
ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை வலியுறுத்தி சமூக ஆர்வலரான ’சோனம் வான்க்ச்சுக்’ டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது போராட்டம் உடல் குன்றிய நிலையிலும் தனது போராட்டத்தை மேற்கொண்டார். எனினும் 21-வது நாளை எட்டியப்போது பாஜக அரசு டெல்லி காவல்துறை மற்றும் இராணுவத்தை கொண்டு அடாவடியாக சோனம் வாங்கசுக்கை கைது செய்தது. இப்போராட்டம் குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஜூலை 19, 2026 அன்று தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்தவை.
சோனம் வாங்ச்சுக் நடத்திய உண்ணாநிலை போராட்டம் தேசத்தை உலுக்கியுள்ளது.
நீட் தேர்வு ஊழல்களால் மரணித்த மாணவச் செல்வங்கள், கொள்ளையடித்த அரசியல் வர்க்கம், செயல்திறனற்ற பாஜகவின் ஒன்றிய அமைச்சர் என அனைத்தையும் கண்டித்து கல்வி அமைச்சர் நீக்கப்பட வேண்டுமென வாங்ச்சுக் நடத்திய உண்ணாநிலை போராட்டத்தை வலிந்து தடுத்திருக்கிறது மோடி அரசு.
இவரது உண்ணாநிலை போராட்டத்திற்கு இந்திய அளவில் பேரெழுச்சி நடந்திருக்க வேண்டும். எதுவும் நடக்கவில்லை.
எதிர்கட்சியாக இயங்கும் காங்கிரஸோ, ராகுல்காந்தியோ மக்களை அணிதிரட்டவில்லை. மக்களை வீதியில் திரட்டாமல் ஆட்சி மாற்றங்கள் சாத்தியமில்லை. ராகுல்காந்திக்கு மக்கள் போராட்டங்கள் மீதான ஆர்வத்தைவிட அதிகாரத்தைப் பிடிக்கும் விருப்பத்தையே முன்னிலைப்படுத்துகிறார். டில்லியில் நடந்த கடுமையான பாஜக எதிர்ப்பு போராட்டத்தில் மூன்றாவது போராட்டம் வாங்க்ச்சுக் போராட்டம். இதிலும் காங்கிரஸ் பேரெழுச்சியாக திரளவில்லை, மக்களை திரட்டவுமில்லை. அடையாள சந்திப்புகள் அறிக்கைகள் தவிர்த்து ஏதும் இல்லை.
இதற்கு முன்னதாக நடந்த ‘ஷாகின்பாக்’ போராட்டம், ‘உழவர்’ போராட்டம் ஆகியன கடுமையான ஒடுக்குமுறைக்குள்ளான சமயத்தில் ராகுல்காந்தியை காணமுடியவில்லை. டில்லியில் இருந்தபோதிலும் அவர் எட்டிக்கூட பார்க்காத அப்பாவிகளின் மீது நடந்த படுகொலைகள் நிறைந்த போராட்டமாய் சி.ஏ.ஏ போராட்டம் இருந்தபோதிலும் தலைக்காட்டாத தலைவராய் ‘ராகுல்’ அமைதிகாத்தார். அடையாள அறிக்கைகள், ட்வீட்டுகள் தவிர வேறேதும் காணமுடியவில்லை. இன்றய வாங்க்ச்சுக் போராட்டத்திற்கு காங்கிரஸ் முதலமைச்சர்களிடமிருந்தும் தீவிரமான ஆதரவோ, கண்டனமோ எழுந்ததாக தெரியவில்லை. கேரளா, கர்நாடகம், தெலுங்கானா முதலமைச்சர் பதவிகள் அமைதிகாக்கின்றன.
வாங்க்ச்சுக்கின் போராட்டம் ஒருவேளை கடந்த ஆண்டு நடந்திருந்தால் மாண்புமிகுக்களான மு.க.ஸ்டாலின், பினராய் விஜயன், மம்தா பேனர்ஜி ஆகியோரிடமிருந்து கடுமையான எதிர்வினை நடந்திருக்கும். தனது இருக்கையில் மோடி நெளிந்திருப்பார். தவெக அரசு, மாண்புமிகு முதலமைச்சர் விஜய்யிடமிருந்து போராட்டத்திற்கு எவ்வித ஆதரவும், அறிக்கையும், ஒன்றிய கல்வி அமைச்சருக்கு எதிர்ப்பும் வரவில்லை. இதுபோன்ற விடயங்களில் தமிழ்நாடு அமைதி காப்பது தமிழருக்கு பெருமை சேர்க்காது. நீட் தேர்வு எதிர்ப்பு என்பதை தொடங்கியவர்கள் நாம். இதற்காக 16 உயிர்களை இழந்திருக்கிறோம். அவர்கள் நம் மாணவச் செல்வங்கள். அவர்களின் நினைவாகவாவது நாம் எதிர்ப்பை முன்னகர்த்தியிருக்க வேண்டும். தவெக அரசு மோடி அரசை எதிர்ப்பதில் துணிவையும், தனித்துவத்தையும் காட்டவில்லை. தமிழ்நாட்டின் அமைதி ஏற்புடையதல்ல, கண்டனத்திற்குரியது.
தமிழர்கள் துணிவானவர்கள், எவருக்கும் அஞ்சாமல் துணிந்து குரல் எழுப்புவது நம் மரபு. அத்தகைய வீர மரபை மீறியுள்ளோம்