இட ஒதுக்கீடு என்பது சமூகத்தில் இந்து மதத்தால் கல்வி மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் பதவிகள் என பல துறைகளில், அவர்களின் பாதிப்பு நிலைக்கு ஏற்ப இடங்களை ஒதுக்கி அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை பெறச் செய்து, சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தும் ஒரு திட்டமாகும். இந்தியாவில் பல சாதிகள் கல்வி உரிமை, சொத்து உரிமை மறுக்கப்பட்டு சமூகத்தில் மிகவும் அவலமான முறையில் ஒடுக்கப்பட்டனர். இத்தகையில் ஒடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட வகுப்பினருக்கு பாதிக்கப்பட்ட அளவுக்கேற்ப உரிமைகளும், வாய்ப்புகளும் கிடைக்க இட ஒதுக்கீடு வழிவகை செய்து வருகிறது.
இட ஒதுக்கீடானது இந்து மதத்தால் கல்வி மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தினாலும் அதன் அடிப்படை நோக்கம் வறுமை ஒழிப்பு அல்ல. அனைத்து வகுப்பு மக்களும் எந்தக் காரணத்தால் ஒடுக்கப்பட்டார்களோ அதே காரணத்தைக் கொண்டு பிரதிநிதித்துவப்படுத்துவதே இட ஒதுக்கீட்டின் முதன்மை நோக்கம்.
அதோடு இட ஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்குவதற்கான கருவி அல்ல என பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளிலும் கூறப்பட்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவின் 15 பிரதமர்களில் 14 பேர்கள் இட ஒதுக்கீட்டின் இந்த நியதியை காப்பாற்றியிருக்க, இந்துத்துவ சனாதன வழிவந்த பாஜகவின் மோடி, பார்ப்பன கும்பல் பயன்பெறும் வகையில், SC, ST, OBC அல்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கிய (EWS – Economically Weaker Section) பொதுப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் விதமாக, 103-வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை கடந்த 2019-ம் ஆண்டு நிறைவேற்றி சமூக நீதிக்கு எதிரான வரலாற்று பிழையைச் செய்தார்.
“இந்திய அரசியல் சட்டம் முதன் முதலில் திருத்தப்பட்டபோது, அரசியல் சட்டத்தில் இணைக்கப்பட்ட 15 (4) என்ற புதிய பிரிவில், “சமூகரீதியாகவும், கல்வி நிலையிலும் (Socially and Educationally)” என்ற வார்த்தை மட்டுமே இணைக்கப்பட்டதும், “பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு” என்று எந்த வார்த்தைகளும் அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவிலும் இடம்பெறவில்லை என்பதும் குறி்ப்பிடத்தக்கது. அதேபோல
முதன் முதலாக அரசியல் சட்டம் திருத்தப்பட்டபோதும் சிலர் “பொருளாதார ரீதியாக” என்ற வார்த்தையும் இடம்பெற வேண்டுமென கேட்டதற்கு, அன்றைய பிரதமர் நேருவும், சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை என்பது தமிழ்நாடு தந்தை பெரியாரின் கருத்தியலை உள்வாங்கிய பூமி என்பதையே பறைசாற்றுகிறது.
ஆனால் தமிழ்நாடு தவிர்த்த ஏனைய மாநிலங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் 8 ஆயிரம் கூட ஆண்டு வருமானம் இல்லாத பல லட்சம் குடும்பங்கள் இந்தியாவில் இருக்க, ஆண்டு வருமானம் 8 லட்சம் சம்பாதிப்பவர்களை உயர் சாதி ஏழைகள் என வரையறை செய்து கல்வி மற்றும் அரசு வேலைகளின் பெரும்பாலான இடங்களை பார்ப்பன கும்பலுக்கு தாரைவார்த்து வருகிறது மோடி அரசு. மக்களும் இவர்களுடைய சூழ்ச்சிகளை அறியாது, தங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருவது கூட தெரியாது, மற்ற விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே SC, ST மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs) அனைத்திந்திய சேவைகளின் சில உயர்மட்டப் பிரிவுகளில் குறைந்த அளவிலே பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர், நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு வழங்கிய புள்ளிவிவரங்கள் படி கடந்த 5 ஆண்டுகளில் 4,365 பேர் இந்திய நிர்வாகப் பணி (IAS), இந்தியக் காவல் சேவை (IPS) மற்றும் இந்திய வனப் பணி (IFoS) ஆகியவற்றில் நேரடியாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களில் 334 பேர் (7.65 %) SC பிரிவினர், 166 பேர் (3.8%) ST பிரிவினர் மற்றும் 695 பேர் (15.92 %) மட்டுமே OBC பிரிவினர்.
SC, ST மற்றும் OBC சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மொத்த மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கு உள்ளனர். இடஒதுக்கீடு படி, அகில இந்தியப் பணிகளில் 49.5 சதவீதப் பணியிடங்கள் அவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும் ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் வெறும் 27.37 சதவீதப் பணியிடங்களே அவர்களுக்குப் போயுள்ளன. சத்தமே இல்லாமல் ஆர்எஸ்எஸ்-பாஜக OBC பிரிவு மற்றும் SC, ST பிரிவு மக்களுக்கு மிகப்பெரும் அநியாயத்தை இழைத்து வருவது இதன்மூலம் அம்பலமாகிறது.
மேலும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 34, அதில் 30 பேர் உயர் சாதியினர், 4 பேர் மட்டுமே விளிம்பு நிலை சமூகத்தைச் சார்ந்தவர்கள். அங்கும் இட ஒதுக்கீடு முழுமையாக நிரப்பப்படுவதில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது EWS அல்லாத பிற பிரிவை சேர்ந்த மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைப்பது அப்பட்டமாக தெரிகிறது.
அதேபோல RTI மற்றும் பிற அரசாங்கத் தரவுகளின் அடிப்படையில், IIT, IIS போன்ற உயர் அறிவியல் நிறுவனங்களில் ST/SC சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரதிநிதித்துவம் குறைந்த அளவில் இருப்பதாகவும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த (OBC) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கையும் இடஒதுக்கீட்டு அளவை விட குறைவாக உள்ளது என்றும் முன்னணி அறிவியல் இதழான நேச்சரில் பத்திரிக்கையாளர் அங்கூர் பாலிவால் எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் முதல் ஐந்து இடத்தில் உள்ள IIT மற்றும் IIS-ல், 98 சதவீத பேராசிரியர்களும், 90 சதவீதத்திற்கு அதிகமான உதவி பேராசிரியர்களும் சலுகை பெற்ற உயர் சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு இந்தியாவின் அறிவியல் துறைகள் அனைத்தும் உயர்சாதி குழுக்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது என்றும் அதில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதோடு 2015 முதல் 2019 வரையிலான அனைத்து IIT-களின் மொத்த மாணவர் சேர்க்கைகளில், 9.1% SC, 2.1% ST மற்றும் 23.2% இடங்கள் OBC பிரிவினருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 65.6 சதவீத இடங்களிலும் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு, பொது பிரிவினருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இட ஒதுக்கீட்டின் படி SC பிரிவினருக்கு 15%, ST பிரிவினருக்கு 7.5%, OBC பிரிவினருக்கு 27% கிடைத்திருக்க வேண்டிய நிலையில் ஒன்றிய பாஜக அரசு இவர்களுக்கு மாபெரும் அநீதியை இழைத்துள்ளது.
மேலும் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் உயர் பதவிகளில் சுமார் 90 சதவீதம் பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும், பிற்படுத்தப்பட்டோர் வெறும் 2-3 சதவீதம் பேர் மட்டுமே உள்ளதும்
குறித்து அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான ஜி. கருணாநிதி அவர்கள் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் வங்கிகளில் மேலாளர் போன்ற உயர் பதவிகளில் SC/ST/OBC பிரிவினர் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டுள்ள அளவுகளை பார்ப்பதன் மூலம் பார்ப்பன அதிகார வர்க்கம் ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் ஒடுக்கி கொள்ளையடிப்பவர்களுக்கு துணை போவது தெளிவாகிறது.
EWS இடஒதுக்கீடு, பின்தங்கிய பிரிவினருக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கும் ஒரு கருவியாக இடஒதுக்கீடு பயன்படுத்தப்பட்ட நிலையை மாற்றி, தற்போது பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு திட்டமாக மாற்றியுள்ளது. EWS இட ஒதுக்கீடானது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினரை ஒதுக்கிவிட்டு, “முன்னேறிய வகுப்பினருக்கு” மட்டுமே பலன்களை வழங்குவதால், அது சமத்துவம் மற்றும் சமூக நீதியின் கொள்கைகளை மீறியுள்ளது. அதோடு அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பையும் மீறியுள்ளது. மேலும் EWS இட ஒதுக்கீடு பெறும் சாதிகள் இந்திய சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளதும், சமூகத்தில் இதுவரை அவர்களுக்கு சாதி ரீதியாக எந்தவித அவமரியாதையும், ஒடுக்குமுறையும் ஏற்பட்டது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியகத்தில் (EPFO- Employees’ Provident Fund Organisation) துறைவாரியாக காலியாக உள்ள இடங்களின் தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் இந்திய ஒன்றியத்தில் வெறும் 3 சதவீதம் கூட இல்லாத அரியவகை ஏழைகளுக்கு EWS இட ஒதுக்கீடு மூலமாக 529 இடங்களும், நாட்டில் 60 சதவீதம் அளவிலிருக்கும் BC, OBC மக்களுக்கு வெறும் 514 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல சமீபத்தில் UPSCயின் (Union Public Service Commission) மூலம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EO/AO- Enforcement Officer/Accounts Officer) பதவிகளுக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். மொத்தம் 418 பதவிகள் காலியாக உள்ள நிலையில், அதில் OBC பிரிவினர்களுக்கு 112 பதவிகள் ஒதுக்க வேண்டியதில் வெறும் 78 இடங்களை மட்டுமே ஒதுக்கி இருக்கிறார்கள். அதே சமயம் 41 பதவிகள் மட்டுமே ஒதுக்க வேண்டிய EWSக்கு 51 இடங்களை ஒதுக்கியிருக்கிறார்கள்.
மேலும் IIT டெல்லியில் தற்போது தொழில்நுட்ப பணியாளர் பதவிகளுக்கு காலியிடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலிலும் EWS பிரிவினருக்கு 19 இடங்களும், பெரும்பான்மையாக இருக்கும் OBC பிரிவினருக்கு வெறும் 10 இடங்களும் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு என்பது அவமானம், இட ஒதுக்கீட்டால் தகுதி இல்லாதவர்கள் எல்லாம் வேலைக்கு வருகிறார்கள், குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் எல்லாருக்கும் உயர் கல்வி கற்க எளிதாக இடம் கிடைக்கிறது என்றெல்லாம், பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு அதற்கு பிரதிபலனாக கொடுக்கும் இட ஒதுக்கீட்டை கொச்சைப்படுத்தி, வீண் வதந்தியை பரப்பி BC, MBC மக்களின் வாயாலேயே இட ஒதுக்கீடு முறையே கூடாது என்று சொல்ல வைத்ததுதான் பார்ப்பன தந்திரம். ஆனால் அதே வேளையில் EWS இட ஒதுக்கீடு வழியாக மொத்த அரசு வேலையையும் தட்டி பறித்து கொண்டுள்ளனர் இந்த அரியவகை பார்ப்பன ஏழைகள்.
தந்தை பெரியார் இந்த பார்ப்பன தந்திரங்களை பற்றியெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துரைத்த காரணத்தினாலேயே தமிழர்கள் மிகவும் கவனமாக தமிழ்நாட்டில் EWS முறையை அமுல்படுத்த விடாமல் போராடி தடுத்து வருகின்றனர். ஒருவேளை இங்கும் அவர்களுக்கு EWS அடிப்படையில் 10% இடஒதுக்கீடு கொடுத்திருந்தால், தமிழ்நாட்டின் அரசு அலுவலகங்கள் அனைத்தும் பார்ப்பனர்களால் நிரப்பப்பட்டு இருக்கும்.
அதோடு ஆர்எஸ்எஸ்சினர் சமூக நீதிக்கு எதிராக எப்போதும் சதி செய்பவர்கள். சூத்திரர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதால் அவர்கள் அதிகாரம் பெற்றால் எதிர்காலத்தில் இது பார்பனர் உள்ளிட்ட உயர் சாதியினரை பாதிக்கும் என்பதற்கான சதித் திட்டத்தோடே இந்த EWS முறையை அமுல்படுத்தி மற்ற பின்தங்கிய வகுப்பினருக்கு அநீதி இழைத்து வருகிறார்கள்.
ஆகவே இனியாவது இடஒதுக்கீடு பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, அது காலங்காலமாக உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு செய்யும் பிரதிபலன் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் பார்ப்பனர்களின் சதியை புரிந்து கொள்ள முடியும். அதோடு இவர்களுக்கு இந்த ஆர்எஸ்எஸ்-பாஜக எவ்வாறு உதவுகின்றன என்ற சூழ்ச்சியை முறியடிக்க முடியும்.