நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சாஸ்திரி பவனை முற்றுகையிட்ட மே17 இயக்கம்

நீட் தேர்வை ரத்து செய்யவும், போராடிய இளைஞர்கள் மீதான காவல்துறையின் தாக்குதலை கண்டித்தும், ஒன்றிய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம் கடந்த சூலை 24, 2026 அன்று மே பதினேழு இயக்கத்தால் நடத்தப்பட்டது. இதில் மே17 இயக்கத் தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பினர். இதன் பின் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஊடகங்களுக்கு கூறிய தொகுப்பு:

“நீட் தேர்வில் முறைகேடுகள் காரணமாக இந்தியா முழுவதும் மோடி அரசுக்கு எதிராக பெரிய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் டெல்லியில் கடுமையான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதுவரைக்கும் இந்தியா பார்க்காத அளவில், இன்னும் சொல்லப்போனால் இந்திய விடுதலைக்குப் பிறகு ஒரு பெரிய எழுச்சியை மாணவர்கள், இளைஞர்கள் இன்று டெல்லியில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ’கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்’ என்கிற கோரிக்கையில் ஆரம்பித்தது இந்தப் போராட்டம்.

ஏனென்றால் நீட் தேர்வில் பல முறை இதுபோல முறைகேடுகள் நடந்திருக்கின்றன. ஆனால் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இது குறித்து எந்தப் பொறுப்பையும் எடுக்கவில்லை, விளக்கமும் தரவில்லை. தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராக இருந்ததை விட, எல்லா மாநிலங்களையும் மிரட்டுகிற அமைச்சராக இருந்து வந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியை தடுத்து வைத்திருக்கிறார். “இந்த மாநிலங்களுக்கெல்லாம் கல்வி கொடுக்கக் கூடாது” என்கிற அளவில் யோசிக்கக்கூடிய மிக மோசமான நிலைப்பாட்டை எடுத்தவர் தர்மேந்திர பிரதான். அவர் நீட் தேர்வு சம்பந்தமாக எந்தவிதமான பொறுப்பையும் எடுக்காத காரணத்தினால், அந்த மாணவர்கள் பெரிய போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

தர்மேந்திர பிரதானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை மோடி தெரிவித்தவுடன், இந்த ஒட்டுமொத்த அரசாங்கமும் வேண்டுமென்றே இந்த மாணவர்களை வஞ்சிக்கிறது என்று அம்பலமாகி விட்டது. “இப்போது நீட் தேர்வைப் பற்றி எங்களுக்கு அக்கறை கிடையாது, மாணவர் போராட்டத்தைப் பற்றி எங்களுக்கு அக்கறை கிடையாது” என்பதுதான் மோடியினுடைய பிறந்தநாள் செய்தியாக இருந்தது. அப்படி இருக்கக்கூடிய நிலைமையில் போராட்டம் தீவிரமடைந்து வந்திருக்கிறது. இன்று டெல்லியில் கடுமையான ஒடுக்குமுறை மாணவர்கள் மீது ஏவப்பட்டிருக்கிறது. டெல்லியினுடைய காவல்துறை மிக மோசமாக நடந்து கொண்டதை நீங்கள் எல்லா இடங்களிலும் பார்த்திருப்பீர்கள். உலகம் முழுவதும் கொந்தளித்து, பல நாடுகளிலிருந்து ஜனநாயக சக்திகள் போராடுகிற மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இந்த மாணவர்கள் நம்முடைய குழந்தைகள், நம் வீட்டுக் குழந்தைகள். நம்முடைய குழந்தைகளுடைய எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாக மாறி இருக்கிற நிலைமையில்தான் தமிழ்நாட்டிலும் போராட்டம் நடந்து வருகிறது.

டெல்லியில் நடக்கக்கூடிய இந்தப் போராட்டத்தினுடைய ஆரம்ப விதை தமிழ்நாட்டில் ஆரம்பித்தது. சரியாக 9 ஆண்டுகளுக்கு முன்பு, தங்கை அனிதா செப்டம்பர் 1-ம் தேதி 2017-ல் தன்னுயிரைக் கொடுத்து இந்த நீட் தேர்வினுடைய கொடூர முகத்தை தமிழ்நாட்டிற்குக் காண்பித்தார். தமிழ்நாட்டில் இதுவரைக்கும் 16 குழந்தைகளை நாம் இழந்திருக்கிறோம். மாணவச் செல்வங்களை இழந்திருக்கிறோம். இவ்வளவு பேரையும் இழந்து “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்றுதான் கேட்கிறோம். “நீட் தேர்வு பாஸ் செய்தாலே மருத்துவர் ஆகிவிடுவார்கள்” என்கிற பிம்பத்தை பாஜகவினர் மீண்டும் மீண்டும் ஏற்படுத்துகிறார்கள். நீட்  தேர்வு என்பது மருத்துவம் படிக்கப் போவதற்கான நுழைவுத் தேர்வுதான். அதற்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் மருத்துவப் படிப்பை நீங்கள் படிக்க வேண்டும். அதில் பருவத்தேர்வில் தேர்ச்சி செய்தால்தான் மாணவர்கள் மருத்துவர் ஆக முடியும். நீட் தேர்வு எழுதினாலே மருத்துவர் ஆகி விடுவார்கள் என்கிற பிம்பத்தைக் கட்டமைக்க பாஜகவினர் “தரமான மருத்துவர் உருவாகுவதற்கு நீட் தேவை” என்று பேசுகிறார்கள்.

“நீட் தேர்வு எழுதினால், மருத்துவர் சான்றிதழ் கொடுத்துவிடுவீர்களா சார்?” என்று பாஜகவினரைப் பார்த்துக் கேட்கிறேன். நீட் தேர்வு என்பது ஒரு நுழைவுத் தேர்வு. ஒரு கல்லூரியில் படிக்கப் போவதற்கான நுழைவுத் தேர்வு. பன்னிரெண்டாம் வகுப்பு பிள்ளைகளுக்கு என்ன தெரியுமோ அதில் தேர்வு வைத்து, நுழைவுத் தேர்வுக்கான ஒரு அனுமதி தருகிறீர்கள். படிப்பதற்கான அனுமதி தருகிறீர்கள். அவ்வளவுதான் விடயம்.

ஆனால் ‘இங்கே நீட் தேர்வு என்பது உலகத் தரமான தேர்வு. அதைப் படித்தாலே சிறந்த மருத்துவராக ஆகிவிடுவார்கள்’ என்ற ஒரு கட்டமைப்பை, ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். அது உண்மை அல்ல. நீட் தேர்வு என்பது மருத்துவம் படிக்கப் போவதற்கான நுழைவுத் தேர்வுதான். அதற்குப் பிறகுதான் நீங்கள் 5 ஆண்டுகள் மருத்துவம் படிக்க வேண்டும். எல்லாப் பாடத்தையும் முறையாகப் படிக்க வேண்டும். இப்போது என்ன பாடத்திட்டம் இருக்கிறதோ (நீட் தேர்வுக்கு முன்பு என்ன பாடத்திட்டம் இருந்ததோ) அதே பாடத்திட்டத்தைத்தான் படிக்கப் போகிறார்கள். அதே மாதிரிதான் தேர்வு எழுதப் போகிறார்கள். ஆனால் தனியார் நிறுவனங்களின் லாபத்திற்காக நீட் தேர்வைக் கொண்டு வந்திருக்கிறார்கள். நீட் பயிற்சி மையங்கள் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்கள். இன்று சென்னையில் பார்த்தீர்கள் என்றால் 4 மாடிக் கட்டிடம், 6 மாடிக் கட்டிடமாக பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? எல்லாம் உங்கள் வீட்டிலிருந்து, எங்கள் வீட்டிலிருந்து வரக்கூடிய மாணவர்கள் இந்த நீட்டுக்காக படிப்பதற்கு இவ்வளவு செலவு பண்ண வேண்டியிருக்கிறது. அதனால் தான் “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று எல்லோருமே போராட்டம் நடத்துகிறோம்.

தமிழ்நாட்டில் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. வடமாநிலத்தில் நடக்கக்கூடிய போராட்டத்தைவிட கூர்மையான போராட்டம் தமிழ்நாடு போராட்டம். தமிழ்நாட்டில் “நீட் தேர்வையே ரத்து செய்யுங்கள்” என்று நாம் கேட்கிறோம். கல்வி அமைச்சர் ராஜினாமா செய்தால் மட்டும் போதாது. அங்கே இருக்கக்கூடிய முறைகேடுகளை ஒன்றிய அரசு நிவர்த்தி செய்தால் போதாது. நேற்றுகூட நரேந்திர மோடி என்ன சொல்லியிருக்கிறார்? “நாங்கள் ஒரு விசாரணை கமிஷன் அறிவிக்கிறோம்” என்று சொல்லியிருக்கிறார். ஒரு மாதமாக என்ன சார் பண்ணீங்க? நரேந்திர மோடி சார், ஒரு மாதமாக இதே டெல்லியில் இந்த மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் போராடிக் கொண்டிருக்கிறார்களே, அன்றெல்லாம் வாயைத் திறக்கவில்லை. இன்று நரேந்திர மோடிக்கு தனது ஆட்சி இருக்குமா இருக்காதா என்று பயம் வந்துவிட்டது.

ஏனென்றால் இளம் தலைமுறை அஞ்சாமல், ஒன்றிய பாஜக அரசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் வீதியில் இறங்கி போராட ஆரம்பித்துவிட்டார்கள். இந்த அரசாங்கத்தை “வெளியே போ” என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஒவ்வொரு மாணவனுக்குப் பின்னாலும் பல குடும்பங்கள் இருக்கின்றன. பல உறவினர்கள் இருக்கிறார்கள். அத்தனை பேருடைய கருத்தும் பாஜகவிற்கு எதிராக மாறிக் கொண்டிருக்கிறது. இதைக் கண்டு கிலிப்பிடித்துப் போய் நரேந்திர மோடி நேற்று பேச வந்திருக்கிறார். இதுவரைக்கும் எப்போதாவது ஏதாவது போராட்டத்திற்கு இப்படி எல்லாம் காணொளி கொடுத்திருக்கிறாரா? இப்படி வீடியோ போட்டு பேசியிருக்கிறாரா? இதுவரைக்கும் பேசியது இல்லை. நேற்று நரேந்திர மோடி பேசியதற்கான காரணம் என்ன? அவர் பணமதிப்பிழப்பின்போது பேசினார். அதற்குப் பிறகு இப்போதுதான் பேசுகிறார். அவருடைய முகத்தில் அவ்வளவு பீதி தெரிகிறது, அவ்வளவு பயம் தெரிகிறது. ஏனென்றால் பதவி போய்விடுமோ என்ற நிலைமையை இந்த மாணவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

ஒரு தேர்வை முறையாக நடத்துவதற்கு மோடி அரசாங்கத்திற்கு வக்கு இல்லையா? என்பதைத்தான் மாணவர்கள் கேட்கிறார்கள். தற்போது நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டில் தீவிரமடைகிறது. தமிழ்நாட்டில் “நீட் வேண்டாம்” என்று அதிமுக ஆட்சியில் தீர்மானம் நிறைவேறியது. திமுக ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றி சட்டவரைவு கொடுத்தாயிற்று. இந்தச் சட்டவரைவுக்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் தராமல், அதை ஜனாதிபதிக்கு அனுப்பாமல், அங்கே அமைச்சரவையில் தடுத்து வைத்ததை நாம் பார்த்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் நாம் நீட் தேர்வில் விலக்கு கேட்கிறோம். கல்வி என்பது மாநிலப் பட்டியலிலும் இருக்கிறது. நாமும் கல்விக்கு சட்டம் போடலாம். இந்தத் தேர்வு வேண்டாம் என்று சொல்வதற்கு மாநில அரசு சட்டம் இயற்றலாம். இப்போது ஒன்றிய அரசினுடைய CBSE பாடத்திட்டம் இருக்கிறது. தமிழ்நாடு அரசினுடைய பாடத்திட்டம் இருக்கிறது. இரண்டுமே இருக்கிறது அல்லவா? ஒன்றிய அரசிற்கு அந்தக் கல்வியில் சட்டம் இயற்றுவதற்கு உரிமை இருக்கிறது என்றால், மாநில அரசிற்கும் கல்வி குறித்து சட்டம் இயற்றுவதற்கு உரிமை இருக்கிறது. அதனால்தான் மாநிலப் பள்ளி, கல்வித் திட்டங்கள் இங்கே இருக்கின்றன. கல்லூரி பாடத் திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் நாம் “நீட் வேண்டாம்” என்று சொன்ன பிறகு, அதற்கான விளக்கத்தை இதுவரைக்கும் ஒன்றிய அரசு தரவில்லை. திமுக அரசு இதற்கான வழக்கைத் தொடுத்தார்கள். அதுவும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இப்படி நம் மாணவர்களுடைய எதிர்காலத்தை ஆட்டிப்படைக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மருத்துவக் கல்லூரியில், தமிழர்கள் நடத்தக்கூடிய மருத்துவக் கல்லூரியில், தமிழ்நாடு அரசு தனது வரிப்பணத்தில் நடத்தக்கூடிய மருத்துவக் கல்லூரியில், தமிழ்நாடு கல்வித் திட்டத்தில் படித்த நம்முடைய மாணவர்கள், தமிழ் மாணவர்கள் மருத்துவம் படிப்பதை நீட் தடுக்கிறது. நம் வரிப்பணத்தில், நாம் நடத்தும் மருத்துவக் கல்லூரியில், நம் பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூடிய நம் பிள்ளைகள் படிக்க முடியாமல் தடுப்பதுதான் நீட் தேர்வு.

“எங்கள் ஊரில் நாங்கள் நடத்தும் கல்லூரியில் எங்கள் பிள்ளைகள் படிப்பதை நீ ஏன் தடுக்கிறாய்? தில்லியில் இருக்கும் நீ (ஒன்றிய அரசு) ஏன் எங்கள் பிள்ளைகளுக்கு தேர்வு வைக்கிறாய்? உனக்கு தமிழ்நாடு கல்வித் திட்டத்தைப் பற்றி என்ன தெரியும்? உனக்கு தமிழ்நாட்டினுடைய மாணவர்களைப் பற்றி என்ன தெரியும்?” என்பதுதான் எங்கள் கேள்வி. மிகச் சிறந்த, தலைசிறந்த மருத்துவர்களை இதே தமிழ்நாடு, இதே கல்வித் திட்டத்தில் உருவாக்கியிருக்கிறது. இதே மருத்துவக் கல்லூரியில் உருவாகியிருக்கிறார்கள். உலகப் புகழ் பெற்ற மருத்துவர்கள் இங்கிருந்து வந்திருக்கிறார்கள். உலகத்திலேயே இன்று Medical Tourism-க்கு தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே முதன்மை இடமாக இருக்கிறது. உலகம் முழுக்க இங்கே சிகிச்சை பெறுவதற்கு வருகிறார்கள். இப்படிப்பட்ட இடத்தில் இருக்கக்கூடிய நாம் துணிந்து சொல்கிறோம்: “நீட் தேர்வு எங்களுக்குத் தேவையில்லை.”

நல்ல மருத்துவர்களை தமிழ்நாடு உருவாக்கியிருக்கிறது. எங்களுக்கு நீட் தேவையில்லை. நீட் என்பது ஒரு முறைகேடு. NEET is a scam. நீட் என்பதே ஒரு ஊழல். அந்த ஊழல் தேவையில்லை என்று சொல்லி, ஒன்றிய அரசின் அலுவலகமாக இருக்கக்கூடிய சாஸ்திரி பவனிற்கு எதிராக நாங்கள் முழக்கம் எழுப்புகிறோம். கண்டனத்தை தெரிவிக்கிறோம். “இந்த அடக்குமுறையை நிறுத்து” என்று சொல்கிறோம். “நீட் தேர்வை ரத்து செய்” என்று சொல்கிறோம். “மோடியே! பதவி விலகு” என்று சொல்கிறோம்.

 தமிழ்நாட்டிலும் மாணவர்கள் போராடுகிறார்கள். SFI, DYFI இளைஞர்கள் இவர்களெல்லாம் போராடுகிறார்கள். இதைத் தவிர பிற அமைப்பைச் சார்ந்த மாணவர்களும் போராடுகிறார்கள். அவர்கள் மீது காவல்துறை ஒடுக்குமுறை ஏவ வேண்டிய அவசியமே கிடையாது. தவெக அரசு “நாங்கள் நீட் தேர்வை ஆதரிக்கவில்லை” என்று சொல்லிவிட்டீர்கள். கொள்கை முடிவு எடுத்துவிட்டீர்கள். அப்புறம் என்ன பிரச்சனை சார் உங்களுக்கு? இங்கே மாணவர்கள் போராடுவது ஜனநாயக உரிமை. இங்கே இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரிகளுடைய குழந்தைகளும், காவலர்களின் குழந்தைகளும் மருத்துவர் ஆக வேண்டும் என்றுதான் இந்த மாணவர்கள் போராடுகிறார்கள். தவெக அரசு, தமிழ்நாடு முதலமைச்சர், இங்கே தமிழ்நாடு காவல்துறை நடத்துகின்ற இந்த அடக்குமுறை குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறீர்கள், தடுக்காமல் இருக்கிறீர்கள். எங்களுடைய கண்டனத்தை நாங்கள் இந்த சமயத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். காவல்துறை ஒத்துழைக்க வேண்டும். மாணவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். ஜனநாயகமாக தமிழ்நாடு சட்டசபையில் போடப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு மாணவர்கள் போராடுகிறார்கள்.

தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் போட்டிருக்கிறோம். சட்ட வரைவு முன் வைத்திருக்கிறோம். அதற்கு ஆதரவாகப் போராடக்கூடிய மாணவர்களை அடக்குவது சட்ட விரோதமானது என்று தவெக அரசுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். மே 17 இயக்கத்தினுடைய செய்தி அதுதான்.

தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் போட்டிருக்கிறது. சட்டவரைவு வைத்திருக்கிறீர்கள். அதற்கு ஆதரவாகத்தான் மாணவர்கள் இங்கே போராடுகிறார்கள். அந்த மாணவர்களை நீங்கள் அடக்கி ஒடுக்குவது என்பது சட்ட விரோதமானது. தவெக அரசு இதை புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே உடனடியாக தவெக அரசு மாணவர்கள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். எங்கள் கண்டனத்தை தெரிவிக்கிறோம். அது மட்டுமல்ல, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தயவு செய்து எடுத்து வாசியுங்கள். அதிமுக காலத்திலும் பேசியிருக்கிறார்கள், திமுக காலத்திலும் பேசியிருக்கிறார்கள், நீங்கள் (தவெக அரசு) சட்டவரைவை எடுத்துப் பாருங்கள். ஆளுநர் மாளிகை அதை கிடப்பில் போட்டிருக்கிறது. அதை எதிர்த்தும் நீங்கள் குரல் எழுப்ப வேண்டும். தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு வாங்குவதற்குப் பேச வேண்டிய பொறுப்பு தவெக அரசுக்கு இருக்கிறது. அதைச் செய்யாமல் இருப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று கூறினார் தோழர் திருமுருகன் காந்தி.

ஊடகவியலாளர்: சாலையில் போராட்டம் நடத்தினால் அது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார்…. அது குறித்து?

தோழர் திருமுருகன் காந்தி: சாலையில் இருந்துதான் காந்தி அடிகள் போராட்டம் செய்தார். அதனால்தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது. சாலையில் இருந்துதான் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தினோம். அதனால்தான் அந்த உரிமை நமக்குக் கிடைத்தது. சாலை என்பது மக்கள் பயன்பாட்டில் இருப்பது. தனியார் சொத்து அல்ல. தனியார் சொத்தில் போய் போராட்டம் பண்ணினால்தான் தவறு. சாலை என்பது பொதுச் சொத்து. பொதுச் சொத்தில் நின்றுதான் பொதுமக்கள் போராட்டம் நடத்த முடியும். இல்லையென்றால் அரசு போராட்டம் நடத்துவதற்கு ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுங்கள். எல்லோரும் அமைதியாக அங்கே போராட்டம் நடத்துவார்கள். தவெகவுக்கு என்ன பிரச்சனை இடத்தை ஒதுக்கி தர வேண்டியது தானே?

ஜந்தர் மந்தரில் யார் வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம். அனுமதி எல்லாம் தேவையில்லை. அந்த இடம் போராட்டம் நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடம். அப்படி ஒரு இடத்தை சென்னையில் ஒதுக்கிக் கொடுங்கள். நாங்கள் அமைதியாகப் போராட்டம் செய்துவிட்டுப் போகிறோம். அரசு போராட இடம் கொடுக்காத காரணத்தினால்தான், அதற்கான இடத்தை ஒதுக்காத காரணத்தினால்தான் “இங்கே பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் போராடுகிறார்கள்” என்று நீங்கள்(அரசு) பேசுகிறீர்கள். இடத்தை ஒதுக்கிக் கொடுப்பது உங்கள் வேலை. உங்கள் வேலையை நீங்கள் ஒழுங்காகப் செய்தால், மாணவன் ஏன் எங்கேயோ போய் உட்கார வேண்டும்? இடத்தை ஒதுக்கிக் கொடுப்பது அரசின் வேலை.

மெரினாவில் திரைப்படம் போடுகிறீர்கள், கால்பந்து போட்டி போடுகிறீர்கள், திரை வைத்துப் ஒளிபரப்புகிறீர்கள். உங்களுடைய கட்சித் தலைவருடைய திரைப்படத்தைப் போடுகிறீர்கள். அப்போது ஏன் போராடுவதற்கு இடம் கொடுக்கக் கூடாது? இதற்கெல்லாம் மெரினாவில் இடம் இருக்கிறது. ஆனால் எங்கள் மாணவச் செல்வங்கள் போய் உட்காருவதற்கு இடம் இல்லையா? நீங்கள்தான் சொன்னீர்கள் “தமிழ்நாட்டில் Gen-Z புரட்சி வருகிறது” என்று. கடந்த தேர்தலில் “இந்த Gen-Z புரட்சிக்குத் தயாராகிவிட்டார்கள்” என்று நீங்கள்தான் பேசினீர்கள். நீங்கள் எங்கே சார் போய்விட்டீர்கள்? Gen-Z புரட்சிக்குத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இந்த மாணவர்களை ஓட்டுப் போடுவதற்கு மட்டும் நீங்கள் பயன்படுத்துவீர்களா? அதற்கு மட்டும்தான் மாணவர்கள் தேவையா? இளைஞர்கள் அதற்குத்தான் தேவையா? என்பதுதான் எங்கள் கேள்வி. அதனால் போராடுவதற்கு மெரினா கடற்கரையை ஒதுக்கிக் கொடுங்கள்.

மெரினாவில் “தமிழ்நாடு தமிழருக்கு” என்று தந்தை பெரியார் முழங்கிய கடற்கரையில்தான் சீரணி அரங்கம் கட்டப்பட்டது. அங்கேதான் அறிஞர் அண்ணா பேசியிருக்கிறார். தமிழ்நாட்டின் தலைசிறந்த தலைவர்கள், கர்மவீரர் காமராஜர் உள்ளிட்டவர்களெல்லாம் சீரணியில் பேசியிருக்கிறார்கள்.  மெரினா கடற்கரை என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது. அதைப் போய் பூட்டி வைக்கிறீர்களே சார்!!

உலகத்தில் எங்காவது கடற்கரையை பூட்டி வைப்பார்களா? நீங்கள் பாடத்தில் சொல்கிறீர்கள் “உலகத்தின் இரண்டாவது பெரிய கடற்கரை மெரினா” என்று. அதைப் பூட்டி வைக்கிறீர்களே! மக்களை “போக் கூடாது” என்று சொல்கிறீர்களே! எதற்கு பயப்படுகிறீர்கள்? என்ன ஆகிவிடப் போகிறது? கால்பந்து போட்டி, மட்டைப் பந்து போட்டி – இதையெல்லாம் பார்ப்பதற்குப் போகிறவர், உங்கள் தலைவருடைய சினிமா படத்தைப் பார்க்கப் போகிறவர் – இவர்களை விட அமைதியாக இங்கே மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்துவார்கள்.

ஊடகவியலாளர்: கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும். அதுதான் தவெக அரசுடைய கொள்கை என்று கூறுகிறார்களே… அது குறித்து?

தோழர் திருமுருகன் காந்தி: “கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதுதான் தவெக அரசின் கொள்கை” என்றால், அந்தக் கொள்கைக்காகத்தான் இந்த மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டத்தின் மூலமாகத்தான் இதைச் சாத்தியப்படுத்த முடியும். உங்களுக்கு எந்த MP-யும் கிடையாது. இங்கே இருக்கக்கூடிய மாணவர் போராட்டம், மக்கள் போராட்டத்தின் மூலமாக சட்டசபையில் தீர்மானம் போடுங்கள். ஏற்கனவே போடப்பட்ட அந்த சட்டசபை தீர்மானத்திற்கு ஆதரவாகத்தான் மாணவர்கள் இறங்கியிருக்கிறார்கள். அதனால் “கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வரவேண்டும்” என்ற கோரிக்கையைத்தான் எல்லோரும் முன்வைக்கிறோம்.

ஊடகவியலாளர்: அறவழிப் போராட்டம் என்றாலும் முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும் என்று கூறுகிறார்கள்…. அது குறித்து?

தோழர் திருமுருகன் காந்தி: இதுதான் அறவழிப் போராட்டம். அமைதியாக, கையில் எந்த ஆயுதமும் இல்லாமல் வருவதுதான் அறவழிப் போராட்டம். கையில் எல்லோரும் இங்கே துப்பாக்கி, வேல்கம்பு, கடப்பாறை எல்லாம் தூக்கிக் கொண்டு வரவில்லை. இதுதான் அறவழிப் போராட்டம். அமைதியான போராட்டம். யார் கையிலும் எதுவும் கிடையாது. கையில் ஒரே ஒரு பதாகை மட்டும் வைத்திருக்கிறோம். முழக்கத்தை வைத்திருக்கிறோம். இதுபோலத்தான் மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் கையில் வேறு எந்த ஆயுதமும் கிடையாது. கம்பு கூட கிடையாது. இதுதான் அறவழிப் போராட்டம்.

காவல் துறையிடம் இடத்தை ஒதுக்கிக் கொடுக்கச் சொல்லி முதலமைச்சர் உத்தரவு போடுங்கள். ராஜரத்தினம் ஸ்டேடியம், சிவானந்த சாலை என ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுங்கள். அங்கே சென்று போராட்டம் நடத்தலாம் என்று சொல்லுங்கள். ஒவ்வொரு முறையும் கடிதம் எழுதிக் கொடுத்து, 5 நாட்களுக்குக் காத்திருக்க வேண்டுமா? அப்படியா டெல்லியில் காத்திருக்கிறார்கள்? தவெக அரசு இதில் இரட்டை நிலைப்பாடு எடுத்துக் கொண்டிருப்பதுதான் அம்பலமாகிறது. தவெக அரசு ஆட்சிக்கு வந்து மிக குறுகிய காலத்துக்குள்ளாகவே அம்பலமாகிவிடாதீர்கள் என்பதுதான் எங்கள் வேண்டுகோள்.

ஊடகவியலாளர்: “நீட் தேர்வை ஒழிப்பதில் முதலில் போராடியது தமிழ்நாடுதான்” என்று இருந்த நிலையில், இன்று இங்கே இருக்கக்கூடிய அமைச்சர்களும், முதலமைச்சரும், அதிகாரிகளும் திரைப்படம் பார்ப்பதில் பரபரப்பாக இருக்கிறார்கள். அவர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். “இந்த மாதிரி ஒரு போராட்டம் இல்லை” என்ற ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கத்தான் பார்க்கிறார்களா?

தோழர் திருமுருகன் காந்தி: இன்று நாம் எல்லோரும் போராட்டத்தில் இருக்கும்போது அமைச்சர்கள் திரைப்படம் பார்க்கச் சென்றுவிட்டார்கள் என்பது எல்லோருக்குமே ஒரு வருத்தமான விடயம்தான். எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று அமைச்சருக்குத் தெரிய வேண்டும். இந்த அரசுக்குத் தெரிய வேண்டும். உங்கள் கட்சிக் கொண்டாட்டத்தைத் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கட்சித் தலைவருடைய திரைப்படத்தைக் கொண்டாடுவதைத் தனியாக வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் வேலை நேரத்தில் வேலை பார்ப்பதுதான் முக்கியம். இங்கே ஒரு பெரிய போராட்டம் நடக்கிறது. பெரிய அவலம் நடந்து கொண்டிருக்கிறது. இதைப் பற்றி எந்தவிதமான ஒரு கவலையும் இல்லாமல் இப்படி செய்தால், மக்களிடமிருந்து அவர்கள் அந்நியப்பட்டுப் போவார்கள்.

ஊடகவியலாளர்: “CJP போராட்டத்தில் வெளிநாட்டுத் தூண்டுதல் இருக்கிறது” என்று பாஜகவினர் சொல்கிறார்கள்…. அது குறித்து?

தோழர் திருமுருகன் காந்தி: பாஜக-ஆர்.எஸ்.எஸ். தங்களைத் தவிர எல்லோரையுமே “வெளிநாட்டுக்காரன்” என்று சொல்லிவிடுவார்கள். இப்போது பாஜக-ஆர்.எஸ்.எஸ். இதையே ஒரு பிரச்சாரமாக செய்து கொண்டிருக்கிறார்கள். மாணவர்களாகிய எல்லோரும் தான் ஓட்டுப் போட்டுருப்பார்கள். அவர்கள் எல்லோருமே வாக்காளர் அட்டை வைத்திருப்பார்கள் அல்லவா. அப்புறம் எப்படி வெளிநாட்டுக்காரன் என்று கூறலாம்? பாஜக-ஆர்.எஸ்.எஸ். தான் தேச விரோத சக்தி. பாஜக தான் தேச விரோதிகள். அவர்களுக்கு எதிராகத்தான் இங்கே மக்கள் போராடுகிறார்கள். அதனால் பாஜகவினரைத்தான் தேச விரோதிகள் என்று நாங்கள் பார்க்கிறோம்.

ஊடகவியலாளர்: “அமைச்சர்களுக்கு விடுமுறை கிடையாது. நாங்கள் மக்கள் சேவை பண்ணத்தான் வந்திருக்கிறோம்” என்று சொல்லியிருந்த அமைச்சர் ஒருவர் திரைப்படத்தின் முதற்காட்சியை சென்று பார்த்தார். இது குறித்து…?

தோழர் திருமுருகன் காந்தி: அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அதைத்தான் செய்கிறார்கள். அவர்கள் அமைச்சரானதற்குப் பிறகு நமக்குப் பெரிய பொறுப்பு இருக்கிறது. எல்லா மக்களும் கவனிக்கிறார்கள். நாங்கள் தங்கை அனிதா இறந்தபோது எல்லோருமே வீதியில் இறங்கிப் போராடினோம். அன்றைக்கு அவருடைய (விஜய்) ரசிகர் மன்றம் மட்டும் போராட்டத்திற்கு வரவில்லை. நாங்கள் எல்லாம் போராடித்தான் வழக்கு வாங்கினோம். அன்றைக்கு ரசிகர்களாக இருந்தவர்கள், இன்றைக்கு அமைச்சர்களாக மாறியிருக்கிறார்கள். அவர்கள் பொறுப்பெடுத்து, இன்றைய சூழலுக்கு ஏற்ப, அவர்களுக்கு என்ன பொறுப்பு வந்திருக்கிறதோ, அந்தப் பொறுப்புக்கு தங்களைத் தகவமைத்துக் கொள்ளவில்லை என்றால் மக்கள் சிரிப்பார்கள். மக்களிடம் நீங்கள் ஆதரவை இழந்து போகக்கூடிய நிலைமைதான் நடக்கும்.

ஊடகவியலாளர்: இப்போது திமுக அரசு போட்ட வழக்கு உச்ச நீதிமன்றம் போய்விட்டது. நீங்கள் இனிமேல் அந்த வழக்கைத் திரும்ப எடுத்து நடத்த வாய்ப்பு இருக்கிறதா?

தோழர் திருமுருகன் காந்தி: அது தமிழ்நாடு அரசு போட்ட வழக்குதான். நாங்கள் தனியாக Petition போட்டுக் கொண்டு வர வாய்ப்பு இருந்தால் நிச்சயமாக நாங்கள் செய்வோம். எங்களுக்கு எந்தத் தடையும் கிடையாது. ஆனால் எங்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் நம்பிக்கை கிடையாது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை இவ்வளவு நாள் தடுத்து வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? இன்றைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி என்ன சொல்கிறார்? “எங்களுக்கு நேரம் இல்லை” என்று சொல்கிறார்கள்.

இப்படிப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் மேல், தங்கை அனிதாவுக்கு நீதி கிடைக்காத உச்ச நீதிமன்றத்தின் மேல், எங்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கப் போகிறது? அதனால் உச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. ஏன் நம்பிக்கை கிடையாது என்று சொல்கிறோம் என்றால், அவர்கள் மக்கள் சார்பாக தீர்ப்புகள் தரவில்லை என்பதுதான் அம்பலமாகி இருக்கிறது.

காணொளி:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »