“சுதந்திர” இந்தியாவின் ஜாலியன்வாலா படுகொலை
இந்திய விடுதலை அடைவதற்கு முன் நடந்த பல புரட்சிமிக்க போராட்டங்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியா விடுதலை அடைந்த பின்னர் மக்கள் மீது நடத்தப்பட்ட முதல் துப்பாக்கிச் சூடு பற்றி முழுமையாக பதிவு செய்யப்படவில்லை.
1948 சனவரி 1, இந்தியா ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை அடைந்த நான்கே மாதங்களில் ஜார்கண்ட் மாநிலத்தின் சிங்பூம் மாவட்டத்தில் உள்ள ‘கர்சவான்’ என்னும் இடத்தில் ‘ஹோ’ பழங்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தான் அது. இன்றும் இந்த நாளை கருப்பு நாளாக நினைத்து அம்மக்கள் துக்கம் அனுசரித்து வருகிறார்கள்.
சுதந்திர இந்திய வரலாற்றில் ஜார்கண்ட் மாநிலம் அமைவதற்கான முதல் தொடக்கமாகக் கருதப்படும் இந்தக் ‘கர்சவான் படுகொலை’ ஜாலியன் வாலாவை விட மிகப் பெரிய படுகொலை என்று கருதப்படுகிறது.
ஜார்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களில் வாழும் ‘ஹோ’ பழங்குடியினர் “ஹோ, ஹோடோகோ, ஹோரோ” போன்ற வெவ்வேறு பெயர்கள் மூலம் அழைக்கப்படுகிறார்கள். அவர்களது வட்டார மொழியில் ‘ஹோ’ என்றால் ‘மனிதம்’ என்று பொருள்படும்.
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஜார்கண்ட் மாநில மொத்த பழங்குடி மக்கள் தொகையில் 10.7% ஆக உள்ள இம்மக்களில் பெரும்பான்மையானவர்கள் விவசாயிகளாகவும் சுரங்கத் தொழிலாளர்களாகவும் உள்ளனர். மரங்களையே தெய்வங்களாக வழிபடும் இப்பழங்குடி மக்கள் ஜார்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களில் உள்ள காடுகளின் பாதுகாவலர்களாக திகழ்கின்றனர். தங்கள் பழங்குடி இனமும் நிலமும் அந்நியர்களுக்கு அடிமைப்பட்டுவிடக்கூடாது என்ற மன உறுதியை கொண்ட இவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சியை செய்த வரலாறும் உண்டு.
1947ஆம் ஆண்டு முதன்முறையாக உருவான சுதந்திர இந்திய ஒன்றியத்தில் மாநிலங்களின் மறுசீரமைப்பு நடந்து கொண்டிருந்த சமயம். ஒடிசா அரசு சிங்பூம் பகுதியை தனது எல்லையில் சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. ஆனால், இந்தப் பகுதியைச் சேர்ந்த ‘ஹோ’ பழங்குடியினர் சிங்பூம் பகுதியை ஒடிசா மாநிலத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களுக்குத் தனியாக ஜார்க்கண்ட் மாநிலம் அமைக்கக் கோரினர். ஆனால், ஒடிசா அரசு இந்தக் கோரிக்கையைக் கடுமையாக எதிர்த்தது.
டிசம்பர் 25, 1947 அன்று அனைத்து பழங்குடி மக்களின் பிரதிநிதிகளும் கர்சவான் பகுதியில் அமைந்துள்ள ஜோஜோதி ஆற்றின் கரையில் கூடி ஒரு பெரிய கூட்டத்தை நடத்தினர். அதில் சிங்பூம் பகுதியை ஒடிசா மாநிலத்துடன் இணைக்க அனுமதிக்கக் கூடாது என்றும், தனி ஜார்கண்ட் மாநிலமாக உருவாக்க வேண்டும் என்றும் ஒருமனதாக முடிவு செய்தனர். அனைத்து பழங்குடியினர் அமைப்புகள் மற்றும் அவற்றின் தலைவர்களுக்கும் இந்த முடிவு பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஜார்கண்ட் தனி மாநிலமாகும் கோரிக்கை தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த அனைத்து பழங்குடியினரையும் கர்சவானில் உள்ள ‘பஜார் தண்ட்’ எனும் மைதானத்தில் ஒன்றிணைத்து, பல மூத்த பழங்குடித் தலைவர்களும் உரையாற்ற ஏற்பாடும் செய்யப்பட்டது.
சனவரி 1, 1948 அன்று பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் ‘கர்சவான்’ மைதானத்தில் ஒன்றுக்கூடினார்கள். ஆனால், ஒடிசா அரசாங்கம் முன்னாள் இரவவு பலத்த ஆயுதம் தாங்கிய காவல் துறையை அங்கு குவித்து இருந்தது. அரசின் இந்த சூழ்ச்சியை அறிந்திடாத ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் தங்கள் நில உரிமைப் போராட்டத்தைத் தொடங்கியிருந்தனர். அன்று வாராந்திர சந்தையும் அந்த மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் ஆயுதமேந்திய காவல் துறையினர் அங்கு இருந்ததை யாரும் கவனிக்கவில்லை. திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே கூட்டம் துவங்கிய நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் அளிக்காமல் திடீரென்று கூட்டத்தைக் குறிவைத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
சில நிமிடங்களிலேயே எண்ணற்ற பழங்குடியின மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். திடீர் துப்பாக்கிச்சூடு காரணமாக ஏற்பட்ட நெரிசலில், மைதானத்தில் கட்டப்பட்டிருந்த கிணற்றில் குதித்த பலர் கொல்லப்பட்டனர். ஒடிசா அரசாங்கத்தின் அறிவிப்பில் இந்த துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் மட்டுமே கொல்லப்பட்டனர் என்று தெரிவித்திருந்தது. ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று இந்த துப்பாக்கி சூட்டை நேரில் கண்ட மக்கள் தெரிவித்தனர்.
இன்றும் பழங்குடியின மக்கள் ஆண்டுதோறும் சனவரி 1ஆம் தேதி கர்சவான் துப்பாக்கிச்சூடு நினைவிடத்திற்குக் குடும்பத்தினருடன் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இது அவர்களின் துக்க நாள் மட்டுமல்ல, அம்மக்களின் தனி மாநில கோரிக்கையை நினைவில் ஏந்தும் தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. பல கட்ட தொடர் போராட்டங்களுக்குப் பின்னரே ஜார்கண்ட் மாநிலம் தனி மாநிலமாக கடந்த 2000ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இருந்தபோதும், இன்றும் அம்மாநிலத்தின் கனிம வளங்களையும் காடுகளையும் பாதுகாத்திட அங்குள்ள பழங்குடியினர் போராடி வருகின்றனர்.
சுதந்திர இந்தியாவில் ‘கர்சவான் படுகொலை’ முதல் பழங்குடியின நில உரிமை மீட்பு போராட்டம். ஆனால், அது முறையாக பதிவு செய்யப்படாததால் ஒன்றியத்தின் பல்வேறு பழங்குடி சமூகங்கள் இன்றுவரை தங்கள் போராட்டங்களை தொடர்ந்து வருகின்றன!