தமிழின விரோத பாஜக அரசின் பிரதமர் மோடி ஏப்ரல் 8 அன்று வருவதாக அறிவிப்பு வெளியானவுடன் தமிழ்நாடு வழக்கம் போல் மோடியின் வருகைக்கு எதிராக போர்க்குரல் எழுப்பினார். இந்நிலையில், சென்னை-கோவை இடையே புதியதாக ‘வந்தேபாரத்’ என்ற ரயில் சேவை உட்பட புதிய ரயில்வே திட்டங்களை துவங்கி வைக்கவும், புதிய சாலை திட்டங்களை துவங்கி வைக்கவும், சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்கவும், மயிலாப்பூரில் உள்ள இராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்கவும் சனிக்கிழமை மாலை வருகை தந்தார்.
மோடியின் சென்னை வருகையை எதிர்த்து, மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் ‘மோடியே திரும்பிப் போ’ என்ற முழக்கத்தை எழுப்பின. மோடி வருகைக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டன. சமூக வலைத்தளங்களில் வழக்கம் போல #GoBackModi என்ற ஹேஷ்டாக்கை தமிழர்கள் உலக அளவில் டிரெண்ட் ஆக்கினர்.
2014 தேர்தலில் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சமயத்திலிருந்து இன்று வரை மோடி தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் தனது எதிர்ப்பை மே பதினேழு இயக்கம் அதன் தோழமை அமைப்புகளோடு இணைந்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இம்முறையும், மே பதினேழு இயக்கம் அறிவித்தபடி, மோடி வருகை தரும் ஏப்ரல் 8 சனிக்கிழமை காலையில், சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
நீட் தேர்வின் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களை மருத்துவத் துறையில் இருந்து வெளியேற்றுதல், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை நிராகரித்தல், என்எல்சி மூலம் தமிழர்களின் நிலங்களை அபகரித்தல், தமிழ்நாடு மாநிலத்திற்கு நிதி தர மறுத்தல், தமிழக மக்களின் எழுச்சிமிகு ஸ்டெர்லைட் போராட்டத்தை ஆளுநர் என்ற பெயரில் கொச்சைப்படுத்தும் ஆர்.என்.ரவி போன்ற ஆர்எஸ்எஸ் ஆட்களை அரசு பணிகளில் அமர்த்துதல் போன்ற எண்ணற்ற தமிழர் விரோத செயல்களை அரங்கேற்றும் பாஜக மோடி அரசை கண்டித்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக மே பதினேழு இயக்கம் அறிவித்தது.
தோழர்கள் அனைவரும் கருப்புக் கொடிகளை ஏந்தியபடி, தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தை சிதைக்க முயலும் மோடி அரசின் திட்டங்களை குறிப்பிட்டும், மோடி அரசின் தமிழின விரோத செயல்பாடுகளை குறிப்பிட்டும் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர்.
விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பேரறிவாளன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் செள.சுந்தரமூர்த்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் ஆவடி நாகராசன் உட்பட பல்வேறு தோழமை அமைப்புகளின் பிரதிநிதிகளும், தோழர்களுமென 200க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பாஜக மோடி அரசிற்கு எதிராக முழக்கங்களை பதிவு செய்தனர்.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தின் ஊடக சந்திப்பில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான திட்டங்களான இந்தி மொழித் திணிப்பு, NLC மூலம் 12500 ஏக்கர் நிலம் பறிப்பு, காவிரி டெல்டா பகுதிகளில் 1லட்சம் ஏக்கர் கையகப்படுத்தல் போன்ற பல்வேறு தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து பதிவு செய்தார். மேலும் தொடர்ந்து தமிழ் மீனவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் இலங்கை அரசோடு கைகோர்த்து இராணுவ ஒப்பந்தம் மற்றும் ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் இந்திய ஒன்றிய அரசின் மீது கடுமையான எதிர்ப்பை மே17 இயக்கம் பதிவு செய்தது.
ஒன்றிய அரசின் நிறுவனங்களில் தமிழ் இளைஞர்களின் வேலைவாய்ப்பு மறுப்பு, ஒன்றிய அரசின் ஊதுகுழலாய் செயல்படும் ஆளுநர் ஆர். என். ரவி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை கொச்சைப்படுத்தி பேசியதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
“தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடுப்புச் சட்டத்தை கிடப்பில் போட்டுள்ள ஒன்றிய அரசை கண்டித்தும், தமிழ் மொழிக்கு நிதியை குறைத்து, சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்குதல், வங்கி வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் புறக்கணித்தல் போன்ற பல்வேறு தமிழர் விரோத செயல்களை தொடர்ந்து பாஜக ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது” என்று தோழர் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.
தமிழர்களின் தொடர் எதிர்ப்புகளுக்கு அஞ்சிய ஒன்றிய அரசு , தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்க பணிகளை கைவிட்டு பின்வாங்கியுள்ளது. இதற்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய நம்மாழ்வார் அவர்களுக்கும் அவர்தம் வழியில் களம் கண்ட எண்ணற்ற தமிழர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
“இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளங்களையும் அதானி, அம்பானி போன்ற வடநாட்டு மார்வாடி நிறுவனங்களுக்கு அடகு வைக்கிறது ஒன்றிய அரசு. ஒருபுறம் வட இந்திய பழங்குடி மக்களின் பாதுகாவலராக காட்டிக்கொள்ளும் மோடி, மறுபுறம் வனப் பாதுகாப்புச் சட்டம் போன்ற உழைக்கும் பழங்குடி மக்களுக்கு எதிரான பல சட்டங்களை இயற்றி வருகிறது. ராமநவமி அன்று இஸ்லாமிய மக்களுக்கு எதிரான தாக்குதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் மோடியை எதிராகத்தான் இந்த கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
இறுதியாக, இந்த கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த தோழமை இயக்கங்களுக்கும், தோழர்களுக்கும் மற்றும் இப்போராட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்க்க உதவிய அனைத்து ஊடகங்களுக்கும் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தனது நன்றியை தெரிவித்தார்.
பின்னர், ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, காவல்துறை வந்திருந்த அனைவரையும் கைது செய்து அருகிலுள்ள மண்டபத்தில் வைத்திருந்தது. பின்னர் மோடி சென்னையை விட்டு வெளியேறியதும் இரவு விடுவித்தது.
மோடிக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உணர்வை பிரதிபலித்தது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழின விரோதிகளை தமிழர்கள் ஒருபோதும் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க போவதில்லை என்பதை இது காட்டுகிறது. மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருகை தர மோடியை சிந்திக்க வைக்கும்படியாக தமிழர்களின் இந்த எதிர்ப்பு அமைந்தது.