இந்தி திணிப்பு எதிர்ப்புப் போர் ஏன்?

இந்தி திணிப்பு எதிர்ப்புப் போர் ஏன்?

தமிழகம் மீதான இந்தி திணிப்புக்கெதிராக 1938லிருந்து மிகப்பெரிய கிளர்ச்சியை நடத்தி தமிழர்கள் நாம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை காத்து வருகிறோம். ஆனால் இந்திவெறியர்கள் தொடர்ந்து இந்தியை, இந்தி பேசாத மாநிலங்களின் மேல் திணிப்பதை நிறுத்தவில்லை. இதுவரை இந்தி திணிப்புகெதிராக தமிழர்கள் மூன்று கட்ட போரை (1938, 1956, 1965) நடத்தியிருந்தாலும் இன்னும் அது முடிந்துவிடவில்லை என்பதைதான் இந்திய ஒன்றியத்தில் ஆட்சி பொறுப்பிலிருக்கும் பாஜக-வின் செயல்பாடுகள் காட்டுகிறது.

ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் இந்தி பெயரை வைப்பது, இந்தி பேசாத மாநிலங்களுக்கு அனுப்பப்படும் அலுவல்ரீதியான கடிதங்களை இந்தி மொழியில் அனுப்புவது, அனைத்து மாநில உறுப்பினர்களும் பங்குபெறும் ஒன்றிய அரசு சார்பில் நடக்கும் கூட்டங்களில் வேண்டுமென்றே இந்தியில் உரையாற்றுவது, இந்திய ஒன்றியத்தில் இருக்கும் ஏனைய மொழிக்கு நிதி ஒதுக்காமல் அல்லது மிகக்குறைவாக ஒதுக்கிவிட்டு இந்தி மொழிக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குவது என எந்நாளும் அனைத்து மட்டங்களிலும் இந்தியை புகுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.  ஆகவே முன்பை விட இன்று மிகத்தீவிரமாக இந்தி திணிப்பை எதிர்த்து போராடவேண்டிய சூழலில் இருக்கின்றோம்.

ஆனால், இந்தி எனும் ஆரியமாயையில் வீழ்ந்துகிடங்கின்ற சில தமிழர்கள் வேண்டுமென்றே தமிழர்களை குழப்புவதற்காக சில குதர்க்கவாதங்களை முன்வைக்கிறார்கள். அதை விளக்கமளிப்பதே  இந்த கட்டுரையின் நோக்கம்.

குதர்க்கம் 1: இந்தி என்ற ஒரு மொழியை ஏன் இவ்வளவு எதிர்க்கிறீர்கள்?

பதில்: தேவையின் அடிப்படையில் எந்தவொரு நபரும், எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் நமக்கு எந்த சிக்கலுமில்லை.  இந்தி மொழியையும் இன்று தமிழகத்தில் பலர் கற்றுவருகிறார்கள். தமிழகத்தில் இந்தி பிரச்சார சபாக்கள் மூலம் மூலை முடுக்கெல்லாம் இந்தி கற்பிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அங்கெல்லாம் போய் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஆனால் இந்தியை அனைத்து மட்டங்களிலும் கல்வி, வேலைவாய்ப்பு, அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் கட்டாயமாக திணிப்பது என்கிற போதுதான் எதிர்ப்பு வருகிறது. அதுவும் ஓர் மொழி என்ற அடிப்படையில் அல்ல, அந்த மொழிக்கு பின்னால் இருக்கிற பார்ப்பன சதியின் காரணமாகத்தான் எதிர்த்தார்கள்.  அரசியலமைப்பு சட்டம் விதி 351இல் இருப்பதை பார்த்தால் இதன் உண்மையை புரிந்துகொள்ளமுடியும்.

”இந்தி மொழியைப் பரப்புவதை ஊக்குவிப்பதும்; இந்தியக் கூட்டுப் பண்பாட்டின் எல்லாக் கூறுகளும் தம்மை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஊடகமாக அம்மொழியை வளர்ப்பதும்; இந்தி மொழியின் தனித்தன்மைக்கு கேடு ஏற்படாவண்ணம் அதனைச் செயல்படுத்தும் பொருட்டு எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா இந்திய மொழிகளிலிருந்தும் இந்துஸ்தானியிலிருந்தும் வடிவங்கள், பாணிகள், சொற்றொடர்கள் ஆகியவற்றை உட்கிரகித்துக் கொள்வதும்; அதன் சொற்களஞ்சியத்தை வளப்படுத்தும் பொருட்டுத் தேவை ஏற்படும்போதும் விருப்பத்திற்கு ஏற்பவும் முதன்மையாக சமஸ்கிருதத்திலிருந்தும் இரண்டாவதாகப் பிற மொழிகளிலிருந்தும் சொற்களை எடுத்துக் கொள்வதும் இந்திய ஒன்றியத்தின் கடமையாகும்.”

இப்படியாக  இந்திக்குள் பார்ப்பனர்களின் செத்தமொழியான  சமஸ்கிருதத்தை திணித்து, அதன் மூலம் அவர்களின் ஆரியபண்பாட்டிற்கான அடித்தளத்தை போடுவதற்காகத் தான் இந்திய மொழி என்று சொல்லி அனைத்து இந்தி பேசாத மக்கள் மேலும் இந்தியை திணிப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறார்கள். இந்த பார்ப்பனச் சதியை புரிந்ததனால் தான் இந்தி ஆதிக்கத்தை/திணிப்பை நம் முன்னோர்கள் எதிர்த்தார்கள். நாமும் எதிர்க்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

குதர்க்கம் 2: இந்தியாவிற்கென்று ஒரு பொது மொழி அவசியமில்லையா?

பதில்: இந்தியாவே ஒரு நாடு அல்ல; அதாவது ஒரே மொழி; ஒரே பண்பாடு; ஒரே கலாச்சாரம்கொண்ட நாடு அல்ல இந்தியா. பல்வேறு மொழி பேசக்கூடிய, பல்வேறு கலாச்சாரத்தை கொண்ட, பல்வேறு நாடுகளைக்கொண்ட ஒன்றியமாகும். எனவே இங்கு ஒரு பொதுமொழி என்று பேசுவதே தவறு. ஆனால் அதையும் தாண்டி ஒரு பொது மொழிவேண்டும் என்று இந்தி திணிப்பிற்கு நியாயம் கற்பிப்பவர்கள் யாரும் அது ஏன் இந்தியாக மட்டுமே இருக்க வேண்டுமென்று சொல்கிறார்கள் என்று நாம் என்றாவது யோசித்திருப்போமா? இந்தியாவுக்கு பொதுமொழி வேண்டுமென்று சொல்பவர்கள் ஏன் காந்தி முன்மொழிந்த இந்துஸ்தானி என்ற பொதுமொழியை எதிர்த்தார்கள்/புறக்கணித்தார்கள். ஆம், காந்தி இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டுமென்பதற்காக இந்தி  பேசும் இந்துக்கள், உருது பேசும் இஸ்லாமியர்கள் ஆகிய இருசாராருக்கும் பொதுவாக இந்துஸ்தானி என்ற மொழியை பொதுமொழியாக கொண்டு வரவேண்டுமென்று சொன்னார். ஆனால் அன்று காங்கிரஸில் இருந்த பார்ப்பனர்களும், இந்துமதவெறி அமைப்புகளும் இதனை நிராகரித்துவிட்டது. அவர்கள் இந்தியை புகுத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். காரணம் இந்தி மொழியில் சமஸ்கிருதம் இருக்கிறது. சமஸ்கிருதம் பார்ப்பனர்களின் மொழி. ஆகவே இதனையே அவர்கள் முன்மொழிந்து அதில் வெற்றியும் பெற்றார்கள் காந்தியை புறக்கணித்தார்கள். இதுதான் வரலாறு.

அடுத்து உலகத்தில் 54 நாடுகளில் அலுவல் மொழியாக வெவ்வேறு மொழியை பயன்படுத்துகிற நாடுகள் இருக்கிறது. உதாரணத்திற்கு

சிங்கப்பூர் – ஆங்கிலம், சைனீஸ், மலாய், தமிழ்

பிலிப்பைனஸ் – பிலிப்பீனோ, ஆங்கிலம்

பாகிஸ்தான் – உருது, ஆங்கிலம்

இஸ்ரேல் – ஹீப்ரு, அரபிக்

கனடா – பிரஞ்சு,ஆங்கிலம்

பெல்ஜீயம் – டச்சு, பிரெஞ்சு, ஜெர்மன்

இப்படியாக நிறைய நாடுகளைச் சொல்லலாம். அதேபோல பல்வேறு தனிநாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தை எடுத்துக்கொண்டால் அங்கு ஒரு மொழி மட்டுமே வேண்டுமென்று யாரும் இந்திவெறியர்களை போல கேட்பதில்லை. பொதுமொழி என்ற ஒன்று இல்லாத ஐரோப்பிய யூனியன் அழிந்தா போய்விட்டது? ஆக  இந்திவேண்டுமென்று  சொல்பவர்களின் நோக்கம் பொதுமொழி வேண்டுமென்பது அல்ல என்பது இதன் மூலம் நாம் புரிந்துகொள்ளலாம்.

குதர்க்கம் 3: இந்தி வேண்டாம் தமிழ் வேண்டும் என்று சொன்னவர்கள் தங்கள் பிள்ளைகளை மட்டும் ஆங்கிலம், இந்தி படிக்கவைக்கிறார்களே?

பதில்: ஆரம்பத்திலேயே சொன்னதை போல எந்தவொரு மொழியையும் தேவைக்கு ஏற்ப கற்றுக்கொள்வதில் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இல்லை. ஆனால் அரசு இந்தியை திணித்ததைத்தான் எதிர்த்தார்கள். சரி ஆங்கிலம் அந்நியமொழி இந்தி இந்தியாவின் மொழி என்று சொல்பவர்கள் மட்டும் இந்தியில் மட்டுமே படிக்கிறார்களா என்ன? தற்போது மோடி அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களாக இருக்கும் ஜெய்சங்கர் நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத், இராஜ்நாத்சிங், பியூஸ் கோயல், பிரகாஷ் ஜவடேகர்  இவர்களின் குழந்தைகள் என்ன  ’ராஷ்டிரா பாஷா’ பள்ளியிலா அல்லது பல்கலைகழகத்திலா படித்தார்கள்/படிக்கிறார்கள்?

ரயில்வே மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலின் மகள் ராதிகா ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் மகன் அபூர்வா பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

இராணுவ அமைச்சர் இராஜ்நாத் சிங்கின் இளைய மகன் நீரஜ், இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் வங்மாயி பரகலா அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழகத்தில் தனது முதுகலை இதழியல் படித்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மகன் துருவா அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் எம்ஏ படித்தார். மகள் மேதா  டெனிசன் பல்கலைக்கழகத்தில் படித்தார்.

இப்படியாக இந்திக்காக ’சண்டமாருதம்’ செய்யும் இவர்களின் வாரிசுகள் சுவிட்சர்லாந்திலும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் ஆங்கிலத்தில் படித்துவிட்டு இங்குவந்து நாங்கள் வெளிநாட்டு பல்கலைகழகங்களில் ஆங்கிலம் படித்தவர்கள் என்று உயர் பதவிகளிலே அமர்ந்துகொள்கிறார்கள். ஆனால் இந்தி பேசாத நம்மை போன்ற மாநில மக்கள் தலையிலேதான் இந்தியை திணிக்கிறார்கள்.  இவர்கள் பேச்சைகேட்டுக்கொண்டு இந்தி படித்த மக்கள் பனிப்பூரி விற்பவர்களாகவும், கட்டத்தொழில் செய்பவர்களாகவும் இருப்பதை நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

ஆக, நம் முன்னோர்கள் இந்தியை எதிர்த்தது என்பது வெறும் மொழி எதிர்ப்பு என்ற அளவில்  மட்டுமில்லை. அதற்கு பின்னால் நமது தாய் மொழியாம் தமிழை பார்ப்பன பண்பாட்டு ஆதிக்கத்திலிருந்து காக்கும் போரை நடத்தினார்கள். அதனால் தான் தங்கள் உயிரையே அந்த போரில் கொடுத்தார்கள். அன்னைதமிழை காக்கும் அந்த வரலாற்று பணி இன்று நம் கையிலே இருக்கிறது. வாருங்கள் தோழர்களே! அன்னை தமிழை காக்கும் போரில் களம் காண்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »