எனவே, இது பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று உலகிற்கு அறியச் செய்கிறார். இதன் மூலமாக இலங்கை அரசானது சர்வதேச சமூகத்தின் முன் நியாயமாக்கப்படுவதுடன், இனப்படுகொலைக்கான உதவிகள் அந்த அரசிற்குக் கிடைக்கிறது. மேலும், போர்ப் பகுதிகளை காண இலங்கைக்கு அனுப்பப்பட்ட போது,  காலநிலை சரியில்லை என ஓய்வெடுத்துக் கொண்டவர் இவர். இவருடைய சகோதரரும், இலங்கை பாதுகாப்பு ஆலோசகருமான சதீஷ் நம்பியார் இறுதிப் போரில் நடேசன் உள்ளிட்ட போராளிகள் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த போது அவர்களைக் காப்பாற்றுவதாக நாடகமாடி, இலங்கை ராணுவம் அவர்களைச் சுட்டுக் கொல்வதற்கு துணை போனவர். இப்படியாக சனாதன தமிழ் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, சனாதன மலையாள பார்ப்பனர்களும் தமிழீழ இனப்படுகொலைக்குக் காரணமாக இருந்தனர்.

இனப்படுகொலை நடந்த சமயத்தில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியும் சனாதனப் பார்ப்பனரே. இவர் உள்ளிட்ட இந்திய அதிகாரிகள், இலங்கை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிற்கு இணங்க, ஐநா மற்றும் பிற ஆதாரங்களில் இருந்தும் போரின் உயிரிழப்புகள், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் புள்ளி விவரங்கள் அதிகமான அளவில் இருந்த போதும்  குறைவாக எண்ணிக்கையே பயன்படுத்தியதாக விக்கிலீக்ஸ்-ன் தகவல்கள் வெளிப்படுத்தின.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து கொச்சைப்படுத்திப் பேசிய, தமிழ்நாட்டில் உள்ள சனாதனப் பார்ப்பனர்களில் முக்கியமானவர் சர்வதேசத் தரகர் என்றழைக்கப்பட்ட  சுப்பிரமணியசாமி. ராஜீவ் காந்தி கொலையில் ஜெயின் கமிசனால் குற்றம் சாட்டப்பட்டவர். தமிழினப் படுகொலைக் குற்றவாளி ராஜபக்சேவின் கூட்டாளியாக இருந்து கொண்டு தமிழின அழிப்பை சரியான, உறுதியான நடவடிக்கை என பாராட்டிய நபர். இன்றளவும் தமிழீழத்தில், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை கொச்சைப்படுத்தும் நோக்கிலேயே பேசிக் கொண்டிருப்பவர். தமிழர்கள் மீதான வெறுப்பினால் ‘தமிழர்கள் எலிகள்’ என X தளத்தில் திமிருடன் பதிவிட்ட மோசமான நபர் தான் இந்த சுப்பிரமணியசாமி.

இந்த சனாதன வலைப்பின்னலுக்குள் தான் ஈழத் தமிழினம் இனப்படுகொலையை சந்தித்தது. வெளியுறவுத் துறை, உளவுத்துறை, கொள்கை முடிவெடுக்கும் தளங்கள், கருத்துருவாக்க தளங்கள் என அனைத்திலும் சூழ்ந்திருந்த சனாதனப் பார்ப்பனர்களே இலங்கைக்குத் துணை நின்றார்கள். தமிழீழ விடுதலைக்குப் போரிட்ட விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் எனக் கட்டமைத்தார்கள். இனப்படுகொலைப் போரை தடுக்க விடாதவாறு செய்தார்கள். போர் முடிந்து ஒன்றரை லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்ட பின்பும் தமிழீழத்தின் நீதியைப் பெற முடியாத நிலையில் நிற்க வைத்திருக்கிறார்கள்.

தமிழினப் படுகொலைக்கு துணை போன சனாதனப் பார்ப்பனர்களை பற்றி எந்தக் கேள்வியுமற்ற தமிழ்நாட்டின் பாஜகவினர், இந்தியாவில் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் பண வீழ்ச்சி, பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, நீட் தேர்வில் பாஜக பிரமுகரின் கொள்ளை போன்றவற்றிலிருந்து மோடி அரசைக் காப்பாற்ற சனாதன தர்மத்திற்கு பல்லக்கு தூக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியான சனாதன முகமூடி அணிந்து கொண்ட பார்ப்பனர்களை தமிழ்ச் சமூகத்திற்கு அம்பலப்படுத்தும் பணியை மே 17 இயக்கம் தொடர்ந்து செய்து வருகிறது. தமிழினப் படுகொலைக்குத் துணை நின்ற இவர்கள் அனைவரும் சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட வேண்டுமென்று போராடுகிறது. தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி படுகொலை செய்யப்பட்ட நம் இனத்தை நினைவு கூற ஆண்டுதோறும் நினைவேந்தலை நடத்துகிறது. இந்த ஆண்டிற்கான நினைவேந்தல் மே 17, ஞாயிற்றுக் கிழமை,பெசண்ட் நகர் கடற்கரையில் நடைபெற இருக்கிறது.

தமிழீழத்திற்கான நீதியைப் பெறாமல் ஓய மாட்டோம் என்கிற உறுதியுடன் ஒன்று கூடுவோம்.

ஆண்டுகள் பலவாயினும் தமிழினம் உரத்துச் சொல்லிக் கொண்டேயிருக்கும் முழக்கம்,

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »