ஜூலியன் அசாஞ்சே: அமெரிக்காவின் கொடுங்கனவு

ஜூலியன் அசாஞ்சே: அமெரிக்காவின் கொடுங்கனவு 

ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு அனுப்பக்கூடாது என உலகிலுள்ள சனநாயக ஆற்றல்கள் அனைத்தும் குரல் கொடுத்துவரும் நிலையில் இந்தாண்டு தொடக்கத்தில் அதனை உறுதி செய்தது பிரித்தானிய கீழமை நீதிமன்றம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இம்முடிவை மறுதலித்த பிரித்தானிய மேல்முறையீட்டு நீதிமன்றம், தற்போது லண்டனின் உயர்பாதுகாப்பு பெல்மார்ஷ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கு ஒப்புதலித்து, தங்கள் நாட்டுக்கு அனுப்பிடக் கோரும் அமெரிக்காவின் கோரிக்கையை பரிசீலணை செய்யும் முடிவை உள்துறைச் செயலாளருக்கு அனுப்பும்படி கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, அசாஞ்சே மீது தங்கள் நாட்டு அரசியல் விவகாரங்களை உளவுப் பார்த்ததாக 17 குற்றச்சாட்டுகள் இருப்பதாக அமெரிக்க அரசு பிரித்தானியாவிடம் முறையிட்டது. அசாஞ்சே அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டால் அந்நாட்டு சட்டப்படி அவருக்கு 175 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

தற்போது பிரித்தானிய நீதித்துறையிடம் வாதாடிவரும் அமெரிக்க அரசு அதிகாரிகள், அமெரிக்காவில் சிறைபடுத்துவதில் ஆட்சேபமிருக்கும் பட்சத்தில் அசாஞ்சேவை அவரது சொந்த நாடான ஆஸ்திரேலியாவிலேயே சிறைப்படுத்தவும் ஒப்புக்கொள்வதாகச் சொல்லித்தான் இம்முறை நாடு கடத்த ஒப்புதல் வாங்கியிருக்கிறது. இப்படி எப்பாடுபட்டாவது அசாஞ்சேவை தங்கள் நாட்டுக்குக் கொண்டுவந்து விட வேண்டும் என்று வல்லாதிக்க அமெரிக்கா பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு என்ன செய்தார் அசாஞ்சே? யார் இவர்?

விக்கிலீக்ஸ்
ஜூலியன் அசாஞ்சே 2006-இல் விக்கிலீக்சை என்ற உலகையே உலுக்கிய பதிப்பகத்தை நிறுவிய ஒரு ஆஸ்திரேலிய ஊடகவியலாளர். இது அமெரிக்க வல்லாதிக்க அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழித்து அதன் உண்மை முகத்தை உலகறியச் செய்து, அவற்றின் மனிதவிரோத இரகசியங்களைத் தோலுரித்துக் காட்டியதன் மூலம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. பத்திரிக்கைத் துறையின் போக்கையே தனது தனித்துவமான வழியில் மாற்றிக் காட்டிய விக்கிலீக்ஸ், அரசாங்கங்களின் இரகசிய சதிகள் குறித்த விவாதங்களை உலகெங்கும் எழுப்பியது.

விக்கிலீக்ஸ் தான் வெளியிட்ட அனைத்துத் தகவல்களையும் வெளிப்படையாக வைத்து உலகம் முழுவதும் பல்வேறு தளங்களில்  செயல்படும் ஊடகவியலாளர்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருந்து வருகிறது என்றால் அது மிகையல்ல. அமெரிக்க வல்லாதிக்கத்தை எதிர்த்து நிற்பதில் இன்று வரையிலும் சமரசமின்றி களத்தில் நின்றுவரும் விக்கிலீக்ஸ் பத்திரிக்கைத் துறைக்கான ஏராளமான விருதுகளைக் குவித்துள்ளது.

விக்கிலீக்சை நிறுவிய தொடக்க காலத்திலே அசாஞ்சே எழுதிய ‘அரசாங்கம் மற்றும் பயங்கரவாத குழுக்களின் கூட்டுச்சதிகள்(State and Terror conspiracies)’ மற்றும் ‘ஆளுகை பெயரில் கூட்டுச்சதி(Conspiracy As Government) எனும் இரண்டு தொடர் கட்டுரைகள் பயங்கரவாத குழுக்களுக்கு வளங்களை அளித்து, தங்கள் சுயலாபத்திற்காக கூட்டுச்சதி செய்யும் அரசாங்கங்களின் மனிதவிரோத கொள்கைகளை அம்பலப்படுத்தி, எந்த நவீன-பெருமுதலாளித்துவ சுரண்டலை முற்போக்கு ஆற்றல்கள் எதிர்த்து நிற்கவேண்டுமென்பதை தெளிவுபடுத்தியது.

2010-2011 இல் ‘விக்கிலீக்ஸ் கோப்புகள்’ என்ற பெயரில் 251,287 அமெரிக்க உயர்ரகசியக் கோப்புகளுடன் வெளிவந்த பதிப்புதான் விக்கிலீக்சை உலகெங்கும் பிரபலப்படுத்தியது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உள்ளக கசிவுகள் (United States diplomatic Cables leak, சுருக்கமாக – Cablegate) என்ற பெயரில் வெளிவந்த இது, அது நாள் வரை அமெரிக்க அரசு செய்து வந்த போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை ஆதாரத்துடன் பொதுவெளியில் வைத்தது. இதில் ஆப்கன் போர் மற்றும் இராக் போர் குறித்த பல்வேறு அமெரிக்க அரசின் ‘உயர் இரகசிய (Top Secret)’ தகவல்களும் அடக்கம்.

அமெரிக்கா தனது தோழமை நாட்டுத் தலைவர்கள் மற்றும் தோழமை சர்வாதிகாரிகளை எப்படிப் பார்க்கிறது என்பதுடன், அமெரிக்கா செய்த மனித உரிமை மீறல்கள் மற்றும் பாதுகாப்பு என்ற பெயரில் செய்த திருட்டுத்தனங்களும் சேர்ந்தே வெளிவந்தது. அத்துடன் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது வல்லாதிக்கத்தை உலக அரங்கில் நிலைநிறுத்த கையாண்ட திரைமறைவு இராணுவ செயல்பாடுகள், கள்ள உடன்பாடுகள் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டது.

2017-ஆம் ஆண்டு எழுத்தாளர் மற்றும் முன்னாள் ‘வால் ஸ்டீர்ட் ஜர்னல்’ ஊடகவியலாளரான ஜோ லோரியா எழுதிய, ‘நான் எப்படி ஹிலாரி கிளிண்டனால் தோற்றேன் (How I Lost By Hillary Clinton)’ எனும் நூலை வெளியிட்டார். இது 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்களிடம் செல்வாக்கற்ற குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பை வெல்ல வைப்பதற்காக ஹிலாரி கிளின்டனும் அவரது நெருங்கிய வட்டாரமும் செய்த வேலைகளை அம்பலப்படுத்தியது. மேலும், இது வெறும் ஒரு தேர்தலுக்காக நடத்தப்பட்டதல்ல, பின்வரும் பல ஆண்டுகளின் வலதுசாரித்துவ வளர்ச்சிக்காகச் செய்யப்பட்டது என்பது இந்நூலின் சாராம்சம். இந்த நூலிற்கு விக்கிலீக்ஸ் கொணர்ந்த கிளின்டனின் கோல்டுமேன் சாச்ஸ் (Goldman Sachs Group, Inc,) உடனான பேச்சுக்களும், கிளின்டனின் பரப்புரைத் தலைவரான ஜான் பொடெஸ்டாவின் மின்னஞ்சல்களும் பெரும் பங்களிப்பளித்தன.

2016 சனநாயக தேசியக்குழு மின்னஞ்சல் கசிவு (2016 Democractic National Committee email leak) என்ற பெயரில் வந்த இன்னொரு தொகுப்பானது அமெரிக்க சனநாயகக் கட்சியின் உயர்மட்டக்குழுவின் 19,252 மின்னஞ்சல்கள் 8,034 கோப்புக்கள் 2016 ஜூன் – ஜூலை மாதங்களிலும், மேலும் 8,263 மின்னஞ்சல்கள் நவம்பர் 6-ஆம் தேதியும் விக்கிலீக்சால் வெளியிடப்பட்டது.

அமெரிக்க ஒடுக்குமுறைகள்
அமெரிக்காவின் முகத்திரையைக் கிழித்துக் காட்டும் இத்தனை வேலைகளையும் செய்த அசாஞ்சேவை சும்மா விடுமா அமெரிக்க ஏகாதிபத்தியம்? அசாஞ்சே ஆப்கன் போர்த் தரவுகளை ஸ்வீடனிலிருந்து வெளியிட்ட ஆகஸ்ட் 2010-இலேயே ஸ்வீடனை வைத்தேக் காயை நகர்த்தியது அமெரிக்கா. ஸ்வீடனைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தனித்தனியாக அசாஞ்சேவிற்கு எதிராக பாலியல் புகாரளித்தனர். போதிய சாட்சியமின்றி ஸ்வீடன் நீதிமன்றமே நிராகரித்த 2 புகார்களையும் 2013, 2017, 2019 என மூன்று முறை மீண்டும் திறந்தது ஸ்வீடன் அரசு. இதில் 2013-ஆம் ஆண்டு ஐக்கிய ராஜ்ஜிய அதிகாரிகளின் அழுத்தத்தின் பேரிலேயே, ஸ்வீடன் முடித்துவிடலாம் என்றிருந்த வழக்கை திரும்பவும் தொடர்ந்தது.

டிசம்பர் 2010-இல் லண்டனிலிருந்த அசாஞ்சேவை ஒப்படைக்குமாறு ஸ்வீடன் பிரித்தானியாவை கோரியபோது, தானே சென்று லண்டனில் ஒரு காவல்நிலையத்தில் சரணடைந்தார் அசாஞ்சே. 10 நாட்கள் சிறைக்குப் பின் தினமும் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்ற வீட்டுக்காவலின் பேரில் ஜாமீன் வழங்கியது ஐக்கிய ராஜ்ஜியத்தின் நீதிமன்றம். இதனை அடுத்த 551 நாட்கள் தொடர்ந்து செய்தார்.

இந்தத் தொடர் ஒடுக்குமுறைகள் ஒன்றும் அவரது ஊடகவியலாளர் பணியை முற்றிலுமாக முடக்கிவிடவில்லை. ஏப்ரல் 2012-இல் ‘நாளைய உலகம்(The World Tomorrow)’ என்ற பெயரில் ஒரு அரசியல் நேர்காணல் தொடரை நடத்தினார். இதில் வெளிப்படைத்தன்மை, கண்காணிப்பு மற்றும் பல உலக நிகழ்வுகள் குறித்து பல அரசியல் செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடினார். இதில் அமெரிக்க மொழியியலாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான நோவாம் சோம்ஸ்கி (Noam Chomsky), அன்றைய ஈக்வடாரின் அதிபர் ரஃபேல் கோர்ரியா (Rafael Correa), அமெரிக்காவின் குவாண்டனாமே சிறைச்சாலையின் முன்னாள் சிறைவாசி மோசாம் பெக் (Moazzam Begg), லெபனானின் ஹெஸ்பொல்லா இயக்கத்தின் தலைவரான ஹசன் நசரல்லா (Sayyed Hassan Nasrallah) முதலானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தான் மே 2012-இல் அசாஞ்சேவை நாடுகடத்தக் கோரிய ஸ்வீடனின் கோரிக்கையை ஏற்றது ஐக்கிய ராஜ்ஜியத்தின் உச்சநீதிமன்றம். ஸ்விடன் கண்டிப்பாக அமெரிக்காவிற்கு தன்னை ஒப்படைத்துவிடும் என்பதை உணர்ந்த அசாஞ்சே, 19 ஜூன் 2012-இல் ஈக்வடாரின் தூதரகத்திடம் புகலிடம் கோரினார். இதனை ஏற்ற ஈக்வடோர் அரசு, 16 ஆகஸ்ட் 2012 அன்று அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதைக் கருதி, தனது லண்டன் தூதரகத்திலிருந்த அசாஞ்சேவிற்கு அடைக்கலம் தந்தது.

கிட்டத்தட்ட ஏழாண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறிய கதிரொளிக் கூட படாத அறையில் அவரது வாழ்க்கை அத்தனை எளிதானதாக இருந்துவிடவில்லை. எனினும் அவரது செயல்பாடும் விக்கிலீக்சின் செயல்பாடும் முடங்கிவிடவில்லை. மே, 2017 ஈக்வடாரில் ஆட்சி மாறுகிறது.

அசாஞ்சேவை ஆதரித்து வந்த அதிபர் ரஃபேல் கொர்ரியா மாறி, அமெரிக்க சார்பாளர் லெனின் மொரெனோ ஆட்சிக்கு வருகிறார். ஆட்சி மாறியதும் காட்சிகள் மாறுகின்றன. புதிய அதிபர் அவரை வெளியுலகத் தொடர்பின்றி தனிமைப்படுத்தத் தொடங்கியதுடன் அச்சுறுத்தவும் செய்கிறார். இவை அசாஞ்சேவை உடல் மற்றும் மனதளவில் தாக்குதலுக்கு உள்ளாக்கியது. தோள்பட்டை வலியால் அவதிப்பட்டுவரும் அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளைத் தடுத்ததுடன், அசாஞ்சே கூடியவிரைவில் கைது செய்யப்படுவார் என்றும் பட்டவர்த்தமாக அறிவித்தனர் பிரித்தன் அதிகாரிகள்.

ஈக்வடார் அரசு மார்ச் 2018-இல் விதித்த புதிய விதிகள், அசாஞ்சேவை அவரது வழக்கறிஞர்களைத் தவிர யாரும் பார்க்க வரக்கூடாது என்றதுடன், அவரது தொலைப்பேசி மற்றும் அனைத்து மின்தொடர்புகளையும் துண்டித்தது. அமெரிக்க அரசு ஈக்வடாருடனான தனது ராணுவத் தொடர்புகளை வலுப்படுத்தி, அசாஞ்சேவை தன்னிடம் ஒப்படைக்க எல்லா விதத்திலும் அழுத்தம் கொடுத்தது. பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதில், 1 மே 2019 அன்று ஈக்வடார் தூதரகத்திலிருந்து கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார் அசாஞ்சே.

மேலும், கடந்த செப்டம்பர் மாதம்தான் டிரம்ப் அரசாங்கம் 2017-இல் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வை வைத்து அசாஞ்சேவை கொலைசெய்ய திட்டமிட்டிருந்ததை யாஹூ வெளிக்கொண்டுவந்தது.

இத்தனை ஒடுக்குமுறைகளுக்கு உள்ளான அசாஞ்சேவின் மனநிலையைக் கருத்தில் கொண்டே, அமெரிக்க சிறைச்சூழல் அவரைத் தற்கொலைக்குத் தள்ளலாம் என்று கீழமை நீதிமன்றம் அமெரிக்காவின் நாடுகடத்தும் கோரிக்கையை நிராகரித்திருந்தது. தற்போது பிரித்தன் மேல்முறையீட்டு நீதிமன்றம் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று, அதுகுறித்து பிரித்தானிய உள்துறை செயலாளரின் பரிசீலனைக்கு அனுப்புமாறு கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 2018 முதல் விக்கிலீக்சின் தலைமைப் பதிப்பாசிரியராக இருந்து வரும் ஐஸ்லாந்து ஊடகவியலாளர் கிரிஸ்டின் ரான்சன் இதுகுறித்து கூறுகையில், “இந்த அச்சுறுத்தலானது, அரசாங்கங்களுக்கும் பெருநிறுவனங்களுக்கும் இக்கட்டான தகவல்கள் குறித்து பத்திரிக்கையாளர்கள் பேசக்கூடாது எனப் பத்திரிக்கையாளர்களின் உரிமைகளின் மீது தொடுக்கப்பட்டது. இது கொடுங்கோன்மை வல்லாதிக்கம் தனது விருப்பத்திற்கேற்ப ஊடகவியலாளர்கள் செயல்பட வேண்டுமென கூறும் அடக்குமுறை.” என்கிறார். அசாஞ்சேவின் வழக்கறிஞர்கள் இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடப்போவதாகச் சொல்லியிருக்கின்றனர்.

நீதிமன்றத்தின் இந்த முடிவு தெரிந்தவுடனேயே நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே கூடியிருந்த செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் இறங்கி வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தியத்தின் முகத்திரையைக் கிழித்தெறிந்த ஜூலியன் அசாஞ்சேவிற்கு ஆதரவாக சனநாயகத்தை விரும்பும் உலகெங்கும் உள்ள முற்போக்கு ஆற்றல்கள் குரலெழுப்பி வருகின்றனர். அசாஞ்சேவிற்கு ஆதரவாக குரலெழுப்ப வேண்டியத் தேவை ஒடுக்குமுறையை எதிர்க்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. நாமும் எழுப்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »