“பாலஸ்தீனத்தில் நாங்கள் மனிதர்களுடன் போரிடவில்லை; மிருகங்களோடு போரிடுகிறோம். அதற்கு ஏற்றவாறுதான் எங்களின் செயல்படுகள் இருக்கும்” என்று அறிவித்த இஸ்ரேல் அடுத்த 15 நாட்களில் 2055 பாலஸ்தீன குழந்தைகளை கொன்று குவித்துள்ளது. இதன் மூலம் வெளிப்படையாக நாங்கள் போர் வெறியர்கள்தான் என உலகிற்கு அறிவித்துள்ளது இனவெறி சியோனிச இஸ்ரேல். இந்த இஸ்ரேலைத்தான் மோடி தலைமையிலான இந்திய அரசு ஆரத் தழுவி ஆதரித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் மீதான முழுவீச்சில் இனப்படுகொலை தாக்குதலை துவங்கிய போது, இந்துத்துவ பாசிச சக்திகள் அனைத்தும் தனது ஒட்டுமொத்த ஆதரவையும் தெரிவித்தன. எக்ஸ் (முன்பு டிவிட்டர்) தளத்தில் இஸ்ரேல் பக்கம் இந்தியா உள்ளது என்று இந்தியா-இஸ்ரேல் நட்பை பாராட்டி இந்துத்துவவாதிகள் பதிவுகளை இட்டு வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்படுவதை கூட இந்த வலதுசாரி இந்துத்துவ பயங்கரவாதிகள் நியாயப்படுத்தும் நிலைக்கு சென்றனர். பொதுவாக கிருத்துவர்களை எதிரிகளாக காட்டும் இந்துத்துவவாதிகள், இந்த போர் துவங்கிய உடன், விவிலியம் வசனங்களையும், கிருத்துவ போதனைகளையும் மேற்கோள் காட்டி இஸ்ரேல் கிருத்துவர்களுக்கே (சியோனிசத்திற்கும் கிருத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை அறியாமல்) பரப்புரை மேற்கொண்டனர். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் கொடூர செயல்களில் ஈடுபட்டது போன்ற பொய்ச்செய்திகளை எக்ஸ் தளத்தில் பரப்பினர். இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரில் அதிகளவு பொய்ச் செய்திகள் இந்தியாவில் இருந்து பரப்பப்படுவதாக அல்-ஜசீரா ஊடகம் தனி செய்தி தொகுப்பை வெளியிடும் அளவிற்கு இந்த இந்துத்துவ சங்கீகளின் செயல்பாடுகள் உலகளவில் முகம் சுளிக்க வைத்தது. இதற்கு காரணமாக அமைந்தது, மோடியின் வெளிப்படையான இஸ்ரேல் ஆதரவு.
மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் இஸ்ரேல் ஆதரவு என்பது இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில் இல்லாத தலைகீழ் வெளியுறவு கொள்கையாக பார்க்கப்படுகிறது. பாலஸ்தீனத்தை அங்கீகரித்து அதனை ஆதரித்து வந்த இந்தியா, மோடியில் ஆட்சியில் பாலஸ்தீன ஆதரவை கைவிட்டுவிட்டு, பாலஸ்தீனத்தின் மீது இனப்படுகொலை தாக்குதலை நடத்திவரும் இஸ்ரேலுக்கு நேரடியாக ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மோடியின் தலைமையின் கீழ் இந்திய வெளியுறவுக் கொள்கையில் நடைபெற்றுள்ள இந்த தலைகீழ் மாற்றம், போர்வெறி பிடித்த மோடியின் வலதுசாரி கொள்கையை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அதாவது, காந்திய தேசம் என்று அமைதியின் முகமாய் அறியப்பட்ட இந்தியா அதற்கு நேர்மாறாக காந்தியை கொன்ற இந்துத்துவ பயங்கரவாத கோர முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாக ஜவஹர்லால் நேரு அவர்கள் கடைபிடித்த அணிசேரா கொள்கையே இருந்து வந்தது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஏற்பட்ட அரசியல் சூழலில் நேரு கடைபிடித்த இந்த அணிசேரா கொள்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வெற்றிகரமானதாக கருதப்பட இந்த அணிசேராக் கொள்கையே காரணமாக அறியப்படுகிறது. இக்கொள்கை இந்தியாவின் கீழ் பல நாடுகளை அணிதிரட்டவும் உதவியது.
சுதந்திர இந்தியா உருவாகும் முன்னரே இந்திய அரசியல் தலைவர்கள், பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து தனக்கான நாடாக இஸ்ரேலை உருவாக்கும் சியோனியர்களின் திட்டத்தை விரும்பவில்லை. மிக குறிப்பாக இந்தியாவின் தேசத்தந்தை காந்தி அவர்கள், “தாங்கள் வரவேற்கப்படாத ஒரு நாட்டிற்கு செல்ல அமெரிக்க பணத்தையும், பிரிட்டானிய ஆயுதங்களையும் இஸ்ரேலியர்கள் நாடுகிறார்கள்” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இன்னும் ஒரு படி மேலே சென்று, “இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயர்களுக்கு சொந்தமோ, பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுகாரர்களுக்கு சொந்தமோ அதேபோல் பாலஸ்தீனம் பாலஸ்தீனியர்களுக்கே சொந்தம். பாலஸ்தீனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ பிடித்து யூதர்களுக்கு தேசிய நாடாக கொடுப்பது மனித இனத்திற்கு எதிரான குற்றம்.” என்று தெளிவாக தன் கருத்தை நவம்பர் 26, 1938-இல் ஹரிஜன் இதழில் வெளியிட்டார் காந்தி.
இஸ்ரேல் நாடு உருவாக்கத்திற்கு பின்னால் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளே இருந்தன. இஸ்ரேல் நாட்தை உருவாக்குவதற்கான நிதியுதவி, உளவுத் தகவல்கள், போருக்கான ஆயுதங்கள், போர்ப்பயிற்சி, அறிவியல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பலவற்றை இந்த மேற்குலக நாடுகளே வழங்கியது. இன்றளவும், பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் போரை மறைமுகமாக நடத்தி வருவது இந்த மேற்குலக நாடுகளே. இதன் பின்னால் சியோனிச இயக்கத்தை சேர்ந்தவர்கள் மேற்குலக நாடுகளின் பலம்பொருந்திய உயர் பதவிகளில் இருந்ததும், அவர்களது செல்வாக்கின் மூலம் இஸ்ரேலுக்கான ஆதரவை செலுத்தியதும் காரணமாகும்.
1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்கான தீர்மானம் ஐ.நா. சபையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆதரவுடன் கொண்டுவரப்பட்டது. சுதந்திரம் அடைந்து 9 மாதங்களில் அதை எதிர்த்து வாக்களித்தது பிரதமர் நேரு தலைமையிலான இந்தியா. இப்படி நேரடியான பாலஸ்தீன ஆதரவு நிலைபாடுதான் இந்தியாவின் கொள்கையாக இருந்தது. இதே பாரம்பரியத்தை இந்திரா காந்தியும் தொடர்ந்தார்.
இருந்தபோதிலும், இஸ்ரேலின் வற்புறுத்தலால் 1950 செப்டம்பரில் நேரு தலைமையிலான இந்திய அரசு இஸ்ரேலை சட்டப்படி அங்கீகரித்தது. இந்த நிலைப்பாட்டால் பாலஸ்தீன ஆதரவு நிலையில் எந்த மாற்றமும் இல்லாமலே இந்திய அரசு தன் கொள்கைகளை முன்வைத்து வந்தது.
இது போன்ற செயல்பாடுகள் இருந்த போதிலும், 1968-இல் இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ (RAW) உருவாக்கப்பட்ட பின்னர் உளவுத்துறை சார்ந்த உறவுகள் இஸ்ரேலுடன் இந்தியாவிற்கு ஏற்பட்டது. 1962-ஆம் ஆண்டு சீனா மற்றும் 1965-ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் போர்களை சந்தித்த நிலையில் பிரதமர் இந்திரா காந்தி ‘ரா’வின் முதல் தலைவரான ஆர்.என்.காவ் (R.N.Kao) என்று அறியப்படும் ராமேஷ்வர்நாத் காவ்வை இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொஸாத்’துடன் நெருங்கி பழக பணித்தார். 1971-ஆம் ஆண்டு மீண்டும் நடைபெற்ற பாகிஸ்தான் உடனான போரில் இந்த உறவு பெரிதும் பயன்பட்டது.
இதன் மூலம் மெல்ல இஸ்ரேலிடம் இருந்து ஆயுதங்களை வாங்கத் தொடங்கியது இந்தியா. அரசியல் ரீதியான உறவுகளை தவிர்த்து, இராணுவ மற்றும் உளவுத்துறை ரீதியான தொடர்புகளை இந்தியா தொடரத் தொடங்கியது.
கடந்த காலங்களில் இந்தியா திடகாத்திரமான ஆதரவை ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல்வேறு தளங்களிலும் பாலஸ்தீனத்திற்கு வழங்கியுள்ளது. 1975 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் ‘சியோனிசம் என்பது இனவாதம்தான்’ என்று அரபு நாடுகள் சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது, தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதோடு மட்டுமல்லாமல் பாலஸ்தீன விடுதலை அமைப்பை ஆதரித்த அரபு அல்லாத முதல் நாடு இந்தியா. 1975-ஆம் ஆண்டே புது டெல்லியில் ஒரு அலுவலகத்தை தொடங்க பாலஸ்தீன விடுதலை அமைப்பிற்கு அனுமதி அளித்தது இந்திய அரசு.
1980-ஆம் ஆண்டு பாலஸ்தீன மக்களின் ஒற்றை மற்றும் சட்டரீதியான பிரதிநிதியாக இருந்த பாலஸ்தீன மக்கள் விடுதலை அமைப்பிற்கு (Palastine Liberation Organisation – PLO) இந்திய அரசு ராஜாங்க ரீதியான ஒரு இடத்தை கொடுத்தது. அதைத் தொடர்ந்து PLO அமைப்பின் தலைவர் “யாஸர் அராஃபத்” இந்தியா வந்தார்.
இஸ்ரேலுடன் சிறிய அளவில் உறவு இருந்த போதிலும், கடந்த காலங்களில் இந்தியா பாலஸ்தீனத்துடனான தன் உறவையே வலியுறுத்தி காட்டிக்கொண்டது. 1981-ம் ஆண்டு இந்திய – பாலஸ்தீனக் கொடிகள் மற்றும் மக்கள் இடம்பெற்றிருக்கும் (‘Solidarity with the Palestine people’ என்ற வாசகத்துடன்) தபால்தலையை வெளியிட்டு பாலஸ்தீனுக்குத் தனது ஆதரவை இந்தியா வழங்கியது.
சியோனிசத்துடன் இரகசிய உறவில் இருந்த இந்துத்துவா
பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் இந்தியா முழுவதும் அவசர நிலை (State of Emergency நடைமுறைபடுத்தபட்டது. இதற்கு பின்னர் நடைபெற்ற தேர்தலில் ஜனதா கட்சியின் சார்பில் காங்கிரஸ் அல்லாத முதல் ஒன்றிய அரசு ஆட்சியமைத்தது. அதன் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். இந்த காலகட்டத்தில் தான் வெளி உலகிற்கு அறிவிக்காமல் ரகசியமாக இந்தியா வந்த இஸ்ரேலின் வெளியுறவு துறை அமைச்சர் மோஷேதயான் பிரதமர் மொரார்ஜி தேசாய் மற்றும் அமைச்சர் வாஜ்பாயை சந்தித்து பேசியுள்ளார். இந்த செய்தியை 1980 ஆம் ஆண்டு இந்திரா காந்தி உலகிற்கு அம்பலப்படுத்தினார்.
90-களில் இருந்து இஸ்ரேல் -பாலஸ்தீன தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் தொடங்கியது. ராஜிவ் காந்தி மரணத்திற்கு பின்னர் 1991-ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சியின் பிரதமராக பி.வி. நரசிம்மராவ் பதவியேற்றார். ராஜிவ் மரணத்தில் வெளிநாடுகளின் உளவு அமைப்புகளுக்கு உள்ள தொடர்பு இன்றளவும் அவிழ்க்கப்படாத முடிச்சாக உள்ளது. மேலும் ராஜீவ் கொலையை விசாரித்த ஜெயின் கமிஷன் சந்திரா சாமி மற்றும் சுப்பிரமணி சாமி ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் என்று கூறியது. சுப்பிரமணி சாமி அமெரிக்காவின் சிஐஏ மற்றும் இஸ்ரேலின் மொஸாத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த நரசிம்மராவ் தான் ராஜிவ் மரணத்திற்கு பிறகான காங்கிரஸ் ஆட்சியின் பிரதமராக ஜந்து வருடங்கள் ஆட்சி செய்தார். இந்த காலகட்டத்தில் இதற்கு முன்னர் இருந்தது போல் அல்லாமல் இஸ்ரேல் உடனான உறவை மேம்படுத்தும் வேலைகள் வெளிப்படையாக தொடங்கியது.
அதன் முதல் நடவடிக்கையாக, 1975-ஆம் ஆண்டு சியோனிசம் இனவாதம் தான் என்று இந்தியாவின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானத்தை எதிர்த்து 1991-ஆம் ஆண்டு ஐ.நா.-வில் இஸ்ரேல் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. 16 ஆண்டுகள் கடந்த இஸ்ரேலால் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது!.
1992 பிப்ரவரி மாதம் இஸ்ரேலின் முதல் தூதரகம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதே ஆண்டில் இந்தியாவின் தூதரகம் இஸ்ரேலில் தொடங்கப்பட்டது.
உலக முழுவதும் தீவிரவாத எதிர்ப்பு என்பதை பிரச்சாரமாக அமெரிக்காவும் அதன் ஊது குழலாக இஸ்ரேலும் முன்னெடுத்த இந்த காலகட்டத்தில் இந்தியாவும் தீவிரவாத எதிர்ப்பு முகமூடியை அணிந்தது. இந்தியாவில் நிலவிய காஷ்மீர் பிரச்சினை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நிலவிய பிரச்சினைகளில் வெளிநாடுகள் தலையீட்டை தவிர்க்க இதை ஒரு உத்தியாக இந்தியா செய்ய தொடங்கியது. இதன் மூலம் இஸ்ரேல் உடனான ஆயுத கொள்முதல் செய்யும் பெரிய நாடாக இந்தியா மாறியது. 1997-ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கு இடையிலான முதல் ஆயுத விற்பனை ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவில் இந்துத்துவா சக்திகள் வலிமை பெறத் தொடங்கிய போது தான் பாலஸ்தீன ஆதரவு என்பது இஸ்ரேல் ஆதரவாக மாற்றம் பெறத் தொடங்கியுள்ளது. இது எதேச்சையான ஒன்று அல்ல!.
காந்தி தொடங்கி மோடி வரையிலான இஸ்ரேல் பாலஸ்தீனம் சார்ந்த இந்திய நிலைப்பாட்டை இந்துத்துவ சக்திகளின் வளர்ச்சி மற்றும் சதிகளோடு பொருத்திப் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த வரலாற்றில் பாஜகவின் குருக்களில் ஒருவரான சாவர்க்கர் தொடங்கி அத்வானி வரை எப்போதும் தீவிர இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடோடே செயல்பட்டு வந்துள்ளனர் என்பது தான் நம் கவனிக்க வேண்டிய ஒன்று.
1948 ஐ.நா. வாக்கெடுப்பின் பொழுது, ‘உலகின் முன்னணி நாடுகள் யூத மக்களின் கோரிக்கையான, சுதந்திரமான யூத நாடாக இஸ்ரேலை அங்கீகரித்து அதற்கு ஆயுதரீதியிலும் உதவிட வேண்டும்’ என்று சாவர்க்கர் தன் கருத்தை தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் தீவிரவாத நடவடிக்கைகளை சாவர்க்கரின் இந்துத்துவா வாரிசுகள் தங்கள் அகண்ட பாரதம் கனவிற்கான ஒன்றாக பார்க்கிறார்கள். இந்த கும்பலின் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்விற்கு இஸ்ரேலின் தீவிரவாத செயல்பாடுகள் இன்பத்தை வழங்கும் போதை மருந்தாகவே இருந்துவருகிறது.
காங்கிரஸ் ஆட்சியை விட பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில் தலைவர்களின் வருகை நல்ல வகையில் இருந்தது என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக 2011-ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது.
2000 ஆம் ஆண்டு துணைப் பிரதமராக இருந்த அத்வானி, பின்னர் அதே ஆண்டில் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மோடி ஆகியோர் இஸ்ரேல் பயணம் மேற்கொண்டனர். அத்வானி தங்கள் இஸ்ரேலிய முன்னோடிகளை நினைவூட்டுவதாக இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதுவர் கருத்து தெரிவித்தார்.
இப்படிப்பட்ட பாரம்பரியம் கொண்ட இவர்களுக்கு தங்களுக்கான சரியான காலகட்டம் தேவைப்பட்டது. அது 2014-ஆம் ஆண்டு அமைந்தது. மோடி பிரதமராக பதவியேற்றது முதல் இந்துத்துவா சக்திகள் அதி தீவிர வளர்ச்சி பெற்று வருகிறது. இத்தனை ஆண்டு காலமாக இந்துத்துவா சக்திகள் எதையெல்லாம் ரகசியமாக செய்தார்களோ அதையெல்லாம் இனி நேரடியாக செய்யலாம் என்கிற பலமும், ஆதரவும் 2019 பாராளுமன்ற தேர்தல் வெற்றிக் பின்னர் வாய்த்தது.
நரசிம்மராவ் காலம் தொட்டே ஏற்பட்ட வெளியுறவுக் கொள்கை மாற்றத்தில், போர் நிறுத்தம், இருவரும் பேசி தீர்ப்பது, தீவிரவாத எதிர்ப்பு என்று பசப்பு வார்த்தைகள் மூலம் மேம்போக்காகவேனும் இருந்த பாலஸ்தீன ஆதரவு இன்று நேரடியான இஸ்ரேல் ஆதரவு என்று மாறியுள்ளது.
கடந்த அக்டோபர் 7 அன்று பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று இஸ்ரேல் அறிவித்து போரைத் தொடங்கியபோதே பிரதமர் மோடி, “இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காகவே இருக்கின்றன. இந்தக் கடினமான நேரத்தில் இஸ்ரேலின் பக்கம் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்.” என்று இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
மீண்டும் கருத்து தெரிவித்த போது, கடினமான இந்தத் தருணத்தில் இஸ்ரேலுக்கு இந்திய மக்கள் தங்கள் உறுதியான ஆதரவை அளித்துவருகிறார்கள். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் இந்தியா உறுதியாகக் கண்டிக்கிறது” எனத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான செயல்பாடு என்று மோடியின் இந்த இஸ்ரேல் ஆதரவு கருதப்படுவது சந்தர்ப்பவயமானது. உலக அளவில் வலதுசாரி அரசுகளுடன் ஒன்றிணையும் போக்கே இது. இதற்காக இந்தியாவின் நீண்டகால வெளியுறவுக்கொள்கை பலியிடப்பட்டுள்ளது. ஒரு பிரதமராக மணிப்பூர் கலவரம் குறித்து கவலை தெரிவிக்காத ஒருவர், இஸ்ரேல் தாக்கப்பட்டது என்று அலறுவது கேலிக்கூத்தானது.
தமிழீழ இனப்படுகொலையில் இந்தியாவின் செயல்பாடு எப்படி தமிழினப் பகையை முன்வைத்து அமைந்ததோ, அப்படியான ஒன்றை தான் தற்போது இஸ்லாமியப் பகையை முன்வைத்து இஸ்ரேலின் பாலஸ்தீனப் படுகொலையை ஆதரிக்கும் நிலைப்பாடு. தமிழீழ இனப்படுகொலையில் இஸ்ரேல்-மேற்குலக நாடுகளின் பக்கம் நின்றது போன்றே தற்போது பாலஸ்தீன இணப்படுகொலையின் போதும் இஸ்ரேல்-மேற்குலக நாடுகளின் பக்கம் மோடி அரசு நிற்கிறது. மோடி அரசின் இந்த நிலைப்பாடு மனிதகுலத்திற்கே எதிரானது. பாலஸ்தீனஅப்பாவி குழந்தைகளின் இரத்தம் மோடியின் கைகளில் படிந்துள்ளது.
தமிழீழ இனப்படுகொலையில் இஸ்ரேலின் பங்கு முக்கியமானது. இஸ்ரேல் வழங்கிய க்ஃபிர் என்ற ஜெட் விமானம் தமிழர்களின் தூக்கத்தை கலைத்தவை. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் வழங்கிய உளவுத் தகவல்கள் மூலம் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் தடுக்கப்பட்டதோடு, புலிகள் கொள்முதல் செய்த ஆயுதங்களை அழித்தது. இலங்கை இராணுவத்திற்கு இங்கிலாந்து-அமெரிக்கா-இஸ்ரேல் வழங்கிய போர்ப் பயிற்சிகள் தமிழினப்படுகொலையை நடத்திட வழிவகுத்தது. அப்படியான நாடுகளுடன் தமிழீழ இனப்படுகொலை பங்காளியான இந்தியா ஒன்று சேர்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால், தமிழர்கள் நாம் பாலஸ்தீனத்தின் பக்கம் நிற்க வேண்டியதன் அவசியத்தை வரலாறு காட்டுகிறது.
புற்றுக்குள் இருந்த இந்துத்துவ நச்சு பாம்புகள் வெளியே வந்ததால் இஸ்ரேல் வெளியுறவுக் கொள்கையில் தலைகீழ் மாற்றம் வந்தது. சியோனிசத்தை ஆதரிக்கும் இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ் கும்பலால் பாலஸ்தீன ஆதரவு பேசிய காந்தியை எப்படி சகித்துக் கொள்ள முடியும். சாவர்க்கரின் வாரிசுகள் காந்தியை கொலை செய்ததற்கு ஆயிரம் காரணங்கள் புதைந்து கிடக்கிறதோ என்றே எண்ணத் தோன்றுகிறது!. தங்கள் அகண்ட பாரத கனவிற்கான முன்னோட்டமாக சியோனிச தீவிரவாதிகள் செய்யும் பாலஸ்தீன அழிவை வேடிக்கை பார்க்க தயாராகி நிற்கிறது இந்துத்துவா இந்தியா!.
Reference:
- இஸ்ரேலிய உறவின் விபரீதங்கள், பி. ரியாஸ் அஹமது, இலக்கிய சோலை.
- https://www.aljazeera.com/opinions/2014/8/6/indias-forgotten-solidarity-with-palestine
- https://www.onmanorama.com/news/india/2023/10/09/india-post-commemorative-stamp-solidarity-with-people-palestine-israel-hamas-war.html
- https://www.bbc.com/tamil/india-42528090