தேசிய இனங்கள் கிளைத்து வாழும் இந்திய துணைக்கண்டத்தில் இந்தி மொழியை மட்டும் உச்சாணிக் கொம்பில் வைப்பதை நிறுத்தவே மாட்டோம் என்பதே ஒன்றிய அரசின் செயல்பாடாக இருக்கிறது. இதன் அடிப்படையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமீத்சா தலைமையிலான நாடாளுமன்ற மொழிக்குழு, இந்தித் திணிப்பின் மொத்த வடிவமான ஒரு அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் கடந்த செப்டம்பர் மாதம் அளித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, இனி ஒன்றிய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை இந்தி தெரியாதவர்கள் எழுத முடியாது. ஏனெனில் இனி வினாத்தாள்கள் ஆங்கிலத்திற்குப் பதிலாக முழுமையாக இந்தித் தாள்களே வழங்கப்பட வேண்டுமாம்.
“கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள்கள் ஆங்கிலம் மிகவும் முக்கியம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதால், இந்திய அரசின் நிறுவனங்களில் இந்தியில் பணிபுரிவது கட்டாயம் என்கிற சூழ்நிலையில், பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் இந்தி அறிவு அவசியம் என்பதால் அவை இந்தித் தாள்களால் மாற்றப்பட வேண்டும்” என்று அறிக்கை கூறுகிறது. அதாவது இந்தி தெரிந்தவர்கள் மட்டும் ஒன்றிய அரசுப் பணிக்கு போதும் என்கிறது இந்த அறிக்கை.
இந்தி பேசும் மாநிலங்களில் வாழும் மக்கள் அவரவர் தாய்மொழியில் சுலபமாக எழுதி விடுவார்கள். ஆனால் நாம் வேறொருவர் தாய்மொழியான இந்தியில் தேர்வெழுதி அதில் வெற்றி பெற வேண்டுமாம். ஆங்கிலம் வேண்டாம் என்பது இந்தி மொழி பேசாதவர்கள் வேண்டாம் என்பதற்கு சமம்.
அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை என்பது சட்டமாக இருக்கும் போது, அனைத்து மொழிகளிலும் வினாத்தாள் இருக்க வேண்டும் என்பதையே ஜனநாயகத் தன்மையுடைய அரசு சிந்திக்கும். ஆனால் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையைக் கொண்ட ஒன்றிய பாஜக அரசின் அமித்சா தலைமையிலான மொழிக்குழு இப்படி ஒரு நயவஞ்சகமான பரிந்துரையை தயாரித்திருக்கிறது. மொழிப் பாகுபாடு பார்ப்பவர்கள் தான் இந்திய ஒருமைப்பாட்டுக்கு பாடமெடுக்கிறவர்களாக இருக்கிறார்கள் என்பது நகைமுரணாக இருக்கிறது. இது இந்திய ஒன்றியத்திலுள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி.
ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களிலும் இந்தியே முழு ஆதிக்கம் செய்யும் வகையில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கேந்திரிய வித்யாலயாக்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப துறைகளான ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்கள், அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் (AllMS) வரை இனி கட்டாயமாக பயிற்றுவிக்கும் மொழியாக இந்தியே இருக்க வேண்டுமாம். இதற்கு என்ன அர்த்தமென்றால், இந்தி தெரியாதவர்கள் இனி ஒன்றிய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கான கதவை அடைத்து விடுவோம் என்பது தான். பல மொழி பேசும் ஒவ்வொரு மக்களிடமிருந்தும் பிடுங்கும் வரியிலிருந்து நடத்தப்படும் ஒன்றிய கல்வி நிறுவனங்களில் எங்கள் மொழியான இந்தியே பயிற்சி மொழியாக வைப்போம் என்கிற ஆணவத்தைத் தான் அறிக்கையாக வடிவமைத்திருக்கிறார்கள்.
இதனுடன் முடியவில்லை. பீகார், சத்தீசுகர், உத்தரகண்ட், சார்கண்ட், ராசஸ்தான் போன்ற இந்தி பேசும் மாநிலங்களில் உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியிலே நடைபெற வேண்டும் என அறிக்கை கூறுகிறது. இந்தி பேசும் மாநிலங்கள் பலவும் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவையல்ல. இந்தி அவர்களின் தாய் மொழியை அடக்கி ஆளுமை செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு அந்த மக்களின் மொழிப் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கையில் ஒன்றிய ஆதிக்கவாதிகள் குழுவின் பரிந்துரை என்பது அவர்களின் தாய்மொழிக்கு பெரும் பின்னடைவையே உருவாக்கும்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறது இந்தக் குழு. இந்தியின் மேன்மையை உயர்த்துவதாக பன்மைத்துவமாய் வாழும் மக்களின் மொழிகளை சிறுமைப்படுத்தி பார்க்கும் ஒன்றிய அரசின் செயல் தான் இந்த அறிவிப்பின் பின்னிருக்கிறது.
இந்தி அடிப்படையில் வேலை செய்யாத அரசு ஊழியர்கள் விசாரிக்கப்பட்டு அந்த அறிக்கை அவர்களின் வருடாந்திர செயல்திறனுக்கான மதிப்பீட்டு அறிக்கையில் பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை செய்கிறது. இந்தி மொழி நிபுணத்துவம் தேவைப்படும் அரசுப் பணியிடங்கள் மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக இருந்தால், சம்பந்தப்பட்ட அமைப்பின் உயர் அதிகாரி பொறுப்பேற்க வேண்டும் என்றும், தவறினால் அவர்களின் வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டிலும் பதிவிடப்பட வேண்டும் எனவும் கூறுகிறது.
அரசு விளம்பரங்களின் பட்ஜெட்டில் 50 சதவீதத்துக்கும் மேல் இந்தி விளம்பரங்களுக்கு தொடர்ந்து ஒதுக்க வேண்டும் என்றும் இந்த குழு பரிந்துரைத்துள்ளது. தொலைநகல்கள் (Fax), மின்னஞ்சல்கள், விழா நிகழ்வு அழைப்பு கடிதங்கள், பேச்சுகள், ஒன்றிய அரசு கணினி என அனைத்து ஒன்றிய அரசுத் துறையின் அலுவல் மொழியாக இந்தியே செயல்படும். இந்தியில் பணி செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை அதிகப்படுத்தி வழங்கப்படும் என இன்னும் இந்தியை அரியணையில் ஏற்றும் வகையில் பட்டியல் தொடர்கிறது.
மேலும், இந்தியைப் பரப்புவது என்பது மத்திய அரசுக்கு மட்டும் உரியதாக இருக்கக் கூடாது. அனைத்து மாநில அரசுகளும் தங்கள் அரசியலமைப்பு கடமைகளில் சேர்க்க வேண்டும். மாநில அரசின் ஒப்புதலுடன் மாநில அரசு அலுவலகங்களில் அலுவல் மொழிக் கொள்கைகளை அமல்படுத்துவதை மறுஆய்வு செய்ய இந்தக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைத்திருக்கிறார்கள்.
இந்தித் திணிப்பு எதிர்ப்பில் நூற்றாண்டு வரலாறு கொண்டது தமிழ்நாடு. நூற்றுக்கணக்கான தமிழர்கள் தங்கள் உயிர்களை இழந்து மொழி உரிமையை தக்க வைத்துக் கொண்டு, இதர மாநிலங்களுக்கும் அவரவர்களது மொழி உணர்வைப் பெற முன்னோடியாக இருக்கும் தமிழ்நாடும், மற்ற மாநிலங்களும் இந்தி பரப்புவதை கடமையாகக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுவது இந்தக் குழுவினரின் கயமையின் வெளிப்பாடேத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
‘தமிழ்நாடு தமிழருக்கே’ என பெரியார் முழங்க முதன்மைக் காரணமே இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் தான். 1938-ல் அன்றைய காங்கிரசு ஆட்சியில் முதல்வராயிருந்த இராசாசி பள்ளிக்கூடங்களில் இந்தியை புகுத்தினார். பெரியாரின் தலைமையில் தமிழறிஞர்களின், வெகுமக்களின் போராட்டம் கட்டுக்கடங்காமல் மூண்டது. பலர் சிறை சென்றனர். இந்தி எதிர்ப்புப் போராளிகளான நடராசன், தாளமுத்து ஆகியோர் சிறையிலேயே மாண்டனர். பெரும் எழுச்சியை சமாளிக்க முடியாமல் இராசாசி பதவி விலகினார். ஆங்கிலேய அரசு இந்தி கட்டாயம் என்பதை திரும்பப் பெற்றது.
மீண்டும் 1948-ல் இந்தியை சில பகுதிகளில் கட்டாயப்பாடமாகவும், சில இடங்களில் விருப்பப்பாடமாகவும் அதே காங்கிரசு ஆட்சி திணித்தது. கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் பின்னர் திருப்பிக் கொள்ளப்பட்டது. 1950-களில் இந்தியை நாடு முழுமைக்கும் பொதுவான அலுவல் மொழியாகப் பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் எதிர்த்தார்கள். 15 ஆண்டுகள் இந்தியும், ஆங்கிலமும் அலுவல் மொழியாக இருக்கும் என நேரு உறுதியளித்தார்.
15 ஆண்டுகள் கழித்து 1965-ல் இந்தி மட்டுமே அலுவல் மொழி என்கிற முடிவெடுத்த பொழுது தான் தமிழ்நாடு போர்க்கோலம் பூண்டது. தமிழர்கள் பலர் தீக்குளித்தும், நஞ்சருந்தியும் மாண்டனர். பலர் சிறைச்சாலைக்கு சென்றனர். போராட்டம் கட்டுக்கடங்காது மக்களிடம் பற்றியதால் ராணுவம் வரவழைக்கப்பட்டது. எண்ணிக்கையே அறிய முடியாத அளவிற்கு நூற்றுக்கணக்கானவர்கள் சுடப்பட்டு கொல்லப்பட்டனர். இதில் பெரும்பான்மையினர் மாணவர்கள். பலரின் தியாகத்திற்கு பிறகு நேரு அரசு பணிந்தது. 1965-க்குப் பிறகும் இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலமே அலுவல் மொழியாக தொடரும் என அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு பல இன்னுயிர்களை ஈகம் அளித்து தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தி பேசாத பல மாநிலங்களுக்கும் மொழி உரிமையைப் பெற்றுக் கொடுத்தார்கள். 1965 ஜனவரி 25-ல் “தமிழ் வாழ்க -இந்தி ஒழிக” என்று முழக்கமிட்டு முதன்முதலில் தீக்குளித்து இறந்த கீழப்பழுவூர் சின்னச்சாமியின் நினைவாக ஜனவரி 25 மொழிப்போர் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
பெரியாரின் இந்தி எதிர்ப்பு என்பது 1925-யிலேயே துவங்கிவிட்டது. 1925-ல் குடியரசு இதழில் ‘தமிழுக்குத் துரோகமும், இந்தி மொழியும் இரகசியமும்’ எனக் கட்டுரை எழுதினார். அதில். பொதுவாய் “இந்தி என்பது வெளி மாநிலங்களில் பார்ப்பன மதப்பிரச்சாரம் செய்யக் கற்பித்துத் தரும் ஒரு வித்தையாகிவிட்டது. இந்த இரகசியத்தை நமது நாட்டுப் பாமரமக்கள் அறிவதேயில்லை.” என எழுதினார். அதனைத் தொடர்ந்து வந்த 1938, இந்தி எதிர்ப்புப் போரில் முழங்கியதே ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம்.
அதிகமானோர் பேசும் மொழியாக இருப்பதனால் இந்தியை தேசிய மொழியாக முடியும் என்ற ஒன்றிய அரசிற்கு, தனது கண்டனப் பதிவில், ”நாட்டில் மயில்களை விட காக்கைகள்தான் அதிகமாக இருக்கிறது என்பதற்காக, காக்கையை தேசிய பறவையாக அறிவித்திட முடியுமா? உலகத்தோடு உரையாட ஆங்கிலம் இருக்கிறது. அப்படியானால் இந்தியாவுக்குள் மட்டும் உரையாட தமிழர்கள் இந்தியை ஏன் கற்க வேண்டும்? பெரிய நாய் செல்ல பெரிய கதவும், சிறிய நாய் செல்ல சிறிய கதவும் தேவையா? நான் சொல்கிறேன், பெரிய கதவின் வழியே சிறிய நாயும் செல்லட்டும்!” எனக் கேள்விகளால் ஒன்றிய அரசினை தாக்கி, மற்ற தேசிய இனங்களுக்கும் வழிகாட்டியாக பேசினார் அண்ணா.
“தமிழ் மொழி மந்தியையும் மனிதனாக்கும் தன்மை பெற்றது. ஆனால் இந்தியோ மனிதனையும் மந்தியாக்கும் தன்மையுடையது ” – என்று சாடினார் திரு.வி.க.
“இந்தி ஆரிய தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. சாதி வேற்றுமைகளையே அடிப்படையாகக் கொண்ட இந்தி மொழியைத் தமிழ்நாட்டில் புகுத்துவது ஒற்றுமையுணர்ச்சியை கெடுக்கும் ஆரியரின் சூழ்ச்சி” என்றார் தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகளார்.
“இந்தியப் பொதுமொழி இந்தி என்றாலோ
கன்னங் கிழிந்திட நேரும் — வந்த
கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்”
– எனக் கவிதைகளால் வெடித்தார் பாரதிதாசன்.
இன்னும் தமிழறிஞர்கள் பலர் இந்தியை எதிர்த்து சீறிய வரிகளெல்லாம் இருக்க ஒன்றிய அரசின் மொழிக் குழு, இந்தியைப் பரப்புவதை அரசியலமைப்புக் கடமையாக மாநில அரசுகள் செய்ய வேண்டும் எனக் கூறுவதை தமிழ்நாடு வேடிக்கையாகவே பார்க்கும்.
தங்கத் தாம்பாளத்தில் இந்தியை சுமந்து மற்ற தேசிய இனங்களின் மொழிகளை பிச்சைப் பாத்திரமாகக் கருதும் ஒன்றிய அரசின் ஆணவத்தை மொழிப் போர் தியாகிகளின் நெஞ்சுரம் கொண்டு எதிர்ப்பதே மொழி உரிமையில் முன்னோடியான தமிழ்நாட்டின் கடமை. ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து இந்த சர்வாதிகார மொழிக் குழு அறிக்கையை முறியடிப்போம். ஒன்றிய அரசின் மொழித் திணிப்பை சமரசமின்றி எதிர்த்து நிற்போம்.