மணிப்பூரில் ஆளும் பாஜக அரசு கட்டவிழ்த்துவிட்ட வன்முறையில் பாதிக்கப்பட்ட குக்கி இனத்தினரையே குற்றவாளிகளாக்கிய ஊடகங்கள்.
சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து இருக்கும் சீரழிவு சக்திகளின் போலி செய்திகளால் இன்று மணிப்பூர் சீர்குலைந்து நிற்கிறது. ஜனநாயகத்தின் நான்காம் தூணாகச் சொல்லப்படும் ஊடகங்கள் வன்முறைக்குத் துணை போவது அல்லது அமைதியாகக் கடந்து போவது என்று உள்ளன.
எங்கோ ஒரு மூலையிலிருந்து கொண்டு யாரோ ஒருவர் இரு பிரிவைச் சார்ந்த மக்களிடையே எளிதில் கொந்தளிப்பை உருவாக்கும் வகையில் நான்கு வரிகளை எழுதி, இரத்தம் சொட்டச் சொட்ட இருக்கும் ஏதோ ஒரு புகைப்படத்தையும் சம்பந்தப்படுத்திப் பகிர்ந்துவிட்டால், ஒரு மாநிலமே பற்றி எரிந்துவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மணிப்பூர் இன்று எரிந்திருக்கிறது. இப்படியான போலி செய்தியால் விளைந்த மணிப்பூர் கலவரத்தைப் பற்றி நேரடியான சாட்சியமாக ஒரு ஊடகவியலாளர் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
“நான் மூன்று நாட்கள் மெய்தி மக்கள் அதிகம் வசிக்கும் இம்பால் பகுதியிலும், மூன்று நாட்கள் குக்கி பழங்குடி மக்கள் வசிக்கும் சுராசாந்த்பூர் மலைப் பகுதிகளிலும் இருந்தேன். இரண்டு-மூன்று நாட்களில் மட்டும் 3,000 வீடுகளும் 290 கிறித்துவ தேவாலயங்களும் சிதைக்கப்பட்டன, தீயிட்டு எரிக்கப்பட்டன. ஆனால், உண்மையான எண்ணிக்கை இதை விட இரண்டு மடங்காகக் கூட இருக்கலாம். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ‘நிமிடத்திற்கு ஒன்று’ என 60 வீடுகள் நாசமாக்கப்பட்டன.”
‘அரம்பை தெங்கோல்’ என்னும் மெய்திகளின் ஒரு அடிப்படைவாத அமைப்பு தான் பெரும்பாலும் வன்முறைகளில் ஈடுபட்டது. வதந்திகளே வன்முறைக்கு முக்கியப் பாத்திரம் வகித்தது. முதல் பகுதியில் வதந்திகள் தூண்டப்படும் போது பதிலடியாக வீடுகளை எரிப்பதும், மக்களைக் கொல்வதும் நடந்தது. உள்ளூர் மக்களே இந்த வன்முறையில் கைகோர்த்து நின்றனர். ஏனென்றால், (சிறுபான்மை) குக்கி இனத்தைச் சார்ந்தவர்கள் மெய்தி இனப் பெண்களை வன்புணர்வு செய்வதாகவும், மெய்தி குழந்தைகளைக் கொல்வதாகவும் பரப்பப்பட்ட பொய் செய்திகளைக் கேள்விப்பட்டே வன்முறையில் பங்கேற்றுள்ளனர். மேலும், அம்மக்களே இந்த வதந்திகளைப் பரப்பினர்.” – ஜூன் 21, 2023 அன்று ‘சர்வதேச மத சுதந்திரத்திற்கான கூட்டணி’ அமைப்பு தயாரித்த அறிக்கைக்காக மணிப்பூரின் ஒரு ஊடகவியலாளர் கூறியவையே இவை.
மணிப்பூரின் கலவரம் முன்னரே திட்டமிடப்பட்ட வலைப்பின்னலாக நடந்திருக்கிறது. ஒரு பக்கம் சமூக வலைத்தளமான டிவிட்டர் (தற்போது ‘எக்ஸ்’) செயலியிலிருந்து கொண்டு வன்முறையைத் தூண்டி விடும் நோக்கத்துடன் இணையக் கைக்கூலிகள் பகிர்ந்த பொய் செய்திகள் மெய்தி இன மக்களிடையே கொதிநிலையை உருவாக்க, மற்றொரு பக்கம் இவற்றைப் பயன்படுத்தி ‘மெய்தி லீப்பன்’, ‘அரம்பை தெங்கோல்’ போன்ற ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட மெய்தி மத அடிப்படைவாத அமைப்புகள் நேரடியாக மெய்தி மக்களைத் தூண்ட மணிப்பூர் பற்றி எரிந்திருக்கிறது.
போலி செய்திகள்
பாஜக, ஆர்.எஸ்.எஸ். கூட்டங்கள் போலி செய்திகளின் கூடாரங்களாக இருந்ததால்தான் ஆட்சியைப் பிடித்தன என்பதற்குப் பலமுறை ஆதாரங்கள் வெளியானதும் அமித்ஷா மேடையில் பேசியதும் நாம் அறிந்ததே. ஒரே சமயத்தில் பல செயலிகளைக் கொண்டு பல்லாயிரக்கணக்கான சமூக வலைத்தள கணக்காளர் பக்கங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். கும்பல்கள் போலி செய்திகளை எப்படிப் பரப்புகிறது என்பதை முன்னரே மே 17 இயக்கக் குரல் பத்திரிக்கையில் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. சமூக ஊடக செய்திகளின் உண்மைத் தன்மைகள் குறித்து ஆய்வு செய்யும் இணையப் பத்திரிக்கையாளர் முகமது சுபைர் கைதின் போது கட்டுரையாக வெளி வந்தது. (கட்டுரை இணைப்பு – “இந்துத்துவாவின் இலக்காகிய சுபைர்“.)
மே 3, 2023 அன்று மெய்தி இனத்தவரைப் பழங்குடி பட்டியலில் சேர்ப்பதை எதிர்த்து மலைவாழ் பழங்குடியின குக்கி மாணவர்களின் ஊர்வலம் நடந்தது. அமைதியாக நடைபெற்று வந்த இந்த ஊர்வலத்தில் கலவரக்காரர்கள் ஊடுருவி ஊர்வலத்தைச் சீர்குலைத்தனர். துப்பாக்கிகளைக் கொண்டு சரமாரியாகச் சுட்டனர். அதைத் தொடர்ந்தே எண்ணற்ற போலியான செய்திகள் சமூக வலைத்தளங்களில் குவிய ஆரம்பித்தன. அதற்குப் பின்னரே மணிப்பூர் பற்றி எரிந்தது. அவ்வாறு பரப்பப்பட்ட போலி செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்துள்ளோம்.
- இளம் மெய்தி இன செவிலியர் ஒருவரைக் குக்கி நபர்கள் கூட்டாக வன்புணர்வு செய்து, பாலிதீன் உறையால் சுற்றி ஒரு பெட்டியில் அடைத்ததாக ஒரு புகைப்படத்தை டிவிட்டரில் மே 6, 2023 அன்று பகிரப்பட்டது. இந்தப் போலி செய்தி டிவிட்டரில் புயல் வேகத்தில் பரவியது. புகைப்படத்தில் இருந்த பெண் உண்மையில் மணிப்புரி அல்ல, டெல்லியைச் சேர்ந்த ஆயுசி சவுத்ரி என்பது பின்னர் தெரிய வந்தது. குடும்பப் பிரச்சினையின் காரணமாகக் கடந்த வருடம் நவம்பர் 2022-ல் பெற்றோர்களே அந்தப் பெண்ணைக் கொலை செய்துள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டது. போலியாக தொடர்புப்படுத்தப்பட்ட மணிப்புரி செவிலியர் நலமாக இருக்கிறார் என்று அவர் தந்தையே உறுதி செய்தார்.
- டெல்லியின் ஜந்தர் மந்தரில் மெய்தி மாணவர்கள் குக்கி இன நபர்களால் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்ததாக ஒரு பெண்ணின் புகைப்படத்தை வைத்திருந்தனர். ஆனால் அந்தப் பெண்ணும் அருணாச்சல பிரதேசத்தைச் சார்ந்தவர் என்பதும் குடும்பப் பிரச்சனையே அவரின் இறப்பிற்குக் காரணம் என்பதும் தெரிய வந்தது.
- இதைப் போல மணிப்பூரின் தலைநகரான இம்பாலில் உள்ள சீஜா மருத்துவமனையில் 37 மெய்தி இனப் பெண்களின் சடலம் உள்ளன. அதில் 7 வயது சிறுமியின் சடலமும் உள்ளது. குக்கி இனத்தவர் அவர்களை வன்புணர்வு செய்து கொன்றனர் என்ற போலி செய்தி பரப்பப்பட்டது. ஆனால், அந்த மருத்துவமனை அதனை மறுத்து கண்டனத்தை வெளியிட்டது.
இவ்வாறு, குக்கி இனத்தவருக்கு எதிரான போலி செய்திகளைப் பல முனைகளிலிருந்தும் பரப்பியதன் விளைவாக மெய்தி இன மக்கள் கொதிநிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மணிப்பூர் மாநில பாஜக அரசு இணையத் தொடர்பையே முற்றிலும் துண்டித்தது. போலி செய்திகளை உண்மையென நம்பியதால் மணிப்பூர் கலவரக் காடானது. குறிப்பாக, இந்தப் போலி செய்திகளை நம்பிய மெய்தி இனவெறிக் கும்பல் ‘எங்கள் பெண்களைச் சீரழித்தது போல உங்களையும் சீரழிப்போம்’ என்று சொல்லியே தங்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகக் கும்பல் வன்புணர்வினால் பாதிக்கப்பட்ட குக்கி பெண்கள் கூறியுள்ளனர். பல வன்புணர்வுக்குள்ளாகப்பட்ட குக்கி பெண்கள் படுகொலையும் செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக ஊதுகுழல் ஊடகங்கள்
மெய்தி இனவெறி அமைப்புகளிலிருந்த மனித மிருகங்கள் குக்கி இனப் பெண்களைக் கும்பலாக வன்புணர்வு செய்வது, ஆண்களை ஈவிரக்கமற்ற முறையில் தலையைத் துண்டித்துத் தொங்கவிடுவது என இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து நடத்திய போதும், பிரதான ஊடகங்கள் யாவும் “இரு இனக்குழுவிற்கு இடையேயான சண்டை” என்கிற பாஜக அரசின் விசம பிரச்சாரத்தை வெளியிட்டு வந்தன. மே 3, 2023-ல் துவங்கி இரு மாதங்களாகத் தொடர்ந்த வன்முறையைப் பற்றியான எந்த நேரடி ஆய்வுகளும் இன்றி இந்திய மற்றும் மாநில (அச்சு மற்றும் காட்சி) ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
பாஜக அரசு செல்வாக்கு செலுத்தும் ஊடகங்களே மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் உள்ளன. இதில் மக்கள் அதிகம் படிக்கும் பத்திரிக்கைகளாகச் சாங்காய் எக்ஸ்பிரஸ், பொக்னஃபாம், பீப்பிள்ஸ் குரோனிக்கிள் போன்றவையும், இம்பாக்ட், ஐஎஸ்டிவி, எலைட் டிவி போன்ற தொலைக்காட்சி ஊடகங்களும் அடக்கம். இவை மெய்தி இனத்தைச் சார்ந்தவர்களால் நடத்தப்படுகின்றன. மெய்தி மக்கள் அதிகம் வசிக்கும் ‘இம்பால் பகுதியில் குக்கி பத்திரிக்கையாளர்கள் யாரும் இல்லை. அதனால் முழுமையான செய்திகள் வெளிவரவில்லை. ஒரு பக்கச் சார்பானவையே வெளி வருகின்றன’ என்று மணிப்பூரின் எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான பிரதீப் பன்ஜௌபம் தெரிவித்தார்.
மணிப்பூர் இம்பாலில், செய்தித்தாள்கள் முதற்கொண்டு உள்ளூர் கேபிள் செய்தி சேனல்கள் வரை ஒருதலைபட்சமாக மெய்தி இனம் சார்பாகவே செய்திகளை வெளியிடுகின்றனர் என இம்பாலில் உள்ள மெய்தி பத்திரிக்கையாளர்களே கூறியதாக ‘வெப்துனியா’ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. தங்களின் பெயர் வெளியே தெரிந்தால் பணி செய்யும் ஊடக நிறுவனங்கள் அல்லது மெய்தி அமைப்புகளால் தாக்கப்படுவோம் எனவும் அவர்களிடம் கூறியிருக்கின்றனர்.
பாஜக அரசின் துணையுடன் ஆயுதங்கள் வழங்கப்பட்டு மெய்தி இனவெறியர்கள் கொலைவெறி தாக்குதலை நிகழ்த்தியபோது, குக்கி மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் திருப்பித் தாக்கியதைப் பெரிய செய்தியாக இந்த ஊடகங்கள் பேசி வந்தன. ஊடக முதலாளிகளின் கைப்பாவைகளாகச் செய்தியாளர்களும்; அரசின் கைப்பாவைகளாக ஊடக முதலாளிகளும் செயல்படும் நிலையில் குக்கி மக்களுக்கு நிகழ்ந்த அளவற்ற கொடூரங்கள் பேசுபொருளாகவில்லை.
மணிப்பூரில் உள்ளூர் ஊடகங்கள் செய்த இவ்வகையான இருட்டடிப்பு செய்திகள் மெய்தி மக்களிடம் கொதிநிலையை உருவாக்கிய சமயத்தில், வெகுசனப் பார்வையாளர்களைக் கொண்ட இந்திய ஊடகங்களோ ‘இந்து மெய்தி – கிறித்துவ குக்கி’ என மத சாயம் பூசியும், பழங்குடியினர்- பழங்குடி அல்லாதவர் மோதலாகச் சுருக்கிப் பார்த்தும் செய்திகளை வடிவமைத்தன. அம்மாநிலத்தின் வெளியிலிருந்து பார்க்கும் மக்களும் இந்த தலைப்புகளுக்குள் மட்டுமே பார்த்தார்கள். மணிப்பூரின் பாஜக இந்துத்துவவினர், குக்கி மக்களை நோக்கி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளான ‘சட்டவிரோத குடியேறிகள், போதை மருந்து கடத்துபவர்கள், ஆக்கிரமிப்பாளர்கள்’ போன்றவற்றையே இவையும் பேசின.
கடந்த இரண்டு மாதமும் மோடி அரசின் அமெரிக்கப் பயணங்களை விதந்தோதிக் கொண்டிருக்கவும், மோடி அரசைக் கேள்வி கேட்கும் எதிர்க்கட்சிகளை மோசமாகச் சித்தரித்தும், அரசியல் போட்டிகளைச் சூடு பறக்க வலதுசாரிகளை வைத்து விவாதங்களை இந்தியத் தொலைக்காட்சி ஊடகங்கள் நடத்திக் கொண்டிருந்தன. கர்நாடக தேர்தலை அலசிக் கொண்டிருந்தன, மதவெறியைத் தூண்டும் கேரளா ஸ்டோரி திரைப்படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தன. இந்த ஊடகங்கள் மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்ததை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. வடநாட்டின் 90% ஊடகங்கள் பார்ப்பன உயர்சாதியினர் பிடியில் இருப்பதால் மேல்தட்டு வர்க்கத்தின் பிரச்சனைகள் மட்டுமே விவாதிக்கப்படுகிறது. சாமானிய மக்களின் பிரச்சனைகள் புறக்கணிக்கப்படுகிறது என்பதைப் பற்றி ‘மே 17 இயக்கக்குரல்’ வெளியிட்ட விரிவான கட்டுரை – “பார்ப்பனர்களின் பிடியில் ஊடகங்கள்”
இனவெறி பீடித்த கும்பலால் இரண்டு பெண்கள் ஆடைகளற்று இழுத்துச் செல்லப்பட்ட கொடூரமான நிகழ்வு மே 4, 2023 அன்று நடந்தது. ஆனால் இரண்டு மாதம் கழித்து ஜூலை 19 அன்றே சமூக வலைத்தளத்தில் பரவலானது. இந்த நிகழ்விற்கு மே 18-ந் தேதியே காவல்துறையிடம் வழக்குப் பதியப்பட்டு முதல் தகவல் அறிக்கை போடப்பட்டு விட்டது. இந்த வழக்குகளைப் பற்றி பிரதான ஊடகங்கள் செய்திகள் எதையும் வெளியிடவில்லை. மணிப்பூர் பிரச்சனையின் தீவிரத்தை மக்களுக்குத் தெரியப்படுத்தும் எண்ணமும் இல்லாமல், போலி செய்திகளால் குழம்பிய மக்களுக்கு உண்மையான செய்திகளைச் சென்று சேர்க்கும் ஊடக அறத்தையும் வடநாட்டு ஊடகங்கள் கைகழுவின.
மக்களுக்குச் சென்று சேர வேண்டிய செய்திகளை இருட்டடிப்பு செய்தது மட்டுமல்ல, போலி செய்திகளைப் பிரதானச் செய்தி ஊடகங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு பரப்பின. மோடியின் அதிகாரப்பூர்வ பிரச்சார ஊடகம் போலச் செயல்படும் ஏஎன்ஐ (ANI) வெளியிட்ட ஒரு செய்தி சான்றாக இருக்கிறது. ஜூலை 20, 2023 அன்று ANI ஊடகம் டிவிட்டர் பக்கத்தில் இரண்டு குக்கி இனப் பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக மெய்தி கும்பல் இழுத்துச் சென்ற வழக்கில் நான்கு பேரைக் கைது செய்திருப்பதாகவும் அதில் ஒருவர் ‘காங்கிலிபாக் மக்கள் புரட்சி’ அமைப்பைச் சார்ந்த அப்துல் ஹக்கிம் என்கிற முஸ்லிம் எனவும் வெளியிட்டது. மக்கள் கொந்தளிப்பாக இருந்த சமயத்தில் இந்தப் பிரச்சனைக்கு முஸ்லிம் கோணத்தில் ANI ஊடகம் திசை திருப்ப முயன்றது குறிப்பிடத்தக்கது.
இதனால் பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ வலதுசாரிக் கும்பல்கள் வன்முறையை உருவாக்கத் தீனி கிடைத்தது போல இந்தப் போலி செய்தியை வெகு வேகமாகப் பரப்பினர். இந்த செய்தி NDTV செய்தி தளத்திலும் பகிரப்பட்டது. இதனை Alt News இணை இயக்குநரான முகமது சுபைர் தகுந்த ஆதாரங்களுடன் போலியான செய்தி என நிரூபித்தார். இந்த போலி செய்தி பரப்பப்பட்டு 12 மணி நேரத்திற்குப் பின்னர் இந்துதுத்துவ நிறுவனமான ANI மன்னிப்பு கோரியது. அந்தப் பதிவை டிவிட்டர் தளத்திலிருந்தும் நீக்கியது. ஆனால், சமூகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை மாற்றமுடியாது. இவ்வாறு போலி செய்திகளை வெகுசன ஊடகங்களே பரப்புவது மோடி ஆட்சியில் வாடிக்கையாகிவிட்டது.
ஒரு சில இணைய டிஜிட்டல் ஊடகங்களே மணிப்பூர் பிரச்சனைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி ஓரளவான செய்திகளையாவது வெளிக்கொண்டு வந்தன. மணிப்பூரின் குக்கி மலைப்பகுதிகளில் செய்திகள் சேகரித்த பெண் பத்திரிக்கையாளரான கிரீஷ்மா குத்தார் என்பவரிடம் அங்குள்ள மக்கள் ‘ஏன் எங்கள் நிலைமையைப் பற்றி மற்ற பகுதியிலுள்ளவர்கள் பேச மறுக்கிறார்கள்?’ என்று வருத்தத்துடன் கேட்டதைப் பதிவு செய்கிறார். இவர் மட்டுமே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 6 பெண்களைப் பற்றி ஆவணப்படுத்தியதாகக் கூறுகிறார். இந்த அளவிற்கு வன்முறை வெறியாட்டம் மணிப்பூரில் நிகழும் போதும் தேசிய ஊடகங்களும், ஏனைய மாநில ஊடகங்களும் அமைதி காத்ததைக் கேள்விக்குள்ளாக்குகிறார்.
இரண்டு பெண்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் காட்சியாக இரண்டு மாதம் கழித்துக் கசிய விடப்பட்டப் பின்னரே, பிரதமர் முதற்கொண்டு பிரதான ஊடகங்கள் வரை அனைவரும் பேசுகிறார்கள். அப்படியென்றால் இனியும் வேறெங்காவது சாதி, மதம், இனம் என எந்த வகையிலாவது இரு பிரிவினரிடையே வன்முறை கும்பல் போலி செய்திகளைப் பரப்பி கலவரங்களை நிகழ்த்தினாலும் அங்கும் இவர்கள் இதே அமைதிதான் காப்பார்களா என்கிற சந்தேகம் வலுக்கிறது. அப்படியான சூழல் நேர்ந்தால், பெரு முதலாளிகளின் பிடியில் இருக்கும் ஊடகங்கள் உண்மையான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கப் போவதில்லை என்பதற்கு மணிப்பூரே சான்றாக இருக்கிறது.
வெகு சில இணைய டிஜிட்டல் ஊடகங்களின் முயற்சியினாலும், இணைய முடக்கம் முடிந்ததும் சமூக வலைத்தளத்தில் குக்கி மக்கள் பகிரும் காட்சிகளுமே இவ்வளவு பெரிய இனவழிப்பை வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. இந்திய ஊடகங்கள் ஈழத்தில் நடந்தது ‘விடுதலை போராட்டம், இனப்படுகொலை’ என்று ஒரு நாளும் பேசியது கிடையாது. ‘உள்நாட்டுப் போர், போர்க் குற்றம்’ என்றளவில் மட்டுமே செய்தி பரப்பி வருகின்றன. தில்லி ஊடகங்கள் பாஜக இந்துத்துவ ஊதுகுழலாகி போன சூழலில், மெய்தி சமூகத்தின் கட்டுப்பாட்டில் மணிப்புரி ஊடகங்கள் சிக்குண்ட நிலையில், தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க வெளியில்லாமல் குக்கி சமூகம் இனவழிப்பை எதிர்கொண்டு வருகிறது. இது குறித்து எந்த சலனமுமின்றி இந்தியா தனது இயல்புபோக்கில் நகர்கிறது.
“எவரொருவர் ஊடகத்தை கட்டுப்படுத்துகிறாரோ, அவர் பொதுமக்களின் சிந்தனையை கட்டுப்படுத்துகிறார்” என்கிறார் பேரறிஞர் நோம் சோம்சுக்கி!