மப்புச்சே மக்களின் பூர்வீகத்தை மீட்கும் போராட்டம்!
உலகெங்கும் ஏகாதிபத்திய நலனுக்காக ஒடுக்கப்படும் பூர்வகுடி மக்களும், தேசிய இன மக்களும் தங்கள் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் போராடி வருகின்றனர். குறிப்பாக இத்தகைய விடுதலை உரிமை போராட்டங்களை வல்லாதிக்க நாடுகளின் நலனுக்காக அந்தந்த நாடுகளில் இருக்கும் அரசுகள் ஒடுக்கிவருவது பன்னெடுங்காலமாக தொடர்ந்து வருகிறது. தங்களின் ஏகாதிபத்திய நலனுக்காகவே மக்களுக்கு எதிரான அரசுகளும் சர்வாதிகாரிகளும் பல்வேறு நாடுகளில் உருவாக்கப்படுகின்றன. அந்த அரசுகளை கொண்டே உரிமைகளுக்காகப் போராடும் மக்களை அடக்கி ஒடுக்குவதும் இனப்படுகொலைகளை நிகழ்த்துவதும் வல்லாதிக்கங்களால் திட்டமிட்டு நடத்தப்படுகிறது.
இவ்வாறான ஏகாதிபத்திய சுரண்டலுக்கு உள்ளான ஒரு இனம் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவை ஒட்டிய சிலி நாட்டின் தெற்கு பகுதியில் வாழும் பூர்வகுடி “மப்புச்சே” இனம். இந்த மக்கள் தங்கள் தேசிய இன விடுதலையை வலியுறுத்தி இன்றும் போராடி வரும் மக்களாக அறியப்படுகிறார்கள்.
சிலி நாட்டில் தெற்கில் “பயோ – பயோ” ஆற்றை எல்லையாகவும், மேற்கே பசிபிக் பெருங்கடலையும், கிழக்கே அர்ஜென்டினா நாட்டு எல்லையையும் கொண்டு “அரௌகேனியா பகுதியில்” (Araucania Region) மப்புச்சே இனமக்கள் வாழ்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி இம்மண்ணின் பிற பூர்வகுடிமக்களான அய்மாரா, பாலிநேசியன், ரபானுய் இன்னும் பல பூர்வகுடி மக்களும் சிலி நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் பெரும்பான்மையாக வாழ்பவர்கள் மப்புச்சே மக்கள். மொத்த சிலி நாட்டின் மக்கள் தொகையில் 11% இவர்கள் உள்ளனர். விவசாயம் இவர்களுக்கு அடிப்படை பொருளாதாரமாக இருக்கின்றது. சிலி மற்றும் அர்ஜெண்டாவில் வாழ்கின்ற மப்புச்சே மக்களின் கலாச்சாரம் என்பது கி.மு 500 அல்லது 600க்கு முன்பானது என்று அகழ்வாராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.
சுமார் மூன்று நூற்றாண்டுகளாக சிலி நாடு ஸ்பானிய காலனியாக இருந்தது. 16ம் நூற்றாண்டில் ஸ்பானியர் வருகையின் போது மப்புச்சே மக்கள் சிலி நாட்டின் தெற்கே “இட்டாடா” மற்றும் “டோல்டன்” ஆற்று பள்ளத்தாக்குகளில் வாழ்ந்து வந்தனர். ஸ்பானிய படையெடுப்பின் போது ஸ்பானியர்களை மப்புச்சே இனக்குழு மக்கள் மூர்க்கமாக எதிர்த்தனர். ஸ்பானியர்களின் வருகைக்கு முன்பு மப்புச்சே மக்கள் உழவு, பெண்கள் நெசவு தொழிலும் செய்து வந்துள்ளனர்.
இதர பூர்வகுடிகளான “ஹோலிச்சி” மற்றும் “குன்கோ” இனத்தினர் நாட்டின் வெகுதெற்கில் வாழ்ந்து வந்தனர். “சிலியோ அர்ச்சிபெலகோ” ( Chilleo archipelago) என்று இவர்கள் அழைக்கப்பட்டார்கள். “தேய்க்குள்ச்சி” என்ற இனத்தினர் சிலர் மப்புச்சே மொழியையும் கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொண்டு தங்களை “அரௌகேனியர்களாக” அடையாளப்படுத்தி கொண்டனர். ஸ்பானிய காலனியாதிக்க காலத்தில் மப்புச்சே மற்றும் ஸ்பானியர்கள் இனக்கலப்பால் உருவான சந்ததியினர் “மெஸ்டிசோ” என்று அழைக்கப்படுகின்றனர்.
17 முதல் 19 ஆம் நுற்றாண்டு வரை மப்புச்சே மக்கள் சிலர் கிழக்கு நோக்கி ஆண்டெஸ் மற்றும் பம்பாஸ் என்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். அங்கே வாழ்ந்த “போய” மற்றும் “பேயெஞ்சே” பூர்வகுடிகளுடன் உறவு ஏற்படுத்தி கொண்டனர். பம்பாஸ் பகுதியில் வாழ்ந்த வேறு சில இனக்குழுக்களான பேயெஞ்சே, ராஇங்குயில் மப்புச்சே மக்களுடன் இணைந்துக்கொண்டனர்.
ஸ்பானிய காலனியத்தில் இருந்து சிலி விடுதலை பெற்றதை தொடர்ந்து 19ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் ஐரோப்பிய மற்றும் “மெஸ்டிசோ” சிலியர்கள் மப்புச்சே மக்கள் வாழ்ந்து வந்த அரௌகேனியா பகுதியை ஆக்கிரமிக்க தொடங்குகின்றனர். இதன் காரணமாக தன் சொந்த நிலத்திலேயே மப்புச்சே மக்களின் குடியுரிமையும், தேசமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அவர்களுக்கான உரிமை மறுக்கப்பட்டது. அம்மக்களின் மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் சிலி அரசு எந்த அங்கீகாரமும் வழங்கிடவில்லை.
இன்றுவரை தங்கள் இன உரிமைக்காகவும் நிலத்திற்காகவும் சிலி மற்றும் அர்ஜென்டினாவில் மப்புச்சே மக்கள் போராடி வருகின்றனர். அரௌகேனியா நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த இவர்கள் ஸ்பானிய காலனி ஆதிக்கத்தின் வரலாற்றில் அரௌகேனியான்கள் (Araucanians) என்று அழைக்கப்பட்டனர். “அரௌகேனியான்கள்” என்ற சொல்லாடல் இன்று இழிசொல்லாக மாற்றப்பட்டுள்ளது.
ஸ்பெயின் காலனிய தங்கச்சுரங்க பணியில் வேலை செய்த மப்புச்சே மக்கள் பலர் இறந்துபோனார்கள். ஸ்பெயின் காலனி அரசு தங்கள் படைகளில் மப்புச்சே மக்களை இணைத்து போரிட வைத்தனர். இதனால் மப்புச்சே மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துபோனது.
19ஆம் நூற்றாண்டில் காலனிய காலத்திற்கு பின்னர் சிலி நாட்டின் பணப்பயிர் தொழிலுக்கான நிலப்பரப்பு விரிவடைய தொடங்கியது. இச்சூழலில் மப்புச்சே இனத்தினர் வாழ்ந்து வந்த வளமான நிலத்தை அபகரிக்கவும், அந்நிலங்களில் விவசாய உற்பத்தியை பெருக்கிடவும் சிலி அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மப்புச்சே மக்கள் வாழும் வடக்கு அரௌகேனியா நிலப்பரப்பில் இன்றளவும் நில ஆக்கிரமிப்பு சண்டைகளும், வன்முறைகளும் சிலி அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மப்புச்சே மக்களின் பாரம்பரிய கல்வி முறைகளும் அரசினால் ஒழிக்கப்பட்டுவிட்டது.
அரசின் நில அபகரிப்பு கொள்கை, பஞ்சம், நோய் தொற்று போன்ற காரணங்களால் மப்புச்சே இன மக்கள் தொகை ஐந்து லட்சத்தில் இருந்து வெறும் இருபத்தி ஐந்தாயிரமாக சுருங்கி போனதாக வரலாற்று ஆசிரியர் வார்டு சர்ச்சில் குறிப்பிடுகிறார். இதனால் எண்ணற்ற மப்புச்சே மக்கள் தங்கள் சொந்த நிலத்தைவிட்டு அகதிகளாக வெளியேறி வேறு இடங்களுக்கு இடம்பெயரும் அவலம் ஏற்பட்டது.
மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்யும் பெருநிறுவனங்கள் சிலியின் ஆயிரக்கணக்கான ஏக்கர் வால்டிவியன் காட்டு நிலப்பரப்பு அழித்துள்ளனர். அந்நிலத்திற்கு ஒவ்வாத அந்நிய மரங்களான சவுக்கு மற்றும் தைல மரங்களை பயிர் செய்கின்றனர். 3 ஆண்டுகளான தைல மரம் நாளொன்றுக்கு 20 லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சிவிடுகிறது. மேலும், இம்மரங்களை வளர்க்க ஏராளமான இரசாயன உரங்களை கொட்டி நிலத்தை மலடாக்குவதாக மப்புச்சே மக்கள் குமுறுகின்றனர். இப்படியாக வளர்க்கப்படும் மரங்கள் சீனா, ஜப்பான், அமெரிக்கா, இத்தாலி மற்றும் உலகெங்கும் ஏற்றுமதியாகின்றது. தங்கம், தாமிரம் சுரங்கள், மீன் பிடி தொழிலை அடுத்து சிலியின் பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பு செய்திடுவது சிலியின் காடு அழிப்பு தொழில் தான்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில், குறிப்பாக பிரேசில், காடுகளை அழித்து பணப்பயிர்களை வளர்க்கும் பெருநிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறியுள்ளது. இக்காடுகளில் வாழ்ந்து வரும் தொல் பழங்குடியினரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் பணிகளை அந்நாடுகளின் “வெள்ளையர்” அரசுகள் செய்து வருகின்றன. இதற்கு எதிராக பல இடங்களில் பழங்குடி மக்கள் போராடி வருகின்றனர்.
சிலி அரசின் துணையுடன் பெருமுதலிகள் தங்கள் நிலங்களை ஆக்கிரமிப்பதை எதிர்த்து மப்புச்சே மக்களும் போராடுகின்றனர். பன்னாட்டு முதலாளிகளின் வியாபாரத்திற்காக நடைபெறும் வனஅழிப்பை தடுத்திட “ஸ்டான்ட் எர்த் குரூப்” (Stand Earth Group) என்ற வன பாதுகாப்பு அமைப்பு சிலியின் வனப்பொருட்கள் வர்த்தக கொள்கைகளை மாற்றக்கோரி உலகளாவிய பிரச்சாரத்தை மேற்கொண்டது. சிலியில் குவிந்திருக்கும் இயற்கை கனிம வளங்களை குறிவைத்து வந்த ஸ்பானிய காலனிய வரலாற்றை தொடர்ந்து விடுதலை பெற்ற சிலியில் வெள்ளையின அதிகாரவர்கம் தீவிர முதலாளித்துவத்தை ஆதரித்து வந்தது.
சிலி நாட்டின் முன்னாள் ராணுவ சர்வாதிகார அதிபர் அகஸ்டோ பினோச்சே (Augusto Pinochet 1973 – 1990) மப்புச்சே மக்களின் போராட்டத்தை ஒடுக்க தீவிரவாத தடுப்பு சட்டத்தை இயற்றினார். அந்த சட்டத்தை பயன்படுத்தி இன்றைய அதிபர் செபாஸ்டியன் பினேராவும் போராடும் மப்புச்சே மக்களை ஒடுக்கி வருகிறார். போராடி வரும் மப்புச்சே மக்களின் மீது தீவிரவாத பாதுகாப்பு சட்டம் பிரயோகப்படுத்துவதையும், போராட்டத்தின் நிலவரத்தை கண்டறிய ஐ.நா மன்றம் பென் எமெர்சன் என்ற அதிகாரியை சிலி நாட்டிற்கு அனுப்பி வைத்தது. அவர் ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் தீவிரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிராக ஐ.நா மன்றம் தனது கண்டனத்தை சூலை 2013ல் பதிவு செய்தது.
தங்கள் பூர்வீக நிலத்தை முதலாளித்துவ “வெள்ளையர்” அரசிடம் இருந்து மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த பகுதிகளை தன்னாட்சி பிரதேசமாக அறிவித்திட வேண்டும் என்பதே மப்புச்சே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மப்புச்சே இன விடுதலைக்காக போராடும் “குவார்டினடோரா அறவுக்கோ மல்லேக்கோ” ( Coordinadora Arauco Malleco – CAM ) என்ற அமைப்பு ஒரு மார்க்சியவாத அமைப்பாகும். இதன் தலைவர் 53 வயதான எக்டர் லைட்டுள் ( Hector Llaitul ) கல்லூரி மாணவராக இருந்த காலம் முதலே இடதுசாரி அமைப்புகளுடன் இணைந்து இயங்கி வருபவர். இவர் அகஸ்டோ பினோச்சே சர்வாதிகார அரசுக்கு எதிராக போராடியவர். 1998ல் மப்புச்சே தலைவர்களுடன் இணைந்து CAM போராட்ட அமைப்பை தோற்றுவித்தார். இந்த அமைப்பானது மப்புச்சே மக்களின் நிலங்களை, அரசு மற்றும் அரசின் ஆதரவு பெற்ற பெருநிறுவனங்களிடம் இருந்து மீட்பதை பிரதான கோரிக்கையாக முன்நிறுத்துகின்றது. எக்டர் லைட்டுள் பலமுறை சிலி அரசாங்கத்தினால் தீவிரவாதி முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக 2017ல் கைது செய்யப்பட்டார். இவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் சிலி ராணுவத்தால் கூறப்பட்ட பொய் குற்றச்சாட்டுகள் என நிரூபிக்கப்பட்டு ஓராண்டு சிறைவாசத்திற்கு பிறகு விடுதலையானார்.
CAM அமைப்பு வனஅழிப்பை செய்திடும் பெருநிறுவனங்களின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திட அந்நிறுவனங்களின் ரயில் மற்றும் சாலை போக்குவரத்தை தடுப்பது, தொழிற்சாலை எந்திரங்களை சேதப்படுத்துவது என வெள்ளையின முதலாளிகளுக்கும் அவர்களின் அரசுக்கு எதிராகவும் மூர்க்கமாக போராடி வருக்கின்றனர். அதே நேரம், CAM அமைப்புக்கு எதிராகவும், மப்புச்சே இன மக்களுக்கு எதிராகவும் சிலி அரசு தனது காவல்துறையையும், ராணுவத்தையும் ஏவி அவர்களின் நியாயமான போராட்டத்தை அடக்கி ஒடுக்கி வருகிறது.
2018ல் மாப்புச்சே இன தலைவர்களில் ஓருவரின் பேரனை, 24 வயதே நிரம்பிய விவசாய இளைஞனை, ட்ராக்ட்டரில் செல்லும்போது காவல்துறையினர் பின்புறமிருந்து சுட்டு கொன்றனர். அந்த இளைஞனுடன் பயணம் செய்த 15 வயது சிறுவனை கைது செய்து அடித்து துன்புறுத்தினர். இந்த சம்பவம் மாப்புச்சே மக்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. இது போன்ற பல அடக்குமுறைகளை எதிர்கொண்டாலும் இந்த குறிப்பிட்ட சம்பவம் அவர்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தியது. படித்த மப்புச்சே இளைஞர்கள் தங்கள் பூர்வீக நிலங்களையும் தன்னாட்சி பிரதேச உரிமையையும் பெருவது மட்டுமே இதற்கான தீர்வாக அமையும் என்று உறுதியாக நம்புகின்றனர்..
தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக மீட்டெடுத்த பூர்விக நிலங்களில் “இது மீட்கப்பட்ட நிலம்” என்று அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளனர். அவ்வாறு மீட்கப்பட்ட நிலங்களில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். மீட்கப்பட்ட நிலங்கலிலிருந்து அம்மக்களை அரசு தனது இராணுவத்தை கொண்டு அடித்து விரட்டுவதும் அரங்கேறி வருகிறது. அரசின் இந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்சிடாமல் அம்மக்கள் மீண்டும் அதே நிலத்தை கைப்பற்றி அங்கே குடியேறி வருகிறார்கள். இப்படியாக தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஒரு கட்டத்தில் இராணுவம் சோர்வுற்று வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.
தற்பொழுது, மப்புச்சே இன உரிமைக்கான ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் பல்வேறு புதிய இளைஞர் குழுக்களும் இறங்கியுள்ளன. இந்த புது குழுக்கள் செய்யும் வன்முறைகளை CAM மீது பழி சுமத்தி அரசு சிலி மக்களிடையே பிரச்சாரம் செய்தும் வருகிறது.
உலகெங்கிலும் போராடும் இயக்கங்கள் போன்றே எக்டரின் தலைமையிலான CAM இயக்கமும் பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளது. இவை அனைத்தும் அதிகார வர்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் வழக்கமான பொய் பிரச்சாரங்களே ஆகும். தமிழீழ விடுதலை புலிகள் மீது சுமத்தப்பட்ட அதே போதை பொருள் கடத்தல் எனும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு இவர்கள் மீதும் சுமத்தப்பட்டது. மேலும், தாலிபான் உள்ளிட்ட சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் CAM தொடர்பு வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இதே குற்றச்சாட்டு புலிகள் மீதும் சுமத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதலாளித்துவ வல்லாதிக்க அரசுகள் உலகெங்கும் ஒரே மாதிரியாகவே இயங்கி வருகின்றன.
சிலி அரசின் குற்றச்சாட்டுகள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த எக்டர், “இத்தகைய குற்றச்சாட்டுகள் விடுதலை போராட்ட இயக்கங்கள் மீது அதிகாரவர்க ஊடகங்களால் வைக்கப்படுவது வழக்கமான செயல் தான். ஆனால், எங்கள் இயக்கத்தை பொறுத்தவரை அது பொய் குற்றச்சாட்டு என்பதை இயக்கத்தின் தலைவர் என்கிற முறையில் நான் உறுதியாக கூறுவேன்” என்றார்.
மப்புச்சே மக்களின் விடுதலை, மப்புச்சே நாடு முதலாளித்துவ முறை நீங்கிய ஒரு சோசலிச சமூகம் உருவாக வேண்டும் என்பதே எக்டரின் கனவாக உள்ளது.
2019ல் சிலி தலைநகரில் மக்கள் மெட்ரோ ரயில் கட்டண உயர்வுக்கு எதிராகவும், வளர்ந்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும் கடுமையான தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த தொடர் போராட்டத்தின் வெற்றியாக செபஸ்டியன் பினேராவின் அரசாங்கம் வெளியேற்றப்பட்டது.
இதனையடுத்து நடந்த தேர்தலில் பெண்கள் அமைப்புகள், பூர்வகுடி மக்களின் உரிமைக்காக போராடும் அமைப்புகள், முற்போக்கு இடதுசாரி அமைப்புகள், மாணவர் அமைப்புகள் என பல்வேறு அமைப்புகளின் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இவர்கள் தங்கள் முதன்மை பணியாக இராணுவ சர்வாதிகாரி பினோச்சேவின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை திருத்துவதாக முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த மாற்றத்தை மேற்கொள்வதற்காக சிலியில் வாழும் அனைத்து மக்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அரசியலமைப்பு திருத்தம் மப்புச்சே மக்கள் கோரும் விடுதலைக்கு வழி வகுத்திடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதன் முடிவு எவ்வாறாக இருந்தாலும் மப்புச்சே மக்களுக்கான ஒரே தீர்வாக அம்மக்களின் விடுதலைக்காகப் போராடும் அமைப்புகள் முன்வைப்பது தனிநாடு என்பதே ஆகும். இந்த தீர்வுக்கான இலக்கை நோக்கிய மப்புச்சே மக்களின் பயணம் தொடரும் என்பதில் ஐயமில்லை!