அணை பாதுகாப்பு மசோதா: தமிழகத்தை அழிக்கும் பேராபத்து

அணை பாதுகாப்பு மசோதா: தமிழகத்தை அழிக்கும் பேராபத்து


’நீரின்றி அமையாது உலகு’ என்று வள்ளுவர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நீரின் பெருமையை இந்த உலகத்துக்கு வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறார். அப்படிப்பட்ட தமிழ் சமூகத்திடம் வந்து உங்களுக்கு நீரை பற்றி புரிதல் இல்லை. நாங்களே இனி நீர் மேலாண்மை கவனித்து கொள்கிறோம் என்று ஒருவர் சொன்னால் அது தமிழர்களுக்கு எவ்வளவு பெரிய இழுக்கு? அப்படியான ஒன்று தான் ’அணை பாதுகாப்பு மசோதா’!

கடந்த, 2019 ஆகத்து மாதம் மக்களவையில் இந்த மசோதாவை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு முன்மொழிந்தது. இதனை பல்வேறு மாநிலங்களின் உறுப்பினர்கள் மிகக்கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பாராளுமன்றத்தில் தனக்குள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி பாஜக  அரசு இந்த மசோதாவை நிறைவேற்றிவிட்டது. அதேபோல, மாநிலங்களவையிலும் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்புக்கிடையில் இந்த மசோதாவை நிறைவேற்றி சட்டமாக மாற்றியிருக்கிறது.

இந்த மசோதாவின் படி இனி மாநிலங்களிலுள்ள அணைகள் அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிடும். மாநிலங்கள் இதுவரை அணைகள் குறித்து செய்து வந்த பராமரிப்பு, பாதுகாத்தல், உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் இழந்து, ஒன்றிய அரசு அமைக்கும் ’மத்திய அணைப்பாதுகாப்பு குழு’விற்கு தகவல் சேகரித்து கொடுக்கும் வேலையை மட்டுமே செய்யும் அவலநிலை ஏற்படும். இந்த மசோதாவில் மத்திய அணைபாதுகாப்புக்குழு என்பதை போன்றே மாநில அணைபாதுகாப்புக்குழு என்ற ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, மாநில அரசு முற்றிலுமாக உரிமை இழக்கும் என்று சொல்வதெல்லாம் பொய் என்று மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நாடாளுமன்றத்தில் பச்சை பொய்யை தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அமைச்சர் சொல்வது போல மாநில அணைபாதுகாப்புக்குழு என்ற ஒன்று இந்த சட்டத்தில் இருக்கிறது. ஆனால், அந்த குழுவால் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கமுடியாது என்பது தான் இதிலுள்ள சூழ்ச்சி. மாநில குழு எதை செய்தாலும் மத்திய அணைபாதுகாப்புக்குழுவிடம் அனுமதி பெற்றே செய்யமுடியும் என்பது உரிமை இழப்பு தான். மற்ற மாநிலங்களை போன்று மாநில உரிமை பறிப்பு என்பதற்காக மட்டுமே தமிழ்நாடு இதை எதிர்க்கவில்லை. தமிழ்நாடு இந்த அணைபாதுகாப்பு மசோதாவை எதிர்ப்பதற்கு முக்கியமாக மூன்று காரணங்கள் உண்டு.

முதலாவதாக, நீர்வளத்தை பொறுத்தவரையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை போல் இல்லை. சமவெளியான தமிழ்நாட்டின் நீர்வளம் என்பது பெரும்பகுதி அண்டை மாநிலங்களை நம்பியே இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் உற்பத்தியாகும் ஆற்றின் கடைமடை பகுதியாக அதாவது முடிவடைகிற பகுதியாக தமிழ்நாடு இருக்கிறது. ஆகவே, இயற்கையாகவே இந்த ஆறுகளின் மீதான பெரும்பங்கு உரிமை தமிழ்நாட்டிற்கு உண்டு. ஆனால், அண்டை மாநிலங்களில் இருக்கும் அரசுகள் அந்த உரிமையை தமிழ்நாட்டிற்கு வழங்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன. இதற்கு ஒன்றிய ஆட்சியிலிருந்த கட்சிகள் அனைத்தும் துணைபோவதை நாம் தொடர்ந்து பார்த்து வருவதே. உதாரணத்திற்கு, கருநாடகத்திலிருந்து வரும் காவிரி, ஆந்திராவிலிருந்து வரும் பாலாறு, கேரளாவிலிருந்து வரும் முல்லைபெரியாறு, பரம்பிகுளம்-ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் தமிழகத்தின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

இச்சூழலில் தான் பல்வேறு அண்டை மாநிலங்களோடு தமிழ்நாட்டிற்கு இருக்கும் நீர் தேவைகளை பல ஆண்டுகளாக பேசி வந்தோம். பல்வேறு சமசரங்கள், துரோகங்களுக்கிடையில் காவிரி ஆணையம், பரம்பிகுளம்-ஆழியாறு ஆணையம் உள்ளிட்ட ஆணையங்களை போராடி அமைத்து நம் நீர் தேவையை ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றோம். இப்போது திடிரென்று அவையனைத்தையும் இரத்து செய்துவிட்டு, மீண்டும் புதிதாக அமையவிருக்கும் மத்திய அணைபாதுகாப்புக்குழு அதனை விசாரிக்குமென்றால், இதுவரை அனுபவித்த வந்த உரிமைகள் மறுக்கப்படுவதோடு புதிதாக இந்த ஆணையம் விசாரித்து முடிவு செய்ய பல ஆண்டுகள் ஆகும். அதுவரை தமிழ்நாட்டு குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்கான தண்ணீருக்கு நாம் ஒன்றிய அரசிடம் மீண்டும் போராட வேண்டிய நிலை ஏற்படும்.

இரண்டாவது, இந்த மசோதாவில் மிக முக்கிய பிரச்சனையாக இருப்பது “அணைகள் எந்த மாநில எல்லைக்குள் இருக்கிறதோ அந்த மாநிலங்களுக்கு தான் அந்த அணையின் மீதான உரிமை இருக்கிறது” என்று கூறுவதாகும். இதனால் அதிகம் பாதிப்படையபோவது தமிழ்நாடு மட்டுமே. உதாரணமாக, கேரளா எல்லைக்குள் இருக்கும் அணைகளான பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு, முல்லைப்பெரியாறு ஆகிய நான்கு அணைகளையும் தமிழ்நாடு-கேரளா இடையே ஏற்படுத்திக்கொண்ட 1960 ஆண்டு ஒப்பந்தத்தின் படி தமிழ்நாடு பராமரித்து வருகின்றது. இன்று வந்துள்ள சட்டத்தின் படி அது கேரளாவுக்கு போய்விடும்.

ஏற்கனவே, கேரளா உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் மாறாக முல்லைபெரியாறில் 152அடி உயரத்திற்கு தண்ணீரை தேக்கிட தமிழகத்திற்கு அனுமதி மறுத்து வருகிறது. முல்லைபெரியாறு அணை மிகவலுவாக இருக்கிறதென்று உச்சநீதிமன்றத்தின் இரண்டு வல்லுநர் குழு அறிக்கை வழங்கிய பின்னரும் தொடர்ந்து அணை பழுதுடைந்துவிட்டது, எந்நேரமும் உடையலாம், மக்கள் பெரும் பாதிப்பை சந்திக்கப்போகிறார்கள் போன்ற வதந்திகளை பரப்பி மக்கள் மத்தியில் அச்சத்தை விதைத்து அதன் மூலம் அணையை இடித்திட கேரளா  முயற்சி மேற்கொண்டு வருவதும் அறிந்ததே. இந்த சூழ்நிலையில் அணை கேரளாவுக்கு சொந்தமென்று இந்த சட்டம் சொல்லுமென்றால், முதல் வேலையாக முல்லைபெரியாறு அணையை உடைக்கத்தான் அவர்கள் முயலுவார்கள். இந்த அணை உடைந்தால் தமிழ்நாட்டின் ஆறு தென்மாவட்டங்கள் கடும் வறட்சி மற்றும் பஞ்சத்தை சந்திக்கநேரிடும்.

மூன்றாவதாக, அணையின் மீதான உரிமைகள் அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்கு சென்றால், ஒன்றிய அரசின் கட்சி ஆளுகின்ற மாநிலங்களுக்கு சாதகமாக தான் முடிவுகள் இருக்கும். எடுத்துக்காட்டாக, கருநாடகாவை எடுத்துக்கொண்டால் அவர்கள் காலங்காலமாக தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய காவீரி நீர் உரிமையை மறுத்து வந்தார்கள். அதில் மிகப்பெரிய தூரோகம் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்டு இப்போது காவிரி ஆணையம் என்ற ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய அணை பாதுகாப்பு சட்டத்தால் காவிரி ஆணையம் கலைக்கப்பட்டு அணையின் உரிமைகள் அனைத்தும் இனி ஒன்றிய அரசிடம் போய்விடும். கர்நாடாகாவில் ஆட்சியிலிருக்கும் பாஜக அரசு சார்பாக  ஒன்றிய பாஜக அரசு செயல்படும். மக்களின் தேவைகளை பொருத்து பகிரப்பட்டு வந்த காவிரி நீர் இனி ஒன்றியத்தில் ஆளும் கட்சிக்கு ஓட்டு போடும் மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் அவலம் ஏற்படும். இது, யூகம் அல்ல!

தற்போது இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவாக காவிரி ஆணையம் இருக்கும் போதே கர்நாடாகம் மேக்கதாட்டுவின் காவிரியின் குறுக்கே அணை கட்டுவோமென்று கட்டுமான பொருட்களை கொண்டு  வேலையை தொடங்கியிருக்கிறது. இதற்கு ஒன்றிய அமைச்சர் ஒருவர் உடைந்தையாக இருக்கிறார் என்று தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் மதிமுகவின் பொதுச்செயலாளர் அய்யா வைகோ அவர்கள் மாநிலங்களவையிலேயே குற்றச்சாட்டினார். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் அணைகள் இல்லாதபோதே சட்டத்திற்கு புறம்பான காரியத்தை பாஜக அரசியல்வாதிகள் துணிந்து செய்கின்றனர். நாளை இதற்க்கு சட்டத்திலும் வழிவகை செய்துவிட்டால் தமிழ்நாடு காவிரி தண்ணீரை மறந்துவிட வேண்டியது தான். ஏற்கனவே, முல்லைபெரியாறில் உரிமை மறுக்கப்பட்டு தென்மாவட்டங்கள் பஞ்சத்தை எதிர்நோக்கியிருக்கும் சூழலில், இப்போது காவிரி நீர் உரிமையும் மறுக்கப்பட்டால் ஒட்டுமொத்த டெல்டாவும் வறட்சி பஞ்சத்தை சந்திக்கும் சூழல் உருவாகும். ஆக, தமிழ்நாட்டின் 70%க்கும் மேலான நிலப்பரப்பு பாலைவனமாகும் பேராபத்து இச்சட்டத்தின் மூலம் ஏற்படும்.

தமிழ்நாட்டின் பூமிக்கடியில் கொட்டிக்கிடக்கும் வளங்களை எப்படியாவது திருட ’கார்ப்ரேட் கழுகுகள்’ தமிழ்நாட்டை வட்டமிட்டுக்கொண்டிருக்கும் வேளையில், அவர்களுக்கான வேலையை இலகுவாக்கும் பணியை இந்த சட்டம் செய்து முடிக்கும். விவசாயத்திற்கோ, வேறு எந்த பயனுக்கோ, பயனில்லாத நிலத்தை மக்கள் யாரும் வைத்துக் கொண்டிருக்க மாட்டார். கண்டிப்பாக விற்கத்தான் முயலுவார்கள். அப்படி, விற்கப்படும்போது அதை அடிமாட்டுவிலைக்கு வாங்க மார்வாடி பனியா கழுகுகள் தயாராக இருக்கும். உள்நாட்டிலேயே நிலமில்லாமல் தமிழர்கள் அகதிகளாக, கூலிகளாக மாறும் பேராபத்தை எதிர்கொண்டு இருக்கிறோம். தமிழீழத்தில் சிங்கள அரசு தமிழர்களின் நிலங்களை பறித்து நிலமற்றவர்களாக மாற்றிடும் அதே சமகாலத்தில் தமிழ்நாட்டில் இச்சுழல் உருவாகின்றது. ஆகவே, இந்த புதிய அணைபாதுகாப்பு சட்டத்தை மற்ற எந்த மாநிலங்களை காட்டிலும் தமிழர்கள் மிகமூர்க்கமாக எதிர்க்க அணியமாக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »