
“நான் சாதியையும் மதத்தையும் வீட்டில் பூட்டிவிட்டு வருகிறேன். நான் அனைவருக்கும் பொதுவானவன்.” – சமீபத்தில் அண்ணாமலை வெளியிட்ட இந்த அறிவிப்பு, தமிழ்நாட்டு அரசியலில் புதிய அரசியல் முகத்தை உருவாக்கும் முயற்சியாகப் அண்ணாமலை ஆதரவாளர்களால் கட்டமைக்கப்படுகிறது. மத அடையாள அரசியலைக் கடந்து, அனைத்து மக்களையும் அரவணைக்கும் தலைவராக தன்னை முன்வைக்கிறார் என்ற தோற்றத்தை இந்தப் பேச்சு ஏற்படுத்துகிறது.
ஆனால், ஒரு அரசியல் தலைவரின் புதிய அறிவிப்பை மதிப்பிடுவது அவரது வார்த்தைகளின் அடிப்படையில் மட்டுமல்ல; அவர் கடந்த காலத்தில் எடுத்த நிலைப்பாடுகள், முக்கியமான அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளில் வெளிப்படுத்திய கருத்துகள், அவற்றில் அவர் கடைப்பிடித்த தொடர்ச்சியான அணுகுமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் ஆகும்.
அந்த அடிப்படையில் பார்க்கும்போது, இன்று அண்ணாமலை முன்வைக்கும் “அனைவருக்கும் பொதுவான அரசியல்” என்ற பிம்பத்திற்கும், கடந்த சில ஆண்டுகளில் அவர் எடுத்த அரசியல் நிலைப்பாடுகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருக்கின்றன.
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை இருந்த 2023-ல், கர்நாடகாவில் இசுலாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்தது. அந்த முடிவை அண்ணாமலை வெளிப்படையாக வரவேற்றார். “மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது” என்று அப்பட்டமான சிறுபான்மையினர் விரோதப் போக்கை பேசினார்.
இட ஒதுக்கீடு என்பது சமூகத்தில் கல்வி மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கியிருப்பவர்களுக்கான உரிமை. ஒருவர் மதம் மாறினால் மட்டும் உடனே அவர்களின் வாழ்க்கைத் தரம் சமூகத்தில் உயர்ந்து விடாது. ஆனால் மதம் மாறினால் இட ஒதுக்கீடு கொடுக்கப்படக்கூடாது என்பது ஆர்.எஸ்.எஸ்-ன் வாதமாக இருக்கிறது. அதையே அண்ணாமலை அன்றும் வழிமொழிந்தார்.
இன்றும் தன்னை ‘பொதுவானவன்’ என்று சொல்லிக்கொள்ளும் அண்ணாமலை, மதுரை உயர்நீதிமன்றக் கிளை, “மதம் மாறிய இசுலாமியர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த 3% பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இட ஒதுக்கீடு கிடையாது” என்று தீர்ப்பளித்தபோது கருத்து எதையும் கூறவில்லை. தமிழ்நாட்டின் பல தலைவர்களும் கடுமையாக கண்டனங்களைப் பதிவு செய்த போதும், அண்ணாமலை எந்தக் கருத்தையும் கூறவில்லை.
அதைப் போல, சென்னை உயர்நீதிமன்றம் 2025 பக்ரீத் அன்று. “பொது இடத்தில் மாடு வெட்டக்கூடாது” என உத்தரவு போட்டது. அண்ணாமலை X தளத்தில் அந்த தீர்ப்பை வரவேற்று உடனே பதிவிட்டார்.
இசுலாமிய மக்களின் பண்டிகை வரும் போதெல்லாம் ஆர்எஸ்எஸ் நபர்கள் வழக்கு தொடுப்பதும், அதற்கு இப்படியான தீர்ப்புகள் வருவதும் இந்த ஆண்டு 2026-ல் கூட தொடர்ந்தது. தமிழ்நாட்டின் அனைத்து தலைவர்களும் இதைக் கண்டித்த நிலையில், தன்னைப் “பொதுவான” தலைவராக பேசிய அண்ணாமலை அமைதியாக கடந்தது, முன்பு கொண்டு இருந்த அதே நிலைப்பாடு தொடர்வதையே அம்பலப்படுத்தியது. இன்னும் அண்ணாமலையின் முகம் ஆர்எஸ்எஸ், பாஜக முகம்தான் என்பதை உறுதிப்படுத்தியது.

இசுலாமியர்களின் பண்டிகைகள் வரும்போதெல்லாம் இப்படியான வழக்குகள் ஆர்எஸ்எஸ், சங்பரிவார ஆட்களால் தொடரப்படுவதை இசுலாமியர்கள், தங்களையும், தங்களின் விழாக்களையும் குறிவைத்து தொடுக்கும் அவமானம் என்றே வலிகளுடன் பேசுகிறார்கள். அவர்கள் இவற்றை எல்லாம் வேதனையுடன் கடந்தாலும், சட்டத்தின் தீர்ப்பை மதிப்பதாக கூறுகிறார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் உரிய இடத்தை அரசு கொடுத்தால், அங்கேயே கறி மாடுகளை வெட்டிக் கொள்வோம் என்பதுதான் அவர்களின் குறைந்தபட்ச கோரிக்கையாக இருக்கிறது. இப்படியான வழக்குகள் தொடரப்படுவது குறித்து அண்ணாமலை பேசுவதும் இல்லை, இசுலாமியர்களின நிலையை எடுத்துச் சொன்னதும் இல்லை.
கொரோனா காலகட்டத்திலும் அண்ணாமலை கட்டமைத்த இசுலாமிய வெறுப்புணர்வு தீயாக பற்றியது. டெல்லியில் நடந்த மாநாட்டிற்கு சென்று வந்த தப்லீக் ஜமாத் அமைப்பினரால்தான், தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவியது என்கிற அவதூறைக் கிளப்பியது அண்ணாமலை. ஆனால் அந்த சமயத்தில் ஊரடங்கு போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு திட்டமிட்டு கட்டவிழ்த்த பொய்ப் பிரச்சாரத்தை சமூக வலைதளங்களில் பாஜக ஆர்.எஸ்.எஸ் கூட்டம் பரப்பியது. கொரோனா உச்சமாக இருந்த அந்த பதட்டமான காலகட்டத்தில், எளிதில் மக்கள் கோவத்தை இசுலாமியர்கள் மீது திசை திருப்ப, அண்ணாமலையின் பேச்சே காரணமாக இருந்தது.
மேலும், டெல்லி பாஜக அரசு கொண்டு வந்த CAA, NRC, வக்பு வாரியச் சட்டம் போன்ற இசுலாமிய விரோத கொள்கைகளை எந்தக் கேள்வியும் இன்றி கண்மூடி ஆதரித்து பரப்பியவரே அண்ணாமலை.
அண்ணாமலையின் மதவாத அரசியல் திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் தொடர்ந்தது. நீண்ட காலமாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலும், சிக்கந்தர் தர்காவும் மக்களின் வழிபாட்டுத் தலங்களாக இருந்த இடத்தில், தீபம் ஏற்ற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்-ன் கிளை அமைப்பு வழக்கு தொடுத்ததும், அதனையடுத்து வெளியிடப்பட்ட நீதிபதி சாமிநாதனின் தீர்ப்பும், அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்களின் மதவாதப் பேச்சும், அங்கு ஒரு கலவர சூழல் ஏற்படும் நிலைக்கு ஆளாக்கியது. திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது சர்வே கல் என்று வரலாற்று அறிஞர்கள் ஆதாரத்துடன் சொன்னாலும், அது தீபத்தூணே, அங்கே தீபம் ஏற்றியே ஆக வேண்டும் என்று அண்ணாமலை தொடர்ந்து பேசியது திருப்பரங்குன்ற சூழலை மோசமாக்கியது.

கிருத்தவர்கள் பற்றிய தவறான தகவல்களைப் பரப்புவதிலும் அண்ணாமலை தொடர்ந்து செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலில், தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கத் தடைகோரி, உயர் நீதிமன்றத்தில் ஒரு கிருத்துவ தன்னார்வ தொண்டு நிறுவனம் வழக்கு தொடுத்ததாக, உண்மைக்கு மாறான தகவலை பேசினார். அது ஒரு தனிநபர் தான் வழக்கு தொடுத்திருந்தார். அண்ணாமலை பேசியது கிருத்தவர்கள் மீது வெறுப்பைத் தூண்டும் வகையில் இருந்ததாகக் கூறி, சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. தமிழ்நாடு அரசும் வழக்கு தொடர அனுமதி அளித்தது.
அரியலூர் லாவண்யா வழக்கிலும் கிருத்தவர்கள் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அண்ணாமலையின் நடவடிக்கை இருந்தது. அரியலூரின் மைக்கேல்பட்டி கிராமத்தில் புனித மைக்கேல் மெட்ரிக் பள்ளி மாணவி லாவண்யாவின் மரணத்தை “மதமாற்றத்தால் நடந்தது” என்று கதை கட்டியது அண்ணாமலை. தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் மதமாற்றம் என்று சுவரொட்டிகள் அண்ணாமலையின் தூண்டுதலின் பேரில் ஒட்டப்பட்டன. மருத்துவமனையில் மாணவி பேசிய காணொளியை வெட்டி பொய்யாக சித்தரிக்கும் வகையில் திரித்து ஆர்எஸ்எஸ்-ன் கிளை அமைப்பான விசுவ இந்து பரிசத் வெளியிட்டது. அண்ணாமலை மற்றும் பாஜகவினரின் இந்தப் போலியான பிரச்சாரத்தை இரண்டு வருடம் கழித்து சிபிஐ அறிக்கையே உடைத்தது. மதமாற்றத்தால் இது நடைபெறவில்லை என்று அறிக்கை அளித்தது.

மத வேறுபாடு இல்லாமல் அமைதியாக வாழும் தமிழ்நாட்டில், எப்படியாவது மக்களிடையே மத வெறுப்பை உருவாக்க வேண்டும் என்று வடநாட்டில் செய்யும் அனைத்து தந்திரங்களையும் இங்கும் கையில் எடுத்தவர்தான் அண்ணாமலை. அவையெல்லாம் பாஜக தலைவராக இருந்த போது தோற்றுப் போகவே, இப்போது “We the Leaders” அமைப்பின் மூலமாக வேறு வடிவத்தில் செயல்படுத்த வந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த அமைப்பின் தொடக்க விழாவில் அவரே, “வட இந்திய தலைவர்களுக்கு தமிழ்நாட்டிற்கு ஏற்றாற் போல பேசத் தெரியவில்லை. தமிழ்நாட்டுக்கு புரியும் விதத்தில் பேசுவதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்று கூறியதே இதற்கு சாட்சியமாகி இருக்கிறது.
மாநில கட்சிகள் வலுவான தமிழ்நாட்டில், அதனை எதிர்க்கும் ‘எதிர்ப்பு அரசியல்’ ஒத்து வராது என்று அண்ணாமலை உணர்ந்ததால்தான், மாநிலக் கட்சியாக மாறி, ‘அரவணைப்பு அரசியல்’ மூலமாக தனது நோக்கத்தை நிறைவேற்ற, ஒரு புது அமைப்பைத் தோற்றுவிக்கிறார் என்பதே ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியலை உணர்ந்தவர்களின் கருத்தாக இருக்கிறது.
வெளியே சாதி மத பேதமற்று தமிழ்நாட்டை நேசிப்பது போல காட்டிவிட்டு, உள்ளே இந்துத்துவ, ஆர்.எஸ்.எஸ். கொள்கையை இங்கே கொண்டு வருவதுதான் அண்ணாமலையின் உண்மையான திட்டம். இதற்கு கடந்த காலத்தில் அண்ணாமலை எடுத்த நிலைப்பாடுகளும் இன்று இசுலாமியர்களுக்கு எதிராக வரும் தீர்ப்புகளுக்கு அண்ணாமலையின் மௌனமும் சாட்சியமாக இருக்கின்றது.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு பாஜகவும், அண்ணாமலையின் புதிய இயக்கமும் எதிரெதிர் துருவங்கள் போல ஒரு தோற்றம் தெரிகிறது. ஆனால் உண்மையில் இது ஆர்.எஸ்.எஸ்-ன் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியே. தமிழ்நாட்டில் தங்கள் கொள்கையை நடைமுறைப்படுத்த இரண்டு கட்சிகளை ஆர்எஸ்எஸ் அண்ணாமலை மூலம் நிறைவேற்றி விட்டது.
மோடி – அமித்ஷாவின் ஆசியுடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தின் நோக்கம் ஒன்றே. வடநாட்டு பாஜக அரசியலை இங்கே மக்கள் மனதில் ஏற்றுவது. ஆர்எஸ்எஸ்-ன் இந்துத்துவ அரசியலை தமிழ்நாட்டில் வலுவாக வேரூன்ற வைப்பது.
அண்ணாமலையில் இந்த அரசியலை சரியாகப் புரிந்து கொண்டு, ஜனநாயக ஆற்றல்கள் செயல்திட்டங்களை முன்னெடுப்பது தமிழ்நாட்டின் அரசியலுக்கு நல்லது. டெல்லி பாஜக, ஆர்எஸ்எஸ்-யின் கைப்பாவையான அண்ணாமலையை அம்பலப்படுத்துவோம்.