நிதியை இழந்த தென்னிந்தியா நாடாளுமன்ற தொகுதிகளையும் இழக்கிறது!

தலையங்கம் – ஆகஸ்ட் 29, 2022

மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையரை செய்வது இந்திய தேர்தல் முறையின் நடவடிக்கைகளில் ஓன்று. மக்கட்தொகை கணக்கெடுப்பினை வைத்தே நிதிப் பங்கீடு நடக்கும். நிதி ஆணையம் மக்கள் தொகை அடிப்படையை கொண்டு மாநிலங்களுக்கான ஒன்றிய நிதியையும் பிரித்தளிக்கும். மோடி அரசு பொறுப்பெற்ற பின் மாநிலங்களுக்கான நிதிப் பங்கீடு குறைந்தது. மாநில அந்தஸ்த்தை காசுமீர் இழந்தது மிக முக்கிய காரணியாகும்.

இப்பங்கீட்டிற்கு 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையாக இருந்து வருகிறது. மக்கள் தொகை கட்டுப்பாடு திடடம் 1970-ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டது. இதனை ஒவ்வொரு மாநிலமும் பலவேறு அளவுகளில் நடைமுறைப்படுத்தின. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் தீவிரமாக கட்டுப்பாடு அமுல்படுத்தியதால் மக்கள் தொகை விகிதம் வெகுவாக குறைந்தது. அதே சமயம், வட மாநிலங்கள் குறிப்பாக இந்தி மொழி பேசும் மாநிலங்கள் இத்திட்டத்தை முறையாக அமுல்படுத்தாததால் மக்கள் தொகை விகிதம் குறையாமல் அதிகரித்தது.

ஆகவே, புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நிதி பங்கீடு செய்தால் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி வரும் என்பதால் 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நிதி பங்கீடு செய்வதை நிதி ஆணையம் அளவீடாக கொண்டது. இதனடிப்படையில் 2014 வரையான நிதி ஆணையப் பங்கீடு நடந்தது.

இந்நிலையில், மோடி அரசு 1971க்கு பதிலாக 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாகள் கொள்ளவேண்டும் என்றது. இம்முடிவை 15-வது நிதி ஆணையமும் ஏற்றது. இதனால் தென்னிந்திய மாநிலங்களுக்கான நிதி பங்கீடு வெகுவாக குறைந்தது. குறிப்பாக தமிழ்நாடு 22,497 கோடியை ஒன்றிய பங்கீட்டில் இழந்தது. ஆந்திரம் 24,340 கோடி ரூபாயை இழந்தது. அதே சமயம் உத்திரபிரேதசம் 35,167 கோடி ரூபாய், பீகார் 32,044 கோடி ரூபாய், ராஜஸ்தான் 25,468 கோடி ரூபாயை கூடுதலாக ஒன்றிய அரசின் பங்கீட்டில் பெருகின்றன.

இவ்வாறு மக்கள் தொகைதொகையை கட்டுப்படுத்தாத மாநிலங்கள் ஆதாயம் அடைவதும், ஒன்றிய அரசின் திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்திய தென்னிந்திய மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதையும் கண்டித்து ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கேரள மாநில நிதியமைச்சர்கள் கூட்டமும் நடந்தது. இக்கூட்டத்தில் அன்றைய அதிமுக, தெலுங்கானா அரசும் பங்கேற்கவில்லை. இப்படியாக மாநிலங்களுக்கான நிதியை சூழ்ச்சியின் மூலமாக ஆரிய ஒன்றிய அரசு தட்டிப்பறித்தது.

தற்போது, இதே 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அளவீட்டினை கணக்கில் கொண்டு நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்யும் முறைக்கு மோடி செல்கிறது. இப்போது வரையில் நாடாளுமன்றத்தில் தென்னிந்திய மாநிலங்கள் 129 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது. அதேசமயம் இந்தி பேசும் மாநிலங்கள் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்புகிறது.

இந்தியாவின் மக்கள் தொகையில் தென்னிந்திய மக்கள் தொகை என்பது 1951-ல் 26.2 சதமாக இருந்தது. இது 2022-ல் 19.8 சதமாக குறைந்திருக்கிறது. இதற்கு அடிப்படை காரணியாக இருப்பது 1970-களில் கொண்டுவரப்பட்ட மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டத்தை தென்னிந்திய மாநிலங்கள் முறையாக கடைப்பிடித்ததே ஆகும். அதே சமயம் மக்கள்தொகையை கட்டுப்படுத்தாத இந்தி பேசும் மாநிலங்களின் மக்கள் தொகை இந்திய அளவில் 39% அளவிலிருந்து தற்போது 43% அதிகரித்திருக்கிறது. இதே நிலை தொடருமெனில் அடுத்த 20 ஆண்டுகளில் தென்னிந்தியாவின் மக்கள்தொகை இந்திய அளவில் வெறும் 12-15 சதமாக குறைந்து போகும். அதாவது இந்தியாவில் சிறுபான்மை சமூகமாக மாற்றப்படுவார்கள்.

இப்படியான கணக்கீட்டை மோடி அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு அளவீடை கைகழுவி 2011 ஆண்டு மற்றும் அதற்கு பின்பான மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்கிறது. இந்தியாவின் தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாகிவிட்டதை ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது நடக்கும் ஆட்சி கவிழ்ப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம். இப்படியான தேர்தல் ஆணையம் தொகுதி மறுபங்கீட்டை செய்யும் போது தென்னிந்தியா கிட்டதட்ட 33 தொகுதிகளை இழக்க நேரிடும் அபாயம் உள்ளதை தெலுங்கான ராஸ்ட்ரிய சமிதியின் தலைவர் கே.டி.ராமாராவ் சுட்டிக்காட்டுகிறார். இதே போன்றதொரு எச்சரிக்கையை காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் 2019-ல் பேசியிருந்தார்.

இப்படியாக இந்திய நாடாளுமன்றத்தில் தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம் நான்கில் ஒருவீதம் அல்லது கிட்டதட்ட 25 சதம் குறைக்கப்படுமானால் தென்னிந்தியாவின் அரசியல் அதிகாரம் கேள்விகுறியாகும். ஆனால் அதே சமயம் இந்தியாவின் நாடாளுமன்ற தொகுதிகள் மக்கள்தொகை அதிகரிப்பின் காரணமாக அதிகரிக்கும். அப்படியான அதிகரிப்பில் வட மாநிலங்கள் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்கள் பெருத்த லாபமடையும். இந்தியாவின் ஆகப்பெரும்பான்மையை இந்தி பேசும் மாநிலங்கள் பெற்றுவிடும். இந்துதேசம் மட்டுமல்லாமல், ஆரியதேசமாக இந்தியா முழுமையாக மாற்றப்படும் என்பதில் எவ்வித அய்யமுமில்லை. இந்த ஆபத்தினை எவ்வாறு தென்னிந்திய மாநிலக்கட்சிகள் எதிர்கொள்ளப்போகின்றன என்பதே நம்முன் உள்ள கேள்வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »