இலங்கையில் 2009இல் ஒன்றரை லட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்த பின்னும் அடங்காத சிங்கள பேரினவாத அரசு, ஈழத் தமிழர்கள் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக அண்மையில் ஒரு புதிய புனர்வாழ்வு சட்ட மசோதாவை சிங்கள் பவுத்த பேரினவாத அரசு கொண்டு வந்திருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை அரசு வெளியிட்ட இந்த புதிய புனர்வாழ்வு மசோதா, முன்னாள் போராளிகளை கட்டாய காவலில் வைத்திருப்பதற்கு இலங்கை இராணுவத்தை அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2009 இனப்படுகொலைக்குப் பிறகு ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் நடத்தப்படும் முகாம்களில் சிறை வைக்கப்பட்டனர். இவ்வாறு சிறை வைக்கப்பட்டவர்களில் பலர் சித்திரவதை செய்யப்பட்டனர், பலர் காணாமல் போயுள்ளனர். இந்த சித்திரவதை முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட சிலர் புலனாய்வு அமைப்புகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் கடந்த செப்டம்பர் 23 அன்று இலங்கை பாராளுமன்றத்தில் அதிபர் இரணில் விக்கிரமசிங்கேவின் அரசு புனர்வாழ்வு சட்ட மசோதா என்ற ஒன்றை முன்மொழிந்திருக்கிறது. ஈழத் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்தும் சித்திரவதைகளை அதிகரிக்கும் வகையில் அதில் பல சட்ட பிரிவுகள் சேர்க்கப்பட்டிருந்தன. குறிப்பாக, இந்த சட்டத்தில் உள்ள 17ஆம் பிரிவு, இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை ஆயுதப்படையின் எந்தவொரு உறுப்பினரையும் நியமிக்க அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முழு அதிகாரத்தை அளிக்கிறது. இதன் மூலம் அரசை எதிர்ப்பவர்களை குறிவைக்கவும், போராளிகளை ‘தீவிரவாதிகள்’ என்று முத்திரை குத்தவும் இந்த சட்டம் பயன்படுத்தப்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
இலங்கை அரசு ஈழத்தமிழர்கள் மீது நடத்தும் ஒடுக்குமுறைகளுக்குத் துணையாக சட்டத்தைக் கையில் எடுப்பது இது முதல் முறையன்று. 1980களின் முற்பகுதியில் இலங்கை அரசு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் ‘புனர்வாழ்வுக்கான ஆணையாளர்’ என்று ஒருவரை நியமித்தது. அப்போதிருந்தே போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கிறோம் என்ற பெயரில் பல சித்திரவதை முகாம்கள் நிறுவப்பட்டன.
முகாம்களில் இருப்போரை அடித்து துன்புறுத்துவது, பொய் வழக்கு போடுவது, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது ஆகிய மனித உரிமை மீறல்கள் நடக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தோர் இலங்கை இராணுவத்தால் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இதை யாஸ்மின் சூகா தலைமையிலான “அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம்” ஆதாரத்தோடு சொல்லியிருக்கிறது. இதற்கு முன்னர் இத்தகைய குற்றச்சாட்டுகள் எழும்போது இராணுவத்தை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டாலும், இனி வரும் காலங்களில் இந்த புதிய சட்டத்தின்படி ஈழத்தமிழர் மீது ஒடுக்குமுறையை ஏவும் எந்த அதிகாரியையும் கைது செய்ய இயலாது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால், நீதித்துறை நடைமுறைகள் எதுவும் இல்லாமல் காவல்துறை யாரையும் கைது செய்து நேரடியாக புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்ப முடியும்.
மேலும், “முகாம்களில் இருக்கும் நபர்களை பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு உற்பத்தி ரீதியாக பயன்படுத்தப்படலாம்” எனும் சரத்து இனி இந்த சித்திரவதை முகாம்களை கொத்தடிமை மையங்களாகவும் சிங்கள அரசு நடத்தலாம் என்பதற்கு சட்ட பாதுகாப்பை வழங்கியிருக்கிறது.
இந்த மசோதா வெளியானது முதல் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இதை எதிர்த்து குரல் எழுப்பி வந்தன. அதன் பலனாக, கடந்த அக்டோபர் மாதத்தில் இலங்கை நீதிமன்றம் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் தடுத்தது என்று பரவலாக அப்போது செய்திகள் வந்தது. ஆனால், உண்மை அதுவல்ல. இலங்கையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக வருடந்தோறும் ஐநா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் நடத்தும் நாடகம் இந்த வருடமும் நடைபெறவிருக்கிறது. இந்த சமயத்தில் இப்படி ஒரு மசோதா வந்தால் அது இன்னும் நிலைமையை சிக்கலாக்கும். இன்று இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. இந்த நிலைமையை சமாளிக்க இலங்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் இரணில் விக்ரமசிங்கே அரசு அடகுவைத்து பணம் வாங்க பேச்சுவார்த்தை இறுதி கட்டத்திற்கு வந்திருக்கிறது. இந்த சமயத்தில் இதுபோன்ற சட்ட மசோதாக்களை மனித உரிமை அமைப்புகள் பிரச்சனையாக எழுப்பினால் அது இலங்கை பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதற்காக தற்காலிகமாக இந்த மசோதாவை இலங்கை பேரினவாத அரசு நிறுத்தியிருக்கிறது. இதுபோல் வேறு சட்டங்களை இயற்றியும், இதே சட்டத்தின் சரத்துகளை மாற்றியும், சிங்கள இனவாத அரசு தமிழர்களை ஒடுக்க எதிர்காலத்தில் முற்படும்.
கடுமையான பொருளாதார நெருக்கடி, ஐநாவில் இலங்கை குறித்தான தீர்மானங்கள் என கடுமையான சூழலில் இருக்கும்போதே இலங்கை அரசு இப்படி தமிழனத்தை அழிக்கும் வேலையில் ஈடுபடுகிறதென்றால் இலங்கை அரசின் தமிழினவிரோதத்தை இதன் பிறகாவது சர்வதேச சமூகம் புரிந்துகொண்டு தமிழனத்திற்கான நீதியை உடனடியாக நிறைவேற்றிட முன்வர வேண்டும். முதற்கட்டமாக புனர்வாழ்வு மையங்கள் என்ற பெயரில் நடத்தப்படும் சித்திரவதை முகாம்களை நிரந்தரமாக மூடவேண்டும். நிரந்தர தீர்வாக பல்வேறு சர்வதேச அழுத்தங்களுக்கு இடையிலும் தமிழர்களை அழிப்பதை நோக்கமாக கொண்டிருக்கும் சிங்கள பவுத்த பேரினவாதத்தோடு தமிழர்கள் இனியும் இணைந்து வாழ முடியாது என்பதை சர்வதேச சமூகம் இனியாவது ஒத்துக்கொண்டு, தமிழர்களுக்கான தீர்வு என்னவென்று தெரிந்துகொள்வதற்கு தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும்.
இதையெல்லாம் சர்வதேச சமூகம் செய்யதவறுமாயின் இத்தகைய மனித உரிமை மீறல்களை சிங்கள பவுத்த பேரினவாத அரசு தொடர்ந்து செய்ய ஊக்கமளிக்கும் விதமாகவே சர்வதேசத்தின் செயல்பாடுகள் அமையும். இது மீண்டும் இலங்கை அரசியல் சூழலை சிக்கலானதாகவே மாற்றும்.