Welcome to மே 17 இயக்கக் குரல்   Click to listen highlighted text! Welcome to மே 17 இயக்கக் குரல்

சீன எல்லையில் அமெரிக்க-இந்தியா ராணுவப்பயிற்சியும், தமிழ்நாடும்!

இந்தியா அமெரிக்க ராணுவத்தினரின் ‘யுத் அபியாஸ்’ எனப்படும் கூட்டு பயிற்சி இவ்வருடம் இந்தியா சீனா எல்லையில் நடக்க இருக்கிறது. வரவிருக்கும் அக்டோபர் மாதத்தில் நடக்க இருக்கும் இந்த இராணுவப்பயிற்சிக்கு கடுமையான எதிர்ப்பை சீனா தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து சீனாவின் பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் திரு.டன் கெஃபாய் “இந்தியா சீனாவிற்கு இடையேயான எல்லைப் பிரச்சனையில் மூன்றாம் நாடு எந்த ஒரு வழிமுறையிலும் தலையிடுவதை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம்” என்று சொல்லி இருக்கிறார். 25 ஆகஸ்டு 2022-இல் வெளியிடப்பட்ட இந்த செய்திக்குறிப்பில் இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான எல்லைப்புற ஒப்பந்தங்களில் இருக்கும் விதிமுறைகளை மீறி இந்த இராணுவப்பயிற்சி நடக்கிறது என்றும் சீனா குற்றம்சாட்டி இருக்கிறது.

சீனா-தைவான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் போர்ச்சூழலும், அதில் தலையீடு செய்துவரும் அமெரிக்காவின் காலகட்டத்தில் இந்த பயிற்சி முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியப்பெருங்கடலில் உளவுபார்க்கும் வசதிகொண்ட சீனாவின் யுவான் வாங்-5 எனும் அதிநவீன கப்பலை இலங்கைத் தீவின் தெற்கிலுள்ள துறைமுகமான அம்பாந்தோட்டையில் இம்மாத இரண்டாம் வாரத்தில் நிறுத்த இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இது இப்பகுதியில் பதட்டத்தை அதிகரிக்கவே செய்தது. எனினும், இந்தியாவின் எதிர்ப்பை மீறி இலங்கை சீனாவின் கப்பலுக்கு அனுமதி கொடுத்தது.

தைவான் மீதான தனது பிடியை இறுக்குவதற்கு சீனா முயன்றுகொண்டிருக்கும் சூழலில் அமெரிக்கா தொடர்ந்து தைவானை ஆதரித்து நிலைப்பாடு எடுத்தது பதட்டத்தைக் கூட்டியது. சீனாவின் போர் விமானப் பயிற்சிகள், போர்க்கப்பல் பயிற்சிகள் தைவானைச் சுற்றிலும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. மேலும் அமெரிக்க பிரதிநிதிகள் தைவானுக்கு செல்லக்கூடாது எனும் சீனாவின் எச்சரிக்கையை மீறி அமெரிக்க பிரதிநிதிகள் தைவான் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

ஆசியா, ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களின் எல்லைகளில் போர்ச்சூழல் நிலவி வருவது கவனிக்கக்கூடியது. யுக்ரேனுடனான ரசியாவின் போர் மிகவும் தீவிர நிலையை எட்டியுள்ளது. ரசியாவின் அதிபர் புதினுடைய நெருங்கிய அரசியல் ஆலோசகர், அறிஞர் என அறியப்படும் அலெக்சாண்டர் டுகின் வாகனத்திற்கு வைக்கப்பட்ட வெடிகுண்டினால் அவருடைய மகளும், ரசியாவின் செய்தி வாசிப்பாளருமாகிய டாரியா டுகினா கொல்லப்பட்டது இப்போரின் தனிநபர் மீதான கொலை தாக்குதல் எனும் நிலையை அடைந்திருக்கிறது. இப்போரில் ரசியாவிற்கு ஆதரவாக சீனா நிலைப்பாடு எடுத்துள்ளது. இந்நிலையில் யுக்ரேனை ரசியாவிற்கு எதிராக திருப்பி போரை உருவாக்கியது போன்றதொரு சூழல் தென்சீனக்கடல் பகுதியிலும் தைவானை வைத்து அமெரிக்கா உருவாக்க நினைக்கிறது.

யுக்ரேன் போர் ரசியாவின் பொருளாதாரத்தை மிக மோசமான நிலைக்கு தள்ளிவிடும். இதுமட்டுமல்லாமல் ஐரோப்பாவின் பொருளாதாரத்தை நெருக்கடிக்கு கொண்டு சென்றுள்ளது. ஐரோப்பாவின் யூரோ பண மதிப்பு அமெரிக்காவின் டாலருக்கு கீழே சென்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. மேலும் ஜெர்மனிக்கு விற்கப்பட்டுக்கொண்டிருந்த ரசியாவின் எரிகாற்று முற்றிலுமாக நிறுத்தப்படும் நிலைக்கு சென்றுள்ளது. இதனால் ஐரோப்பாவில் எரிகாற்றின் விலை மட்டுமல்லாமல் பொருட்களின் விலையும் கடுமையாக உயரத்தொடங்கியுள்ளது. ஐரோப்பாவிற்கு கொடுத்துக்கொண்டிருக்கும் நார்ட் ஸ்ட்ரீம் எண்ணைக்குழாயில் அனுப்பப்பட வேண்டிய எரிகாற்றை ரசியா எரித்துக் கொண்டிருக்கும் செய்திகள் நேற்று வெளியாகி உள்ளது. இப்படியாக அமெரிக்காவின் ராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற்கில் போர்ச்சூழலை மிக தீவிர நிலைக்கு தள்ளியுள்ளது போலவே ஆசியாவின் கிழக்கு மூலையிலும் அமெரிக்கா உருவாக்க நினைக்கிறது.

சீனாவிற்கும் தைவானுக்கும் இடையே போர் உருவாகுமானால் பசிபிக் பெருங்கடலும், இந்தியப் பெருங்கடலும் ராணுவச் சூழலுக்குள் தள்ளப்படும். ரசியா-யுக்ரேன் போர் என்பது நிலப்பரப்பின் மீது நிகழும் போராகும், ஆனால் சீனா- தைவான் போர் என்பது பெரும்பாலும் கடற்பகுதியில் ஏற்படக்கூடிய போராகவே அமையும். இதனாலேயே அமெரிக்காவின் கடற்படையும், சீனாவின் கடற்படையும் தென் சீனக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு போர்ப்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் ’ஆக்குஸ்’ எனப்படும் இராணுவ கூட்டமைப்பினை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா ஏற்படுத்தி இருக்கிறது. அதே போல ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பானுடன் இணைந்து ’க்வாட்’ எனப்படும் இராணுவ கூட்டமைப்பை அமெரிக்கா ஏற்படுத்தியது. இந்தக்கூட்டமைப்பு 2007-இல் துவங்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு உருவானதன் விளைவுகளையே தமிழினம் 2009-இல் எதிர்கொண்டது. இக்கூட்டமைப்பு தனக்கான பிராந்திய ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சியிலேயே விடுதலைப்புலிகள் மீதான போரை நடத்தி இனப்படுகொலையை செய்து முடித்தார்கள். இந்த போரில் புலிகள் தோல்வியை தழுவுவதற்கு மிகமுக்கிய காரணியாக இந்த நான்கு நாடுகளின் கப்பற்படை பிரயோகமும் மிகமுக்கிய காரணி என்பதை நாம் கவனித்தாக வேண்டும்.

இப்படியான சூழலில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 2022 அக்டோபரில் நடக்க இருக்கும் யுத் அப்யாஸ் என்னும் இராணுவ கூட்டுப்பயிற்சி சீனா-இந்திய எல்லையில் நிகழ்கிறது. இதை சீனா தனக்கு எதிரான இராணுவ வியூகமாகவே எதிர்கொள்ளும். இப்படியாக சீனா-இந்தியா எல்லையில் உருவாகும் இராணுவ நடவடிக்கைகள் முழுக்க முழுக்க அமெரிக்க நலனுக்காக உருவாகக்கூடியவே அன்றி இந்தியாவின் தனிப்பட்ட நலன்கள் இதில் அடங்கவில்லை. இந்த அமெரிக்க சார்பு நிலையும், சீன எதிர்ப்பு நிலையும் இந்தியாவின் வடக்கு எல்லையில் மட்டும் போர் பதட்டத்தை உருவாக்காது. தமிழ்நாட்டின் கடற்கரையும், நிலப்பரப்பும் இந்த போட்டி அரசியலுக்குள்ளாக சிக்கிக்கொள்ளும்.

இந்தியா-இலங்கை கடற்பரப்பு என்பது சீனா-அமெரிக்கா நாடுகளின் ஆதிக்கப் போட்டிக்கான இடமாக மாறிய காரணத்தினாலேயே தமிழீழ இனப்படுகொலை நிகழ்ந்தது. இதற்கான சர்வதேச நீதியும் இந்த நாடுகளாலேயே தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலுமொரு ஆதிக்க அரசியல் தெற்காசிய பிராந்தியத்தில் கூர்மையடையுமானால் தமிழ்நாடும், தமிழீழமும் இந்த ஆதிக்கப்போட்டிக்கான களமாக மாறக்கூடும். எனவே இந்தியாவின் வெளியுறவு, பாதுகாப்புக் கொள்கைகளில் தமிழ்நாட்டின் கருத்துக்களும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டுமென மே பதினேழு இயக்கம் நீண்ட நாட்களாக கோரி வந்துள்ளது. 2009 இனப்படுகொலை போரில் அமெரிக்காவின் தலையீடும், அதன் பசிபிக் கடற்படையின் பங்கும் கவனிக்கத்தக்கது. அமெரிக்கா-இந்தியாவின் இராணுவக்கூட்டுறவு என்பது தமிழர்களுக்கு ஆபத்தையே கொண்டு வரும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. திமுக அரசு தமிழ்நாடு சார்ந்து இலங்கை மீதான இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை மீது தலையீடுகளை செய்யும் பொழுது ஆரியமாடலின் வெளியுறவுக்கொள்கை தோல்வியை அம்பலப்படுத்தி திராவிட மாடல் கொள்கையை வலுப்படுத்த இயலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »
Click to listen highlighted text!