
“எங்கள் குரலை நெரிக்கலாம்; ஆனால் உண்மையை அழிக்க முடியாது; நாங்கள் விதைத்த விதை ஒரு நாள் மரமாகும்” அமெரிக்காவின் சிகாகோ மாநகரத்தின் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் போராடிய தொழிலாளர்களின் தலைவர்கள் தூக்கு மேடை ஏறும் போது கூறிய வார்த்தைகள் இவை. இங்குதான் 1886 மே 4-ல் எட்டு மணி நேர வேலைக்காக தொழிலாளர்கள் அமைதியாகப் போராடினர். காவலர்கள் நடத்திய நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு தொழிலாளர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாகவே மே 1 தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
முதலாளித்துவ வர்த்தக வெறியும் ஏகாதிபத்திய கோரப்பிடியும் தொழிலாளர்களை இன்னமும் இறுக்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் முதலாளித்துவ பார்ப்பனிய பாஜக அரசு தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் வகையிலும், முதலாளிகளின் வசதிக்குரிய வகையிலும் விவாதங்களுக்கு இடமே கொடுக்காமல் சட்டங்களைத் திருத்தி விட்டது.
தொழிலாளர்களின் பிரச்சினைகளை விவாதிக்கும் வகையிலிருந்த 29 தொழிலாளர் சட்டங்களை சுருக்கி நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக மாற்றிவிட்டது. தொழிலாளர் ஊதியச் சட்டம், தொழில்துறை உறவுகள் சட்டம், சமூகப் பாதுகாப்புச் சட்டம், தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டம் என நான்காக சுருக்கி நவம்பர் 2025-ம் ஆண்டு அரைமணி நேரத்தில் நிறைவேற்றிவிட்டது ஒன்றிய பாஜக அரசு. இச்சட்டம் ஏப்ரல் 1, 2026 -லிருந்து நடைமுறைக்கு வந்துவிட்டது.

இச்சட்டங்கள் முதலாளிகளுக்கு சலுகையும் தொழிலாளர்களுக்கு நெருக்கடியும் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
- தொழிலாளர்களின் உரிமை கோரிக்கைகளை எழுப்ப முடியாத அளவிற்கு தொழில் சங்கங்கள் உருவாக்கத்திலும், வேலை நிறுத்தம் செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
- ஒப்பந்தத் தொழிலாளர் முறையை பயன்படுத்துவதை எளிமையாக்கியுள்ளன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வேலைக்கு எடுக்கும் முறையை கொண்டு வந்துள்ளனர்.
- பணிநீக்கம் செய்ய அரசிடம் முன் அனுமதி 300 தொழிலாளர்கள் வரை உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையில்லை என்றாக்கி உள்ளனர். இதனால் அதற்கு கீழான தொழிலாளர்களுக்கு இழப்பீடு சலுகைகள் கேள்விக்குறியாக்கியுள்ளனர்.
- முதலாளிகளின் அலட்சியத்தால் தொழிலாளிகளின் உயிர் கேள்விக் குறியானால் 50% அபராதம் மட்டும் செலுத்தி தப்பிக்க வழிவகை செய்துள்ளனர். தொழிற்துறை அதிகாரிகளுடன் முதலாளிகள் அனுசரித்துக் கொள்வதற்கு வழிவகுக்க உருவாக்கியுள்ளனர்.
முதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளி இறைக்கும் வகையில் தொழிலாளர் சட்டத்தை மாற்ற விவாதத்திற்கு கூட வைக்காமல் அவசரம் காட்டிய மோடி அரசு, தொழிலாளிகளின் உயிர் பாதுகாப்பு குறித்து ஒரு அக்கறையும் காட்டுவதில்லை. சத்தீசுகரில் ஏப்ரல் 14, 2026-ம் ஆண்டு வேதாந்தா அனல்மின் நிறுவனத்தின் கொதிகலன் வெடித்து 25 தொழிலாளர்கள் பலியாகினர். கொதிகலன் உலைக்குள் அதிகப்படியான எரிபொருள் தேங்கியதால் அழுத்தம் காரணமாக வெடித்ததாகக் கண்டறியப்பட்டது. அந்தக் கொதிகலனில் பிரச்சனை இருப்பதாக 4 நாட்கள் முன்பே தொழிலாளர்கள் சொல்லியிருக்கின்றனர். ஆனால் வேதாந்தா நிறுவனத்தின் அலட்சியத்தினால் இவ்வளவு உயிரிழப்புகள் நடந்தன.

உயிருக்கு ஆபத்தான கருவிகளுடன் வேலை செய்யும் தொழிலாளர்களின் உயிர் மீது அலட்சியம் மட்டுமல்லாமல் உரிய பாதுகாப்பு உபகரணங்களையும் அவர்களுக்கு வழங்கவில்லை. நெருப்பு நீராவி தாங்கக்கூடிய உயிர் காக்கும் உடை, கையுறை, காலணி, முகக்கவசம், தலைக்கவசம் போன்ற எதுவும் வழங்கவில்லை. தொழிலாளர்கள் அணிந்திருந்த உடையிலேயே வேலை பார்த்திருக்கின்றனர். இந்த அலட்சியத்தினால் தான் பல உயிர்கள் கொதிக்கும் நீராவி பட்டு தோல் பொசுங்கி பலியாகின்றனர்.
இந்த வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் தான் தூத்துக்குடியில் 15 தொழிலாளர்களை காவல் துறையை வைத்து துப்பாக்கி சூடு நடத்தி கொன்றது. ஒடிசாவின் நியாம்கிரி மலையில் பாக்சைட் தாதுவைக் குறிவைத்து பழங்குடித் தொழிலாளர்களை காவல்துறையை வைத்து அடித்து ஒடுக்குவதும் இதே வேதாந்தா நிறுவனம் தான். நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கும் இதைப் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன.
தொழிற்சாலைகளில் ஆபத்தான வகையிலான கொதிகலன் வெடிப்பு என்பது தொடர்கதையாகிறது… கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொதிகலன் வெடிப்புகளினால் இறந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களே! அவர்களுக்கு உரிய உபகரணங்களும் அளிக்காமல், பழுதுபார்க்கப்படாத கருவிகளுடன் வேலை செய்ய வைத்து தொழிலாளர் உயிரை பணயம் வைக்கும் எந்த முதலாளியும் தண்டனை பெறுவதில்லை. மாறாக ஒப்பந்த முறையை ஊக்குவிக்கும் சலுகைகள் தான் வழங்கப்படுகின்றன..
ஆபத்தான தொழில்களான கனிம வளங்களைச் சுரண்டும் சுரங்கத் தொழில்கள், குவாரிகள், உருக்காலைகள், இரசாயனத் தொழிற்சாலைகள், மின்சார பராமரிப்பு போன்றப் பல தொழில்களுக்கும் ஒப்பந்த பணியே ஊக்குவிக்கப்படுகின்றன. விபத்துகள் ஏற்பட்டால் ஒப்பந்ததாரரே பொறுப்பு என கைகழுவி விடலாம், நிரந்தரப் பணியாளர்களுக்கு கொடுக்கும் ஊதிய அளவை விட குறைவாக கொடுத்து வேலை வாங்கிக் கொள்ளலாம், இழப்பீடு போன்றவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் போன்ற பல ஆதாயங்களால் ஆபத்தான தொழில்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களே நியமிக்கப்படுகின்றனர். அவர்களின் பணிப் பாதுகாப்பு அலட்சியமாக்கப்படுகிறது.
கனிம வளத்தில் நான்காவது பெரிய நாடாக இருக்கும் இந்தியாவில் கனிம சுரங்கங்களில் 80% ஒப்பந்தப் பணியாளர்களே நியமிக்கப்படுகின்றனர். தங்கம், செம்பு நிலக்கரி, மைகா, யுரேனியம், பாக்சைட், மாங்கனீசு போன்ற கனிம சுரங்கங்கள் வெட்டி எடுக்கும் ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா, சத்திசுகர், மேற்கு வங்கம், மகாராசுடிரா போன்ற மாநிலங்களில் சுரங்கத் தொழிலாளர்கள் கடுமையான உயிர் கொல்லி நோய்களை எதிர்கொண்டு வாழ்கின்றனர். பணிப்பாதுகாப்பும் இல்லாமல் குறைவான ஊதியத்திற்கு உயிரைப் பணயம் வைக்கும் தொழில்களில் சிறார் தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்கிற கொடூரமான நிலையே இன்றும் அங்கு நீடிக்கின்றன. நிரந்தர வேலைக்கு ரூ33000 ஊதியம் அடிப்படை என்பதால் ரூ 12000 ஊதிய அடிப்படையில் ஒப்பந்த ஊழியரே அதிகம் சேர்க்கப்படுகின்றனர். குறைந்தபட்சம் 20 லட்சம் தொழிலாளர்கள் வரை ஒப்பந்தக் கூலிகளாக இதில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஆபத்தான தொழில்களில் மட்டுமல்ல உற்பத்தி நிறுவனங்களிலும் தொழிலாளர்களைச் சுரண்டும் நிலையே நீடிக்கிறது. பெரு நிறுவனங்களுக்கு எதிராக கடந்த 2026 மார்ச், ஏப்ரலில் அரியானா, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த தற்காலிக ஊழியர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மாநிலங்களில் சுமார் 15000 க்கும் மேற்பட்ட உற்பத்தி சார்ந்த தொழில்கள் உள்ளன. இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்குசுமார் 12 ஆயிரத்திற்கும் குறைவாகவே ஊதியம் வழங்கப்படுவதை எதிர்த்து மாபெரும் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். உத்திரப்பிரதேச யோகி அரசு காவல்துறையை ஏவியது. தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. தொழிலாளர்கள் உறுதிப்படுத்தக் கோரிய குறைந்தபட்ச ஊதியமான 33 ஆயிரத்தை ஏற்காமல் சுமார் 3 ஆயிரம் வரை ஏற்றித் தருவதாக உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள்.
இந்தியாவில் ஆபத்தான தொழிற்சாலைகள், உற்பத்தி சார்ந்த தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் எண்ணிக்கையே அதிகம். தனியார் மயத்தை ஊக்குவிக்கவும் பொதுத் துறைகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கையளிக்கவும் சட்டங்கள் திருத்தப்படுகிறது. இந்தியாவின் 90% தொழிலாளர்கள் கொண்ட முறைசாராத் தொழிலாளர்களே ஒப்பந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தொழில்களில் தற்காலிகப் பணியாளர் முறைகளை ஊக்கப்படுத்தி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லாபம் ஈட்டவே இந்த தொழிலாளர் சட்ட மாற்றங்களை மோடி அரசு கொண்டு வந்திருக்கிறது. இந்தியப் பார்ப்பனிய பனியா பாஜக மோடி அரசு வீழும் வரை இந்தியத் தொழிலாளர்களுக்கு விடிவில்லை.
உலகத் தொழிலாளர் தினத்தில் தொழிலாளர் விரோத மோடி அரசை வீழ்த்தும் உறுதியெடுப்போம். மதச்சார்பற்ற கூட்டணி அரசாக ஜனநாயக அரசாக தன்னை முன்னிறுத்தும் திமுக அரசும் இப்போது வரை ஒப்பந்த முறையிலேயே தொழிலாளர்களை நியமிக்கிறது. பாசிசத்தை கொள்கை அளவில் எதிர்ப்பதாகக் கூறும் திமுக அரசு ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் போராடும் அனைத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையையும் நிறைவேற்றுவதே இந்த மே நாளில் நாம் ஏற்கும் உறுதியாக இருக்க முடியும்..