
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க உரிமை கோருவதை அங்கீகரிக்காத ஆளுநர் மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலம் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பை, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையில் மே 7, 2026 அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வென்ற போதும், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக உள்ள கேரள ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், தவெக தலைவர் திரு. விஜய் அவர்களை ஆட்சியமைக்க அழைக்காமல் தவிர்த்துள்ளார். பொறுப்பு ஆளுநரின் இந்த ஜனநாயக விரோத செயல் குறித்த மே 17 இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு 07-05-2026 வியாழக்கிழமை நண்பகல் 12:30 மணியளவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் மற்றும் தோழர் அசோக் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கூறியது:
“ஊடக நண்பர்களுக்கு வணக்கம். வெகு குறுகிய நேரத்திலே இந்த ஊடக சந்திப்பு குறித்தான செய்தி அறிந்து, இங்கே செய்தி சேகரிக்க வந்திருக்கக்கூடிய அனைத்து ஊடக தோழமைகளுக்கும் நாங்கள் சார்ந்திருக்கக்கூடிய மே பதினேழு இயக்கத்தின் சார்பாக வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழ்நாடு தேர்தல் இதுவரை சந்திக்காத ஒரு நெருக்கடியை தற்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் தொடர்ச்சியாக தமிழர்களினுடைய உரிமைகளையும், மாநில உரிமைகளையும் நசுக்குகின்ற செயலும் நடந்து வருவதை பார்த்து வருகிறோம்.
மும்முனை போட்டியாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், மூன்று கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலே, ஆளுநராக இருக்கக்கூடியவர் தமிழ்நாட்டிலே அடுத்த அமைச்சரவை பொறுப்பேற்கக்கூடிய தகுதி படைத்த கட்சியை அழைத்திருக்க வேண்டும். அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்கக்கூடிய கட்சியை அழைப்பது அல்லது ஆட்சி அமைக்க கோருகின்ற கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுப்பது என்று எந்தவிதமான நடைமுறையையும் மேற்கொள்ளாமல், பாரதிய ஜனதா கட்சி – ஆர்எஸ்எஸ்னுடைய வழியில் வந்த தமிழ்நாட்டினுடைய ஆளுநர், தமிழ்நாட்டில் புதிய அரசு அமைவதை தடுக்கின்ற வகையிலே செயல்பட்டு வருகிறார். இதை நாங்கள் மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த சட்டமன்ற தேர்தலில் அதிக சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கக்கூடிய தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், நேற்றைய தினம் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோருகின்ற கடிதத்தை ஆளுனருக்கு சமர்ப்பித்திருக்கின்றார்.
ஆளுநரின் பொறுப்பு என்பது சட்டசபையிலே பெரும்பான்மையை வைத்திருக்கக்கூடிய அல்லது நிரூபிக்கக்கூடிய அல்லது அதற்கான தகுதி படைத்த கட்சிக்கான அனுமதியை வழங்குவது என்கின்ற அளவில் தான் இருக்கிறது.
ஆளுநருக்கான விதிகளை வரையறுக்கக்கூடிய வரலாறை பார்த்தோம் என்றால் ஆளுநர் தன் விருப்பத்திற்கு ஏற்ப கட்சிகளை அழைப்பது, தன் கருத்திற்கு ஒவ்வாத கொள்கைகளுக்கு அல்லது ஒவ்வாத கட்சிகளை நிராகரிப்பது போன்ற செயல்பாடு நீண்ட காலமாகவே இந்திய வரலாற்றில் இருந்திருக்கின்றது.
இந்தியாவினுடைய முதல் சட்டமன்ற தேர்தலின் பொழுது (1952லே மெட்ராஸ் மாகாணத்தில் நடந்த தேர்தலின் பொழுது) அன்றைக்கு இருந்த மஸ்தூர் சங்கத்தினுடைய கட்சியும் (பிரகாசம் அவர்களுடைய தலைமையில் இருந்த கட்சியும்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டார்கள். அந்த கூட்டணி பெரும்பான்மை பெற்றது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி பங்கு வைத்திருக்கக்கூடிய கூட்டணிக்கு பதவி ஏற்கக்கூடிய அனுமதி தரக்கூடாது என்று சொல்லி, அதிக எண்ணிக்கையில் இருக்கக்கூடிய ஆனாலும் பெரும்பான்மை இல்லாத காங்கிரஸ் கட்சினுடைய தலைவராக இருந்த ராஜாஜியை அழைத்து ஆட்சி அமைக்க வாய்ப்பை அன்றைய ஆளுநர் கொடுத்தார். இது அன்றைய மெட்ராஸ் மாகாணத்தினுடைய நிலைமை. அன்றைக்கே ஜனநாயகம் கொலை செய்யப்பட்டது. ஏனென்றால் அன்றைய காங்கிரஸ் அரசு/நேரு தலைமையிலான அரசு கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை. அதனால் அதிக எண்ணிக்கையில் ஆனால் பெரும்பான்மை இல்லாத கட்சிக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார்கள். ராஜாஜிக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் பெரும்பான்மை வைத்திருந்து கூட்டணியை அமைத்து ஆட்சியை பெறுவதற்குரிய வாய்ப்பிருந்த கம்யூனிஸ்டுகள் அந்த அனுமதியை பெற இயலாமல் போனது.
இதே போன்ற நிலை பல மாநிலங்களில் தொடர்ந்த காரணத்தினால் 1971-ல் கமிட்டி ஆஃப் கவர்னர்ஸ் என்று சொல்லி, ஆளுனர்களுடைய அதிகாரம் குறிப்பாக சட்டசபையிலே யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்தான ரெப்ரசென்ட் பீப்பிள் ஆக்ட் (Represent people act) மற்றும் மாநில உரிமை குறித்தான, ஆளுநர் உரிமை குறித்தான சட்டங்களை எல்லாம் சீர்தூக்கி பார்த்து ஒரு பரிந்துரையை வழங்கினார்கள். அதன் அடிப்படையிலே தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைத்து பெரும்பான்மை பெற்றிருக்கக்கூடிய கட்சியை அழைப்பது, அல்லது அதிக எண்ணிக்கை வைத்திருக்கக்கூடிய கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பது, அதுவும் இல்லை என்றால் தேர்தலுக்கு பின்பு ஒரு கூட்டணி அமைத்து பெரும்பான்மையை பெறக்கூடிய கூட்டணி கட்சிகளை ஆட்சி அமைக்க அழைப்பது என்றெல்லாம் நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. 1988 காலகட்டத்தில் அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் இந்த நெறிமுறைகளை வரையறுத்து கொடுத்தது. அதற்கு பிறகு பூஞ்சி கமிஷன் இது குறித்து பேசி அவர்களும் இதே நெறிமுறையை ஏற்று கொண்டார்கள்.
1994ல் கர்நாடகத்திலே ஆட்சி அமைக்கக்கூடிய உரிமை கோரிய எஸ்.ஆர் பொம்மைக்கு ஒரு அநீதி நடந்த பொழுது, அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். அப்பொழுது உச்சநீதிமன்றம் என்ன கூறியது என்றால், அதிக எண்ணிக்கையில் பெரும்பான்மை இல்லாமல் தொங்கு சட்டசபை உருவாகக்கூடிய சூழலில், எந்த கட்சிக்கு அதிகமான சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார்களோ அந்த கட்சியை அழைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தது. ஆளுநரினுடைய அதிகாரத்தை வரையறுத்து கொடுத்தார்கள். இந்த வரையறைப்படி தமிழ்நாட்டினுடைய இன்றைய ஆளுநர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் விஜய் அவர்களுக்கான ஆட்சி அமைக்கக்கூடிய உரிமையை அங்கீகரித்திருப்பார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
அதிமுக& திமுக இரண்டு கூட்டணிகளும் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரவில்லை. ஆட்சி அமைக்க கேட்ட ஒரே கட்சி தமிழக வெற்றி கழகம். இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் உடனடியாக மக்களாட்சி நிலவுவதற்கான வழிமுறையை செய்வதுதான் ஒரு ஆளுநருடைய வேலை. மக்களாட்சி பொறுப்பேற்பதற்கான ஒரு வாய்ப்பை அவர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு கொடுத்திருக்க வேண்டும். பெரும்பான்மையை நிரூபிப்பது என்பது சட்டசபையில் தான் நிரூபிக்க வேண்டுமே ஒழிய, அதை ஆளுநருக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆளுநர் என்பவர் சபாநாயகர் கிடையாது. ஆளுநருக்கு ஒரு கட்சியை பற்றியான மதிப்பிடுவதில் எந்த அளவீடுமே கிடையாது. அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப அவருடைய அதிகாரத்தை வளைத்துக் கொள்ளக்கூடிய வகையிலே நடந்து கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மையை ஆளுநரிடம் நிரூபிக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. அதை சட்டசபையில் நிரூபிப்பது என்பதுதான் மக்கள் மன்றத்தில் நிரூபிப்பதற்கான அடையாளமாக மாறும்.
அப்படிப்பட்ட வாய்ப்பை ஆளுநர் தமிழக வெற்றி கழகத்திற்கு கொடுத்திருக்க வேண்டும். பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய பொறுப்பை திரு. விஜய் அவர்களிடம் கொடுத்திருக்க வேண்டும். பெரும்பான்மையான ஒரு அரசை நிறுவுவது என்கின்ற எதேச்சதிகாரத்தனத்தை ஆளுநர் மேற்கொண்டிருக்கிறார். இதைத்தான் தமிழ்நாட்டில் நாம் எச்சரிக்கையோடு கவனிக்க வேண்டி இருக்கின்றது. திமுக, அதிமுக, தவெக என்கின்ற கட்சி சார்ந்த அரசியலை நாங்கள் பேசவில்லை. தமிழ்நாட்டினுடைய மாநில உரிமை சார்ந்து பேசுகிறோம். நாளை எல்லா கட்சிகளுக்கும் இது போன்ற ஒரு சூழ்நிலை வரலாம்.
தமிழ்நாடு மக்கள் இந்த ஆட்சி அமைக்கின்ற உரிமை குறித்து தெளிவோடு இதை அணுக வேண்டி இருக்கிறது. ஒரு தனி நபர் (ஆளுனர்) இதை முடிவு செய்ய முடியாது. மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அந்த வாக்களிப்பின் அடிப்படையிலே இந்த கட்சிகளுக்கு இவ்வளவு விகிதத்திலே வாக்குகள் கிடைத்திருக்கின்றன. சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்திருக்கிறார்கள். அவர்கள் பெரும்பான்மையோ அல்லது பெரும்பான்மை தவறுகிறார்கள் என்றாலோ, அதை சட்டமன்றத்தில் நிரூபிக்கட்டும், மக்கள் மன்றத்திலே அது நிரூபிக்கப்படட்டும்.
2018இல் கர்நாடக தேர்தலின் பொழுது என்ன நடந்தது என்றால், அங்கே மும்முனை போட்டியாக காங்கிரஸ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் பாரதி ஜனதா கட்சி தேர்தலில் போட்டியிட்ட பொழுது, பாரதி ஜனதா கட்சிக்கு அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர் கிடைத்தார்கள். ஆனால் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இரண்டாவதாக காங்கிரஸ் கட்சி இருந்தது. மூன்றாவதாக மதச்சார்பற்ற ஜனதாதளம் இருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்து, ஒரு பெரும்பான்மை கணக்கை முன்னிறுத்தினார்கள். சர்காரியா கமிஷன் தொடங்கி, பூஞ்சி கமிஷன், கமிஷன் ஆஃப் கவர்னர்ஸ் மற்றும் உச்ச நீதிமன்றத்தினுடைய தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு ஆட்சி அமைக்கின்ற அதிகாரத்தை கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் அன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியினுடைய முகவர்களாக / எடுபடிகளாக இருந்த ஆளுநர், பாரதிய ஜனதா கட்சியை (எடியூரப்பாவை) அழைத்து ஆட்சி அமைக்க அனுமதி கொடுத்தார். அதுமட்டுமல்ல, பெரும்பான்மை நிரூபிப்பதற்காக 15 நாட்கள் அதற்கான கால அவகாசம் கொடுத்தார். இது எதெற்கென்றால் அடுத்த கட்சியை உடைப்பதற்கான கால அவகாசமாக அதைக் கொடுத்தார். உடனடியாக உச்சநீதிமன்றம் சென்ற பொழுது அந்த 15 நாள் என்பது ஒரே நாளாக குறைக்கப்பட்டது. இது ஆளுநர் அதிகாரத்தின் மீது உச்சநீதிமன்றம் வைத்த கடுமையான ஒரு விமர்சனம்.
இதற்குப் பிறகும், பாரதி ஜனதா கட்சி ஆட்சிக்கு வருகிறதென்றால் அதற்கேற்றாற்போல் சட்டத்தை வளைத்துக் கொள்வது, தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அதற்கேற்ப முடிவு எடுப்பது போன்றவற்றைப் பார்க்கும் போது கவர்னர் யாருக்கு வேலை செய்கிறார்?, கவர்னர் என்கின்ற பதவி யாருக்காக இருக்கிறது என்ற கேள்வியை எழுப்ப விரும்புகின்றோம். சட்ட முறைப்படி நடக்காமல் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும் போக்கை தமிழ்நாடு அனுமதிக்கக் கூடாது. இதை அனைத்து கட்சிகளும் கண்டிக்க வேண்டும் என்று நாங்கள் நேற்று அறிக்கை வெளியிட்டுருந்தோம்.
இன்று பல கட்சிகள் அந்த நிலைப்பாட்டை ஆதரித்திருக்கிறார்கள். அவர்கள் கவர்னருடைய போக்கை கண்டித்திருக்கிறார்கள், வரவேற்கிறோம். தமிழ்நாட்டில் உடனடியாக மக்களாட்சி வர வேண்டும். இன்றைக்கு யாரையுமே அழைக்காமல் நாளை கவர்னர் ஆட்சி வந்தால் அது மக்களாட்சிக்கு நேர் எதிரானது. மக்கள் எந்தக் கட்சியையும் நிராகரிக்கவில்லை. மூன்று அணிகளும் கணிசமான சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியும் தனக்கான சட்டமன்ற உறுப்பினர் யார்? என்று முடிவு செய்து அனுப்பி இருக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஒரே ஒரு எம்எல்ஏ பதவி வைத்திருக்கக்கூடிய பிஜேபி, தமிழ்நாட்டில் யார் வர வேண்டும் யார் வரக்கூடாது என்று முடிவு செய்வார்களா? அப்படிப்பட்ட ஒரு மோசமான சூழலை தமிழ்நாடு அனுமதிக்க கூடாது.
இதில் விருப்பு வெறுப்பு எல்லாம் பார்க்க கூடாது என்றுதான் மே 17 இயக்கம் சொல்கிறது. ஒரே ஒரு எம்எல்ஏவை, அதும் கூட்டணி வைத்து அதிமுகவின் பலத்தினால் வாங்கிக்கொண்டு, 108 சட்டமன்ற உறுப்பினர் பெற்றிருக்கக்கூடிய தமிழக வெற்றி கழகத்திற்கு ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பு மறுக்கின்ற அந்த எதேச்சதிகார அராஜகமான போக்கை, தமிழ்நாடு மக்களினுடைய ஜனநாயக உரிமையை நசுக்குகின்ற போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதில் ஸ்ரீதர் வேம்பு எனும் ஆர்எஸ்எஸ் சங்கி ஆளுனர் ஆட்சி வர வேண்டும் என்று பேசி இருக்கிறார். ஆளுநர் ஆட்சி வருவதற்கான பரிந்துரையை பிஜேபி ஏன் இப்போது பேசுகிறது? ஆளுநர் ஆட்சியை யார் கேட்டார்கள்? எதற்கு ஆளுனர் ஆட்சியை இங்கு கொண்டு வர வேண்டும்? மக்களாட்சி தான் வர வேண்டும்.
இந்தத் தேர்தலில் பாஜக மிக மோசமாக தோற்று போயிருக்கிறார்கள். தமிழ்நாடு மக்கள் ஒன்றைத் தெளிவாக கூறி இருக்கின்றார்கள். திமுக கூட்டணியை அவர்கள் நிராகரிக்க வேண்டுமென்றால், பிஜேபி கூட்டணிக்கு வாக்களிக்கின்ற அவசியம் இல்லை என்று முடிவெடுத்திருக்கிறார்கள். இதை நாங்கள் வரவேற்கிறோம்.
மக்கள் தவெகவைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பிஜேபி கூட்டணியை நிராகரித்திருக்கிறார்கள். தமிழ்நாடு மக்கள் பிஜேபி கூட்டணியை நிராகரித்திருக்கிறார்கள் என்பதுதான் செய்தி.
கடந்த தேர்தலில் நான்கு எம்எல்ஏ வைத்திருந்த பிஜேபி இன்று ஒரு எம்எல்ஏ தான் வைத்திருக்கிறது. அதுவும் ஊட்டியில் அதிமுகவினுடைய வலிமையான தொகுதியில்தான் வென்றிருக்கிறார்கள். இதுதான் பிஜேபியின் நிலைமை.
தமிழ்நாடு மக்கள் மதவெறியை நிராகரித்திருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் கலவரம் செய்த அந்த பிஜேபியை நிராகரித்திருக்கிறார்கள். பிஜேபிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு பிரதமர் வந்தார். திருப்பரங்குன்றத்துக்கு சென்றார். அமித்ஷா வந்தார். அவர் நகர்வலம் சென்றார். மகாராஷ்டிராவினுடைய முதல்வர் வந்தார். “பாஜகவிற்கு ஓட்டு போட்டால் தான் உங்களுக்கு மதுரைக்கு மெட்ரோ வரும்” என்று அவர் மிரட்டல் செய்தார். இத்தனை பேரையும் கொண்டு வந்து இறக்கியது பிஜேபி. இத்தனை பரப்புரைகளை செய்தும் ஒரே ஒரு இடத்தில் தான் பிஜேபி வெற்றி பெற்றிருக்கிறது.
தமிழ்நாடு மக்கள் 234 தொகுதியில் ஒரே ஒரு தொகுதிதான் பிஜேபிக்கு கொடுத்திருக்கிறார்கள். அதுவும் கூட்டணி என்பதால் கொடுத்திருக்கிறார்கள். இல்லையென்றால் பிஜேபி துடைத்தெறியப்பட்டு இருக்கும். இதுதான் தமிழ்நாடு மக்களுடைய ஒட்டுமொத்த முடிவு.
மாநில கட்சிகளுக்கு வாக்களிப்போம், ஆனால் பிஜேபி கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம் என்று தெளிவாக கூறி விட்டார்கள். பின் எவ்வாறு இங்கே யார் ஆட்சியை அமைக்க அமைக்க வேண்டும், அமைக்கக் கூடாது என்று பிஜேபி முடிவு செய்யலாம்? அதைத்தான் நாங்கள் கேள்வி எழுப்புகின்றோம்.
இன்றைக்கு தமிழ்நாட்டில் மக்கள் ஆட்சி அமைக்கப்பட வேண்டும். ஜனநாயக சக்திகள் இந்த புள்ளியில் இருந்து கவனிக்க வேண்டும். ஆளுநர் ஆட்சியை நம்மீது திணித்தால், மாநிலத்தை என்ன வேண்டுமானாலும் அவர்கள் செய்வார்கள். நேற்று ஒரு நாளுக்குள் பல விடயங்கள் நடந்திருக்கின்றன. விஜய் அவர்கள் ஆட்சி அமைப்பதற்கான அனுமதி கொடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் பிஎம்எல்ஏ(PMLA act) வழக்கு திரு விஜய் மேல் ஏவப்பட்டிருக்கிறது, மேலும் மும்மொழி கொள்கையை முன்வைக்கக்கூடிய பிஎம்ஸ்ரீ திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று ஒன்றிய அரசினுடைய கல்வித்துறை கடிதம் அனுப்பி இருக்கின்றது. இங்கு இன்னும் மக்களாட்சி அமையாத நேரத்தில் இத்தனை நெருக்கடிகளை பிஜேபி கொடுக்கிறது. இது எவ்வளவு அராஜகமான போக்கு? தமிழ்நாடு மக்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?
திமுகவினுடைய தலைவர் மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “நாங்கள் ஆறு மாதம் இவர்களுடைய ஆட்சி காலத்தை தொந்தரவு செய்ய மாட்டோம்” என்று தெளிவாக மிக ஜனநாயகமான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். இப்படி வெளிப்படையாக கூறிய பின்பும் விஜய் ஆட்சி அமைக்க விடக்கூடாது என்று கூறினால் யார் ஆட்சி அமைக்க பிஜேபி விரும்புகிறது? ஆளுநரினுடைய ஆட்சியை கொண்டு வந்து அவர் திட்டங்களை நடைமுறைப்படுத்த விரும்புகிறது என்றுதான் நாம் புரிந்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட ஒரு நிலைமையை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு மக்களுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். மக்கள் வாக்களித்திருக்கிறீர்கள். தேர்ந்தெடுத்த வேட்பாளர் சரியா, தவறா? என்ற இடத்திற்கு நாங்கள் செல்லவில்லை. பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக மே 17 இயக்கம் பரப்புரை மேற்கொண்டது. இதனால் பாரதிய ஜனதா கட்சி மக்களால் வீழ்த்தப்பட்டது என்பதற்காக நாங்கள் தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.
தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைக்க வேண்டும்?, யார் ஆட்சி அமைக்க கூடாது? என்கின்ற முடிவை தமிழ்நாடு மக்களால் நிராகரிக்கப்பட்ட பிஜேபி முடிவு செய்யக்கூடாது என்றுதான் சொல்ல வந்திருக்கிறோம். ஆளுனர் பிஜேபிக்கு சாதகமாக ஒரு நிலையை எடுப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழக வெற்றி கழகத்திற்கு அதிகப்படியான எம்எல்ஏக்கள்இருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை கொடுக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்கட்டும். அது ஆளுநர் வேலை இல்லை, பிஜேபியுடைய வேலை இல்லை, ஆர்எஸ் சங்கபரிவாரின் வேலை இல்லை. இந்த போக்கை அனுமதிக்கக் கூடாது. இந்த போக்கு முடிவுக்கு வருவதற்கு தமிழ்நாட்டினுடைய ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
பிஜேபியின் தொடர் தாக்குதலில் இருந்து தமிழ்நாட்டை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து கட்டங்களிலும் நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதுதான் எங்களது குரலாகவும் எங்களது கோரிக்கையாகவும் இச்சமயத்திலே இருக்கிறது என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்” என்று கூறினார் தோழர் திருமுருகன் காந்தி.
தொடர்ந்து காங்கிரஸ் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளித்தது குறித்து ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது, “காங்கிரஸ் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்றால் தேர்தலுக்கு முன்பே அதை செய்திருக்க வேண்டும். தேர்தலின் பொழுது திமுகவோடு சேர்ந்து கொண்டு பரப்புரையில் தாங்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக ஒரு நிலைப்பாடு எடுத்ததாக காட்டிக்கொண்டு, தேர்தல் முடிந்த பிறகு அங்கு செல்கிறார்கள். தற்போது கவர்னர் ஆட்சி நிலை வராமல் இருக்க வேண்டும் என்பதைத்தான் நாம் எதிர்பார்க்கின்றோம். ஆனால் வெற்றி பெறுவதற்கு முன்பு ஒரு கூட்டணி, வெற்றி பெற்ற பிறகு ஒரு கூட்டணி என்ற காங்கிரஸ் நிலைப்பாட்டை நாங்கள் என்றைக்குமே ஏற்றுக்கொள்ளவில்லை. பாரதிய ஜனதா கட்சி எவ்வளவு தூரம் மாநில உரிமைகளை நசுக்குகிறதோ அதைவிட ஒருபடி மேலாக நசுக்கிய கட்சிதான் காங்கிரஸ். அந்த வரலாறைத்தான் 1952-இல் இருந்து நான் கூறினேன். தேசிய கட்சிகளுக்கு இங்கே இடமில்லை. மாநில கட்சிகள் இது குறித்து முடிவெடுக்க வேண்டுமென்று நாங்கள் பேசுகிறோம்.” என்று கூறினார்.
அதிமுக திமுக கூட்டணி அமையப்போவதாகக் கூறப்படுகிறதே என்று ஊடகவியலாளர் கேட்டதற்கு, இரண்டு கட்சிகளும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத ஒரு விடயத்தை குறித்து நாங்கள் பேச முடியாது. ஒருவேளை அப்படி ஒரு நிலைமை தோன்றினால் அது ஏற்புடையது அல்ல. மேலும் விடுதலை சிறுத்தைகளோ கம்யூனிஸ்ட் கட்சிகளோ தமிழ்நாட்டு நலனுக்கு எது பயன்படும், தங்களுடைய கொள்கைக்கு எது சரியானதாக இருக்கும் என்பதை அந்தக் கட்சி தான் முடிவு செய்யும். ஏனென்றால் அது வலிமையான கட்சி. மக்களை சென்று சந்தித்திருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் பேசி முடிவெடுப்பதுதான் சரியானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். கம்யூனிஸ்ட்களோ விடுதலை சிறுத்தைகளோ அல்லது இதர கட்சிகளோ மத சார்பற்ற நிலைப்பாடு எடுத்தவர்கள்.
ஆளுநர் ஆட்சி என்பதை நாங்கள் நிராகரிக்கிறோம். ஆளுநர் யாரையும் அழைக்காமல் மக்களாட்சி முறை வரவிடாமல் தடுத்தால் நிச்சயமாக அதற்கு எதிரான போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம். ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் நிச்சயமாக முன்னெடுப்போம். அது கட்சி சார்ந்தது அல்ல, தமிழ்நாட்டின் உரிமை சார்ந்தது. ஜனநாயக அமைப்புகளும் அது போன்ற இடத்துக்கு வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார் தோழர் திருமுருகன் காந்தி.
முழு காணொளி: