அதானிக்கு எதிராக ஆஸ்திரேலிய பழங்குடியினர் போராட்டம் – பாகம் 2

அதானிக்கு எதிராக ஆஸ்திரேலிய பழங்குடியினர் போராட்டம் – பாகம் 2

உலகில் உள்ள எந்த ஒரு இனத்தையும்  வரலாற்றுடன் இணைப்பதே தொல்பொருள் ஆராய்ச்சியின் நோக்கம்.  நமது  கடந்த காலம், அதில் நம்முடைய பண்பாட்டுக் குறியீடுகள் மற்றும் அப்போதைய வாழ்க்கை முறை குறித்து ,  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட தொல் கலைப்பொருட்கள், நாம் எங்கிருந்து வந்தோம் என்று சிந்திக்க வைப்பத்தோடு நம் தலைமுறைகளுக்கும் அதை உணர்த்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. இவ்வளவு மதிப்புமிக்க தொல்பொருட்களை அழிப்பதன் ஒரு இனத்தின் வரலாற்றை அழிக்கலாம். அதன் மூலம் ஒரு திட்டமிட்ட இனரீதியான பண்பாட்டு அழிப்பை நிகழ்த்தி ஒரு இனத்தையே நிலமற்ற, உடைமைகள் அற்ற அகதிகளாய் மாற்ற முடியும். அப்படியொரு அழிவின் தொடக்கப் புள்ளியில்தான்  அதானி நிறுவனம் ஆஸ்திரேலிய பழங்குடிகளை நிறுத்தியிருகிறது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள அதானியின் கார்மைக்கல் நிலக்கரி  சுரங்கத்திலிருந்து, ஏற்றுமதி தொடங்கப்பட்ட நிலையில், அங்கு பல ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கும் வாங்கன் மற்றும்  ஜகலிங்கோ பழங்குடியினர்  தங்கள் வீடுகளையும், நிலத்தையும், காடுகளையும் பாதுகாக்க அதானி நிறுவனத்தையும் அரசாங்கத்தையும் எதிர்த்து போராடத் தொடங்கி அதற்கு “Standing our ground” என்று பெயரிட்டு அதை பல்வேறு நிலைகளில் முன்னகர்த்தி வருகின்றனர். ( கட்டுரையின் முதல் பகுதி விரிவாகப் படிக்க)

போராட்டத்தின் ஒரு பகுதியாக அதானி நிலக்கரி சுரங்கத்தின் வாயிலில்  கடந்த 100 நாட்களுக்கும் மேலாக, வாங்கன் பழங்குடியினர் தங்கள் பண்பாட்டு விழாவை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டக் களத்தின் அருகேதான், அரை ஏக்கர் பரப்பளவு கொண்ட, ஆயிரக்கணக்கான  தொல்கலைப்பொருட்கள் (artefacts) இருந்த பகுதியை புல்டோசர் இயந்திரத்தின் மூலம் அதானி நிறுவனம் கடந்த வாரம்  அழித்துள்ளது.

இத்தளத்தில் உள்ள கற்களின் தன்மையை பயன்படுத்தி கற்கருவிகள் செய்யும் முறை வாங்கன் மக்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு தொல்லியல் கலை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தங்கள் முன்னோர்கள் செய்த கலைப்பொருட்கள், புல்டோசர்  மூலம் உடைத்து நொறுக்கப்பட்டு, வெறும் கற்குவியல்களாக மாற்றப்பட்டுள்ளதைப் பார்த்து அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு முதல், நூற்றுக்கணக்கான தொல்பொருட்கள் அந்தத் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. பல ஆண்டுகளாக  இந்தத் தொல்லியல்  தளத்தின் முக்கியத்துவத்தை  அறிந்திருந்த அதானி நிறுவனம், இடிப்பதற்கு கடைசி நிமிடம் வரை பழங்குடியின மக்களுக்கு தெரிவிக்காமல், இயந்திரத்தின் மூலம் களத்தை அழித்து விட்டார்.

சில மாதங்களுக்கு முன், குயின்ஸ்லாந்தின் பழங்குடியின மரபுச் சட்டத்தை மீறி அதானி நிறுவனம் 3000 கன மீட்டர் தொல் பொருட்களை நிலக்கரி சுரங்கம் இருக்கும் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றத் திட்டமிட்டிருந்தது. இதை எதிர்த்து போராட்டக் குழுவினர் குயின்ஸ்லாந்து அரசாங்கத்திற்கு கடிதம் எழுதினர். அதில் சுரங்கம் அமைந்திருக்கும் நிலம் முழுவதும் பழங்குடி மக்களின் பண்பாட்டு  வரலாற்றைக்  கொண்டுள்ளது எனவும்,  இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த  இடங்களை அதானி நிறுவனம் பொறுப்பற்ற முறையில் அழித்து, மோசமாக நிர்வகிப்பதை தாங்கள் விரும்பவில்லை எனவும் பழங்குடி  மக்கள் தெளிவுபடுத்தி இருந்தனர்.

ஆனால் பழங்குடி மக்களை “எரிபொருள் எதிர்ப்பாளர்கள்” என்று முத்திரை குத்திய அதானி நிறுவனம், குயின்ஸ்லாந்து அரசாங்கத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்த தொல்லியல் இடத்தை அழித்ததோடு, இதைப் பற்றிய அரசாங்க விசாரணையையும் தடுத்துள்ளது.

தூங்குமபுள்ள.

குயின்ஸ்லாந்தில் அண்மையில் கடுமையான நீர் சட்டங்களை அறிமுகப்படுத்தியபோதும், அதானிக்கு  மட்டும்  நிலத்தடி நீரை இலவசமாகவும் வரம்பற்ற அளவில் நீரை  பயன்படுத்துவதற்கு சலுகைகளையும் வழங்கியதே குயின்ஸ்லாந்து அரசாங்கத்திடம் அதானிக்கு இருக்கும் செல்வாக்குக்கு ஒரு உதாரணம். இதன் விளைவு ஜூலை, 2021 இல் கார்டியன் நிறுவனம் அதானி நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுக்க ஆரம்பித்து 2 ஆண்டுகளில் நிலத்தடி நீரின் மட்டம் 50 மீட்டர் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. வறண்ட நிலத்தில் நீருக்கான ஆதாரமாய் விளங்கும் தூங்குமபுள்ள(Doongmabulla) நீர்நிலைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அதானி நிறுவனம் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது அங்குள்ள  அரசாங்கம் அதானியுடன் ஒரு ‘ உரிமைப் பங்கு’  (ராயல்டி) ஒப்பந்தம் செய்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் அதானி  இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் நிலக்கரிக்கு குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு குறைவான பங்கை செலுத்தினால் போதுமானது.   ஏப்ரல் 2017 இல் அதானியை பிரதமர் டர்ன்புல் சந்தித்ததும், குயின்ஸ்லாந்து பிரதமர் பலாஸ்சூக்கின் தேர்தல் பரப்புரையில் அதானி ஆதரவாளர் பணிபுரியத் தொடங்கியதும் இந்த ஒப்பந்தத்திற்கான முன்னோடியே.

கார்பரேட் நிறுவனங்களுக்காக சட்டங்கள் இயற்றபடுவது பெரும்பாலான அரசாங்கங்கள் செய்யும் மக்கள் விரோத செயல்களுள் முக்கியமானது. தாங்கள் யாருகானவர்கள்! யாரால் ஆட்சிக்கு வந்தார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் நிகழ்வு. இந்தியாவில் கொண்டுவரப்பட்ட விவசாயச் சட்டங்கள் இதற்கு சமீபத்திய உதாரணம். ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அதானிக்காக சட்டங்களை மாற்றி பல சலுகைகளை அளித்து, விதிமீறல்களை அனுமதித்துள்ளது ஆஸ்திரேலிய அரசாங்கம். கார்மைக்கல்  நிலக்கரி சுரங்கத்தில் அதானி தனது தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதானி நிறுவனம் எடுக்காததால், தொழிலாளர்கள் இறப்பதும், காயமடைவதும்  தற்போது வாடிக்கையாகியுள்ளது.

ஒரு பக்கம் பூர்வகுடி மக்களின் நிலங்கள் மாசடைந்து அவர்களின் அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. அதை எதிர்த்து போராடுபவர்களின் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. மறுபுறம் அப்பாவி மக்கள் பல சட்ட மீறல்கள், விதி மீறல்களால் சுரண்டப்பட்டு சில நேரம் இறந்தும் போகின்றனர்.

முதலாளித்துவத்தின் கார்பரேட் கட்டமைப்பு லாபத்தை மட்டுமே நோக்கமாய் கொண்டது. அது சூழலியலை பற்றி கவலைப்படாது. அதற்கு வரலாறு தெரியாது. அதற்கு மனிதத்தன்மை கிடையாது. மனித உழைப்பை சுரண்டி இயற்கையை கொள்ளையடிப்பதே அதன் தாரக மந்திரம். முதலாளித்துவம் மக்களுக்கு எதிராக  தொடுக்கும் போரில் நடைபெறும் அனைத்து வகை தாக்குதல்களையும் இன்று அதானி நிறுவனம் குயின்ஸ்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன், வாங்கன் மற்றும்  ஜகலிங்கோ பழங்குடியினருக்கு எதிராகத் தொடுத்திருக்கிறது. விவசாயச் சட்டங்களை எதிர்த்து 18 மாதங்கள் கார்பரேட்டுகளையும் – உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டின் அரசாங்கத்தையும் எதிர்த்து போராடி மண்டியிட வைத்தனர் சீக்கிய விவசாயிகள். அதானியை எதிர்த்து பழங்குடியினர் இன்றும் போராட்டக் களத்தில் நின்று கொண்டிருக்கின்றனர். மண்ணைக் காக்கும் அவர்கள் போராட்டம் தொடர்கிறது. சீக்கிய விவசாயிகளின் போராட்டம் போலவே ஆஸ்திரேலிய பழங்குடியினர் போராட்டமும் வெல்லட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »