
பாஜக அரசின் தேர்வு முறைகேடுக்கு எதிராக டெல்லியில் அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது. கல்வி உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடிய சொந்த நாட்டு இளைஞர்களை இரத்தம் சிந்த வைத்திருக்கிறது. ஜனநாயகப் போராட்டங்களை காவல் துறையின் துணையோடு வன்முறை மூலம் முடிவுக்கு கொண்டு வரும் பாஜக ஆர்.எஸ்.எஸ்-ன் முயற்சியை மாணவர்கள் அங்கு முறியடித்துள்ளனர். தற்போது இன்னும் அதிக எண்ணிக்கையில மாணவர்கள் கூடி அங்கு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
பள்ளித் தேர்வு முதல் நீட், வங்கி நுழைவுத்தேர்வு வரை நடைபெற்ற மோசடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கடந்த 20 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதியான போராட்டத்தை ‘கரப்பான் பூச்சி கட்சி (CJP) கட்சியினர்’ நடத்தி வருகின்றனர். அதில் பங்கேற்று 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சமூக செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் அவர்களை டெல்லி காவல் துறை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு இழுத்துச் சென்றது. அவர் உண்ணாவிரதத்தை மருத்துவமனையிலும் தொடர்வதாக தெரிவித்திருக்கிறார்.
இதன் அடுத்த கட்ட போராட்டமாக “கரப்பான் பூச்சி” இயக்கத்தின் நிறுவனர் அபிஜித் திப்கே, டெல்லி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்வதாக அறிவித்தார். இதனை அறிந்ததும் லட்சக்கணக்கான மாணவர்கள் அணிவகுத்தனர். மாணவர்கள் திரள்வதைக் கண்டு அஞ்சிய காவல் துறையும், துணை ராணுவ படையும் தடுப்புகளை அமைத்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்தனர்.

துணை ராணுவப் படையாக வந்தவர்கள் பலரிடமும் சட்டையில் அடையாளமாக அணியும் பெயர் பட்டை (badge) இல்லை. துணை ராணுவம் என்ற பெயரில் வெறித்தனமாக அடித்தவர்களை நோக்கி, இளைஞர்கள் கேள்வியெழுப்பவே அவர்கள் பதில் சொல்லாமல் மௌனமாக நின்றது காணொளியாக வெளி வந்தது. மேலும் சீருடை அணியாதவர்களும் தாக்கிய காணொளியும் வெளியானது. இரண்டு லாரிகளில் கற்களை கொண்டு வந்து நிறுத்தியதாக மாணவர்கள் கூறுகின்றனர். பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டு மாணவர்கள் உடல் துளைக்கப்பட்டுள்ளது. பெண்களையும் மிரட்டி விரட்டி அடித்தது. இதுவரை காவல்துறை 70 மாணவர்களை கைது செய்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
ஜனநாயகப் போராட்டங்களை ஆர்.எஸ்.எஸ், பாஜக கும்பல் காவல்துறை துணையுடன் வன்முறை மூலம் அடக்குவது போல இப்போராட்டத்தையும் மோடி அரசு அணுகியுள்ளது. சிஏஏ எதிர்த்து நடந்த டெல்லி போராட்டம், மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீராங்கனைகளை பாலியலாக சீண்டிய பாஜக எம்பி பிரஜ் பூசனை கைது செய்யக் கோரி ஒலிம்பிக் வீராங்கனைகள் நடத்திய போராட்டம், மணிப்பூர் குக்கி மக்களின் போராட்டம், JNU பல்கலைக்கழக மாணவர் போராட்டம் போன்ற பலவற்றையும் வன்முறை மூலமே கலைத்தது.
மாணவர்களின் ஜனநாயக உரிமையான போராட்டங்களை அரசும் நிர்வாகமும் எப்போதும் வன்முறையின் மூலமாகவே ஒடுக்குகின்றன. அதுமட்டுமின்றி, அந்த வன்முறைக்கான பழியையும் மாணவர்கள் மீதே சுமத்தி காவல்துறை ஒரு கட்டமைப்பை உருவாக்கி விடுகிறது.

இதற்கு அண்மைக்கால நிகழ்வுகளே சிறந்த எடுத்துக்காட்டுகள். 2019-2020 டெல்லி CAA எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதற்காக உமர் காலித் உள்ளிட்ட 11 மாணவர்-ஆர்வலர்கள் மீது UAPA போன்ற கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் பொய் வழக்குகள் பதியப்பட்டன. ஐந்து ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு பிணை கூட வழங்கப்படாமல், விசாரணை கைதிகளாகவே சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இங்கு போராடியது குற்றமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2016-ல் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் சாதிய பாகுபாடு மற்றும் நிர்வாக அழுத்தம் காரணமாக உயிரிழந்த ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலாவுக்கு நீதி கேட்டு போராடிய மாணவர்கள் மீது நள்ளிரவில் காவல்துறையை ஏவி தடியடி நடத்தப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். நீதி கேட்டவர்களே குற்றவாளிகளாக்கப்பட்டனர்.
போராட்டங்களை வன்முறையின் மூலம் அடக்குவது ஒரு புறம் என்றால், தேசவிரோதிகள் ஊடுருவல் சக்திகள் புகுந்து விட்டதாக போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கட்டமைப்பையும் மறுபுறம் பாஜக, ஆர்.எஸ்.எஸ் நபர்கள் செய்து வருகின்றனர்.
விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராகப் போராடும் போது, அவர்கள் அனைவரும் இந்தியாவைப் பிரித்து காலிஸ்தானாக்க முனையும் தேச விரோதிகள் என்று பாஜக ஆர்.எஸ்.எஸ்-யினால் பரப்பப்பட்டது.

குடியிருப்புத் திருத்தச் சட்டத்தை (CAA) எதிர்த்து இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தில் இந்துத்துவ அமைப்புகளை எதிர்த்த முழங்கங்களை இந்துக்களுக்கு எதிரான முழக்கம் என பரப்பினர். மணிப்பூரில் ஆர்எஸ்எஸ்-ன் கிளை அமைப்பான அரம்பை தெங்கோல், மெய்தி வீபுன் அமைப்புகளால், குக்கி போராளிகள் பெண்களை, குழந்தைகளை வன்புணர்வு செய்து கொன்றதாக செய்திகள் பரப்பப்பட்டு கலவரம் பற்றி எரிந்தது. இவ்வாறு பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து போராடும்போது, தவறான புகைப்படங்கள், பொய்யான வதந்திகள் பாஜக ஆர்.எஸ்.எஸ்-காரர்களால் திட்டமிட்டு பரப்பப்பட்டன. அதைப் போன்றே இந்தப் போராட்டத்திலும் அந்நிய சக்திகள், தேச விரோதிகள் புகுந்து விட்டதாக பரப்புகின்றனர்.
நேர்மையான தேர்வு நடத்த இயலாத தங்களின் இயலாமையை ஒப்புக்கொண்டு தர்மேந்திர பிரதானை பதவி விலகச் செய்ய வேண்டும் என்கிற மாணவர்களின் கோரிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்தாமல் மாணவர்கள் மீதே பழியை சுமத்தி பல தளங்களிலும் விதைக்கின்றனர்.
மாணவர்களின் நீட் எதிர்ப்பு போராட்டத்தோடு இப்போது விவசாயிகள் போராட்டமும் தில்லியை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா-அமெரிக்கா இடையே பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக, பஞ்சாப் விவசாயிகள் ஜூலை 21 அன்று தில்லியை முற்றுகை இட்டுள்ளனர். அமெரிக்காவுடனான ஒப்பந்தம் சிறு விவசாயிகளைப் பாதிக்கும் என்று கூறி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்தியாவின் முதுகெலும்பாக மாணவர்களையும் விவசாயிகளையும் கூறும் பாஜக அரசு, ஒரே நேரத்தில் அவர்கள் மீது ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. மாணவர்களின் மரணங்களுக்கு பொறுப்பேற்காத அமைச்சரைப் பாதுகாக்கிறது மோடி அரசு. அதே வேளையில் அமெரிக்க ஒப்பந்தம் மூலம் விவசாயிகளை வஞ்சித்திருக்கிறது. எனவே தான் மோடி அரசிற்கு எதிரான மன நிலையுடன் பல்வேறு தரப்பினரும் ஒன்று கூடத் துவங்கியுள்ளனர்.

இந்தியா முழுவதும் மாணவர் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் மாணவர்கள் தெருவில் இறங்கி போராடுகின்றனர். டெல்லியில் மோடி அரசு கையாள்வது போலவே, இங்கும் தவெக அரசு போராடும் மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவி வருகிறது.
அனிதா முதல் இன்றுவரை நீட் தேர்வின் காரணமாக தமிழ்நாடு 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை இழந்துள்ளது. எனவே தமிழ்நாட்டின் எதிர்பு குரல் இன்னும் வலிமையாக ஒலித்திருக்க வேண்டும். ஆனால் தவெக அரசு இதுவரை அந்த அளவுக்கு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. மாணவர் போராட்டத்திற்கு வெளிப்படையான ஆதரவையும் தெரிவிக்கவில்லை.
தவெக தன்னுடைய கொள்கை எதிரி என்று கூறிய பாஜகவை எதிர்த்து மாணவர்கள் திரண்டு நிற்கின்றனர். ஆனால் முதலமைச்சர் விஜய் மௌனம் சாதிக்கிறார். ஒன்றிய அரசுடன் மோதல் போக்கு வேண்டாம் என்பதற்காகவே, மாணவர்களின் இந்த முக்கியமான போராட்டத்தில்கூட மென்மையான அணுகுமுறையை முதல்வர் கடைபிடிக்கிறாரா என்ற கேள்வியை மாணவர்கள் எழுப்புகின்றனர்.
பதவிக்கு வருவதற்கு முன், நீட் எதிர்பை முன்னிறுத்தி உயிரிழந்த அனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் விஜய், தற்போது இத்தனை மாணவர்கள் நீட்டால் உயிரிழந்த பின்னரும் கடுமையான எதிர்வினையை காட்டாமல், மாறாக போராடும் மாணவர்கள் மீதே அடக்குமுறையை பயன்படுத்துகிறார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மாணவர்களின் போராட்டம், ‘தலைமுறைக்கான போராட்டம், இது தேர்வு பாதுகாப்பை மட்டும் கோரவில்லை, தேசிய நுழைவுத் தேர்வு என்கிற மொத்த கட்டமைப்பையும் மாற்றுவதற்கான போராட்டம், மாநிலங்களே கல்விக் கொள்கையை முடிவு செய்ய வேண்டும்’ என்று அறிக்கை விடுத்துள்ளது வரவேற்புக்குரியது.
மாணவர்கள் திரண்டு நடத்தும் இப்போராட்டத்தின் கோரிக்கை வலிமையானதாக அமைய வேண்டும். ஒரு அமைச்சர் பதவி விலக வைக்கும் கோரிக்கையை மாற்றி ‘ஒன்றிய அரசின் தேர்வு முறைகள் ஒழிய வேண்டும், தேசிய தேர்வு முகாமையை கலைக்க வேண்டும், கல்வி மாநில பட்டியலுக்கு மாற வேண்டும் போன்ற கோரிக்கைகளை மையப்படுத்தினால் ஒழிய மோடி அரசின் மக்கள் விரோதத் திட்டங்களுக்கு தீர்வு ஏற்படாது என்பதே தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களின் வழிமுறையாக இருந்தது.

ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் எதிர்ப்பு போராட்டம் என்று இதுவரை போராட்டக் களத்திற்கு முன்னோடியாக இருந்த தமிழ்நாடு, இனி என்ன செய்யப் போகிறது என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்திற்கு மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரும் திரண்டு ஆதரவை கொடுப்பதே நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்க முடியும்.
இந்தியாவெங்கும் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக, ‘நீட் தேர்வை ரத்து செய்’ என்கின்ற கோரிக்கை முழக்கத்துடன் மே 17 இயக்கம், ஜூலை 25, வெள்ளிக்கிழமை அன்று, பாஜக அரசின் அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு ஒன்று கூடுவோம் என அழைப்பு விடுத்திருக்கிறது. போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக இணைவோம்…