ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற ஒரு விளையாட்டை, பெருன்பான்மை மக்களுக்கு பிடித்த ஒரே காரணத்திற்காக, தன் அரசியல் விளையாட்டிற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது பாஜக. மத அரசியல், வெறுப்பு அரசியல் வரிசையில் மக்களின் பொழுதுபோக்குக் கூறுகளை சினிமா அரசியல், கிரிக்கெட் அரசியல் என்று பாஜக தன்வயப்படுத்திக் கொண்டிருக்கிறது.
130 கோடி மக்கட்தொகை உடைய இந்தியாவில், கிரிக்கெட்தான் மிகப்பெரிய விளையாட்டு என்று கட்டமைக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக அதன் சந்தை வணிகமும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயைத் தாண்டும் என்பதை நாம் அறிவோம். குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்குள் நடக்கும் போட்டிகள், பல கோடி ரூபாய் விளம்பரங்களுடன் ஒளிபரப்பாவதற்கு காரணம் இந்தியாவின் நுகர்வு முதலாளித்துவம் மட்டுமல்ல ‘இந்தியாவின் வெற்றியே தேசபக்தி’ என்ற பாஜகவின் பரப்புரையும் சேர்ந்தது. எனவேதான் இத்தகைய கிரிக்கெட் போட்டிகளின் கவர்ச்சியை, பாஜக தன் அரசியலுக்குப் பயன்படுத்தும் வாய்ப்பினைத் தவற விடுவதே இல்லை.
தற்போது மோடி மற்றும் அமித் சாவிற்கு சிறந்த மக்கள்தொடர்பு கருவியாக இந்திய கிரிக்கெட் அணியும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) செயல்படுகின்றன. அதிலும் பிசிசிஐ என்பது ‘BJP CONTROL OF CRICKET IN INDIA’ எனக் கூறப்படும் அளவுக்கு பாஜகவின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இருக்கிறது. பாஜகவின் ஆதரவாளர்கள் அதில் உறுப்பினர்கள் ஆனவுடன் கிரிக்கெட் விளையாட்டு என்பது மறைந்து அரசியல் விளையாட்டு தொடங்கியது. பிசிசிஐயின் வரிவிலக்கு அந்தஸ்து நீக்கப்பட்டது. விளையாட்டு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டு வீரர்களில் பார்ப்பனர் அல்லாதோருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. பாஜக கட்சியைச் சேர்ந்த அனுராக் தாக்கூர் மற்றும் பாஜக ஆதரவாளர் லலித் மோடி பொறுப்பில் இருக்கும்போது அங்கு ஊழல் நிரம்பி வழிந்தது.
இது குறித்து சர்ச்சைகள் எழுந்தபோதும் கவலைப்படாமல், தொடர்ந்து பாஜக கட்சியினரே பிசிசிஐ நிர்வாகிகள் ஆக்கப்பட்டனர். தற்போது உள்துறை அமைச்சர் அமித் சாவின் மகன் ஜெய் சா பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருக்கிறார். இதனையடுத்து இன்னும் வேகமாக இந்துத்துவத்தின் பிடிக்குள் பிசிசிஐ இழுக்கப்பட்டது.
குஜராத்தில் ‘நரேந்திர மோடி’ அரங்கம், தில்லியில் ‘அருண் ஜெய்திலி அரங்கம்’ என்று பாஜக தலைவர்கள் பெயர்கள் விளையாட்டரங்கங்களுக்கு சூட்டப்பட்டன. இந்த அரங்கங்கள் கட்டுவதற்கான பெரும் பொருட்செலவை அம்பானி, அதானி போன்ற குஜராத்தி மார்வாடி செல்வந்தர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதில் வியப்பில்லை.
மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றத்தில் இருந்து, இசுலாமிய சிறுபான்மையினர் அடக்குமுறைக்கு உள்ளாவது அதிகரித்தது. இதில் கிரிக்கட் போட்டிகளும் எண்ணெய் ஊற்றி பகைமையை வளர்த்தன. இந்தியா — பாகிஸ்தான் போட்டியைப் பார்க்கும் இசுலாமியர், பாகிஸ்தான் ஆதரவாளராகவே கருதப்பட்டு இந்துத்துவவாதிகளால் தாக்கப்பட்ட வன்முறைகளும் அரங்கேறின. சிறிது சிறிதாக மூளை சலவை செய்யப்பட்ட இந்துத்துவ கூட்டம், இன்று உலக அரங்கில் இந்தியாவுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுவரை இந்தியா மூன்று முறை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தியுள்ளது. (தற்போது நான்காவது முறையாக நடத்திக் கொண்டிருக்கிறது). ஆனால் இந்த ஆண்டு நடத்தும் போட்டிகள் இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடந்த கிரிக்கெட் போட்டிகளோடு ஒப்பிடும்போது மிகவும் மோசமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடுவதில் தொடங்கி அணிகளுக்கு மைதானங்களை ஒதுக்குவது, விளையாட்டு வீரர்களுக்கான பயண ஏற்பாடுகள் செய்வது வரை பிசிசிஐ மிகவும் தாமதமாகவே செயல்பட்டது.
பஞ்சாபில் உள்ள மொஹாலியில் இம்முறை எந்த கிரிக்கெட் போட்டியும் நடத்தப்படவில்லை. (2011ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி இந்த மைதானத்தில்தான் நடந்தது.) அதேபோன்று ஹைதராபாத்திலும் எந்த ஒரு போட்டியும் நடத்தப்படவில்லை. இந்தூர், ராஜ்கோட், ராஞ்சி மற்றும் நாக்பூர் போன்ற சில மைதானங்களும் புறக்கணிக்கப்பட்டு, குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி அரங்கிற்கு மட்டும் பிசிசிஐயால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள இந்த மைதானத்தில் முதல் போட்டி, இறுதிப் போட்டி மட்டுமல்ல இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியும் திட்டமிட்டே ஒதுக்கப்பட்டது. ஆசியாக் கோப்பை போட்டிகள் இந்தியா, பாகிஸ்தான் அல்லாத மூன்றாவது நிகழ் இடமான (venue) இலங்கையில் நடைபெறுமாறு திட்டமிட்டது பிசிசிஐ. ஆனால் இந்த உலகக் கோப்பை போட்டியை மட்டும் அதிக இருக்கைகள் கொண்ட நரேந்திர மோடி மைதானத்திற்கு மாற்றியது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு தென்மாநில மைதானங்களில் கிடைக்கும் நடுநிலை ரசிகர் மனப்பான்மையைத் தடுத்தது. அதுமட்டுமன்றி நவராத்திரி தொடங்குவதாகக் கூறி இந்தியா-பாக். போட்டியை முன்தள்ளி வைத்தது.
மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் தாமதமாக விசா வழங்கி அவர்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது பிசிசிஐ. அவர்கள் இந்தியாவுக்கு புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்புதான் அவர்களுக்கு விசா வழங்கப்பட்டது. பாகிஸ்தான் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு இதைப்போன்றே விசாவைத் தாமதப்படுத்தியதால் அவர்களில் பலர் டிக்கட் வைத்திருந்தும் சில போட்டிகளைக் காண இயலாமல் போனது.
உலகக் கோப்பையை செய்தியாக்க இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஜைனப் அப்பாஸ், போட்டிகள் துவங்குவதற்கு முன்னதாகவே இந்தியாவை விட்டு வெளியேறினார். அவர் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டாரா அல்லது அச்சுறுத்தல் காரணமாக வெளியேறினாரா என்பது இன்றும் உறுதியாகவில்லை. இவ்வளவு சிக்கல்களை பாகிஸ்தான் அணிக்கு எதிராக உருவாக்கியதில் பிசிசிஐயின் பங்கும் குறிப்பாக ஜெய் சாவின் பங்கும் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இத்தனை நிகழ்வுகளின் பின்னணியில்தான் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா-பாக். இடையே கடந்த அக்டோபர் 14 அன்று லீக் ஆட்டம் நடைபெற்றது. அதில் பாகிஸ்தான் வீரர்கள் அவுட் ஆகி வெளியே செல்லும் போதெல்லாம், அவர்களை நோக்கி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற கோசத்தை குஜராத்திகளான பலரும் எழுப்பினர். தோல்வியைத் தழுவிய அணியை ஆரத்தழுவி விடைபெறுவது தான் விளையாட்டுப் போட்டிகளின் நாகரிகம். ஆனால் இந்துத்துவ நச்சு சக்திகள் வட இந்திய ரசிகர்களிடம் பாகிஸ்தான் உடனான விளையாட்டை போர் வெறியுடன் அணுகும் போக்கினை வளர்த்து நாகரிகம் அற்றவர்களாக மாற்றியுள்ளார்கள். அதன் விளைவாகவே இந்த ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோசம் எழுப்பப்பட்டிருக்கிறது.
பல கோடி மக்கள் நேரலையில் காணும் ஒரு போட்டியிலேயே இவ்வாறு நடக்கிறதென்றால், இந்தியாவில் கடைக்கோடி இடங்களில் உள்ள சிறுபான்மையினரின் நிலையை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இது குறித்து ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகாரளித்தும், ஐசிசி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனெனில் உலகின் பணக்கார கிரிக்கெட் நிர்வாகக் குழுவான பிசிசிஐ, ஐபிஎல் போட்டிகள் மூலம் ஐ.சி.சியிற்கு படியளக்கிறது. ஐ.சி.சியின் பெரும் நிதி பங்களிப்பு பிசிசிஐயிடமிருந்துதான் வருகிறது. எனவேதான் இந்த உலகக்கோப்பையானது ஐ.சி.சி நடத்துவது போல் அல்லாமல், பிசிசிஐ நடத்துவது போல் உள்ளதாக பல நாடுகளைச் சேர்ந்த கிரிக்கட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தப் போட்டியைத் தொடர்ந்து பெங்களூருவில் பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா இடையே நடந்த போட்டியின்போது, ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழங்கிய ரசிகர் ஒருவரை அங்குள்ள காவலர் ஒருவர் தடுத்துள்ளார். அவ்வாறெனில் இதே விதிமுறையைப் பின்பற்றி நரேந்திர மோடி மைதானத்தில் எழுந்த கோசத்தையும் காவலர்கள் தடுத்திருக்க முடியும். ஆனால் இவை அனைத்தும் பிசிசிஐயினால் முன்னரே திட்டமிட்ட ஒன்றாகத் தெரிவதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நடப்பு உலகக்கோப்பை தொடரின்போது, இந்தியா மட்டுமல்லாமல் இலங்கை கிரிக்கெட் வாரியத்தையும் ஜெய் சா கட்டுப்படுத்தி வந்தது தற்போது தெரிய வந்திருக்கிறது. ஜெய் சாவின் அழுத்தத்தால் ஐ.சி.சி. விதிகள் மாற்றப்பட்டது அங்கு சர்சையைக் கிளப்பி இருக்கின்றன. இதன் காரணமாக ஒட்டுமொத்த இலங்கை கிரிக்கெட் வாரியமே அங்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து விதிமீறல்கள் செய்து ஆடுகளத்தின் தன்மையை மாற்றுவதை பிசிசிஐ வாடிக்கையான செயலாகவே செய்கிறது. அண்மையில் நடந்த இந்தியா நியூசிலாந்து அரை இறுதிப் போட்டியிலும் விதிகளை மீறி பிட்ச் மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதே போல இறுதிப் போட்டியின் போது நரேந்திர மோடி பங்கேற்கிறார் எனவும், அதில் இந்தியா விமானப் படை சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் எதுவும் ஒலிம்பிக் போட்டி உட்பட எதற்காகவும் இவ்வாறு நாட்டின் பாதுகாப்பு படையை பயன்படுத்தி சாகச நிகழ்ச்சிகள் நடத்தியதில்லை. அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா நுழைந்து வீடுகள் கட்டிக்கொண்டிருக்கும் வேளையில், சீனாவில் எல்லைக்கு செல்ல வேண்டிய விமானப்படையை, சீனாவின் பெயரைக் கூட சொல்லத் தயங்கும் மோடி, விமானப்படையை கிரிக்கெட் திடலுக்கு அனுப்பி வைப்பதில் அதிசயமில்லை.
ஒருபுறம் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங் மீது பெண் மல்யுத்த வீரர்கள் கூறிய பாலியல் துன்புறுத்தலுக்கு நடவடிக்கை எடுக்காமல் அவரைப் பாதுகாக்கிறது பாஜக. மறுபுறம் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஆண் வீரர்களை தனது விளம்பர தூதுவர்களாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறது.
இந்திய மைதானங்களில் போட்டிகள் நடப்பதால் கஜானா நிரம்பி வழிகிறது போன்ற காரணங்கள் கூறப்பட்டாலும் இனி வருங்காலங்களில் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது. முன்பு சச்சின் தெண்டுல்கரை ‘கிரிக்கட்டின் கடவுள்’ என்றார்கள். ஆனால் சச்சின் தொடங்கி தற்போதைய ஹர்திக் பாண்டியா வரை பாஜகவின் செல்வாக்கு செலுத்துபவர்களின் பட்டியலில் (influencer’s list) தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது மோடியின் நண்பர் நீதா அம்பானி கிரிக்கட்டை மதம் என்கிறார். ஆனால் இந்த மதத்தையும் விட்டுவைக்காமல் பாஜக தன் அரசியல் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறது. ‘விளையாட்டின் மாண்பு’ எனும் மைதானத்தில் பிசிசிஐ, ஐ.சி.சி போன்ற அமைப்புகள் ஆட்டமிழந்து நிற்கின்றன.