ஸ்டெர்லைட் வேதாந்தாவிடம் பணம் வாங்கிய பாஜக!

தமிழ் மக்களின் வரிப்பணத்தில் பல ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட சொகுசு பங்களாவில் உல்லாசமாக உண்டு கொழுத்து வாழ்ந்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவி, தங்கள் உயிரைக் கொடுத்து தமிழ்நாட்டு மக்களை காத்த ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளையும், போராடிய மக்களையும் இழிவுபடுத்தும் விதமாக “வெளிநாட்டு நிதியை பெற்று மக்களை தூண்டிவிட்டு தான் ஸ்டெர்லைட் மூடப்பட்டது” என்கிறார். இதன் மூலமாக இவர் நாசகார வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்திற்காக முகவராக வேலை செய்வது அம்பலமாகிறது.

வேதாந்தா நிறுவனத்தை காப்பாற்ற இரண்டு தேசிய கட்சிகளும் போட்டி போட்டு வேலை செய்து வந்துள்ளன என்பது அவர்கள் வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து பெற்ற நிதியின் மூலம் தெளிவாகிறது. இதனாலே நாசகார வேதாந்தா ஸ்டெர்லைட்டை எதிர்த்த மக்களை, அடிமை எடப்பாடி அரசு காவல்துறையை ஏவி 15 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது. நூற்றுக்கணக்கான மக்கள் சிறைபடுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். இவ்வளவு பாதிப்புகளுக்கு பிறகும் மக்கள் உறுதியாக நின்றதால் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. ஆனால் இந்த பாசிச பாஜக விசுவாசி ஆளுநர் இந்த வீரப் போராட்டத்தைக் கொச்சைபடுத்துகிறார்.

பொதுவாக வேதாந்தா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சட்டத்தில் இருக்கும் குறுக்கு வழிகளை கண்டறிந்து  தங்களின் வியாபார நலனுக்காக தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளுக்கு பல கோடி ரூபாயை நிதியாக கொடுப்பது வழக்கம். தேர்தலின் போது இக்கட்சிகள் தங்களுக்கு அளிக்கப்படும் நிதி குறித்த தகவலை பொது வெளியில் அறிவித்தாலும், இதில் கணக்கில் வராத பல நிதியும் உண்டு.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என 2010-ல் நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்ட போதும், 2013-ல் 100 கோடி அபராதம் விதித்து தடையை நீக்கிய போதும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கும், அதன்பின் ஆட்சிக்கு வந்த பாஜகவுக்கும் நிதி என்ற பெயரில் பல கோடி ரூபாயை வழங்கியது தெரியவந்துள்ளது.

இப்படியாக நாசகார ஸ்டெர்லைட் வேதாந்த நிறுவனம் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு பல கோடிகளை நன்கொடையாக வாரிக் கொடுத்துள்ள விடயம் தேர்தல் ஆணையம் மூலமாக தெரிய வந்துள்ளது.

2014 டிசம்பரில் பாஜக இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) தங்களுக்கு அளிக்கப்பட நன்கொடை குறித்து தாக்கல் செய்த அறிக்கையில், 2013-14 காலக்கட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் என்கிற பெயரில் 4 கோடி மற்றும் 3.5 கோடி என இருமுறை வழங்கப்பட்டதாகவும், மேலும், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற மற்றொரு பெயரில் 4.5 கோடி மற்றும் 4 கோடி நிதி வழங்கியதாகவும் தெரிவித்து இருந்தது. அதற்கு முன்பும் தொடர்ந்து பல ஆண்டுகளாக பாஜக கட்சிக்கு வேதாந்தா மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் மூலமாக நிதி வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டுநிறுவனம்நிதி
2004-2005சேஷா கோவா5,00,000 & 2,00,000
2005-2006சேஷா கோவா5,00,000
2007-2008சேஷா கோவா15,00,000 & 12,50,000  
2009-2010ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ்5 கோடி
2013-14ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் தூத்துக்குடி4 & 3.5 கோடி  
2013-14ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ்,மும்பை4.5 & 4 கோடி

2009-2010-ம் நிதியாண்டில் மும்பை ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் 5 கோடி நிதியை பாஜகவுக்கு வழங்கியுள்ளது. பாஜக ஆட்சியில் இல்லாத நேரத்திலும் இவ்வளவு பெரிய தொகை நன்கொடையாக வழங்க காரணமென்ன என்று இப்போது புரிகிறது.

வேதாந்தா நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக ஸ்டெர்லைட் மற்றும் சேஷா நிறுவனங்களின் மூலம் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதாக இரண்டு தேசிய கட்சிகளின் மீதும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (ADR) வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி வெளிநாட்டு நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக இந்திய அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பதை, வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு தொடர்பான சட்டம் 1976, கட்டுப்படுத்தியது. ஆனால் 2018-ன் நிதி மசோதாவில் ஒன்றிய அரசு Foreign Contribution Regulation Act ( FCRA)-ஐ திருத்தி, சட்டம் 1976-ல் இருந்து தப்பிக்கும் வழியாக மாற்றி அமைத்தனர்.

இந்த சட்டம் திருத்தப்படும் முன்பே லண்டனை சேர்ந்த வேதாந்தா நிறுவனம் 2004-2012ம் ஆண்டு காலக்கட்டத்திலேயே இரண்டு தேசிய கட்சிகளுக்கும் அதன் கிளை நிறுவனத்தின் மூலம் கோடிக்கணக்கில் நிதியை வாரி வழங்கியதை ADR அமைப்பு அம்பலப்படுத்தியது.

மேலும் தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில், கடந்த 2021-22 நிதியாண்டில் 8 தேசிய கட்சிகள் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த அளவில் ரூ.3,289 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில், பாஜகவின் பங்கு மட்டும் 58 சதவீத அளவிற்கு உள்ளது. கடந்த 2020-21-ம் நிதியாண்டில் ரூ.752 கோடியை நன்கொடையாக பெற்றுள்ள நிலையில் 2021-22-ல் பாஜக பெற்ற நன்கொடை 154 சதவீதம் அதிகரித்து ரூ.1,917 கோடியாக உயர்ந்து உள்ளதும் அதன் மூலமாக தெரிய வந்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு பாஜக தேர்தல் பத்திரம் (Electoral Bond) என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இது என்னவென்றால் 1,000, 10,000, 1,00,000, 10,00,000, 1,00,00,000 போன்ற மதிப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட SBI வங்கி கிளைகளில் கிடைக்கும் தேர்தல் பத்திரங்கள் மூலம் தனி நபர், பெரு நிறுவனங்கள் என அனைவரும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நிதி அளிக்கலாம் என்பதாகும்.

தேர்தலின்போது கட்சிகளுக்கு 20,000 ரூபாய்க்கு மேல் நிதி வழங்கியவர் பெயர் மற்றும் தொகையின் தரவுகளை நிதி ஆண்டின் இறுதியில் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற Representation of People Act சட்டத்தில் இடம்பெற்றிருந்தது. இதனை மேற்கூறிய Electoral Bond Scheme மூலம் 2018-ல் திருத்தியது பாஜக. இதனால் தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகளுக்கு நிதி வழங்குபவரின் பெயர்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கத் தேவையில்லை என்றானது. இதனால் கட்சிகளுக்கு குறிப்பாக பாஜகவுக்கு நிதியை வழங்குபவர்கள் பற்றி எந்த விவரமும் வெளியே வரமுடியாது.

மார்ச் 2018 -2022 காலக்கட்டத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட மொத்த நிதியில் பாஜகவிற்கு மட்டும் பாதியளவு சென்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பெறப்பட்ட மொத்தம் ரூ.9,208 கோடியில் ரூ.5,270 கோடி. அதாவது விற்கப்பட்ட மொத்த தேர்தல் பத்திரங்களில் 57 சதவீதத்தை பாஜக மட்டுமே பெற்று முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பல கோடிகளை நன்கொடையாக பெற்றுக் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொள்ளாது நாட்டின் வளங்களை, பொதுத்துறை நிறுவனங்களை அவர்களுக்கு தாரை வார்த்து வருகிறது மோடி அரசு. அதோடு அவர்களுக்கு முகவராக செயல்பட்டு அவர்களின் வியாபார நலனுக்காகவும் மக்களின் பணத்தையும் வாரி வழங்கி வருகிறது மோடி அரசு. அப்படித்தான் மோடியை போன்றே மோடியின் குரலாக, பாஜகவால் ஆளுநராக பதவி பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வரும் ஆளுநர் ரவி வேதாந்தா நிறுவன ஏஜெண்டாக பேசியிருக்கிறார். இவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு மக்களை சீரழிக்கும் நாசகார திட்டத்திற்கு துணைபோவது மட்டுமில்லாமல், போராடிய மக்களை பணம் பெற்றுக் கொண்டு போராடினார்கள் என்பது எந்த வகையில் நியாயம்? இத்தகைய கயவர்களை தமிழ்நாட்டில் அனுமதிக்கலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »