தமிழக அரசின் ஆதிதிராவிடர்களுக்கான வரவு செலவுத் திட்டம் என்பது பொருளாதார அரசியல் மேதைகள் மட்டுமே மேலிருந்து முடிவு செய்யப்படுவது அல்ல. வெகுஜன மக்களின் முடிவுகள், கோரிக்கைகள், விருப்பங்கள் மற்றும் அவர்களின் சூழல்கள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு இயற்றப்பட வேண்டும். அந்த அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள வரவு செலவு திட்டம் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு சென்றடைவதில்லை. ஆகவே அத்திட்டங்களை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் மற்றும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு விகிதாச்சாரம் எப்படி இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆதிதிராவிட மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான திட்டங்களை, ‘பட்டியலின/பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் பணியாளர்கள் நலச் சங்கங்களின் அகில இந்திய கூட்டமைப்பு (All India Federation of Scheduled Castes, Scheduled Tribes, Backwards, Minorities Employees Welfare Associations) தமிழ்நாடு கிளை தயாரித்து உள்ளது.
இந்த திட்ட அறிக்கை கடந்த 2 மே 2022 திங்கள் கிழமை காலை 11.00 மணியளவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் உள்ளிட்ட தலைமைகள் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்று, திட்ட அறிக்கை குறித்து ஊடகவியலாளர்களிடையே விரிவாக உரையாற்றினர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடைவதற்காக பின்வரும் கோரிக்கைகளை நடைபெறுகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றி தருமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
- ஆதிதிராவிடர் சிறப்பு உட்கூறு திட்டத்தின் மூலமாக ஒதுக்கப்பட்ட நிதியானது இன்றுவரை முழுவதுமாக பயனாளிகளுக்கு சென்றடைவதில்லை மற்றும் அந்த நிதி ஒவ்வொரு வருடமும் செலவழிக்காமல் திருப்பி அனுப்பப் படுகிறது, ஆகையால் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் மாதிரி தமிழகத்திலும் அதற்கான சட்டமும் விதிமுறைகளும் சட்டமன்றத்தில் இயற்றப்பட வேண்டும்.
- மாவட்டத்திலுள்ள பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் குறைகளை கலையும் பொருட்டும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பொருட்டு அரசின் சமூக நலத் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லவும் மாவட்டம் தோறும் பழங்குடியின மற்றும் பட்டியலின மக்களின் வழிகாட்டு மையத்தை மாவட்டம் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்த வேண்டும் அதற்கான நிதி 10 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பல்நோக்கு சமுதாய கூடம் கட்டுவதற்கான நிலமும் கட்டிடம் கட்டுவதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- தமிழகம் முழுவதும் தமிழக அரசால் நடத்தப்படும் இ சேவை மையம் நடத்தும் உரிமையில் 25% வழங்குவதோடு பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- அனைத்து அரசு நிறுவனங்களில் உள்ள சிற்றுண்டி மற்றும் தேநீர் கடைகளை நடத்தும் உரிமையை சுய உதவி குழு (SHG) ஒதுக்க வேண்டும் மேலும் அதில் 25% பட்டியலின மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான சுய உதவி குழுகளுக்கு வழங்க வேண்டும்.
- தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள நகராட்சி / மாநகராட்சிக்கு சொந்தமான இரு சக்கர வாகன நிறுத்தக்கத்தின் உரிமையில் 25% பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- மாவட்டம் தோறும் உள்ள கிராம்/ பேரூராட்சி/நகராட்சி / மாநகராட்சிக்கு சொந்தமான குளம் / ஏரியின் உள்ள மீன் பிடிக்கும் குத்தகை உரிமையில் 25% பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- மாவட்டம் தோறும் நகராட்சி / மாநகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்தில் உள்ள நடைமேடை கடைகளில், கடை நடத்தும் உரிமையில் 25% பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்து அதற்கான நிதியை மானியத்துடன் கூடிய கடன் தொகையை வங்கி மூலம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- மாவட்டம் தோறும் நகராட்சி / மாநகராட்சிக்கு சொந்தமான காய், பூ, இறைச்சி வியாபார நிலையத்தில் உள்ள கடைகளில், கடை நடத்தும் உரிமையில் 25% வழங்குவதோடு பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- மாவட்டம் தோறும் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு குறைந்தது 10 பல்நோக்கு வணிக வளாகம் அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- மாவட்டம் தோறும் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசு நடத்தும் கேபிள் டிவி ஒப்பந்தத்தில் 25 சதவிகிதம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
- பட்டியலின சிறு குறு விவசாயிகளுக்கு நிதிச் சுமையை தணிக்கும் வகையில் வட்டியில்லா பயிர் கடன் ரூபாய் ஒரு இலட்சம் முதல் மூன்று இலட்சம் வரை வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- நீண்ட கால விவசாய கூலியாய் இருக்கும் நிலம் இல்லாத பட்டியலின மற்றும் பழங்குடியின விவசாய ம்க்களுக்கும், பஞ்சமி நிலத்தை இழந்த பட்டியலின மற்றும் பழங்குடியினா் மக்களுக்கும் நிலம் வாங்க ரூபாய். 10 லட்சம் வழங்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்திற்கு 1500 நபர் வீதம் தமிழகம் முழுவதும் செயல் படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- பட்டியலின மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய். 15000 வருடம் தோறும் வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- சென்னை மற்றும் பெருநகரங்களில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் பெண்களுக்கு அவர்கள் சுயதொழில் செய்யும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு சிறுதொழில் தொடங்குவதற்கு நிதியுதவி அளிக்கவேண்டும், மற்றும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையம் அமைக்கப்பட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- சிப்காட், டிட்கோ நிறுவனங்களின் மூலமாக செயல்படுத்தி வரும் தொழிற்பேட்டையில் 25% இடம் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
- பட்டியலின பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் 100 படுக்கைக் கொண்ட அரசு மருத்துவமனைகள் துணைத் திட்ட நிதிநிலிருந்து கட்டித் தரவேண்டும்
- TASMAK BAR நடத்தும் உரிமையில் 25% பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு மாவட்டம்தோறும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- தமிழ் நாடு சுற்றுலா மற்றும் பொருட்காட்சி மூலம் மாநிலம் முழுவதும் நடைபெறும் பொருட்காட்சிகளில் கடை நடத்தும் உரிமையில் 25% பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- கால் நடை பண்ணை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்கு 500 நபர் வீதம் 50% மானியத்துடன் ரூபாய் பத்து லட்சம் ஓவ்வரு தனி நபருக்கும் வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- பட்டியலின பழங்குடியின துணை திட்ட நிதி மூலம் பட்டியலின பழங்குடியின மக்களுக்கு ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டங்களுக்கு செல்லும் பத்து பேருந்து வழித்தடங்களை மாவட்ட தோறும் வழங்கி அதற்கான நிதியை சிறப்பு உட்கூறு திட்டம் மூலம் மானியத்துடன் கூடிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- 2006ஆம் ஆண்டு வனப் சட்டத்தின் படி பழங்குடியினருக்கு ஐந்து ஏக்கர் நிலம் வரை விவசாயம் செய்வதற்கு உறுதி செய்து நிறைவேற்றப்பட வேண்டும்.
- வனப் பயிர்கள், தானியங்கள் பயிரிடும் பழங்குடியினரின் நிதிச் சுமையை தணிக்கும் வகையில் வட்டியில்லா பயிர் கடன் ரூபாய் ஒரு இலட்சம் முதல் மூன்று இலட்சம் வரை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.
- தமிழக அரசு கடந்த 1980 முதல் சிறப்பு உட்கூறு திட்டத்தின் வழியாக பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு வருடந்தோறும் சுமார் 10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. ஆனாலும் 30 வருடங்களுக்குப் பிறகும் பட்டியலின மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவில்லை.அப்படி என்றால் இந்த நிதியானது முறையாக பட்டியலின மக்களுக்கு சென்றடையவில்லையோ அல்லது வேறு பொது திட்டங்களுக்கு மடை மாற்றம் செய்யப்படுகின்றன என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது, ஆகையால் தமிழக அரசு கடந்த 30 ஆண்டுகளாக வழங்கப்பட்ட துணை திட்டத்தின் பெயரில் வழங்கப்பட்ட நிதிக்கான வெள்ளை அறிக்கையை சட்டமன்றத்தில் அளிக்க வேண்டும்..
- ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் ட்ரெமென்கீர் என்பவரால் அளிக்கப்பட்ட பஞ்சமி நிலம் அன்றைய சென்னை மாகாணத்தில் மட்டும் பறையர் இன மக்களுக்கு 12 ½ லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இலவசமாக அரசால் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான வழிமுறைகளை பரிந்துரைத்து அறிக்கை சமர்ப்பிக்கவும், பஞ்சமி நிலங்களை மீண்டும் பட்டியல் சமூகத்தினர்களுகு திருப்பி வழங்க, நில நிர்வாக ஆணையர் தலைமையில் மாநில அளவிலான குழுவை 13 அக்டோபர் 2015 அன்று அமைத்துள்ளது ஆனால் இன்று வரை பட்டியலின மக்களுக்கு பஞ்சமி நிலம் சிறிதளவும் கிடைக்கவில்லை ஆகையால் தமிழக அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கை மூலம் பஞ்சமி நிலத்தை மீட்டு தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழக அரசு தன்னுடைய நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுடுகாடு இடுகாடு அமைப்பதற்காக ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது, ஆனால் இன்று வரை இறந்தவர்களை அடக்கம் செய்கின்றபோது தமிழகம் முழுவதும் சாதி கலவரங்கள் உருவாகின்றன, ஆகையால் தமிழக அரசு போர்கால நடவடிக்கையின் மூலம் சுடுகாடு இடுகாடு இல்லாத பகுதிகளை கண்டறிந்து மாவட்டம்தோறும் 500 கிராமங்களுக்கு சுடுகாடு, இது காடுகளை அமைத்து பாதை அமைத்து தர வேண்டும்.
- சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தொகை ரூபாய்.25 லட்சம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
- தமிழக அரசு குடிசை மாற்று வாரியம் மூலமாக கட்டிக்கொடுக்கும் வீடுகளுக்கு குறைந்தது 5 இல் இருந்து 9 லட்சம் வரை நிதி வழங்கப்பட்டு வருகின்றது, ஆனால் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கனா வீடு கட்டும் தொகையை ரூபாய் 2 லட்சத்தி 10 ஆயிரம் ரூபாயாக இருந்துவருகிறது இத்தொகையை ரூபாய் 5 லட்சமாய் உயர்த்தி வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கான தனி கூட்டுறவு சங்கத்தினை தமிழகம் முழுவதும் உருவாக்கி அதில் பெண்களுக்கான தள்ளுபடி உடன்கூடிய பயிர் கடன், நகை கடன், விவசாய கடன், மகளிர் குழு கடன் வழங்குவதற்கான சட்டத்தை இயற்றி அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- பட்டியலினத்தவர் தொழில் தொடங்குவதற்கு எவ்வித தடையுமின்றி தொழில் தொடங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் வரை 30 சதவீத மானியத்துடன் கூடிய தடையில்லாத வங்கி கடன் வழங்கப்படவேண்டும். அதற்கான நிதி 100 கோடி ஒதுக்க வேண்டும்.
- ஆவின் பாலகம் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விற்க்கும் விற்பனையகத்தில் 25% பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு துணைத் திட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- இந்து அற நலத்துறையின் கீழ் உள்ள கோவில் வணிக வளாகங்களில் 25% பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான தனி கடைகளை கொடுக்க வேண்டும். மேலும் அங்கு பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தனி சத்திரம்/மண்டபம் அமைத்து தர நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தனியார் துறைகளிலும் பொது துறையில் உள்ளது போன்ற இட ஒதுக்கீடின் அடிப்படையில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க சட்டத்தை இயற்றிட வேண்டும்.
- மாநகராட்சியில் சேரியில் வாழும் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்ககூடிய குறுகிய கால (6 முதல் 12 மாதம்) தொழிற்கல்வியை குறைந்தது 3000 நபர்களுக்கு இலவசமாய் ஆண்டு தோறும் அவர்கள் குடியிருப்பு அருகிலேயே வழங்க நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்
- பட்டியலின மற்றும் பழங்குடியின பட்டதாரி மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மாவட்டந்தோறும் போட்டி தேர்வுக்கான (TNPSC Group-I, Group-II , Group-IV, Banking, Insurance) பயிற்சி மையங்கள் (Study centre) அமைத்து மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பை பெறுவதற்கு புகழ்பெற்ற நிறுவனங்களை கொண்டு பயிற்சி அளிக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- முதல் தலைமுறை உயர்கல்வி படிக்க விரும்பும் பட்டியலின/ பழங்குடியின மாணவர்களுக்கு அரசு மற்றும் சுயநிதி பிரிவுகளில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுரிகளில், தொழிற்கல்வி நிறுவனங்களில் மற்றும் திறந்த வெளி பல்கலைக்கழகங்களில் எந்த ஒரு கட்டணமில்லாத இலவச கல்வியை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.
- பட்டப்படிப்பு படித்து வேலை வாய்ப்பின்றி இருக்கும் பட்டியலின மற்றும் பழங்குடியின நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு திறன் வளர்ப்பு மேம்பாட்டு பயிற்சி அளிப்பதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கான தொழிற் கூடத்தை தொடங்க ரூபாய் 10 லட்சத்தை 50 சதவிகித மானியத்துடன் கூடிய வங்கி கடனை ஏற்படுத்தி தரவேண்டும். இது மாவட்டம் தோறும் குறைந்தது 1000 நபர் வீதம் வருடம் தோறும் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.
- உடனடியாக வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய குறுகிய கால (6 முதல் 12 மாதம்) தொழிற்கல்வியை மாவட்டத்திற்கு குறைந்தது 1000 பட்டியலின மற்றும் பழங்குடியின நபர்களுக்கு இலவசமாய் அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசு ஐடிஐ மூலமாக ஆண்டு தோறும் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்..
- சட்டக் கல்லூரியில் பயின்று முடித்து பார் கவுன்சிலில் பதிவு செய்த பட்டியல் சாதி வழக்கறிஞர்களுக்கு, வழக்கறிஞர் தொழிலில் ஆரம்பிப்பதற்காக கொடுக்கப்படும் ரூபாய் 50 ஆயிரத்தை உயர்த்தி ரூபாய் ஐந்து இலட்சமாக கொடுக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- பழங்குடியின மாணவர்களுக்கு தற்போது இயங்கி வரும் அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளிகளை மேம்படுத்தி தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ளது போன்ற உண்டு உறைவிட பள்ளிகள் (Residential schools) மாவட்டந்தோறும் சர்வதேச தரத்துடன் பழங்குடி மக்கள் வசிக்கும் மாவட்டங்களில் கட்டித் தருவதுடன் முறையாக பராமரிப்பதுடன். முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி மற்றும் பொன்னேரி வட்டத்தில் அமைக்கப்பட நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.
- பட்டியலின ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்வி (MBBS) பயில நிர்வாக (Management Quota) ஒதுக்கீட்டில் 100 பட்டியல் சாதி மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் அதற்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தி மாணவர்களை மருத்துவம் படிக்க வைக்க நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.