புல்வாமா தாக்குதல்: அம்பலமான பாஜக

புல்வாமா தாக்குதல் பாஜகவின் திட்டமிட்ட தேர்தல் நாடகம் என அன்றே அம்பலப்படுத்திய திருமுருகன் காந்தி

பாஜக அரசின் திட்டமிட்ட தேர்தல் நாடகமே புல்வாமா தாக்குதல் என்று பாஜகவின் அரசியல் நாடகத்தை தாக்குதல் நடைபெற்ற அன்றே அம்பலப்படுத்தினார் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி. இதனால் அவர் கொலை மிரட்டல், வழக்கு என பல வழிகளில் அச்சுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தோழர் திருமுருகன் காந்தி அன்று பாசிச பாஜகவை பற்றி கூறியது முற்றிலும் உண்மை என பல சம்பவங்கள் ஏற்கனவே உறுதிபடுத்தியிருந்த நிலையில் தற்போது ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், ‘தி வயர்’ (The Wire) பத்திரிக்கையாளர் கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில், 2019-ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்கு ஒன்றிய பாஜக அரசே பொறுப்பு என்று கூறி அதை மேலும் உறுதிபடுத்தி உள்ளார்.

மக்களின் தேசபக்தியையும், இந்திய இராணுவத்தையும் தேர்தல் வெற்றிக்காக பாசிச பாஜக எப்படி பயன்படுத்திக் கொண்டது என்பதை பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்த, அதோடு பாஜகவால் நான்கு மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட சத்யாபால் மாலிக்கின் இந்த குற்றச்சாட்டை கவனத்தில் கொள்வது அவசியம்.

2019ல் காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு, ராஜ்நாத் சிங் தலைமையிலான அப்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே காரணம் என்றும், அப்போது பிரதமர் மோடி தன்னை அமைதியாக இருக்கச் சொன்னதாகவும் புல்வாமா தாக்குதல் நடந்தபோது ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் கூறியிருப்பது தற்போது கவனிக்கத்தக்க விடயமாக மாறியிருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் உண்மையானவை என்றும், இதைக் கூறுவதால் ஏற்படும் விளைவுகளை குறித்துத் தான் அஞ்சவில்லை என்றும் கூறியிருந்த நிலையில், அவர் எதிர்பார்த்தபடியே அவருக்கு காப்பீட்டு மோசடி ஊழலில் சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். அதுவும் அவர் கருத்துகளை தெரவித்த ஒரே வாரத்தில்.

பொதுவாக பெரிய கான்வாய்கள் சாலையில் பயணிப்பதில்லை. அதனால் சிஆர்பிஎஃப் தங்கள் வீரர்களை அழைத்துச் செல்ல 5 விமானங்கள் தேவைப்பட்ட நிலையில் அதை கேட்டதற்கு, உள்துறை அமைச்சகம் அதைத் தருவதற்கு மறுத்ததாகவும் மாலிக் கூறியுள்ளார். அதோடு, சிஆர்பிஎஃப் வாகனங்கள் செல்லும் வழியில் போதிய பாதுகாப்பு சோதனைகள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவர், சிஆர்பிஎஃப் கேட்டபடி அவர்களுக்கு விமானங்களை வழங்கி இருந்தால் இது நடந்திருக்காது என்றும், இது நம்முடைய தவறு காரணமாகவே நடந்தது என்றும் அன்று மாலையே பிரதமர் மோடியிடம் கூறியதாகவும், அதற்கு பிரதமர் மோடி, இதைப் பற்றி பேசாமல் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதேபோல தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலும் இந்த விடயத்தில் அமைதியாக இருக்க அறிவுறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளதும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

2021 பிப்ரவரி 14 அன்று ஃபிரண்ட் லைனில் வெளியான ஆய்வின் அறிக்கையும் இதையே தான் கூறுகிறது. ஃபிரண்ட்லைன் நடத்திய ஆய்வில் 02-01-2019 முதல் 13-02-2019 வரை 12 முறை தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த ஆயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை குறித்து உளவுத்துறை, தொடர்ச்சியாக தகவல் அளித்து வந்துள்ளதாக கூறுகிறது. அதோடு தாக்குதல் நடப்பதற்கு முந்தைய நாள் கூட 13-02-2019 அன்று பாதுகாப்பு படையினர் வரும் வழியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்ற எச்சரிக்கை தகவலும் அதுவும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல் துறை இயக்குநர் வரையில் அனுப்பப்பட்டுள்ளது எனவும் அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

மேலும் புல்வாமா-அவந்திப்பூர் நெடுஞ்சாலை மிகவும் ஆபத்தான பகுதி என்ற தகவலை மட்டும் 6 முறை தெரிவித்து இருப்பதும், அந்த இடம் ஜெய்ஷ்-இ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த ஏதுவான பகுதி என்றும் சுட்டிக்காட்டப்பட்டதாக அறிக்கை கூறுகிறது. மேலும் உளவுத்துறையின் இந்த தகவல்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் அனைத்து அதிகார மட்டங்களுக்கும் உடனுக்குடன் பகிரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் 2019 நாடளுமன்ற தேர்தலுக்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகமே என்பதை உறுதிப்படுத்தும் விதமாக ஊடகவியலாளர் என்ற பெயரில் மோடியின் துதி பாடும் அர்னாப் கோசாமியின் WhatsApp குறுஞ்செய்திகளை வெளியிட்டது மும்பை காவல்துறை. அதில் புல்வாமா தாக்குதல் நடக்க போகிறது என்று மூன்று நாட்களுக்கு முன்பே அர்னாப்புக்கு தெரியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2014ல் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 2019 வரை மோடி அரசின் மோசமான ஆட்சியால் மிகவும் அதள பாதாளத்தில் விழுந்த பொருளாதாரம், வேலையின்மை (மோடி அரசு மூடி மறைக்க முயன்றும் முடியாமல்போன தேசிய மாதிரி ஆய்வு நிறுவன அறிக்கையின்படி, ஒட்டுமொத்தத் தொழில் துறையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த தொழிலாளர்களை விட இன்று 1 கோடியே 10 லட்சம் பேர் குறைவாக உள்ளனர்) போன்ற பல காரணங்களால் மக்களிடம் அதிருப்தியை பெற்ற மோடி அரசுக்கு அப்போது எதிர்வர இருந்த நாடாளுமன்ற தேர்தலின் தோல்வி பயம் தொற்றிக்கொள்ள அதனை கையாள மேற்கொண்ட உத்திகளில் ஒன்றுதான் இந்த புல்வாமா தாக்குதல்.

காஷ்மீரில் தாக்குதல் நிச்சயமாக நடக்கப்போகிறது என்ற உளவுத் துறை எச்சரிக்கைகளை திட்டமிட்டே புறக்கணித்துள்ளது பாஜக. இந்த தாக்குதலுக்கு 2 நாட்கள் முன்பாக, ஜெய்ஷ்-இ அமைப்பு ஆப்கானிஸ்தானில், சரக்கு வாகனத்தை வைத்து நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் குறித்த கணொளி காட்சியை இணையத்தில் பதிவேற்றி, அதே போன்றதொரு தாக்குதல் காஷ்மீரிலும் நடக்கும் என்று அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. ஆகவே நிச்சயமாக ஒரு பெரிய தாக்குதல் காஷ்மீரில் நடக்கப் போகிறது என்பது மோடி அரசுக்கு தெரியாமலிருக்க வாய்ப்பே இல்லை. அதோடு 300 கிலோ பயங்கரமான வெடி மருந்துகளை கொண்ட வாகனம் இந்திய ராணுவப்படை சோதனைகளை எல்லாம் தாண்டி 10 நாட்கள் ஜம்மு காஷ்மீர் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்து விட்டு பின்பு அனைத்து பாதுகாப்புகளையும் மீறி ராணுவ வீரர்கள் வரும் நேரத்தை அறிந்து அவர்களின் வாகனத்தின் மீது சரியாக மோதி விபத்து ஏற்படுத்தியது என்றால், அது திட்டமிட்டே 40 வீரர்களை பலிக்கடா ஆக்க நடந்தேறிய பாஜகவின் திட்டமிட்ட தேர்தல் நாடகமே அன்றி வேறில்லை.

அதோடு இந்த தாக்குதல் 2019, பிப்ரவரி 14-ம் தேதி மாலை 3 அளவில் நடந்தது. இதை அறிந்து நாடே அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த நிலையில், நாட்டின் பிரதமர் உத்தரகாண்ட் கார்பெட் சரணாலயத்தில் டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியான “மேன் வெர்சஸ் வைல்ட்” எபிசோட் படப்பிடிப்பில் மும்முரமாக அந்த நாள் முழுக்க திட்டமிட்டபடி மாலை 6.30 மணி வரை படபிடிப்பை முடித்து 6.45 மணிக்கு தேநீரும் நொறுக்கு தீனியும் உண்டு கொண்டு எந்த வித பதட்டமும் இல்லாமல் இருந்துள்ளார்.

மேலும் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கிறோம் என்ற பெயரில் மேலும் ஒரு நாடகத்தை அரங்கேற்றியது மோடி அரசு. 1971 இந்திய-பாகிஸ்தான் போருக்கு பின்னர் இந்தியாவின் போர் விமானங்கள் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ பயிற்சி முகாம் மீது 26-02-2019 அன்று சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்ற ஒன்றை நடத்தியது. இதில் இந்திய விமானம் சுடப்பட்டு கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அதேபோல எந்தவித உரிய ஆதாரமும் இல்லாமல் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த 300 தீவிரவாதிகளை இந்திய படை கொன்றதாக அறிவித்தது மோடி அரசு. ஆனால் இதை பாகிஸ்தான் அப்போதே மறுத்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு எதிராக நமக்கு தேசபக்தி பாடம் எடுக்கும் பாஜக, ஒன்றிய பாதுகாப்பு துறை செயலர் அஜித் தோவலின் மகன் சௌர்யா தோவல் பாகிஸ்தான் பங்குதாரர் சையத் அலி அப்பாஸ் உடன் இணைந்து நடத்தும் ஜெமினி ஃபைனான்சியல் சர்வீசஸ் வியாபாரம் குறித்து கண்டுகொள்ளாமல் கள்ள மெளனம் காத்து வருகிறது. அவர் பாகிஸ்தானிய முதலாளி உடன் தொழில் புரியும் உண்மையை திட்டமிட்டே புறக்கணித்துள்ளது பாஜக மோடி அரசு.

இ‌த்தகைய காரணங்களால் தான் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், இது போன்று அத்துமீறிய தாக்குதல்களை பாகிஸ்தான் மீது தொடுப்பதற்கு பதிலாக உலக அரங்கில் பாகிஸ்தான் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து அதன் மீது பொருளாதார தடையை கொண்டு வரும் முயற்சியில் இந்தியா இறங்கியிருக்க வேண்டும் என்றும், உலகின் பல நாடுகள் மீது இப்படியாக பொருளாதார தடை கொண்டுவரப்பட்டதை குறிப்பிட்டு, அதுதான் நடைமுறையும் கூட என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதாக கூறும் மோடி அரசு, அஜித் தோவலின் மகன் சௌர்யா தோவலின் வணிக பங்குதாரர்களாக பாகிஸ்தானியர் இருப்பதாகவும் இதனால் இந்த புல்வாமா தாக்குதல் ஏன் பாகிஸ்தானும் பாஜகவும் சேர்ந்து செய்திருக்க கூடாது எனவும் தோழர் திருமுருகன் காந்தி தனது சந்தேகத்தை எழுப்பியிருந்தார். இதற்காக இந்துத்துவ பாஜக கும்பல் தொடர்ச்சியாக அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது. மேலும் அவருடைய பேட்டிக்காக அவர்மீது வழக்கும் தொடுத்தது. அதோடு விடாமல் இந்த புல்வாமா நாடகத்தைப் பற்றி அவர் சத்யம் தொலைக்காட்சிக்கு அளித்த விரிவான பேட்டியின் ஒளிபரப்பின் போது கடுமையான மிரட்டல்கள் தொலைக்காட்சிக்கு வந்ததால் பேட்டியின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு தொடர்ச்சியாக மிரட்டல் அழைப்புகள் நூற்றுக்கணக்கில் தொலைபேசிக்கு வந்த வண்ணம் இருந்தது. இது குறித்து அவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் தனக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்ததும் குறிப்பிடத்தக்கது. பாஜகவின் தேர்தலுக்கான இந்த நாடகத்தை அன்று அம்பலப்படுத்தியதற்காக கடுமையான நெருக்கடியை மே 17 இயக்கம் சந்தித்தது.

அன்று ஆட்சியில் இருந்த பாஜக ஆர்எஸ்எஸ் பயங்கரவாத கும்பல் ராணுவ வீரர்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தவர்களை எல்லாம் தேசவிரோதிகள் என்றும் தேசப்பற்று இல்லாதவர்கள் என்றும் கூறியது. அதோடு ராணுவ வீரர்களின் தியாகத்தை அரசியலாக்கி கொச்சைப் படுத்தாதீர்கள் என்றும் மக்களுக்கு தேசபக்தி பாடம் எடுத்தனர்.

ஆனால் இத்தாக்குதலை திட்டமிட்டே நடத்தி அப்பாவி ராணுவ வீரர்களை அநியாயமாக பலிகொடுத்து தேசபக்தி எனும் பெயரில் அனுதாப அலையை உண்டாக்கி பாஜக ஓட்டுகளை அள்ளி வெற்றி பெற்றது. 2019 தேர்தலுக்காக புல்வாமா தாக்குதலை கையில் எடுத்ததைப் போல எதிர்வரும் 2024 நாடளுமன்ற தேர்தலுக்காக எதையும் செய்ய துணியும் இந்த பாசிச கும்பல். இனியும் இவர்களுடைய சதி வலையில் சிக்காமல் இவர்களை அம்பலப்படுத்தி அந்நியப்படுத்துவதே நமக்கான தலையாய பணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »