
ஆப்பனூரில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழி நடுகல் சொல்லும் போர்வீரனின் கதை:
மரத்தடியில் கிடக்கும் ஒரு கல், அதைக் கடந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் நடந்திருக்கலாம். சிலர் அதன் மேல் அமர்ந்திருக்கலாம். குழந்தைகள் விளையாடியிருக்கலாம். யாருக்கும் அது ஒரு சாதாரணக் கல் என்பதைத் தாண்டி எதுவாகவும் தோன்றியிருக்காது. ஆனால் அந்தக் கல், இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு கதையைத் தன்னுள் சுமந்துகொண்டு அமைதியாகக் காத்திருந்தது.
அது…
ஒரு போர்வீரனின் கதை.
ஒரு ஊரின் கதை.
ஒரு காலத்தின் கதை.
இராமநாதபுரம் மாவட்டம் ஆப்பனூரில், அரியநாச்சியம்மன் கோயில் வளாகத்தில் கிடந்த அந்தக் கல், இன்று தமிழகத் தொல்லியல் உலகின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியுள்ளது.
வரலாற்றில் சில கண்டுபிடிப்புகள் பெரிய அகழ்வாராய்ச்சிகளால் நிகழ்கின்றன. சில கண்டுபிடிப்புகள் தற்செயலாக நிகழ்கின்றன. ஆப்பனூரின் இந்த நடுகல் இரண்டாவது வகையைச் சேர்ந்தது.
மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த ஆசிரியர் கு.முனியசாமி, கோயிலுக்குச் சென்றிருந்தார். கோயில் வளாகத்தில் மரத்தடியில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு பழைய கல் அவரது கவனத்தை ஈர்த்தது. மற்றவர்களுக்கு அது ஒரு கல். ஆனால் வரலாற்றில் ஆர்வம் கொண்ட அவருக்கு, அதில் வேறொன்று தெரிந்தது. கல்லின் மேல் சில கோடுகள். சில குறியீடுகள். சிலருக்கு அவை கீறல்கள். ஆனால் அவருக்கு அவை எழுத்துகளாகத் தோன்றின. அவர் உடனடியாக தனது ஆசிரியரும் மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் செயலாளருமான பேராசிரியர் சாந்தலிங்கத்திற்கு தகவல் தெரிவித்தார். அந்தத் தகவல், ஒரு மறைந்த உலகின் கதவைத் திறந்தது.
மண்ணுக்குள் இருந்து மரத்தடிவரை…
ஆய்வில் தெரியவந்த இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இந்தக் கல் அங்கே ஆயிரம் ஆண்டுகளாக கிடக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு தான் கோயில் திருப்பணியின் போது மண்ணுக்குள் இருந்து இந்தக் கல் எடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அதன் முக்கியத்துவம் யாருக்கும் தெரியவில்லை. எனவே, அதை அருகிலிருந்த மரத்தடியில் சாய்த்து வைத்துவிட்டனர். அங்கேயே அது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிடந்திருக்கிறது.
என்ன செய்வது பல நேரங்களில் வரலாறே நம் கண் முன்னால் கிடந்தும் அதன் மதிப்பு தெரியாமல் நாம் கல்லாய் இருந்து விடுகிறோம்!.
கல்லைச் சுத்தம் செய்தபோது வெளிவந்த கதை!
பேராசிரியர் சாந்தலிங்கம் மற்றும் உதவி ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் அந்த கல்லை ஆய்வு செய்தனர். அதன் மேற்பரப்பை சுத்தம் செய்தனர். பின்னர் கல்வெட்டின் படியை எடுத்துப் படித்தனர். மெல்ல மெல்ல எழுத்துக்கள் தெளிவாகத் தெரியத் தொடங்கின.

அதில் இருந்ததோ மூன்று வரிகள் தான் அல்லது சில சொற்கள் தான். ஆனால் அவற்றுக்குள் தமிழர்களின் ஒரு முழு சமூக வாழ்க்கை மறைந்திருந்தது.
அது
“ஆபன்னூர் ஏறிய் மாண்டு விழுந்த அத்தியன் கீரன்கல்” என்ற வரிகள் தான்.
இது வெறும் எழுத்தல்ல. இது ஒரு நினைவஞ்சலி.
யார் அந்த கீரன்?
கல்வெட்டு நமக்குச் சொல்வது மிகக் குறைவு. ஆனால் அந்தக் குறைந்த சொற்களே பெரும் கற்பனையைத் தூண்டுகின்றன.
அத்தியன் என்ற மனிதரின் மகன்- கீரன்.
ஆப்பனூரில் நடந்த ஒரு போரில் கலந்து கொண்டவன்.
எதிரிகளை நோக்கி பாய்ந்து சென்றவன்.
போரில் உயிரிழந்தவன்.
அவனது நினைவாக இந்த நடுகல் நிறுவப்பட்டது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, அவன் பெயர் மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கிறது.
ஆனால் அந்தப் பெயருக்குப் பின்னால் ஒரு மனிதன் இருக்கிறான். ஒரு குடும்பம் இருக்கிறது. ஒரு தாய், ஒரு தந்தை, நண்பர்கள், உறவினர்கள் இருக்கிறார்கள். ஒரு ஊர் இருக்கிறது. அந்த மக்களின் துயரம் இருக்கிறது. அவர்களது பெருமை இருக்கிறது.
இந்தக் கல்வெட்டில் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்த சொல் “ஏறி”. அதன் பொருள் வெறுமனே செல்வது அல்ல.
முன்னேறிச் செல்வது.
எதிரியை நோக்கிப் பாய்வது.
பின்வாங்காமல் மோதுவது.
அதாவது கீரன், போர்க்களத்தில் ஓடியவன் அல்ல. முன்னணியில் நின்றவன்.
2,000 ஆண்டுகளாக மாறாத ஒரு பெயர்!
இந்தக் கல்வெட்டின் மற்றொரு முக்கியத்துவம் “ஆபன்னூர்” என்ற ஊர்ப்பெயர்.
இன்று அது “ஆப்பனூர்”. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் அதே பெயர்.
ஒரு ஊரின் பெயர் இத்தனை நீண்ட காலம் உயிரோடு இருப்பது, அந்த ஊரின் தொடர்ச்சியான வாழ்வை நிரூபிக்கிறது. வரலாற்று ஆய்வாளர்களுக்கு இது மிகப் பெரிய சான்று.
இந்தக் கல்வெட்டு தமிழி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. தமிழி அல்லது தமிழ்-பிராமி என்பது தமிழ் மொழியின் மிகப் பழமையான எழுத்து வடிவம். இன்றைய தமிழ் எழுத்துக்களைப் போல உருண்ட வடிவங்கள் கொண்டது அல்ல தமிழி. அதற்கு பதிலாக நேர்க்கோடுகள்.சிறிய வளைவுகள். எளிமையான வடிவங்களை கொண்டவை அவை. அந்த எழுத்துக்களில் இன்றைய மெய்யெழுத்து புள்ளிகளும் இல்லை. அதுவே இதன் காலத்தை நிர்ணயிக்க உதவுகிறது. கல்வெட்டு ஆய்வாளர்கள் சுப்பராயலு, ராஜகோபால் மற்றும் மார்க்சிய காந்தி ஆகியோரின் கருத்துகள் பெறப்பட்டு அதன் காலம் உறுதி செய்யப்பட்டதாக பேராசிரியர் சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஆப்பனூர் நடுகலின் தனிச்சிறப்பாக அது செதுக்கப்பட்ட பாறை சொல்லப்படுகிறது. இது ’குவார்ட்ஸ்’ எனப்படும் மிகவும் கடினமான கல். இத்தகைய பாறையில் கல்வெட்டு செதுக்குவது எளிதான வேலை அல்ல. ஒரு தவறான அடி விழுந்தாலும் கல் உடைந்து போகலாம். ஆனால் அக்காலச் சிற்பிகள் அதில் எழுத்துக்களை மிகத் துல்லியமாகப் பொறித்துள்ளனர். இது அவர்களின் தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்துகிறது.
வரலாற்றில் மன்னர்களின் பெயர்கள் மட்டும்தான் நிலைத்து நிற்கின்றன என்று நாம் நினைக்கிறோம். ஆனால் ஆப்பனூர் நடுகல் வேறு ஒன்றைச் சொல்கிறது.
இது ஒரு மன்னனின் கல்வெட்டு அல்ல. ஒரு பேரரசின் அறிவிப்பு அல்ல. இது ஒரு சாதாரண மனிதனின் நினைவுச் சின்னம். தன் ஊருக்காக உயிர் துறந்த ஒரு இளைஞனின் பெயரை மறக்காமல் பாதுகாக்க விரும்பிய மக்களின் அன்பின் அடையாளம்.
கீரன் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறான்…
கீரன் எப்படி இருந்தான்?
அவன் வயது என்ன?
அவன் எந்த ஆயுதத்துடன் போரிட்டான்?
அவன் எதிரி யார்?
அவன் தோளோடு தோள் நின்று போரிட்ட யாரும் போரில் இறக்க வில்லையா? இவற்றுக்கெல்லாம் பதில் இல்லை. ஆனால், ஒரு விஷயம் மட்டும் உறுதியாகத் தெரிகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அந்த தமிழ் இளைஞன், தனது ஊருக்காகப் போராடினான். அதற்காக உயிரைக் கொடுத்தான். அவனை மறக்காமல் இருக்க, மக்கள் ஒரு கல்லை நட்டனர். அந்தக் கல் காலத்தை வென்றது.
இன்று, ஆப்பனூரின் மரத்தடியில் இருந்து அந்தக் கல் நம்மை நோக்கி ஒரே ஒரு செய்தியைச் சொல்கிறது!.
அந்த நடுகல்லில் எழுதிய எழுத்துகளை இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும் நம்மால் படிக்க முடிகிறது. அதனால் பல வரலாற்று செய்திகளை நாம் அறிய முடிகிறது. நம் இன எதிரிகளை வீழ்த்தும் வலிமை நமக்கு வந்து சேர்கிறது. நம் மொழியே நம் வரலாற்றை சுமக்கிறது. அந்த வரலாறே நம்மை காக்கும் ஆயுதமாகிறது. வரலாறு என்பது புத்தகங்களில் மட்டும் இல்லை; சில நேரங்களில் அது நம்மால் கவனிக்கப்படாமல் நாம் கடந்து செல்லும் ஒரு கல்லின் மேல் கூட பொறிக்கப்பட்டு நமக்காக காத்து கிடக்கலாம்!.