தென்னிந்திய விடுதலைக்கு போரிட்ட மருது சகோதரர்கள்

ஆங்கிலேயர்களின் பிடியில் தமிழகம் இருந்த வேளையில், திராவிட நாடு என்னும் தென்னிந்திய விடுதலைக்காக ஆங்கிலேயருக்கு எதிர்த்து வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், திப்பு சுல்தான் உட்பட பலர் போராடினர். அவர்களில் முக்கியமானவர்கள் மருது சகோதரர்கள் எனலாம்.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே முக்குளம் என்ற கிராமத்தில் சாதாரண எளிய குடும்பத்தில் உடையார்-ஆனந்தாயி பொன்னாத்தாள் இணையர்களின் மகன்கள்தான் மருது சகோதரர்கள். இவர்கள் இருவரது போர்த்திறமைகளை கண்ட சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் தமது படைத்தளபதிகளாக நியமித்தார்.1772-ல் காளையார் கோவிலில் நடந்த முத்துவடுகநாதர் படுகொலைக்குப் பின்னர் வேலுநாச்சியாரின் தளபதிகளாக திகழ்ந்தனர் மருது சகோதரர்கள்.

விருப்பாச்சி காடுகளில் வேலுநாச்சியாரும் மருது சகோதரர்களும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த போது திண்டுக்கல் நகரமும் மலைக்கோட்டையும் மைசூர் மன்‌‌‌னர் ஹைதர் அலியின் வசம் இருந்தது. வேலுநாச்சியாரும் மருது சகோதரர்களும் விருப்பாச்சி கோபால் நாயக்கர், ஹைதர் அலி, திப்புசுல்‌‌‌தான் ஆகியோர் உதவியுடன் 1780-ல் சிவகங்கை சீமையை மீட்டனர். அதற்கு பிறகு வெள்‌‌‌ளையர்களால் ஒருமுறைகூட கைப்பற்ற முடியாத ஒரு ஆட்சியை நடத்தினார்‌‌‌ வேலுநாச்சியார்.

ஆற்காடு நவாப்புக்காக கம்பெனி செய்த போர்களுக்கு செலுத்தவேண்டிய பணத்தை அடைக்கமுடியாத நவாப், இறுதியில் வரிவசூலிக்கும் உரிமையை நேரடியாக கம்பெனிக்கே கொடுக்க ஆரம்பித்தான். 1792-ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி தென்தமிழகத்தின் அரசுரிமை நேரடியாகக் கம்பெனிக்குச் சென்றது. ஆங்கிலேயர்களின் வரிக்கொடுமை மக்களை வாட்டிவதைத்தெடுத்தது. மக்கள் கடும் பஞ்சத்தாலும் அவதிப்பட்டும் இறந்து போனார்கள். மக்கள் தங்களின் ஊரைவிட்டே வெளியேறும்‌‌‌ நிலை ஏற்பட்டது..

டிசம்பர் 26,1796 சிவகங்கை பேரரசி வேலுநாச்சியாரின் மரணத்திற்கு பிறகு அவரின் அமைச்சர்களாக இருந்த மருதுபாண்டியர்கள் சிவகங்கை ஆட்சி பொறுப்பை ஏற்று நடத்‌‌‌தினர்‌‌‌. அவர்களுடைய ஆட்சி மக்களுக்கானதாக இருந்தது. மருது பாண்‌‌‌டியர்கள் மன்னர் பரம்பரையினரல்ல; எளிய மக்கள் பரம்பரையை சேர்ந்தவர்‌‌‌கள். மக்களின் நிலையை நேரடியாகக் கண்டுணர்ந்‌‌‌து மக்‌‌‌களுக்கான ஆட்சியை நடத்தியவர்‌‌‌கள். மக்களாட்சி முறையை ஆதரித்தவர்‌‌‌கள்.

அவர்கள் ஆட்சியில் நீர் மேலாண்மை, நெல் மேலாண்மை,  சமுக மற்றும் சமய நல்லிணக்கம், நட்பு வளர்த்தல், நாடுகாத்தல் போன்றவை சிறந்து விளங்கியது. கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகிய வழிபாட்டுத் தலங்களை கட்டியும்‌‌‌ திருப்பணிகளையும் செய்தனர். வடநாட்டிலே சதி முறையால் விதவைப்பெண்களை தீயிலேற்றும் கொடுமை நிகழ்ந்த அதே காலகட்‌‌‌டத்தில் தான், தங்கள் ஆட்‌‌‌சியில் விதவை மறுமணங்களை நடைமுறைப்படுத்தினர் மருதிருவர்.

பெரிய மருது பெரும் உடல் வலிமை கொண்டவர்‌‌. மக்களின் பால் பேரன்‌‌‌பு கொண்டவர். சின்ன மருதுவின் வீட்டிற்கு காவலாக ஒரு பாதுகாவலர் கூட இருக்கமாட்‌‌‌டார்கள். மக்கள் யார் வேண்டுமானாலும் நேரடியாக சென்று சந்‌‌‌திக்‌‌‌கலாம். அவர்களின் குறைகளை கூறலாம். அந்த அளவுக்கு மக்களோடு மக்களாக வாழ்ந்தார்‌‌‌கள் மருதுபாண்டியர்‌‌‌கள்.

ஆங்கிலேயருக்கு எதிரான நான்காம் மைசூர் போரில் சிறீரங்கப்பட்டணத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த திப்பு சுல்‌‌‌தான் மே 4, 1799-ல் வீரமரணம் அடைந்த செய்தி தென்னாட்டு புரட்சியாளர்களை அதிர்‌‌‌ச்‌‌‌சியில் ஆழ்த்தியது. தமிழக புரட்சியாளர்களான தீரன் சின்னமலை, மருதுபாண்டியர்கள், விருப்பாச்சி கோபாலர் மற்றும் ஏனைய கிளர்‌‌‌ச்‌‌‌சியாளர்களுக்கு பெரும் உதவி சக்தியாகவும் உந்து சக்தியாகவும் திகழ்ந்த திப்புவின்‌‌‌ மரணம் ஒரு பின்னடைவாக இருந்தது.

இதே கால கட்டத்தில்தான் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரராக இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுக்கு வரி கட்ட மறுத்‌‌‌து அவர்களை எதிர்த்து வந்தார்.

திப்பு சுல்‌‌‌தானை வீழ்த்‌‌‌திய ஆங்கிலேயர்‌‌‌களின் பீரங்கிகள் கட்டபொம்மனுக்கு எதிராக திரும்பியது. ஆங்கிலேயர்‌‌‌களுக்கு எதிராக திரள வேண்டிய பாளையக்காரர்கள் பதவி ஆசை குணம் கொண்டவர்களாகவும், உயிர்பயம் கொண்ட கோழைகளாகவும் திகழ்ந்தார்கள். இருப்பினும் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்‌‌‌களுக்கு அடிபணிய மறுத்‌‌‌தார்; தொடர்ந்து போராடினார்‌‌‌. எட்டயபுர பாளையக்காரர் எட்டப்பன் மற்றும் புதுக்கோட்‌‌‌டை அரசர் விஜய ரகுநாத தொண்டைமானின் துரோகத்தால் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு அக்டோபர் 16, 1799 அன்று கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

ஆங்கிலேயர்‌‌‌களிடமிருந்து தப்பித்து சிவகங்கை வந்த அவரது தம்பி ஊமைத்துரைக்கு மருது சகோதரர்கள் அடைக்கலம் கொடுத்தனர். அடைக்கலம் கொடுத்த செய்தியை புதுக்கோட்‌‌‌டை அரசர் தொண்டைமான்‌‌‌ ஆங்கிலேயரிடம் காட்டிக்கொடுத்தார். ஊமைத்துரையை தங்களிடம் ஒப்படைக்குமாறு ஆங்கிலேய அதிகாரிகள்‌‌‌ வெல்சும் மார்ட்‌‌‌டினும் மருது சகோதரர்களை மிரட்டினர். ஆனால் தன்னிடம் அடைக்கலம் வந்த தம் நண்பரை விட்டுத்தர மறுத்தனர் மருதுசகோதரர்கள்.

இதனால் ஆங்கிலேயர்‌‌‌களின் கோபத்திற்கு ஆளான மருது சகோதரர்களை பரம்பரை மன்னர்கள் அல்ல எனக்கூறி பதவி ஆசை கொண்ட படமாத்தூர்‌‌‌ கௌரி வல்லப உடையனரை சிவகங்கை மன்னராகவும் ஜமீனாகவும்‌‌‌ அறிவித்து முடிசூட்டினர்.

இதனையடுத்து மருது சகோதரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்குமான யுத்தம் மூண்டது. கி.பி.1801 மே 28-ந் தேதி மருது சகோதரர்களின் சிவகங்கை சீமை மீதான தாக்குதலை ஆங்கிலேயர் படை தொடங்கியது. இதனை எதிர்கொள்ள ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியில் திண்டுக்கல் பாளையக்காரர் விருப்பாச்‌‌‌சி கோபாலர், மணப்பாறை லட்சுமி, மலபார் மன்னர் கேரளவர்மன், கர்நாடக மன்னர் கிருஷ்ணப்பர், திப்பு சுல்தானின் குதிரைப்படை வீரரான மராட்டியத்தின் தூந்தாஜிவாக் போன்ற கிளர்ச்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான கூட்டணியில் இணைந்தனர். மராட்டியத் தலைவர்களிடம் பேச பல தூதுக் குழுக்களை ஏற்படுத்தினர். கொங்குப்பகுதி போராட்ட சக்திகளைக் கண்டு பேசவும் நல்லுறவை நாட்டவும் தீரன் சின்னமலை முன்வந்தார்.

தீரன் சின்னமலை தனது படைகளைப் பெருக்கும் விதமாக, திப்பு சுல்தானிடம் பணியாற்றிய சிறந்த போர்வீரர்களான அப்பாச்சி மற்றும் தூண்டாஜிவாக் போன்றவர்களை தனது படையில் சேர்த்ததோடு மட்டும் நில்லாமல், தன்னை ஒரு பாளையக்காரராக அறிவித்து, அருகில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். கனிஜாகான், புத்தேமுகம்மது, முகம்மது ஹாசம் போன்ற தளபதிகளுடன் இணைந்து ஆங்கிலேயரை தாக்க திட்டம் தீட்டினார்.

தீரன் சின்னமலை தலைமையிலான கூட்டணி, 1800 ஜூன் 3-ஆம் தேதி, லெஃப்டினன்ட் கர்னல் கே.க்ஸிஸ்டரின் 5-ஆம் கம்பெனி படைப்பிரிவை தரைமட்டமாக்க எண்ணிய அவர், கோவைக் கோட்டையைத் தகர்க்கத் திட்டமிடப்பட்டது. “சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாத ஒரே காரணத்தால்” கோவைப்புரட்சி தோல்வியை சந்தித்தது. இந்த கோவைப் போரில் தென்னிந்திய போராளிகளின் கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், தென்னிந்தியா ஆங்கிலேய ஆதிக்கத்திடமிருந்து விடுதலை பெற்று தனி நாடாக உருவாகியிருக்கும். இது இந்தியாவின் வரலாற்றை மாற்றியிருக்கும்.

இந்த போருக்கு முன்னால் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட முஹம்மது ஹாசம், திட்டத்தின் தகவல்களை வெளியிடாதிருக்க தனது கழுத்தை அறுத்துக்கொண்டு இறந்தார். இதனையடுத்து ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்ட அப்பாஜி மற்றும் தூந்தாஜிவாக்கினால் அனுப்பப்பட்டவர்கள் உட்பட 42 பேருக்கு மரண தண்டனை ஆங்கிலேயரால் விதிக்கப்பட்டது. இதில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்‌‌‌கள்.

பாஞ்சாலங்குறிச்சிப் போரில் 1050 போராளிகள் மாண்டனர். இராமநாதபுரத்தில் மைலப்பன் தலைமையிலான படை எதிரிகளை ஈட்டி முனையில் விரட்டியது. மைலப்பன் முகவை மண்ணின் பெரும் போராளியாவார். போராளிகளின் தீரமிக்க நடவடிக்கைகளால் ஆங்கிலேயர் படை தோல்வியை சந்தித்தது. தமிழ்நாட்டின் தென்பகுதிக் கடற்கரை போராளிகள் வசம் வந்ததால், ஆங்கிலேயர் படை கப்பல்கள் இலங்கை செல்லமுடியாது திணறின.

ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பு மன்னர்களுக்கும் மக்களுக்கும் இடைவெளியே இல்லாத நேசம் நிலவியது. துணைக்கண்ட வரலாற்றிலேயே 16-06-1801-இல் மருது பாண்டியர் வெளியிட்ட போர் அறைகூவல் பிரகடனம் மிகவும் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இது ஜம்புத்தீவு பிரகடனம் எனப்பட்டது. அரசியல் கோட்பாடுகளும் விவரங்களும் கொள்கை விவரிப்புகளும் நிறைந்த ஒரு போர் முழக்கம். தென்நாட்டு மக்களின் நலனை மட்டுமே முன்னிட்டு எழுதப்பட்ட இது ஆங்கிலேயரை அதிகாரத்திமிர் போக்கிற்காக கண்டித்திருந்தது. அந்த அறிக்கையில் மக்களை கிளர்ச்சிக்கு அழைத்தனர்.

மக்களிடையே மரபுவழிப் பண்பாடுகளே நிறைந்திருந்ததால் இம்முழக்கம் அதன் சாராம்சமாகக் கொண்டிருந்தது. அக்காலத்தில் நிலவிய அரசியல் அவலங்களைச் சுட்டிக்காட்டி “இவ்வாட்சி தொடர்ந்தால் இந்ததேசம் அன்னிய ஆட்சியின் கீழ்வந்துவிடும்” என்ற எச்சரிக்கை முரசமும் அதில் ஒலித்தது. இந்தப் போர் முழக்கச் சுவரொட்டிகள் திருச்சிராப்பள்ளிக் கோட்டையின் நவாப் மாளிகைச் சுவரிலும், ஸ்ரீரங்கம் கோவில் கோபுரச் சுவரிலும் ஒட்டப்பட்டிருந்தன. இதில் தென்னிந்தியா ஜம்புத்தீவினுடைய தீபகற்பம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

மிகப்பெரிய ஆனால் மிகச் சுருக்கமான இந்த முழக்கங்கள் தெளிவான தமிழில் எழுதப்பட்டிருந்தன. இந்தப் போர் முழக்கம் தென்னிந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மக்களை புரட்சிக்கு அணியமாக்கியது. வலிமைமிக்க போர்க் கருவிகளை திறமையாகக் கொண்ட தொழில் முறைப்போர் வீரர்களுடன் தன்மானமிக்க போராளிகள் போரிட்டனர். வாள், வளரி, வேல், துப்பாக்கிகள், ஏன் முதல்முறையாக ராக்கெட் தொழில்நுட்‌‌‌பம் கொண்டும் தாக்குதல் நடத்தினர் மருதுபாண்டியர்கள்.

இப்போரில் எதிர்பார்த்ததுதான் நடந்தது. உலகத்திற்கே நாகரீகம் கற்றுக் கொடுத்ததாக தற்பெருமை பேசிய ஆங்கிலேயர்‌‌‌கள் உலகச் சரித்திரத்தில் அது வரை கண்டிராத கொடுமைகளை அரங்கேற்றினர். பாஞ்சாலங்குறிச்சியில் மனித மிருகமாக நடந்த பானர்மென்-ஐ விடவும் சிவகங்கைப் போரில் ஆங்கிலேயர்‌‌‌கள் கூடுதல் கொடுமைகளை அரங்கேற்றினர். முறையான போர்ப்பயிற்சி இல்லாதிருந்தும் கூட சிவகங்கையின் பாமர மக்கள் புலிபோல் சண்டையிட்டு போராடினர்.

ஆனால் சிறுவயல், காளையார்கோவில், கமுதி, பிரான் மலை, சோழபுரம் வயல் வெளிகளெல்லாம் அன்று போராளிகளின் குருதியால் மண்ணைச் சிவப்பாக்கின. பணத்தாசை பதவியாசை கொண்டவர்களாலும் துரோகி தொண்டைமான் வஞ்சத்தாலும்‌‌‌ காளையார் கோவில் அரண் காட்டிக் கொடுக்கப்பட்டது. மருது பாண்டியர் தலைக்கு தலா 1500 சுருள் சக்கரப் பொன்னும் பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரை தலைக்கு 1000 சுருள் சக்கரமும் தருவதாக தண்டோரா போடப்பட்டது.

மதுரை ஆட்சியாளராக இருந்த பிளாக்பர்ன், கர்னல் அக்நியூ ஆகியோரின் படைகள் துரோகி தொண்டைமானின் துணையோடும்‌‌‌ மருதுபாண்டியர் படையிலிருந்த துரோகிகள் காட்டிக்கொடுத்ததாலும், ஆங்கிலேயர்களிடமிருந்து காளையார் கோவிலை காக்க சரணடைய முடிவெடுத்‌‌‌ததாலும், 19-10-1801-இல் மருதுபாண்டியரை சோழபுரத்தில் வைத்துப் பிடித்தனர். அக்டோபர் 24-இல் மருதிருவரை காக்கவும் திருப்பத்தூர் படுகொலையை தடுக்கவும்‌‌‌ முயற்சித்த அவர்களின் படைத்தளபதி பாகனேரி வாளுக்கு வேலி சூழ்ச்சிகரமாக மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்.

கைது செய்யப்பட்ட பெரிய மருது பெயரளவிலான விசாரணைக்குப் பின் போராளி பெரிய மருதுபாண்டியரும் போர்களுக்குச் சிறிதும் சம்பந்தமே இல்லாத 10-12 வயது சிறுவர்களும் திருப்பத்தூர் கோட்டை புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டனர். பால்மணம் மாறா குழந்தைகளை விட்டுவிடும் படி கேட்ட பெரியமருதுவின் கடைசி வேண்‌‌‌டுகோளும் பயனற்றுப் போனது. ஒரு கட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் புளியமரங்களெல்லாம் சடலங்களைச் சுமந்து நின்றன. இனி தாமே நிரந்தரம் என்ற ஆணவத்திலும் வெள்ளையர்கள் பல கொடூரங்களைப் போருக்குப் பின்னரும் அரங்கேற்றம் செய்தனர்.

திருப்பத்தூரில் நடந்த இந்த கோரத்‌‌‌தை பார்க்கும்‌‌‌பொழுது ஈழத்திலே நடந்த முள்‌‌‌ளிவாய்க்கால் இனப்‌‌‌படுகொலையே நினைவிற்கு வருகிறது. வெள்ளை ஏகாதிபத்தியம் இன்று வரை தமிழர்களை வேட்டையாடிக்கொண்டு தான் இருக்கிறது.

அக் 27-ல் மிகவும் தந்திரமாகவும் மிருகத்தனமாகவும் வேட்டையாடப்பட்ட சின்னமருதுவை புலிக்கூண்‌‌‌டில் அடைத்து தூக்கிலிட்‌‌‌டனர். மருதிருவர் தலை துண்டிக்கப்பட்டு காளையார் கோவில் எதிரேயும் உடல் திருப்பத்தூர் சுவிடீஷ் மருத்துவமனை வளாகத்திலும் புதைக்கப்பட்டன.

இந்தத் தண்டனைகளுக்கெல்லாம் கம்பெனியின் மேலிடம் பின்னர் தான் ஒப்புதல் கொடுக்க முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. சாட்சி விசாரணையும் புறம் தள்ளப்பட்டது. மருதிருவரை தூக்கிலிட்ட அதே தூக்கு மரத்தில் அவருடைய பேரன்களையும் தூக்கிலிட்ட கொடுமை சிவகங்கையில் தான் நிகழ்ந்தது. ஒரே மரத்தில் பல கிளைகளில் உடல்களும் வெட்டப்பட்ட தலைகளும் தொங்கின.

பெருங்கொடுமையாக திண்டுக்கல் பாளையக்காரர் 73 வயது விருப்பாச்‌‌‌சி கோபாலர், பாஞ்சாலங்குறிச்சி செவத்தையா, ஊமைத்துரை ஆகியோர் விசாரணைக்கே இடம் கொடாமல் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்கள். எழுபத்து மூன்று போராளிகளை கடல் கடந்த வேல்ஸ் தீவு, பினாங்கு பூமிகளுக்கு நாடு கடத்தினர். இதில் வேலுநாச்சியாரின் மருமகனும் சிவகங்கையின் மன்னருமான வேங்கண் பெரிய உடையாரும் மருதுபாண்டியரின் பதினைந்து வயது பாலகன் துரைசாமியும் அடக்கம். மருதுபாண்‌‌‌டியர்கள் மன்னர் பரம்பரை இல்லை என்பதினாலே மன்னர் பரம்பரையான புதுக்கோட்‌‌‌டை தொண்டைமான்‌‌‌, ஒய்யாத்தேவர் போன்றவர்கள் காட்டிக்கொடுத்தனர். திப்புசுல்தான், கட்டபொம்மன், மருதிருவர்‌‌‌களுக்கு எதிராக செயல்பட்டதன் காரணமாக வெள்ளையர்களிடம் பெரும் பலன்களை பரிசுகளையும் பெற்றார் புதுக்கோட்டை தொண்டைமான்‌‌‌. மருதிருவர் போன்ற பெரும் ஆளுமைகளை அவரது சாதி என்று பெருமை பேசிக்கொள்வது அவருக்கு செய்யும் அவமரியாதையாகும். மக்கள் நலனுக்காகவும் உரிமைகளுக்‌‌‌காகவும் சமரசமின்றி குரல் கொடுப்பதும் போராடுவதும் தான் அவர்களுக்கு செய்யும் மரியாதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »