பெண்ணடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறிய தமிழ் தேசியத் தலைவர் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்ட முதல் பெண்புலிதான் 2ம் லெப்.மாலதி. தாய் மண்ணுக்காக வீரமரணத்தை ஏற்றவர். இவர் அக்டோபர் 10,.1987 அன்று இரவு கோப்பாய் கிறேசர் வீதியில் இந்தியப் படையுடன் நேருக்கு நேர் போரிட்டு வீரமணத்தை விரும்பி ஏற்ற முதல் பெண்புலி மாலதி.
சகாயசீலி பேதுருப்பிள்ளை எனும் இயற்பெயரைக் கொண்ட லெப். மாலதி 04/01/1967 அன்று மன்னாரில் பிறந்தவர். தாயகத்தின் மன்னார் மாவட்ட ஆட்காட்டிவெளியில் மட்டுமே அறியப்பட்டிருந்தவர். அமைதிப்படை எனும் பெயரில் தாய்மண்ணில் கால்பதித்த இந்திய வல்லாதிக்க படைகளுக்கு எதிராக கருவி ஏந்தி களமாடியவர். அந்த போரில் தன்னுயிர் தந்து பார் முழுதும் உள்ள மக்கள் மனங்களிலே பதிந்துவிட்ட பெண்புலிதான் 2ம் லெப். மாலதி.
சிறு பருவத்தில் அனைவருக்கும் இருக்கும் பிடிவாத குணமும், முரட்டு குணமும் அவரிடமுமிருந்தது. காலப்போக்கில் பக்குவம் கண்டு இரக்க குணமாக, பிறருக்கு உதவும் பண்புமாக அது மாறியது. அச்சம், அடிமைத்தனம் அறவே அற்ற பெண்ணாக, பெரும் துணிவும் தன்னம்பிக்கையும் கொண்ட பெண்ணாக மாறியதே அவர் தமிழீழப் பெண்ணினத்தின் போர்பறையாக அதிர முடிந்தது.
தமிழ்த்தேசியப் போராட்டத்திற்கு முன், தமிழீழப் பெண்களின் நிலை வேறாக இருந்தது. அவர்கள் சிந்தனை தெளிவற்றவர்களாகவும், மதிப்பற்றவர்களாகவுமே பார்க்கப்பட்டனர். பெண்களைப் பற்றி காலம்காலமாய் நிலவிய கட்டுக்கதைகள், புரையோடிப்போன புராணங்களில் உள்ள புழுக்கங்களை தூக்கி எறிந்து, பெண்ணினம் எழுச்சி கொண்ட காலத்தில் இருளை கிழித்து வெளிவந்த விடிவெள்ளி மாலதி.
‘தேசிய விடுதலை’ என்ற ஒற்றை நோக்குடன், பிரிந்து பரவி வாழும் மக்களை ஒன்றிணைப்பதே தமிழ்த்தேசிய இயக்கத்தின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும். அவ்வாறு மக்களுள் சம விகிதத்தில் வாழும் பெண்களை தேசிய அமைப்பில் இணைத்து அவர்களையும் பொதுவெளியில் செயல்பட வைக்க முடிவு செய்தார் தேசியத் தலைவர். அரசியல் சூழ்நிலைகளை அறிந்து கொண்டு, அதற்கேற்ப முடிவெடுக்கும் மன பக்குவத்தை ஊட்டியவர். பெண் போராளிகளின் வலிமையை அவர்களுக்கே புரியவைத்து நாட்டை காக்க பெண்களுக்கும் தார்மீக பொறுப்பு இருக்கிறது என பொறுப்பை உணர செய்தவர் தேசியத் தலைவர். தமிழீழப்போரில் பெண்களின் பங்களிப்பை உலகறிய செய்தவர் அவர்.
“எங்கள் தேசத்தின் விடியல் என்பது மண்ணை மீட்பதோடு, பெண்ணினமும் விடுதலை அடையவேண்டும்” என்ற தேசியத் தலைவரின் கருத்தை ஏற்ற மாலதி, தன் நாட்டு மக்களுக்காக களத்தில் இறங்கி ஆயுதம் ஏந்தி போர் புரிய ஆயத்தமானார்.
பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதே பெரிய குற்றமாக பார்க்கப்பட்ட காலத்தில் தமிழினத்திற்காக ஊர்சந்தியில் காவலுக்கு வந்து நின்றார் லெப். மாலதி. சிறு வயதிலிருந்தே துணிவும், தன்னம்பிக்கையும் மிகுந்த வீரப் பெண்ணாகத் திகழ்ந்தார். தேசிய விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய பங்கை வகுத்த பெண் விடுதலையை முழு மனதோடு நேசித்த மாலதி, விடுதலைப் பயணத்தில் இணைந்து சாதனைப் பெண்ணாக உருவானார். மேலும் போர் முனையிலும், அரசியல் தளத்திலும் சிறப்பாக கடமையாற்றினார்.
இந்திய அமைதிப்படை தாயகத்தில் ஊடுருவிய காலக்கட்டத்தில் மாலதி தனது சக தோழிகளுடன் கோப்பாய் கிறேசற்சந்தியில் ஊர்திகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
செப்டம்பர் 1987-ல் தியாக தீபம் திலீபன் ஈகையை புறக்கணித்தப் பிறகு தமிழீழ மக்கள் இந்திய அமைதிப்படையை வெறுக்கத் தொடங்கியிருந்தனர். தமிழர்கள் மனதில் ஆணிவேராய் விடுதலை வேட்கை பதியும் வேளையில் அதை வெட்டி எரிய அனுப்பப்பட்ட இந்திய அமைதி படையினர், நாவற்குழி படைத்தளத்திலிருந்து போராளிகளை தேடித்தேடி அழிக்க வீதிவீதியாய் வந்து கண்ணோட்டமிட இறங்கினர். அத்தகைய சூழலில் 10.10.1987 அன்று (நேரம் 1.15 மணியளவில்) கோப்பாய் கிறேசரடியில் மகளிர் அணி பணியில் இருந்தது. வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என கண்காணித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நின்றவருள் தனது துப்பாக்கியை அணைத்துப் பிடித்தபடி நின்றார் பெண்புலி மாலதி. இந்திய இராணுவத்தினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடக்கிறது. இந்திய இராணுவத்தினருக்கு மிகவும் அண்மையில் நேருக்கு நேர் நின்று போர் செய்த மாலதியின் காலில் குண்டு துளைத்து காயம் அடைகிறார். அந்த நிலையிலும் தொடர்ந்து களமாடிய மாலதி, இந்தியப் படை அதிகமாக நிற்பதைப் புரிந்து கொண்டார். தான் வீரச் சாவடைந்தாலுங்கூட, தானும் தன் தலைவனும் உயிருக்கு மேலாக நேசித்த ஆயுதம் எதிரியின் கைக்கு செல்லக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். “நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயுதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ” என தனது தோழியிடம் ஆயுதத்தைக் கையளிக்கிறார்.
அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்துடன் ஊர்ந்து சென்ற விஜி என்ற சக பெண்புலியிடம் “என்ர ஆயுதம் பத்திரம். என்னை விட்டிட்டு ஆயுதத்தைக் கொண்டுபோ” எனச் சொல்லி ஆயதத்தைக் கொடுத்தவர், கழுத்தில் தொங்கிய சயனைட்டை உண்டு மாவீரத்தை விதைத்து மரணத்தைத் தழுவிக்கொண்டார்.
அவரின் ஆயுதம் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு இன்னொரு போராளியின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆயுதத்தின் மதிப்பையும், முக்கியத் தன்மையையும் மாலதி அவர்கள் நன்கு உணர்ந்திருந்தமையை இது வெளிக்காட்டி நிற்கின்றது.
சமூக புரட்சியிலும், விடுதலை புரட்சியிலும் பெண்களின் பங்கு இன்றியமையாதது என்கிறார் மாமேதை லெனின். அவ்வாறு தமிழீழ பெண்ணினத்தை போர் வீரம் மிக்க படையணிகளாய் உருவாக்கி உலகமே வியந்து பாராட்டிய காலமே பெண்களின் பொற்காலம் எனலாம். ஒரு பெண் வீட்டைவிட்டு பொதுத்தளத்திற்கு வரும்போது பல தளங்களிலிருந்தும் எதிர்ப்புகள் வரும். முதலில் அவர் குடும்பம், கணவன், குழந்தைகள் பிறகு அடுத்த வீட்டில் இருக்கும் நபர்கள் என அனைவரும் தூற்ற முற்படுவர். இவர்களின் வசை பாடல், தூற்றல், களங்கம் சொல்லுதல் என அனைத்தையும் உடைத்து சமூகத்திற்காகவும் நாட்டுக்காகவும் பங்களிப்பது என்பது ஒவ்வொரு பெண்ணின் கடமையாகும்.
அதிலும் திருமணமான பெண்கள் என்றால் இன்னும் கூடுதல் சவால்களை சந்திக்க நேரிடும். அதிலும் குழந்தைகள் உள்ள பெண்கள் சமூகத்தில் பங்காற்ற வருவது என்பது நிறைய சவால்கள் நிறைந்ததாகவே இருக்கும். தன் குழந்தை அழுதாலும் அந்த குழந்தையின் எதிர்கால நலத்திற்காகவும் குடும்பத்திற்காகவும் மனதை உறைபனியாக்கி பெண்கள் பணிக்கு செல்வது போல் தமிழ்த்தேசிய விடுதலைக்காகவும், பெண்ணினத்தின் எழுச்சிக்காகவும் அன்றாட பணி போல் போராட்டங்களுக்கு அணிதிரள வேண்டும்.
போராட்டம் என்பது பெயரளவில் வந்து நிற்கக் கூடிய வேலை அல்ல. கொள்கையின் அடிப்படையில் மன உறுதி பெற வேண்டும். அவ்வாறே தமிழினத்தின் விடுதலைக்காக பல்வேறு இன்னல்களை சந்தித்து போர்ப்படையையே வழிநடத்தும் அளவிற்கு வந்து நின்றவர்கள் பெண் போராளிகள். பெண்புலிகள் படை கண்டு பகைவன் படை நடுங்கி போன வரலாறு உண்டு. அத்தகைய வரலாறு படைத்த தமிழீழ பெண்ணினத்தின் முதல் அத்தியாயம் லெப். மாலதி.