குஜராத், கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து நிராகரிக்கப்பட்டு துரத்தப்பட்ட நிலையில், வேதாந்தா நிறுவனம் 1996ல் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் நிறுவியது. ஆனால் அது செயல்பட ஆரம்பித்த அன்றிலிருந்தே, தூத்துக்குடி மக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்தே வந்ததுள்ளது. அப்படித் தான் 2018லும் எதிர்ப்பு தெரிவித்த தூத்துக்குடி மக்களை தனது பணபலத்தைக் கொண்டு அரச பயங்கரவாதத்தை ஏவி 15 அப்பாவி தமிழர்களை காவு வாங்கியது நாசகார ஸ்டெர்லைட் நிறுவனம்.
இந்த கொலைகார ஆலையை மீண்டும் திறக்க, பல வழிகளில் தனது சித்து விளையாட்டுகள் மூலம் பாஜக அரசின் ஆதரவோடு முயற்சித்து வருகிறது வேதாந்தா நிறுவனம். அந்த வகையில் தான் ஸ்டெர்லைட் ஆலை நாட்டின் சொத்து எனவும், நாட்டின் நன்மைக்காக அதை பயன்படுத்த வேண்டும் எனவும், நிபுணர் குழுவின் கண்காணிப்பின் கீழ் ஆலையை இயக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் பிராமணப்பத்திரம் தாக்கல் செய்தது.
அதைத்தொடர்ந்து இறுதித் தீர்ப்புக்காக அவர்கள் காத்திருக்கும் இந்த தருணத்தில் கடந்த ஜுன் 12 அன்று, ஆலையை புதுப்பிக்க ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அதன் ஒரு பகுதியாக ஒப்பந்த நிறுவனங்களுக்கான EOI-ஐ (Expression of Interest) வெளியிட்டது. அதோடு நில்லாமல் அங்கு உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான முன்னேற்பாடாக மூலப் பொருட்களை வழங்குவதற்கான புதிய EOI ஒப்பந்த விளம்பரத்தையும் ஜுன் 21 அன்று வெளியிட்டுள்ளது.
1996-ம் ஆண்டு முதல் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இயங்கி வந்த வேதாந்தா நிறுவனத்தின் தாமிர உருக்காலையில் இருந்து வெளியேறிய கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபட்டு, புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டதால் அந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரிய மக்களின் தொடர் போராட்டத்தில் 2018, மே 22 அன்று போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர்கள் பலியாயினர். அதன் பின்பு ஸ்டெர்லைட் ஆலையை மூட 2018, மே 28 அன்று அரசாணை வெளியிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூடி ‘சீல்’ வைத்தது தமிழக அரசு.
அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்தனர். பின்னர் உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி பிரிவில் 3 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, வேதாந்தா நிறுவனம் ஆலையில் உள்ள எந்திர தளவாடங்கள் துருப் பிடித்து இருப்பதாகக் கூறி, அதை பராமரிக்க அனுமதி வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்து மனு தாக்கல் செய்தது. ஆனால் அதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.
இந்நிலையில் தான், தற்போது ஜுன் 21 அன்று தூத்துக்குடி யூனிட்டில் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான ஆயத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மூலப்பொருட்களை கொள்முதல் செய்ய ஒப்பந்த நிறுவனங்களுக்கான புதிய ஆர்வத்தை EOI-ஐ வேதாந்தா நிறுவனம் வெளிப்படுத்தி உள்ளது. அதன்படி ஆண்டுக்கு 1.4 மில்லியன் மெட்ரிக் டன் (MT) செறிவூட்டப்பட்ட செப்பு, 700,000 MT இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி, 60000 MT பெட்ரோலியப் பொருட்கள், 7000 MT எரிவாயு, 42000 MT சுண்ணாம்புத் தூள், 20000 MT சுண்ணாம்புக்கல் மற்றும் இதர பல பொருட்களை வழங்க ஒப்பந்த நிறுவனங்களை அழைத்துள்ளது.
இதற்கு முன்பாக, 12-6-23 அன்று ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்டுள்ள EOIல் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மூடப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு சில குறிப்பிடத்தக்க வகையான மறுசீரமைப்பு தேவை, எனவே ஆலையின் மறுசீரமைப்பு மற்றும் மறுபடியும் இயக்குவதற்கான முறையில் கட்டடம், கட்டமைப்பு பாதுகாப்பு மதிப்பீட்டாய்வு, ஆலை மற்றும் இயந்திரங்களை பழுது பார்த்தல், புதுப்பித்தல், அல்லது மாற்றுதல், மற்றும் இயந்திரங்களை இயக்குதல் போன்ற பல பணிகளைச் செய்ய ஒப்பந்த நிறுவனங்களை அழைத்து இருந்தது.
அந்த EOI-ல், இந்தியாவின் தேவையில் சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்திற்கான 40 சதவீதத்தை ஸ்டெர்லைட் தொழிற்சாலை பூர்த்தி செய்துள்ளதாகவும், இது தென்னிந்தியாவின் கந்தக அமிலத்தின் முதன்மை உற்பத்தியாளராக இருந்தது எனவும், இதன் மூலம் சுமார் 4,000 பேர் நேரடியாகவும், 25,000 பேர் மறைமுகமாகவும் மற்றும் 400 பேர் கீழ்நிலை MSMEகளிலும் வேலை பெற்றதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் முந்தைய ஆண்டுகளில் நிதியாண்டு 18 (FY18) வரை ஸ்டெர்லைட் ஆலை அரசின் கருவூலத்திற்கு 13,000 கோடி ரூபாய்க்கு மேல் பங்களித்து உள்ளது எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும் ஆலையை மீண்டும் துவக்குவதற்கு ஏதுவாக, அங்கு உள்ளூர் மக்களால் எந்தவொரு இடைஞ்சலும் இல்லாமலிருக்க, அவர்களை சமாதானபடுத்தும் நோக்கில் உள்ளூர் மக்களுக்கு வேலைகளை வழங்கவும், அதற்கான ஒப்பந்ததாரர்கள் தேவையென தெரிவித்துள்ளது நயவஞ்சக வேதாந்தா நிறுவனம்.
ஜூன் 12 அன்று வெளியான EOIல், தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 4000 நபர்களை ஸ்டெர்லைட் நிறுவனத்தில் பல பிரிவுகளில் பணியமர்த்துவதற்கு ஆர்வமுள்ள ஒப்பந்ததாரர்கள், குறிப்பாக தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ள உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உண்மையில் வேதாந்தாவில் இதற்கு முன்னர் வடநாட்டவரே அதிகளவில் வேலைப் பார்த்து உள்ளனர். அப்போது சில அடிமட்ட பிரிவுகளிலும், ஆபத்தான பிரிவுகளிலும் மட்டுமே தமிழர்களுக்கு வேலைகளை கொடுத்துள்ளனர். உண்மை நிலவரம் இப்படி இருக்க தமிழர்களுக்கு வேலை என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகமே.
ஆக, இப்படி பல வழிகளில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை பற்றி நல்ல அபிப்பிராயத்தை, மாயயை ஏற்படுத்தி, எப்பாடுபட்டாவது இந்த வழக்கின் இறுதி விசாரணையில் (ஆகஸ்ட் 2023) உச்சநீதிமன்றம் வழியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. இதற்கேற்றார் போல பாஜகவை சேர்ந்த பலரும் இந்த கொலைகார ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக பொய்யான விடயங்களைத் தொடர்ச்சியாக பேசி வருவதை காண முடிகிறது. அதில் சில,
1.ஒன்றிய சுரங்கம், நிலக்கரி துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷி, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தாமிர உற்பத்தி பாதிக்கப்பட்டு அதன் விலை உயர்ந்துள்ளதென கூறியுள்ளார்.
அவர் மக்களவையில் எழுத்துப் பூர்வமாக, 2017-18 மற்றும் 2019-20ல் இந்தியாவின் சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தின் இறக்குமதி 3 மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றும், இந்த காலகட்டத்தில் ஏற்றுமதி 90 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் உண்மையில் இங்கு தயாரிக்கப்பட்ட தாமிரம் இந்தியாவின் பயன்பாட்டிற்கு மிகச்சிறிய விகிதமே பயன்படுத்தப்பட்டது. மேலும் ஏற்றுமதியை மையப்படுத்தியே இந்த இங்கிலாந்து நிறுவனம் இயங்கியது.
2. கடந்த ஏப்ரல் 5 அன்று உள்துறை அமைச்சகம், ஸ்டெர்லைட் போராட்டத்தில் ‘தி அதர் மீடியா’ (The Other Media) என்ற தொண்டு நிறுவனம் ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளிலுள்ள கிறித்துவ தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பணம் வாங்கி, அதை ஸ்டெர்லைட் போராட்டத்தில் முறைகேடாக பயன்படுத்தியது என அந்நிறுவனத்தை விசாரித்து வருவதாக எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் கூறியது.
இத்தகைய ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை ஸ்டெர்லைட் நிறுவனத்துடன் இணைந்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசி பரப்புவது தமிழின விரோத செயல்பாடு. ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் நிதியுதவி பெற்று பாஜக இயங்குவதால் அண்ணாமலை, ஆட்சியில் இருப்பவர்கள், ஆளுநர் என பாஜகவினர் அத்தனைப் பேரும் இப்படியான பொய் பிரச்சாரத்தை கூச்சமில்லாமல் செய்து வருகின்றனர்.
3. அதேபோல ஆளுநர் ரவி, 6.4.23 அன்று மாணவர்களிடையே ஆற்றிய உரையில், நாட்டின் மொத்த தாமிர உற்பத்தியில் 40 சதவீதத்தைப் பூர்த்திசெய்த ஸ்டெர்லைட் ஆலையை போராட்டத்துக்கு காரணமான அமைப்புகள் அந்நிய நிதியைப் பெற்று மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என வாய்கூசாமல், போராடி உயிர் நீத்த அப்பாவி மக்களை கொச்சைப்படுத்தி பேசினார். மேலும் விழிஞ்சம் துறைமுகம் போன்ற கார்பரேட் நிறுவனம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகிவற்றிற்கும் எதிராக நடந்த மக்களின் தன்னெழுச்சியான தொடர் போராட்டங்களையும் கொச்சைப்படுத்தி வெளிநாட்டு சக்திகளால் தூண்டப்பட்டது எனவும் கூறினார்.
இதன் மூலம் 2014லிருந்து ஆட்சியில் இருக்கும் மோடி அரசுக்கு தெரியாமல் அந்நிய நாட்டுப் பணம் 2018ல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு வருகிறது என்றால் அதை தடுக்கவே அல்லது நிருபிக்கவோ இயலாத கையாளாகாத அரசு மோடி அரசு என்பதை ஆளுநர் ஒத்துக்கொள்கிறார். மேலும் இப்பிரச்சாரங்கள் அனைத்தும் நிரூபிக்கப்படாத திட்டமிட்டு திசைதிருப்பும் யுக்திகள். ஏனெனில் இவர்களின் குற்றச்சாட்டுகளை கடந்த 6 ஆண்டுகளில் ஒருமுறைகூட ஆவணப்பூர்வமாக இவர்களால் நிரூபிக்க இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4. ஆளுநர் ரவி அவர்களின் பொய்யுரைக்கு பிறகு, 8.4.23 அன்று ஒட்டுமொத்த பாஜக கும்பலும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக வட இந்தியாவில் ஸ்டெர்லைட் உண்மைகள் வெளியானது #SterliteTruthRevealed என்றும், ஸ்டெர்லைட்டை ஆதரிப்போம் #SupportSterlite என்பது போன்றும் சமூக வலைதள ஹேஷ்டேக்குகள் (Hashtag) திட்டமிட்டு தொடர்ச்சியாக பரப்பப்பட்டன.
5. வேதாந்தாவிடம் தேர்தல் நிதி பெற்றுக் கொண்டு அனில் அகர்வாலுக்கு கைக்கூலியான பாஜக கும்பல், தூத்துக்குடி மக்கள் காசுக்காக போராடியதாக, அவதூறை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் வாயிலாக பொய் செய்திகளைப் பரப்பி வருகிறது. ஆனால் பாஜக வேதாந்தா நிறுவனத்திடம் வாங்கிய பல கோடி தேர்தல் நிதிகளைப் பற்றி ஏற்கனவே மே 17 இயக்க குரலில் விரிவான கட்டுரையாக “ஸ்டெர்லைட் வேதாந்தாவிடம் பணம் வாங்கிய பாஜக!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
6. அதேபோல பத்திரிகையாளர் எனும் போர்வையில் உள்ள பார்ப்பன சந்தியா ரவிசங்கர் என்பவர், மீனவக் குப்பங்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு தான் போராட்டத்தையே நடத்தி உள்ளார்கள் என்றும், போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திவர்களையும் அந்நிய கைக்கூலிகள் என்றும், தங்களுக்கே உரிய பார்ப்பன திமிரோடு போராடிய மக்களையும், போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியவர்களையும் சிறுமைப்படுத்தி அடுக்கடுக்கான பொய்களை பக்கம் பக்கமாக பேசியுள்ளார்.
ஆக இப்படி ஒரு பொய்யை திரும்ப திரும்ப பலரும் தொடர்ச்சியாக பேசினால் ஒரு கட்டத்தில் அது உண்மையென மக்களால் ஏற்றுக்கொள்ள கூடும். இந்த சூட்சுமத்தை நன்கறிந்த பாஜகவினர் திட்டமிட்டே இத்தகைய பொய்களை நாசகார வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக பரப்பி வருகின்றனர்.
7. தூத்துக்குடி மக்களில் சிலரை வேதாந்தா நிறுவனமும், பாஜகவும் கைக்கூலிகளாக மாற்றியதன் விளைவாக, தங்கள் சுற்றுச்சூழல் வாழத் தகுதியற்ற இடமாக மாறினாலும் தங்களுக்கு எந்தவொரு கவலையுமில்லை என்று சுயநல மனம் படைத்த சிலர் டெல்லியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டுமென கடந்த பிப்ரவரி 24 அன்று பதாகை ஏந்தி அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக அந்நிறுவனத்தால் இலாபம் அடைபவர்கள், அந்நிறுவனத்தோடு வணிகம் செய்பவர்கள், அல்லது அரசியலாக தொடர்பு கொண்டவர்கள் போன்ற நபர்களை வைத்தே இத்தகைய பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இவர்களால் தூத்துக்குடி மக்களை திரட்டவோ, அவர்களின் ஆதரவை பெறுவதோ சாத்தியமில்லை என்பதே களநிலமை.
7. மேலும் பாஜகவின் குரலாக, தூத்துக்குடியில் “ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பு” நிர்வாகிகள் நான்சி, தனலட்சுமி உள்ளிட்டோர், வெளிநாட்டில் இருந்து நிதியை “அதர் மீடியா” என்ற தொண்டு நிறுவனம் நித்தியானந்தன் ஜெயராமனுக்கு அனுப்பியதாகவும், பின்னர் அங்கிருந்து தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வீராங்கனை அமைப்பை சேர்ந்த பேராசிரியர் பாத்திமா பாபுவிற்கு கைமாற்றி போராட்டம் தூண்டப்பட்டதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர். இவர்கள் கூறுவது அப்பட்டமான பொய்யாகும்.
25 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மக்கள் விரோத மற்றும் சூழலியல் விரோத செயற்பாடுகளை ஆதாரப்பூர்வமாக மக்கள் மன்றத்தில் வைத்து போராடும் பேராசிரியர் பாத்திமாபாபு போன்ற களச் செயற்பாட்டளர்கள், அரசியலாக மக்களை திரட்டி நீதிமன்ற வழக்கை நடத்திய ஐயா வைகோ போன்றவர்கள், வணிகர்களை திரட்டிய ஐயா வெள்ளையன், மீனவர் சங்க தலைவர்கள் போன்ற பலரின் பங்களிப்போடும், ஸ்னோலின் போன்ற இளம் தலைமுறையின் ஈகத்தோடும் இப்போராட்டம் இன்றளவும் முன்னகர்கிறது. இந்த ஆலையை நீக்கும்வரை இம்மக்களின் போராட்டம் முன்னகரும்.
15 பேர் தங்களின் இன்னுயிரை நீத்து, நூற்றுக்கணக்கானோர் ரத்தம் சிந்தி இந்த உயிர்கொல்லி ஸ்டெர்லைட்டை மூட வைத்தனர். இவர்களின் இத்தகைய வீரமிக்க ஈகத்தை கொச்சைப்படுத்தி, நரித் தந்திரமாக இந்த கொலைகார, நாசகார நச்சு நிறுவனத்தை மீண்டும் திறக்க வேண்டுமென பாஜக அரசு காய் நகர்த்துவதைக் கண்டு நாம் அமைதியாக இருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது.
ஸ்டெர்லைட் ஆலையை இடித்து தரைமட்டமாக்குவது ஒன்றே இதற்கான நிரந்தர தீர்வாகும். இல்லையேல் இந்த கார்பரேட் பண முதலைகள் அரசையே விலைக்கு வாங்கி ஆலையை துவக்கி விடுவார்கள். தமிழக அரசு இந்த ஸ்டெர்லைட் ஆலையை இடித்துத் தள்ளுவதற்கான சட்ட போராட்டத்தை முன்னெடுப்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. அதுவே உயிர் நீத்த ஈகியருக்கு செலுத்தும் மரியாதை/காணிக்கை!.