அரசியலமைப்பை மீறி செயல்படும் ஆளுநரும் நீதிபதியும்

அரசியலமைப்பை மீறி செயல்படும் ஆளுநரும் நீதிபதியும்

ஆர்.எஸ்.எஸ் கருத்தை தங்கள் அலுவலக கருத்தாக எதிரொலிக்கும் அரசியலமைப்பு பாதுகாவலர்கள்.

இந்திய ஒன்றியத்தில் 2014இல் பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து தனது தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ஸின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்களை அனைத்து மட்டங்களிலும் நியமிக்கும் வேலையை செய்தது. இவர்கள் மூலம் பாஜக அல்லாத மாநில முதல்வர்களை வேலை செய்யவிடாமல் தடுப்பதும், பாஜக அல்லது பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சி ஆட்சியிலிருக்கிற மாநிலங்களில் கடைக்கோடி வரைக்கும் இந்துத்துவ பாசிச கருத்துகளை பரப்பும் வேலையையும் செய்து வருகிறது.

அப்படியாக தான் கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் அதிமுக என்ற கட்சியை கபளீகரம் செய்ய ஆளுநர் வித்யாசாகர் ராவ் அரசியலமைப்பை மீறி பல்வேறு காரியங்களில் செயல்பட்டார். அவருக்கு பிறகு வந்த பன்வாரிலால் புரோகித் மாநிலத்தில் பாஜகவின் அடிமை ஆட்சி தான் இருக்கிறது என்ற தைரியத்தில் ராஜ்பவனிலிருந்து தனி ஆட்சியையே நடத்தினார். இப்போது  ஆளுநராக வந்திருக்கிற ஆர்.என்.இரவி அவர்களோ நேரடியாகவே ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்புகள் நடத்தும் விழாக்களில் கலந்துகொண்டு தமிழர்விரோத கருத்துகளை பேசி வருகிறார்.

உதாரணமாக, இரண்டு நாட்களுக்கு முன் சனவரி 08ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (SKASC) குறள் மாலை சங்கம் என்ற அமைப்பு நடத்திய சர்வதேச திருக்குறள் மாநாடு – 2022 இல் தமிழக ஆளுநர் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

இந்த குறள் மாலை சங்கம் நேரடியாகவே திருக்குறளை பாஜக ஆர்.எஸ்.எஸ் கைகளில் ஒப்படைக்கும் வேலை செய்யும் அமைப்பாகும். இந்த மாநாட்டிற்கு ஒன்றிய பிரதமர் மோடி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். மேலும், இந்த குறள் மாலை சங்கத்தின் தலைவர் ரவிக்குமார் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் காஞ்சி சங்கராச்சியார் உள்ளிட்ட பல்வேறு நபர்களுடன் தொடர்பு உடையவர்.

மேலும், இவர் திறக்குறளின் பெயரால் மாத இதழ் ஒன்று நடத்தி அதன்மூலம் மோடிக்கு நேரடியாக் ஓட்டுக்கேட்டவர். இப்படிப்பட்டவர் நடத்திய நிகழ்ச்சி தான் இந்த “திருக்குறள் மாநாடு 2022”.

 

மோடியின் வாழ்த்துச்செய்தி
அண்ணாமலையுடன் அமைப்பின் தலைவர்

 

 

 

இப்படியாக ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் ஆளுநர் கலந்துகொண்டதே வரம்புமீறிய செயல். அதில் பங்கேற்று பேசியவர், “ திருக்குறள் ரிக் வேதத்தில் இருந்து வந்தது. அதிலுள்ள ஆன்மீக கருத்துக்களை அரசியலுக்காக சிலர் மறைக்கிறார்கள். அதனால் தான் அது உலகம் முழுவதும் பரவாமல் இருக்கிறது. திறக்குறள் முழுக்க முழுக்க ஆன்மீக நூல்” என்ற ஆர்.எஸ்.எஸ். குரலாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒலித்துள்ளார்.

“பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்” என்று எல்லோரும் சமம் என்கிற திருக்குறளை ஏற்றத்தாழ்வுகள் உண்டு என்று சொல்லும் வேதங்களோடும், ஆரியத்தோடும் ஒப்பிடுவது எவ்வளவு கேலிக்கூத்தானது?

நீ கடவுளை நம்பு, கடவுளை வணங்கிக்கொண்டே இரு, ஒருநாள் கடவுள் உன்னை காப்பாற்றுவார் என்று உலகிலுள்ள அனைத்து மதங்களும் கற்பித்து வருகின்றன.

“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்”

என்று திருக்குறள் சொல்கிறது.

இப்படிப்பட்ட ஒரு வாழ்வியல் நூலை ஆன்மீக நூல் என்று திரிப்பது கரந்த பால் போன்ற தமிழில் ஆரிய விசத்தை கலக்கும் ஆர்.எஸ்.எஸ். செயலாகும்.  இதை தான் தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்துகொண்டு ஆர்.என்.இரவி செய்து வருகிறார். இது அப்பட்டமான அரசியலமைப்பு சட்டமீறலாகும். ஏற்கனவே, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த குரலான நீட் எதிர்ப்பு மசோதாவின் மீது  நடவடிக்கை எடுத்திடாமல் 7.5 கோடி தமிழர்களையும் ஆளுநர் அவமானப்படுத்தி வருகிறார். இது போதாதென்று, தற்போது தமிழர்களின் சொத்தான திருக்குறளை திருடி ஆரியத்திற்கு பங்கு வைக்கும் வேலையை செய்கிறார்.

மோடிக்கு ஓட்டு கேட்டது.
சங்கராச்சாரியுடன் ரவிக்குமார்.

 

பரந்து விரிந்த வானத்தை போல இருக்கும் தமிழர் மெய்யியலை, ஆரிய பெட்டிக்குள் அடைக்க  நினைக்கும் ஆளுநரை உடனடியாக பதவி விலக வைக்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு இறங்க வேண்டும். இல்லையென்றால் தமிழை காக்க, தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க, தமிழர்களின் வாழ்வியல் நூலை காக்க  தமிழர்கள் மிகப்பெரும்  போராட்டக்களத்திற்கு தாயாராக வேண்டும்.

ஆளுநரின் செயல்பாடுகள் இப்படியிருக்க மறுபுறம் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதியின் வரம்பு மீறி ஆர்.எஸ்.எஸ். கருத்தை வழக்கு விசாரணையின்போது பதிவு செய்துள்ளார்.

“கன்னியாகுமாரி மாவட்டத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறுகிறது. அங்கு இந்துக்கள் சிறுபான்மை ஆக்கப்படுகிறார்கள். இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறுகிறவர்கள் இடஒதுக்கீட்டுக்காக இந்து என்றே பதிந்து சலுகையை அனுபவிக்கிறார்கள். இதனால் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்துக்கள் சிறுபான்மை ஆகியது தெரியவில்லை” என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒரு வழக்கு விசாரணையில் கருத்து தெரிவித்துள்ளதாக 10-01-2022 அன்று நாளிதழில் செய்தி வெளியாகி இருக்கிறது.

இது அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ அமைப்புகளின் பேச்சு. இது போன்ற கருத்துக்களை பரப்புவதன் மூலம் தான் இத்தனை ஆண்டுகளாக சங்பரிவார கும்பல்கள் கன்னியாகுமரியை தங்கள் கட்டுபாட்டின் கீழ் கொண்டுவர முயற்சித்து கொண்டுள்ளன. அப்படிப்பட்ட நிலையில் இந்து பாசிச அமைப்புகளின் இந்த பேச்சுக்கு வலுசேர்க்கும் வகையில் நீதிபதி ஒருவர் பேசுகிறார் என்பது   நீதித்துறையையே அவமதிக்கும் செயலாகும். ஆனால், நீதிபதி சுவாமிநாதன் அவர்கள் வெளிப்படையாகவே இப்படி செயல்படுகிறார். இவர் நீதிபதியாக  பதவியேற்கும் முன் ஆர்.எஸ்.எஸ். பாஜக அமைப்புகளுடன் இயங்கியவர் என்பதற்கு இணையத்தில் காணொளிகள் புகைப்படங்கள் ஏராளம் உள்ளன.

பொதுவாக, இந்துத்துவவாதிகள் தங்கள் பேச்சுகளுக்கு ஆதாரங்கள் வழங்குவதில்லை என்ற போதும் நீதிபதி சுவாமிநாதன் ஒரு அரசியல்சாசன இருக்கையில் அமர்ந்திருப்பதால் அவரிடம் சில கேள்விகளை கேட்பது நம் சனநாயக கடமையாகின்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் “கட்டாய மதமாற்றம்” நிலை குறித்து கருத்து சொல்லும் நீதிபதி அதற்குரிய ஆதாரங்களை முன்வைத்திருக்க வேண்டும். அதற்குரிய அரச புள்ளிவிவரங்கள், ஆவணங்கள் வைக்கப்படாமல் அவரால் முன்வைக்கப்பட்ட கருத்தை அவதூறு அல்லது அதிகார துஷ்பிரயோகமாக ஏன் பார்க்க கூடாது?

அரசியல்சாசனத்தை பாதுகாக்கும் சுதந்திர நிறுவனத்தின் நபராக உள்ள நீதிபதி ஒருவர் இப்படியாக பேசுவது, ஏனையோரும் இப்படியான ஒருசார்பான மதரீதியான கருத்துக்களை முன்வைப்பதற்கு வழிகோலும். அப்படியான சூழலில் இது பல்வேறு குழப்பங்களை, மதமோதல்களை ஏன் உருவாக்கிடாது? என பதில் சொல்ல நீதிபதி கடமைப்பட்டுள்ளார்.

மேலும், மதமாற்றம் நடக்க அடிப்படை காரணமாக இருக்கும் சாதியக் கொடுமையின் பின்னனியில், காலங்காலமாக நிகழ்ந்த அநீதிக்கான இழப்பீடாகவும், சமத்துவத்திற்கும், சமூகநீதிக்குமான திட்டம் என்பது அரசியல்சாசனத்தில் உறுதி செய்யப்பட்ட உரிமையாகிறது. இதை தரம்தாழ்த்தும் விதத்தில் பேசுவதை அரசியல்சாசன விரோதமானதாகவே காண இயலும்.

இந்துத்துவ ஆற்றல்கள் பேசுகின்ற மதவெறி அரசியலுக்கும், பிரிவினைவாத அரசியலுக்கும் துணை போகிற கருத்தாகவே ஒரு நீதிபதியின் கருத்தும் அமைவது கவலைக்குரியது. நீதிபதிகள் வானத்திலிருந்து வந்தவர்கள் அல்ல என்று முன்னாள் நீதிபதிகளின் கருத்தை இச்சமயத்தில் நினைவுபடுத்துவது பொறுத்தமாக இருக்கும்.

எது எப்படியாகினும், இந்துத்துவத்தை அரசியல் களத்திலும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். தனது ஆக்டோபஸ் கரங்களை கொண்டு அதிகார மட்டத்தில் உள்ளவர்களின் துணையோடு  தமிழ்த்தேசிய இனத்தின் இறையாண்மையை அழிக்கும் வேலையை செய்யத்துடிக்கின்றது. இதனை தமிழர்களாக நின்று எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தேவை அனைத்து தமிழருக்கும் இருக்கிறது.

தமிழர் மெய்யியலை காத்திடவும், ஆர்.எஸ்.எஸ். பண்பாட்டு படையெடுப்பை வீழ்த்திடவும் தமிழர்களாய் ஒன்றுபடுவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »