
தமிழினத்தின் மன்மணமிக்க கதைகளை, கதாபாத்திரங்களை படைத்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் இன்று (10.06.2026) நம்மை விட்டு மறைந்தார். உலகளவில் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படங்களை உருவாக்கி கலையுலகில் பெருமை சேர்த்தவர். ஈழப்படுகொலையில் இந்திய அரசின் பங்களிப்பைக் கண்டித்து, தனக்களிக்கப்பட்ட ‘பத்மஸ்ரீ’ விருதை திருப்பி அளிக்க முன் வந்தவர். தலைசிறந்த படைப்பாளியாக மட்டுமல்லாமல் தமிழர்களின் உரிமை சார்ந்த போராட்டங்கள், தமிழீழ போராட்டங்களில் முன்னணியில் நின்றவர். மே 17 இயக்கத்தின் போராட்டங்களுக்கு முழு ஆதரவு அளித்தவர். தொடர்ந்து சமூக-அரசியல் தளங்களில் மே 17 இயக்கத்துடன் பலமுறை தன்னை இணைத்துக்கொண்டவர்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் 2011இல் மே 17 இயக்கம் ஒருங்கிணைத்த முல்லை பெரியாறு அணையைக் காக்கும் போராட்டத்தின் போது மெரினா கடற்கரையில் ஒன்று திரண்டிருந்த மக்களின் மத்தியில் அவர் ஆற்றிய உரை சிறப்பானது மட்டுமல்ல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததும் கூட.
திசம்பர் 26, 2011 அன்று தமிழர் கடற்கரையில் முல்லை பெரியாறு அணையைக் காக்க மே 17 இயக்கத்தின் தோழர்களுடன் ஐயா பாரதிராஜா அவர்கள், மதிமுக பொதுச்செயலாளர் ஐயா வைகோ அவர்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் எனப் பலர் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் எனும் நோக்கில் கேரளாவின் அனைத்து ஊடகங்களும் விசமப் பரப்புரைகளை செய்து வந்த அன்றைய காலக்கட்டத்தில் மே பதினேழு இயக்கம் முன்னெடுத்த இந்தப் போராட்டம் தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. அப்போது தமிழ் நாட்டிலும் சில பத்திரிகைகள் தொடர்ந்து தமிழர் விரோத போக்குடனே எழுதிவந்தன. இந்தப் பொய் பரப்புரைகளை உடைத்து முல்லைப் பெரியாறு அணையைக் காக்க மெரினாவில் ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி போராடியது மே பதினேழு இயக்கம்.
இந்தப் போராட்டத்தில் பேசிய இயக்குநர் பாரதிராஜா அவர்கள், “முல்லைப் பெரியாறு பிரச்சினை என்பது 5 மாவட்ட பிரச்சினை கிடையாது. ஒட்டுமொத்த தமிழனின் பிரச்சினை. இப்போதும் அமைதி காத்தோமானால் தமிழனை ஒருபோதும் காப்பாற்ற முடியாது. தமிழர்களுக்கு எங்கே இடர் வந்தாலும் சரி, அங்கே முதலில் குரல் கொடுப்பவர் மற்றும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழர்களுக்காக நிற்பவர் வைகோ அவர்கள். இந்த பிரச்சினை கேன்சர் போன்றது. ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லை என்றால் நமக்குத்தான் ஆபத்து. ஒரு நல்ல பொறி கிளம்பியுள்ளது. இதை அணையாமல் பார்த்துக்கொண்டு வெற்றியடைய வேண்டும். தமிழர் நலன் காக்க தமிழ் தேசியம்தான் ஒரே வழி” என்று உரையாற்றினார்.
இந்தப் போராட்டம் மட்டுமல்லாது மே 17 இயக்கத்தின் கோரிக்கைகளுக்காக பல முறை குரல் கொடுத்தவர் ஐயா பாரதிராஜா அவர்கள்.
கடந்த 2017-இல் அதிமுகவின் எடப்பாடி ஆட்சிக் காலத்தின் போது இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்காக மெரினாவில் நினைவேந்த தடை விதிக்கப்பட்டது. தமிழ் உறவுகளுக்கு தமிழர் கடலில் நினைவேந்துவது எங்கள் பண்பாட்டு உரிமை என்னும் நிலைப்பாட்டுடன் தடையை மீறி நினைவேந்தலை நடத்தியது மே 17 இயக்கம். அதனால் எடப்பாடி அரசு நடத்திய தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்தது. அதில் தோழர் திருமுருகன் காந்தி, மக்கள் விடியல் கட்சியின் தோழர் இளமாறன், டைசன், அருண்குமார் ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைத்தது எடப்பாடி அரசு.
இதனைக் கண்டித்து தமிழ் படைப்பாளர்கள் சார்பில் ஐயா இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் தலைமையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அதில் இயக்குனர் அமீர், இயக்குனர் ராம், இயக்குனர் சேரன் உள்ளிட்ட இயக்குனர்கள் கலந்து கொண்டனர். தோழர் திருமுருகன் காந்தியை ஆதரித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீறினார் இயக்குநர் இமயம் அவர்கள்.

அவர் சந்திப்பின் சுருக்கம் :
“சமீபகாலமாக நான் மேடையில் ஏறுவதேயில்லை. மைக் பிடிப்பதில்லை. ஆனால் இன்று வந்திருக்கிறேன். படைப்பாளர்களான எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை. மண் சார்ந்த கலைகளைப் படைக்கும் இலக்கியவாதிகள் நாங்கள். ஏன் இங்கு வந்திருக்கிறோம்? திருமுருகன் காந்தியை ஏன் கைது செய்தார்கள்?
அவன் என்ன கொலை செய்தானா? கொள்ளையடித்தானா? நக்சலைட்டா? அல்லது அரசியல் ரீதியாக கட்சி ஆரம்பித்து பல கோடி ரூபாய் சம்பாதித்து தனக்கென்று வாழ்க்கை அமைத்துக் கொண்டவனா? வெட்டினானா? குத்தினானா? குண்டர் சட்டம் எதற்கு?
நான் கூட நினைவேந்தலுக்கு சென்றிருக்கிறேன். ஒரு சனநாயகமாக நடத்திய நிகழ்வுக்கு ஏன் குண்டர் சட்டம்? தடையை மீறி போராட்டம் நடத்துவது சனநாயக உரிமை. கலைஞர் தண்டவாளத்தில் தலை வைத்து படைத்தது சட்டமீறல்தான். ஆனால் அது போராட்ட அடையாளம். நெய்வேலியில் நமக்கு மின்சாரம் கிடைப்பது சொற்பம் என்றாலும் நாம் போராட்டம் நடத்தினோமே, அதுவும் போராட்ட அடையாளம். இதே போராட்ட அடையாளத்தை தான் திருமுருகனும் செய்தான். இதிலென்ன தவறு?
மத்திய அரசை விமர்சனம் செய்து விட்டானாம். அதற்கான சொந்த நலனுக்காக இரண்டு தலையாட்டி பொம்மைகள் கைது செய்திருக்கிறது. உங்களுக்கு மான ரோசம் இருந்தால் திருமுருகன் காந்தியையும் மற்றவர்களையும் விடுதலை செய்யுங்கள்.
திருமுருகன் காந்தி பாம் வைத்தானா? அல்லது பத்து பேரை கூட்டி வந்து தீ வைத்து கொளுத்தினானா? அமைதியாக மெழுகுவர்த்தி ஏந்த கூடினான்? இதற்கா குண்டர் சட்டம்?” எனக் காட்டத்துடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் இமயம் தோழர் திருமுருகன் காந்திக்காக பேசினார்.

தோழர் திருமுருகன் காந்தி சிறையில் இருந்து விடுதலை பெற்றவுடன் அவருக்கு பொன்னாடை போர்த்தி தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். இறுதி வரை தமிழ், தமிழர், தமிழ்த்தேசம் எனும் தீராப் பற்றுடன் வாழ்ந்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள். தமிழரின் வாழ்க்கையில் பிரிக்க இயலா அங்கமாக இவரது படைப்புலகம் ஆளுமை செலுத்தியது. இதை சிறப்பிக்கும் வகையில் 2026இல் தமிழ்த்தேசிய பெருவிழாவில் ‘அருந்திறல் தமிழர்’ விருது கொடுத்தது மே பதினேழு இயக்கம்.
இன்று நம்மை விட்டுப் பிரிந்தாலும் ‘எனதருமை தமிழ் மக்களே’ எனும் அவரின் குரல் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்….
அருந்திறல் தமிழர் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு வீர வணக்கம்!!