காவல்நிலைய குற்றங்கள் பற்றியப் பார்வை – திருமுருகன் காந்தி நேர்காணல்

குழந்தைகள், பெண்கள், தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதற்கு இதுவரை இருந்த, தற்போது இருக்கின்ற முதல்வர்கள் செய்தது என்ன? காவலர்கள் செயல்பாடுகள் என்ன? எப்படி இந்த குற்றங்கள் நடக்கின்றன? ஏன் தடுக்க முடியவில்லை? காரணம் யார் யார்? போன்ற கேள்விகளுக்கு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பதில் அளித்திருக்கிறார், ‘ஜீ தமிழ்’ நேர்காணலில் ஜூன் 21, 2026 அன்று வெளிவந்த காணொளியின் தொகுப்பு:

தொகுப்பாளர்: நான் ஆதின் சங்கர். இன்று பல்வேறு அரசியல் கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இணைந்திருக்கிறார்கள். பேசலாம். வணக்கம்.

கேள்வி: தவெகவின் இந்த ஒரு மாத காலத்தில் (38 நாட்கள்) என்று வைத்துக்கொள்ளுங்கள், அதனுடைய ஆட்சி எப்படி இருக்கிறது என்பது பரவலாகப் பேசப்படுகிறது. “நன்றாக இருக்கிறது” என்று ஒரு பக்கம். அதே திராவிட சித்தாந்த கொள்கைகளை தவெகவும் பின்பற்றுகிறார்கள் என்பது ஒரு பக்கம்.

ஆனால் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக மாறியிருக்கிறது. பாலியல் வன்கொடுமைகள், குழந்தைகளுக்கு எதிரான பிரச்சனைகள், ஆணவக் கொலைகள் இதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்பது மறுபக்கம். இந்த விமர்சனத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

தோழர் திருமுருகன் காந்தி பதில்: பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சாதி ஆணவப் படுகொலைகள் – இது சமூகத்தின் சீர்கேடுகளிலிருந்து வெளியாகக்கூடிய விடயம். அது குறித்தான ஒரு முழுமையான பார்வை கொண்ட ஒரு கொள்கைத் திட்டத்தைத்தான் நாங்கள் (மே 17 இயக்கம்) கேட்கிறோம். இப்போது “சாதி ஆணவப் படுகொலை எங்கே நடக்கிறது?” என்று கணிக்க முடியாது. ஆனால் சாதி ஆணவப் படுகொலைகளை வலியுறுத்தக்கூடிய கட்டமைப்புகள், சாதி அமைப்புகள் அதன் மீதான நடவடிக்கைகள் என்ன இருக்கின்றன? இதைத் தூண்டக்கூடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொழுது இது குறையும்.

அதே போல பெண்களுக்கு எதிரான வன்முறையை எடுத்துக்கொண்டால், கிட்டத்தட்ட குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கான வழக்கு, போக்சோ வழக்கு மட்டும் 5000 வழக்குகள் நிலுவையில் கிடக்கின்றன. அவை விசாரிக்கப்பட்டு, அதற்கான ஒரு தீர்வு கண்டறியப்படவில்லை. அதையெல்லாம் செய்திருந்தால், சமூகத்தில் குற்றங்கள் செய்பவனுக்கு ஒரு பாடமாக இருக்கும். அது ஒரு எச்சரிக்கை உணர்வாக இருக்கும். அப்போது அதையெல்லாம் நிறைவேற்றவில்லை. இது அதிமுக ஆட்சி காலத்திலிருந்தே 2000-3000-ஆக வழக்குகள் இருந்தன. திமுக ஆட்சி காலத்தில் இன்னும் 2000 வழக்குகள் அதிகம், தற்போதும் சேர ஆரம்பித்திருக்கின்றன. கூர்ந்து கவனித்தால் இப்போது இது காவல் துறையின் தோல்வியில் போய் நிற்கிறது. இப்போது இந்த இடத்தில் இதைத்தான் குறிப்பிட்டு பேச வேண்டும். சட்டத்தை கொண்டு வந்துவிட்டார்கள். நடைமுறைப்படுத்தி, வழக்கை நடத்தி, குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தரும் வேலையை காவல்துறை செய்யவில்லை.

இதை யார் கவனிக்க வேண்டும்? காவல்துறை முதலமைச்சரின் கையில்தான் இருக்கிறது. கடந்த காலத்தில் திமுக ஆட்சி காலத்திலும் முதல்வர் கையில்தான் இருந்தது. இப்போதும் முதல்வர் கையில்தான் இருக்கிறது. முதல்வர்கள் வேலை பார்க்கவில்லை என்றுதான் அர்த்தம். இதில் இரண்டு முதல்வரும் வேலை பார்க்கவில்லை.

முதல்வர் காவல்துறையினரைக் கூப்பிட்டு, “5000 வழக்கு கிடப்பில் கிடக்கிறது, அவை என்ன ஆனது?” என்று கேட்டிருந்தால், மூன்று முதலமைச்சரும் – (எடப்பாடியாரும் சரி, ஸ்டாலின் அவர்களும் சரி, அல்லது விஜயும்) இதை கேட்டிருந்தால் – இவ்வளவு பிரச்சனையை கையாள்வதற்கான ஒரு சுறுசுறுப்பு வந்திருக்கும். அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.

மேலும் சமூக ரீதியாக இருக்கக்கூடிய போதைப் பழக்கங்கள் இருக்கின்றன, மது பழக்கங்கள் இருக்கின்றன. இதையும் சரி செய்ய வேண்டிய கட்டாயங்கள் இருக்கின்றன.

இங்கு தேவையற்ற கண்காணிப்புகள் நிறைய வைத்திருக்கிறீர்கள். “இரவில் 10 மணிக்கு இங்கே ஏன் நிற்கிறாய்? அங்கே ஏன் நிற்கிறாய்? ஏன் வண்டியை ஓட்டுகிறாய்? முடியை ஏன் வெட்டவில்லை? ஏன் சவரம் பண்ணவில்லை? பார்த்தால் முஸ்லிம் மாதிரி” – இத்தனை கேள்விதான் காவல்துறை கேட்கிறதே ஒழிய, பெண்கள் மீதான, குழந்தைகள் மீதான வன்முறை செய்பவனை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? நடவடிக்கை ஏன் எடுக்க முடியவில்லை?

அடிப்படையில், சாதிய ஆணவப் படுகொலையும் பெண்களுக்கு எதிரான வன்முறைதான். அதை ஏன் காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், இவர்கள் உண்மையிலேயே ஒரு ஆணாதிக்க மனநிலையோடு இருக்கிறார்கள்.

இவர்களுக்குள் இருந்து சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. இது ஒரு கட்சியின் ஆட்சியில் மட்டும் என்று  நான் (திரு) பேசவில்லை. இது ஒட்டுமொத்தமாகவே ஒரு செயல்முறையாகவே இருக்கிறது. ஒவ்வொரு ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

பொள்ளாச்சியில் நடந்த பெண்கள் மீதான வன்முறை குறித்த விடயங்கள், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்தும் தீவிரமாக பேசப்பட்டது. அதேபோல தேர்தலுக்கு முன் விளாத்திகுளத்தில் ஒரு பெண் குழந்தை மீது நடந்த வன்முறை குறித்து பெரிய பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் இப்போது வடசென்னையில் காவல்துறையால் நடந்த மரணத்திற்கு என்ன பேசினார்கள்? ஒன்றுமே இல்லை. இந்த கட்சிகள் தேர்தலுக்காக இதைப் பேசுகிறார்களே ஒழிய, இதைத் தீர்க்க வேண்டும் என்பதற்காக பேசவில்லை.

ஒரத்தநாட்டில் ஒரு பெண் ஆறு பேரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். மே 17 இயக்கம் தான் அதற்காக சண்டை போட்டு, அப்பெண்ணுக்கு நீதி கிடைக்க எல்லா வேலைகளையும் செய்தோம். அந்தப் பெண்ணைப் பாதுகாத்தோம். அப்போது எந்த கட்சியுமே பேசவில்லை. ஏனென்றால் அப்போது தேர்தல் இல்லை. தேர்தலுக்காக மட்டும் பேசக்கூடிய நேர்மையற்ற தன்மைதான் அந்தக் கட்சிகளிடம் இருக்கிறது.

சாதி ஆணவக் கொலைகள் குறித்து பார்க்க வேண்டும் என்றால், சிவகங்கையில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் காவல்துறையால் அடித்துக் கொலை செய்யப்பட்டவர் ஆகாஷ். அதற்காக போடப்பட்ட முதல் குற்ற அறிக்கையில் (FIR-ல்) அந்த காவல்துறை அதிகாரிகள் பெயரே இல்லை. அதற்காக அந்த குடும்பத்தினர் உடலை வாங்காமல் 100 நாட்களாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது தவெக ஆட்சி வந்துவிட்டது. இப்போது என்ன செய்தார்கள்? ஒன்றும் செய்யவில்லை. “உடலை வாங்கிச் செல்” என்று சொல்லிவிட்டார்கள். நீதிமன்றத்துக்கு போய் நின்றாலும், இன்றைக்கு காவல்துறை அந்த உடலை கொண்டு போய் எரித்து விட்டார்கள். இதைவிட கேவலமான விடயம் வேறு என்ன இருக்க முடியும்? இதற்கு பெயர் ஜனநாயகமா? வெள்ளைக்காரன் கூட செய்யாத ஒரு கீழ்த்தரமான வேலையை காவல்துறை செய்திருக்கிறது. இதற்கு மதுரை உயர் நீதிமன்றம் துணையாக நின்று கொண்டிருக்கிறது. “உடலை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

நான் கேட்கிறேன்: தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி சொல்லி, திருப்பரங்குன்றம் மலை ஏறினார்களே! அந்த ஆகாஷ் என்ற பையனை அடித்துக் கொலை பண்ணியிருக்கிறார்கள். அந்த பையனை கொலை செய்த காவல் துறையின் ஒரு அதிகாரி பெயர் கூட, ஒரு காவலர் பெயர் கூட FIR-ல் இல்லையே என்று கேட்பதற்கு இந்த மதுரை உயர் நீதிமன்றத்துக்கு நாதி இல்லையா?

திருப்பரங்குன்றம் மலை மேல் ஏறி தீபம் ஏற்ற முடிந்த மதுரை நீதிமன்ற நீதிபதிகளுக்கு யார் சம்பளம் தருகிறார்கள்? இந்த ஆகாஷ் மாதிரியான, தன்னுடைய பிள்ளையை இழந்த அந்த அப்பாவி குடும்பங்கள் கொடுக்கின்ற வரிப் பணத்தில் தானே, இவர்களுக்கு எல்லாம் சம்பளம் போய்க் கொண்டிருக்கிறது.

அப்படி ஒரு கேடு கெட்ட தீர்ப்பை அந்த நீதிமன்றம் கொடுத்தது. 100 நாளாக போராட்டம் செய்துள்ளனர் அந்த ஆகாசின் குடும்பத்தினர். காவல்துறையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட பிள்ளையின் முகத்தை அப்பா அம்மாவுக்கு காண்பிக்கவில்லை. இறுதி மரியாதை செய்வதற்கான வழியை ஏன் செய்யவில்லை இந்த நீதிமன்றம்? உங்கள் பிள்ளைக்கோ, எங்கள் பிள்ளைக்கோ, அல்லது நீதிபதி பிள்ளைக்கோ இப்படி நடந்தால் ஒத்துக் கொள்வார்களா?

“உங்கள் பிள்ளை இறந்துப் போய்விட்டான். ஒரு போலீஸ்காரன் அடித்துக் கொன்றுவிட்டான். முகத்தை காண்பிக்க முடியாது. எந்த போலீஸ்காரன் பெயரையும் FIR-ல் சேர்க்க முடியாது” என்று சொல்லி, எந்த போலீஸ் கொலை செய்ததோ, அந்த போலீஸ் வைத்து எரித்து விட்டால், இது பெயர் ஜனநாயகமா? இது நீதிமன்றமா? இதை முதலமைச்சர் கேட்க மாட்டாரா?

தொகுப்பாளர்: முதல்வர் வாய் திறக்கவில்லையே?

திருமுருகன் காந்தி: இது குறித்து அறிக்கை கொடுக்க வேண்டாமா? கண்டனமாவது தெரிவித்து இருக்க வேண்டாமா? அல்லது ஒரு பதிவாவது போடுங்கள். எதுவுமே செய்ய மாட்டீர்களா? முதலமைச்சருக்கு பேசத் தெரியாதா?

இதற்குமுன் சிவகங்கையில் காவல்துறையினரால் அஜித்குமார் கொலை செய்யப்பட்டபோது விஜய் வீடு வரைக்கும் போய் பார்த்தார். சுடச்சுட அறிக்கை எல்லாம் கொடுத்தீர்கள், பேசினீர்கள். ஆனால் ஆகாஷ் என்ற பையனுக்கு ஏன் பேசவில்லை? தலித் பையன் என்பதனாலேயா? அஜித்குமாருக்கு கொந்தளித்த விஜய், ஆகாசுக்கு வாய் திறக்கவில்லையே, ஏன்? இந்த கட்சிகளுக்கு உள் அளவில் மக்களுக்கு தீர்வு தர வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. இதை வைத்து அரசியல் செய்து ஓட்டு வாங்குவார்கள்.

எங்களுக்கு எந்த கட்சி பற்றியும் கவலை கிடையாது. மக்கள்தான் பாவம். ஆகாஷ் குடும்பத்திற்காக யார் பேச முடியும்? நம்மை மாதிரி ஆட்கள்தான் பேச முடியும். நீதிமன்றம் பேசவில்லை, காவல்துறை பேசவில்லை, முதலமைச்சர் பேசவில்லை, எதிர்கட்சித் தலைவர் பேசவில்லை.

இன்றைக்கு சட்டசபையில் விவாதம் நடக்கிறதே! “திமுக காவல்துறை மரணங்களைத் தடுக்கவில்லை” என்று சொல்லி தவெக அன்றைக்கு குற்றம் சொன்னது. தவெக காவல்துறை மரணங்களைத் தடுக்கவில்லை என்று திமுக தரப்பில் பேசினார்களா? இன்றைக்கு திமுகவும் கேள்வி எழுப்பவில்லை. ஆகாஷ் வழக்கு பற்றி யாரும் கேட்பதற்கு நாதி இல்லாமல் இருக்கிறது.

யோசித்துப் பாருங்கள்:- ஸ்னோலினை ஸ்டெர்லைட்டில் கொலை செய்தது காவல்துறை. அந்த செய்தி எல்லாருக்கும் தெரியும். அந்த செய்தி கண்டிப்பாக சாத்தான்குளத்தில் இருந்த ஜெயராஜ் பென்னிக்ஸ் அவர்களுக்கும் தெரிந்திருக்கும். கடைசியில் ஜெயராஜ் பென்னிக்ஸை அடித்துக் கொலை பண்ணார்கள் காவல்துறை. இவர்கள் படுகொலை செய்தி கண்டிப்பாக அஜித்குமாருக்கு தெரிந்திருக்கும். அஜித்குமாரை காவல்துறை அடித்துக் கொன்றது. இந்த செய்தியும் கண்டிப்பாக ஆகாஷுக்கு தெரிந்திருக்கும். இன்றைக்கு ஆகாஷ் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். அடுத்து யாருக்கு? நாளைக்கு அது நீங்களாக இருக்கலாம், நானாக இருக்கலாம். இந்த நீதிமன்றமோ, இந்த காவல் துறையோ, முதலமைச்சர்களோ, இந்த கட்சிகளோ காப்பாற்ற வராது.

தொகுப்பாளர்: அப்போது என்னதான் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்? இவர்களுடைய வேலைகள் தான் என்ன?

திருமுருகன் காந்தி: அதை சொல்கிறேன். மக்கள் அரசியல்பட வேண்டும். அதனால்தான் மே 17 இயக்கம் போன்ற இயக்கங்களை நீங்கள் ஆதரியுங்கள் என்று நாங்கள் கேட்கிறோம். நாங்கள்தானே அவர்களுக்காக குரல் கொடுக்கிறோம், போராடுகிறோம். எங்களுக்குத்தான் இது பற்றிய கேள்வி கேட்க வேண்டும் என்கின்ற கவலை இருக்கிறது. இங்கே இருக்கக்கூடிய அமைப்புகள் – மனித உரிமை அமைப்புகள், சமூக நல அமைப்புகள், பெரியாரிய அமைப்புகள், அம்பேத்கரிய அமைப்புகள் கேட்கின்றன.

தொகுப்பாளர்: இப்படிப்பட்ட அமைப்புகள்தான் கேட்க வேண்டும் என்றால், “தமிழ்நாட்டுக்கு பெரிய மாற்றம் வேண்டும்” என்று மக்கள் சொன்னார்கள். அதற்காக தானே விஜய் அவர்களை தேர்வு செய்துள்ளார்கள்?

திருமுருகன் காந்தி: அதாவது ஆட்சி மாற்றம் என்பது வேறு. சமூக மாற்றம் என்பது வேறு.

தொகுப்பாளர்: இதையெல்லாம் தானே சொன்னார்கள். பாலியல் வன்கொடுமைகளாக இருந்தாலும் சரி, குழந்தைகளுக்கு எதிரான, தலித்துகளுக்கு எதிரான பிரச்சனைகள் தொடர்கின்றன. “இப்படித்தான் திராவிட கட்சிகள்” என்று சொல்லி விமர்சனங்களை வைத்து, இதற்கு ஒரு மாற்றம் வர வேண்டும் என்று சொல்லித்தான் விஜய் அவர்களை ஒட்டுமொத்தமான தேர்வு என்று பார்த்தார்கள். இன்றைக்கு விஜய் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகும், இந்த ஒரு மாத காலத்தில் பல வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. அவர்களே ஆவணத்தின் படி சொல்கிறார்கள். அப்போது என்ன மாற்றம் நடந்தது? என்ற கேள்வி எழுகிறதே!

திருமுருகன் காந்தி: காவல்துறை மேல் ஒரு கறாரான நடவடிக்கையை எடுக்காத வரைக்கும், இது நடக்கும்… ஏனெனில் காவல்துறைக்குத்தான் உச்சபட்ச அதிகாரங்கள் இருக்கின்றன. ஆயுதமும் காவல்துறையிடம்தான் இருக்கிறது. மக்களை கொலை செய்யக்கூடிய ஆயுதம் என்று எந்த துறைக்கும் கிடையாது. ஒரே ஒரு துறை மட்டும்தான் இருக்கிறது – அது காவல்துறை. பெரிய அதிகாரம் கொண்ட அந்த காவல் துறைக்கு கடிவாளம் போடுவதற்கு எந்த முதலமைச்சருக்கு துணிச்சல் வருகிறதோ, அவர்கள் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்துவார்கள்.

தொகுப்பாளர்: விஜய்க்கு துணிச்சல் இருக்கிறதா, இல்லையா?

திருமுருகன் காந்தி: விஜய்க்கு துணிச்சல் இருக்கிறதா, இல்லையா? என்பது இனிமேல்தான் தெரியும்.

தொகுப்பாளர்: விஜய்க்கு துணிச்சல் இல்லையா?இதுவரைக்கும் பல குற்றச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. மூன்று வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ளனரே!

திருமுருகன் காந்தி: இதை தட்டிக்கேட்க “எந்த முதலமைச்சருக்கு துணிச்சல் இருந்திருக்கிறது?” சொல்லுங்கள்…

தொகுப்பாளர்அவர்களுக்கு இல்லை என்றால் இவருக்கும் இருக்கக் கூடாதா?

திருமுருகன் காந்தி: தமிழ்நாட்டில் நீங்கள் பக்தவச்சலம் காலத்திலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு முன்னாடி காமராஜர் காலத்திலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள். எந்த முதலமைச்சருக்கு ”காவல் துறை வன்முறை செய்வது தவறு” என்று சொல்வதற்கு துணிச்சல் இருந்திருக்கிறது?

தொகுப்பாளர்: ஜெயலலிதாவுக்கு?

திருமுருகன் காந்தி: இல்லையே. ஜெயலிதா அம்மையார் காலத்தில் அதிகபட்ச வன்முறைகளை காவல்துறைதான் செய்திருக்கிறது. எத்தனை வன்முறைகள் தெரியுமா? ஜெயலலிதா அம்மையார் ஆட்சி காலத்தில் பரமக்குடியில் 2011 செப்டம்பர் 11ஆம் தேதி ஆறு பேரை சுட்டு படுகொலை செய்தார்கள். எதற்காக? சாலைமறியல் பண்ணார்கள் என்பதற்காகத்தானே. அந்த அம்மா காலத்தில் எவ்வளவு பேரை கொலை பண்ணியிருக்கிறார்கள்.

ராஜாஜி காலத்திலிருந்து ஆரம்பித்தார்கள். அன்றைக்கு கம்யூனிஸ்ட்களை சிறையில் வைத்து சுட்டுக் கொன்றார்கள். இன்றைக்கு வரைக்குமே எந்த முதலமைச்சரும் காவல் துறைக்கு கடிவாளம் போட்டு கேள்வி கேட்டு நடவடிக்கை எடுத்திருந்தால், தமிழ்நாட்டு சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருக்கும். சமூக நீதி சரியாக இருந்திருக்கும். சாதியத் தன்மை தலை தூக்காமல் தடுக்கப்பட்டிருக்கும். பெண்கள் மீதான வன்முறை இல்லாமல் இருந்திருக்கும். எந்த முதலமைச்சரும் அதை செய்யவில்லை. அதனால் இதெல்லாம் மாறப்போவதே இல்லை.

காவல் துறையின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான துணிச்சல் யாருக்கு வருகிறதோ, அன்றைக்குதான் இதெல்லாம் சரியாகும். ஜல்லிக்கட்டில் ஆட்டோவை கொழுத்தியது யார்? காவல்துறையினர் ஆட்டோவை கொழுத்திய வீடியோ பார்த்தீர்கள், நானும் பார்த்தேன். ஏதாவது ஒரு அதிகாரி தண்டிக்கப்பட்டார்களா? ஸ்னோலினோடு சேர்ந்து 16 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். அடித்துக் கொலை செய்யப்பட்டார்கள். வீடுவீடாக வன்முறை நடந்தது. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஒன்றுமே கிடையாது.

அஜித்குமார் கொலைக்கு முன் பசுமடத்தில் இன்னொரு கொலை நடந்தது. இதே மாதிரி. அங்கே ஒரு இளைஞரை அடித்துக் கொன்றார்கள். இந்த மாதிரி பல கொலைகள் நடந்திருக்கின்றன. காவல் மரணங்கள் அதிகமான எண்ணிகையில் இருக்கிறது. புள்ளி விவரங்களை எடுத்து பாருங்கள். அப்போது இதை கட்டுப்படுதாமல்… இதை கேள்வி கேட்காமல்… வன்முறையை எப்படி குறைக்க முடியும்?

நாம் காவல் துறை ஒட்டுமொத்தமாக அப்படி என்று சொல்லவில்லை. அதில் இருக்கக்கூடிய, அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் பண்ணக்கூடியவர்கள், தவறாக பயன்படுத்தக்கூடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாததற்கு என்ன காரணம்? ஏன் செய்யவில்லை? “தவறு” என்று சொல்வதற்கு யாருக்கும் மனம் வரவில்லையே. இதை சரி பண்ணாமல் “இந்த முதலமைச்சர் வலிமையானவர், அந்த முதலமைச்சர் வலிமையானவர், இவர் இரும்புப் பெண்மணி” – இதெல்லாம் நம்புவதற்கு நாங்கள் தயாராக இல்லை.

தொகுப்பாளர்: திராவிட கட்சிகள் மிகப்பெரிய ஒரு பாரம்பரியம்,  தமிழ்நாட்டு அரசியலில் “பெரியார் மண்”, இந்திய தேசிய அளவில் “பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர்” என்று சொல்கிறார்கள். ஆனால் தேசிய அளவில் அண்ணல் அம்பேத்கர் அவர்களை முன்னெடுத்த திராவிட கட்சிகள் தமிழ்நாட்டுக்குள் பெரிய அளவில் எடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் கூட இருக்கின்றன. ஆனால் பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்ட தவெக வென்றுவிட்டது. அதற்குப் பின்னால் திரைபிம்பம் ஒரு பக்கம் இருந்தது. அதைவிட மிக முக்கியமாக, “வீரியமிக்க திராவிட கட்சி” என்று சொல்லப்பட்ட திமுக எதன் காரணங்களால் தோல்வி அடைந்தது? முதல்வர் அவர்களே தோற்ற காரணம் என்ன?

திருமுருகன் காந்தி: அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று பெரிய அளவுக்கான மக்களிடமிருந்த ஒரு ஏமாற்றமான நிலை.

தொகுப்பாளர்: என்ன ஏமாற்றம்?

திருமுருகன் காந்தி: முதலாவது, உங்களுக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்று விரும்பினார்களே ஒழிய, “எது மாற்றம்?” என்று யாரும் சொல்லவில்லை. இரண்டாவது, திமுகவின் முதலமைச்சர் அளவில் கொண்டுவரப்பட்ட நிறைய முற்போக்கான திட்டங்கள் வரவேற்கப்பட்டன. முக்கியமான மாற்றங்கள் கொடுக்கப்பட்டன. இந்திய அளவில் மிக மிக முக்கியமான குரலாக ஸ்டாலின் இருந்தார். முதல்வரின் அந்த ஆட்சி என்பது பாஜகவுக்கு ஒரு பெரிய சிம்ம சொப்பனமாக, அவருடைய அறிக்கைகள் எல்லாமே இருந்தன.

ஆனால் அடிமட்டத்தில் இன்னொரு பிரச்சனை இருக்கிறது. நடைமுறை வாழ்கை என்று ஒன்று இருக்கிறது. அந்த வாழ்கையில் எதிர்கொள்ளக்கூடிய ஊழல்கள்…இப்போது சாதி சான்றிதழ் வாங்க, வண்டிக்கான உரிமம் வாங்க, கட்டடம் கட்டுவதற்கான அனுமதி வாங்க, வீட்டு பத்திரம் பதிவு பண்ண, நிலத்தை விற்க போன்ற எல்லா இடங்களிலும் பணம் வந்து மிகப்பெரிய அளவுக்கு ஊழலாக நடந்தது. இதுதான் நடைமுறை. இந்த நடைமுறையை மக்கள் அன்றாடம் எதிர்கொள்கிறார்கள்.

கொள்கை அரசியல் பார்க்க நன்றாக இருக்கிறது. நிறைய திட்டங்கள் கேட்க நன்றாக இருக்கிறது. அது ஒரு மட்டத்தில் இருந்தாலும் கூட, “அது எனக்கு பிடிக்கிறது” என்று புரிகிறது, எனக்கு அது பிடித்திருக்கிறது. மரியாதையாக இருக்கிறது. ஆனால் நான் இன்றைக்கு என் குழந்தைக்கு ஒரு பிறப்பு சான்றிதழ் வாங்க போனால், அதற்கு நான் காசு தர வேண்டியிருக்கிறது. என் நிலத்தை விற்க வேண்டும் என்றால் அதற்கு இவ்வளவு காசு தர வேண்டியிருக்கிறது என்ற நிலைமை வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். மக்களுக்கு வெறுப்பு வருகிறது.

தொகுப்பாளர்: ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கிற ஒரு விவசாயி, கூலிக்காரன் எல்லாம் கடினப்படுவார்கள் அல்லவா!

திருமுருகன் காந்தி: அவர்கள் மட்டுமல்ல, நடுத்தர வர்கத்துக்குமே அது பெரிய நெருக்கடியாக இருக்கிறது. மேலும் மாவட்ட அமைச்சர்களாக இருக்கக்கூடியவர்கள் அங்கே இடைநிலை சாதிகளின் நலன்களுக்காக எடுத்துக்கொண்ட முடிவுகள். அவர்களுடைய நலன்களுக்காக செய்தது, நிலங்கள் வாங்கப்பட்டது, கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிற ஆள் என்றால் அவருடைய வசதி மேலே ஏறிக்கொண்டே போய்க் கொண்டிருக்கிறது, பெரிய அளவு முதலீடு செய்து கொண்டே இருக்கிறார்கள். பணக்காரர் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். பெரும் பணக்காரராக மாறுவதை கண்ணுக்கு முன் பார்க்கிறோம்.

இவ்வளவு நாள் இருந்த காரின் அளவு மாறுகிறது. விலையின் அளவு மாறுகிறது. அவர்கள் 50 லட்சம், ஒரு கோடி, 3 கோடி ரூபாய் மதிப்பிலுள்ள காரில் வருகிறார்கள் என்பதை மக்கள் பார்க்கிறார்கள். இதையெல்லாம் நாமும் கண்கூடாக பார்கிறோம். அவர்கள் வரக்கூடிய கார்களுடைய விலை என்ன என்று நமக்கு தெரியும். இன்றைக்கு ஒரு இளைஞனிடம் ஒரு புகைப்படத்தை காட்டி “இது என்ன விலை?” என்று கேட்டால் சொல்லிவிடுவான்.

தொகுப்பாளர்: மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கிற ஒரு MLA எப்படி இவ்வளவு சொத்து வருகிறது? என்று கேட்பான்.

திருமுருகன் காந்தி: எல்லாருமே பொருளாதார ரீதியாக மிக கடினப்படுகிறோம். கொரோனா காலத்துக்கு பிறகு வருமானம் குறைந்திருக்கிறது. யாருக்கும் பெரிய வருமான கட்டமைப்பு எல்லாம் ஒன்றும் கிடையாது. விலைவாசி ஏறியிருக்கிறது. அப்போது இதையெல்லாம் கையாளக்கூடிய நிலைமையில் இல்லை.

இன்றைக்கு வரிகள் என்ன ஆகியிருக்கின்றன? நகரத்தில் போடப்பட்ட வரி, வீட்டுக்கு போடப்பட்ட வரி எவ்வளவு தூரம் அதிகமாகியிருக்கிறது. வாடகையும் அதிகமாகியிருக்கிறது. வரி 5 ரூபாய் போட்டால், வாடகைக்கு 30 ரூபாய் வசூல் பண்ணுகிறார்கள். அப்போது உங்களுக்கு வாடகை அதிகமாகிறது. இதெல்லாம் அன்றாட வாழ்கையில் ஏற்கனவே இந்திய அரசு கொடுத்த நெருக்கடி, வேலைவாய்ப்பு இல்லாத தன்மை, ஊழல், ஊழலுக்கு மக்கள் கொடுக்க வேண்டிய செலவுகள்… இது வாழ முடியாத ஒரு சூழல்” என்று நினைக்கிறார்கள்.

அப்போது இதற்கெல்லாம் தீர்வு தவெகவிடம் இருக்கிறதா என்றால், தீர்வு கிடையாது. அவர்களுக்கு எப்படி விலைவாசியை குறைக்க வேண்டும் என்றோ, அல்லது வீட்டு வாடகையை குறைக்க வேண்டும் என்பதற்கோ அவர்களுக்கு ஒன்றும் வழி தெரியாது. ஆனால் மக்கள் என்ன நினைத்துவிட்டார்கள் என்றால், “இதெல்லாம் நமக்கு வேண்டாம்” என்ற இடத்துக்கு வந்தார்கள். “ஊழலை ஒழிக்க வேண்டும்” என்று சொல்லி தவெக ஒன்றும் பெரிய வாக்குறுதி எல்லாம் தரவில்லை. அதை செய்வதற்கான எந்த வேலையும் செய்தது கிடையாது, அவர்கள் ஒரு போராட்டத்தை கூட செய்தது கிடையாது.

தொகுப்பாளர்: ஆனால் விஜய் வசனம் பேசினாரே!

திருமுருகன் காந்தி: அதுதான் சொல்கிறேன். இது விஜய்க்கான ஆதரவு என்பதை விட, “ஆளும் தரப்புக்கு எதிரான மனநிலை” (Anti-incumbency)  இத்தனை நாள் இருந்ததன் விளைவு. இப்போது எனக்கு தெரிந்த ஒரு திமுக ஆதரவாளராக இருந்து பரப்புரை செய்தவர், அவருடைய பக்கத்து வீட்டுக்காரருக்கும் திமுககாரருக்கும் சண்டை என்பதனால், இவருடைய தொழிலை முடக்கினார்கள். நீதிமன்றத்து உத்தரவு வாங்கிட்டு, திரும்ப போய் அவருடைய தொழிலை நடத்த வேண்டிய நிலைமை வந்தது. இது மாதிரி தேவையற்ற ஒரு சிக்கல்.

எனக்கு தெரிந்த ஒரு கலைஞன், அவன் உலகப் புகழ் பெற்ற ஒரு பணிக்கு அங்கீகாரம் கிடைத்தது. அப்போது ஸ்டாலின் அவர்களை பாராட்டி பதிவு போட்டிருந்தார். அவருடைய ஒரு சின்ன வீட்டை இடித்துவிட்டு கட்டுகிறார். அங்கிருக்கும் கவுன்சிலர்(திமுககாரர்) வந்து நின்று காசு வாங்கிட்டு போகிறார். அவர் எவ்வளவோ சொல்லியும் “காசு கொடு” என்று வாங்கிட்டு போகிறார்.

இவர்கள் எல்லாம் திமுக ஆதரவாளர்களாக இருந்தவர்கள். அவர்களுக்கே இந்த நிலைமை. இதன்பின் திரும்ப திரும்ப இவர்களுக்கே ஓட்டு போட வேண்டுமா? இவர்கள் முகத்தை பார்க்க வேண்டுமா? பேச வேண்டுமா? என மக்கள் யோசிப்பார்கள். அதாவது “அவன் திமுகவை ஆதரிப்பவன். அவனையே சோதிக்கிறாய்” என்றால் என்ன பண்ணுவது? வெறுப்புதான். 40 வருடமாக திமுகவில் இருந்த ஒருவர் நிலத்தை விற்க முடியவில்லை. அதற்கு அவர் காசு தர வேண்டியிருக்கிறது. அந்த நிலத்தை விற்க லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அப்போது யாராக இருந்தாலும் “லஞ்சம் கொடு” என்ற இடம் வெறுப்பை உருவாக்கும்.

இதுப்போன்று ஒருவருக்கு நடந்த கதை மற்றவருக்கும் போய் சேரும். இப்படியே பல பேருக்கு நின்று சேரும். தன் பிரச்சனையை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைப்பான். இதெல்லாம் சேர்ந்துதான் மாறியிருக்கிறது. இது வெறுமனே இன்ஸ்டாகிராமில் விஜயின் வீடியோ வந்ததனால் மட்டும் போய்விடவில்லை. அப்படியெல்லாம் எல்லா இடத்திலும் ஒரு வீடியோ வருவதனால் ஒரு முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. “இது வேண்டாம்” என்று நினைத்த ஒரு இடத்துக்கு மாறியிருக்கலாம். திமுகவிடம் என்ன குறை இருக்கிறது என்று பாருங்கள். அதே மாதிரி தலித் மக்களுடைய வாக்குகளை இழந்தது மிக முக்கியமானது.

தொகுப்பாளர்: அதை திமுக இழந்திருக்கிறது அல்லவா!

திருமுருகன் காந்தி: ஆம், அந்த பிழையை விசிக மேல் போடுகிறார்கள். அப்படி இல்லை. தலித் மக்கள் மேல் நடந்த வன்முறைகளுக்கான தீர்வுகளை தரவில்லை. அது முக்கியமானது. குற்றம் பண்ணியவனை எல்லாரையும் பாதுகாக்கிற வேலையை இதே (திமுக) கட்சிக்காரன்தான் பண்ணான். இதனாலும் மக்களுக்கு கோபம் வரும், ஏமாற்றம் வரும்.

இந்தியா முழுவதும் அதிகாரத்தை முடிவு செய்யக்கூடிய வாக்காளர்களாக இருப்பவர்கள் தலித்துகள். இதை பலமுறை நான் பேசியிருக்கிறேன். உத்தரபிரதேசத்தில் மாயாவதியை தனிமைப்படுத்தியதன் மூலமாக அங்கே காங்கிரஸ் வர முடியாமல் போகிறது. எங்கெல்லாம் தலித் வாக்குகளை பிரித்து எடுக்கிறார்களோ… (ராம்விலாஸ் பாஸ்வானை பிரித்து எடுத்தார்கள், பீகாரில் ஜெயிக்க முடியவில்லை, ராம்தாஸ் அத்வாலே மகாராஷ்டிராவில், மாஞ்சி, அதேபோல சரத் பவர் கட்சியிலிருந்து எடுத்தார்கள், சரத் யாதவ் கட்சியிலிருந்து அவர்களை எடுத்தார்கள், நிதீஷ் குமார் கட்சியிலிருந்து வெளியே எடுத்தார்கள்). இதையெல்லாம் பிரித்து எடுத்தார்கள். அதனால்தான் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியிலிருந்து திருமாவை பிரித்து எடுக்க வேண்டும் என்று பெரிய அளவுக்கு முயற்சி செய்தார்கள். திருமா அவர்கள் இதை புரிந்துதான் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆனால் திமுக அதை புரிந்துகொள்ளவில்லை. தமிழ்நாட்டின் மிக முக்கியமான கட்சி. அதனுடைய தோல்வியை நாம் எல்லாருமே கூர்ந்து கவனிக்க வேண்டும். அதை ஆழமாக விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று நான் பார்க்கிறேன்.

தொகுப்பாளர்: இதற்கு பிறகும் நடக்கக்கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை தவெக, ஒரு இரும்பு கரம் கொண்டு தடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

திருமுருகன் காந்தி: எனக்கு அப்படியெல்லாம் நம்பிக்கை இல்லை. என்னவெனில், காவல்துறையை பற்றிய பார்வை என்ன என்பதை பொறுத்து உள்ளது. காவல்துறை பற்றி எதுவுமே பண்ண மாட்டீர்கள், காவல்துறை சீர்திருத்தம் கொண்டு வர மாட்டீர்கள் என்றாலே “It is over, done”. உங்களால் காவல் துறையை மாற்ற முடியவில்லை. அதற்கான துணிச்சல் எந்த முதலமைச்சருக்கு வருகிறதோ, அவர்கள் தமிழ்நாட்டில் எல்லாவற்றையும் மாற்றுவார்கள். அந்த துணிச்சல் எந்த ஆட்சிக்கு வருகிறது என்று நாம் பார்ப்போம்.

ஏனென்றால் பெரிய அளவுக்கு போராட்டமே அதுதான். அரச வன்முறைக்கு எதிரான போராட்டம் நடத்துகிறோம். அப்போது அந்த மாதிரி ஒரு துணிச்சல் எனக்கு தெரிந்து திமுகவுக்கும் கிடையாது, அதிமுகவுக்கும் கிடையாது. தவெகவுக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஒரு மாதம் தான் ஆகியிருக்கிறது. அதனால் போக போக பார்க்கலாம்.

தொகுப்பாளர்: சரிங்க, திருமாவளவன் ஒரு தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக இன்றைக்கு தமிழ்நாட்டில் உருவெடுத்திருக்கிறார் என்பதை, அண்மையில் நடந்த தேர்தலிலே பிரதிபலித்தது. திமுக கூட்டணியில் என்ன முடிவெடுக்க போகிறார் திருமா? என்பது ஒரு பக்கம். புதிதாக கட்சி தொடங்கியிருக்கக்கூடிய விஜய் அவர்கள் “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு தருகிறேன்” என்று முதலில் அழைத்ததும் திருமா அவர்களைத்தான். இந்த பக்கமா அந்த பக்கமா என்று தவித்த திருமாவின் அடுத்த கட்ட நிர்வாகிகளே குழம்பிய நேரம். இப்படி பல விடயங்கள்… தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கிற இடத்தில் திருமா அவர்கள் இருக்கிறார்கள். அவருடைய நிலைப்பாட்டை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அடுத்ததாக எந்த நிலைப்பாட்டை எடுப்பார்?

திருமுருகன் காந்தி: இன்றைக்கு தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். கண்டிப்பாக அதை வரவேற்கிறோம். நாங்கள் முதலில் அந்த கோரிக்கை வைத்தோம். ஏனென்றால் கவர்னர் ஆட்சி வந்துவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். எல்லா இடத்திலும் இந்திக்காரனை கொண்டு வந்து உட்கார வைத்திருப்பார்கள். தமிழ்நாடு நாசமாக போயிருக்கும். எத்தனை திட்டங்களை நிறுத்திருப்பார்கள்!

“கவர்னர் ஆட்சி என்பதை தவிர்க்க வேண்டும்” என்பதற்காக முதல் குரல் மே 17 கொடுத்தோம். “கவர்னர் ஆட்சியை தவிர்க்க வேண்டும் என்றால், இன்றைக்கு ஆட்சி அமைப்பதற்கு தவெகவுக்கு ஆதரவு தருவதில் தவறு இல்லை” என்று கூறினோம்.

ஏனென்றால் திமுக “நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம்” என்று சொல்லிவிட்டார்கள். அப்போது தவெகவுக்குத்தான் வாய்ப்பு இருக்கிறது. “தயவு செய்து ஆதரவு கொடுங்கள்” என்று வெளிப்படையாக, இவர்கள் எல்லாம் ஆதரவு தெரிவிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே பத்திரிகை சந்திப்பை நடத்தி, மே 17 இயக்கம் அறிவித்தது. இதை தமிழ்நாட்டு நலனிலிருந்துதான் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டு நலன்தான் முக்கியம். மற்றவை அதற்குப் பிறகுதான்.

தொகுப்பாளர்: மக்களுக்கு இந்த புரிதல் இருக்கிறதா? திருமா எப்படி இந்த முடிவெடுத்தார்? “பாருங்கள், அவர்கள் ஆளுங்கட்சியாக இருக்கும் போது அங்கே இருந்தார். இப்போது இவர்கள் ஆளுங்கட்சி என்றபோது எப்படி சாய்கிறார் திருமா?” என்று இதுபோன்ற பல விமர்சனங்கள் வருகிறதே?

திருமுருகன் காந்தி: அது அதிர்ச்சியின் அடிப்படையில் வரக்கூடிய விடயம். திமுக கூட்டணி என்பது கிட்டத்தட்ட தேர்தலுக்காக, பிஜேபிக்கு எதிராக உருவாக்கினார்கள். புது ஆற்றல் வந்திருக்கிறது. இப்போதும் பிஜேபியின் ஆட்சியை, அதிகாரத்தை வரவிடாமல் தடுக்க வேண்டும் என்றால் என்ன வழி இருந்தது? ஆனால் தவெக ஆட்சி அமைக்க முடியவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? பிஜேபியின் ஆட்சிதான் வந்திருக்கும். அதற்குப் பிறகு தேர்தல் எப்போது வரும் என்று யாருக்கு தெரியும்? அப்படி யோசித்து பாருங்கள். திருமா எடுத்த முடிவு சரியான முடிவு.

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து பிஜேபி கூட்டணிக்கு திமுக போகவில்லையா? வாஜ்பாய் கூட்டணியில் இருந்தார்கள், அதற்குப் பிறகு சோனியா காந்தி கூட்டணிக்கு போனார்கள். இதெல்லாம் நடக்கத்தானே செய்கிறது. அப்போது அதிகாரத்தில் பங்கு பெறுவதற்காக, ஒன்றிய அரசு அதிகாரத்தில் அமைச்சரவை பங்கு பெறுவதற்காக மாற்றி மாற்றி கூட்டணி திமுக வைத்தார்களே!

தொகுப்பாளர்: அப்போது திருமா எடுத்த முடிவும் சரியானது என்கிறீர்களா?

திருமுருகன் காந்தி: திருமா அவர்கள் எடுத்த முடிவை தமிழ்நாட்டு நலன் சார்ந்த முடிவாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். நாங்கள் அதை வரவேற்றோம். சிறுத்தைகளிடம் நாங்கள் சொன்னோம்- ஏனென்றால் தமிழ்நாட்டு நலன்தானே முக்கியம். ஒரு கூட்டணியை காப்பாற்றுவதற்கு தேவை என்றால் அதற்கு செய்கிறோம். அது தேர்தல் சமயத்தில் உடைத்திருந்தால்தான் தவறு என்று நாம் பேசுவோம். தேர்தல் முடிந்துவிட்டது. இனி மக்கள் தீர்ப்பை மாற்ற முடியுமா? முடியாது. அதனால் இன்றைய சூழலுக்கு அது சரியான முடிவாகத்தான் நான் பார்க்கிறேன்.

தொகுப்பாளர்: இப்படிப்பட்ட வலிமைமிக்க தலைவர் அவர் (திருமா) சொல்கிறார்: “ஒரு தலித் முதலமைச்சர் ஆகின்ற அளவுக்கு தமிழ்நாட்டு மக்களுடைய மனநிலை இல்லை” என்று. அது எப்போது கனியும்?

திருமுருகன் காந்தி:அது நமக்கு பெரிய அவமானகரமான ஒரு விடயமாக இல்லையா? எல்லாரும் “தமிழன்” என்று சொல்லிவிட்டோம். அதில் ஒரு தரப்பு தமிழன் முதலமைச்சர் ஆக முடியாது என்று ஒரு தரப்பு மக்கள் உணர்கிறார்கள் என்றால், அது எவ்வளவு பெரிய அவமானம் நமக்கு? தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களுடைய சமூக அவமானம்தானே அது? தமிழ்நாட்டு மக்கள் அப்படியான ஒரு முடிவை எடுக்கிறார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். அப்படியான ஒரு வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக அதை ஏற்பார்கள். திருமா அவர்கள் முதலமைச்சராக வர வேண்டும் என்பதை நான் உளப்பூர்வமாக விரும்புகிறேன்.

தொகுப்பாளர்: நீங்கள் சொன்ன மாதிரி மக்களுக்கு அந்த விருப்பம் கூட இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், இதுவரைக்கும் எந்த கட்சி, எந்த திராவிட கட்சிகள் அவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்து, அவரை முன்னிறுத்தினார்கள்?

திருமுருகன் காந்தி: திராவிட கட்சிகளிடம் கட்சிக்கு கட்டமைப்பு இருக்கிறது. அதற்கு தலைவர் இருக்கிறார்கள். அந்த தலைவரை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படித்தான் அதை பார்க்க முடியும்.

தொகுப்பாளர்: இந்த 2026 தேர்தலின் முடிவு வந்த இரவிலிருந்தே மறுநாள் அப்படியே தொடர்ந்து திருமா முதல்வராக வேண்டும் என்ற பேச்சு தொடங்கியதே!

திருமுருகன் காந்தி: அன்றைக்கு திருமாவிடம் இருக்கக்கூடிய இரண்டு MLA-க்களை வைத்துக்கொண்டு அவர் எப்படி முதலமைச்சர் ஆவார்?

தொகுப்பாளர்: ஆனால் இன்னொரு பக்கம் திமுகவும் அதிமுகவும் கூட்டணி பேசினார்கள். அதில் அதிமுகவின் ஒரு தரப்பு “திருமாவை முதல்வராக்கலாம்” என்று சொல்லி ஒரு பேச்சு நடந்ததே!

திருமுருகன் காந்தி: அதைத்தான் திருமா அவர்கள் மறுத்துவிட்டாரே, அவர் மிக சரியான முடிவுதான் எடுத்திருக்கிறார். அது எவ்வளவு காலம் நிற்கும்? 1991-ல் V.P. சிங் ஆட்சியை கவிழ்த்துவிட்டு, அடுத்த தேர்தலுக்கு தயாராவதற்காக காங்கிரஸ் என்ன செய்தது? சந்திரசேகரை பிரதமராக்கியது. முழுக்க முழுக்க சொற்பமான எண்ணிகையில் இருக்கக்கூடிய MP-க்களை வைத்துக்கொண்டு, “வெளியிலிருந்து நாங்கள் ஆதரவு தருகிறோம்” என்று சொல்லி காங்கிரஸ் இந்த வேலையை செய்தது. செய்துவிட்டு என்ன பண்ணார்கள்? சந்திரசேகரை வைத்துக்கொண்டு திமுக ஆட்சியை கலைத்தார்கள். அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை செய்வது, எல்லா கிரிமினல் வேலைகளையும் அன்றைக்கு காங்கிரஸ் செய்தது. அதனால் சந்திரசேகர் பெயர் கெட்டுப் போனது. இதெல்லாம் செய்துவிட்டு கடைசியில் என்ன ஆனார்கள்? ஒரு கட்டத்தில் அவர் பதவி விலகும் இடத்துக்கு வந்தார்கள். அப்போது என்னவென்றால், “இந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் நடத்தலாம்” என்று பின்னால் பொம்மை அரசாக மாற்றிவிடுவார்களே. அதற்காகத்தான் திருமா அதை ஒத்துக்கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன்.

தொகுப்பாளர்: திருமா விசிக-வின் நிலைப்பாடு அப்படி இருக்கிறது. இடதுசாரி கட்சிகள் ஆதரவு அளித்திருக்கிறார்கள். அதில் சமீபத்தில் சிபிஐ-யிலிருந்து தோழர் மகேந்திரன் அவர்கள் தவெகவில் இணைத்துக்கொண்டார். அதிமுக அலைகளாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட்களும் தவெகவுக்குள் போவது எந்த நம்பிகையின் அடிப்படையில்?

திருமுருகன் காந்தி: நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படைக்கும் மற்றவர்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு என்னவென்றால், அவர்கள் வர்க்க சமுதாயத்தை மாற்றி அமைப்பது. சமத்துவமான சமுதாயமாக, ஏழை பணக்காரன் இல்லாமல் ஒரு சமூகத்தை படைப்பது என்பதுதான் அதனுடைய இலக்கு. அது உழைக்கும் வர்க்கத்தை அதிகாரத்துக்கு கொண்டு வருவது.

தொகுப்பாளர்: அது விஜயிடம் போனால் வரும் என்று நினைத்து போயிருக்காரோ?

திருமுருகன் காந்தி: இல்லை, அது அப்படி பண்ண முடியாது. ஏனென்றால் விஜயோ அல்லது ஆதவ் அர்ஜுனாவோ அவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள். சாதாரண பணக்காரர் அல்ல. நீங்களும் நானும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பெரும் பணக்காரர்கள், முதலாளிகள். அவரை உங்களுக்கு பிடிக்கலாம், அது வேற விடயம். ஆனால் பெரும் பணக்காரர். அந்த வர்க்கம் வேறு. தமிழ்நாட்டில் அந்த வர்க்க நலனுக்குத்தான் ஆட்சி இருக்கும். அந்த முதலாளிகள் நலனுக்குத்தான் ஆட்சி இருக்கும்.

மாஞ்சோலை தொழிலாளருக்கு தீர்வு தருவார்களா? தர மாட்டான். ஏனென்றால் மாஞ்சோலை முதலாளியும் இவனும் ஒன்றாகத்தான் இருப்பான். இந்த முதலாளி அந்த முதலாளி பேசிக்கொள்வான். இவனும் முதலாளியாக இருக்கிறான், அவனும் முதலாளியாக இருக்கிறான். முதலாளி முதலாளிதானே பேசிக்கொள்வார்கள். தொழிலாளிக்காக யார் பேசுவது? அப்போது வர்க்க ரீதியாகவே தவெக தொழிலாளி வர்க்கத்திற்காகவோ, பாட்டாளி வர்க்கத்திற்காகவோ, தொழிலாளி பாட்டாளிகளின் நலனை முன்னிறுத்தக்கூடிய அதிகாரத்தை கைப்பற்றும் கட்சி அல்ல. அப்படியாக வரவில்லை.

திமுகவில் அண்ணா காலத்தில் அப்படிப்பட்ட ஒரு கட்டமைப்பு அதற்கு வந்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு அப்படிப்பட்ட ஒரு கட்டமைப்பு இருந்தது. அதனால்தான் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திமுகவுக்கும் போட்டி இருந்தது. பாட்டாளிகளை அமைப்பதில்தான் பெரிய போட்டி இருந்தது. இன்றைக்கு தவெக  உழைக்கும் வர்க்கத்தின் கட்சியா? கிடையாது. பாட்டாளி வர்க்கத்தின் கட்சியா? நிச்சயமாக அது கிடையாது. வர்க்க ஒழிப்புக்கு பாடுபடக்கூடிய இலக்கை வைத்திருக்கிறதா? கிடையாது. பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய கட்சியா? கிடையாது. அது முதலாளிகளின் கட்சிதான். அந்த கட்சியில் கம்யூனிஸ்ட் போய் சேர்வது என்பது அவர் கம்யூனிஸ்ட் கொள்கையிலிருந்து வெளியேறியதாகத்தான் காண்பிக்கிறது.

தொகுப்பாளர்: ஆமாம். மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்றி.

திருமுருகன் காந்தி: நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »