மதவெறி அரசியலுக்கு எதிராக ஒன்றுதிரண்ட தமிழ்நாடு

கடந்த அக்டோபர் 11 அன்று தமிழ் நாடு முழுவதும் அனைத்து முற்போக்கு சனநாயக அமைப்புகள், கட்சிகள் பங்கெடுத்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் மக்கள் ஆதரவுடனும் மிகுந்த எழுச்சியுடனும் நடைபெற்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ். எனும் இந்துத்துவ பயங்கரவாதிகளை தமிழ்நாட்டை விட்டு விரட்டவும், தமிழினம் காக்கவும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி என்ற பெயரில் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடந்த முடிந்துள்ளது. இந்துத்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக தமிழ்நாடே ஒன்றிணையும் என்பதை இந்த நிகழ்வு பறைசாற்றியுள்ளது.

இந்துத்துவ பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட தேசத்தந்தை காந்தியாரின் பிறந்த நாளான கடந்த அக்டோபர் 2 அன்று தமிழ்நாட்டில் சுமார் 50 இடங்களில் இந்துத்துவ பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தது. இந்த அணிவகுப்பிற்கான அனுமதியை வழங்கலாமா வேண்டாமா என்று தமிழ்நாடு காவல்துறை பரிசீலனை செய்துகொண்டிருந்த நிலையில், உயர்நீதிமன்றம் சென்ற ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பிற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டுமென செப்டம்பர் 22 அன்று தனி நீதிபதி மூலம் உத்தரவு பெற்றது.

அதேவேளை, மதவெறியையும் சனாதனத்தையும் ஊக்குவிக்கும் இந்த இந்துத்துவ பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் தடுக்கும் நோக்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பிற்கு எதிராக அதே அக்டோபர் 2 அன்று தமிழ் நாடு முழுவதும் மனித சங்கிலி மற்றும் சமூக நல்லிணக்கப் பேரணி நடத்தப்படும், அதில் தமிழ் நாட்டின் ஜனநாயக முற்போக்கு அமைப்புகள் அனைத்தும் பங்கேற்க வேண்டுமென அறைகூவல் விடுத்தனர்.

இந்துத்துவ பாசிசத்தை தமிழ்நாட்டை விட்டு விரட்டியடிக்கும் இந்த ஜனநாயக நிகழ்வு தற்போதைய சூழலில் மிக முக்கியமானதாக மே பதினேழு இயக்கம் கருதியது. அதேபோல், இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக தமிழ்நாட்டின் வலிமையை காட்ட வேண்டும் என்ற நோக்கில், சமூக நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்விற்கான ஆதரவையும், அதில் பங்கேற்பதற்கான அறிவிப்பையும் மே பதினேழு இயக்கம் உடனடியாக அறிக்கையின் மூலம் வெளியிட்டது. விசிக-கம்யூனிஸ்ட் கட்சிகளின் அறைகூவலுக்கு தமிழ் நாட்டில் முதன் முதலாக பதிலளித்த முதல் அமைப்பு மே பதினேழு இயக்கம் ஆகும். இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் இந்த மனித சங்கிலி நிகழ்விற்கு ஆதரவளித்து தம்மை இணைத்துக் கொண்டன.

தேசத்தந்தை காந்தியை படுகொலை செய்தது, காமராஜரை கொலை செய்ய முயற்சித்தது இந்தியாவில் இரண்டு முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தான் என்பதையும், அது  ஒரு ‘பாசிச பயங்கரவாத அமைப்பு’ என்ற செய்தியையும் ஒவ்வொரு ஊர்களிலும் மக்களிடம் கொண்டு செல்வதற்கு இந்த சமூக நல்லிணக்கப் மனித சங்கிலி ஒரு நல்வாய்ப்பை வழங்கியுள்ளது என்று மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி முழங்கினார்.  மக்களை பிளவுபடுத்தும்  ஆர்.எஸ்.எஸ்.-இன்  நடவடிக்கைகளுக்கு மே பதினேழு இயக்கம் என்றும் சவாலாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக, சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் தமிழ் நாடு முழுவதுமுள்ள மே பதினேழு இயக்கத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.

அதேவேளை, சூழலை புரிந்துகொண்ட தமிழ் நாடு காவல்துறை, அக்டோபர் 2 அன்று நடைபெறவிருந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பிற்கு தடை விதித்ததோடு, சமூக நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்விற்கும் அனுமதி மறுத்தது. ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக காவல்துறை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்தது. இதனால் சமூக நல்லிணக்க மனித சங்கிலி அக்டோபர் 11 அன்று நடைபெறும் அறிவிக்கப்பட்டது. மறுபுறம், நவம்பர் 6 அன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பிற்கு அனுமதி வழங்க வேண்டுமென்றும், இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்றும் உயர்நீதிமன்றம் காவல்துறையை எச்சரித்தது. இந்த சூழலில் இந்துத்துவ சக்திகளுக்கு தமிழ்நாட்டின் பலத்தை அக்டோபர் 11 சமூக நல்லிணக்க மனித சங்கிலியின் மூலம் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டதை தமிழ் நாடு உணர்ந்திருந்தது.

அக்டோபர் 11 அன்று மாலை 4 மணி அளவில் தமிழ் நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி ஒருங்கிணைக்கப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள்-கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மதிமுக, இ.யூ.முஸ்லீம் லீக், மமக, தவாக உள்ளிட்ட 33-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் மே 17 இயக்கம், திராவிடர் கழகம் உள்ளிட்ட 44 இயக்கங்களும் என 80-க்கும் மேற்பட்ட அமைப்புகள் தமிழ் நாடு முழுவதும் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் பங்கேற்றனர்.

சென்னை, கோவை, மதுரை என தமிழ் நாட்டின் மாநகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது. இதில், மே பதினேழு இயக்கத் தோழர்கள் பெருவாரியாக பங்கேற்றனர். ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளை தமிழ் நாட்டை விட்டு விரட்டுவோம் என பதாகைகள் பிடித்துக்கொண்டு, ஆர்எஸ்எஸ்-பாஜகவிற்கு எதிராக தோழர்கள் அனைவரும் முழக்கமிட்டனர்.

சென்னை அண்ணா சாலை அரசினர் தோட்டம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலை முன்பாக, விசிக தலைவர் தோழர் தொல்.திருமாவளவன், மதிமுக தலைவர் ஐயா வைகோ உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் கூடி நின்று, ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர் முழக்கத்தில் ஈடுபட்டனர். இதில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் புருசோத்தமன், தோழர் பிரவீன் குமார் உட்பட எண்ணற்ற மே 17 இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.

கோவை காந்திபுரத்தில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலியில், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்து கொண்டார். அப்போது பத்திரிக்கையாளர்களிடையே பேசிய தோழர் திருமுருகன் காந்தி, “தமிழ்நாட்டில் மதவெறி அரசியலுக்கு இடமில்லை என்பதை இந்தப் பேரணி எடுத்துரைக்கின்றது.  பிரிவினைவாதத்தை வளர்க்கும் ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்ற இந்துத்துவ அமைப்புகளின் அரசியலை எதிர்த்து வெற்றிகரமாக இந்த மனித சங்கிலிப் பேரணி நடந்து கொண்டிருக்கிறது. சாதி மத எல்லை கடந்து மக்கள் வீதிக்கு வந்து இந்துத்துவ அரசியலுக்கு எதிராக கரம் கோர்த்து நிற்கின்றார்கள். இதுதான் இந்த மண்ணின் அரசியல். இதுதான் பெரியாரின் அரசியல். மார்க்சின் அரசியல். அண்ணல் அம்பேத்கரின் அரசியல். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மத வெறியை மாய்ப்போம்.” என்று கூறினார். (காணொளி: https://www.youtube.com/watch?v=rPnq0fJpN80)

தமிழ்நாடெங்கும் குழந்தைகள், பெண்கள் என மக்கள் அனைவரும் தோழர்களுடன் கை கோர்த்து நின்று ஆர்.எஸ்.எஸ். எனும் மதவெறி கும்பலுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை உணர்த்தும் வகையில் இந்த சமூக நல்லிணக்கப் மனித சங்கிலி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Translate »