தமிழ்த்தேசிய கவிப் பேராற்றல் பாரதிதாசன்

“புரட்சிக்கவிஞரின் பாடல்களைப் படிக்கும் போது அவை நம்முடைய இரத்தத்தில் இரத்தமாகக் கலக்கின்றன; உணர்ச்சி நரம்புகளிலேயே ஊற்றெடுக்கின்றது; படிக்கின்றோம், பாரதிதாசனாகின்றோம்!” – பேரறிஞர் அண்ணாவின் பாராட்டுரைக்கு ஏற்பவே பாரதிதாசனின் படைப்புகள், அவை எழுதப்பட்ட போது அவர் அனுபவித்த உணர்வுகளை அப்படியே நமக்குள் கடத்தி விடும் வலிமை உடையது.

தமிழ் மொழியைக் கொண்டு அவர் வரைந்த கருத்தோவியங்கள் அனைத்துமே புரட்சியை, எழுச்சியை, பகுத்தறிவை, சீர்திருத்தத்தை, அழகியலை நமக்குள் தீட்டுபவை.

“தமிழ் எங்கள் உயிர் என்பதாலே – வெல்லும்
தரம் உண்டு தமிழருக்கு இப்புவி மேலே”

– எத்தனை பகைகள் சூழ்ந்தாலும் தமிழை உயிராகக் கொண்ட தமிழர்கள் வெல்வார்கள் என்று காலங்காலமாக தமிழர்களின் பயணத்தை தமிழே வழிநடத்தியிருப்பதை வெளிப்படுத்துகிறார் புரட்சிக்கவிஞர்.

தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்“, “சாதி ஒழித்திடல் ஒன்று, நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று“, “தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் அழகு காப்பாய்“, “கடல் போல செந்தமிழைப் பெருக்க வேண்டும்” – தமிழுக்கு ஒவ்வொரு தமிழரும் செய்ய வேண்டிய கடமைகளைக் கூறிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கடல் போன்ற பாடல் வரிகளில் சிறு துளிகளே இவை.

பெரியாரின் கைத்தடி போல, தமிழர்களுக்கான பெரியாரின் போராட்டக் களங்களில் ஊன்றுகோலாக பாரதிதாசன் பாடல்களே முன்நின்றன. அன்றைய காலகட்டங்களில் பெரியாரின் எண்ணங்களுக்கு கவி வடிவம் கொடுத்தவர் பாரதிதாசன். இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தை எழுச்சி வரிகளால் வளர்த்தார். தமிழ் இளைஞர்களைத் தட்டி எழுப்பும் வரிகளை எழுச்சியுடன் இயற்றினார். இந்தி வந்து நுழைந்தால் தமிழுக்கு நேரப் போகும் இன்னல்களைக் களைய விரும்பாதப் புலவர்களை, எழுத்தாளர்களை, தமிழ்மடத் தலைவர்களை சாடுகிறார்.

“தமிழ் தானே உமை வாழ்விக்கின்றது
சாம்பிணமாகத் கிடப்பதுவோ?”

என்று புலவர்களையும்,

“தமிழைச் சோற்றுக்கு அடகாய் வைத்துத் தன்மானத்தை விற்பதுவா?”

என்று எழுத்தாளர்களையும்,

“தமிழர்க் கோயிற்குள் வடமொழிச்சியர் தாளில் வீழ்ந்து மறப்பதுவா?”

என்று தமிழ் மடத் தலைவர்களையும் கடுமையாக பேசிவிட்டு, இளைஞர்களிடம்,

“தமிழ்ப்பகை மாய்த்த வீரர்கள் என்ற தன்மானத்தைப் பூணுங்கள்”

– என அறைகூவல் விடுக்கிறார்.

இளைஞர்களை மட்டுமல்லாமல் பெண்களையும், முதியவர்களையும் அழைக்கிறார்.

“ஒருவானில் பன்னிலவாய்
உயர்தமிழ்ப் பெண்களெலாம்
எழுக! உங்கள்
திருவான செந்தமிழின்
சிறுமையினைத் தீர்ப்பதென
எழுக!”

– இந்தி ஆதிக்கவாதிகளால் தமிழுக்கு நேர்ந்த துயர் களைத்திட பாகுபாடு பார்க்காமல் அனைவரையும் எழுச்சியுடன் வரவேற்கும் பாடலை வடிக்கிறார். தமிழர்களின் உள்ளங்களை மென்மையாக ஊடுருவும் விதமாக,

“கட்டாயம் இந்திதனைக் கற்க அரசினர்கள்
சட்டமியற்றுவதில் சம்மதமோ என் தமிழா!
கன்னல் தமிழ்க் கல்வி கட்டாயமாக்காமல்
இன்னல் தரும் இந்தியினை எண்ணுவதோ என் தமிழா!
தென்றற் பொதியமலை செந்தமிழ்க்கு மீதியதாய்
நின்றஉயிர் இந்தி வந்தால் நீங்கி விடும் என் தமிழா!
சாதி ஒழித்துச் சமயப்பித்தம் தொலைத்தால்
மீதி இருத்தல் விடுதலை தான் என் தமிழா!”

– இவ்வாறு இன உணர்வைத் தூண்டும் வரிகளைப் படித்த பின்பு தாய்மொழி காக்க வீதிகளில் மக்கள் எழுச்சி கொள்ளாமல் எப்படி இருந்து விட முடியும்? திரண்டார்கள் மக்கள். அரண்டார்கள் இந்தி ஆதிக்கவாதிகள்.

ஈட்டியைக் கூர் தீட்டியது போல சொற்கள் ஒவ்வொன்றையும் தீட்டியவர் பாரதிதாசன்.

“அல்லற்கஞ்சோம் கடுமொழி
சொல்லற்கஞ்சோம், ஒரு சிறை
செல்லற்கஞ்சோம், அஞ்சோம்
க்குக் கஞ்சோம்…
அண்டிற்றா இந்நாட்டில்
அயலானின் இந்தி மொழி?
மண்டைப்புழு மாய்ந்தது வென்று
அதிராயோ முரசே!”

– முரசு கொட்டுகிறார்.

 “தூங்குதல் போன்றது சாக்காடு
பின்னர்
தூங்கி விழிப்பது நம் பிறப்புத்
தீங்குள்ள இந்தியை நாம்
எதிர்ப்போம் – உயிர்
தித்திப்பை எண்ணிடப்
போவதில்லை! – உயிர் வெல்லமன்று”

– என்று இந்தி எதிர்க்க வாருங்கள் என கூக்குரலிட்ட இந்த அழைப்பிற்கு செல்லாதவர்களும் இருக்க முடியுமா என்ன?

தமிழர்களின் தன்னாட்சிக்கு தணியாத தாகம் கொண்டவராய் வாழ்ந்தவர் பாரதிதாசன். தில்லிக்கு தமிழர்கள் அடங்கி நடப்பதை,

“மானம் இழப்பதிலும்
மாள்வதே மேல் என்பான்
ஆன தமிழன், இந்நாள்
தில்லிக்கே ஆட்பட்டான்;
பூனைக்குத் தோழி
புலியும் அடங்குவதோ!”

என்றும்

“தன்னாட்டைத் தான் பெறான் உலகில்
எந்நாட்டான் ஆயினும் இழிந்தவன்
தோழி”

– என்றும் தோழியிடம் கூறுவதாக, தன்னாட்சியே இழிவுகளற்ற, தன்மானப் பாதை என்கிற தாக்கத்தை தமிழர்களிடம் ஏற்படுத்துகிறார்.

“தமிழனுக்கு உலகம் நடுங்கிய துண்டு – அங்குத்
தன்னாட்சி நிறுவிட எண்ணியதுண்டா?
தமதே என்று பிறர் பொருள் கொண்டு
தாம் வாழ எண்ணியோர் எங்குளார் பண்டு”

– ஆதிக்கவாதிகளிடம் இருந்து விலகி தமிழர்கள் தன்னாட்சி உரிமை பெற வேண்டிய அவசியத்தை நம் பழந்தமிழர்களின் பண்பிலிருந்து விளக்குகிறார்.

தொழிலாளர்களின் நலன் உயரும் வழிகளை நுட்பமாக சிந்திந்தவர் பாரதிதாசன். சாதி, மதம் உள்ளிட்ட எந்த பாகுபாடும் பார்க்காமல் தமிழர்கள் கூடித் தொழில் செய்தால் தான் வறுமை அண்டாது எனக் கூறுகிறார்.

“வாடித் தொழிலின்றி வறுமையாற் சாவதெல்லாம்
கூடித் தொழில் செய்யாக் குற்றத்தால் தோழர்களே,
கூடைமுறம் கட்டுநரும் கூடித் தொழில் செய்யின்
தேடி வரும் லாபம் சிறப்பு வரும் தோழர்களே,”

– என்கிறார்.

ஒவ்வொரு தொழிலாளர்களும் கடுமையான உடலுழைப்பைக் கொடுத்தும் பலனை அனுபவிக்க முடியாத நிலையில் வைத்திருக்கும் மதத் தலைவர்களை, நில உடைமையாளர்களை, கோடீசுவரர்களை நோக்கி,

“செப்புதல் கேட்பீர்! – இந்தச்
செகத் தொழிலாளர்கள் மிகப்பலர்
ஆதலின்
கப்பல்களாக – இனித்
தொழும்பர்களாக மதித்திட
வேண்டாம்!
இப்பொழுதே நீர் – பொது
இன்பம் விளைந்திட உங்களின்
சொத்தை
ஒப்படைப்பீரே – எங்கள்
உடலில் இரத்தம் கொதிப்பேறு
 முன்பே”

– எனத் தொழிலாளர்களுக்கான பிரதிநிதியாய் சுரண்டல் பேர்வழிகளை பாடல் மூலம் எச்சரிக்கிறார். முதலாளிகளுக்கு இணங்கி தொழிலாளர்களின் பணி நேரத்தை இன்று 12 மணி நேரமாக உயர்த்தத் துடிக்கும் மாநில, ஒன்றிய அரசுகளை எதிர்க்கும் தொழிலாளர்களுக்கு இந்த வரிகள் ஒரு புதிய சக்தியைத் தரக் கூடியவை.

திராவிட இயக்கம் முன்னெடுத்த சீர்திருத்தங்களை கவித்தூணாகத் தாங்கியவர் பாரதிதாசன். கடவுள் மறுப்பு, சாதி, மத ஒழிப்பு, குழந்தை மணம் ஒழிப்பு, கைம்பெண் மறுமணம், வரதட்சணை ஒழிப்பு, சடங்கு சம்பிரதாய மூடத்தனங்கள் ஒழிப்பு போன்ற சீர்திருத்தங்களுக்கு புரட்சிக் கவிஞரின் பாடல்கள் வலுவாய் துணை சேர்த்தன.

“மானிடரின் தோளின் மகத்துவத்தைக்
காட்ட வந்த
தேனின் பெருக்கே, என் செந்தமிழே
கண்ணுறங்கு”

– என ஆண் குழந்தைக்கான தாலாட்டு பாடலும், பெண் குழந்தைக்கான தாலாட்டுப் பாடலாக,

 “தெய்விகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை
உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே!
வாயில் இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைத்
கோயில் என்று காசு தரும் கொள்கை தவிர்ப்பவளே!
சாணிக்குப் பொட்டிட்டு சாமி என்பார் செய்கைக்கு
நாணி உறங்கு! நகைத்து நீ கண்ணுறங்கு!”

– என மூடத்தனங்களை முளையிலேயே கிள்ளி எறிந்து விடும் தன்மை உடையது பாரதிதாசனின் தாலாட்டுப் பாடல்கள்.

பெண்களுக்கு சிறு வயதிலேயே மணமுடித்து வைப்பதையும், கைம்பெண் ஆகிவிட்ட சிறுமிக்கு மறுமணம் செய்வதையும் கூட இந்து தர்மத்தின் படி குற்றமாக முன்வைத்திருந்தனர் கொடியவர்கள். இந்து தர்மம் என்ற பெயரில் ஆரியர்களின் மனுதர்மம் செய்த கொடுமைகள் எண்ணிலடங்காதவை. அப்படி ஒன்றாக நடைபெற்றுக் கொண்டிருந்த குழந்தைத் திருமணத்தின் கொடுமையை,

“கூவத் தெரியாக் குயிலின் குஞ்சு.
தாவாச் சிறுமான் மோவா அரும்பு!
தாலியறுத்துத் தந்தையின் வீட்டில்”

– என வேதனையுடன் விவரிக்கிறார்.

மனைவியை இழந்தவர்கள் வேறு திருமணம் செய்து கொள்வது இயல்பானதாக வரையறுக்கப்பட்டும், கைம்பெண் மறுமணம் மறுக்கப்பட்டும் இருந்த காலகட்டத்தில் தமிழர்களிடம் கோரிக்கை வைக்கும் விதமாக,

“காதல் சுரக்கின்ற நெஞ்சத்திலே கெட்ட
கைம்மையைத் தூர்க்காதீர்! – ஒரு
கட்டழகன் திருத்தோளினைச் சேர்ந்திட
சாத்திரம் பார்க்காதீர்!”

– என அறிவுறுத்துகிறார்.

தமிழர்களின் இணையேற்பு விழாக்கள் முதற்கொண்டு பல விழாக்களிலும் பார்ப்பனியம் புகுந்து தமிழர் மரபையேப் புரட்டிப் போட்டதை எளிமையாக தமிழர்களுக்குப் புரிய வைத்து விடும் கவிதைக்கு சொந்தக்காரர் பாரதிதாசன்.

“விவாக சுப முகூர்த்தமென
வெளிப்படுத்தும் மண அழைப்பில்
மேன்மை என்ன?
அவாள் இவாள் என்றுரைக்கும்
பார்ப்பனரின் அடிதொடர்தல்
மடமை யன்றோ?
உவகைபெறத் தமிழர் மணம்
உயிர் பெறுங்கால் உயிரற்ற
வட சொல் கூச்சல்
கவலையினை ஆக்காதோ!
மண விழவு காண்பவரே
கழறுவீரே!

என திருமணம் முடிப்பவர்களிடம் கேட்கிறார்.

கிபி 15-ம் நூற்றாண்டுக்கு பிறகே தமிழ்நாட்டில் கால் பதித்த தீபாவளி என்னும் விழா எப்படி தமிழர்களின் விழாவானது? நரகன், அசுரன், இராக்கதன் என இவையெல்லாம் தமிழரைக் குறிப்பிடும் போது,

நரகனைக் கொன்ற நாள் நல்விழா நாளா?” எனக் காட்டம் கொள்கிறார். ”வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல் கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்” – என தமிழர்களை இழிவுபடுத்த ஆரியம் எழுதிய கட்டுக் கதைகளை வழக்கத்திற்காக கொண்டாடுவதாக சொல்லுகின்ற தமிழர்களுக்கு அறிவுரைக் கூறுகிறார்.

தமிழர்களின் விழாவாக பொங்கல் நன்னாளே என்பதை வரலாற்றுப்பூர்வமாக தனது பாடல் வரிகளில் அழுத்தந்திருத்தமாக பதிக்கிறார்.

“பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல்நன்னாள்,
போற்றிவிழாக் கொண்டாடி…”

– தமிழர்களின் மூளைகளில் அருவருப்பான கதைகளில் பிறந்த ஆண்டுகளை ஆரியம் புகுத்திய சித்திரை 1 தமிழர் புத்தாண்டு அல்ல, தை (சுறவம்) முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதை தமிழர்களுக்கு உறைக்கும் வண்ணம் கூறுகிறார் பாரதிதாசன்.

கோவில் கருவறைக்குள் இன்றளவும் தமிழை நுழைய விடாமல் தடுக்கும் ஆரியத்தின் சூழ்ச்சியினை தனது பாடல்களால் சீற்றத்துடன் கேள்வி எழுப்புகிறார்,

“சொற்கோவின் நற்போற்றித்
திரு அகவல் செந்தமிழில்
இருக்கும் போது
கற்கோயில் உட்புறத்தில்
கால்வைத்தது எவ்வாறு
சகத்ர நாமம்?”,

“மேற்படுத்தும் எவற்றினுக்கும்
மேற்பட்ட தன்மொழியைத்
தமிழைத் தீயோர்
போற்றுவதற்கு உரியதொரு
பொதுவினின்று நீக்கி வைத்தால்
பொறுப்பது உண்டோ?”

– உயர்வான இடத்தில் வைத்துப் போற்றுகின்ற தமிழுக்கு இடம் இல்லை என்றால் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது என தமிழர்களுக்கு ஆணையிடுகிறார்.

“தூங்கும் புலியைப் பறை கொண்டெழுப்பினோம்,
தூய தமிழரைத் தமிழ் கொண்டெழுப்பினோம்”,

“பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு
திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில் வா!”,

“கொலை வாளினை எடடா, மிகு
கொடியோர் செயல் அறவே”

– என எக்காலமும் தமிழர்களின் விடுதலை உணர்ச்சிகளைத் தூண்டும் வரிகளில் என்றும் நிறைவாய் நம்மிடம் வாழ்கிறார் பாரதிதாசன்.

“பாரதிதாசன் பாக்கள் தமிழனின் வீரத்தையும், காதலையும் நினைவூட்டும்: பாரதிதாசன் முகத்திலே அமைதி தவழாது; அதற்குப் பதிலாக புரட்சி வாடை வீசும்; கோப சுவாலை வீசும்;” – என்ற அண்ணாவின் சொற்பெருக்குகளே பாரதிதாசனின் பாடல்களுக்கு சான்றுகள்.

இயற்கையின் மீது கொண்ட நேசிப்பில் எழுதிய பாடல்களால் அளவற்ற இனிமையைத் தருபவர். பகுத்தறிவைப் பழுதுபார்க்கும் கவிதைகளில் நிகரற்றவர். தமிழ் சமூகத்தின் சீர்திருத்தங்களுக்கு சொற்களால் பயிரிட்டவர். இந்தி எதிர்ப்பில் முன்னணியில் நிற்கும் பாடலுக்கு சொந்தக்காரர். மண்டைச் சுரப்பை உலகு தொழும் – என பெரியாரின் அறிவிற்குப் புகழாரம் சூட்டியவர். தமிழர்களின் எழுச்சிக்குத் தேவையான பாடல் வரிகளால் இன உணர்வை செதுக்கியவர். அள்ள அள்ளக் குறையாத கவிகளும், எழுத எழுதத் தீராத கருத்துகளும் மண்டிக் கிடக்கும் பாரதிதாசனின் பாடல்கள் இளைய சமூகத்திடம் சேர்ப்பிக்கப்பட வேண்டும். தமிழ் உணர்வை, தமிழர்களின் இன உணர்வை மேம்படச் செய்யும் எளிமையான கவிதைகளின் கலைக்கோட்டம் பாரதிதாசன். நமக்கான கருத்துக் கருவூலத்தை போற்றிப் புகழ்ந்து, அனைவரின் கையிலும் அவரின் எழுச்சியூட்டும் பாடல்களை தவழச் செய்யும் பணிகளை மேற்கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »