மக்களின் வளர்ச்சிக்காக விலையில்லா பொருட்களை, சேவைகளை வழங்கும் சமூக நலத்திட்டங்களை இலவசங்கள் என்றும், இலவசங்களால் இந்திய ஒன்றியத்தின் வளர்ச்சி தடைபடுவதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியது கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மக்களுக்கான அரசாங்கம் என்பது நாட்டின் வளர்ச்சியை மக்கள் நலத்திட்டங்களின் லாப நட்டக் கணக்குகளால் தீர்மானிக்காது. அந்தக் கணக்கின்படியே பார்த்தாலும் ஏழை, எளிய மக்களால் ஒன்றிய அரசு அடையும் அதிக அளவிலான லாபத்தை பெருநிறுவனங்களுக்கு வரிச் சலுகையாகவும், கடன் தள்ளுபடியாகவும் கொடுத்து ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது மோடியின் ஒன்றிய அரசாங்கமே என்பதை தரவுகளின் மூலமே அறிந்து கொள்ளலாம்.
இந்திய ஒன்றியத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில், ஒரு நாளைக்கு 175 ரூபாய் வருவாயை 50 கோடி மக்கள் பெறுவதை உறுதி செய்திருப்பதாக பெருமையுடன் கூறுகிறார். அப்படியென்றால் ஏறக்குறைய மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி மக்களின் மாத வருமானம் ரூ.6,000-க்கும் குறைவானது. இந்திய நலத்துறை அமைச்சகம் கணக்கெடுப்பு நடத்த உருவாக்கிய e-shram என்ற இணைய மின் தகவலின்படி, பதிவு செய்யப்பட்ட 28 கோடி முறைசாரா தொழிலாளர்களின் வருவாய் மாதத்திற்கு ரூ.10,000 க்கும் குறைவானதாக இருக்கிறது.
மாத வருமானம் 10,000 கூட பெற முடியாத சுமார் 50 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களிடமிருந்து தான், இவர்களின் அடிப்படைத் தேவையான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களிலிருந்து பற்பசை, சோப்பு, பேனா, பென்சில் போன்ற சாதாரண பொருட்கள் வரை அனைத்திலும் வரி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் ரூ.2000-க்கு பொருட்கள் வாங்கினாலே அதில் சுமார் 200 ரூபாய் அளவுக்கு மறைமுகமாக வரியைப் பறித்துக் கொள்கிறார்கள். இவ்வாறு குறைந்த வருமானமே கிடைத்தாலும் நாட்டின் வளர்ச்சிக்கு கடுமையான உழைப்பாலும், அரசுக்கு அளிக்கின்ற மறைமுக வரிகளாலும் இந்திய ஒன்றியத்தின் பொருளாதாரத்திற்கு அதிகமான பங்களிப்பு செய்பவர்களாக சாமானிய மக்களே இருக்கிறார்கள். இவர்களுக்கு இலவசமாக அல்லது மானிய விலையில் கொடுக்கும் அரிசி முதலான சில பொருட்கள் மூலமாகவா வளர்ச்சி தடையாகி விடும்?
இந்திய ஒன்றியத்தின் வளர்ச்சி தடைபடுவதற்கு காரணம் மக்களுக்கு சில ஆயிரம் கோடிகளில் வழங்கப்படும் இலவசங்களா அல்லது பல லட்சம் கோடிகளை வராக்கடனாக தள்ளுபடி செய்ததா? மோடி ஆட்சி பொறுப்பேற்ற 2014-17 வரையிலான மூன்று ஆண்டுகளில் பெருநிறுவனங்கள் வங்கிகளிலிருந்து வாங்கிய கடன்கள் வராக்கடன்களாக 2.5 லட்சம் கோடியும், 2017-22 வரையிலான 5 ஆண்டுகளில் 9.9 லட்சம் கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. ஒன்றிய நிதித்துறை இணையமைச்சரே எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் அளித்த தகவல்கள் இவை. ஆக, கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 12 லட்சம் கோடியை வராக்கடனான தள்ளுபடி செய்திருக்கிறார்கள்.
மேலும் முதலீடுகள் பெருகும் என்று பெருநிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வரிகளை குறைத்து இப்போது 15% வரையிலும் வரிச்சலுகை அளித்திருக்கிறார்கள். அதனால் ஒரு வருடத்தில் அரசிற்கு ஏற்பட்ட இழப்பு மட்டும் 1.45 லட்சம் கோடி. இவ்வாறு கடன் தள்ளுபடி, வரிச் சலுகை என அனுபவித்தது குஜராத்தி பனியா, மார்வாடிகளால் நடத்தப்படும் பெருநிறுவனங்களே. இந்தியாவின் 136 கோடி மக்களில் வெறும் 5,000-க்கும் குறைவாகவே இருக்கும் பெருநிறுவனங்களால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு கிட்டத்தட்ட 14 லட்சம் கோடி. ஆனால் மாத வருமானம் ரூ.10,000 கூட ஈட்ட முடியாத நிலையில் இருக்கும் சாமானிய மக்களுக்கு வழங்கப்பட்ட சொற்பத் தொகைகளான சில ஆயிரம் கோடிகளில் வளர்ச்சி தடைபட்டு விட்டதாக மோடி சொல்கிறார்.
தமிழ்நாடு உட்பட வளர்ந்த மாநிலங்களான ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற தென் மாநிலங்களில் இலவசங்களும், மானியங்களும் அதிகமாக எளிய மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு காரணம் நீதிக்கட்சி காலத்தில் தொடங்கிய பாரம்பரியத்தின் நீட்சியாகவே இருக்க முடியும். ஆதி திராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி, தங்கிப் படிக்க இலவச விடுதிகள், கல்வி உதவித் தொகை, இலவச மதிய உணவு என அனைத்தும் இலவசமாகக் கொடுத்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை நீதிக்கட்சியினர் வித்திட்டார்கள். அவரைத் தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்த காமராசர் முதற்கொண்டு இன்றைய திமுக ஆட்சி வரை அமைந்த ஒவ்வொரு அரசும் மக்கள் நலத் திட்டங்களாக இலவசங்களைத் தொடர்ந்தார்கள்.
அன்றைய இந்திய ஒன்றிய அரசு கைவிரித்த நிலையிலும், அதிகார மட்டங்கள் இதனை செயல்படுத்த முடியாது என தீவிரமாக மறுத்த போதிலும் காமராசர் பள்ளிக் கூடங்களில் கொண்டு வந்த இலவச மதிய உணவுத் திட்டத்தின் மூலமாக மாணவர்கள் 16 லட்சத்திலிருந்து உயர்ந்து கிட்டத்தட்ட 48 லட்சம் மாணவர்களுக்கு மேல் பள்ளிக்கூடங்களில் பயிலும் நிலை உருவானது. அன்றிலிருந்து மாணவர்களுக்கான தமிழ்நாடு அரசின் இலவச மதிய உணவுத் திட்டம் இன்று வரை தொடர்கிறது. அதனால் எண்ணற்றவர்கள் கல்வி பெற்றார்கள். இதன் காரணமாக தமிழ்நாடும் வளர்ச்சி பெற்றது. இலவச மதிய உணவு மட்டுமல்ல இலவச சீருடை, இலவச கல்வி உதவித் தொகை, இலவச பேருந்து அட்டை, இலவச மிதிவண்டி, இலவச மடிக்கணிணி வரை ஏழை, எளிய மாணவர்களும் கல்வி பெறும் வழிகளை விரிவுப்படுத்தியிருக்கிறது தமிழ்நாடு.
சாமானிய மக்களுக்கு நியாய விலைக் கடைகளில் மிகவும் குறைந்த விலையில் அரிசி வழங்கப்பட்டது. இப்போது 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் உணவுப் பற்றாக்குறை தீர்ந்தது. குடும்பத்தில் பசியின்மை உறுதி செய்யப்பட்டது. பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடங்களில் மதிய உணவு உறுதி செய்யப்பட்டது. இதனால் பள்ளிகளில் சேரும் பிள்ளைகளின் எண்ணிக்கையும் அதிகமானது. இன்று இந்தியாவிலேயே உயர்கல்வியான கல்லூரி செல்லும் மாணவர்கள் விகிதம் 50%-க்கு மேல் எட்டியிருக்கிறது தமிழ்நாடு. இந்தியாவில் அதன் விகிதம் இன்றும் 25%-ஐ தாண்டவில்லை.
பெண்கள் கல்வி கற்பதை ஊக்கப்படுத்த கல்வி உதவித் தொகை, கல்லூரிக்கு செல்லும் பெண்களுக்கு உதவித் தொகை, பள்ளியிறுதி வரை முடிப்பவர்களுக்கு உதவித் தொகை என தமிழ்நாடு அரசு பல வகைகளில் நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக பெண் கல்வி வளர்ந்தது. பெண்கள் வீட்டைக் கடந்து வெளியே வேலைக்கு செல்லும் திறமையும் பெற்றார்கள். இந்திய தொழிலாளர் துறையின் (PLFS) 2018-19 கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் தான் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் 58% பெண்கள் பணிக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். இது இந்தியாவின் மொத்த அளவை விட 22% அதிகம். தொழிலகங்களில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை 7 லட்சமாக இருக்கிறது. இது இரண்டாவது இடத்தில் உள்ள கர்நாடகாவை விட மூன்று மடங்கு அதிகம்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு வழங்கப்பட்ட இலவச மிக்சி, கிரைண்டர், மானிய விலை வாகனம் முதலானவை அவர்களை வீட்டு வேலைகளின் சுமைகளில் இருந்து விடுவித்தது. இந்த விடுதலை அவர்களை குடும்பத்தின் பொருளாதாரத் தேவைக்காக வெளியே வேலைக்கு செல்ல வைத்தது. வீட்டின் பொருளாதாரத் தேவையும் பூர்த்தி செய்து தமிழ்நாட்டின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ஒரு மெளனமான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் பெண்கள்.
தமிழ்நாட்டின் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் அவர்கள் ஒரு விவாத நிகழ்ச்சியில் ஒன்றிய அரசிடம் நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் திரும்ப 35 பைசா தான் கொடுக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டை வைக்கிறார். இதனை ஒன்றிய அரசு மறுக்கவுமில்லை. இது தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசால் இழைக்கப்படும் மிகப் பெரிய அநீதி. மக்கள் தொகைக்கேற்ப வருவாய் பிரித்தளிக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் அநீதிக் கொள்கையினால் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டைப் பின்பற்றி நடந்த நமக்கு இந்த தண்டனை.
தனி நபர் வருமானத்தில் தேசிய சராசரியை விட இரு மடங்கு அதிகமான மாநிலம் தமிழ்நாடு. அப்படியென்றால் ஒருவர் மாத வருமானம் 60 ஆயிரம் வாங்கினால் கூட வருடத்திற்கு ரூ.7200 வரை கட்ட வேண்டும். மாதம் 10,000 கூட சம்பளம் வாங்காதவர்களிடமிருந்தும் அவர்கள் வாங்குகின்ற குடும்பத்திற்கு தேவையான அடிப்படைப் பொருட்கள் மூலமாக மறைமுக வரி பிடுங்கப்படுகிறது. மாதம் 60,000-க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களிடமிருந்தும் சம்பளத்திலிருந்து நேரடி வரி பிடுங்கப்படுகிறது. இவ்வாறு விளிம்பு நிலை மக்கள், நடுத்தர மக்களிடமிருந்து பிடுங்கப்படும் பணத்தை எடுத்து பெரு நிறுவனங்களுக்கு கடனாக கொடுக்கிறார்கள். பெருநிறுவனங்கள் அந்தக் கடனைத் திருப்பித் தராமல் ஓடி விடுகிறார்கள். அரசு அதனை வராக்கடனாக அறிவித்து 14 லட்சம் கோடி தள்ளுபடியை சர்வ சாதாரணமாக தள்ளுபடி செய்து விடுகிறது.
மாநில அரசுகள் மக்களின் தேவையுணர்ந்து தான் இலவசங்களை அறிவிக்கிறார்கள். அரசு முன்னெடுக்கும் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் ஒரு வகையே இலவசங்கள். ஆனால் சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு கொள்கையை ஏதோ வறுமை ஒழிப்பு திட்டம் போல சூழ்ச்சி செய்து பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதிப் பிரிவினருக்கு (EWS) இட ஒதுக்கீடை கொடுத்தது ஒன்றிய அரசு. ஆனால் உண்மையிலேயே வறுமை ஒழிப்புத் திட்டமான இலவசத் திட்டங்களை ஒழித்து விட திட்டம் தீட்டுகிறது. அடிவயிறு காய்ந்து கிடக்கும் மனிதனால் வேலை செய்ய முடியாது.
சாமானிய மக்களின் பொருளாதாரப் பங்களிப்பினால் தான் ஒன்றியத்தின் நிர்வாகமே நடக்கிறது. உச்சநீதி மன்றத்திற்கு மாநில அரசு வடிவமைக்கும் கொள்கைகளில் தலையிடும் உரிமை சட்டப்படி கிடையாது. ஒரு ரூபாய்க்கு 65 பைசாக்களை நம்மிடமிருந்து சுருட்டிக் கொள்ளும் ஒன்றிய அரசிற்கு மாநில அரசின் இலவச திட்டங்கள் பற்றி பேச அருகதையே கிடையாது. பொருளாதாரத்தைத் தாங்கும் முதுகெலும்புகளுக்கு அளிக்கும் சிறு ஒத்தடம் தான் இலவசம்.